Sunday, December 23, 2018

லட்சுமணன் கோடுகள்

அவனைச் சில நாட்களாகத் தொடர்ந்து அவதானித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.  அவன் எப்போதும் தன் தாயை  எதற்கும் நச்சரிப்பவன் இல்லையானாலும் இப்போது  சில நாட்களாக பணம் கேட்டு முன்னும் பின்னும் அலைந்து கொண்டு நை... நை  என்று விடாமல்  நச்சரித்துக் கொண்டு  அதிக விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள பேரங்காடிக்கு அழைத்துச் செல்லும் படியும் தாயைச் சுற்றிச் சுற்றித்   திரிந்து கொண்டிருந்தான்.

தாய் அடுப்பில் வதங்கிய முருங்கைக்காயை கிளறி விட்டவாறே "சமைக்க விடுடா.  உப்புக்குப் பதிலா சீனியைப் போட்டிடப் போறேன்."  என்றாள்.

"இல்லாட்டி மட்டும் ஏதோ பெரிய திறமாய்  சமைக்கிற  மாதிரி.  நீங்க  எதைப் போட்டாலும் ஒரே மாதிரி கண்ணை  மூடிக்கொண்டு  விழுங்கிற மாதிரித்தான்  இருக்கும்.  என்ர விதி  இந்த வயித்தில  பிறக்கவேணும் என்று இருந்திருக்கு"  என்று  அப்பாவியாய்  முகத்தை  வைத்து அதிகமாய்  நடித்தவன்  தாய் கரண்டிக் காம்பை  ஓங்கியதும் ஓடிப்போய் தள்ளி நின்று சிரித்தவாறே  திரும்பவும் "காசும்மா " என்று ஆரம்பித்தான்.

"எதுக்குடா பணம் " எனக் கேட்டு தாயும் மழுப்பலும் கிண்டலுமாக அவனுக்கு விட்டுத்தராத விதமாகவே  பேசிக்கொண்டிருந்த போதிலும் அவன்  தன் நச்சரிப்பை  நிறுத்தியிருக்கவில்லை. இறுதியில் சலித்துப் போனவனாக  "நான்  கிப்ட்  வாங்க வேணும் காசு தாங்கம்மா"  என்றான்.

"அடடே  என்னிடமே காசு வாங்கி  எனக்கே வாங்கித்தரப் போகிறாயா  கில்லாடி  டா நீ தங்கம் " என்ற போது உதட்டை கோணலாகச் சுழித்து " மா  கனவில இருந்துவெளியே  வாங்கோ" என்றான்
"ஏண்டா?"
"இவவுக்கேல்லாம்  நாங்க கிப்ட்  வாங்கிடுவோமாக்கும் " என்றான் கிண்டலாக.  கூடவே
"நான் என் சகோதரங்களுக்கு  கிப்ட்  வாங்க வேணும் காசு தந்து  நான் சொல்லுற இடங்களுக்கு  கூட்டிட்டுப் போங்க"  என்றான் அன்புடன் கூடிய உரிமையின் அதிகாரத்துடன்.

"அடே  மகனே வழித்தேங்காய்  எடுத்து  தெருப்பிள்ளையாருக்கு உடைக்கிறது  என்று கேள்விப்பட்டிருக்கிறியா?"

"அதெல்லாம் நாங்க கேள்விப்பட்டிருக்கிறோம்.இப்ப நீங்க காசு தாங்க."

"கிப்ட்  சொந்தக் காசில வாங்கணும்  டா."

"இப்ப வாங்கிறதை  எழுதி வையுங்க  நான் உழைக்கும் போது அப்பிடியே திருப்பித்தாறேன். "

"தந்திட்டாலும்"

"ஹலோ  I`m kumaran. Son of .....  என்று   தன் வழமையான  M . குமரன். சண்  of  மகாலஷ்மி  பட  டயலாக்கில்    ஆரம்பித்து  பாசத்தையும் கூட  விட தன்மானமும், நேர்மையும் முக்கியம். அம்மா எல்லாம் சொல்லித்தான் வளர்த்திருக்கா.  எல்லாம்  ஞாபகமா திருப்பித்தருவோம்  இப்ப பணத்தைத் தாங்க  மேடம் "என்றான்.  பேச்சில் சற்று தென்னிந்திய சினிமாவாடையடித்தது. சொந்த மண் விட்டு விலகியிருப்பதில் அவர்களது  தாய் மொழியில் வேறு வாசங்கள் கலப்பது  போன்ற  சில தவிர்க்க முடியாது அடையாளங்கள்  தொலைவதை சங்கடத்துடன்  அவதானித்துக் கொண்டிருந்தேன்.



                                                               



அவர்கள்  அங்காடிக்குப் போனபோது கூடவே  போயிருந்தேன்.  ஒரு குறிப்பிட்ட  தொகையைச் சொல்லி  அதற்குள் உங்களுடைய  பரிசுப்பொருட்களை  வாங்குங்கோ  செல்லம் என அவனது தாய் சொன்னாள்.  ஒவ்வொரு பொருளாக ஆவலுடன் பார்ப்பதும்  எதன்  மீதும்  திருப்தியற்று  அதிக கவனமெடுத்து  அவர்களுக்குப் பிடித்ததாகத் தேர்ந்தெடுக்க விளைவதுமான  அவனது  செயலில் இருந்த  நேசத்தை  நெகிழ்வுடன் கவனித்துக் கொண்டிருந்தேன்.  உண்மையைச் சொன்னால்  எல்லோரையம்  சகோதரமாக  எண்ணி  அணைத்த  எனக்கெல்லாம்  உண்மை  நேசிப்போடு நெருங்க  ஒரு சகோதரம்  கூட உடன் பிறக்காததாலும் சகோதர பாசத்தோடு கையோடு கொண்டு திரிந்தவை  எல்லாம் என் முதுகுக்கான கத்தியை தங்கள் மறுகையில் மறைத்துத் திரிந்தவை என்பதை  அனுபவங்கள் கற்றுத் தந்த பின்    இப்போதெல்லாம் மனம்  களைத்துச், சோர்ந்து, தோற்று  என்று  கூடச் சொல்லாம், தோளிலும்  இடுப்பிலும் சுமந்த   எல்லாவற்றையும்  மனதிலிருந்து இறக்கிவைத்து  இளைப்பாறக் கற்றுக் கொண்டு விட்டது .  இப்படி  எங்காவது  காண நேரும் போது  மட்டும்  அதை மிக ஆவலாகப் பார்ப்பேன். மனம் நெகிழ்ந்து கண் கசிந்து  விடும்.

பரிசுப்பொருட்கள் தெரிவு செய்யும் படலம் திருப்தியற்றே  தொடர்ந்து கொண்டிருந்தது.  ஒவ்வொரு கடையாக நகர்ந்தவன்  இடையில்  காலணிக் கடைக்குள்  நுழைந்தான்.   தனக்கான குளிர்காலக் காலணிக்கான  பணத்தை  அவன் முதலே  வாங்கி வைத்திருக்க வேண்டும்,  தனக்குப் பிடித்த  காலணியைத் தன் சகோதரங்களின்  ஆமோதிப்புக்கும் தன் மிகுந்த பரிசீலனைக்கும் பின்  வாங்கிக் கொண்டான் . 

கடைக்கு வெளியே போட்டிருந்த கதிரையில்  அமர்ந்திருந்த தாயிடம்  வந்தான்  , கைகளுக்குள் பொத்தியிருந்த மிகுதிப்பணத்தைத் தாயிடம் நீட்டியவன்,   அதை  சற்று யோசனையுடன் பார்த்தான். பின்   காசைக் கொடுக்காமல் கைகளைப் பின்வாங்கி  பணத்தை  எண்ணத் தொடங்கினான்.  ஏதோ  தவறு நடந்த பாவனையில்  சப்பாத்துப் பெட்டியும்,  மிகுதிப்பணமும்  அதன் பற்றுச் சீட்டுமாக  மீண்டும் கடைக்குள்  ஓடினான்.  திரும்பி வந்த போது முகத்தில் தெளிவும்,  புன்னகையும் , நிமிர்வும் இருந்தது.

"என்னடா?"  என்றாள்  தாய்.

"இல்லம்மா.  காசேல  ஒரே  சனம்..  அவ  நான்  குடுத்த  காசை விட அதிகமா  மிச்சம் தந்திருக்கிறா.  அது தான் கொண்டு போய்  குடுத்திட்டு  வந்தனான்."  என்றான்

"ஏண்டா பேசாமல் அந்தக் காசை நீயே எடுத்திருக்கலாமே. எடுத்திருந்தால் ,  கிப்ட்  இற்குப் பணம் தா  என்று அம்மாவை  அரிச்சுக் கொண்டு  திரியத் தேவையில்லை  எல்லா"  என்றேன்.

"அது  என்னுடைய  காசில்லை. கடை மூடும் போது   கணக்குப் பார்க்கும் போது  வரும் குறைவான  பணத்தை  அந்தக் கடை  அவவின் சம்பளத்தில்  பிடித்துக் கொள்ளும்.  அந்தக் காசில்  அவவின்  கவலை  கலந்திருக்கு.  இன்னொருவரை  அழவைத்துப் பெறுவது  பாவப் பணம்.  ஏமாற்று வேலை  அது எனக்குத் தேவையில்லை " என்றவன்,

திரும்பவும்  "பரிசு வாங்க வேணும் பணம் தாங்கம்மா"  என்று ஆரம்பித்தான்.  இப்போது தாய் தன் பணப் பையை  அவனிடம் கொடுத்தாள். அவளது  கண்கள் கலங்கி  உதடுகள்  துடித்துக் கொண்டிருந்தன.

அந்தச் சந்தர்ப்பத்தில் இந்தக் குழந்தைகளின்  கடந்த காலம்  என் நினைவுகளைக் கீறுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அப்போது  அவர்கள் மிகச் சிறியவர்கள். அவர்கள்   வீட்டில் பணம்  பொருள்  என அடிக்கடி  தொலைந்து கொண்டே இருக்கும்.  அவர்களின் தாய் குடும்பத்திருட்டுப் பற்றிய  அனுபவங்களைக் கொண்டிராமையால்,  அந்தத் திருட்டுக்களின்   ஆரம்ப காலங்கள்  அவளால்  அவதானிக்கப் படாமலும்,  பின் கைமாறி எங்கோ வைத்து விட்டேன்,  என்றும் ஏதோ  பொருட்கள்  வாங்கிவிட்டு  மறந்து விட்டேன்  என்றும்  தன்னைச்  சமாதானப் படுத்திக் கொண்ட காலங்கள்  கடந்து, வீட்டில் தொடர்ந்து  திருட்டுப் போகும் பணம் பற்றிய  அவளது  தேடல்கள்  சற்றுத் தீவிரமாக , எப்போதும் கலகலப்பற்றிருந்தாலும் சத்தமின்றியிருந்த   வீட்டில் அமைதி குழம்பியது.


  காணாமல்  போவன  பற்றிய கேள்விகள் அவளிடமிருந்து எழும்போதெல்லாம்  உண்மை மறைத்துத் தப்பிக் கொள்ள  பெற்றவனாலேயே  பிள்ளைகள்  மீது  திருட்டுப் பட்டமாகச் சாட்டப்பட்ட  பொல்லாத காலங்களில் , திருடவேண்டிய தேவைகள்  கூட  ஏற்படாத வயதில் உள்ள குழந்தைப்  பிள்ளைகளைச் சந்தேகிக்கவும்  முடியாமல்,  திருடு போகும் பாதையும்  புரியாமல்,  பிள்ளைகளைக் கேட்டால்  அவர்கள்  உடைந்து நொருங்கி, அவர்கள் மனதில் இறுதிவரை  அது ஒரு வடுவாகவே  பதிந்து விடும் என்றும்,  விசாரிப்பதன் மூலம்  தெரியாத ஒன்றை அவர்களுக்கு  அறிமுகம் செய்து  கற்றுக்கொள்ளத் தூண்டுவது போலாகும் என்றும் மனப் போராட்டத்துடன்  தத்தளித்து ,   ஒருவேளை  தன் குழந்தைகள் அப்படியொரு  பழக்கத்துக்குப் ஆட்பட்டுக் கொண்டால்  அதைத்  தாங்கும் சக்தியற்றவளாக ,  தவறான  வாரிசுக்களை  இந்தப் பூமிக்கும், களங்கமான ஒரு பெயரை தன் பரம்பரைக்கும்,  வலியோடும்  அவமானத்தோடுமான  ஒரு வாழ்வைத் தன் குழந்தைகளுக்கும்   விட்டுச் செல்வதை  விட, அவர்களையும் கொன்றுவிட்டு இறந்து விடலாம் என்ற முடிவுக்குக் கூட  அவள்  வந்திருக்கிறாள். அவளறியாது அவளது வங்கிக் கணக்கில் குறைந்து செல்லும் பணத்துக்கான விளக்கத்தை   வங்கி அதிகாரிகள்  அவளைக் கூப்பிட்டு  cc டிவி  பதிவுகளுடன்    நிலைமையை  நிரூபிக்கும் வரை.

பால் போலிருந்த  அவளது  மனதின்  பலவீனம்  எல்லாவிதத்திலும்  பலியாகிக்கொண்டிருந்ததை  தொடர்  ஆதாரங்கள்  ஒவ்வொன்றாக நிரூபித்துக் கொண்டிருந்த  அந்த நேரத்திலும் திருட்டுக்கும் , பொய்களுக்கும்  தன் குழந்தைகளுக்கும் எந்த விதச் சம்பந்தமும்  இல்லை என்ற  மிகுந்த நிறைவுடன்  ஆவாசமாக மூச்சு விட்டுக் கொண்டாள்.

குடும்பத்தைத் தாண்டிய  ரகசிய வாழ்முறைகள் கொண்ட  எங்குமே, குடும்பத்துக்குள்  பொய்யும்  திருட்டும், நெருக்கமின்மையும், விரோத மனப்பாங்கும்   தவிர்க்க  முடியாதனவாகவே   ஆகிவிடுகின்றன. குடும்ப நபர்களிடம்   பொய்யும்  களவும் , இரகசியத் தொடர்புகளும்  முளைவிடும் போதே  கூட இருப்பவரின் பொறுமை பறிபோய்  குடும்ப  அமைப்பு  உடையத் தொடக்கி விடுகிறது,    சிறிய  அளவில்  தொடங்கும் அவை , குழந்தை மனங்களைக் கொன்று , வன்முறைகள்  மூலம்  குடும்பத்தைத்  தின்னத் தொடங்குகின்றன. 

சிலுவைகளைச் சுமப்பதற்காய்  பாவப்பட்ட  இயேசு பாலன்களும்  பாலகிகளும்  அவதரித்துக் கொண்டிருக்கும்  இந்தப் பூமியில் அவர்கள்   வரவுகளை ஊர் கூட்டிக் கொண்டாடுவது  கூட   எமது பாவங்களின்  பழியை  வருந்திச் சுமக்க, இதோ  இன்னொரு தாய் ஈன்றெடுத்து  அனுப்பி  வைத்திருக்கிறாள்  என்ற மகிழ்வில் தானோ  என்று இப்போதெல்லாம் எண்ணத்   தோன்றுகிறது.

நான் யோசனையூடே   அவர்களைப் பார்க்கிறேன்.   அந்த முகங்களில்  முன்பிருந்த   பதட்டங்களும் , பயங்களும் , கூட்டுக்குள் பதுங்கும் ஒருவித ஒடுங்கிய பார்வையையும் இப்போதில்லை. அவர்கள்  அதைக் கடந்து   வெளியே  வந்து விட்டார்கள்.  இப்போது   நத்தார் கால அலங்கார  விளக்குகளை  விட  அதிக வண்ணக் கனவுகளுடன்  பிரகாசிக்கும் அந்த முகங்களையும்  கண்களையும்  பார்க்கிறேன்.  அன்று  அந்த வெளியேற்றம் நிகழாது  போயிருந்தால்  அவர்கள்  வீட்டுக்குள்  இருந்தே சகல தீய பழக்கங்களையும்  கற்றிருப்பார்கள், அல்லது  பழியேற்கும் பலிக்கடாக்களாக  முடங்கி  ஒன்றுமேயில்லாதவர்களாக ஆகியிருக்கவும் கூடும்.

வாழ்கையின் மீது  அலங்கோலமாக  வரையப்படும்  கோடுகளை வாழ்தலின்  நிமித்தம்  தாண்டித்தான்  ஆகவேண்டியிருக்கிறது.  தாண்டினால்  தொலைந்து போக   எல்லாக்  கோடுகளும்  லட்சுமணன்  கோடுகள்  அல்லவே.



Sunday, July 22, 2018

பிள்ளையார் ஊதின புல்லாங்குழல்

நான் அந்த நிகழ்வுக்குப் போனது வாரங்களின் முன் ,  அல்லது மாதத்தின் முன் என்று  வைத்துக்கொள்ளுங்கோவன். பெரீய  அறிவியல் சார்ந்த நிகழ்வெல்லாம்  இல்லை.  அதுக்கு எதிர்மாறான  இந்தக் காலத்தான வாழ் நிலையில்  வேடிக்கை நிகழ்வு தான் .  வேறை என்ன,  தமிழ் பிள்ளைக்கு இங்கிலீஷ்  பெயர் வைச்சமாதிரி  இப்ப saree ceremony  என்று நாகரீகமாக பெயர் சூட்டி வழங்கப்படுகிற,   எங்கட  பழைய சாமத்தியச் சடங்கு , இல்லாட்டி பெரியபிள்ளையாகின  தண்ணிவார்ப்புச் சடங்கு தான்.

வாசலில் நிறைகுடம்,  மாறாமல் காப்பாற்றப்படும்  எங்கள் அடையாளத்தை எந்த விதமான நாகரிக மாற்றமும் அற்றுச் சொல்லிக்கொண்டிருந்தது மனதுக்கு   நிறைவாக இருந்தது.  உள்ளே  போகப்போக மண்டபம்    கண்ணைக் குத்தும் அலங்காரத்தோடு    இருந்தது.  அது என்  பக்கத்தில் வந்தவளுக்கு  மனத்தைக் குத்தியது  தான் பிரச்சனை.

'ஏன்  என்ற கேள்வியொன்று  என்றைக்கும் தங்கும்'  என்று கண்ணதாசன் சொன்னதை கச்சிதமாக  எப்போதும் மறவாமல் எல்லா விடயத்திலும் கடைப்பிடிப்பவள்  என் கையைப் பிடிச்சுக்கொண்டு எப்போதும் என் கூடவே நடப்பவள் . அவளுக்கு மனத்தைக் குத்தினால் என் தலையை பிராண்டப் போகிறாள்  என்ற பதட்டம் எனக்கு வந்து விடும்..

மண்டபத்தின் உள்ளே நடந்தோம் கையில் சுரண்டினாள்,  கேள்வி வரமுன் கையை  சுரண்ட முடியாமல் இறுக்கிப் பிடிக்க, மறுகையால் இடுப்பில் சுரண்டினாள் .

