Sunday, January 29, 2017

தூரங்களால் பிரிவதில்லை




"ஏண்டி   வானரம்   ரோட்டால  போனால்   அக்கம்  பக்கத்தில  யாரெவர்   நிக்கினம்  எண்டு   திரும்பிப்   பார்க்க  மாட்டியா?"
  சட்டென்று  அந்தக்  குரல்  மனதை  இழுத்து   முகத்தை  மலர்த்தியது.  ஆனாலும்   அவன்    கூப்பிட்ட  விதத்தில்  செல்லமாய்  ஒரு  வீம்பு.  கவனிக்காத   மாதிரி  நேரே  பார்த்துக்  கொண்டு  சைக்கிளை  ஓட,  
"வைச்சிருக்கிறதே  சைக்கிள்   எண்ட  பெயரில  நாலு  தகரக்  குழாயும் அரை உயிரோட  ரெண்டு  சில்லும்.   அதையும்  உள்ள பள்ளம்  புட்டி  எல்லாம்  விழுத்தி  எழுப்பி  அங்க  இஞ்ச  கோணல்  மாணலா   நெளிஞ்சு  கிடக்கு   அதில   ஏறீட்டால் போதும்   ஜான்சி  ராணி   குதிரையில  வாற  நினைப்பு  சீமாட்டிக்கு .    பாரன்  ஆளை."
   அவளை   சொன்னால்  கோபம் வராது அவளுக்கு .   அவளின்  உயிர்  வாகனத்தை   சொன்னால்  சும்மா விடலாமோ  படார்   என்று   சைக்கிளால  இறங்கி   வழமை  போல  ஸ்டான்ட்   போடுற  நேரத்துக்குள்ள  கோபம்  ஆறிப்  போயிடும்   என்ற   பயத்தில  சட்டென்று  சைக்கிளை  கீழே  போட்டு  விட்டு   சண்டை  போடலாம்  என்று  வீராவேசமா  நடந்து  போனால்,   கிட்டப்  போகும்  போதே   அந்த  முகத்தின்  புன்னகையில்  கோபம்  எட்டுக்கால்  பாய்ச்சலில்  எங்கேயோ  ஓடிப் போய் பாழாய்  போன  பாசம்  வந்து  ஒட்டிக்  கொள்ள 
 "எப்படா   வந்தனி " என்றாள்    
"விடிய  தான்.  ஆறரைக்கு   பஸ்  வந்தது".   என்றான்.
போகும்  போது  இருந்ததை  விட   இன்னும்  செழித்து  நிறத்திருந்தான்.   சும்மாவே  கொஞ்சம்  ஜொலிப்பான   முகமும்  நிறமும் ,  அவன்  சிரிக்கும்  போ து  ஆரோக்கியமான  கண்களின்   கள்ளமில்லாத  ஒளிர்வில் ,  சிகரற்   படாத  உதடுகளின்     ரோஸ்  நிற  ஈறுகளுடன்   ஒழுங்கான  பல்வரிசையில் ,   நெற்றியில்   சாய்ந்து  விழும்  கரு கரு  நெளி  முடியில்  அவன்  அம்மாவின்  கவனிப்பு , அப்பாவின்  அன்பான  கண்டிப்பு  அவனின்   ஒழுங்கு  விலகாத  ஒழுக்கம்  எல்லாமே  அடையாளப்பட்டு  இருக்கும்.  

"மூன்று    மாதம்  இருக்குமாடி   நான்  போய்"
"இல்லை  சுரேஷினி   அக்காவின்ர   கல்யாணத்துக்கு   தான்   கடைசியா  வந்தனி   அப்பிடிப் பார்த்தால்  இப்ப  ரெண்டு  மாதம்." 
"ஓ........ரெண்டு  மாதத்தில  மகாராணி    கொஞ்சம்   மாறின  மாதிரி   இருக்கே "
வழமை  போல  கொதி  ஏத்தத்  தொடங்கிட்டான்   அடங்கு  அடங்கு  எண்டு   மனம்  சொன்னாலும்  கண்ணில  கோபம்  எட்டித்  தான்  பார்த்தது அவளுக்கு. 
"முகத்தில  கொஞ்சம்  அமைதி   வந்த மாதிரி   இருக்கு , பெரிய  மனுஷி  மாதிரி உனக்குக் கூட   கொஞ்சம்   நிதானம்  பொறுப்பு   வந்திட்டுதோ ?"  
திரும்பவும்  எய்து  பார்த்தான்   மனதின்  ஏதாவது  ஒரு  பகுதியில்  குத்தி  சண்டை  ஆரம்பிக்கட்டும்  என்று.   பொறுமை  பொறுமை  மனம்  உருப் போட்டது.  எப்பவும்  மாதிரி   குலைக்கிற   உனக்கு   கோள்  தந்து   நானும்  எல்லாரிட்டையும்  கல்  ஏறி  வாங்கிறதில்லை   என்று  திடமா  இருந்தது  மனம். 

