Monday, December 26, 2016

நிலத்தை நீர் விழுங்கி....


மனிதர் என்ற பதத்துக்குள்  அடக்கமான எல்லோரும் ஒன்றே என்ற தளத்துக்குள் நாம் நின்றிருந்தால் பிரிவுகளும் பிரிவினைகளும் பிளவுகளும் மோதல்களும் அதனால்  சிதைவுகளும் சேதங்களும் ஏற்பட்டிருக்காதோ  என்ற சாத்தியமற்ற கேள்விகள் விடைகளற்ற பதில்களாக  அடிக்கடி  மனதில்  எழுவதுண்டு  ஆனாலும், பிளவுகளும் மோதல்களும் மனிதர்க்கு மட்டுமல்ல  மண்ணுக்கும் உண்டெனும் உண்மை  உறைக்கும் போதெல்லாம் , எதோ வந்தோம் இருந்தோம் எம் ஆளுமைக்கு உட்படாத எல்லாவற்றையும் காட்சியாகவும் செய்தியாகவும்  உள்வாங்கிக்கொண்டு கையாலாகாதவர்களாக இருந்துவிட்டுச்  செல்ல முடியுமே  தவிர வேறேதும் சாத்தியமில்லை  என்ற அயர்வே இறுதியில்  மிஞ்சி விடுகிறது அப்படித்தான்  ஆழிப்பேரலை அவலமும்.

பலலட்சம் ஆண்டுகளுக்கு முன்  ஒரே தட்டாக  இருந்த  நிலம்  கண்டங்களாகப் பிரியப் பிரிய  அதன் இயற்கை வெப்ப தட்ப சூழ்நிலைகளுக்கு  ஏற்றவாறு உருவாகிய  பல்வேறு  நிலத்தட்டுக்கள் தான்  ஒவ்வொரு  கண்டங்களையும்  கடல் நிலம் என்பவற்றையும் தாங்கி நிற்கின்றன.  இந்த நிலத்தட்டுக்கள் அதிரும் போது அல்லது ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் போது  ஆழிப் பேரலைகள் வெளிக்கிளம்பி  ஊரை வளைத்தெடுத்து வாய்க்குள்  போட்டுப் பசிதீர்த்துக் கொண்டு  சற்றுக்காலம் அமைதியாகி விடுகின்றன.  எம்மைப் போல, பிரிவினைகள் தரும் போர்கள் வாய்  பிளந்து நாடுகளை  விழுங்குவது போல.





கி.மு பன்னெடும் காலத்தில் இருந்தே  நிலத்தை நீர்விழுங்கி  இயற்கையின்  முன் மனிதனின் கையாலாகா   நிலையை  நிரூபித்துக் கொண்டிருந்தாலும் தூர நாடுகளில்  நடப்பதை  அல்லது  எமக்கு  முன்னைய காலத்தில் நடந்ததை   கேள்விகளால்  அறியப்படுவதை விட நேரடியாக  உணரப்படும்  அவலத்தை  எம் வாழ்நாட்காலத்தில்  சந்திக்க  நேர்ந்த அனுபவம்  அனைவர் மனதிலும் வடுவாகவே  தங்கி விட்டிருக்கிறது. காலம்  உள்ளவரை இது  மறையாது என்பதை இந்தத்  தலைமுறையினர் சந்தித்த ஆழிப்பேரலை அவலத்தின்   12வது வருட நினைவு  நாளான  இன்றும்,  கட ந்த  சிலநாட்களின் முன்  52 ஆம்   வருட நினைவுநாள்  அனுஷ்டிக்கப்பட்ட  கடல் வழி இந்தியப் பயணங்கள் பற்றி பாட்டி சொன்ன கதைகளில்  இருந்த வில்போன்று  வளைந்த  கடற்கரையை கொண்ட கடலில்  அமைந்திருந்த  நிலமுனை நகரமான  தனுஷ்கோடி என்ற பெயர் பெற்ற  சங்ககாலப் புகழ் பெற்ற   நகரத்தினை   நீர் மேவிய வரலாறும்  உறுதி  செய்தது. 

பூமிக்குள் புதையல் கிடைப்பது  வழமை  ஆனால் .  பல மாநகரங்களை  வரலாற்றுப் புதையலாக்கி   மண்ணுக்குள்ளும் கடலுக்குள்ளும் மறைத்து  வைத்த  வரலாறுகளை இந்த ஆழிப் பேரலைகளே அதிகம்   எழுதின.   அவற்றுக்குள்  தமிழ் வளர்த்த  சங்கங்களை காவு கொண்ட கதைகளையும்  சேர்த்தே எழுதின. இலக்கியத்தில்   சிலப்பதிகாரமும் , பட்டினப்பாலையும்  மிகத்  தெளிவாக  இவ்வவலத்தை விளக்கிக் கொண்டு இன்னும்  எம்முள்  உயிர்த்திருக்க,  பாடப்பட்ட பட்டினம்  கடலுக்குள் பாலையாக  தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையை  தனக்குள் புதைத்துக் கொண்டு  இன்னும்  அமைதியாகக் காத்துக் கொண்டிருக்கிறது. 

அதுபோலவே  இலங்கையில் நீருக்குள் புதைந்து போன நிலப்பகுதிகளுக்குள்   நம்மால்  அறியப்படாத  சங்கதிகள்  பலவும் புதைந்து போய்  வருங்காலச்  சந்ததிக்கு  உண்மை  சொல்லக் காத்துக் கொண்டிருக்கலாம் .

மனிதன்  எத்தனை கண்டுபிடிப்புக்களையும்  சாதனைகளையும்  செய்து கொண்டிருந்த போதும்  உன்னைப்படைத்த  எனக்கே  உன்னை  விஞ்சும்  சக்தியும்  உண்டென்று  இயற்கை தன் ஆதிக்கத்தை   நேரம் பார்த்து  உணர்த்தி விடத்தான்  செய்கிறது. அதன் கைகளில் கைதாகும்  நேரம்  வரை  கிடைக்கும் ஒவ்வொரு  கணத்தையும்  மனிதர்களாகவேனும் வாழ்ந்து  முடிப்போம்.