"என்னம்மா "

"வெண்டாமரைப் பூவுக்குள்  சரஸ்வதி தானே இருப்பா .நீங்கள் அப்பிடித்தானே சொல்லித் தந்தனீ ங்கள்  நாங்கள் ஊரிலயும் லைபிரறியில அப்பிடித்தானே பார்த்தனாங்கள் "

"ஓம்"

"இங்க   ஏன் பிள்ளையார்   இருக்கிறார்?"

அவளின் பக்கத்தில் வந்தவன்  ஹாஹா மாட்டிக்கொண்டாயா என்பது போல  என்னைப்பார்த்து  கண்களால் ஜாடை செய்து சிரித்துக் கொண்டே

"அது  பிள்ளையார்ட  எலி குளிக்கப் போட்டுதாம் வரும் வரைக்கும் அவருக்கு இருக்க இடம் இல்லை எண்டு போட்டு சரஸ்வதி தாமரையை இரவலா  குடுத்தவ "

என்று எண்ணையூற்றி விட்டான் .

அவளது கண் ஓடிய இடத்தை பார்த்தேன்  வாசலில் இருந்து மேடைவரை  இருபக்கமும்  வரிசையாக வரவேற்புப் பணியில் இருந்த பிள்ளையார்கள்  வெண்டாமரைப்  பூவுக்குள்  இருந்து தான் வரவேற்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள் .

போய்  இருக்கைகளில் அமர்ந்தோம்.

திரும்ப சுரண்டினாள்.

"இப்ப என்னம்மா?"

"சரஸ்வதி தானே   வீணை வாசிப்பா?"

ஓம் என்று சொல்லவும் இல்லை என்று சொல்லவும் பயமாக இருந்தது இப்போது

"இங்க  பாருங்கோ பிள்ளையார் வாசிக்கிறார்."

அடுத்ததா அவளது பார்வை எல்லாப் பிள்ளையார்களையும் சுற்றி ஓடியது

"கிருஷ்ணரிட  புல்லாங்குழலையும்  பிள்ளையார் எடுத்து வாசிக்கிறார்  பாருங்கோ"



                                                                 

பார்த்தேன்

தாளமும் கையுமா ஒரு பிள்ளையார் ,  வீணையோடு ஒருவர் , வயலினோடு ஒருவர், தபேலா வாசிச்சுக்கொண்டு ஒருவர் , நாதஸ்வரம், தவில் , புல்லாங்குழல்  என்று  பிள்ளையார் பல அவதாரமெடுத்து ஒரே நேரத்தில்  பெரியதொரு வரவேற்பு  இசைக்கச்சேரியே  நடத்திக் கொண்டிருந்தார்.


யார்கண்டது  இன்னொரு நிகழ்ச்சியில் பெல்பொட்டம்  போட்டு தலைமுடியையும் வளர்த்து தொங்கப் போட்டுக்கொண்டு  பொப் மார்லி  ஸ்டைல் ல பிள்ளையார் கிற்றார்  வாசிக்கலாம்,  டாமின் ஷ்மிட்  மாதிரி சந்திரமண்டலத்துக்கு போற கெட்டப்பில ட்றம். செட்  வாசிக்கலாம் , இன்னும் யாரோ  ஒருவர் மாதிரி  சாக்ஸபோன்  வாசிக்கலாம் , கனக்க ஏன் நான் மவுத் ஒர்கனால உதடு மசாஜ் பண்ணுற மாதிரி  மவுத் ஓர்கன்  கூட   ஊதலாம்.  இல்லை தலையை விரிச்சுப் போட்டு மைக்கைப் பிடிச்சுக் கொண்டு  உடல் உதறப் பாடிக் கொண்டும் இருக்கலாம் .

"நீங்கள் ஏன்  வீணையோடு வெள்ளைப் பூவில இருந்தால் சரஸ்வதி வீணை வாசிச்சால்  சரஸ்வதி , புல்லாங்குழல் வாசிச்சால் கிருஷ்ணர் , வேல் வைச்சுக் கொண்டு  மயிலில இருந்தால் முருகன் என்று எல்லாம் சொல்லி சொல்லி தந்தீங்க?".

"அது அது அவர்களுக்கான அடையாளம் எண்டு  எனக்கு சொல்லித் தந்ததை தானேம்மா  உனக்கு சொல்லித் தந்தன்"

"அப்ப  ஏன்  இப்ப மாத்தியிருக்கு?"

"இப்பிடி எல்லாம் மாத்துவீனம் எண்டது எனக்குத் தெரியாதேம்மா "

சரியா தெரியாததை  ஏன் சொல்லித் தந்தீங்க.

"வருங்காலத்தில தங்கட வசதிக்கு ஏற்ற  மாதிரியெல்லாம் கடவுளுக்கும்  அடையாளங்களை  மாத்துவீனமா எண்டு கேள்வி கெட்டு  தெளிவாகாமல் மண்டு மாதிரி தலையாட்டி  நம்பிப்போட்டு உனக்கும் சொல்லித் தந்தது என்ர குற்றம் தான்."

"சிலுவை  பாருங்கோ . அது ஒரு அடையாளம். அதைக் கண்டால்  ஜீசஸ்  ஞாபகம் வரும்,  அவர் பட்ட பாடு நினைவு வரும்  ஆனால் இப்ப நான் யாராவது எந்தக் கடவுள் வீணை வாசிக்கும் எண்டு கேட்டால் எல்லாரும் எண்டா  சொல்லுறது,  குழலூதி கோபியர் மனதை கொள்ளை கொண்டவன் யாரெண்டா  இப்ப நான் யாரை நினைக்க,?"

"அதானே முதல் யாருக்கு எந்த வாத்தியம் என்று தெளிவா முடிவு செய்து போட்டெல்லோ  மேடையேற்றி  கச்சேரி தொடங்கியிருக்க  வேணும் . இப்பிடி பாதியில பாதியில ஆளை மாத்தினா  கச்சேரி எப்பிடி களைகட்டும்"

அவளுக்கு பக்கத்தில் இருந்தவள் கள்ளச் சிரிப்போடு   ஊதிவிட்டாள்

எல்லாம் நாமாக உருவாக்கியவை தானே ,  காலத்தோடு நாமும் ரசனையும்  மாறும் போது  இவைகளும் மாறினால் என்ன என்று கூட நாம்  வாதிடலாம் தப்பே இல்லை. நாம் தான் கடவுளையும் படைத்த,  கடவுள்களாச்சே,  சரஸ்வதியும் , கிருஷ்ணரும் வந்து கேக்கவா போகீனம் எங்கட வாத்தியத்தைப் பிடுங்கி ஏன்  பிள்ளையாருக்குக் குடுத்தனி  என்று.  கேட்டால் ரெண்டு தட்டுத் தட்டி வாய் பேசாமல் கோயிலுக்குள்ளே   இருத்தி  விடமாட்டோமா  என்ன? இப்போதெல்லாம் தப்புகளை தயங்காமல் செய்து  தப்பிக்கொள்ளும் இடமாக அவைகளைத் தானே நாம் உருவாக்குகிறோம்

அடையாளம் என்பது ஒரு குறியீடு.  ஒன்றில் அதை உருவாக்காமல் சந்ததிகளுக்கு  அடையாளப்படுத்தாமல்  இருக்க வேண்டும். குறியீடுகள்  மாற்றப்படும் போது அடையாளங்கள் கேள்விக்குரியதாகும்  அது உருவாக்கிய நம்பிக்கைகள் மீதெல்லாம் அவநம்பிக்கை பிறக்கும் என்பது பற்றி எல்லாம் நாம் சிந்திக்க மாட்டோம்.  எங்கள் குறி பணம் மட்டுமே. அதற்கு கடவுளுக்கும்  கழுத்தில கயிறு கட்டி குரங்காட்டி வித்தை காட்டவைத்துப் பிழைப்போம்   அவ்வளவு தான்

திரும்பி வரும் போது

"கோவிலுக்குள் மட்டும் தான் செருப்போட போகக் கூடாதா ,  சாமி வெளியே இருந்தால்  அதுக்கு முன்னாலும் பக்கத்திலும் செருப்போட நடந்தால் குற்றமில்லையா?  தூய்மை  புனிதம் கெட்டுப் போகாதா? பாருங்கோ  எல்லாரும் சாமியை திரும்பிப்பார்க்காமல் செருப்போட போகீனம் ஒருத்தரும் கும்பிடேல்ல . நாங்களும் செருப்புப் போட்டுக்கொண்டு தான் வந்திருக்கிறம்."

 என்ற அவளது கேள்விக்கு என்னிடம் பதிலிருக்கவில்லை.

எல்லாம் இருக்குமிடத்தில் இருக்கும் வரை தான் அதனதன் மதிப்பு.  அவரவர் தேவைக்கு ஏற்றமாதிரி ஒவ்வொரு இடத்தில இருத்தி வைக்கச் சம்மதிச்சால்   இதில்லை இன்னும் அதிகமாகவும் நடக்கும் .  உன்னுடைய காலை நீயன்றி எவரும் அசைக்க அனுமதிக்காதே என்று சொன்னால் இப்போது அதை விளங்கும் வயது அவளுக்கில்லை

தேவையிருந்தால்  மூலஸ்தானத்தில் வைத்துக் கடவுள் என்போம்,   தேவை முடிந்ததா   வெளியே வீசிவிட்டு கல்  என செருப்பில் ஒட்டிய அசிங்கம் வழிப்போம்.  காலகாலமாய் மனிதர்க்கே நாம் இதைத்தானே செய்கிறோம் . வாய்பேசாத சிலைக்குச் செய்தால் என்ன   என என் வாய்வரை வந்த பதிலை  நான் அவளுக்குச் சொல்லவில்லை.

வளரும் குழந்தைகள் . இனி இது அவர்களது உலகம்  அவர்களது பார்வையில் உலகைப்புரியட்டும்   என விட்டு விட்டேன்

Sunday, May 27, 2018

அது அவர்கள் தப்பேயல்ல

"ஏதாவது பேசேன்"

"................................."

"எவ்வளவு நாளைக்குப் பின் சந்திக்கிறோம் பேசுவதற்கு ஒன்றுமே இல்லையா உன்னிடம்?"

"..................................."

"சந்திச்சுக் கனகாலமாச்சு  உன்னுடன் நிறையப் பேசவேண்டும் என்று நீதானே அழைத்தாய்"

"ம்"

"அப்போ பேசேன்"

"........................................."

"எனக்கு நிறைய வேலைகிடக்கு . நீ அழைத்தாய் என்பதால் எல்லாவற்றையும் விட்டுப் போட்டு வந்திருக்கிறன்".
குரலில் மறைக்க முடியாமல் கோபம் எட்டிப்பார்த்ததை அவள் உணர்ந்திருக்க வேண்டும். நிமிர்ந்து பார்த்தாள். நீயா  அதுவும் என்னிலா கோபப்படுகிறாய்  என்றது பார்வை.

முகத்தை இருகைகளாலும் அழுந்தத் துடைத்தாள்   இலக்கற்று நேராக வெறித்தாள்.  பின் அடிவயிற்றிலிருந்து ஆழமாய் நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றினாள்.  திடீரென

"இந்தப்  பூமி ஏன் இப்படி இருக்கிறது மாலினி?" என்றாள்

நான் திகைச்சுப் போனன். பின்னை என்ன .  பதில் இல்லாத கேள்விக்கு விடை தேடி தோத்து, அது எப்படியாவது இருந்திட்டுப் போகட்டும். மிச்சம் இருக்கிற  கொஞ்சக் காலமாவது நான் நானாக இருப்பம் என்று தீர்மானித்து விட்டவளிடம் திரும்ப பிள்ளையார் சுழியில் ஆரம்பிக்கிற மாதிரி இருந்தது அவளின்  கேள்வி.

"என்னைக் கேட்டா ? அம்மா தாயே பூமி பற்றி பூமியிடம் கேள் தெரியும். ஒன்றில் என்னைப்பற்றிக் கேள்  பதில் சொல்லுறேன் ./ அல்லது உன்னைப் பற்றிச் சொல் "

சற்றுக் கோபமாகப் பார்த்தாள்.

"நான் நிறைய மனம் நொந்திருக்கிறேன் தெரியுமா ? "
என்றவள் தன் சிறுபராயத்தில் சரியான குடும்ப அமைப்பில்லாமல் மனதளவில் அதனால் நிறையப் பாதிப்புக்களைக் கொண்டிருந்தவள் அன்புக்கும் ஆதரவுக்கும் அதிகம் ஏங்கியவள். இது தான் வாழ்க்கை விதித்தது  .அதிலிருந்து  எனக்குப் பிடித்த மாதிரி உருவாக்கிக் கொள்வதே என் வாழ்க்கை எனத் தெளிவாகி பின் திடமாகி ஸ்திரமாக வேலை செய்துகொண்டிருந்த இடத்தில் இருந்த வேலையை  உதறிவிட்டு kinderheim /சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் வேலை தேடிக்கொண்டு தன்னைப்போல மனப்பாதிப்புள்ள ஒரு குழந்தையின் மனதை  ஆறுதல் செய்தாலும் இந்த வாழ்வில் அர்த்தம் இருக்கும் எனச் சொல்லிக்கொண்டு மிக விருப்போடு முன்னூறு கிலோமீட்டர் தாண்டிய இடத்துக்கு சேவை செய்யப் போன அவள் தான் இப்போது பூமியைப்பற்றிய கேள்வியோடு முன்னே அமர்ந்திருந்தாள்

kindar heim  என்பது ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் போல இருக்காது இங்கு.  ஒரு பெரிய தனி வீட்டில் கிட்டத்தட்ட பத்துக்கு மேற்படாத குழந்தைகளை மட்டுமே கொண்டு ஒரு குடும்ப அமைப்பை அவர்கள் உணரும் விதத்தில் இயக்கப்படுவது.  இருபத்துநான்கு மணித்தியாலங்கள் மூன்றாகப் பிரிக்கப்பட்டு கவனிப்பாளர்கள் இயங்குவார்கள்.  பாடசாலை ,விளையாட்டுத் திடல் , பொழுதுபோக்கு, உல்லாசப் பயணங்கள் எல்லாமே ஒரு குடும்பம் போல அதற்குள் அடக்கம்.பதினெட்டு வயது வரை அங்கு வளரும் பிள்ளைகளுக்கு உயர்கல்வி தொழிற்கல்வி என்பன போன்ற சகல வழிகாட்டல்களும் சலுகைகளும் வழங்கப்படும்


ஆனாலும் பிஞ்சு மனதில் பெற்றோரோ உறவோ நட்போவான அவர்களுக்கு நெருங்கியவர்கள் பதித்துவிட்டுச் செல்லும்  கீறல்கள் இலகுவில்  அழிந்து விடுவதில்லை சமயங்களில் அவர்கள் அந்தப் பாதிப்பின் வடிவங்களையே பிரதிபலிப்பது தவிர்க்க முடியாதவை

அவள் இங்கு வளரும் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு நீச்சல் குளத்துக்குச் சென்றிருக்கிறாள் . நீந்திய  பின் சற்று ஓய்வெடுத்து மீண்டும் நீந்தக் காத்திருந்த நேரத்தில்  சிரிப்பும் கலகலப்பமாக குளித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞர் கூட்டத்தை நெருங்கி சற்று ஆபாசமான உடல் நெளிப்புக்கள்  சிரிப்புக்களுடன் ஆரம்பித்து போட்டிருந்த பிகினியின் மேல் பக்க ஆடையை உயர்த்தி  பார்  பார் அழகாக இருக்கிறதல்லவா எனக் காட்டியபெண்  குழந்தையின் வயது பன்னிரண்டு.. தாய்  உடல் விற்பனைக்கு வீதியோரங்களில் வாடிக்கையாளர் தேடும் பெண் என்பதால்  அரசாங்கம் குழந்தையை பறித்து வளர்க்கிறது.

சாமங்களில்  தவறாமல் வீறிடும் மற்றொரு குழந்தை.. அவளது கருத்துப்படி அது நிம்மதியாக நித்திரையே கொண்டதில்ல்லை.  என்ன பொருள் எனினும் அது உரிய இடத்தில் கிடக்கவிடாது தூக்கிவீசி சிதறிவிட்டு அதற்குள் இருக்கும் மற்றோர் குழந்தை.

தன் சகோதரங்களுக்கு யார் எதை சாப்பிடக் குடிக்கக் கொடுத்தாலும் அனைத்தையும் சந்தேகக்கண்ணோடு பார்க்கும் , தன் இரு சகோதரங்களுடன் அங்கு வளரும் குழந்தை. தன் இளைய தங்கை தூங்கிக் கிடந்தால் கூட  அடிக்கடி சென்று அவளது ஏறி இறங்கும் மார்பைப்பார்த்திருக்கும்  மற்றோர் குழந்தை. இவர்கள் மூவரும்  இளையவள் ஒரு வயதாக இருக்கும் போது, நான்காவது சகோதரம் ஒன்றரை மாதத்தில் இறந்து போக , அதை ஆராய்ந்த மருத்துவம் குழந்தையின் உடலில் அதிகப்படியான போதை வஸ்து கலந்திருக்கிறது என அறிக்கை விட , காவற்துறையின் ஆய்வில் குழந்தை தூங்குவதற்காய் பாற்புட்டிக்குள் பாலோடு கலந்து கொடுத்த போதை வஸ்து அதிகமாகி குழந்தை இறந்தது நிரூபணமாக , பெற்றோர் முழுநேரமும் போதையில் கிடப்பதும் மற்றைய குழந்தைகளுக்கான பாதுகாப்பின்மையும் உணரப்பட்டதால் பெற்றவர்களை சிறையில் தள்ளிவிட்டு  கொண்டு வரப்பட்டவர்கள் . ஒரு வயதில் வந்தவளுக்கு எட்டு வயது இப்போது  இருந்தும் அண்ணன்களின் மனதில்  ஒரு மாதத்தில் கொல்லப்பட்ட சகோதரத்தின் அவலம் மறையவும் இல்லை. பெற்றவர்கள் மீது இழந்த நம்பிக்கை மற்ற எவர் மீதும் ஏற்படவில்லை.

இப்படி அவள் உடைந்துடைந்து சொன்ன கதைகள் ஏராளம்.  இருந்தும்  அவள் இறுதியாகக் கேட்ட கேள்வி மட்டும் மனதிலேயே இருக்கிறது

"சரியாக வளர்க்க முடியாது எனும் பட்சத்தில் எதற்காகப் பெறவேண்டும்.  தான் ஆண் என  உலகுக்கு  நிரூபிக்கவா ?   அல்லது பெண்ணென  நிரூபிக்கவா?  உனக்குக் காமம் துய்க்க விருப்பமா அனுபவித்துவிட்டுப் போ  அது உன்  உரிமை.  அதற்காக ஒரு உயிரை உருவாக்கி உருப்படாமல் போடும் உரிமை உனக்கு யார் தந்தார்  அதன் வலி  தெரியுமா மாலினி ?" அவள் நிறைய நேரம் உடைந்து போய்  அழுது கொண்டிருந்தாள்



                                                               

பி.கு :-  விமானத்திலிருந்து  இறங்கிவரும்  அதிசயமாக ருதுவான தேவதையை ,  சேடியர் பூத்தூவ , சிறுபடை பாதுகாப்பு வழங்கி முன்னடக்க,  வீரவாள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டும்  ஐம்பதாண்டு புலிக்கேசியை ,  அன்னப்பறவையில்  ஆலோலம் பாடிவந்து  மனமேடையேறும் மணமக்களை ,  மணவறை மேலே மணமகன் இருக்க(நேரில் பார்க்கும் போது உத்தமன் படத்தில் படகுபடகு பாடலில் , மணல் வெளி மேலே மணமகன் இருக்க மணமகள் பல்லாக்கில் போகின்றாள் மனதையும் கல்லாக்கிப் போகின்றாள் என்ற சோக வரிகள் திருமண மண்டபத்தில் ஞாபகம் வந்ததை தவிர்க்க முடியவில்லை ) பல்லக்கில் குலுங்கக் குலுங்க ஊஞ்சலாட்டிவந்த மணமகள்  இவைகள் எல்லாவற்றையும் தாண்டிய ஒரு குரூரப் பக்கமும் வெளிநாட்டில் எமக்குண்டு.

