Tuesday, September 3, 2019

சிக்கிட்டி

 அந்த வீடு ஒரு மரண வீட்டுக்குரிய அடுக்குகளோடு தான் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தது. வாசலில் வீதியின் இரண்டு பக்கமும் நீளமாய் கிடந்த பூவரசம் வேலியைத்  தொடுத்த இடத்தில் சிவப்பு நிற பெயின்ற் அடித்து கிரில் கம்பி கேற் போட்டு மேல் பகுதிக்கு மறக்காமல் தகரமடித்து  அதில வீட்டு நம்பரும் 'நாய் கடிக்கும் கவனம்' என்று காலகாலமாய் வரும் நாய் விளம்பரமும் எழுதி வைத்திருந்தார்கள்.
அதன் இரண்டு பக்கமும் இரண்டு வாழைகள், அவை தள்ளிய குலைகள் போலவே இணைத்துக் கட்டிய பச்சை மொந்தன் குலைகளுடன் தொங்கிக் கொண்டிருந்தன. அதிலிருந்து இரண்டு பக்கமும் ஒரு லைட்போஸ்ட் தூரத்துக்குக் கயிறு கட்டி உட்பக்கமா மடித்துப் பின்ன ப்பட்ட தோரணம் தொங்கிக்கொண்டிருந்தது.
காலகாலமாய் வரும்  வழக்கத்தை மாற்றக்கூடாது என்கிற மாதிரி அந்த வீட்டின் வாசலில் சைக்கிள் சீற்றில் இருந்த படி ஒரு கால் விரல்களைக் கீழே ஊன்றிய படி சிலரும் , ஒரு காலை முற்று முழுதா கீழே பலமா ஊன்றி மற்றக் காலை சைக்கிள் பார் கம்பிக்கு மறுபக்கம்  தொங்கவிட்டுக் கொண்டு தண்டனை கொடுத்த மாதிரி இன்னும் நாலைந்து  இளம்பெடியளும், ஏதோ இந்த மரண வீட்டையே தாங்கள் தான் தோளில் சுமந்து கொண்டிருக்கிறமாதிரி உணர்ச்சி பொங்கக் கதைத்துக்கொண்டு  ,கண்களால் வீதியை சுவாரசியமாக அளந்து கொண்டிருந்தார்கள் .
அதென்னவோ  எல்லா மரண வீட்டிலும் இது கட்டாயம் நடந்தேற வேண்டிய முக்கிய சடங்கு மாதிரி அந்த இளைஞர்களுக்குக் சற்றுத்  தள்ளி வாய்க்குள் வெற்றிலையை குதப்பிய படி நாலைந்து  பெரியவர்கள் தலையை அண்ணாந்து காறிக் காறி வேலிக்கரையில துப்பி கானிற்குள் வளர்ந்திருந்த இக்கீரிச் செடியையும் அதன் சிறிய மஞ்சள் பூவையும் சிவப்பாக்கிக் கொண்டு, இடைக்கிடை  செருமிப்  ஆளுக்காள் தங்களுக்குத் தெரிந்தளவில் இறந்தவரின் வாழ்க்கை வரலாறு பற்றித் தீவிரமா விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

அது தாண்டி உள்ளே போனால் நீண்ட முற்றத்தைக் கடந்து வீட்டின் வாசல் படியை ஓட்டினாற் போலப் போடப்பட்டிருந்த அவசரப் பந்தலின் நடுவில் இறந்து போன அந்த உடல் வளர்த்தப்பட்டுத் தலைமாட்டில் தேங்காயெண்ணெய் விளக்கு ஒற்றைத் திரியில்  எரிந்து கொண்டிருந்தது.  இப்போது சவம் என்றும், பிணம் என்றும், பிரேதம் என்றும் உடலம் என்றும் அழைக்கப்படும்  அந்த உருவத்துக்கு  உயிரிருக்கும்  போது ஒரு பெயரிருந்தது. அப்போது  தேவகி என அந்தப் பெயரைச் சொல்லியோ  சின்னம்மா என்றோ  மாமி  என்றோ  இன்னும் பல உறவு முறைகளாலும் அது  அழைக்கப்பட்டது . இப்போது அந்த உடல் அனேகமாக எல்லா அழைப்பையும் இழந்து  உடல் என்ற ஒரு சொல்லுக்குள்  அடங்கிக் கிடந்தது.

அங்கிங்கென ஆள் நடமாட்டம் இருந்த போதும் தலை மாட்டிலோ, கால்மாட்டிலோ தலையைக் குப்புறப் போட்டு விசும்பிக் கொண்டோ, அல்லது அடிக்கொரு தரம் இறந்த முகத்தை நிமிர்ந்து பார்த்து வெடிக்கும் அழுகையை உதடு கடித்து அடக்கிக் கொண்டு, அந்த உடலில் ஈ கூட உட்கார்ந்து விடக் கூடாது என கையை வீசி வீசிப் பாதுகாத்துக் கொண்டோ யாரும் அருகிலில்லாததிலிருந்து  நெருங்கிய உறவுகளுக்குத் தூரமாக  விழுந்த மரணம் என்பது உணர முடிந்தது.
வீட்டின் உரிமையாளர்கள், அல்லது இறந்தவரின் உறவினர்கள் என எண்ணக் கூடிய உரிமையுடன் திரிந்தவர்கள் குறிப்பிட்ட சிலர் வரும் போது மட்டும் சோகம் மிகவும் அதிகமாகி ஒரு முறை குரலெடுத்து அழுது விட்டு வராத கண்ணீரையும் சளியையும் கஸ்ரப்பட்டு சீலைத் தலைப்பில் சிந்தி முகத்தை தலைப்பால் அழுந்தத் துடைத்து ஒருமாதிரி கண்ணைச் சிவக்க வைத்து தங்கள்  சோகத்தை வெளிக்காட்ட, அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் வந்தவர்களும் போட்டிக்கு ஈடு கொடுத்தார்கள்.
பிறகு உடனேயே கவலையைக் களைந்து போட்டு விட்ட மாதிரி "ஏன் ஹோல் எடுத்துச் செய்திருக்கலாமே வசதியாயிருந்திருக்குமேல்லோ" என்று விசாரணையை ஆரம்பித்தார்கள்.
"உரித்துக்காரர் நாங்கள் இருக்க எதுக்கு ஹால் எல்லாம். மேள்க்காரி வந்து என்ன நினைப்பாள். நீங்கள் எல்லாம் எதுக்கு இருக்கிறியள் எண்டு பேசமாட்டாளோ எங்களை" என்றார்கள் வீட்டுக்காரர்.
"மோள் வாறாவாமோ?"
"ஓம் வராமல் பின்ன "
"ஓ.... அதுதானே" என்று அவர்களை ஆமோதித்து விட்டு அவர்கள் சற்றுக் கடந்ததும்
"ஹால் எடுத்தால் எல்லாச் செலவும் ஹாலோட போயிடுமெல்லே. அவங்கள் குடுக்கிற பில்லுக்கு,  வாறவள் அங்க ரொக்கமா குடுத்துக் கணக்குத் தீர்த்துப் போடுவாள் இவைக்கு எதுவும் மிஞ்சாது வீட்டில வைச்சால் எல்லாம் முடிய அந்தக் காசு இந்தக் காசு என்று கணக்குக் காட்டி சுளையா சுருட்டலாமெல்லே அதுக்குத் தான். " ஏதோ இவையைப் பற்றி எங்களுக்கு தெரியாது போல"  என்று வாயைக் கோணிச் சிரித்துக் கொண்டு நடந்து வேறு யாருக்கோ பக்கத்தில போய் சோகமாக  முகத்தை வைத்துக் கொண்டு வேறு கதையைத் தொடங்கினார்கள் அல்லது கதைத்துக் கொண்டிருந்த விடுப்பில் கலந்து கொண்டார்கள்.