Saturday, December 24, 2016

கற்றது கடலளவு.......

இங்கு  பாடசாலை   வகுப்புக்களின்  ஆண்டிறுதி   கால   விடுமுறை     நேரமிது.  பரீட்சைகள்   முடிந்து   படிப்பித்தல்கள்   குறைந்து  விடுமுறைக்கு  முன்னான   விளையாட்டுப் போட்டிகள்,  கல்வி ச் சுற்று லாக்கள்   என்று   மாணவ சமுதாயம்  சற்று  தம்மை   இறுக்கம்  தளர்த்திக் கொள்ளும்  காலம்.
.
ஒரு  பாடசாலை  நிர்வாகத்துக்கும்   எங்கள்  புலம்பெயர்   தமிழ்  குடும்பத்துக்குமான   விளக்கமின்மை   அல்லது  குழப்பம்  என்று   எதோ   ஒரு  சிறு பஞ்சாயத்து.  அதற்குள்  தலை  கொடுக்க   வேண்டிய  அவசியம்  எனக்கில்லை   ஆயினும்   இரண்டு பகுதிக்கும்  இடையிலான   ஒரு  இடைத்தரகு  நிலை .  குற்றம் இரண்டு  பகுதியிலும்  இல்லை   இருந்தாலும்  என்ன குளறுபடி   என்பதை ஆர்வமிருப்பின்  தொடர்ந்து   வாசியுங்கள்.
.
அந்தப் பெண் பிள்ளைக்கு   பன்னிரண்டு    வயது   எழாம்  ஆண்டு   கற்கிறாள்.   அந்த      வகுப்புக்  குழந்தைகளை   அழைத்துக் கொண்டு  ஒருவாரச்  சுற்றுலாவுக்கு  தயாராகி   இருக்கிறது  வகுப்பு.  அதற்கான   அனுமதிப் படிவத்தில்   இந்த  மாணவியின்   பெற்றார்   மட்டும்   கையொப்பம்   இடவில்லை.  வகுப்பாசிரியர்  காரணம்  கேட்டதற்கு  மாணவியால்  பதில்  சொல்ல முடியாமல்   மௌனம்  சாதித்திருக்கிறாள்.  நிர்வாகம்   திரும்பவும்   அனும தி கோரி  கடிதம்  கொடுத்திருக்கிறது   அதிலும்   காரணம்  ஏதும்  சொல்லப்படவில்லை .  கேள்விக்கான  அவளது   பதில்  மீண்டும்  மௌனமாகவே  இருக்க   பெற்றோரை   அழைத்திருக்கிறார்கள்  .
.
வந்த  பெற்றோரும்  பதில்  சொல்லாது   கேட்ட கேள்விகளுக்கு     ஆம்  இல்லை   என்ற  பதில்களையே   விளக்கமறு   சொல்லிக்கொண்டிருக்க ,  பஞ்சம் பிழைக்க   வந்த  கூட்டம்  பணம்  இல்லாமல்   இருக்கும்  என்று   பாடசாலை  நிர்வாகம்  எண்ணி , பாடசாலைக் காசிலும்   வகுப்பு  சேமிப்புக் காசிலும்  ஒருபகுதியும் ,  மற்றும்  வகுப்பில்  வசதியான  பெற்றோரிடம்  விடயத்தை  சொல்லி   மிகுதி  பணமும்  சேர்த்து  பிள்ளையை சுற்றுலாவுக்கு    அனுப்பலாம்  தனியா   ஒரு  பிள்ளை  எ ஞ்சி   இருப்பது   அதன்  மன நிலையை   கல்வியை  பாதிக்கும்  என்று   விளக்கம்  சொல்ல  நான்  குழம்பினேன்.
.
எப்படி  பணம்  இல்லாது  போகும் .  நம்மவர்கள்   பலர்   இங்கு  வேலை செய்வதையே   வேலையாக   கொண்ட  கூட்டத்தை  சேர்ந்த  பெற்றோர்  அல்லவா.  400 யூரோ   கட்ட  முடியாதா?  பிள்ளையின்   பூப்புனித   நீராட்டு  விழாவுக்கே   அமெரிக்க  கல்யாணக்கார்  வாடைக்கெடுத்து  ஐந்து  நிமிட  நேரத்தில்   போகும்   மண்டபத்துக்கு   இரண்டு மணி  நேரம்   அயல்  கிராமம் நகரம்   எல்லாம்  சுற்றி  பிள்ளையை   களைத்துச் சோர்வடைய   வைத்து  விருந்தினரை காக்க வைத்து   கொண்டு வந்து  மண்டபத்தில்  இறக்கி     அதற்காக  இரண்டு  மணித்தியாலத்துக்கு   2000  யூரோ  செலவு  செய்யும்  வசதி   நிறைந்த  இவர்களிடம்  ஒரு  வாரத்துக்கு   நானூறு  யூரோ  கட்டணமாக  கட்ட  முடியாதா  சிந்தனையினூடே  யாழ்ப்பாணத்தின் பிந்தங்கிய குக்கிராமம்  ஒன்றின்,  கல்வியறிவிலும்  மிகப்பிந்தங்கிய சாயலில்  காணப்பட்ட பெற்றோரிடம்    காரணம்  கேட்டபோது,


.