"என்ன  கொஞ்சம்  நிறத்து   முகம்  எல்லாம்   மினு  மினு   எண்டு  இருக்கிற மாஆஆஆ திரி  இருக்கு.    என்னாச்சுடி.    பொம்பிளைப்  பிள்ளையா   மாறீட்டியா.  அதுகளை  போல  அடக்க  ஒடுக்கமா    பூ சி  மினுக்கி  அழகா     இருக்க  வேணும்   எண்டு  ஞானோதயம்   வந்திட்டுதாடி செல்லம் "  என்று  இன்னும்  அக்கறையா  கேட்டான். 
அங்கே   தான் அவளுக்கு  ஐடியா   உருவாகி  சனியன்   அவனது  முகத்தில்  ஏறக்  காத்திருந்தான்.  என்பது   அவனுக்குப் புரிந்திராது.
"நான்  இப்ப   பயறும்,  கஸ்தூரி மஞ்சளும்,  பாலாடையும்,  வேப்பிலையும்,  மாதுளை  இலையும் , அரைச்சு  பாலில   குழைச்சு   ராவும்  பகலும்   பூசுறனான்.  சோப்  கிரீம்  பவுடர்  ஒண்டும்  தொடுறது கூட   இல்லை   அது  தான்." 
"உண்மையாவே  நல்லா   இருக்குடி     தொடர்ந்து  பூசு."  அக்கறையாகத்   தான்  சொன்னான். 
"உனக்கும்  வேணுமா ?" 
"நான்  boy   டி  குரங்கு. "
"boy  எண்டால்  பூசக்  கூடாதா?"  
"சிரிப்பினம்  டீ  குரங்கு "
"உங்கட  வீட்டில   யாரு  சிரிக்கிற.  உன்  அம்மா  அப்பாவா.?" 
"ம்.  அதோட  பக்கத்தில  மதிலால   மீரா  கண்டால்  ஊரெல்லாம்  சொல்லிப்  போடுவாள்.  அதோட  அம்மா  பின்னேரம்  போய்  பெரியம்மா  வீட்டுப்  படியில  இருந்து  கதா காலோட்ஷேபம்  மாதிரி  சொல்லுவா  பெரியம்மாவும்   சின்னம்மாவும்  மிச்சமில்லாமல்   எல்லா  சகோதரங்களுக்கும்   சொல்லுங்கள்டீ.  அண்ணாமார்   பெட்டையாடா  நீ  எண்டு  பேசுவாங்கள் "
"நீ  யாருக்கும்  தெரியாமல்   இரவு  படுக்கும்  போது  பூசேன்டா.  விடிய  எல்லாரும்  எழும்ப  முதலே   எழும்பிக்  கழுவு.  நீ  இங்க  நிக்கிற  இந்த   ஒரு  கிழமையும்  பூசு.  திரும்ப  பேராதெனிய  போறதுக்குள்ள    இன்னும்   நிறத்து   மினுமினுப்பா   ஆகீடுவாய்."
"நீயே  ஐடியாவும் தந்திட்டு  வழமை  போல மாட்டியும்  விட  மாட்டியே?"
"இல்லைடா எருமை  எல்லாத்திலுமா  நான்  விளையாடுவன்.  என்னை  நம்பினால்  பூசு  இல்லாட்டி  விடன்  எனக்கென்ன.  ஏதோ முகத்துக்கு குளிர்ச்சியாக  இருக்கும்  என்று  சொல்லவந்தன் "
"அதுக்குள்ளே  கோவிக்காதடி குரங்கு "
"டேய்.  இன்னொண்டும்  மறக்காதே . போறதுக்குள்ள   கங்கா   அக்காவிட்டை   உன்ர  கண்டறியாத  காதலை  சொல்லு  என்ன .  சொல்லும்  போது   ஹீரோ   மாதிரி   இருக்க வேணும்  டா  நீ  .  அவவை  சந்திக்கப் போகும் போது நீயா  டிரஸ்  எதுவும்  செலக்ட் பண்ணாதே.  எல்லாம்  நான்  சொல்லுறது மாதிரி  செய்.  அந்த black jeans and   light  blue shirt  போடு.  மறக்காமல்   டெனிம்  பெர்பியூம்  ஸ்ப்ரே   பண்ணு.  அதில்   ஒரு  மயக்கும்  வாசம்  இருக்கு .     தலை  முடியை   கொஞ்சமா   மேவி  இழு  அப்ப  தான்  முகம்  உனக்கு   பளீர்  என்று  இருக்கும். தோலோட   ஒட்டின  மாதிரி  தாடிய  ட்ரிம் பண்ணு......"