வந்திருந்தவர்களில் பலர் சின்னச்சின்ன வித்தியாச உரையாடலோடு இதே காட்சியை அரங்கேற்றிக் கொண்டிருந்தாலும், ஒரு சிலராவது எதுவும் பேச்சற்று இருண்டு போன முகத்துடன் ஒரு துக்கவீட்டின் மானசீக அடையாளமாக  இருந்தார்கள்.

 கூட்டம் கூட்டமாகப்  பிரிந்திருந்த மனிதக் கூட்டத்துக்குள் காரசார அரசியல் தீர்மானங்கள், சுடச்சுட சினிமாச் செய்திகள், கலியாணப் பேச்சுக்கள் இன்னும் இன்னோரன்ன மரணவீட்டில் செய்யவேண்டிய அதி முக்கிய விண்ணானங்களும் விடுப்புகளும் பங்கமில்லாமல் கடை விரித்திருந்தன.

 வீட்டின் வேலிக்கரை எங்கும்  புளிச் புளிச் என்று சிவப்பாக வெற்றிலைச் சாறைத் துப்பி வைத்தார்கள். ஆனால் எல்லோரிடமும் பொதுவாக  அடிக்கடி வாசல் பார்த்த ஒரு எதிர்பார்ப்பிருந்தது. அது இறந்தவரின் மகளின் வருகைக்கானது.

இத்தனையிலும் எதனோடும் பட்டுக் கொள்ளாமல், எவரோடும் ஒட்டிக் கொள்ளாமல் வீட்டின் தாழ்வார நீளத்துக்குப படி போல ஒன்றரையடி அகலத்துக்கு இழுக்கப்பட்டிருந்த கொங்கிரீட் தளத்தில் வீட்டின் மூலைப் பகுதியில் வெள்ளை வேட்டியும் சுற்றிச் சால்வை போர்த்திய உடலை மீறி மார்பில் புரளும் வெண் முடிக்கற்றையுடன் சாய்ந்திருந்தார் அந்தப் பெரியவர்.


                                                                 