"பொம்பிளைப் பிள்ளை  அதுதான்  அனுப்ப  விருப்பமில்லை"   என்று   தீர்மானமான  முடிவாகச்  சொன்னார்கள்.
 "அது  தான்  ஏன்  என்று  கேட்கிறேன்  வகுப்பில்   எல்லாக்  குழந்தைகளும் தானே  செல்கிறார்கள்"
 "ஆனாலும்  எங்கட  பொம்பிளைப்பிள்ளை"
  "பாதுகாப்பில்லை  என்று  பயப்படுறீங்களா   வேறும்  பெண் குழந்தைகள்  சேர்ந்து  தானே  போகீனம்"
  "அவையள்  வெள்ளைக்காரப் பிள்ளைகள்.  எங்கட  பிள்ளைகள்   அவையளை போல   இல்லையே"
இந்த   பதிலிலும்  பொம்பிளைப்பிள்ளை  என்று  திருப்பி  திருப்பி  அழுத்திய  வார்த்தைக்குள்ளும்   தான்  விளக்கமின்மை   இருக்கின்றது   என்பது  புரிந்து  போக ;
 "ஆசிரியைகள்   கூடப்  போகிறார்கள்   தனிப்பட்ட   அந்தரங்க  தேவைகள்   இருந்தால்   தாய்  போல  கவனித்துக் கொள்ளுவார்கள்  பயப்படாதீங்கோ "  என்றேன்  ஆதரவாக
"அதில்லை  பிரச்சனை  அங்கே  போற  இடத்தில   பிள்ளை   பழுதுபட்டுப் போச்சுது   என்றால்...."
தூக்கி வாரிப் போட்டது  அந்தக்  கேள்வி   மனம்  ச்சே   என்றது
 "குழந்தை   பற்றி  என்ன  பேச்சுப் பேசுகிறீர்கள்"
 "பின்ன   என்ன   சுற்றுலாவுக்கு   போகேக்க பொம்பிளைப்  பிள்ளைகள்  கருத்தடை  சாதனங்களும்  எல்லோ   கொண்டு போக வேண்டுமாம்   அப்ப  எப்பிடி   எங்கட   பிள்ளை   துப்பரவா திரும்பி   வரும். "
சுத்தியல்  ஒன்றெடுத்து   தலையில்  போட்ட  மாதிரி  இருந்தது  எனக்கு
 "பாடசாலை   நிர்வாகம்  தந்த கொண்டுபோக   தேவையான   பொருட்களின்  பட்டியலில்   இதுவும்  இருக்கா ?"
  "இதை  எல்லாம்   எப்பிடி  வெளியா   எழுதுவீனம்.  நாங்க  தான்  யோசிச்சு  செய்ய  வேணும் .  அங்க  பெடியங்கள்   பெட்டையள்  எல்லாம்   ஒரே  அறையில   தானாம்   படுக்கிறது"
(நடைமுறையில்   அப்படி  அல்ல செல்லும்  இடத்தில்  உள்ள  மாணவர்  தங்கும் அரசாங்க  பொது  விடுதிகளில்   தனித்தனிப்பகுதி ஆயத்தம்  செய்திருப்பார்கள்  )
 "படுத்தா   அதுவும்   குழந்தைகள்   ஒன்றாக  படுத்தால்?"
 "ஏதும்  நடக்காதா? இஞ்ச   எல்லாம்  ஆயத்தமாக   இருங்கோ  எண்டு  தானே  நாலாம்  வகுப்பு  முடியும்  போது  எல்லாம்   சொல்லிக் குடுக்கினம்"
 "என்ன  பாலர்கள்  பள்ளிச்  சுற்றுலா  போற   இடத்தில   பாலியல் லீலைகள்  எப்படி  நடத்துவது   என்றா? "
" எங்களுக்கு  தெரியாதது   எல்லாம் சொல்லிக் குடுக்கிறது  இதுக்கு   தானே?  இந்த  வயதில   இதெல்லாம்  எங்களுக்கு  பெற்றோராவது   சொல்லித்  தந்தவையே  சொல்லுங்கோ  பாப்பம்   பொத்திப் பொத்தி   எல்லோ  ஒழுக்கமா  வளர்த்தவை "
 நான்காம் வகுப்பு  தாண்டும்  போது  பிள்ளைக்கு  பத்துவயது  முடிகிறது.  அத்துடன்   ஆரம்ப  பாடசாலைக் கல்வியும்  முடிகிறது.  பத்துவயது  தாண்டியதும்  குழந்தைகளாக   இருந்த   இவர்களின்  உடல்களில்   பருவம்   மெல்ல  மெல்ல  ஹோமோன்   மாற்றங்களால்      இளமையை எழுத  ஆரம்பிக்கும்.   அந்த  தனக்குள்  ஏற்படும்  மாற்றங்களுக்கான   காரணங்களை  குழப்பமற்று   பிள்ளை  உணர்ந்து   கொள்ளவும் ,  அதன்  மூலம்  ஏற்படும்  பயங்கள் குழப்பங்கள்   அல்லது  மன அழுத்தங்களில்  இருந்து  தப்பிக் கொண்டு   தன்  உடல்  மன   மாறுதல்களை  ஏற்றுக் கொள்ளவும் ,  தனக்கு பிறரால்   ஏற்படக் கூடிய   துஷ்பிரயோகங்களில்  இருந்து  தன்னைக் காத்துக் கொள்ளவுமே   அந்த  வயதில்  அது கற்பிக்கப் படுகிறது
" ........ அக்கா  சொன்னாவே  சுற்றுலாவில்   இதெல்லாம்  நடக்கும்  என்று"  (இந்த .......  அக்கா  வாய்  திறந்தால் வசனத்துக்கு  ஒரு  வார்த்தை  ஆங்கிலம்   அதிலும்  பாஸ்போர்ட்   இற்கும்   பாஸ் பூட் இற்கும்  வித்தியாசம்  இல்லாத   ஆங்கில  உச்சரிப்பில்   அளந்து  விடும்  அதி  மேதாவி  எங்கோ  ஒரு  கான்வென்டில்   கற்றதாக  பெரும்  படித்த   குடும்பம்  ஒன்றில்  இருந்து  வந்ததாக  சொல்லிக் கொள்ளும்  இப்படி  அப்பாவிகளின்  அட்வைசர் )
"........... அக்காவின்  பிள்ளைகள்   போகீனமா?"
"ஓம்   அவை  ஆம்பிளைப் பிள்ளைகள்  தானே  பயமில்லை"
 'ஒ....  அப்போ   விதைப்பது   பற்றியல்ல   உங்கள்   பிரச்சனை   முளைத்து   விடுமோ   என்பது  தான்   கலாச்சாரத்தை   தக்க வைத்தல்  போல'  அந்த  இடத்தில்  வாயில்  வந்த  வார்த்தையை   வெளிப்படுத்த  முடியாது  என்னால் அங்கு  என்  பணி  அந்நேரத்தில்  அதுவல்ல.
.
அவர்களின்  பயங்களையும்  குழப்பங்களையும்  நிர்வாகத்துக்கு விளக்கிய  போது திடுக்குற்று  மாறிய   அவர்களின்  முகங்களில்   வெறுப்பு  வழிய   கண்கள் பேசிய   சங்கேத  மொழிகள்  பார்த்தபோது   உடல்  கூசியது.   ஆனாலும்  உதட்டில்  புன்னகையும்  குரலில்   குழைவும்  மாறாமல்   ஆதரவாக   பேசினார்கள்  அவர்கள்  கடமை  என்பதால்.
.
நான்  விடைபெற்ற  போது  "உங்கள்  இடத்தில்  இப்படித்தானா?"  என்றார்கள்  நட்பான   புன்னகையுடன்   அந்த  இப்படித்தானாவுக்குள்   எதுவெல்லாம்   அடக்கம்  என்பது  எனக்குத்  தெரியாது   ஆனால்  என்  இடம்   இப்படி  அல்ல;  இந்த  இடத்துக்குள்   ஏராளம்  அடக்கம்.  மேல்நாட்டுக்கு   வந்து    இப்படி  அதிகம்  கற்ற  அறிவாளிகளை   சந்திக்கும்  போ து  தான்   ஏராளம்  கீழான  விடயங்களை   நான்  அறிந்து  கொள்ள  முடிகிறது.
.
வரவேற்று   தஞ்சம்  கொடுத்த  ஐரோப்பா கடலளவு   கற்ற  இவர்களிடம்   இருந்து கற்றுக் கொள்ள  இன்னும்  அதிகம்  உண்டு.   தீமிதித்தல்   மாதிரி.....  தூக்குக் காவடி   மாதிரி..... பல்லக்கில்   தூக்கி  ஊஞ்சலாட்டி  வரும்   கல்யாணப் பெண்   மாதிரி......  குத்தாட்டம்  போட்டுக் கொண்டே  மணமேடைக்கு  வரும்   மணப்பெண்  மாதிரி......  பருவமடைந்ததற்காக   சடங்கு  வரை   வீட்டில்   காக்க  வைத்து  மண்டபமும்   வேலை  விடுப்பும்   கிடைக்கும்  வரை   சடங்கை    ஒத்தி வைத்து   பள்ளியில்  வகுப்பிறக்கப் படும்   மாணவிகள்  மாதிரி   இன்னும்  இன்னும்   ஏராளமாய்......