அது எம் குழந்தைகளால், திருமணம் என முகம் தெரியாதவனை நம்பிவந்து நிர்க்கதியான ,  உளவியல் ரீதியில் பாதிப்படைந்த எம் இனப் பெண்களால் ஆனது.  நான் மேற்சொன்ன பாதுகாப்பகங்களில்  எங்கள் குழந்தைகள்  கூட  வாழ்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

தனியான  சூழலில் துணையென நம்பியவன் துரோகியாக இருக்கையில்  நம்பிவந்த வாழ்க்கை முழுவதும் வழி தெரியாத இருளாகி விட்ட நிலையில்,  தமது குட்டுகள் வெளிப்பட்டு விடும் என்ற அவதானத்தில் யாரோடும் பழக அனுமதி மறுக்கப்படும் பெண்கள் ,  தம்மை ஸ்திரப்படுத்து முன்  காசுக்காகவோ என்னவோ   அடுத்தடுத்து  பெறுவிக்கப்படும் குழந்தைகள் ,  புதிய நாடு, தெரியாத மொழி , மனம் திறக்க மனிதர்கள் இன்மை போன்ற கையறு நிலையில் மன அழுத்தத்துக்குள் புதைந்து போக  திடீரென தலையில் விழும் பிள்ளைகள்  பற்றிய பொறுப்புகள் அதுவரையான பொறுப்பற்ற மனிதர்களின் தாங்க முடியாத தலைவலியாகி விடுகின்றன.

விளைவு  இங்குள்ள பாதுகாப்புச் சட்டங்களுக்குப் பயந்து வெளியில் எவருக்கும் சந்தேகம் ஏற்படாமல் நடித்து வீட்டுக்குள் மனைவி  பிள்ளைகள் மீது பிரயோகிக்கப்படும்  அதீத வன்முறை . அது வெளித் தெரியாமல் சமொஓத்துடன் சேர அனுமதி மறுத்துத் தனிமைப் படுத்தல் . ஒரு கட்டத்துக்குமேல் , பாடசாலைகள் குழந்தைகளின் இயல்பின்மையை அவதானிக்கத் தொடங்குகின்றன. விசாரிப்பதுன்புரியாமலேயே அவர்களிடமிருந்து விடயங்களைக்  கிரகித்துக் கொள்கின்றன   அதிலிருந்து அவர்களைக் காப்பதற்கான பொறுப்பின் முதல் படியாக சிறுவர் நல மையங்களுக்கு அவை அறிவிக்கப் படுகின்றன.  தொடரான  விசாரணைகள் அவதானிப்புகள், தீர்வை திடமாக முன்வைக்கின்றன.

அதன் படி  குழந்தையின் எதிர்காலம் பற்றி மட்டுமே முடிவுகள் அக்கறை கொள்கின்றன. பெற்றோர் இருவருடனும்,  அல்லது ஒருவருடனாவது வளர முடியாத குழந்தைகளை அரசாங்கம் தான் பொறுப்பெடுத்துக் கொள்கிறது

இருந்தும் ...

 எத்தனை  முயற்சிகள் , வசதிகளை அரசாங்கம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக மேற்கொண்ட போதும் மனப் பாதிப்பு என்பது  இறுதிவரை வசதிகளால் தீர்த்துவிட முடியாத ஒன்று.  என்பதையும், அந்தப் பாதிப்புகள் இறுதிவரை இயல்பாக சமூகத்துடன் ஓட்ட முடியாத நிலையில் அவர்களை தனிமைப்படுத்தி விடுகின்றன என்பதை பல  குழந்தைகள் வளர்ந்து பெரிய மனிதர்களானபின்பும்  நிரூபித்து பெற்றோரின் முகத்தில் குற்றத்தை பச்சை குத்தி விடுவது அவர்கள் தப்பல்ல.

Sunday, May 13, 2018

கருணை எனும் பெரு வேதம்

"தாய்மை,  அதனோடு இறுதிவரை  மகவுக்குள்ள  பந்தம் அவ்வளவு இலகுவாக வார்த்தைகளால் விளங்கவைக்கக் கூடியதோ கடந்து விடக் கூடியதோவல்ல. பெற்ற   குழந்தையின் வாழ்க்கையிலிருந்து அதன் குணநல  விருப்பு வெறுப்புகளால்  தாய் பற்றி, ஓரளவாவது  புரிந்து கொள்ள முடியும் .  அதன் இயல்புகள் இறுதிவரை  ஏதோ ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் தாயின் பண்புகளை, வயிற்றில் தாங்கிய காலத்தில் தாய் கொண்டிருந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும். அந்தப் பிரதிபலிப்பு தாய் உலகத்துக்கு வெளிக்காட்டாது மறைத்த  உணர்வுகளின் உண்மை அடையாளமும்  சாட்சியுமாகும் "

மேற்கூறப்பட்டவை அண்மையில் சிறுவர் பாதுகாப்பு ,மற்றும் சிறுவர் உள வள நலப்பராமரிப்பு அதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்த போது  அவர் சொன்ன கருத்துக்கள்.


இதை அறிந்தோ அறியாமலோ கூட தலைமுறைகள்  முந்திய கூட்டுக் குடும்பக் காலத்தில் ,  குடும்பங்களில் எப்போதுமே  மனிதர்கள்  நிறைந்திருந்ததால்  சோகமோ, கோபமோ  முடிந்தவரை  அதிகநேரம் நீடிக்கும் வாய்ப்புகள் இப்போதுடன் ஒப்பிடும் போது குறைவாகவே இருந்தன   ஆறுதல் சொல்லவும்  அரவணைக்கவும் மனிதர்கள்  இருந்தார்கள்.  கர்ப்பம் சுமக்கும் பெண்ணை  முடிந்தவரை  சந்தோஷமான  மனநிலையில் வைத்திருக்க முயன்றார்கள்.


அதற்கு அப்போது  இரண்டு  காரணங்கள் முக்கியமாக இருந்திருக்கலாம்.  ஒன்று  அதிக மருத்துவ வசதி இல்லாத காலமென்பதால்  பிள்ளை குறுக்கே கிடந்தாலும், கழுத்தில் கொடி சுற்றினாலும், குழந்தையின்  தலையின் விட்டத்துகேற்ப யோனி வாசல் விரிய  மறுத்தாலும், இரந்தப் போக்கு நிற்க மறுத்தாலும்,  பிரசவத்தின் போதான தொற்று , அதை  அடையாளம் காட்டும் காச்சலைத் தொடர்ந்து வரும் சுவாதம்  இப்படி எது  ஏற்பட்டாலும்    அப்போதெல்லாம்  அனேகமாக  மரணம் என்ற ஒன்றுமட்டுமே   ஒரே  தீர்வாக இருந்ததால்  கர்ப்பம் தரித்த பெண் அதிகம் பயந்த மனநிலையைக் கொண்டிருக்க  வாய்ப்பிருந்தது.

அந்தப் பயத்தைப் போக்கவும்,  உறவை, உரிமையை  உறுதிப்படுத்துவது  போலவும்   எந்நேரமும்  அயலவர் உறவினர்  என  நெருக்கமானவர்கள்  அவளுக்கு பிடித்தவைகளை உண்ணக் கொடுத்தும்  தலைவாரி விடல் உடலுக்கு எண்ணெய் பூசி உருவுதல். நிறைமாதக் கற்பினியின் வீக்கமுற்ற பாதங்களை அழுத்திவிடல்  என அரவணைத்தும்  கவனித்தும் கொண்டார்கள்.  அவள் மனம் நிறைந்திருந்தால்  கருவிலிருக்கும் குழந்தை  பாதிப்புகள் அற்றிருக்கும்  என  உணர்ந்திருந்தார்கள்.  உள்ளே கருவில் இருக்கும் குழந்தை  தாயின் மனநிலையை  தாய்  வாழும் சூழல், அதன் இயக்கங்கள்  எல்லாவற்றையும்  தனக்குள் உள்வாங்கிக் கொள்ளும்  என்பதையும் உணர்ந்திருக்கலாம்.  விஞ்ஞான விளக்க அறிவுக்கு முன்னாலேயே அதை உணர்ந்திருந்தார்கள்  என்பதை பாரதக் கதை மிகத்தெளிவாகச் சொல்லியும் இருக்கிறது.


அரிச்சுனனின்  மனைவியும் கிருஷ்ணனின்  தங்கையுமான சுபத்திரை அபிமன்யூவை கருவாக வயிற்றில்  சுமந்து கொண்டிருந்த காலத்தில் கிருஷ்ணன்  சக்கரவியூகம் என்ற  போர் முறை பற்றி தங்கைக்கு  சொல்லிக் கொண்டிருக்கிறான். அதை அன்னையில் வயிற்றிலிருந்து  அபிமன்யூவும்  கேட்டுக்கொண்டிருக்கிறான்.  சக்கரவியூகத்துக்குள்  நுழைந்து  எதிரியைத் தாக்குவது வரை  கேட்டுக்கொண்டிருந்த  சுபத்திரை, வியூகத்தை  உடைத்துக்கொண்டு வெளியில் வரும் தந்திரத்தைக்  கேட்பதகுள்  தூங்கி விடுகிறாள்.  அன்னை தூங்கியதும்  வெளியிலிருந்து  எந்த ஒலியும் அபிமன்யூவின்  காதுகளை  வந்தடையவில்லை.   அதுவே  அவனது போர் வெற்றிக்கும்  உயிரிழக்கக் காரணமாகவும்  ஆகிப்போனது.  இது கதையோ  கற்பனையோ  ஆனால்  விஞ்ஞான வளர்ச்சி பேசப்படாத  அக்காலத்திலேயே  நிறைய விளக்கத்தோடு தான்  எம்மவர்கள்  ஒவ்வொரு காரியங்களையும்  உணர்ந்து செயற்பட்டிடுக்கிரார்கள்  என்பதன் அடையாளங்களில் ஒன்று .


ஆதலாலேயே   இந்தியாவிலும்  இப்போது புலம்பெயர் ஈழத்தவர்கள் மத்தியிலும் (விபரம்  உணர்ந்தா  அல்லது விழா எடுப்பதற்க்காகவா என்பது தெரியவில்லை )  வளைகாப்பு முறையும்   வழங்கப்படுகிறது.  குழந்தை தாய் வயிற்றில்  தன் முழு உருப்பெற்று,  அதன் மூளை சுற்றியுள்ள விடயங்களைக் கிரகிக்கத்  தொடங்கும் காலத்தில்  அதன் காதுகளில்  தீய சத்தங்கள், சிந்தனைகள்   வசவுகள் தவிர்க்கப்பட்டு எப்போதும் கலகலப்பான  ஒலிகள்  காதில் விழுவது அதன் ஆரோக்கிய மனநிலைக்கு  நல்லது என்பதாலேயே தாயின்  கரங்களில், அசையும் நேரமெல்லாம்  கலீரென   இனிமையான ஒலியைத்தரும்  கண்ணாடி வளையல்கள்  அடுக்கப்பட்டது.  கூடவே  உறவு அயல் மனிதர்களுடன்  அவளது இணக்கப்பாட்டை  உணரவைக்க, வாஞ்ஞையோடு வருடும் இடங்களான கன்னங்களில் மஞ்சள் தடவியதும்,  அத்துடன்  இச்சடங்குகளில்  கல்யாணமான குழந்தை பெற்ற பெண்களே  முன்னணியில்  நின்று நடத்திவைத்தமைக்கும் காரணம்  பார் நாமெல்லாம் பெற்றுத் தேறி  மகிழ்ச்சியாக  ஆரோக்கியமாக இருக்கிறோம் நீயும் உன் பிரசவத்தை  எண்ணிப் பயந்து விடாதே என்பதை  உணர்த்தவே.
இவற்றிலிருந்து  வயது தாண்டியும் திருமணமாகாத பெண்கள், குழந்தைப் பாக்கியம் அடையாத பெண்கள் மற்றும் கணவனை  இழந்த  பெண்களை  ஒதுக்கி வைத்தமை  என்பது   வேறு. அது எம் அதி மேதாவிகளின்,  உணர்விலடித்து   உயிரெடுக்கும் தவக்கிரத் ந்திரம்.  இந்தப்பதிவில் நான் அதுபற்றிப் பேசவில்லை


மேற்சொன்ன கூற்றுப்படி பார்த்தால் இன்றைய  அவசர  வாழ்வியல்,  நெருக்கமற்று  தூரமாய் போய்விட்ட  உறவு முறைகளின்  மனத்தூர  இடைவெளிகள்,  குழந்தைகளின்  ஆழ்மனதில் தன்னவர்கள்  எனப்படும் உறவுகள்  உள்வாங்கப் படாது போவதாக இருக்கவும் கூடும். எப்பவாவது காண நேர்ந்து  அறிமுகப்படுத்தினால்  எந்த உணர்வும் ஈர்ப்புமின்றி வெறும்  ஹாய்  உடன் முடிந்து போவதற்கும்  இது கூடக் காரணமாக இருக்கலாம்
இன்னுமொன்று, எமது  சமூகத்தில்  இன்னும் வழங்கப்பட்டு வருவது.  ஆணாதிக்க  மேம்பாட்டு மனநிலையை  ஊக்குவிக்கும்  ஆண் பிறந்த வீட்டுப் பெண் உறவுகள்

*அவன் ஆம்பிளை  ஆயிரம் செய்வான் பொம்பிளை தான்  பொறுத்துப் போகவேண்டும்.

*ஆம்பிளை சேறுகண்ட  இடத்தில்  மிதித்து  தண்ணி கண்ட இடத்தில்  கழுவுவான்.  பொம்பிளை  கண்டும் காணாமல்  இருந்தால் தான் குடும்ப  வண்டியோடும் .

*ஆம்பிளை என்றால்  ஆவேசமா  கையை காலை நீட்டத்தான்  செய்வான்.

போன்ற  இன்னோரன்ன  வக்காலத்துச் சொற்றொடர்களால்  வன்முறைகள்  ஊக்குவிக்கப்படும் ஆண்களுடன்  சகித்து  வலிகளை  தமக்குள்ளே விழுங்கிக் கொண்டே  கருச்சுமக்கும்  பெண்களின் கருவிலிருக்கும்  குழந்தை  தாய் வெளிக்காட்டாது  தனக்குள் புழுங்கும்   உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டே  பிறப்பதனால்  இயல்பாகவே அதனிடம்  தாய்  மீதான புரிதலும்  காயப்படுத்தியவர்கள்  மீதான  விலகலுக்குமான அடித்தளம்  வயிற்றிலிருக்கும் போதே  இடப்பட்டு விடுகிறது  போலிருக்கிறது.   அது மட்டுமல்லாது  இப்படியான  செயற்பாடுகள் கொண்டதாகவோ அல்லது அவற்றுக்கு முழுவதுமான எதிர்க்குணம் கொண்டதாகவோவும் தான் அது சமூகத்தில் தன்னைப் பிரதிபலிக்கிறது என்பதை அவதானித்தால் நான்  மேற்குறிப்பிட்ட விடயத்திலுள்ள உண்மை நிலையை உணர முடியும்
                           
                                                         


பிறந்த உடனேயே  தாயின் முலைதேடி ஊர்ந்து உறிஞ்சவும் ,  ஸ்பரிசங்களில்   தாயின் ஸ்பரிசத்தை தனியாக  உணர்ந்து  அழுகை நிறுத்தவும்  செய்யும் குழந்தைகள் தாயின் ஒரு அங்கமாகவே தம்மை நிரூபிக்கின்றனர்.

ஒரு பெண் தாயாகும் கணத்திலிருந்து தனக்காக வாழ்தல் என்பதை அனேகமாக நிறுத்திக் கொள்கிறாள். அவளது எதிர்பார்ப்புகள் , எண்ணங்கள், திட்டமிடல்கள் எல்லாம் குழந்தையை சுற்றியதாகவே அமைகிறது.

பெண்ணுக்குத் தாய்மை இயற்கை வழங்கிய வரம் என்பதையும் தாண்டி,  ஒரு உயிரை தன் உயிருக்குள் பத்துமாதகாலம்  அதனோடான சகல அசௌகரியங்களையும்  பெருமையுடன் ரசித்துப் பொறுமையுடன் சுமந்து, தன்  உடலின் ஆரோக்கியம் வனப்பு அத்தனையும் இழந்து உயிர்வலிப் போராட்டங்கள் தாங்கி, சிலவேளைகளில் குழந்தையின் உயிர் காக்கப்பட வேண்டும் என்பதற்காக  தன் உயிரையே பணயம் வைத்து, தன்னைக் கிழித்துப் பெற்றெடுத்த பின்னும், மீண்டும் தாய்மை சுமக்கத் துணிவதில் அவளது மனத்திடத்தையும் துணிவையும் பொறுமையையும்  பூமிக்குக் கற்றுக் கொடுத்து தாய்மையின் பலம் உணர்த்துகிறாள் .


அவளது உதிரமுறிஞ்சி,  உணர்வுறிஞ்சி, அவளின் ஒரு அங்கமென  பூமியில் விழும் எல்லா உயிரினங்களிலும் அதனது தாய் வாழ்ந்து கொண்டே  பூமியை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறாள்.

ஆனாலும் ஏனோ   பல அருவருக்கத்தக்க பிறவிகளுக்கு தன் குடும்பத்தவர் தவிர்ந்த,  பெண் என்பது   வசை பாடவும் ,  இன்னொருவரை அவமதிக்கவும்  ஏதுவான, இழிநிலைச்  சொற்களாக பெண்மையும்,தாய்மையும்  தன்னைக் கிழித்து உயிரை பூமிக்குக் கொண்டு வரும் அவளது  உறுப்புமே அமையப் பெற்றிருக்கிறது என்பது அருவருப்புக்குரிய நிதர்சனம். ஒரு வேளை இவைகளும் கருவில் இருந்தே தன் சுற்றம்  சூழல்  எனும் சாக்கடையில் கற்றதாகவும் இருக்கக் கூடும். 