 எதையெல்லாம் எந்தெந்த வயதுகளில் இழக்கக் கூடாதோ அதையெல்லாம் தப்பாமல் அந்தந்த வயதுகளில் இழந்து விட்ட பின் மரணம் வாழ்வின் முடிவல்ல என்பதும், அது இந்நேரத்தில் நிகழவேண்டும் என விதிக்கப்பட்டு விட்டால் தவிர்க்க முடியாதது என்பதும் என்னால் அனுபவபூர்வமாக  உணரப்பட்டு விட்டபின், மரணம் பற்றிய அதீத பயங்களை நான் இழந்துவிட்டிருப்பதால் இப்போதெல்லாம் எந்த நிகழ்விலும் முகங்களைப் பார்த்து மனங்களைப் படிக்கமுயல்வது ஒரு பொழுது போக்கு போலவும், வாழும் சூழலை அறிவது ஆர்வம்  போலவும் ஆகி விட்ட நிலையில் ஏனோ மற்றவர்களிலிருந்து வித்தியாசப்பட்ட அந்தப் பெரியவர் மனதில் பதிந்தார்.
பக்கத்தில் போய் அமர்ந்த போது அவரது, வயதுக்கு மீறி பொக்கை விழுந்தது போன்ற தோற்றம் கொண்ட வாய் புன்னகைப்பது போன்ற பாங்கில்  இருந்த போதும், சற்றே குழிவிழுந்த கண்களில் அடிக்கடி ஈரம் கசிய எங்கோ பார்த்துத் துடைத்துக் கொண்டார்.
இறந்து கிடந்த உடலில் காய்ந்து உதிர்ந்த சந்தனத்தையும் விபூதியையும் யாரோ ஒழுங்கு படுத்தி மறுபடியும் இட்டார்கள்.
"சிக்கிட்டிக்கு செஞ்சாந்துப் பொட்டென்றால் நல்ல பிரியம் பெரியபிள்ளையாகினப் பிறகு அது தான் வைக்கிறவள். அவளின்ர நிறத்துக்கு நல்ல எடுப்பா இருக்கும் " தாத்தா சம்பந்தமில்லாமல்  தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.
"கடைசிப்பயணத்துக்கு . நல்ல வெளிப்பா  இல்லாமல் ஏன் இப்பிடி ஒரு மங்கல் நிறத்தில சீலை உடுத்தி விட்டிருக்கீனம். " யாரோ கேட்டார்கள்.
"வயதான மனிசி. அதிலையும் புருசன் செத்த மனிசி .கண்ணைப்பறிக்கிற மாதிரி மங்களகரமான நிறத்தில  கட்டினா நல்லாவா இருக்கும்" யாரோ பதில் சொன்னார்கள்
தாத்தா சம்பந்தமில்லாதவராக எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தார்.
 " சிக்கிட்டிக்கு வாடாமல்லிக் கலர் எண்டால் நல்ல விருப்பம் அந்த நிறத்தில சீலையும் கட்டிக் கொண்டு தலை கொள்ளாமல் மல்லிகை மொட்டு சரம் சூட்டி குஞ்சம் அசைய கோயிலுக்கு வந்தாள் எண்டால் ஒரு சனமும் சாமியைப் பாராது அவளைத் தான் பார்க்கும்"
தாத்தா அந்தச் சூழ்நிலைக்குச் சம்பந்தமில்லாமல் அருகில் இருந்த  எனக்குச் சொல்வது போலோ தன் பாட்டில் சொல்வது போலோ தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார்.  ஏதோ ஒருவித மனப்பாதிப்புக்கு உள்ளானவர்  என்று எனக்குள்  ஊகித்துக் கொண்டேன்.
"மேள் வந்து கிருத்தியம் எல்லாம் கழிச்சுத் தானே போவா?" எங்களைக் கடந்த யாரவோ அந்த வீட்டுக்காரரிடம் கேட்டார்கள்.
"இல்லை காடாத்திப் போட்டு  கழியசெலவு கழியப் போக வேணுமாம் இருந்தாப் போல ஒருமாதம் லீவெடுக்க முடியாதாம்"
"அது சரி திண்டது குடிச்சதை படைச்சு செலவை முடிச்சுப் போட்டுப் போறதும் நல்லது தான்"
"செலவு வீடு என்ன செத்தவைக்கோ செய்யீனம் தாங்கள் திண்டு மூக்கு முட்டக் குடிக்க எடுக்கிற எடுப்பெல்லோ" வேறு யாரோ முணுமுணுத்தார்கள்
"சிக்கிட்டிக்கு இலந்தைப்பழம் நாவல்பழம் கொய்யாப்பழம் விளாங்காய் எண்டால் நல்ல பிரியம் காச்சல் காஞ்சாலும் ஒளிச்சு வைச்சாகிலும்  சாப்பிடுவாள் " தாத்தா பெருமூச்சு விட்டார்.
செத்தவீட்டில் சிறு சலசலப்புக் கேட்டது. வாசலில் கார் வந்து நின்றது. இருந்தாற்போல் பீறிட்டுக் கிளம்பியது ஒப்பாரி. இறந்தவரின் மகள் வந்திறங்கினாள்.  அனேகமாக  அனைவரின் பார்வையும் வாசலைக் குறிவைத்தது.  தாத்தா தவிர.
"சிக்கிட்டியின்ர பிள்ளை இப்ப பெரிய பொம்பிளையாகி இருப்பாள் சின்னவயசில அப்பிடியே தாயை உரிச்சு வைச்ச மாதிரி இருந்தவள் "
தாத்தா அப்போதும் எங்கோ பார்த்துக் கொண்டு உதட்டில் புன்னகையும் குழி விழுந்த கண்ணின் மடல் தாண்டிக்  கசியும்  நீருமாகச் சொன்னார்.
எதனோடும் ஒட்டிக் கொள்ளாமல் எதோ ஒரு வேறு உலகத்தில் தனிமையில் பேசிக்கொண்டிருக்கும் மனிதனிடம்
"அது யாரு தாத்தா சிக்கிட்டி?" என்றேன்.
கனவிலிருந்து விளித்தது போல திரும்பிப் பார்த்தார்.
திரும்பவும் புறங்கையால்  தன் குழிவிழுந்த கண்ணைக் கசக்கிக் கொண்டார்.
"சிக்கிட்டி எண்டால் அவள்தான் சின்னங்கச்சி."
"அது யார் தாத்தா சின்னங்கச்சி.?"
"அவையள் அக்காளும் தங்கையும் தானே . மூத்தவவை பெரியங்கச்சி எண்டு கூப்பிடுகிறது சின்னவளை சின்னங்கச்சி எண்டு கூப்பிடுறது"
"அது தான் யார் அந்த சின்னங்கச்சி தாத்தா?"
"அவள் தான் சிக்கிட்டி"
எனக்குத் தலை வெடித்தது.
தாத்தாவின் பார்வை முன்னிலை மறுத்து கனவுக்குள் புதைந்தது. உதடு வெம்பலும் புன்னகையுமாக ஒரு வித்தியாசமான உணர்வுக் கலப்பில் நடுங்கியது.
"அவள் சிக்கிட்டி சிற்றாடை கட்டிற பருவத்திலேயே நல்ல துரு துருவெண்டு இருப்பாள். பக்கத்து வீடு தானே எந்த நேரமும் எங்கட வீடு மாறி தங்கட வீடு மாறி ஓடிக்கொண்டே இருப்பாள். நான் பெடியளோட அங்கன இங்கன போட்டு வரேக்குள்ள எல்லாம் நாவல் பழமோ இலந்தைப் பழமோ கொய்யாவோ விளாங்காயோ ஏதாவது ஒன்று கொண்டு வரவேணும் இல்லாட்டி அவனே இவனே என்று உண்டு இல்லையென்று பண்ணிப் போடுவாள்."
தாத்தா பொக்கைவாயில் குழந்தையாகி அழகாகச் சிரித்தார் .
"புளியளை திண்டு காச்சல் கீச்சல் வந்திதெண்டு வை என்ர ஆச்சி வாசல் சீமேக்கிளுவையில நீட்டுக்கொப்பா முறிச்சுக் கொண்டு ' பச்சைப் பிள்ளைக்கு கண்டதை குடுத்து படுக்கையில போட்டிட்டான் பாவி ' எண்டு திரத்தும் . அப்பவும் என்னை ஒரு சொல்லு விட்டுக் குடாள் எண்டால் பாரன். 'நீ கண்டனியே எணேய் அவன் தான் தந்தவன் அது தான் காச்சல் வந்ததெண்டு எண்டு 'எனக்காக வரிஞ்சு கட்டிக் கொண்டு வந்திடுவாள். "
தாத்தாவின் பேச்சில் இருந்த துள்ளலில் ஒரு விடலைப் பையன் ஓடி விளையாடினான்.
"சிக்கிட்டி சடங்காகினா போல தான் கதைக்காமல் விட்டிட்டாள் எண்டாலும் ஒரு பார்வை பாப்பாள் பாரு ஆயுளுக்கும் அது போதும்"
தாத்தா எங்கோ பார்த்தார் வாலிபக் கனவில் சிரித்தார். கண்ணை துடைத்தார்
"பெரியங்கச்சின்ர கலியாணத்துக்குத் தான் முதலில சீலை கட்டினாள் நல்ல வாடாமல்லி நிறத்தில அந்தச் சீலையும் மூண்டு குமிழ் குஞ்சரமும், மல்லிகைச் சரமுமாய் அம்பாளாச்சி முன்னால வந்து நிண்ட மாதிரி இருந்தது அண்டைக்கு "