Thursday, December 22, 2016

குக்...குக்....கூவென கரையும் மணித்துளிகள்

சுவரில் இருந்து கூடு திறந்து சின்னதாய் ஒருமுறை செட்டையடித்து, செல்லமாய் கூவி நேரத்தை ஒருமுறை நினைவுறுத்தி விட்டு உள்ளே சென்று அப்பாவியாய் அமர்ந்து கொள்ளும் சின்னக் குருவியின் மணிக் கூடுகள் உருவான இடத்தை ஒரு தரம் எண்ணிப் பார்ப்போமா?
.
உண்மையில் இந்த மணிக்கூட்டில் இருந்து வரும் கூவும் ஒலி அதற்காக அமைக்கப் பட்டதல்ல. orgel என்ற இசை வாத்தியத்தில் வழிந்த இசையில் தற்செயலாக இந்த குக் குக் கூ... சத்தமும் பறவையின் சிறகடிப்பு போன்ற இசையும் பிடித்துப் போக, 1629 ஆம் ஆண்டு முதல் முதல் இந்தக் குக் கூ.. ஒலி (Kuckuck ) பிரத்தியேகமாக பதிவு செய்து வைக்கப் பட்டது.
.
பின் நாட்களில் ஜெர்மனியின் Schwarzwald Kreis மாவட்டத்தின் Triberg மற்றும் அதனைச் சுற்றி உள்ள மலைகிராமங்களில் உள்ளோர்களால் உருவாக்கப் பட்ட பறவையின் கூண்டு போன்ற மணிக்கூட்டுக்கு மணி ஒலிச் சத்தமாக இந்தக் கூவும் குரல் இணைக்கப் பட்டது. அத்துடன் அந்த மணிக்கூட்டுக்கு குக் கூ .. மணிக்கூடு (Kuckucks uhr) பெயரும் சூட்டப் பட்டது.
.
இந்தக் குக்கூ ... மணிக்கூடு 1730 இல் Franz Anton Ketterer என்பவரால் உருவாக்கப் பட்டது என்று ஒரு ஆராட்சியாளரும், இல்லை அவரது தந்தையால் அதற்கு முதலே இது உருவகம் பெற்றிருந்தது, அதை மகன் வெளிக் கொணர்ந்தார் என்று இன்னொரு ஆராட்சியாளரும், அதுவுமில்லை 1742 இல் Michael Dilger உம் Matthäus Hummel என்பவரும் இணைந்து உருவாக்கியதாக மற்றொரு ஆராட்சியாளரும் சொன்ன போதும்,