தாய்மையை போற்றாது விடினும், மதிக்காது  விடினும் ,மிதிக்காது, அவமதிகாதாவது இருப்போம். கர்ப்பகாலத்திலாவது அவளது உணர்வுகளைக் காயப்படுத்தாதிருந்தால், சமூகத்துக்கு அல்லது குடும்பத்துக்கு விரோதியான ஒரு வரவை  உருவாக்காதிருக்கச் செய்யும் சமூகப் பேருதவியாகக் கூட அது இருக்கலாம்

"தாய்மை இன்றி உலகுக்கு அமையாது கருணை என்னும் பெரு வேதம்"

Tuesday, May 1, 2018

ஒரு ஊர்சுற்றியின் காதல் பயணம்

அடிக்கடி பார்த்துப் பழக நேர்பவர்களையோ,   அருகிலேயே  இருப்பவர்களையோ  விட  எப்பவாவது  ஒரு சந்தர்ப்பத்தில்  எதிர்பாராது  சந்தித்துப் பிரிந்த  எமக்குச் சம்பந்தமில்லாதவர்கள் சிலர் நினைவுகளில்  நிரந்தரமான இடத்தைப் பிடித்து விடுவதுண்டு.

அப்படித்தான்  அவளும்,

வாரங்களின் முன் ஒரு விமானப்பயணத்தில்  பக்கத்திருக்கை சக பயணியாக  அறிமுகமானாள்.   அறிமுகப் புன்னகையோடான  ஹாய்  க்குப் பிறகு    இருவருமே  ஆளாளுக்கு ஒரு புத்தகத்துக்குள்  மூழ்கி விட்டோம்.    இடைக்கிடை  இருவருமே ஒரே நேரத்தில்  ஆளையாள்  பார்த்துக் கொண்ட போது புன்னகையால்  இணக்கமாகியிருந்தோம்.

எப்போதுமே மிகவும் எதிர்பார்ப்புடன்  காத்திருக்கும்  விடயங்களில்  தான் தடங்கல்களும் அதிகம் இருக்கும்  அல்லது  அப்படியான சந்தர்ப்பங்களில்  ஏற்படும் தடங்கல்கள்  தான் எம்மால்  அதிகமாக  உணரப்படும்.  அன்றும்  விமானம்  குறித்த நேரத்துக்குப்  புறப்பட முடியாத   தடங்கல்.  விமானத்துக்குள்  ஸ்ஸ்,  என்ற  சலிப்புடன்  சிலரில்  ஆரம்பித்து  ஒஹ்  என்ற  தொய்வுடன்  அது பரந்து  நேரம் போகப்போக  சலிப்புகள்  சத்தமாக  வளர்ந்து   கோபமாக மாறி  சற்று நாகரீகமான   சந்தைக்கடைச் சத்தமாக  அது மாறிக் கொண்டிருந்தது.  ஆள்  மாறி  ஆள் பணிப்பெண்களை  கூப்பிட்டுக் கூப்பிட்டு  வைத்த  விசாரணையில், பின் தாகமெடுத்தவர்களுக்குக்  கூட தண்ணி கொண்டுவரப் பயந்து  அவர்கள்  ஒளிந்து கொண்டது போலிருந்தது

தடங்கல்களை பலர் பலமாதிரி உணர முடியும். ஒரு பயணத்தின் இடைத் தடங்கல் சிலரைப்  பொறுத்தவரை  வாழ்க்கையின் பாதையையே திசைமாற்றி விடும்.  அது ஒருவகை, இன்னொருவகை  குறித்தால்  குறித்த நேரத்தில்  எல்லாமே நடந்தாக வேண்டும்  அதில் ஒரு சிறு குழப்பம் எனினும்  இவர்கள்  பெரிதாகக் குழம்பி  விடுவார்கள். இன்னொருவகை  எதோ மற்றவர்கள் ரென்ஷனாக  இருக்கும் போது  நாமும் அப்படியே  இருக்காது விட்டால்  குறைந்து போவோம்  என்பது போல  வாழ்நாள் ரென்ஷன் பார்டிகள்  இவர்களின் கசமுசாவில்  ஒட்டாத  அமைதி தேவைப்பட்டது  எனக்கு.

என்னைப் பொறுத்தவரை   தடங்கித்தடங்கி, தடைகள்  தாண்டி  நிறைவேறும் விடயங்கள்  நல்லபடியான  முடிவுகளையே  தரும்  என்ற என் அனுபவங்களிலும்,   ஒருவேளை  தடங்கத் தடங்க  அதில் நான் கூடிய  கவனம் செலுத்துவதும், தடைகள்  வர வர  அதன் மீது நான் அதிக ஈடுபாடும் முனைப்பும் கொள்வதும்  கூட  அதற்குக் காரணமாக இருக்கலாம்   சற்றுப் பிந்தினாலும் கூட  முடியவேண்டிய இடத்தை என்பயணம் அடையும் என்ற தெளிவினாலும்  அந்தக் காத்திருத்தல்களில்   நான்   அதீத சலிப்போ  பொறுமையிழப்போ  அடையவில்லை.

வாசிப்பதை  விட எழுதினால்  என்னை முழுவதும் அதற்குள் அமிழ்த்திவிடலாம்  போலிருந்தது.  hand bag  இலிருந்து  பேனாவையும் கொப்பியையும் எடுத்துக்கொண்டு பக்கத்தில்  பார்த்தேன்  அவள்  ஒரு  ரிங் file லை  விரித்து வைத்து  அதிலிருந்த  பிஸிக்ஸ் போலான  கணிப்பீடுகளுக்குள்   பென்சிலை  உலவவிட்டு யோசித்தவாறே   என்னைப் பார்த்து அமைதியாகப்  புன்னகைத்தாள்.

தன் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு

May I know your good name pls   என்று  கண்களால்  புன்னகைத்தாள்

பெயரைச் சொன்னபின்  "இவர்களின் அமளியில்  நீ  கலந்துகொள்ளவில்லையே " என்றாள்.
 
புன்னகைத்தேன்.  நான்  வீணாகவே அற்பமாகத் தொலைத்த  காலங்களோடு ஒப்பிடுகையில்  இந்தக் காத்திருப்பின் நேரம்  கணக்கில் எடுக்கவே முடியாத மிக சொற்பம்  என்பதை அவள்  அறியாள்.

"எனக்கு  இதுவொரு  விடயமல்ல, எனதிந்தப் பயணத்தின் திட்டமிடலில்   காத்திருப்பில் கழிக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் இழக்கிறேன் .என்னை அழைத்துச் செல்லக் காத்திருப்பவர்களைக் காக்க வைக்கிறேன்  அதுதான் கஸ்ரம். நீயும்  அமைதியாகத்தானே  இருக்கிறாய்"  என்றேன்.

"you know மாலினி  என்று ஆரம்பித்தவள்  எது  எங்கே  எந்த நேரத்தில்   என்று  விதித்திருக்கிறதோ  அது அது  அந்தந்த நேரத்தில்  தான்  நடக்கும்"  என தத்துவப் பாணியில்  ஆரம்பித்தாள். 

இருந்தாற்போல்  "நான் இறந்துவிட்டால்  இந்தப் பூமியை விட்டு முழுதாகச் சென்றுவிடுவேன்  என நினைக்கிறாயா ?" என்றாள். 

"நான் நினைப்பதிருக்கட்டும்  அதைப்பற்றிப்  பின்பு சொல்கிறேன்.   முதலில் நீ என்ன நினைக்கிறாய்?"  என்றேன். 

" எனது மூச்சு  இந்தக் காற்றில்  ஒரு மிகச் சிறிய அளவில்  கலந்திருக்கும். விருப்பும் வெறுப்புமான  என் எண்ண அலைகள் இந்தப் பூமியில்  அலைந்துகொண்டேயிருக்கும். எனது உடல்  கூட  இந்தப் பூமியின் துணிக்கைகளில் கலந்திருக்கும் you know யாராலும் முழுமையாக  எதிலுமிருந்து  விடைபெற  முடியாது . வாழும் போதும், இறந்த பின்பும் "  என்றாள்.

ஒவ்வொரு விடயத்தின் முதலிலோ  முடிவிலோ இல்லை நடுவிலோ   இந்த you knowவை  அடிக்கடி பாவித்தாள்.  சுவாரசியமானவளாகத் தெரிந்தாள்.  தொடர்ந்து ஆர்வமாகப் பேசிக்கொண்டிருக்க முடிந்தது.

பிரேஸில்  தனது சொந்த நாடு  என்று சொல்லாமல் தனது பிறப்பிடம் என்றாள்.  உலகில் எதுவும்  எவரின் சொந்த இடமும் அல்ல  எதுவும் சொந்தமல்லாத  இடமும் அல்ல  என்ற  ரீதியில் பேசிக்கொண்டிருந்த  அவள்  ஒரு யூனிவர்சிட்டி  மாணவி.   நான் சந்தித்த மனிதர்களிலிருந்து சற்று   வேறுபட்டவள் 

அவளுடன் எது பற்றிப் பேசலாம்  என நாம் ஆராயாமல்  எம்முடன்  எவையெல்லாம் பற்றிப் பேசமுடியும் என்றளவில்  அவளது  வாசிப்பின்  வெளி   பரந்திருந்தது.  போர்,  கலாச்சாரம், அதன் இறுக்கமும்  மீறலுமான  அவசியமும் அவசியமின்மைகளும்,  சாப்பாடு, ஆன்மிகம் , விவேகானந்தர், ரமணர் ,  என்று  தாராளமாக  விரிவாக பேசவும் விசாரிக்கவும் அவளால்  முடிந்தது.  அவளின் கருத்துகளில்  ஓஷோவும்  புத்தரும் நாங்களும்  அவளுக்குள் இருக்கிறோம் என அடிக்கடி எட்டிப்பார்த்துச் சொன்னார்கள். அதே ரீதியில் அனைத்து நாட்டவருடனும் அவரவர்  நாட்டு விடயங்களுக்கேற்பப் பேசக்கூடியவள்  மாதிரி  இருந்தாள்.

முகச்சாயலிலும்  அனுபவங்களிலும் உலக அறிவிலும் நிதானத்திலும்  இருந்த முதிர்ச்சி  அவளது வயது பற்றிய என் அனுமானங்களை  விட குறைவாக  இருந்தாள்.   இசை  வாசிப்பு  என்பனபோன்ற  பலருக்கும் இருப்பன தாண்டி அவளுக்கு பிரத்தியேகமாக வித்தியாசமான  பொழுது போக்கு  ஏதாவது  இருக்கக் கூடும் என்ற எண்ணத்தில்

 " உன் அதிவிருப்பப் பொழுது போக்கு  என்ன?"  என்றேன்

"பொழுது போக்கு  என்று எதுவுமில்லை. பொழுது போக்கு  என்பது  போகாது கிடக்கும் பொழுதை  எதோ ஒன்றால்  நெட்டித் தள்ளுவது  போல .  எனக்கு  பொழுது கிடைக்கும் போதெல்லாம்  அதைப் போக்காமல்  என் கைகளுக்குள்  அடைத்து வைத்து  நான் விரும்புபவைகளை  செய்ய  விரும்புகிறேன்."  என்றாள்

"சரி  கல்வியோ  தொழிலோ  தாண்டிய மிகுதி நேரங்களில்  அதிகமாக  விரும்பிச் செய்வது  என்ன?" 

"அது  கிடைக்கும் நேர அளவைப் பொறுத்தது.  நான் இன்னும் என் கல்வியை முடித்து  ஒரு நிரந்தர  உத்தியோகத்தில்  உட்காரவில்லை.  வாரவிடுமுறை  நாட்களில் ஒரு விரைவு உணவகத்தில்  வேலை செய்கிறேன்.   வாரவிடுமுறையை  விட சற்று  அதிகமாகக் கிடைக்கும் நாட்களில்  இந்தப் பூமியை  சுற்றிப் பார்க்கப் புறப்பட்டு விடுகிறேன்.  நாடு நாடாக  சுற்றுகிறேன் "

"தனியாகவா  குழுவாகவா?"

"தனியாகத்தான்". 

"நிரந்தர மாதவருமானமற்ற  ஒரு மாணவி.  நாடுநாடாகச் சுற்றுவதெனில்  பயணங்களுக்கான பணத்தை  எப்படிப் பெற்றுக் கொள்கிறாய்.?"

"என் மனதில் குறித்திருக்கும் பட்டியலில் உள்ள நாடுகளின்  பயணச்சீட்டுக்கள் இணையத்தில் எப்போது விலை குறைவாக  இருக்கிறதோ அல்லது  எந்த நாட்டுக்கான  பயணச் சீட்டு  விலைகுறைவாக அந்நேரம்  இருக்கிறதோ  அல்லது இறுதி நிமிட பயணச் சீட்டு  எங்கு கிடைக்கிறதோ  அதையே  நான்  சுற்றிப் பார்க்கத்  தேர்வு செய்து கொள்வேன்."

"மிகுதிச் செலவு?"

"கையில் உள்ளபணத்தை முடிந்தவரை   செலவு செய்யாமல்  இருக்கவே  முயல்வேன்.  என் பயணத்தின் வழியில்  நட்பாகிக் கொள்வோரிடன்  என்னைப்பற்றி வெளிப்படையாகவே  பேசிக்கொள்வேன்.  குழந்தைகளோடான  குடும்பம்   அல்லது வயோதிப் பெண்கள்  போன்றோரிடம்  உங்களுக்கு  இஷ்டமானால் இன்றிரவு இங்கு தங்கிவிட்டுச் செல்கிறேன்  என்று அனுமதி கேட்பேன்  சம்மதித்தால்   அவர்கள் காட்டும் இடத்தில் உறங்குவேன். அவர்களுக்குச் சம்மதமானால்  அவர்கள் விரும்பும் நேரம் வரை  அந்த அனாடுப்றி வாழ்க்கை பற்றிப்  பேசிக்கொண்டிருப்பேன்.  உணவு தந்தால்  கூடியிருந்து  உண்ணுவேன் . இல்லையாயினும் பரவாயில்லை.   என்னிடமிருக்கும்  பிஸ்கட்டும்  தண்ணீர்ப் போத்தலும்  போதும் எனக்கு   அவர்கள்  சம்மதிக்காது விட்டாலும்  எந்த விதக் கோபமும்  எனக்கில்லை.  யாருக்கும் யாரையும் தாங்கவோ  தங்கவைக்கவோ  கடமையில்லையே.  இடங்கிடைக்காத போது விலை குறைவான  தங்குமிடங்களில்  தங்கிக்  கொள்வேன்"  என்றாள் இயல்பாய்.

"உன் இந்த வாழ்க்கை உன் குடும்பத்துக்கு ஏற்பாக இருக்கிறதா.?"

"ஆரம்பத்தில்  அவர்கட்கு  இதில் நாட்டமில்லை  என்பது தெரிந்தது.?"

"ஏசினார்களா?"

அறிவுரை போல இருத்திவைத்துப் பேசினார்கள்.  நான் என்  வாழ்தல் பற்றிய என் விருப்பத்தை  விளக்கினேன்.  பெற்றதற்காக  காலம் முழுவதுமா  அவர்கள்  முதுகில்  நான் சவாரி செய்ய முடியும் அல்லது  அவர்கள்  கூட்டுக்குள்  என்னை சிறைவைக்க முடியும்.  விஷேட நாட்களில்  குடும்பத்தோடு  கூடிக் கொள்கிறேன். எல்லோரும்  கூடி மகிழ்ந்திருக்கிறோம்.   துக்க நிகழ்வுகளில்  அவர்களைப் போல  என்னால் துக்கித் திருக்க முடியவில்லை.   வாழ்தல் போல  இறப்பும்  இயல்பான ஒன்றாகவே  எனக்குத் தோன்றுகிறது. you  know வாழ்தலும் இறப்பும்  என்பது இப்போது நான் உன்னைச் சந்தித்து இனி எப்போதும் காணச் சந்தர்ப்பமற்றுப்  பிரிவது  போலானது.  நினைவுகளில்  தான்  ஆற்றிய வினைகளில்  எப்போதும் ஒரு மனிதரால்  வாழ்ந்திருக்க முடியும் ."

"காலம் முழுவதும்  இப்படியே  சுற்றிக்கொண்டிருப்பதாகத தீர்மானித்திருக்கிறாயா?"

"தீர்மானம் செய்து  இதைத் தொடங்கவில்லை  நான்.  எனக்குப் பிடித்தவைகளை  மட்டுமே  செய்கிறேன்.  என் கல்வி உட்பட .  போதும் என  உணரும்  போது  நிறுத்திக் கொள்வேன்."

"இந்தப் பயணத்தை  எத்தனை நாட்கள் திட்டமிட்டிருக்கிறாய்?"

புன்னகைத்தாள்.  இதுவரை நேரத்துக்கும்  இப்போதுக்கும் அவளது முகத்தில்  நிறைய  வித்தியாசமிருந்தது.  பளீரென  இருந்த அவள் முகத்தில்   இப்போது  அதீத  ஜ்வாலிப்பு  அழகைக் கொடுத்தது .

"ஒரே ஒரு நாள்.  சிலமணி நேரங்கள்  அவ்வளவும் தான்"  

ஒரு முக்கிய விடயத்தில்  ஒப்பமிட ஒருநாள் விஜயம் செய்யும் பிரமுகர்  போல அவள் சொன்னது சற்று அதிர்ச்சியாக இருக்க

"அத்தனை விரைவாக  சுற்றிப் பார்த்து விடுவதற்கு அவ்வளவு சிறிய நாடா  இது?"

"இந்தப் பயணம் நாடு சுற்றிப் பார்க்க  அல்ல. ஒருவரைச் சந்திக்க"

நான் மேலே பேசாமல்  அவளது தொடர்தலுக்காகக் காத்திருந்தேன்.

"you know  மாலினி. இத்தனை வருடங்களில்  நான் எத்தனையோ  இடங்கள் சுற்றியிருக்கிறேன். ஏராளம் மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன் .  பலர்  என்னை விரும்பியிருக்கிறார்கள்.  என்னோடு கூடி வாழவிரும்பும்  தங்கள்  எண்ணத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்    ஆனால்  ஏனோ எனக்கு அப்படியான எண்ணங்கள் எதுவுமே வந்ததில்லை .  நலம் விசாரிப்பு  நாலு புன்னகையுடன் கடந்து  விடும். தொடர்புகளைத் தொடரக் கூட எண்ணுவதில்லை  என்னால்  ஒன்றில் ஒன்றித்து  அதற்கான  சமாளிப்புகள்  சமாதானங்களுடன்  இருக்கமுடியும் என்றோ  இருக்கவேண்டும்  என்றோ  தோன்றியதில்லை"

"இப்போது தோன்றியிருக்கிறதா?"

புன்னகைத்தாள்    

"அவனை இரண்டு வருடங்களின்  முன் மலேசியாவில்  சந்தித்தேன்.  நாடு பார்க்க வந்ததாகச் சொன்னான்.   பொதுவாக  எனக்கு  யாருடனும்  கூடிச் சுத்த முடியாது  எனது ரசனைகளும்  இன்னொருவர் ரசனையும்  வித்தியாசப்ப்படுமிடத்தில்  காத்திருத்தலும்  அவசரப்படுதலும்  தவிர்க்க முடியாதவை.  அதை நான் விரும்புவதில்லை. 