"என்ர கூட்டாளி மாரெல்லாம் கண்ணைக் காட்டிறாங்கள் எனக்கு ஒரு மாதிரிப் போச்சு கலியாணவீட்டுக்கு தோரணக் கால் நட்டுக்கொண்டிருந்த என்னைக் கடக்கேக்க கண்ணை வெட்டிப் போட்டுப் போனாள் பார் ஒரு பார்வை அப்பிடியே ஆட்டம் அசைவு இல்லாமல் போச்சுது எனக்கு "
யாருக்கு இந்த மனிதர் கதை சொல்கிறார் எதற்காகச் சொல்கிறார் என்பதெல்லாம் எனக்குப் புரியவில்லை ஆனாலும் ஒரு ஆத்மாவின் உள்ளக் கிடக்கை கொட்டப்படும் போது கேட்கவேண்டியது மனிதக் கடமை  என்பதை வாழ்க்கை உணர்த்தியிருந்ததால் கூடவே இருந்தேன். ஒரு வயோதிபத்தின் இளமைக்காலம் எந்த வித மிகைப்படுத்தலும் அலங்காரமும் இன்றிப் பகிரப்படுவது  சுவாரசியமாக இருந்தது. பிடித்திருந்தது.
"ஆச்சியும் அண்டைக்கு பெரியங்கச்சியின்ர கலியாணம் முடிஞ்சு கால் மாறி பொம்பிளை மாப்பிள்ளையை  மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பிப் போட்டு வீட்டுக்கு வந்த உடனேயே சொல்லிப் போட்டுது. 'ஊரில உள்ளவன் எல்லாம் கண்ணை வைக்கிறான் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பிள்ளை சின்னங்கச்சி எங்கட வீட்டுக்குத் தான்' எண்டு "
"அப்பு தான் ஒரு வரியத்தில ரெண்டு கலியாணம் நடந்தால் ஒண்டு உய்யாதாம் எண்டு அடுத்த வரியம் வரைக்கும் காத்திருந்து கேப்பம் எண்டார். அதுக்குள்ளே அங்கின இங்கின பூமரத்துக்கு தண்ணி விடேக்குள்ள பனங்கிளங்கு கொடியில ஓடியலுக்கு காயவிடேக்குள்ள, மாட்டை கண்டை அவிட்டு விடேக்குள்ள எண்டு அவள் வெளியில அங்க இங்கே வரேக்குள்ள வெட்டுவாள் பார் ஒரு வெட்டு ஆயுசுக்கும் போதும் அந்தப் பார்வை. "
தாத்தா கொஞ்சம் அமைதியானார். எங்கேயோ வெறிச்சுப் பார்த்தார். பின்
"அவள் நல்ல கெட்டிக்காரி கண்டியோ அதால தான் சடங்காகினப் பிறகும் படிப்பை நிப்பாட்டாமல் படிக்க வைச்சவை. நானும் எந்தப் பொறுக்கி என்ன புறணி சொன்னாலும் புறங்கையால தட்டிப் போட்டு கலியாணத்துக்குப் பிறகும் படிக்க விட்டு ஒரு ரீச்சராக்க வேணும் எண்டு தான் நினைச்சுக் கொண்டிருந்தன் அப்பத்தான் அது நடந்தது"
தாத்தாவின் முகம் இருண்டது
"அவள் பத்தாம்பு படிச்சுக் கொண்டிருக்கேக்க தான் பெரியங்கச்சிக்கு தலைப்பிரசவத்தில இரணைப் பிள்ளை பிறந்தது"
தாத்தா முகம் இறுக பேசாமல் இருந்தார்.
"இப்ப இருக்கிற வசதியள் அப்பவே இருந்திருந்தால் பெரியங்கச்சி பிள்ளை பெத்த வீட்டுக்குள்ள சுவாதம் வந்து சன்னி கண்டு போயிருக்காது. "
"என்ன தாத்தா சொல்லுறியள்"
"ஓம் பெரியங்கச்சி போனாப் போல அந்த ரெண்டு பாலனையும் பார்க்க ஆருமில்லை என்று போட்டு புருஷன்காரன் ரெண்டாம் கலியாணம் கட்டினால் வாறவள் மாற்றாந்தாய் கொடுமை செய்து பிள்ளைகள் சீரழிஞ்சு போங்கள் எண்டு அக்காளின்ர பிள்ளையளுக்கு தங்கையை தாயாக்கிப் போட்டினம்,"
"ஹ்ம்ம் அதில ஒரு குறையும் ஒருத்தரும் செய்யயில்ல அது தானே முறையும் . விதி தான் எனக்கு அவளை விதிச்சிருக்கியில்லை . அந்த மனுஷன் வேற சாகும் வரைக்கும் முதல் பெஞ்சாதியை மறக்கவேயில்லை . பாவம் இடுப்பில ஒண்டும் கையில ஒண்டுமா துடுக்கடங்கி துவண்டு போய்  அவள் அலைஞ்ச அலைச்சல் ."
"பிறகு அதுக்குமொரு குஞ்சு பிறந்து மூன்றையும் இழுத்துக் கொண்டு திரியிறதே வாழ்க்கையா போச்சுது. மக்களைக் கட்டிக் குடுத்தாப் போல மனுசனும் அவசர அவசரமா போய்ச் சேர்ந்திட்டுது.   பிள்ளை வளர்த்தது தவிர என்னத்தைக் கண்டாள் சிக்கிட்டி . ஆனாலும் நல்ல குஞ்சுகள் தாயை தவிக்க விடையில்ல. தாங்கள் கட்டிப் போன இடத்தில காலூன்டின உடன கூப்பிட்டு எடுத்துப் போட்டுதுகள். "
"அவளுக்குத் தான் இந்த மண்ணைப் பிரிய மனம் வரயில்லை. நாட்டை விட்டுப்  போறதுக்கு முதல் நாள் தன்ர வீட்டு முத்தத்தில தனிய இருந்து கொண்டு வாழ்ந்த கதை சொல்லிக்  குழறத் தொடங்கினாள் பார். பத்து செத்தவீட்டு ஒப்பாரி தேறும் பாவம் . தாய் தகப்பன் தமக்கை என்று  எல்லாருக்கும் வலு செல்லம் அவள். பெரியங்கச்சி போனதோட தாயும் தகப்பனும் ஆளுக்கொரு மூலையில முடன்கினது தான் அடுத்தடுத்துப் போய் சேர்ந்திட்டுதுகள்  அதுக்கெல்லாம் அழாமல் விறைச்சுப் போய் பார்த்த்துக் கொண்டிருந்தவள் நாட்டை விட்டுப் போகும் போதுதான்  சேர்த்துவைச்சுக் கதறினாள். ஆற்ற தேற்ற எண்டு ஆருமில்லாமல் ......  அது பெரிய கொடுமை.   நான் போகைக்கையும் உன்ர மடியில தான் போவனம்மா எண்டு முத்தத்து மண்ணில அடிச்சுச் சத்தியம் பண்ணிப் போட்டுத் தான் சிக்கிட்டி போனவள் "
"நீங்கள் எங்க தாத்தா இருக்கிறனீங்கள்?"
"உங்க அருகில தான் என்ர மூத்த மகளுக்கு குடுத்த சீதன வீட்டில ".
"மகளோட இருக்கிறியளோ. அப்ப உங்கட மனைவி...."
 தயங்கித் தயங்கித்தான் அந்தக் கேள்வியைக் கேட்டேன்
"மகள் வீட்டில நான்  தனியாத்தான் இருக்கிறனான் . அவையள் எல்லாரும் அங்கன கனடா பிரான்ஸ் என்று நல்லா இருக்கீனம்"
"நீங்க ஏன் போகயில்ல?"
"மனிசி போகேக்க என்னையும் கூப்பிட்டவ தான். நான் தான் மாட்டன் எண்டு சொல்லிப் போட்டன். இந்தக் ,காத்தும், சுவாத்தியமும் ஊரும் எனக்குப் பழகிப் போச்சு வேற எங்கேயாவது போனால் ஒத்துவராது செத்துப் போவன் கண்டியோ அதோட ஆளாளுக்கு உள்ள இடமெல்லாம் சிதறிப் போனால் ஒருத்தரையும் ஒருத்தராலும் திரும்பக் கண்டு பிடிக்க முடியாது. ஒராள் உரித்தான இடத்தில இருந்தால் தான் வெளிக்கிட்டுப் போறத்துக்கு முன்னால உசிர வைச்ச ஆத்துமம் தேடி வரும் " என்றார்
எனக்கு ஏனோ கடல் மீன்கள் நினைவு வந்தன. அவை எந்த வித சுத்திகரிக்கப்பட்ட சுகந்தத் தண்ணியில் விட்டாலும் கூட கடல் தவிர்த்து எங்கும் வாழாது. இறந்து போகும்
"குண்டி காஞ்சால் குதிரை கொள்ளுத் தின்னத்தானே வேணும். எல்லாம் அடிபட்டுப் புத்தி வந்ததும் நீங்களாவே கெஞ்சிக் கேட்டு வருவியள். எனக்கு உங்க குண்டடிபாட்டுக்குள்ள இருக்கேலாது" எண்டு போட்டு அவ போட்டா "
"ஓ... பின்ன நீங்களும் கனடா பிரான்ஸ் எண்டு வெளிக்கிட்டிடுவியள் . அது சரி உங்கட சிக்கிட்டி எந்த நாட்டில தாத்தா இருக்கிறா அவவும் கனடா பிரான்ஸ் எங்கையும் தானோ?"