Triberg என்ற மலைக் கிராமத்துக்கு அருகே உள்ள பண்ணையில் இருந்து சகோதரர்களான Aandreas அவரது இரு வயது இளைய தம்பி Christian Herr ஆகியோர் இணைந்து செய்த குக் கூ..,,. மணிக்கூடு முதல் முதலில் வெளி உலகப் பாவனைக்கு வந்து இன்று உலக வீடுகள் பலவற்றின் வரவேற்பரைகளில் கூவிக்கொண்டிருக்கும் குக் கூ... குருவிகளுக்கு மூதாதையாகிப் போனது.
.
இந்த Triberg வெள்ளியை உருக்கி வார்த்தது போல் உச்சி மலையில் இருந்து அவசரமில்லாமல் ஒடுங்கி ஒழுகும் அழகிய நீர்வீழ்ச்சி கொண்ட ஒரு சுற்றுலாத் தலமாதலால் ஆரம்ப காலம் தொட்டு இந்த மணிக்கூட்டு உருவாக்கம் சுற்றுலாப் பயணிகளுடனான வியாபாரத்தைக் குறிவைத்த வீட்டுக் கைத்தொழிலாக இந்தக் கிராமத்தில் வளர்ந்தது.
.
அவரவர் கற்பனைக் கேற்ப அதன் வடிவங்களில் சிறிய மாறுதல்களை ஏற்படுத்தும் போதும் அதன் அடிப்படை வடிவமும் கூவும் குரலும் என்றும் மாற்றம் பெறாமல் இருப்பது அதன் தனிச் சிறப்பு.
.
இன்று இந்த இடத்துக்கு சம்பந்தமில்லாத நிறுவனங்கள் கூட அதைப் போல பிளாஸ்ரிக், உலோகம், கண்ணாடி என்ற பலவித மூலப் பொருட்களில் அதை உருவாக்கி விற்பனைக்கு விட்டுள்ள போதும் இதன் தாயகத்தில் அடிப்படையில் இருந்தது போலவே மரமும் மற்றும் இயற்கை மூலப்பொருட்களும் கொண்டே இதன் கூடும் அலங்காரமும் செய்யப்படுகிறது.
.
மிகச் சாதாரண விலைகளில் இருந்து மூன்று நான்கு ஆயிரம் யூரோ தாண்டிய நிலையிலும் விற்பனையாகும் இந்தக் குருவிக் கூடுகள் ஆண்டு முழுவதுமான சுற்றுலாப் பயணிகளுக்காக வீதி முழுவதும் கடைபரப்பப் பட்டிருக்கும்.
.
நத்தார் காலத்தில் இந்த நீர் வீழ்ச்சியை நெருப்பில் உருக்கி, நிறங்களில் குழைத்து வாணங்களில் வேடிக்கை காட்டும் மஜிக் நிகழ்ச்சி பிரபலமானதால் எலும்பு உருக்கும் குளிரிலும் அந்த வண்ண நீரின் வாணவேடிக்கை பார்க்க இலட்சங்களை தாண்டி எண்ணிக்கையற்றுக் குவியும் மக்கள் வாங்கிச் செல்லும் நினைவுப் பொருள் இதுவாகவே இருக்கிறது
..
எங்கே எப்படி யாரால் உருவாக்கப் பட்ட போதும், கூடு திறந்து வெளிவந்து செட்டையடித்து சிலுப்பி கூவும் ஒவ்வொரு மணித் துளியிலும் கடக்கும் எங்கள் ஆயுளை இந்தச் சின்னக் குருவிகள் நினைவுறுத்துவதாகவே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