முதல் முதலாக  இவனோடு சேர்ந்து சுற்றப் பிடித்தது  பழகிய சில நாட்களில்  நட்பை  நட்பாக மதித்தான்.  எனக்கு  எது அவனில்  பிடித்ததென்பது  புரியவில்லை. அது  எனக்கு  என்னவென  விளக்கத் தெரியவில்லை.  ஆனால்  அவனுடன் இருந்த நேரங்கள்  தியானம் செய்து முடித்தது  போன்று  மனம் ஆரவாரங்கள்  அவசரங்கள்  எல்லாம் அடங்கி  நிற்சலனமாக   உணர்ந்தேன் .
அவனை விட்டுப் போனபின்  ஒவ்வொரு விடயங்களிலும்  அவனைத் தேடத் தொடங்கியது மனம்.  எதையோ  பிரிந்திருக்கும்  ஒரு ஊமை வலி தொடர்ந்து    இருந்தது.  சமூக வலைத்தளங்களில்  தேடினேன். கிடைத்தான். தொடர்பு கொண்டேன்  மகிழ்ந்தான்.

நான் சொல்லாது விட்ட என் உணர்வுகளை  தான் உணர்ந்ததாக  அவன் சொன்னான். கூடி வாழக் கேட்டான்  மறுத்து விட்டேன்.  இரண்டு வருடங்கள்  என்னைப் பரிசோதனை  செய்ய நான் எனக்குள்  விதித்திருந்த  கெடு. அந்தக் காலங்களில்  இன்னும் பல இடங்கள் , பல மனிதர்கள் கடந்து போனார்கள்   அவன் எனக்குள் இருந்து  போகவில்லை."

"that means you are in love with   him?"

"yes   இன்று விடிந்தால்  அவன் பிறந்தநாள்.   அதிகாலையில்  அவனுக்கு  வாழ்த்துச் சொல்லி அதிரவைத்து   சிலமணி நேரங்களை  அவனோடு கழித்துவிட்டு திரும்பிவிடுவேன்"

விமானம் தரையிறங்க  இருவரும் அவரவர்  வழியில் பிரிந்து போனோம்.

                                                                   
..........................................................................................................................................................

இன்றவள் தொலைபேசினாள்

"ஹேய்  மால்னி"  என்ற  குரலில்  அதீத  உற்சாகம்

"நீதான் சந்தித்துப் பிரிபவர்களைத் தேட மாட்டாயே"

"உன்னுடன்  பேசவேண்டும்  என்று தோன்றியது because I like you"

"உன் காதல்?"

அன்று சந்தித்துப் பேசிய சிலமணி நேரங்களில்  தன் குறைகள்  அடுக்கினான்.  " I'm nothing " என்றான்.

"நீ சொன்ன குறைகள்  எதுவுமே  என் கண்ணில்  படவில்லை.  அன்பின் பார்வையில்  குறைகள்  தென்படுவதில்லை . அதனாலேயே You are everything for me "  என்றேன்.

"உன்  ஊர் சுற்றும் பயணம்  ஓய்ந்து  விட்டதா.?"
  
"நிறைவு  தெரியும் ஒரு இடத்தில்  தரித்து நிற்கத் தோன்றி விட்டது." 

உண்மை தான்

'அன்பின் பார்வையில்  குறைகள் தென்படுவதில்லை .  அது இருக்கும் இடங்களில் மட்டுமே   ஆத்மாவும் இளைப்பாறுகிறது. நிரந்தர அமைதிக்குள்  சங்கமமாகிறது. '




Sunday, April 22, 2018

உலகப் புத்தகதினமும் (23.04) தொலைந்த நினைவுகளும்


சேக்ஷ்பியர்  இறந்த நாள் இன்று. (24.04.1564 . 23.04.1616)

அம்மாவிடம் கதைகேட்டுத் தூங்கிய நாட்களில் சொன்ன அவரது சில  கதைகள்  மனதிலோடுகின்றன. அப்பாவின் புத்தகப்பெட்டிக்குள் தூங்கிக்கிடந்த,  வளர்ந்து வாசிக்கலாம் எனக் காத்திருந்து வாசிக்காமலே போன  மற்றைய கதைகளும்   அவை மறைந்து போன  நினைவுகளும், ஒருபோர் கடந்தகாலம் என்பதை எந்தவித அடையாளச்சின்னங்களுமற்று எப்படிச்சிதைத்தெறிந்து வேரற்றவர்களாக வீசி விட்டுச் செல்கிறது என எண்ணிப் பார்க்கிறேன்.


அப்ப  அதாவது நான் சின்னவளா  இருக்கும் போது  எங்கட வீட்டில  நிறைய  ஆட்கள்  பத்துக்கு  மேல இருக்கும் எண்டு வையுங்கோவன்.  அதால இடநெருக்கடியும்   அதிகமா இருந்திருக்கக் கூடும்  எண்டு நினைக்கிறன் அதெல்லாம் அவதானிச்சுக்  கணிப்பிடுற  வயதில்லை எனக்கு அப்போது.  ஆனாலும்   அப்போது அதிகம் வசதிகளும் ஆடம்பரங்களும்  இல்லாமல் இருந்த காலம் என்பதாலும்  பாட்டி தாத்தாவின்ர  இறுக்கமான கட்டுக்கோப்புக்குள்ள  இருந்த  கூடு போல வீட்டு வாழ்க்கையில்   நெருக்கடியிலும்  மன நெருக்கமாக  வாழ்ந்த காலம்.

எங்கட   வீடு பாட்டி கால வீடு எண்டதால  வீட்டோட  ஒட்டாத தனியான  சமையலறை  முன்வாசல் விறாந்தை  என  பழையகால  அமைப்பிலேயே  இருந்தது. வீட்டின்ர ஒரு பக்கத்தில  வீட்டோட  ஓட்டினபடி பத்தி என்று சொல்லபடுற ஒரு எக்ஸ்ரா தொடுப்பு ஒன்று இறக்கப்பட்டிருந்தது.  அது வீட்டு நடமாட்டத் தொடசல்கள்  எதுவுமில்லாமல்  படிப்பதற்காக மட்டுமே  பாவிக்கப்பட்டது.  அதின்ர  நடுவில பெரிய மேசை வைச்சு  இரண்டு பக்கமும் நீள வாங்குகளும்  அகலப்பக்கத்தில்  கதிரைகளும்  போடப்பட்டிருந்தது. பகலில அதில தான் அம்மாவின்ர ரியூசன் வகுப்பு நடக்கும். மற்ற நேரங்களில் புழக்கமறிருக்கும். மாலை ஆறுமணி ஆகிச்சுதெண்டால்  வீட்டில்  இருந்தவர்கள், அவர்களின் நெருங்கிய நட்புகள் என்று  அந்தப் பத்தி  நிறைஞ்சு போயிருக்கும்.

பத்தியின்ர  தொங்கலில  பத்தியின்ர   அகலத்தை  அப்படியே அடைச்சபடி  எப்பவும் ஒரு பெரிய  இரும்புப்பெட்டி இருக்கும்.  இரும்புப் பெட்டி  எண்டதும் நீங்கள் கற்பனை பண்ணுற மாதிரி  ரங்குப்பெட்டி கிடையாது.   இரும்புப்பெட்டி  எண்டால்  இரும்புப் பெட்டி.  நாங்கள் ஒளிச்சுப்பிடிச்சு விளையாடினால்  ஆறேழு பேர்  அதுக்குள்ளே இறங்கி ஒளிச்சுக்கொண்டு  மூடி விட்டால் ஆருக்கும்  தெரியாது. ஆனால் என்ன  ஒண்டு  உன்னை  நினைச்சேன்  பாட்டுப் படிச்சேன்  படத்தில  கார்த்திக் மோனிஷாவை  மூடி வைச்ச மாதிரி  பிறகு  என்னை   நினைச்சு குடும்பம்  ஒப்பாரிப் பாட்டுப்படிக்க நேர்ந்திருக்கும் 

அதுக்குப் பக்கத்தில  ஆளுக்கொரு கதிரை கொண்டு போய்  போட்டு  அதின்ர  மேல் மூடியை  பூட்டு விலக்கி, ரெண்டு பெரும் ரெண்டு பக்கமும்  பிடிச்சு  மேல்ப்பக்கமா  உயர்த்தித்  திறக்குறதுக்குள்ள  எனக்கும் என்ர  முதல் நண்பி  ஷிராகினிக்கும் அடிவயிறு  எக்கி முழி பிதுங்கி  மூச்சு  முட்டிப் போகும்.   அதை விட  அம்மா கண்டிடுவா  என்ற  பயம் வேற.  அந்தப் பயத்திலேயே  திரும்பிப்பாத்துக்கொண்டு  மூடியை திறந்து,  அது பதட்டத்தில  கைநழுவி  'டொமார்'  எண்டு விழ,  அம்மா  உயிர்  விழுந்து  உடைஞ்ச மாதிரி  ஓடி வருவா.   அம்மா அடிச்சுப் போடுவா என்ற   பயத்தில அதை அப்பிடியே  போட்டிட்டு  நாங்கள்  ஓடிப்போய்,  அம்மா  மரத்தில எல்லாம் எங்களை மாதிரி ஏறி வந்து அடிக்க மாட்டா எண்டதால  முத்தத்து  மாமரத்தில  ஏறித் தொங்கிக்கொண்டு கொம்பேறி மூர்க்கன் மாதிரி  அம்மா என்ன செய்யிறா எண்டு பாத்துக்கொண்டிருப்பம்.   அப்பவே ஆக்கள் இல்லாத இன்னுமொரு நாளில  அந்த புதையல் பெட்டியை திறந்து பார்க்கிறதா  திட்டமும் போட்டுக் கொள்ளுவம்.

பகல் நேரத்தில்  வீட்டில் எல்லாரும் நிக்கும்   வாரவிடுமுறை நாட்களில்  மத்தியானம் சாப்பிட்ட பிறகு  பத்தியின்ர  வாசல் பக்கமா  வீட்டு  விறாந்தையை  ஒட்டிய  வெளிச்சமும் காற்றோட்டமுமான  பகுதியில  வரிசைக்குப் பாய்களைப்போட்டு  பாட்டி தாத்தா உட்பட  எல்லாரும்  சாய்ந்து கொள்ளுவீனம் .  அப்ப  கல்கி  குமுதம்  மாதாந்தர வெளியீட்டு  நாவல்கள்   எல்லாம் தபாலில  வீட்டுக்கு  வாற  காலம்.  நீ  முதல்  நான் முதல் என  யாரும்  போட்டி போட முடியாது.   அப்படிப் போட்டி போட்டால்  அது பாட்டி தாத்தாக்குப்  பிடிக்காது  அதால பொதுவா  ஒராள்  வாசிக்கும்  மற்றவை எல்லாரும்   படுத்திருந்து  கேப்பீனம். அது முடிய  அடுத்த  அத்தியாயத்தை இன்னோராள்  வாசிக்கும்.  எனக்கு  சத்தியமா  ஒரு மண்ணும்  விளங்காது  ஆனாலும்  நானும்   அந்தப் பாயில  தான் இருந்தாக  வேணும்.  

வீட்டுக்குக் கிட்ட  ரெயில்பாதை  எண்டாதாலும், அந்த நேரம் கொழும்பிலிருந்து  ஆக்களைக் கூட்டிக்கொண்டு  இன்ரசிற்றி  வரும்  பிறகு ஒரு மணித்தியாலத்தால  காங்கேசன்துறையில்  இருந்து  வெளிக்கிட்டுஆட்களைக் கொழும்புக்குக்  கூட்டிக்கொண்டு போற எனக்குப் பிடிக்காத   யாழ்தேவி போகும்.  அது போய்  கொஞ்ச நேரத்தில எண்ணைக் கோச்சி,  மழைகாலத்தில  வாற  சிவப்பட்டை  நிறத்தில  பேனையட்டை  மாதிரி  நீளமா  உருண்டு திரண்டு  வரும்.  நான்   இதை எல்லாம் விடுப்புப் பார்க்காத   ஒரு வில்லங்கமும் செய்யாமல்  வலு சொல்லுக்கேட்டு  இரு எண்ட  இருக்கிற பிள்ளை  எண்டதாலும்    அவைக்கு  என்னில  நல்ல நம்பிக்கை  எண்டதாலும் .  அதால  அந்தப் பாயில  தான் சிறையிருந்தாக வேணும்.  எனக்கு விளங்காத  மாதிரி  என்னோடவே இருக்கிற   என்ர  நாய்க்கும் பூனைக்கும்  கூட அவையள் என்ன வாசிக்கீனம்  எண்டு விளங்காது.  அதால  அவையின்ர  காலடியில   நாங்கள்  தனியா  ஒரு குழு அமைச்சு  ஆளையாள்  தடவிக்கொண்டிருப்பம். 

அதுவும் பொறுக்காமல் பூனையை நாயை அளைஞ்சு  உண்ணி  கடிக்கப்போகுது,  குக்கல் வரப்போகுது  எண்டு  சாட்டுச் சொல்லி  அந்த வாசிப்பாளர்கள்  பட்டியலில்  கட்டாய உறுப்பினராக  என்னையும் இணைச்சு  வைச்சு  வாசிக்கும்  படி தண்டனையும்  வழங்கப்பட்ட  போது  இரண்டாம்  வகுப்பு.

விளங்கிச்சோ  விளங்கவில்லையோ  (சத்தியமா  ஒண்டும் விளங்கேல்ல  அப்ப)  ஆனால்  வாசிச்சன்.  எங்கு  காற்புள்ளி  எங்கு அரைப்புள்ளி  எங்கு முற்றுப்புள்ளி  எதில் நிறுத்துவது  எதில்  இழுத்துச் செல்வது  எந்த இடத்தில்  உணர்ச்சி கொடுப்பது  எல்லாமும் அப்போது கற்றுக்கொண்டது  தான்.    வாசிச்ச  எதுவும் விளங்காட்டியும்  காரணமே இல்லாமல்  சில  நாவல்களின் பெயர்கள்  மனத்துக்கு  நெருக்கமாகின.  மாறக்க முடியாமலும் போயின.

அந்த வயதில்  தூங்கவைக்க கதை சொல்லும் போதெல்லாம்   நிலவுக்குள் பாட்டி அப்பம் சுட்டா   என்ற  முட்டாள் கருத்துக்களை மனதில் விதைக்கும் கதைகளை  அம்மா சொல்வதே இல்லை. பேய்  பூதம் எதுவும்  அம்மாவின் கதைகளில் வராது.  புராணம் இதிகாசத்தில் கூட  சில குறிப்பிட்ட பாத்திரங்களின் பகுதிகளையே  அதிகமாக  சொல்லுவா.  ஒரு கட்டத்தில் புராணம் இதிகாசம் எல்லாம் முடிந்து  சொல்ல  வேறு கதையில்லாமல் போய்  அம்மா வாசித்த நாவல்கள் என்னைத் தூங்கவைக்கும் கதைகளாகிப் போயின.   அதற்குள்ளும்  துளைச்சுத் துளைச்சு  மதுரை பற்றி எரிஞ்ச போது  கண்ணகி ஏன்  எரியேல்ல?  ராமர்  சுக்கிரீவனோட  என்ன பாசையில  கதைச்சவர்.  சாவித்திரி மாதிரி  ஏன்  எல்லாரும் யமனோட  சண்டை பிடிக்கயில்லை  என்ற மாதிரி  சமூக நாவல்களிலும்  கேள்வி கேட்கத் தொடங்க   ஒரு கட்டத்தில்  அம்மா பொறுமையிழந்து  அம்மாவுக்கு  இவ்வளவும் தான் தெரியும்   இந்தக் கதைப்புத்தகங்கள்  எல்லாம்  அந்த இரும்புப்பெட்டியில தான் இருக்கு  வளர்ந்து எடுத்து வாசிச்சு  விளங்கிக் கொண்டு அம்மாவுக்கும்  சொல்லித்தா   என்றா. 


                                                             

"அதிலுள்ள  புத்தகங்களா?  அது பெட்டி  நிறைய  இருக்கே    நான் எடுக்கலாமா   பேசமாட்டீங்களா?"

"இல்லை   அது  உன்னுடையது  தான்  அதிலுள்ள எல்லாம் உனக்குத் தான்.  நானே வாசிக்காத  புத்தகங்கள் எல்லாம் இருக்கு.  நீ வளர்ந்து வாசிக்க வேண்டும் அறியவேண்டும் என வயிற்றில் இருக்கும் போதே  வாங்கிச் சேர்த்தவைகளும் உண்டு வளர்ந்த பின் வாசி "

  என்பதற்கு மேல் அம்மா  ஏதும் சொல்லவில்லை. அம்மா அனுமதி தந்தும் அப்போது நான் ஏனோ அதைத் திறக்கவில்லை வளர்ந்து வாசிக்கக் காவலிருந்தேனாக  இருக்கக் கூடும்  

பிறகு  காலம் தனக்கான மாற்றங்களோடு  கடந்து போனபோது  வீடு மெல்ல மெல்ல  தனியாகத் தொடங்கினது.  ஷிராகினியின்  அம்மாவுக்கு  வேலையிடம்  மாறியபோது, எங்கள்  வீட்டிற்கு முன்னால்   அவர்கள் வாடைக்கிருந்த எங்கள்  ஆச்சியின் வீட்டிலிருந்து  காலி செய்து  கொண்டு போனார்கள். 

எனக்குத் தனிமையும்  நாய் பூனையும் மட்டுமே நெருக்கமாக  மிஞ்சின நாட்களில்  அந்த  இரும்புப்பெட்டிக்கு  மேலே ஏறி இருந்து சிறுவர் கதை  வாசிப்பதும்  வானொலி கேட்பதும்   பிடிச்சிருந்தது.  என் வீட்டில் மற்ற எல்லாப் பொருட்களையும் விட அதனோடு ஏனோ எனக்கு  இனம்புரியாத ஒரு நெருக்கமிருந்தது.

ஒரு முறை அம்மா திறக்கும் போது பார்த்தேன்   அது முழுவதும் புத்தகங்களே  நிறைந்திருந்தன .  பாவிக்காத  காற்றுப்படாத பழைய புத்தக வாடை முகத்தில்  போக்கென அடித்தது .பொன்னியின் செல்வன், தீக்குள் விரலை வைத்தால்,  குமாரபுரம், வாடைக்காற்று, நிலக்கிளி   என மேலிருந்த சிலவற்றின்  பெயர்களை வரிசையாக  மனம் படித்துக் கொண்டது.

அது ஒரு பெட்டி  அதைத்திறந்தால்  அம்மாவுக்கு பிடிக்காது. என்ற நிலை மாறி  அதைத் திறந்து  எந்தச் சேதமும் இல்லாமல்  எதையும் கலைக்காமல் மூடி வைக்க  அனுமதி  தந்திருந்தா   என்றளவில் மட்டும் மனதிலிருக்க ,   இரும்புப்பெட்டிக்கு மேல ஏறி இருந்தும் அதை திறந்து பார்க்கும் ஆவலை பின்னாட்களில்  மறந்து போனன்.  கையில் கிடைத்த வாராந்தர  மாதாந்தர  ஜனரஞ்சக  நாவல்களை  எல்லாம்  வாசிக்கத் தொடங்கியிருந்தேன்.