 தாத்தா கொஞ்ச நேரம் சத்தம் போடாமல் இருந்தார்.  பிறகு இலக்கில்லாமல் எங்கெல்லாமோ வெறித்தார். கண்கள்  பொல பொலவெண்டு வடித்தன..   தாத்தா மௌனமாகவே இருந்தார்.

மரணவீடு இப்போது சற்று ஆரவாரமாகியது இறுதிக் கிரியைகள் இறுதி நிலையை அடைந்திருந்தன. இரு சிறு குழந்தைகளோடு நின்ற , கன்னங்களில் வெளிநாட்டுக் குளிர்ச்சியை அள்ளிப் பூசியிருந்த பெண் மட்டும் இதய பூர்வமாக விம்மிக் கொண்டு காரியம் செய்து கொண்டிருந்தாள் மற்றவர்கள் எல்லோரும் ஒரு துக்க வீட்டில் அந்நியம்போலத் தோன்றினார்கள்.
கிரியைகளில் அவள் ஒத்துழைக்க முடியாமல் குழந்தைகள்  அவளின் உடையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு சிணுங்கிக் கொண்டிருந்தார்கள். யாருக்கும் அவர்களை அணைத்து வைக்கத் தோன்றாத அளவு உரிமை அற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். அவள் துயரமும் சங்கடமுமாகத் தவித்துக் கொண்டிருந்தாள்.

 தாத்தா அருகே போய் ஒரு குழந்தையை தூக்கித் தோளில் போட்டவாறே மறு குழந்தையை கையில் பிடித்துக் கொண்டார்.
"கொம்மா கடமை எண்டு வந்திட்டால் உணர்ச்சியைக் காட்ட மாட்டாள். பல்லைக் கடிச்சுக் கொண்டு செய்து முடிப்பாள். நீ அம்மா மாதிரி ""
என்றார்  ஒரு விதமான  மந்திரக் குரலில். அவள் புரியாமல் பார்த்தாள். அதற்கு மேல் அவ்விடத்தில் அவர் பற்றி ஆராய நேரமும் திராணியும் அற்றவளாக புரோகிதரின் ஏவலுக்கு இயங்கினாள்.
பெட்டி மூடப் போகும்  நேரம் கையில் வைத்திருந்த ஒரு நெட்டு மல்லிகை மொட்டை அவள் கையில் கொடுத்து
"கொம்மாவுக்குப் பிரியமானது. உங்கட முத்தத்தில பூத்தது. கொம்மா  நட்ட கொடி  " என்றார். அவள் புரியாமல் வாங்கி தாயினருகில் வைத்தாள்.
ஊர்வலம் புறப்பட்டது அவள் ஒரு குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு, மற்றக் குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு
"நாங்கள் எல்லாம் அங்கிருக்க எதுக்கம்மா தனியா இங்கே வந்தீங்க ? யாரைத் தேடி வந்தனீங்க ? இன்னும் ஒரு நாள் தானே இருந்தது திரும்பி வர அதுக்கிடையில எதுக்கம்மா உனக்கு மாரடைப்பு ? ஏனம்மா?   ஒரு வேளை.....  ஒரு வேளை... நாங்கள் சொன்னது  தான் காரணமோ? ......  ஊரில  தேவையில்லாமல் கிடக்கிற காணியை  வித்துப் போட்டு வாங்கோஅங்கே எங்களுக்கு என்ன தேவையிருக்கு இனி  எண்டு நாங்கள்  நச்சரிச்சது தான்  காரணமோ  அம்மா?
அதுக்குள்ளை தான் நீங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறீங்கள் என்று சொல்லியிருக்கலாமே அம்மா. எப்பவும் மாதிரி எல்லாத்தையும் நெஞ்சுக்குள்ள மூடி வைச்சிருந்த பாரத்தில தான்  திரும்பி வர விரும்பாமல் இதயம் நிண்டிட்டுதோ அம்மா.
பூர்வீகம்  என்பது, வெறும் மண்ணல்ல  நினைவுகளில் உயிர் என்று உயிரை விட்டா நிரூபிக்க வேணும் அம்மா " என்று உடைந்து உள்ளிருந்த கவலை பீறிடக் கதறிக்கொண்டிருந்தாள்.

இறுதி ஊர்வலம் பிரதான வீதிவழியாக சுடுகாட்டை நோக்கி நகர,   தாத்தா,
"இனி இங்கே என்ன இருக்கு "
என்று வானத்தையும் பூமியையும் அண்ணாந்து சுற்றிப்பார்த்து முணுமுணுத்துக் கொண்டார்.  ஆவி வெளியேறுவது போல நீண்ட பெருமூச் சொன்றை  இழுத்து விட்டுக் கொண்டார். ஊர்வலத்தோடு கூடப் போகாமல் பக்கத்தில் கிடந்த ஒழுங்கையால் திரும்பினார்.
"சிக்கிட்டிக்கு நெருப்பெண்டா பயம். ஒரு சாம்பிராணிக் குச்சி சுட்டால் கூடத் துடிச்சுப் போவாள்" என்று சொல்லிக் கொண்ட குரலில் சத்தம் எழாது நெஞ்சுக்குள் நின்றது. நடந்து கொண்டிருந்த நடையில் உயிரற்று உடல் தொய்வுடன்  தடுமாறிக் கால்கள் பின்னலிடத் தொடங்கின.