Saturday, December 17, 2016

சிறகெட்டும் தொலைவில் வானம்


அந்தப் பெண்ணை பாட்டி என்பதா? அம்மா என்பதா எனக்கு அப்போது போல் இப்போதும் புரியவே இல்லை. வயதானாலும் நெடிதுயர்ந்த நீண்ட உருவம். முழங்கைகளுக்கு கீழான கைகள் தவிர அவரின் முகத்தை கூட அதிகம் பார்த்ததில்லை. ஆளரவம் குறைந்த மங்கல் பொழுதுகளில் எப்போதாவது வீதிகளில் அவரைக் கண்டிருக்கிறேன்.
கிட்டத்தட்ட மங்கிய காவி நிறத்தில் பருத்தி நூற் புடவை, பின்னாளில் தான் புரிந்தது. அது மங்கிய காவி அல்ல பழுப்பேறிய வெள்ளை என்று. அவர் மஞ்சள் நிறத்தின் மங்களத்துக்கு மறுதலிக்கப் பட்டவர். புடவைத் தலைப்பால் தலைமூடப்பட்டிருக்கும் மொட்டாக்கு மீறி அந்த முகத்தை எப்போதும் முழுமையாகப் பார்த்ததில்லை. எப்போதும் குனிந்து கூன் விழுந்தது போல் ஓரு நடை. அந்த திடகாத்திர உருவ அமைப்புக்கு அந்தக்கூன் இயல்பாக பொருந்திப் போகாமல், அவர் தன்னை குறுக்கி நடப்பது போலவே தோன்றும் எனக்கு. சற்றே வெளித்தெரியும் கரங்கள் வாடிவதங்கிய கனகாம்பரம் நிறத்தில் இருக்கும். எப்போதும் வாயில் எதோ ஒரு முணுமுணுப்பு. அது அப்போது ஸ்லோகம் என்று நினைத்தேன். இப்போது சோகமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது.
மங்கல் விழுந்த மாலைகளில், வீடுகளற்ற வளவுகளின் வேலிகளில் படர்ந்திருக்கும் பிரண்டைத் தண்டு, அல்லது மொசுமொசுக்கை, வாதநிவாரணி ஏதாவது ஒரு இலை பறித்துப் பையில் அடைந்து கொண்டிருப்பார். அவர் மொட்டாக்கு போடும் விதத்தில் அந்தக் கையும் பையும் கூட அதற்குள் மறைந்திருக்கும்.
அவர் யாரோடும் பேசி நான் பார்த்ததில்லை. தன்னோடு மட்டுமே பேசுவார். யாரும் அவரை நெருங்கிச்சென்று பேசியும் நான் கண்டதில்லை. ஒருவேளை அவர் பேசவே மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம். தெரியாமல் நான் அருகே சென்று" பாட்டி நான் உதவலாமா" என்று கேட்டேன் ஒருநாள். அவசரம் ஏதுமில்லாமல் திரும்பி மொட்டாக்கு மறைத்த முகத்தால் அவர் என்னை நோக்கிய போது, அந்தக் கண நேரப் பார்வையில் அது வயதான முகம் அல்ல என்று கண்டேன். கனிவாக நோக்கி விட்டு பதில் ஏதும் சொல்லாமல் கருமமே கண்ணாயினார்.
அந்த நேரங்கள் தவிர அவரை எங்குமே நான் கண்டதில்லை. மாலை விளையாடிக்களைத்த பொழுதுகளில் அநேகமாய் அவரையே பின் தொடரும் என் பார்வை. பொதுவாகவே வீடுகளில் அயலட்டத்தைப் பற்றிப் பேசிக்கொள்ளும் போதும், அவர் பற்றி எந்தப் பேச்சும் வீட்டில் வந்து நான் கண்டதில்லை. நானாகவே ஒருமுறை வீட்டில் விசாரித்தபோது," அது குருக்களின் தாய்" என்ற அசுவாரசியமான பதிலுடன் வீடு தன் பாட்டுக்கு இயங்கியது.
அப்போ அவரை எப்படி எனக்குத் தெரியாமல் போகும். அங்கே அந்த வீட்டில் என் தோழிகள் இருக்கிறார்களே. அங்கு அதிகம் யாரும் போவதில்லை. நானும் எப்போதாவது தான் போவேன். அப்போதும் அவரை நான் கண்டதில்லை. ஒருமுறை அந்த வீட்டுக்கார என் நண்பிகளிடம் அவர் பற்றி விசாரித்த போது
" அது எங்கள் பாட்டி" என்றார்கள்.
" எதுக்கு அவ கோவிலுக்குக் கூட வருவதில்லை. மாலையில மட்டும் வெளியே வருகிறா " என்றேன்.
"அது கைம்பெண். முழுவியளத்துக்கு ஆகாது."
மிக இயல்பான வார்த்தையுடன் அவர்கள் தங்கள் சுவாரசியமான பேச்சை தொடர்ந்தார்கள். எனக்கு மட்டும் எதுகும் காதில் விழாமல் போனது.
அந்த வீட்டின் கடைக்குட்டியான ராஜி என்றழைக்கப்பட்ட ராஜேஸ்வரி மட்டும் அனேகமாக பாட்டி நிற்கும் இடங்களைத் தேடி வரும் . பாட்டி பேசாதபோதும் அதுவா வாய் ஓயாமல் அவவுடன் பேசிக்கொண்டே நடக்கும் . என்னோடு அந்த என்னிநிலு சின்னவளான சின்னப் பெண்ணுக்கு சற்று அதிக நெருக்கம் இருந்ததால் யாருமில்லா பொழுதுகளில் குடும்ப ரகசியம் சொல்லும். பாட்டியின் நரக வாழ்வு பற்றி உடைந்த குரலில் அது பேசும் போது அதுக்கு வயது பத்து. அப்போதே அதன் முற்போக்கு எண்ணங்களும் அதை செயற்படுத்த முடியாத சூழ்நிலையும் வித்தியாசமாக சந்தோசமாக இருக்கும்.
பின் எங்கள் வீட்டில் எப்போதும் அதையே அந்தப் பாட்டி பற்றிய விபரங்களையே விடுத்து விடுத்து விசாரிக்க ஆரம்பித்தேன்.
"உன் வயதுக்கு இதெல்லாம் வேண்டாத விசயங்கள். போய் புத்தகத்தை எடுத்துப் படிச்சு உருப்படுற வழியைப்பார்." எப்பவும் போல பாட்டியின் அறிவுரை அது.
அடுத்து
"உன்னைச் சுற்றியிருக்கிற உலகத்தைப் படி முதலில. அது தான் புத்தகப்படிபை வழிநடத்தும்" என்ற பீடிகையுடன் தாத்தா பக்கத்தில் இருத்தி அனைத்துக் கொண்டு கதைக்கத் தொடங்க பாட்டியும் சேர்ந்து கொண்டு சொன்ன விபரங்களில்.....
தலை மழிக்கப்பட்டு மொட்டாக்குக்குள் அந்தப் பெண்ணுடல் உணர்வுகள் விழுங்கிய, விருப்புக்கள் மறுக்கப்பட்ட தன் யாகத்தை ஆரம்பிக்கும் போது அவவின் வயது இருபத்தியிரண்டே மட்டும் தான்.
அதன் பின் முழுவியளத்துக்கு ஆகாத மூதேவியாகி, அந்த வீட்டின் வேலைக்காரியாகி, வெளிவாசல் தவிர்த்து கோடிப்பக்க வழிமட்டும் அவவின் உபயோகத்துக்காக்கி , கொல்லைப்புற மூலையில் தனிமையில் ஒதுக்கமாகி, வெறுந்தரைப் படுக்கையாகி , உப்புக் காரம் வெங்காயம் பூடு தவிர்த்த உணவுகளின் சுவையும் நிராகரிக்கப்பட்ட வராகி,....