பின்  இன்னும் கொஞ்சம் வளர்ந்தபின்னான  காலத்தில் ஒரு தனிமையான  நாளில்  செய்வதற்கு  ஏதுமற்று அலைந்தபோது  கண்ணில்  பட்டது இரும்புப்பெட்டி.   திறந்து தான் பார்ப்போமே எனத்திறந்த போது முகத்திலடித்த  காற்றுப்படாத  அடைத்த வாசனையோடு  திறந்து கொண்ட பெட்டிக்குள்  குளிர்ந்து போயிருந்தன  புத்தகங்கள்.  கிண்டக் கிண்ட கிளறக் கிளற  அடுக்கடுக்காய் வந்து கொண்டிருந்த  அவைகளை  வாசிக்க முடியும் என்று கூட  அப்போது தோன்றவில்லை.   எதற்காக வெளியில் உள்ள புத்தகங்களோடு  இவைகள் இல்லை என்ற கேள்வி மட்டுமே பெரிதாக  இருந்தது .

அம்மாவிடம் கேட்டபோது  எங்கோ  பார்த்தா.

"அவைகளைப் பழுதாக்கி  விடாதே.  அதற்குள்  உள்ளவை எல்லாம்  உன் அப்பாவுடையவை.  உனக்கானவை  நீ  பிறந்து வளர்ந்து வாசிக்கச் சேமிக்கப்பட்டவை " 

என்ற போது அம்மாவின் குரல் மாறி கரகரப்பாக இருந்தது.

"இவ்வளவும் வாசிச்சீங்களா?"

"நான் வாசித்தவைகளில்  பிடித்தவைகளை  மேலே போட்டு வைத்திருக்கிறேன்.   மற்றப்படி அதிலுள்ளவை  அப்பாவுடையவை" 

"அடியில்  கடையில கணக்கெழுதிற  கொப்பி மாதிரி  இருக்கேம்மா  அதுவுமா?"

"கணக்கெழுதி இருப்பவை  அப்பாவினுடைய  கணக்குகள் "  

"அப்படிக் கொப்பிகளில் வேறு எதுவோ  பந்தி பந்தியா  எழுதியவை  நிறைய  இருக்கு அதுவுமா?"

"அது அப்பாவின் அம்மா அப்பாவுடையன.  உனக்காகத்தான்  சேர்த்து வைச்சிருந்தார். நீ வளர்ந்து உனக்கு இவைகளில  ஆர்வம் வந்தால்  பாவிக்கட்டும் என்று வைச்சிருந்தார்."

"என்ன அது?"

"ஆயுர்வேதம்  என்று சொல்லுற  இயற்கை வைத்தியம்"

"அப்பிடியெண்டா?" 

"பரியாரி எண்டு தாத்தா சொல்லுவாரே   அது "

"சிங்களத்திலும் எழுதி   இருக்கே அம்மா" 

"அது சிங்கள  பிரதேசத்தில் செய்யும் முறை  வெதமாத்தயா  என்று சொல்லுறது "

"அப்பாவிட  அப்பா  சிங்களப் பரியாரியா?"

"அப்பா  மட்டுமில்லை  அம்மாவும் சிங்கள வைத்தியமுறையும் தெரிஞ்ச தமிழ் பரியாரிகள்"

"ஏம்மா  அவை  என்னோட  இல்லை.?"

அம்மாவின் கண்கள் கலங்கின. 

"ஹ்ம்... சாமிக்கு  அவசரம்  அதுதான்  எல்லாருக்கும் பொதுவா  நீ இருக்கிறியே. எல்லாரும்  உனக்குள்ள  இருக்கீனம்"

"எனக்குப் பிடிக்கலை மா"

"என்ன பிடிக்கலை ?"

"எனக்கு  இங்க இருக்க பிடிக்கலை"

"ஏன்?"
 
"நிறைய சொல்ல வருது சொல்லத் தெரியல்ல  ஆனால்  பிடிக்கலை." 

அம்மா  யோசனையா பார்த்தா  பின்  அந்தப் பெட்டிக்குள்  இருந்து ஒரு புத்தகத்தை  தூக்கித் தந்தா. 

"வாசி  பிடிக்கும் . வாசிக்க வாசிக்க  உலகம் உனக்குக் கிட்ட வாற மாதிரி இருக்கும் .  உலகம் விளங்கும்."   என்றா. 

வாசிக்க  வாசிக்க  உலகம் பிடித்ததோ  இல்லையோ    மனிதர்களை  விளங்க வைத்தது  உலகம் புரியத் தொடங்கியது.

அது அப்பாவின் பெட்டி.  அதில் என் மூதாதைகளின் கையெழுத்துகள்  அவர்கள் பாவித்த,  அப்பா ரசித்த  விடயங்கள் அடங்கிய புத்தகங்கள் நிறைந்திருக்கின்றன என்பதே  எனக்கு மிகவும் பிடித்திருந்தது.   அநேகமான நேரங்கள்  அதைக் கிளறுவதில்  கழியத் தொடங்கின. 

அப்பா  அது இது என்று பேதமில்லாமல்  வாத்சாயனரில்  இருந்து  வாலிவதம் வரை  உலகப்பெரும் தலைவர்களில்  இருந்து  உதவாக்கறை  வரை  எல்லாமும் ஏராளமாய்  சேர்த்து வைத்திருந்தார் .    நேரமிருக்கும் நேரங்களில்  எல்லாம்  அந்தப் பெட்டிக்குள் அம்மா பத்திரமா வைத்திருந்த  அப்பாவின்  ஒரு போர்வை விரித்து  அதன் மீது ஒரு தலையணையை  வைத்து  பெட்டிக்குள் இறங்கியிருந்து  அதற்குள் இருப்பவற்றை  வாசிக்கும் போது  நான் இருக்கும் சூழல்  மறந்து போகும் .   அப்பாவின் அணைப்புக்குள்  எனக்கு மட்டுமே உரிமையான  ஒரு இடத்துக்குள்  இருப்பது போன்ற உணர்வு  என்னை  ஆட்கொள்ளத் தொடங்கியது.  அது மனதுக்கு  நிறைவாகவும் பிடித்தமாகவும் இருந்தது.   அதனோடு சேர்த்து  புத்தகங்களை  உறவாக்கிக்கொண்டு  வாசிப்போடு பேசிக்கொண்டிருத்தல் அதிகமாகப் பிடிக்கத் தொடங்கியது.

இருந்தும்  வயதுக்கொவ்வாதவை,  வாசித்தால் விளங்காதவை  என  பல தொகையாகக் காத்திருக்க,  நான்  வயது வரவும்  வாசிக்கவும்  காத்திருக்க ,  வாசித்த பின்பும்  அவைகளோடு  இன்னும் அதிகமாக  என் பங்குக்கு வாங்கி  சொத்துப் போல சேர்த்துவைக்கக் காத்திருக்க, போர்  இந்த உணர்வுகள்  எதுவும்  புரியாமல்  மூர்க்கமாகப் புகுந்து  வீட்டை விட்டு அடித்துத்  துரத்த , நாங்கள்  வீட்டை விட்டு  ஓடிப்போனோம்  அகதிகளாக .  

திரும்பி வந்த போது  பாதி வீடில்லை.  படுக்கையில்லை  பொருட்கள்  இல்லை.  திரும்பவும்  ஒருமுறை ஓடிப்போய் விட்டுத் திரும்பி  வந்த போது  வீடேயில்லை.   இருந்தும் இன்றுவரை  என்னை அதிகம் பாதித்த  விடயம் அந்த இரும்புப்பெட்டியும்  அதிலிருந்த அப்பாவினதும் அம்மாவினதும்மான  மனத்தேடல்களை  எனக்குச் சொல்லக் காத்திருந்த  புத்தகங்களும் இல்லை என்பது தான்

அப்பாவழி  மூதாதைகளின்  நினைவுச் சின்னங்களும்  இல்லை  அம்மாவழி  மூதாதைகளுடன் வாழ்ந்த வீட்டில்  வாசற்படிக் கல்லும்  நினைவுக்குக் கூட   இல்லை.  நினைவுகளை நெஞ்சு நிறையச்  சுமந்து கொண்டு வந்த  இடத்தில்,  வந்த காலத்தில் வாசிக்கவும்  பேசவும்  சொந்த மொழியும் இல்லை என்னோடு எதைப்பற்றிப் பேசவும் யாரும் இருக்கவில்லை.. 

என் மண்ணிலிருந்த இறுதிக் காலங்கள் பேனா மொழியை ஓரளவு  எனக்கு வசப்படுத்திக் கொண்டு  எழுத்துத் துறையில்  மெதுவாக  படியேறிக் கொண்டிருந்த  தருணமது.  அதையும் விடுத்துப் புலம்பெயர்ந்த போது எல்லா  இல்லைகளுக்குள்ளும் அமுக்கப்பட்டு   என் எழுத்தும் இல்லையாகி  நானும் இல்லை என்றாகிப்  போனபின் 

"உயிர்த்தெழு"

  என  முதற் புத்தகத்தை  அனுப்பியவர்   என் ஆசான்.  மீண்டும்  வாசி வாசி என  ஊக்கிய  என் அன்னை.   கையில்  புத்தகம் கொடுத்து  வாசி  என்றும்  பேனா  கொடுத்து  எழுது  என்றும் பிஞ்சுக் குரலில் ஆணையிட்ட  என் குஞ்சுகள்   தூரமாகிப் போயும்  உரிமை கொண்டு தேடி நான் அங்கிங்கென  அவர்களிடம் தவறவிட்டவைகளை  அப்படியே  பாதுகாத்து வைத்திருந்து அனுப்பிய என்  நட்புகள்

அவர்களுக்காகவே  என்னை உயிர்ப்பித்து  மெல்ல மெல்ல  என்னை மீண்டும்  வடிவமைத்து  உடைந்து போன நினைவுகளின் பொக்கிஷம் ஒன்றின் உதிர்ந்து போன ஞாபகச் சுவர்களின்   பொத்தல்களை  புதிய  சேகரிப்புக்களால் தேடித்தேடி பழையதை   இட்டு நிரப்ப முயன்று கொண்டிருக்கும்  இப்போது  சொல்கிறேன் 

அனுபவமும்  புத்தகங்களும் மட்டுமே வாழ்வில் நிரந்தரமான  வழிகாட்டிகள். குழந்தைகளை வாசிக்கவையுங்கள்  அது  சிந்தனையைத் தூண்டும்  ஆளுமை வளர்க்கும்.      




Thursday, April 5, 2018

குக் குக் கூ...........விக் கொண்டே கரையும் துளிகளில்..........

சுவரில் இருந்து கூடு திறந்து சின்னதாய் ஒருமுறை செட்டையடித்து, செல்லமாய் கூவி நேரத்தை ஒருமுறை நினைவுறுத்தி விட்டு உள்ளே சென்று அப்பாவியாய் அமர்ந்து கொள்ளும் சின்னக் குருவியின் மணிக் கூடுகள் உருவான இடத்தைப் பற்றிக் கொஞ்சம் பேசுவோமா?
.
உண்மையில் இந்த மணிக்கூட்டில் இருந்து வரும் பறவை கூவும் ஒலி அதற்காக அமைக்கப் பட்டதல்ல. orgel என்ற இசை வாத்தியத்தில் வழிந்த இசையில் தற்செயலாக இந்த குக் குக் கூ... சத்தமும் பறவையின் சிறகடிப்பு போன்ற இசையும் பிடித்துப் போக, 1629 ஆம் ஆண்டு முதல் முதல் இந்தக் குக் கூ.. ஒலி (Kuckuck ) பிரத்தியேகமாக பதிவு செய்து வைக்கப் பட்டது.
.
பின் நாட்களில் ஜெர்மனியின் Schwarzwald Kreis மாவட்டத்தின் Triberg மற்றும் அதனைச் சுற்றி உள்ள மலைகிராமங்களில் உள்ளோர்களால் உருவாக்கப் பட்ட பறவையின் கூண்டு போன்ற மணிக்கூட்டுக்கு மணி ஒலிச் சத்தமாக இந்தக் கூவும் குரல் இணைக்கப் பட்டது. அத்துடன் அந்த மணிக்கூட்டுக்கு குக் கூ .. மணிக்கூடு (Kuckucks uhr) பெயரும் சூட்டப் பட்டது.
.
இந்தக் குக்கூ ... மணிக்கூடு 1730 இல் Franz Anton Ketterer என்பவரால் உருவாக்கப் பட்டது என்று ஒரு ஆராட்சியாளரும், இல்லை அவரது தந்தையால் அதற்கு முதலே இது உருவகம் பெற்றிருந்தது, அதை மகன் வெளிக் கொணர்ந்தார் என்று இன்னொரு ஆராட்சியாளரும், அதுவுமில்லை 1742 இல் Michael Dilger உம் Matthäus Hummel என்பவரும் இணைந்து உருவாக்கியதாக மற்றொரு ஆராட்சியாளரும் சொன்ன போதும்,
.
Triberg என்ற மலைக் கிராமத்துக்கு அருகே உள்ள பண்ணையில் இருந்து சகோதரர்களான Aandreas அவரிலும்  இரு வயது இளைய தம்பி Christian Herr ஆகியோர் இணைந்து செய்த குக் கூ..,,. மணிக்கூடு முதல் முதலில் வெளி உலகப் பாவனைக்கு வந்து இன்று உலக வீடுகள் பலவற்றின் வரவேற்பரைகளில் கூவிக்கொண்டிருக்கும் குக் கூ... குருவிகளுக்கு மூதாதையாகிப் போனது.
.
இந்த Triberg வெள்ளியை உருக்கி வார்த்தது போல் உச்சி மலையில் இருந்து அவசரமில்லாமல் ஒடுங்கி ஒழுகும் அழகிய நீர்வீழ்ச்சி கொண்ட ஒரு சுற்றுலாத் தலமாதலால் ஆரம்ப காலம் தொட்டு இந்த மணிக்கூட்டு உருவாக்கம் சுற்றுலாப் பயணிகளுடனான வியாபாரத்தைக் குறிவைத்த வீட்டுக் கைத்தொழிலாக இந்தக் கிராமத்தில் வளர்ந்தது.
.
அவரவர் கற்பனைக் கேற்ப அதன் வடிவங்களில் சிறிய மாறுதல்களை ஏற்படுத்தும் போதும் அதன் அடிப்படை வடிவமும் கூவும் குரலும் என்றும் மாற்றம் பெறாமல் இருப்பது அதன் தனிச் சிறப்பு.


                                           .
இன்று இந்த இடத்துக்கு சம்பந்தமில்லாத நிறுவனங்கள் கூட அதைப் போல பிளாஸ்ரிக், உலோகம், கண்ணாடி என்ற பலவித மூலப் பொருட்களில் அதை உருவாக்கி விற்பனைக்கு விட்டுள்ள போதும் இதன் தாயகத்தில் அடிப்படையில் இருந்தது போலவே மரமும் மற்றும் இயற்கை மூலப்பொருட்களும் கொண்டே இதன் கூடும் அலங்காரமும் செய்யப்படுகிறது. இருந்தும்  எப்போதுமே எல்லாவிடயங்களிலும் அசலுக்கு இருக்கும்  தனிச் சிறப்பும் மதிப்பும் நகலுக்குக் கிடைப்பதில்லை. நகலால் அசலாக எப்போதும் பரிணமிக்கவும் முடிவதில்லை.  இந்த குக்கூ.. வுக்கும் அதுவே பொருந்தும்.
.
மிகச் சாதாரண விலைகளில் சின்னதாய்  சுவரில் கொழுவுவதில்  இருந்து ஆளுயரத்துக்கு  நிறுத்தி வைக்கக் கூடிய  கூடுவரை   மூன்று நான்கு ஆயிரம் யூரோ தாண்டிய நிலையிலும் விற்பனையாகும் இந்தக் குருவிக் கூடுகள் ஆண்டு முழுவதுமான சுற்றுலாப் பயணிகளுக்காக வீதி முழுவதும் கடைபரப்பப் பட்டிருக்கும்.

மலையில் அமைந்திருக்கும் கிராமம் என்பதால்  குளிர் சற்றல்ல  கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்  இக்கிராமத்துக்கு பொதுவாக  உறைபனிக் காலத்தில் சுற்றுலாப்பயணிகள் வருவதில்லை என்பதால் விற்பனை நிலையத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்தாலும் நத்தார் காலத்தில் வியாபாரம் மீண்டும் களைகட்டும். 
.
நத்தார் காலத்தில் இந்த நீர் வீழ்ச்சியை நெருப்பில் உருக்கி, நிறங்களில் குழைத்து வாணங்களில் வேடிக்கை காட்டும் மஜிக் நிகழ்ச்சி பிரபலமானதால் எலும்பு உருக்கும் குளிரிலும் அந்த வண்ண நீரின் வாணவேடிக்கை பார்க்க இலட்சங்களை தாண்டி எண்ணிக்கையற்றுக் குவியும் மக்கள் வாங்கிச் செல்லும் நினைவுப் பொருள் இதுவாகவே இருக்கிறது
..
எங்கே எப்படி யாரால் உருவாக்கப் பட்ட போதும், கூடு திறந்து வெளிவந்து செட்டையடித்து சிலுப்பி கூவும் ஒவ்வொரு மணித் துளியிலும் கடக்கும் எங்கள் ஆயுளை இந்தச் சின்னக் குருவிகள் நினைவுறுத்துவதாகவே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.


Friday, March 30, 2018

அதற்கு இதுவல்ல வயது

இந்தப் பதிவு,  நீண்ட காலம் எழுதக் காத்திருந்து நேரமின்மையால் தொடங்கித் தடங்கி, இப்போதும்  நிச்சயமாகப் பலரிடமிருந்தும்  வெறுப்பையும் , தர்க்கத்தையும்  ஏற்படுத்தும் என்று தெரிந்துமே  தான்   பதிவிடுகிறேன்.

பரீட்சைப்  பெறுபேறுகளில் மகிழ்ந்திருக்கும் மாணவர்களுக்கும், பெற்றோர், மற்றும் உற்றோருக்கும்   ஆசிரியர்களுக்கும்  வாழ்த்துகள்.

திருப்தியற்ற பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கும் அவர் சார் மனிதர்களுக்கும்  இன்னுமொரு படி மேலான வாழ்த்துகள்.  

வாழ்க்கையில் அனுபவம் போல் சிறந்த தேர்வு இல்லை.  ஒரு வீழ்ச்சி தரும்  அனுபவங்கள்,  சேணம் கட்டிய குதிரைபோல ஒரே குறியை நோக்கி ஓடாமல், உயர்ச்சி பற்றிய பலவிதமான பாதைகள் பற்றிச்  சிந்திக்க வைக்கும்.

பொதுவாக பாடசாலைத் தேர்வுகளில் வென்றவர்கள்  எல்லோருமே தாம் குறிவைத்த இலக்கை எட்டி  வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்ததாகவோ, தோற்றவர்கள் எல்லோரும்  வாழ்க்கையில் தோற்று விட்டதாகவோ சரித்திரமில்லை.

பலவருடங்களாக   கற்ற கல்வியையோ,  அறிவையோ  சிலமணி நேர  வினாத்தாள்களால்  அளவிட  முடிவதில்லை.  ஒரே பாடத்திலேயே சிலருக்கு  ஒரு பகுதி அதிக விளக்கம் கொண்டதாக அல்லது பிடித்ததாக  இருக்கும்.  மற்றும் சிலருக்கு இன்னொரு பகுதி.  அதிக புள்ளிகளைப் பெற்றுத் தரக்கூடிய கேள்விகள் துரதிஷ்ர வசமாக உங்களுக்கு அதிகம் விருப்பற்ற  அல்லது விளங்கச் சிரமமான பகுதியில் இருந்து வரும் போது புள்ளியிழப்பு  தவிர்க்க முடியாதாகிறது.