கல்யாணங்களுக்கு எப்படி காதலோடு சம்பந்தமிருக்க வேண்டிய கட்டாயம் இல்லாமலிருக்கிறதோ
அதே போல , காதல்களுக்கும்  கல்யாணத்தில் முடிந்து நிரூபிக்கும் அவசியங்கள்  வேண்டியிருப்பதில்லை.
என்ற யதார்த்தத்தை  மீண்டுமொருமுறை  சந்தித்த அதிர்வோடு ஊர்வலத்திலிருந்து  விலகி, தாத்தா  சென்ற பாதையில் விக்கித்து  நின்றுகொண்டிருந்தேன்.





Monday, September 2, 2019

'Resa Newspaper' on 28th August, 2019 இல் வெளியான உரையாடலின் தமிழாக்கம்

உங்களைப் பற்றிய சிறிய அறிமுகம் ஒன்றை தாருங்கள் ????

என்னைப்பற்றிய  அறிமுகம் என்றால்,   நான்  ஈழத்தைத் தாய்தேசமாகக் கொண்டவள். இப்போது ஜெர்மனியில் வசித்துக்கொண்டிருக்கிறேன்,  நாட்டின்  அமைதியின்மை மற்றும்  பாதுகாப்பற்ற சூழலால்  விரும்பாமல் வேறு வழியற்று புலம் பெயரும் நிர்ப்பந்தத்துக்கு  ஆளாக்கப்பட்ட ,.  என் நாட்டின் மீது மிகுந்த நேசம் கொண்டிருந்த, கொண்டுள்ள ஒருத்தி.  ஓரளவு உலகம் புரியத் தொடங்கிய வயதிலிருந்து, இலங்கை இலக்கியத் துறையில்  எனக்கான ஒரு இடத்தை  ஏற்படுத்திவிடவேண்டும் என்ற ஆர்வத்தில்  செயற்பட்டுக் கொண்டிருந்தேன் ., வடபகுதி நிலைமைகள் உயிருக்கு உத்தரவாதம் தராத காலத்தில், தலைநகருக்குப் பெயர்ந்தேன்.  அங்கு தான் எழுதுவதற்கான வாய்ப்பு அதிகம் ஏற்பட்டது   பத்திரிகைகள் , வானொலி  என ஓரளவு  என் பெயரை அடையாளப்படுத்தி வரும் காலத்தில், தலைநகரில் தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கைச் சேர்ந்தோரின் பாதுகாப்பு நிலைமை சீரற்று எந்த நேரத்திலும் நாம் காரணமற்றுக் கைது செய்யப்படலாம்  என்ற நிலையில்  இருந்த காலத்தில்  இலக்கியம்,  அது பற்றிய கனவுகள் எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு புலம்பெயர்ந்தவள். பின் சிறு இடைவெளிக்குப் பின் எனக்குள் உறங்கிக் கிடந்த எழுத்தார்வத்தை தட்டியெழுப்பிப் பற்றிக் கொண்டேன். .


இலங்கை தமிழ் இலக்கிய துறையில் தங்களின் பங்களிப்பு ?
நான் வாழும் காலத்தில்  என்னோடு பயணிக்கும் இந்தச் சமூகம் பற்றி, சிறுகதை , நாவல், கட்டுரைகள், கவிதைகள் என்ற ரீதியில் எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதியவைகளை  விட எழுத வேண்டியவை திட்டமிட்டிருப்பவை அதிகம் உண்டு. காலம் அனுமதிக்கிறதா பார்க்கலாம்.

இளையோருக்கும் இலக்கிய துறைக்கும் இடையிலான உறவு (வாசிப்பது , கருத்து) தொடர்பில் ?

தற்கால இளையோருக்கும் இலக்கியத்துறைக்குமான உறவு  அத்தனை தூரம் சிறப்பாக உள்ளதாக நான் எண்ணவில்லை.  சொற்ப  தொகையினரிடமே   இப்போது வாசிப்புப்பழக்கம் உள்ளதாக  உணர்கிறேன். ஒரு விதமான அவசரகதியில் இயங்கிக்கொண்டிருக்கும் இவர்களிடம், வாசிப்பு,  அதுபற்றிய கருத்துப் பகிர்வு  போன்றவற்றுக்கான பொறுமை அமைதி இல்லாதது போலவே தோன்றுகிறது. அத்துடன் , நான் வாழும் தேசத்திலிருந்து என் தாய்நாட்டை ஒப்பிட்டுப் பார்க்கும் போது  கல்விக்கூடங்கள் மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தினை ஏற்படுத்துவதற்கான  காத்திரமான முயற்சிகள் எதனையும் பெரியளவில் எடுப்பதாக அறிய முடியவில்லை.. அத்துடன்  சேணம் கட்டிய பந்தயக் குதிரை மாதிரி,  பாடத்திட்டம் பரீட்சை வெற்றி , குறிவைத்த உயர் உத்தியோகமாக எம் மக்களால் பார்க்கப்படும் தொழில்  நோக்கிய ஓட்டம்   என்பன தாண்டி  மாணவர்களோ பெற்றோரோ  பாடசாலைகளோ சிந்திப்பதும் ஊக்குவிப்பதும் குறைவாகவே இருக்கிறது , இளையவர்கள்   அல்லது மாணவர்கள் தாம் சுயமாக முயன்றாலொழிய  அதற்காக வழி காட்டப்படுதல் இல்லை எனும் போது , ஈடுபடுவோரும்  குறைவாகவே காணப்படும் நிலையே உள்ளது .   வாசிப்பு என்பது இது தான் , இதைத்தான் என்றில்லாமல் பரந்துபட்ட விதமாக அமையும் போது தான் உலகை அறிய முடியும். அந்த ரீதியில் மிகக் குறுகிய தொகையினரே உள்ளதாக எண்ணுகிறேன்.   தொழில் நுட்பத்தின் அபார வளர்ச்சியினால் , ஒரு விரல் சொடுக்கில் நமக்கு வேண்டிய தகவல்களை  உடனுக்குடன் பெற்றுக் கொள்ளும் காலப்பகுதியில் நாம் வாழ்ந்தாலும்  ஆழவாசிப்பு  என்பது  நமக்குள் கேள்விகளை எழுப்பி  சிந்திக்கவைத்து பதில் தேடிப் பண்படுத்தும்.  அத்தன்மை  அருகிவருவதாக உணர்கிறேன்

தமிழ் இலக்கிய துறையில் பெண்களின் பங்களிப்பு தொடர்பில் தங்கள் நிலைப்பாடு ??

