Friday, March 30, 2018

அதற்கு இதுவல்ல வயது

இந்தப் பதிவு,  நீண்ட காலம் எழுதக் காத்திருந்து நேரமின்மையால் தொடங்கித் தடங்கி, இப்போதும்  நிச்சயமாகப் பலரிடமிருந்தும்  வெறுப்பையும் , தர்க்கத்தையும்  ஏற்படுத்தும் என்று தெரிந்துமே  தான்   பதிவிடுகிறேன்.

பரீட்சைப்  பெறுபேறுகளில் மகிழ்ந்திருக்கும் மாணவர்களுக்கும், பெற்றோர், மற்றும் உற்றோருக்கும்   ஆசிரியர்களுக்கும்  வாழ்த்துகள்.

திருப்தியற்ற பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கும் அவர் சார் மனிதர்களுக்கும்  இன்னுமொரு படி மேலான வாழ்த்துகள்.  

வாழ்க்கையில் அனுபவம் போல் சிறந்த தேர்வு இல்லை.  ஒரு வீழ்ச்சி தரும்  அனுபவங்கள்,  சேணம் கட்டிய குதிரைபோல ஒரே குறியை நோக்கி ஓடாமல், உயர்ச்சி பற்றிய பலவிதமான பாதைகள் பற்றிச்  சிந்திக்க வைக்கும்.

பொதுவாக பாடசாலைத் தேர்வுகளில் வென்றவர்கள்  எல்லோருமே தாம் குறிவைத்த இலக்கை எட்டி  வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்ததாகவோ, தோற்றவர்கள் எல்லோரும்  வாழ்க்கையில் தோற்று விட்டதாகவோ சரித்திரமில்லை.

பலவருடங்களாக   கற்ற கல்வியையோ,  அறிவையோ  சிலமணி நேர  வினாத்தாள்களால்  அளவிட  முடிவதில்லை.  ஒரே பாடத்திலேயே சிலருக்கு  ஒரு பகுதி அதிக விளக்கம் கொண்டதாக அல்லது பிடித்ததாக  இருக்கும்.  மற்றும் சிலருக்கு இன்னொரு பகுதி.  அதிக புள்ளிகளைப் பெற்றுத் தரக்கூடிய கேள்விகள் துரதிஷ்ர வசமாக உங்களுக்கு அதிகம் விருப்பற்ற  அல்லது விளங்கச் சிரமமான பகுதியில் இருந்து வரும் போது புள்ளியிழப்பு  தவிர்க்க முடியாதாகிறது.

தவிரவும், உங்கள் அந்த நேர மனநிலை, பரீட்சைப் பதட்டங்கள் என்பவையும் உங்களை சரிவர இயங்கவைக்காத்திருந்திருக்கலாம்.   கூடவே எல்லோர் குடும்ப அமைப்பும், வாழ்நிலைச் சூழலும்  ஒரேமாதிரி அமைந்திருப்பதில்லை. 

அதிக பிரத்தியேகக் கல்வி வசதிகள்,  பொருளாதார வேறுபாடுகள் தரும் போஷாக்குத் தரங்கள் என்பனவும்,  குடும்பச் சூழ்நிலைகளும்  உங்கள் பரீட்சையில் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்பதை உணருங்கள். 

இருந்த இடத்தில் போஷாக்கு நிறை உணவு, மற்றும் கவனிப்புகளுடன் கல்வி தவிர  வீட்டில் எந்த நிலைவரமும் காதுக்கு எட்டாமல்  வளர்க்கப்படும்  பிள்ளைக்கும்  தனிப்பட்ட பல்வேறு சிரமமான சூழ்நிலைகளுக்கும் முகம் கொடுத்து வளரும் பிள்ளைக்கும் மனமொருமித்துக் கிரகிக்கும் தன்மையில் வேறுபாடு உண்டென்பதை உணருங்கள்.  இன்னொருவருடன் உங்கள் பெறுபேறுகளை ஒப்பிட்டு தோல்வி மனப்பான்மைக்குப் போகுமுன்  உங்கள் வாழ்வியல் தராதரங்களையும்  ஒப்பிட்டுப் பாருங்கள்  உங்கள் சூழ்நிலையில்  நீங்கள் பெற்றது பெரும்  பேறென உணர்வீர்கள்.

வசதி என்று நான் இங்கு உரைப்பது வெறும் பொருளாதார வசதி மட்டுமல்ல.  மாணவரின் சூழல்,  குடும்ப அமைப்பு, மற்றும் புறத்தாங்களை உள்வாங்கும் அவரது  மனப்பாங்கு என்பவையும் இதற்குள் அடங்கும். 

தவிரவும் பாடசாலைக் கல்வி என்பது  உங்களுக்கு  வாழ்வின்  முதற்படியை  அறிமுகப்படுத்தும் நிலையே தவிர, உங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் இடமல்ல.  பாடசாலைத் தேர்வுச் சித்தியோடு  அப்படியே பல்கலைக்கழகம் புகுந்து விடலாம் என்பதுமில்லை.  அப்படிப்  புகுந்தாற்றான்  உயர்பதவி நிலை அடையலாம் என்ற எந்த வரையறைகளும் இல்லை.

ஒரு முறை தோற்றால் அதன் காரணத்தை தேடித் திருத்துங்கள். இன்னொரு முறை தோற்கமாட்டேன் என்ற வைராக்கியம் கொள்ளுங்கள். சாதித்து விடுவீர்கள். முடியவில்லையா  இருக்கவே இருக்கிறது  உங்களைச் சுற்றி இன்னும் பல பாதைகள்.  அவைகளில் உங்களுக்குப் பொருந்திப் போவதும் பிடித்ததும்  எதுவெனத் தேர்வு செய்யுங்கள் அவைகள் வழி செல்லுங்கள்,  நீங்கள் எதிர்பாராத உச்சத்தைக் கூட அடைவீர்கள்.