தவிரவும், உங்கள் அந்த நேர மனநிலை, பரீட்சைப் பதட்டங்கள் என்பவையும் உங்களை சரிவர இயங்கவைக்காத்திருந்திருக்கலாம்.   கூடவே எல்லோர் குடும்ப அமைப்பும், வாழ்நிலைச் சூழலும்  ஒரேமாதிரி அமைந்திருப்பதில்லை. 

அதிக பிரத்தியேகக் கல்வி வசதிகள்,  பொருளாதார வேறுபாடுகள் தரும் போஷாக்குத் தரங்கள் என்பனவும்,  குடும்பச் சூழ்நிலைகளும்  உங்கள் பரீட்சையில் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்பதை உணருங்கள். 

இருந்த இடத்தில் போஷாக்கு நிறை உணவு, மற்றும் கவனிப்புகளுடன் கல்வி தவிர  வீட்டில் எந்த நிலைவரமும் காதுக்கு எட்டாமல்  வளர்க்கப்படும்  பிள்ளைக்கும்  தனிப்பட்ட பல்வேறு சிரமமான சூழ்நிலைகளுக்கும் முகம் கொடுத்து வளரும் பிள்ளைக்கும் மனமொருமித்துக் கிரகிக்கும் தன்மையில் வேறுபாடு உண்டென்பதை உணருங்கள்.  இன்னொருவருடன் உங்கள் பெறுபேறுகளை ஒப்பிட்டு தோல்வி மனப்பான்மைக்குப் போகுமுன்  உங்கள் வாழ்வியல் தராதரங்களையும்  ஒப்பிட்டுப் பாருங்கள்  உங்கள் சூழ்நிலையில்  நீங்கள் பெற்றது பெரும்  பேறென உணர்வீர்கள்.

வசதி என்று நான் இங்கு உரைப்பது வெறும் பொருளாதார வசதி மட்டுமல்ல.  மாணவரின் சூழல்,  குடும்ப அமைப்பு, மற்றும் புறத்தாங்களை உள்வாங்கும் அவரது  மனப்பாங்கு என்பவையும் இதற்குள் அடங்கும். 

தவிரவும் பாடசாலைக் கல்வி என்பது  உங்களுக்கு  வாழ்வின்  முதற்படியை  அறிமுகப்படுத்தும் நிலையே தவிர, உங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் இடமல்ல.  பாடசாலைத் தேர்வுச் சித்தியோடு  அப்படியே பல்கலைக்கழகம் புகுந்து விடலாம் என்பதுமில்லை.  அப்படிப்  புகுந்தாற்றான்  உயர்பதவி நிலை அடையலாம் என்ற எந்த வரையறைகளும் இல்லை.

ஒரு முறை தோற்றால் அதன் காரணத்தை தேடித் திருத்துங்கள். இன்னொரு முறை தோற்கமாட்டேன் என்ற வைராக்கியம் கொள்ளுங்கள். சாதித்து விடுவீர்கள். முடியவில்லையா  இருக்கவே இருக்கிறது  உங்களைச் சுற்றி இன்னும் பல பாதைகள்.  அவைகளில் உங்களுக்குப் பொருந்திப் போவதும் பிடித்ததும்  எதுவெனத் தேர்வு செய்யுங்கள் அவைகள் வழி செல்லுங்கள்,  நீங்கள் எதிர்பாராத உச்சத்தைக் கூட அடைவீர்கள்.

எனக்குத் தெரிந்து போதிய பெறுபெறின்மையால் பந்தாம் வகுப்புக்கு மேல் பாடசாலைக் கல்வியை தொடர முடியாது போன ஒருவர்,  வேறு பாதையின் படிநிலைகளால் ஏறி, பிரித்தானியக் கணக்கியல் சான்றித்ளோடு     ஒரு பெரிய நிறுவனத்தின் கணக்காளராக இருந்தபோது  அவரிடம் நான் உதவியாளராக இருந்திருக்கிறேன்.

கொழும்பில் பெற்றா  வீதிகளில்  தன் எழுவயதிலேயே  சிறு தட்டில்  நூலும்  ஊசிகளும் விற்றுத் திரிந்த சிறுவன், பின்னாட்களில் ஐந்து நிறுவனங்களின் முதலாளியாக  3000  தொழிலாளர்களுக்கு  வேலை கொடுத்ததைப் பார்த்திருக்கிறேன். அவர்  வாயாலேயே  கூட இருந்து  வந்தவழிப் பாதைகள்  அறிந்திருக்கிறேன்.  அவரிடம் இருந்ததெல்லாம்  தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் மட்டுமே.

இங்கு நான் வாழும் நாட்டில்  பரீட்சைக் காலத்துக்கு முதலே,  பாடசாலைக்கு வெளியேயான  அவர்களின் எதிர்கால வெளிகள் திறந்து  காட்டப் படுகிறது. அவைபற்றிய கருத்தரங்குகள் மற்றும் ஆலோசனை மையங்களுக்குப்   பாடசாலையே  அழைத்துச் செல்கிறது.  மாணவர்கள் தங்கள் கல்வித்தரங்கள், மற்றும் தொடர  விருப்பும் துறைகள்   பற்றிய சுயகணிப்பீட்டுக்கும்,  பாடசாலைக்கு பின்  ஒரு சூனியமான வெளியை  உணராது, அடுத்த படி என்ன என்பதை முடிவு செய்யவும்  வழிவகுத்திருக்கிறது.

இலவசமாக கல்வியையும்  அதற்கான வசதியையும் தரும்  எங்கள் நாட்டிலும்  உங்களுக்கான அடுத்த படிக்கான வசதிகள்  வாய்ப்புக்கள்  காத்துக் கொண்டேயிருக்கும்.

உங்கள் வீட்டுக்கு அடுத்து  பாடசாலை  நீங்கள் பார்த்த சிறு உலகம். அதனோடு முடிவதில்லை  உங்கள் வாழ்க்கை.  வெளியே  வாருங்கள். உங்களுக்குப் பிடித்த, நீங்கள் சாதிக்கக் கூடிய  சந்தோஷப்படக் கூடிய  ஒரு உலகம்  உண்டு. அதைக் கண்டடையுங்கள்.  அது பற்றிய அறிவுள்ள, உங்களைப் பாதுகாப்புடன் வழிநடத்தக் கூடியவர்களை நெருங்குங்கள்.

ஒவ்வொரு பிறப்புக்கும்  ஏதோ ஒரு அர்த்தம் உண்டு.   இறப்பு அதுவாக  உங்களை நெருங்கும் வரை வாழ்தலை அர்த்தப் படுத்துங்கள் . நீங்கள் தோல்வி என உணர்வது உறுத்துகிறதா. தோற்றவராய்  மற்றவர்கள் அனுதாபப்படும் படியோ,  எள்ளி நகையாடும் படியோ  இறந்து போகாதீர்கள். வென்று விட்டு  சாவகாசமாக  வெற்றியாளராக  இறக்கலாம் என  எண்ணுங்கள்.

இதற்கு மேல் எம் சமூக அமைப்பிலுள்ள முக்கிய குறைபாடு  ஒப்பீடு.  எதுவும்  எதனுடனும்  ஒப்பீட்டளவில்  ஒன்றாகாது. ஒவ்வொன்றிலும்  ஒவ்வொன்று மேலானது.  அதை  உணர்ந்தால்  விழுந்த குழந்தையை  தட்டிக் கொடுக்கலாம்.  தட்டிக்கொடுத்து எழுப்பப்படும்  குழந்தை  தைரியம்  கொள்ளும்.  பதட்டம் நீங்கும்  விழாமல்  நடக்கும்  வகை அறியும் .

பாடசாலை வயதில் நட்பை இழந்த வலியே  இறக்கும் வரை மறையாது.  உறவை  இழந்த வலி உயிருள்ளவரை  கொல்லும். உங்களை நேசித்தவர்களுக்கு,  உங்களைப்பற்றிய  கனவுகள்  வளர்த்தவர்களுக்கு,  தங்களை  ஒடுக்கி  உங்களை  உயர்த்த  நினைத்த  உங்கள் அன்பானவர்களுக்கு  அப்படியொரு  தண்டனையை  கொடுக்காதீர்கள்.  இறப்புக்கு இதுவல்ல வயது.

.
(என் பக்கத்தில் இளையவர்களை  நான் இணைப்பதில்லை.  முடிந்தால், விரும்பினால்  அவர்களிடம்  எடுத்துச் செல்லுங்கள்  நட்புகளே.  என்  எழுத்துக்களாக  இல்லையென்றாலும்  உங்கள்  வார்த்தைகளாக )

Thursday, February 22, 2018

மெல்ல மெல்ல இனி எல்லாம் கதைப்பன்

'பாட்டியைப் பார்க்கப் போனேன்'



கடந்து கொண்டிருக்கும் வாழ்க்கை பற்றி நினைத்துப் பார்க்கும் போதுவாழ்க்கையில் நிரந்தரமான மனிதர்கள் என்று எவரும் தங்குவதில்லை. சில சம்பவங்களில்  தங்களை  எங்கள் நினைவுகளுடன்  வாழ வைத்துக் கொண்டு அவரவர்  தத்தமக்கான  பாதைகளில் பயணித்துக் கொண்டிருப்பார்கள் , அதையும் விடவும்   நமக்கு நெருங்கியோர்  என்று எண்ணுபவர்களை விட நாங்கள்  எண்ணியே பாராத வேறு மனங்கள்  சிலவேளை எங்களுக்கு  நிரந்தரமான இடத்தையும் சில சந்தர்ப்பங்களில்  தந்திருக்கும்

அது  பாட்டி படுக்கையோடு கிடந்த காலம்,  நான் ஒரு நீண்ட காலத் தூக்கத்தை முடித்துக் கொண்டு  அப்போது தான் படுக்கையிலிருந்து  எழுந்து  என்னைச் சுற்றிய உலகத்தை  உள்வாங்க  கைகால் அசைக்க முயன்று கொண்டிருந்த காலம்.

பாட்டியின் நிலை பற்றி தகவல் வந்தது. உடன் பார்க்கவேண்டும் என்ற  தூண்டல் எழுந்தது.  சில நிமிடங்கள் பாட்டி  பல சந்தர்ப்பங்களாக நினைவுகளில் வந்து போனா. கண்களில் நீர் துளிர்த்தது நெஞ்சடைத்தது.  சற்றைக்கெல்லாம்  நான் இரண்டையும் விழுங்கிக் கொண்டு வழமை போல  மறுபடியும் செய்து வைத்த சிலைபோலானேன். 

வழமை போல வார்த்தைகளால் உணர்வுகளைத் தட்டி , கைகளால் தோளைப் பற்றி   உலுக்கி என்னை விழிப்பு நிலைக்குக் கொண்டு வர முயன்றாள்  டானா.  எனக்கு அவளிடம் விடுபட்டு தனிமையில் எனக்குள் ஒடுங்குதலே  எப்போதும் போல அப்போதும் தேவையாக இருந்தது.

அனே  எப்போதும்  போல  தன்னோடு அணைத்துக் கொண்டாள். என்   இந்த விழிப்பு நிலைக்கான மூல காரணர்கள்  சிலரில் அவள் முக்கியமானவள்  என்பதால்  அவளது அணைப்பு, முகத்தை கைகளில் ஏந்தி வைத்து  உதடு துடிக்க கண்கலங்க எனது விழிகளை  ஊடுருவும் அவளது பார்வையின் கனிவு என்னை வாய்திறக்க வைத்து விடும் 
"பா..ட்...டி ...யை  பா..ர்..க்..க... வே..ணு...ம்  போ...லி...ரு....க்..கு"
என்றேன்.

நெஞ்சோடு  அணைத்துக் கொண்டாள்.
"போகலாம்"  என்றாள்.
"அதில்லை  பார்க்க வேணும்  மாதிரி  இருக்கு அவ்வளவு தான் "
"போலாம்" 
இல்லை எனத் தலையசைத்தேன். 
"ஆசை வரும் ஆனால்    எங்கும் போவதில்லை.  பழகி விட்டது "என்றேன்
"இப்ப தவறினால்  பிறகு நீ விரும்பினாலும் பார்க்க முடியாது "

"என்னை எப்போதும் கையோடவே கொண்டு திரிந்த மாமாவையும் பார்க்க விரும்பினேன் , பின் அவர் இறந்த போது நான் அருகிலும் இல்லைம தூரத்தில் இருந்த   நான் அழவும் இல்லை.  அவரிட படத்துக்கு விளக்கு வைத்து ஒரு நாள் வணங்கவும் இல்லை. அதற்கு  அனுமதிக்கப் படவும் இல்லை.  ஒரு ஆத்ம சாந்திப் பிரார்த்தனை  அவமதிக்கப்ப்படுமானால்  அதைச் செய்வதை  விட செய்யாமல் இருத்தல்  அந்த ஆத்மாவுக்கு  அதிக ஆறுதல்  தரும்  அப்படித்தான் நான் அப்போது எண்ணினேன் அதனால்   இயந்திரமாகத்தானே  இருந்தேன்.  அப்படித்தான்  பாட்டிக்கும்"  மனதுக்குள் வந்த வார்த்தைகள்  வெளியில் வரவில்லை.  அப்போது நான் அதிகம் கதைக்க மாட்டேன்.

"நீ போகிறாய்.  உன் பாட்டியைப் பார்க்கிறாய்  அது உன் உரிமை " என மனதுக்குள் திடமூட்டிய அனே  ஜெர்மானியப் பெண். 

"விட்டால்  நாளை நாளை என ஆறப்போட்டு  இறுதியில் அந்தக் கவலையையும் விழுங்கி  அழுத்துப் பட்டுக் கொண்டு இன்னும் அதிகமாய்  இறுகிப் போய்  இருப்பாய்  இப்பவே  வா  ரிக்கற் போட "என்றாள். 

"வீடு.....  எனக்குப் பொறுப்பிருக்கு."
"ஒரு கிழமை இரண்டு கிழமை நீ உனக்காக  வாழ்ந்தால்  வீடொன்றும்  முழுகிப் போய் விடாது."  என்றாள்

"இல்லை வந்து"

"இப்படியே உன்னை விட்டால்  இன்னும் ஒரு வருடமோ  இரண்டு வருடமோ தான்  நீ.  அதுக்குப் பிறகும்  அந்த வீடு இருக்கத் தான்  போகிறது  அதை நீ  நீயாக இருந்து தாங்கிப் பிடிக்க வேண்டும் என்றால்  வெளிக்கிடு "
 சற்று அதட்டலாகச் சொல்லி  ஆறப்போடாமல்  அன்றே இழுத்துக் கொண்டு போய் விமானச்சீட்டு வாங்கிக்கொண்டு பயணத்தை உறுதிப்படுத்திய   டானா  இத்தாலியப் பெண்.

"வீடு தானே  நீ போய்  வரும் வரைக்கும்  காலையும் மாலையும் நான் வந்து பார்த்துக் கொள்கிறேன்.  தேவையானவை எல்லாம்  செய்து வைத்து விடுகிறேன் . இடையில் ஏதாவது தேவையிருந்தால் எந்த நேரமாவது  தொலைபேசியில் அழைக்கச் சொல் " என்று தானாகவே முன் வந்து  தன் தோளில் என் கடமைகளை இருவாரம்  தாங்கிக் கொண்டு  தன் கனத்த மார்புக்குள் என்னை இறுக்கி அணைத்துக் கொண்டு "நான் இருக்கிறேன்  உன் சகோதரி போல"  என்று குரல் விம்மச் சொன்னவள்  ஆபிரிக்கப் பெண்.

பின் தான் எனக்குள் அந்த மாபெரும் கேள்வி பிறந்தது.  தனியாகப் போய் வர என்னால்  முடியுமா?

போர்க்காலப் பூமி எங்கும்  தனியாகவே  பயணிக்கப் பழக்கப்படுத்தப் பட்டவள்.  சிறுவயதில் இருந்து துணிவும்  தன்னம்பிக்கையும் தவிர  வேறு எதுவும் இறுதி வரை  உன்னுடன்  கூடவராது எனச் சொல்லி வளர்க்கப் பட்டவள். கொழும்புக்கும் யாழுக்குமான போக்குவரத்து  நெருக்கடிக் காலங்களில் குண்டு மழைக்குள் சிரித்துக் கொண்டே பயணம் செய்தவளான   எனக்குள் எழுந்த  அந்தக் கேள்வி எனக்கே அதிர்ச்சியாக இருந்தது.  ஆனாலும் என் நிலை  அப்போது அது தான்    இந்தக் கேள்வியோடு தான் நான் என் வைத்தியர் முன்  அமர்ந்திருந்தேன்  பக்கத்தில் என்னோடு கூட வந்த இவோன்  இருந்தாள் .

என் கைகளைப் பற்றிக் கொண்டு  எழுந்த என் வைத்தியர் 
"உன்னால் முடியும். இனி உன் எந்தப் பயணத்திலும்  உன்னைக் கைதியாக வைத்திருப்போரை துணைவர  அனுமதிக்காதே  அது உனக்கானபாதுகாப்பல்ல.  அவர்களின்  மறைக்கப்படும் இரகசியங்களுக்கான  பாதுகாப்பு  என்பதை  உணர். தனியாக  உன் நாட்டுக்குப் போ.  உன் மனிதர்களைப் பார். நீ  தைரியமாகத் திரிந்த இடங்கள் எல்லாம் உன்னைச் சிந்திக்க வைக்கும்  நீ யாரென உணர்வாய்  திரும்பி வரும் போது  உன்னில் சிறு பகுதியேனும் கண்டடைந்திருப்பாய் "   என்று தோளணைத்து  கைகளை   இறுகப் பற்றித் தந்த நம்பிக்கை,

ஒருவர் நிமிர்ந்தெழுவதற்கு கொழுகொம்பு கூட அவசியமில்லை. அவரின் திறமை தன்னம்பிக்கை மூலம் அது இயல்பாக நிகழ்ந்தேறி விடும்.  ஆனால் அடிபட்டு வீழ்ந்து விட்டவர்  எழுவதற்கு  நிச்சயமாக நம்பகரமான புரிதலோடு  உறுதியான அன்புள்ள கைகள்  தேவைப்படுகின்றன.  ஏனெனில்   தாக்கப்பட்ட இடம் அவரது  ஆத்மாவாக  இருக்கும்.  அது அனைத்து  மன உறுதிகளையும்  தகர்த்து விடும் . அப்படித்தான் தகர்க்கப்பட்டுக் கிடந்தேன். வீழ்ந்து கிடந்த  என்னை மீட்டெடுக்க  கரிசனையோடு நீண்ட கைகளில் தான் நான் அன்று கடவுளைக் கண்டேன்.  உறவு என்பது உதிரத்தின் வழியல்ல  உணர்தலின்  வழி அமைவதென உணர்ந்தேன்.  