எனது பார்வையில் கனதியாக உள்ளது எனக் கூற முடியாது.  ஆனால் போர்க்காலத்தின் பின்  ஈடுபாடும் பங்களிப்பும் அதிகரித்திருக்கின்றது என்பது மறுக்க முடியாது.. குறிப்பாக போர்க்காலங்களில் வெளிவந்த போரிலக்கியங்களில்  பெண்களின் பங்களிப்பு  அதிகரித்திருந்ததுடன் காத்திரமானதாக இருந்தது என்பதும் மறுப்பதற்கில்லை.  பொதுவாக  பலர்  இத்துறையில் நுழைந்தாலும்,  அதைத் தொடர்வதில்  ஆர்வம் காட்டுவதில்லை, அல்லது  வாழ்க்கைச் சூழலில்  அவர்களுடைய எழுத்துத் திறமை மழுங்கடிக்கப் படுகிறது.  அதையும் தாண்டியும் தொடர்வோரில்  சிலராலேயே  சமூகத்தை  ஆழமாக நோக்க முடிகிறது.  தாம் சார்  சமூகத்தை வெளிப்படையாக உடைத்து எழுத முடிகிறது.  அந்த வகையில் இசுலாமிய சமூகத்திலிருந்து பெண்களின் பங்களிப்பு   அதிகரித்தும் , சமூகத்தை எதிர்கொள்ளும் தென்போடும் வெளிவரத் தொடங்கியிருக்கிறது.  இப்படியான  மயக்கமற்ற எழுத்துக்களால்  ஆன , சமூகத்தை நேரப்படப் பேசும் பங்களிப்புக்கள்  எல்லாத்தரப்பினரிடத்திலும் ஊக்குவிக்கப் படவேண்டும்
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது ??

அதிகளவானோர்  முயல்கிறார்கள்.  ஆனால்  ஆழமாக இல்லை.  வெறுமனே காதலையும் , இயற்கையையும் பாடுவோர்  தான் அதிகமாக உள்ளார்கள்.  நான் அவதானித்தவரை  ஏனைய நாடுகளில் பொழுதுபோக்கப் பேனா எடுத்தவர்களை விட,  குறிக்கோளுடன் எடுத்தவர்கள்  அதிகம்,  ஆகவே அவர்கள் எழுத்தில்  மையம் வரை சென்று பிரச்சனைகளை  உணர்வுகளை உடைத்து வெளிக்காட்டும் தன்மை அதிகமாக இருக்கிறது.  இலங்கைத் தமிழ்  இலக்கியத்துறையில் ஈடுபடும் மிகச் சொற்பமானோர் தவிர மற்றவர்களிடம்  ஆழம் செல்லாது  மேலோட்டமாக நகர்ந்து கொண்டு விமர்சனங்கள் மற்றும் பொதுப்பார்வையில் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வே தெரிகிறது.





இலங்கை தமிழ் இலக்கியம் கண்டுகொள்ளாத விடயங்கள் எவையேனும் இருப்பின் அது தொடர்பிலும் , தமிழ் இலக்கியத்தின் ஊடாக சொல்லப்பட வேண்டியவைகள் தொடர்பில் உங்கள் கருத்து ? அவை இந்த சமூகத்திற்கு சொல்லப்பட வேண்டிய அவசியம் என்ன ??
கண்டுகொள்ளாத விடயங்கள் பல உண்டு.  உள்ளே அனுபவித்தாலும்  வெளிப்படையாக ஒத்துக்கொள்ள பல பெண்களே தயங்கும் நிலையில் தான் இன்னும் எங்கள் பெண்கள் மீதான அடக்குமுறைகள், அவர்களின் நியாயமான  அபிலாசைகள்   இருக்கின்றன.  அவள் கட்டுகள் தளர்த்தி வெளியே வர  ஆண்களை விட பெண்களே  அதிகளவில் எதிரிகளாக உள்ளார்கள்.  குடும்பங்களுக்குள் குழந்தைகள் மீது பிரயோகிக்கப்படும்  பாலியல் துஸ்பிரயோகங்கள்,   புலப்பெயர்வுக்குப் பின்னான பண ரீதியாக  மிகவும் ஏற்றத் தாழ்வு கொண்ட  சமுதாய அமைப்பு,   முப்பது  வருடங்களாக மெல்ல அருகிச்சென்று  இப்போது  வீச்சமாக வளரவைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிரதேச,  சாதிய , மற்றும் சமய ரீதியான  வேறுபாடுகள் , அவை விளைவிக்கப்போகும்  அவல நிலை.  மற்றும் இனங்களுக்கிடையேயான  அடிப்படைப் புரிதல்,  இவை எல்லாமே சொல்லப்படவேண்டியதாக எண்ணுகிறேன்.   அவை சொல்லப்படுவதற்கான  அவசியம்  என்றால்,  ஒரு மரமானால்  கூட அது மேல்நோக்கி சடைத்து வளர்ந்து  தான் வேர்களை  ஆழ ஊன்றிக் கொள்வதே  அது சார் மனிதர்களின் விருப்பும் நோக்குமாக இருக்கும் பட்சத்தில்  தான் சார் சமூகம்  தன்னில் புரையோடிக்கிடக்கும்   பலவிதமான தேவையற்ற  ஒட்டுண்ணிகளை க்  களைந்து ஒரு புரிதலுக்குள் வரும் போது தான்  அதுவும் உயரிய நிலையை அடையும் என நம்புகிறேன் .
.ஈழத்தமிழிலக்கியம் இன்று பலபரிணாமங்களை எடுத்திருந்தாலும், அது இன்னும் பயணிப்பதற்கான தூரமும், செய்யவேண்டிய கடமைகளும் அதிகமாகவேயுள்ளது. பல்வேறுகாலகட்டங்களில் அது சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளைப் பேசியிருந்தாலும் இன்று மிகவும் முக்கியமானதோர் திருப்பத்தில் வந்து நிற்கிறது.
கடந்த எழுபதாண்டுகளில் இலங்கைத்தீவில் அரசியலுரிமைகள் தொடர்பாக  ஈரினங்களுக்கிடையே நிலவிவரும் பகைமை பற்றி ஈழத்திலக்கியம் பேசிவந்திருந்தாலும் அதனை முழுமையான முறையில் இதுவரையில் பதிவுசெய்யப்படவில்லை. ஓரினத்தின் அரசியலுரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அவ்வினம் எதிர்கொண்ட நெருக்கடிகள், அடக்குமுறைகள், உயிர், உடமையிழப்புகள், சொந்த  நாட்டிற்குள்ளேயும்,  தாய்நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளிலும் அகதிகளாகி வாழ்ந்துவரும் அவலநிலை, இதனால் பொருளாதார, கலாசார, பண்பாடுகளில் எதிர்கொள்ளும் மாற்றங்கள் சிக்கல்கள், சரியான முறையில் பதியப்படவோ பேசப்படவோ இல்லை.
எழுத்துகள், இலக்கியங்கள் மூலம் ஒரு சமூகத்தின் அறியப்படாத விடயங்களை அறியமுடியுமென்பதுடன், பரஸ்பரம் உறவுகள், நல்லிணக்கம், நெருக்கம் என்பவைகளையும் ஏற்படுத்த முடியும்.
இங்கே நாம் இதற்கான முயற்சிகளை இன்னமும் பெருமளவில் ஈடுபடவில்லையென்பது மனத்தாங்கலானதோர் விடயம். சிங்கள இலக்கியமும் கூட இம் முரண்பாடுகளை சரிவரப் பதிந்திருக்கிறார்களா என்பதும், இணக்கத்திற்கான முயற்சிகளை எடுத்திருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.