தனது இருபத்தியிரண்டு வயதுக்குள் தாயாக்கிய மூன்று பிள்ளைகளை வீட்டில் உள்ளவர்களின் வசவுகளோடு வளர்த்து, அவர்களின் எந்த நன்மைக்கும் முன்னே வரும் அனுமதி மறுக்கப்பட்டவராகி கொல்லைவாசல் வழியே ஒட்டி நின்று பார்க்கும் வாழ்க்கையாகி........
உணவில் சுவை தவிர்த்து, மனதில் மகிழ்வு தவிர்த்து, மனிதர்கள் தவிர்த்து , நடைமுறை வாழ்வின் கருத்துப் பகிரல்கள், சிறிய சிரிப்புக்கள் கூட மறுக்கப்பட்டு நடந்து கொண்டிருந்த யாகத்தில் ஓரு கன்னி மன உணர்வுகள் முற்றிலுமாய் வெந்து, அந்தத் தங்கத் தேகம் தினம் தினம் தீயில் வாடிய கொடுமை நடந்து கொண்டிருந்தத காலத்தில், ..
அவரது வயோதிப அப்பாவின் மனைவி காலமான போது மட்டும் அப்பா முழுவியளத்துக்கு உதவாமல் போகவில்லை. ஆண் மகன் வருமானம் நின்றால் குடும்பம் சந்தியில் நிற்கவேண்டும். சம்சாரம் இல்லாத குருக்கள் சவுண்டியாகத்தான் போகவேண்டும். சவுண்டியாகப் போவதானால் தினத்துக்கும் ஐந்து காலப் பூஜை போல் ஐந்து சாவு விழவேண்டும். விஷேச நாட்களின் திருவிழாக்கள் போல் விஷேசச் சாவுகள் இல்லை, அதனால் மேலதிக வருமானம் இல்லை. வருமானத்துக்காக மட்டுமே மீண்டும் திருமணம் என்ற போர்வையில் வயதான அப்பா பிள்ளைகளிலும் இளமையாக ஒரு மனைவி தேடிக்கொண்டார்.
மகள் வாழவேண்டிய வயதில் மூலையில் முடங்கி ஜடம் போல் சுருண்டு உணர்வுகளை உள்ளத்துக்குள் எரித்து வென்று துடித்துக் கிடக்க, அவர் புது மனைவியுடன் பன்னீர் வாசத்தில், முகம் கொள்ளாப் பூரிப்பில் வலம் வந்து கொண்டிருந்தார்.
அதன் பின்னான காலங்களில் போரும் இடப்பெயர்வும் , புலப்பெயர்வுமாக நீண்ட வருடங்களை விழுங்கியிருந்தது. அந்த இடைவெளியில் பல மனிதர்களை என் மனம் மறக்கவில்லையாயினும், மனதில் தூரமாகி நினைவுகளில் நி ல்லாது போயினர். அப்படித்தான் அந்தப் பாட்டியும் எப்போதாவது ஒரு கணம் நினைவில் வருவதோடு சரி. புதிய சூழல், புதிய மனிதர்கள், புதிய பிரச்சனைகள் என் மனதுக்கு மனதுக்கு நெருக்கமாகிப் போயின.
நீண்ட இடைவெளியின் பின் பிறந்த மண்ணுக்கான பயணம். அதில் மனதுக்கு நெருக்கமானவர்களும், நினைவுகளில் அழிக்கமுடியாத சம்பவங்களால் பதிவாகியிருந்த இடங்களும் தவிர எதுகுமே நினைவில் இல்லாத பொழுதொன்றில் எனது சிறியதாய் வீட்டு ஹூட் இல் குடும்பமாகக் கூடியிருந்து கதைத்துக் கொண்டிருந்தோம்
வீட்டின் கேட் திறக்கப்பட்டது. யாரோ என் சித்திக்கு வேண்டியவர்கள் என்ற நினைவில் திரும்பிப் பார்த்து விட்டு நான் என் பேச்சைத் தொடர்ந்தேன். கேற்றுக்கு உள்ளே மதிலோடு ஒன்றி குறுகி நின்ற பெண்ணைப் பார்த்து
"உள்ளே வந்து இருமன் அம்மா "என்ற சித்தியின் குரலுக்கு,
" இல்லை அம்மா ரோட்டால கல்யாண ஊர்வலம் வருகுது என்ர முகத்தில முழிக்கக் கூடாது அது தான்.... அவர்கள் விலக நான் போய் விடுவேன்" என்ற பெண் அவசரமாக புடவைத்தலைப்பை இழுத்து குனிந்த தலையை மூடிக்கொண்டது.
வார்த்தைகளில் அந்தப்பெண்ணின் நிலை எனக்குப் புரிந்தது. சின்ன வயதில் இருந்து வெறுத்த ஒரு விடயத்தை புலப்பெயர்வில் கொஞ்சம் அதன் தாக்க நினைவுகளில் இருந்து விலகியிருந்து , ஊருக்குப் போய் சேர்ந்தவுடன்திரும்ப அதை வாங்கி மனதில் போட்டு கொந்தளிக்க விருப்பமற்று அதை பெரிது படுத்தாமல் இருக்க முயற்சித்தேன். கல்யாண ஊர்வலம் கடந்தது
" வரேம்மா" என்ற விடைபெற லு டன் அந்தப் பெண் வெளியேறும் போது
"இந்தப் பிள்ளையை உனக்கு மறந்து விட்டதா? எங்கட கோவில் ராஜேஸ்வரி, உன் குட்டி ராஜி" என்று சித்தி சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனது மனது.
பட்டுப் பாவாடையும் , நீண்டகூந்தலின் ஒற்றைச் சடையின் நுனியில் அசையும் அசையும் குஞ்சமும், தலை கொள்ளாக் கதம்பச் சரமும் , அதைச் சட்டமிட்டு அடக்கிய மல்லிகைச்சரமும் கைநிறைந்த கண்ணாடிவளையல்களுமாக , மஞ்சள் குளித்தமுகத்தில் கண்ணுக்குக் கருகருவென்று மையிட்டு, புருவ மத்தியில் சாந்து மின்ன அலங்கார பூஜிதையாக, பால அம்பிகைபோல் அந்தப் பெண்ணின் தோற்றம் மனதில் வந்து போனது ,
மனம் கட்டுமீறி ஹோ என்று அதிர்ந்து கதறிப் பரபரக்க எழுந்து ஓடினேன். புடவைத்தலைப்பால் தலையில் முக்காட்டிட்டு குனிந்த படி, குறுகி நடந்து கொண்டிருந்த அந்தப்பெண்
"ராஜிம்மா" என்ற அழைப்புப் போன்ற என் கூவலில் சட்டென நின்றது. கிட்டே நெருங்குகையில் அடையாளம் கண்டுகொண்டு
"அக்கா "என்ற அந்தக் குரலில் அதிர்வும் ஆர்வமும் பாசமும் கூடவே இனங்கான முடியா ஒரு இறப்பும் இருந்தது முகமும் கூட உயிரைத் தொலைத்திருந்தது .
சுகம் விசாரித்த விதத்தில் அன்பு மாறாமல் இருந்தது அவள் குரல் பின்
எந்த ஆர்வமும் அற்ற இறந்து போன இயந்திரக் குரலில்
" நான் வெளியே வருவதில்லை அக்கா. என் மகன் ஆஸ்பத்திரியில் அதால தான் வெளிக்கிட்டனான்."
" உள்ளே வரீங்களா ராஜி" என்றேன். சற்றுத் தயங்கி சுற்றும் முற்றும் பார்த்து
" இப்ப விட்டால் இனி எப்ப உங்களைப் பார்ப்பேனோ தெரியாது" என்ற முணுமுணுப்புடன், யாராவது கண்டால்...... என்ற தயக்கத்துடன் உள்ளே வந்தது நான் நேசித்த பால அம்பிகை. அமங்கலத் தோற்றத்தில்.