என் தோட்டத்துச் சிறு மலர்கள் பற்றிய என் கனவுகள்,  அதற்காக வாழ்ந்தேயாக வேண்டும் என்ற பிடிவாதம் , உறுதியின் மொத்தவடிவமான பாட்டி சாயமுன்  என்னை அன்று  பயணிக்க வைத்தது.

நீண்ட காலத்தின் பின் என்னை நானாக உணரும் சூழல்  நிறையப் பதட்டம் இருந்தது.   என் இயல்புக்கு ஒவ்வாத அந்நிலையால்  என் மீது என் பொறுமை மீது எனக்கு அதிகம் வெறுப்பு  ஏற்பட்டது.

கட்டுநாயக்காவில்  இறங்கியபோது  சரளமாக எனக்குப் பேச முடிந்த என் நாட்டின்  மூன்று மொழிகளும்  என் நாவில் எழவில்லை டொச்  உம் இல்லை. வாசிப்பு  எழுத்து  வானொலி  தொலைக்காட்சி  மனிதர்கள் என எல்லாவற்றிலிருந்தும்  ஒதுக்கப்பட்டிருந்த என்னால் அப்போது  அந்தந்த நேர அவசியத்துக்கு அடிப்படைத் தேவைகளுக்கு  இயங்க முடியுமே தவிர வேறெதுவும் கதைக்க முடியாத   அழித்து விட்ட வெற்றுக் கரும்பலகை போல  மொழி மறந்த நிலை. 

வைத்தியரின் ஆலோசனைப்படி விமான நிலையத்துக்கு வரவேண்டாம் எனநான்  கட்டாயமாக மறுத்திருந்ததால், என்னவர்கள்  நாட்டை விட்டு அனுப்பிய போதிருந்த   பிள்ளை எந்த வெள்ளத்துக்குள்ளும் சுழியோடிக் கரைசேரும்  என்ற நம்பிக்கை  அவர்களுக்கிருந்ததால், அந்தப் பிள்ளை தொலைந்து போய்  விட்டது என்பது அறியாத  அவர்களும் யாரும் வரவில்லை. 

நீரில் வீழ்ந்தால் கையை காலை அடித்து  கரைஏறத்தான் முயல்வோம்  அப்படித்தான் அன்று  நான் கட்டுநாயக்காவில்  இருந்து  ரக்சி ஸ்ராண்ட் தேடித் பிடித்து  என் பலவீனத்தை  உள்ளே மறைத்துக் கொண்டு தாறுமாறா  மூன்று மொழிகளிலும் தடுமாறி, நாட்டை விட்டுப் போய்  காலமாகி விட்டதால் மொழி மறந்து போய்  விட்டதென  நடித்து  அதற்குள் கொஞ்சம் கருணையான பார்வையோடு  தெரிந்த ரக்சிக் காரரைத் தேடிப் பிடித்து மாமா வீடு சென்று  சேர்ந்ததும்.

பேச்சற்ற  என் விறைத்த  நிலையை பயணக் களைப்பு  என எண்ணிக்  கொண்டார்கள்.    விடியக் காலையில்  நிறைய  நல்லெண்ணையும்  சின்னவெங்காயமும் கத்தரிக்காயும் முட்டையும் போட்டுப் பொரித்து  அதற்குள்  சிவத்தப்பச்சயரிசி மாவும் உளுத்தம் மாவும்  கலந்து புட்டவித்து  நல்ல சூட்டோட  பிசைந்து  "சாப்பிடு  ராவு  ராவா  மூச்சு விடாத  வரட்டு  இருமல்"  என்று மாமி கொடுத்த  சாப்பாடு  நீண்ட வருடத்துக்குப் பிறகு அக்கறையும் அன்புமாகப் பரிமாறப்பட்ட உணவு.  கண்ணீர்  வந்தது. 

வெள்ளவத்தை  எனக்கு மிகவும் பழக்கமான இடம் வெள்ளவத்தை  மார்க்கெட்டில் பேரம் பேசி  காய்கறி வாங்கப் பிடிக்கும்  அதனாலேயே  ஒரு காலத்தில் மார்க்கெட்டில்  இருந்த எல்லோரோடும் நல்ல நட்பிருந்தது.  வெள்ளைவத்தை  மார்க்கட்  காரன் ஒரு நாளைக்கு இவளைத் தத்துக் கேட்டு  வந்து நிக்கப் போறான்  என்று பலரும் கிண்டலடிக்கும் அளவு அவர்களோடு அன்னியோன்னியம் இருந்தது.  போனால் நங்கி  எனக் கூப்பிட்டு  பிடித்தவைகளை  அவை எவ்வளவு அருமையாக இருந்த போதும்எடுத்து வைத்துத்  தரும் சில வியாபாரிகள்  இருந்தார்கள் .  அவர்களை அந்த இடங்களைப் பார்க்கவேணும் எனத் தோன்றியது   அந்த மூலைக் கடையில் கச்சான் வாங்கும் ஆசை வந்தது 

அவர்கள் அறிந்த எனக்கு வழக்கமில்லாத  வழக்கமாய் "வெளியில் போகலாமா"  எனத் தயங்கித் தயங்கி  அனுமதி கேட்ட என்னை  மாமி ஒரு மாதிரிப் புதுமையாகப் பார்த்தா.   தனியாகப் போய் கொஞ்சம் கப்பல் வாழைப்பழம் கொஞ்சம் நெல்லிக்காய்   கொஞ்சம் அம்பிரல்லா காய் கொஞ்சம் பட்டுப் புளி  மட்டும் வாங்கிக் கொண்டு, தாய் மொழியும் மறந்து  மலங்க , மலங்க முழிச்சுக் கொண்டு ஆயிரம் ரூபாவைத் தாரை வார்த்துப் போட்டு வந்து பலதடவை போல அப்போதும்   என்னை  அவமானமாக  உணர்ந்தேன்.

"மாணிக்கப் பிள்ளையார் கோவிலுக்கும் போயிட்டு, அப்பிடியே  முன்னால  பிளட்ஸில    உன்ர பிரென்ட் டையும்  பார்த்துக் கொண்டு  வா "என்று அனுப்பி  வைச்சா.  நீண்ட காலம்  வெளியுலகத்தோடு தொடர்பற்று  இருந்ததால்  ஒரே நாளில் அங்கிங்கென  அலைவது எனக்கு  அன்று வித்தியாசமான  உணர்வைத் தந்தது  .

எனக்கு மிக நெருக்கமானவர்கள்  வாழ்ந்த,  அடிக்கடி  என் வரவைக் காத்திருந்த  அந்த பம்பலப்பிட்டி பிளட்சை  பஸ்ஸில் சென்று  அடையாளம் பிடிக்கும் தன்மையை  அப்போது முற்றாக நான் இழந்திருந்தேன். அதைக்  கடந்து போய்  இறங்கி  நெஞ்சு  பதறப் பதற  திரும்பி  நடந்து வந்து  அடையாளம் பிடித்தேன் .




நான் விட்டு வந்தவர்களின் முகவரிகள்  தொலைபேசி இலக்கங்கள்  எதுவும் என்னிடமில்லை. அதற்குள் நுழைந்த போது நினைவடுக்கின் எங்கோ ஓர்  மூலையில்  அந்த பிளாக் ஆங்கில  எழுத்தும்  இலக்கமும் நினைவு வந்தது, அதன்  கடற்கரையோர  பல்கோனில்  நின்று சிரிக்கச் சிரிக்கப் பேசுவது  நினைவு வந்தது  அதை வைத்துக் கொண்டே  நடந்து பெல் அடித்தபோது  திறந்தவள் பார்வையில் கேள்விகள் அற்று "நான் .....டீ "என்ற போது இறுகக் கட்டிக் கொண்டாள்.

வாழ்வில்  எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நட்பு  எனக்குப் பெரு வரம்  அவள் போல.  அவளுடன் ஏதோ  எல்லாம் பேசத் தோன்றியது  ஆவலுடன்.  பேசவில்லை.  அவள் நண்பியாக  இருந்த போதும் மூத்தவள்.  ஒரு அக்காவுக்குரிய  கண்டிப்பும் அக்கறையும்  உரிமையும் கொண்டு அணைத்தவள். மடியில் குப்புறக் கவிழ்ந்து கதறத் தோன்றியது.  முடியவில்லை     அவள் எனக்காக பிரத்தியேகமாக  விருந்து வைக்கவில்லை.  சாப்பிட்டுக் கொண்டிருந்ததை  அப்படியே பிசைந்து  ஊட்டினாள்.  கண்ணீர்  வந்தது. நான் என் கல் தன்மையில் இருந்து இளகிக் கொண்டிருந்தேன்.  உயிரானவர்களை  பிறநாட்டில் விட்டுச் செல்லாதிருந்தால் இங்கேயே இருந்து விடவேண்டும் எனத் தவித்தது மனது. அழுகை வந்தது  உடைந்து, உடைத்துக் கொட்ட மனமில்லை.
 "போகணும் டீ"  என விடைபெற்றேன்.

மாலை மாமி முடிந்தவரை  வெளியில் அழைத்துப் போனா.  ரோயல் பேக்கரி,  பலூடா ஹவுஸ்  என  பிடித்து அதிகம் உண்ட இடமெல்லாம் கூட்டித் திரிந்து விட்டு  திரும்பி  வரும் போது  சொன்னா 
"நானுன்னோட  ஆறுதலா  கதைக்க  வேணும்."
என் முகத்தைப் பார்த்தே  என்னைப் படித்து விடக் கூடியவர் மாமி. இன்னொரு குடும்பத்தில் இருந்து  வாழ்க்கைப்பட்டு வந்து  வந்த இடத்தில்  உள்ள குழந்தையின் மனதில்  உயரிய  இடம் பிடிப்பது  அத்தனை இலகு அல்ல ஆனால்  என் மாமி  எனக்கு  அப்படித்தான்  இருந்தார்.

உடைந்த போதல்ல, சிறு வயதில் இருந்து  உடைக்கப்பட்ட  போது, முறைக்குமுறை  குறிப்பிட்ட  ஒருத்தியின் கொழுப்பெடுத்த திருகு தாளங்களின்  பழியை சுமப்பதற்காகவே  வளர்க்கப்பட்டது போன்ற   நிலையில் துடித்துத் தவித்த  போதெல்லாம்    என்னை  அதிகம் புரிந்து வைத்திருந்தவரும்,  ஓய்வு நேரங்களில் எல்லாம்  எவரையும் அண்டாமல் எல்லாச் சந்தர்ப்பங்களிலும்   அணைத்துக் கொண்டவருமான  மாமி  இன்றில்லை.  அவர்  கதைக்க நினைத்ததை  நான் கடைசி வரை கதைக்கவும் இல்லை. 

"என் ஊர். அங்கு நான்  தனியாகப் போவேன்  எனப் பிடிவாதமாக  நின்று  அன்று  இரவு பஸ்ஸில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஏற்றி விட்டார்கள். 

அதிகாலை  முதல்  சித்தி   ஒவ்வொரு பஸ்சாகக்  காத்திருந்தும்,  ஊர் வருவதற்கு  மூன்று ஊருக்கு  முன்னமே  நான் இறங்க ஆயத்தமாக எழும்பி  நின்றும்  என் ஊர் என்னால் அடையாளம் கண்டு பிடிக்கப்படாமல்  கடந்து கொண்டிருந்தது  அக்கு வேறு  ஆணி வேறாக  சிறு புல் பூண்டுகளைக் கூட  அறிந்து வைத்திருந்த  என்னால் என் ஊரை  அடையாளம்  காண முடியாமல்  தொலைந்திருந்தேன் அப்போது. 

கச்சேரியடி   எனக்கு மிகவும் பழக்கப்பட்ட இடம். என் இளமை முகிழ்த்த காலக் குழப்படிகளுக்கும்  உற்சாகங்களையும்  தன்னுள் மறைத்து வைத்திருக்கும் இடம். கச்சேரி  வந்தபோது  அரக்கப்பரக்க  இறங்கி,  அத்தனை தூரம் எனக்கு நெருக்கமும் மகிழ்வும்  உற்சாகமும் தந்த இடத்தைக் கண்டு கூடப் பயந்து என் இயல்புக்குப் பழக்கமற்ற நிலையில்   ஏதோ  தெரியாத கிரகத்துக்கு  வந்து விட்டது போலப் பதறி நடுங்கி   பின் நேராக வந்த வழியில்   நடக்கத் தொடங்கினேன்.

அந்தச் சித்திக்கு  என்னை நெருங்கிய வயதில்லை  ஆதலால்  என்னில் போட்டி  இல்லை,  அவர் குழந்தைகளுக்கும் என்னை நெருங்கிய வயதில்லை  அதனால்  பொறாமையும்  இல்லை.  தவிரவும்  அவரது  திருமணத்துக்கு முன்னம் போல,  அவருக்குக் குழந்தைகள் பிறந்த பின்னும் கூட  நான் மகள்  என்பது இன்னும் அந்த மனதில்மறையாமல்  இருப்பது கூட அவரது அந்த மனநிலைக்குக் காரணமாக இருக்கலாம். ஆதலால்  அவரால் மட்டும் தான் அந்த வார்த்தை இன்னும் என்வரையில்பெறுமதி இழக்காமல்இருக்கிறது.

அவரால் மட்டும் தான் வந்து இறங்கியவுடன்  வந்தவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள், ஏன் வந்தார்கள்  என்பது அறியாமல், சுயபுராணம் பாடாமல்  தங்கள்  குழந்தைகளின்  பெருமையும் புராணமும் சொல்லி வெறுப்பேற்றாமல்  ஒரு மனுஷியா    இருக்கமுடியும். அதிகம் கதைக்கவில்லை.  அவர் பார்த்துக் கொண்டே  இருந்தார்  எனக்குத் தெரியும் அது கணிப்பீடென.  சித்தி அதிகமாக  கேள்வி எல்லாம்  கேட்க மாட்டா. கனக்கக் கதைக்கவும் மாட்டா.ஆனாலும்கணக்கெடுத்துவிடுவா. 

சித்தி வீட்டில்  இருந்து மெயின் ரோட்டில் நேரா சில கடைகள்  தாண்டி  ஒழுங்கையால்  திரும்பி  நாலைஞ்சு  வீடு கடந்தால்  மாமா  வீடு.   அங்கு தான் பாட்டி இருந்தா.  நான் வளர்ந்த  சூழல். குதூகலமாக பறந்த சொக்கம் . இப்போது   தனியாகப் போக  முடியாமல் நெஞ்சடித்தது  சித்தி கூடவே வந்தா.  வழியெல்லாம்  உறவுகள்  வேலியால்  மதிலால் எட்டி  யார் என விசாரித்தது  மனதுக்குள் அன்னியமாக உணர்ந்தது.  வார்த்தை இழந்தவளுக்கு  தன்னிலை மறைப்பதற்கு  புன்னகை தவிர பேச்சேது?  கடந்தோம்.

 c90 அல்லது  அந்த  வகையறாவைச் சேர்ந்த  மோட்டர்  பூட்டின  ஏதோ ஒரு இரண்டு சில்லு வாகனம்  அதில  வண்டியும் தொந்தியுமா  பிள்ளையார்  எலிவாகனத்தில  வாற  மாதிரி  ஒரு மனிதர்  அது போதாதுக்கு  அவரின் காலடியில் நெஞ்சு வரை  உயரத்துக்குப் பொருட்கள்  சீட்டின் பின் பக்கத்தில் இரண்டு வாழைக்குலையோடு எங்களைக் கடந்து பின் சடன் பிரேக் போட்டு நின்று, 
"தங்கச்சி " என்று சித்தியை  கூப்பிட்டு 
"எங்கட பெரியக்காவிட  பிள்ளையெல்லோ"  என்ற வார்த்தையில்  அதீத நெருக்கம் இருந்தது. 

"ஓம்  ஒருத்தருக்கும் அடையாளம்  தெரியயில்லையாம்  உமக்கென்னண்டு தெரிஞ்சது " எண்டா      சித்தி. 

"இதென்ன கதை. மோட்டார் சைக்கிள் கடக்கைக்குள்ள  கண்ணாடிக்குள்ள  அவளின்ர முகம் தெரிஞ்சது   எங்கட கண்ணுக்கு முன்னால வளர்ந்து,  எல்லாரையும் உரிமையா  அதிகாரம் பண்ணிக்கொண்டு,  கலகலத்துத் திரிஞ்ச   எங்கட பிள்ளையை   எனக்கு அடையாளம் தெரியாதோ . அதிலையும் ".......

 என்று ,கடந்து போன  நான் கடைசியாக  ஊரிலிருந்த  ஒரு சம்பவத்தை  நினைவில் வைச்சு  "நாங்கள்  எல்லாம் அண்டைக்கு வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே  எல்லோ இருந்தனாங்கள்.  துணிவா  தெருவில  இறங்கினது  இவள் தானே. விடியப்புறம்  கடையைத் தட்டி  "வந்து நிக்கிறது  யார் என்று  எனக்குத் தெரியும்  நீ  கடையைத் திறந்து பாண் பெட்டியையும்   ஒரு குலை வாழைப்பழமும் தா  அண்ணை"  எண்ட  அந்தத் துணிவு  எங்கட  பெரியக்காட  பிள்ளையை தவிர  ஆருக்கு வரும் சொல்லும்"

   என்று சொன்ன இராசரெத்தினம் அண்ணை,  ஏதோ  ஒரு தீவுப்பகுதியில்  இருந்து  அயலூரில்  கடை போட்டுப் பிழைக்க வந்த எனக்கு  உறவற்ற , என்னால் நினைக்கப்படாத  மனிதர்.  உறவென்று  எண்ணியவர்கள் பலரின்   மனதில்  அன்று நான் இருக்கவில்லை.  ஆனால்  நான் மறந்து போன என்னை நினைவில் வைத்து அன்று எனக்கே   அடையாளம் காட்டியவர் அவர் தான்.

இப்படி ஒரு நிலையைத் தான் என் வைத்தியரும்  எதிர்பார்த்திருக்கலாம்.

நான் பார்த்துக் கொண்டே நின்றேன்  கண் கலங்கியது  கதைக்கமுடிய வில்லை. 

"இதென்ன  இவள்  இதுக்குள்ள ஒம்பது  கேள்வி,  ஓராயிரம் கிண்டல்,  ஒருவருசத்துக்குப் போதுமா  சிரிச்சிருப்பாளே.  ஏன்  கதைக்கிறாளில்லை " என்றார்.

எனக்கும் கதைக்க ஆசை  அப்போது.  கதைக்காமல்  விட்டு, கதைப்பதை காதில் விழுத்த யாருமில்லாமல் என் கதைகள்  உதாசீனப்படுத்தப் பட்டு, க தைப்பது அர்த்தமற்றது என்றாகி,    கதை மறந்து விட்டது  என்ற கதையைக்  கூடக் கதைக்க முடியவில்லை.
 
சித்தி  கையில் இறுக்கமா பிடித்துக் கொண்டா .
ஒரு ஆதரவு போல
"இப்பத்தானே  வந்தவள். கன காலத்துக்குப் பிறகு  எல்லாரையும் கண்டவள்  போகப்போக  மெல்ல மெல்ல கதைப்பாள்" 
என்றா  சமாதானமா.....

"ஓம்... போகப் போக  மெல்ல  மெல்ல  இனி  எல்லாம் கதைப்பன்"










.