எனக்குத் தெரிந்து போதிய பெறுபெறின்மையால் பந்தாம் வகுப்புக்கு மேல் பாடசாலைக் கல்வியை தொடர முடியாது போன ஒருவர்,  வேறு பாதையின் படிநிலைகளால் ஏறி, பிரித்தானியக் கணக்கியல் சான்றித்ளோடு     ஒரு பெரிய நிறுவனத்தின் கணக்காளராக இருந்தபோது  அவரிடம் நான் உதவியாளராக இருந்திருக்கிறேன்.

கொழும்பில் பெற்றா  வீதிகளில்  தன் எழுவயதிலேயே  சிறு தட்டில்  நூலும்  ஊசிகளும் விற்றுத் திரிந்த சிறுவன், பின்னாட்களில் ஐந்து நிறுவனங்களின் முதலாளியாக  3000  தொழிலாளர்களுக்கு  வேலை கொடுத்ததைப் பார்த்திருக்கிறேன். அவர்  வாயாலேயே  கூட இருந்து  வந்தவழிப் பாதைகள்  அறிந்திருக்கிறேன்.  அவரிடம் இருந்ததெல்லாம்  தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் மட்டுமே.

இங்கு நான் வாழும் நாட்டில்  பரீட்சைக் காலத்துக்கு முதலே,  பாடசாலைக்கு வெளியேயான  அவர்களின் எதிர்கால வெளிகள் திறந்து  காட்டப் படுகிறது. அவைபற்றிய கருத்தரங்குகள் மற்றும் ஆலோசனை மையங்களுக்குப்   பாடசாலையே  அழைத்துச் செல்கிறது.  மாணவர்கள் தங்கள் கல்வித்தரங்கள், மற்றும் தொடர  விருப்பும் துறைகள்   பற்றிய சுயகணிப்பீட்டுக்கும்,  பாடசாலைக்கு பின்  ஒரு சூனியமான வெளியை  உணராது, அடுத்த படி என்ன என்பதை முடிவு செய்யவும்  வழிவகுத்திருக்கிறது.

இலவசமாக கல்வியையும்  அதற்கான வசதியையும் தரும்  எங்கள் நாட்டிலும்  உங்களுக்கான அடுத்த படிக்கான வசதிகள்  வாய்ப்புக்கள்  காத்துக் கொண்டேயிருக்கும்.

உங்கள் வீட்டுக்கு அடுத்து  பாடசாலை  நீங்கள் பார்த்த சிறு உலகம். அதனோடு முடிவதில்லை  உங்கள் வாழ்க்கை.  வெளியே  வாருங்கள். உங்களுக்குப் பிடித்த, நீங்கள் சாதிக்கக் கூடிய  சந்தோஷப்படக் கூடிய  ஒரு உலகம்  உண்டு. அதைக் கண்டடையுங்கள்.  அது பற்றிய அறிவுள்ள, உங்களைப் பாதுகாப்புடன் வழிநடத்தக் கூடியவர்களை நெருங்குங்கள்.

ஒவ்வொரு பிறப்புக்கும்  ஏதோ ஒரு அர்த்தம் உண்டு.   இறப்பு அதுவாக  உங்களை நெருங்கும் வரை வாழ்தலை அர்த்தப் படுத்துங்கள் . நீங்கள் தோல்வி என உணர்வது உறுத்துகிறதா. தோற்றவராய்  மற்றவர்கள் அனுதாபப்படும் படியோ,  எள்ளி நகையாடும் படியோ  இறந்து போகாதீர்கள். வென்று விட்டு  சாவகாசமாக  வெற்றியாளராக  இறக்கலாம் என  எண்ணுங்கள்.

இதற்கு மேல் எம் சமூக அமைப்பிலுள்ள முக்கிய குறைபாடு  ஒப்பீடு.  எதுவும்  எதனுடனும்  ஒப்பீட்டளவில்  ஒன்றாகாது. ஒவ்வொன்றிலும்  ஒவ்வொன்று மேலானது.  அதை  உணர்ந்தால்  விழுந்த குழந்தையை  தட்டிக் கொடுக்கலாம்.  தட்டிக்கொடுத்து எழுப்பப்படும்  குழந்தை  தைரியம்  கொள்ளும்.  பதட்டம் நீங்கும்  விழாமல்  நடக்கும்  வகை அறியும் .

பாடசாலை வயதில் நட்பை இழந்த வலியே  இறக்கும் வரை மறையாது.  உறவை  இழந்த வலி உயிருள்ளவரை  கொல்லும். உங்களை நேசித்தவர்களுக்கு,  உங்களைப்பற்றிய  கனவுகள்  வளர்த்தவர்களுக்கு,  தங்களை  ஒடுக்கி  உங்களை  உயர்த்த  நினைத்த  உங்கள் அன்பானவர்களுக்கு  அப்படியொரு  தண்டனையை  கொடுக்காதீர்கள்.  இறப்புக்கு இதுவல்ல வயது.

.
(என் பக்கத்தில் இளையவர்களை  நான் இணைப்பதில்லை.  முடிந்தால், விரும்பினால்  அவர்களிடம்  எடுத்துச் செல்லுங்கள்  நட்புகளே.  என்  எழுத்துக்களாக  இல்லையென்றாலும்  உங்கள்  வார்த்தைகளாக )