இவ்வாறான பொறுப்புணர்ச்சிகள் உள்ள நிலையில் இலங்கை தமிழ் இலக்கியம் எதனை நோக்கி பயணிக்கின்றது ?
என்னைக் கேட்டால்  பெரியளவில் ஆரோக்கியமாகப் பயணிக்கின்றது என்று சொல்லமாட்டேன்.  அதன் பயணத்தில்  பொறுப்புப் பற்றி ஆராயும் இந்த நோக்கு  பெரியளவில் இல்லை.  பல  சுயதம்பட்டங்களும், இனங்களுக்குள் சொந்த சமூகத்துக்குள் பிரிவினைவாதத்தை  ஏற்படுத்தும், தூரநோக்குச் சிந்தனையை  மழுங்கடிக்கும் ஏதோ ஒரு தூண்டல்  பலரின் எழுத்தில்  வெளிப்படுவதாக  உணர்கிறேன்.  மீதி ஒரு பகுதி  ஒரு கனவு நிலை மயக்கத்துக்குள் தொலைந்து கொண்டு மேலோட்டமாக எதையோ  எழுதுகிறார்கள்.  மிகச் சொற்ப எழுத்தாளர்களே  சமூகப் பொறுப்போடு எழுதுவதாக உணர்கிறேன்.

எழுத்தாளரின் கடமை , பொறுப்பு என்னவென தாங்கள் நினைக்கிறீர்கள் ?
பொறுப்புள்ள எழுத்தாளரின்  கடமை  உள்ளதை  உள்ளபடி காலத்தின் நகலாகப்  பிரதிபலித்தல்.  வாசகர்  எழுத்துக்குள் தம்மை இறக்கி  உணர்ந்து  தெளியும் தன்மை எழுத்துக்கு இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.  புனைவு இலக்கியங்களில்  கூட நடைமுறையில் சாத்தியமில்லாத  கனவு மயக்கத்துக்குள் சமுதாயத்தைக் கிறங்கிக் கிடக்கவைப்பதை  நான் விரும்புவதில்லை.

பல எழுத்தாளர்கள்  வருடத்திற்கு ஒரு புத்தகம் வெளியிடுவது தொடர்பில் கவனம் செலுத்தும் அவர்கள் , அதன் உள்ளடக்கம் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதில்லை எனும் குற்றசாட்டு தொடர்பில் ???
இந்தக் குற்றச் சாட்டுக்குள் எல்லோரும் அடங்குவர் எனக் கூறமுடியாது.  ஆனாலும் அதில் ஓரளவு  உண்மையும் உண்டு என நினைக்கிறேன்.  மற்றும்  பிரபலங்களினதும்  ஊடகங்களினதும் கவனிப்புக்குத் தம்மை  ஆளாக்கி, தமக்கான ஒரு முகவரியை  இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு படைக்கும் படைப்பாளிகளின்  நூல்களில்  கூட  நீங்கள் மேலே குறிப்பிட்டது போல உள்ளடக்கத்தில் வெறுமைத் தன்மை  இருக்கவே தான் செய்கிறது.  ஒருவேளை நான் படைப்பது  எல்லாமே தரம் வாய்ந்த இலக்கியம் எனும் அதீத தன்னம்பிக்கை  அதற்குக் காரணமாக இருக்கலாம் .
இலங்கை தமிழ் இலக்கியத்துறையை பொறுத்த வரையில் பக்கசார்பாக ஒரு தரப்புக்கு சார்பாக எழுதுகின்றார்கள் எனும் குற்றசாட்டு உண்டு  அல்லது அவர்கள் எழுதியதை வாசகர்கள் ஒரு தரப்பு சார்பாகவே பிரித்து பார்க்கின்றனர் ?
நீங்கள் போரியல் சார்பான  நூல்களின் அடிப்படையில் இக்கேள்வியைக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன்.   நீங்கள் மேற்குறிப்பிடும் இரண்டும் உள்ளதாகவே உணர்கிறேன்.   இதைத்தான்  மேலே நீங்கள்  கேட்ட வினாவிலும் தொட்டுக் காட்டினேன். தம் சுயஆதாயங்களை ,  சுய விரோதங்களை மனதில் வைத்து, தம் சார் பக்கத்தரப்பு வாசகர்களைத் திருப்திப்படுத்தும்  விதமே படைக்கப் படுகிறது.  மேலும் அதற்குள்  நடைமுறையில் சம்பவித்திராத, சாத்தியமற்ற  சம்பவங்களையும்   தம் உளப்பாங்குக்கு ஏற்ப   பக்கச் சார்பாகப் படைக்கப்படும் படைப்புகளை  எப்படி  இலக்கியம் என்ற வகைக்குள்  அடக்க முடியும்.  இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி., அந்தக் கண்ணாடியில் பல படைப்புகளில்  பல இடங்களில் காலம் பிரதிபலிக்கவில்லை.  பல இடங்களில் அதன் இரசம் அழிக்கப் பட்டே படைக்கப் படுகிறது.   மற்றும் , வெறுமனே போர் நடந்தது,  அதில் இவை இவை எல்லாம் நடந்தன  என்று  உண்மைகளோடும் ஊகங்களோடும் எத்தனை  காலத்துக்கு எழுதுவது.  எதனால்  நிகழ்ந்தது,  இனியும்  நிகழாதிருக்க என்னவெல்லாம் செய்யலாம்,  தொடர்ந்தும்  கொதிநிலை பதட்டச் சூழலில்  இந்த மண்ணின்  மக்களை  வைத்திருப்பதால் ஏற்படப்போகும் பின்விளைவுகள்  என்ன என்ற ரீதியில்  சிந்திக்காது  தொடர்ந்தும் வெளிவரும் போரியல் புனைவு  நூல்கள்  இலக்கியம் என்ற வகைக்குள் அடக்க முடியுமா  என்பது  எனக்குச் சற்றுக் குழப்பம் . இப்படியானவை வெளிவரும் வரை மக்கள் தத்தமக்கு வாகான வகையில் பிரித்துப் பார்ப்பதும் தவிர்க்க முடியாது.