முன்பு அவர்களது பாட்டி இருந்த கோலம் தான். சிறு மாற்றம், பாட்டியின் புடவை போல் மஞ்சலாகிய வெள்ளைப்புடவை இல்லாமல் தூய வெள்ளையில் சிறு கறுப்புப் புள்ளிகளுடன் புடவை. நெற்றியில் விபூதிக் கீற்றல், கண்களில் வெறுமையுடன் நின்ற அந்தக் குழந்தை இரு தசாப்தங்களின் பின்னும் மாறாத பெண் அடக்குமுறைச் சமுதாயத்தின் சாபத்தின் அடையாளமாய் தோன்றியது. என்னால் எந்தக் கேள்வியும் கேட்க முடியாமல் இருக்க, "மூன்று குழந்தைகள் அக்கா, மூன்றாவது பிறக்க அவர் போயிட்டார். "
" அண்ணா வீட்டில இருக்கிறேன். சடங்குகளுக்கும், பூஜைக்கும் தேவையான வேலைகள் செய்வதில்லை அது தவிர மிச்சம் எல்லாம் நான் செய்வேன். என்னையும் பிள்ளைகளையும் வைச்சு சாப்பாடு போடும் போது அசையாமல் இருக்க முடியுமா ? " என்ற ராஜியிடம்
" நல்லா தானேம்மா படிச்சுக் கொண்டிருந்தீங்க. இது உங்கட பாட்டி காலமில்லை. ஒரு வேலை தேடிக்கொள்ளக் கூடாதா" என்றேன்.
" வெளியே வெளிக்கிட்டா முழுவியளத்துக்குக் கூடாது. அறுத்துக் கொட்டினவள் வெளியே வாசலுக்குப் போனால் , நாலு பேரைப் பார்க்கையில , பேசுகையில மனம் அலைபாய்ந்து உடம்பு தினவெடுக்கும். குடும்பம் சந்தி சிரிச்சுப்போகும். வீட்டு மூலைக்குள்ள அடங்கிக் கிடக்க வேண்டும் "என்று அவள் சொன்ன வார்த்தை அவளது அல்ல. அந்த சமுதாயத்தின் வார்த்தை. அல்லது அவள் சார்ந்த குடும்பத்தின் குரல்.
உணர்வு தொலைத்த அந்தச் சிற்பம் அடுத்ததாய் சொன்ன வார்த்தை அதனுடையது.
" அவர் செத்துப் போனதுக்கு எனக்கு எதுக்கக்கா தண்டனை. கடவுளுக்கல்லவா கொடுக்க வேண்டும்." என்ற போது அந்தக் குரல் நிறையவே உடைந்திருந்தது.
"எனக்கு என் சொந்தக்காலில் நிக்க முடியும், யாரும் விடமாட்டீனம். நான் ....... நான்...... பாட்டியின் கொல்லை அறையில் ...... பாட்டிமாதிரியே,..,..... உயிரோடு இருக்கப் பிடிக்கலைக்கா".
உடைந்து குமுறி வந்த வார்த்தைகளுடன் தன்னைக் கட்டுப்படுத்தி, சுற்றி வரப் பார்த்து, அவசரமாய் கண் துடைத்து ,
" நீங்கள் என்றபடியால் தான் மனம் விட்டுக் கதைச்சனான் அக்கா. செத்துப் போய் நடைப்பிணமாகத் திரிகின்ற ராஜிக்கு கெதியா சடங்கு முடித்து காடாத்த வேணும் என்று வேண்டிக்கொள்ளுங்க"
உடைந்த குரலில் கூறிவிட்டு இயந்திரமாய் வெளியேறியது என் பால அம்பிகை.
உடைந்து நொறுங்கி, வெம்பி பேதலித்து , செயலற்ற கோபத்தில் துடித்த மனம் கட்டுப்பாட்டை இழந்து கண்ணீராய் வடிந்தது.
இத்தனை வருட இடைவெளியில் பெரிதாக எந்த மாற்றத்தையும் சமுதாயம் கொண்டுவரவில்லை. கொண்டுவரவும் மாட்டாது. மாற்றங்கள் தேவை எனில் பாதிக்கப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். சடங்குகள் தேவையில்லை," சிறை உடைத்து வெளியே வா என் சிறு கிளியே. நீ பார்க்காத தூரத்தில், உன் சிறகெட்டும் தொலைவில் விரிந்திருக்கிறது உன் வானம்." என்ற வார்த்தைகள் மட்டுமே என் உதடுகளால் உச்சரிக்க முடிந்தன..