   சொல்லிக் கொண்டே  போக    அவனுக்குக்  கண்களில்  ஆசை  கனவுகளோடு   எட்டிப்  பார்ப்பதை  காண  உள்ளிருந்த  குட்டிச்  சாத்தான்  கை  கொட்டி  சிரித்தான்    மாட்டீட்டுது    பறவை  என்று.  

"அது  சரி   எண்டா   இன்னும்  சொல்லலை   நீ ?"
"நீ   சின்னப்பிள்ளை   இதெல்லாம்   கதைக்கக்  கூடாது  வாய்  பொத்து."   இருந்தாற் போல் அண்ணனாகி  மிரட்டினான்.
"அப்ப  சின்னப்பிள்ளைக்கு  வந்து   நீங்கள்  உங்கட  காதல் கதை     சொல்லலாமோ?"
"உன்னளவுக்கு    யாரும்  எனக்கு  கம்படபிலா   இல்லடி. மனதில  உள்ளது   எல்லாம்  சொல்ல.   சண்டை  பிடிக்க,  எனக்கு  உன்னை  விட்டா   யாரோடும்   அவ்வளவா   ஒத்துக் கொள்ளாதுடி.  என்ன  ஒன்று   ஒரே  வயிற்றில்   பிறக்கலை   என்ற   குறை.  அதுவும்  ஊருக்காக.  மற்றப்படி  நீதாண்டி   கண்ணம்மா   எனக்கு  அண்ணா  அக்கா   தம்பி   தங்கை  எல்லாமே."
  வார்த்தைகளின்   உண்மையை   அப்பாவி  முகம்  உணர்த்தியது. .
"உன்னோட   கூடப்பிறந்து   24 மணி  நேரமும்  நான்  உன்னோட கூடவே   இருந்திருந்தால்   ஒன்றில்  நீ  என்னை  கொன்றிருப்பாய்  அல்லது  நான்  உன்னை   கொன்றிருப்பேன்  அதை  விடு.   ஏண்டா   மண்டு  இன்னும்   சொல்லாமல்  இருக்கிறாய்?" 
 
"இல்லடி  மறுத்திட்டா   கஸ்ரமாகியிடும்  மூண்டு  வருசக்  காத்திருப்பு தோற்றுப் போனால்   தனியா  தாங்க  மாட்டேன்டி.   அது  தான்  இந்த  லீவில்  வரேக்க   சொல்லலாம்  எண்டு  காத்திருந்தன்."  

" இப்ப  மறுத்தால்  தாங்குவியாடா?"  

"மறுத்தாலும்   இங்க  அம்மா  அப்பா  நீ  மீரா   ப்ரியா   பெரியம்மா  சின்னம்மா   என்று  என்னுடைய    எல்லாரும்   கூட  இருக்கும்  போது  ஓரளவு  தேற்றிக் கொண்டு  விடுவன்      அதிலும்  நீ  என்னோட  வலியக்கொழுவி    சண்டை  போட்டே       என்னை  சோர்ந்து  போக  விடாமல்   பார்த்துக் கொள்வாய்."
 
அவனது  அப்பாவித்தனம்   பாவமாக  இருந்தாலும்  எப்போதும்  அண்ணன்  தங்கைக்கு   இடையில்  ஒத்து  வராத   ஜாதகம்  என்ன  செய்வது.

"ஒண்டு  செய்யிறியாடி  .   கங்காவோட  கதைச்சு   சர்ச்  கு   கூட்டி  வாறியா?  அங்க  வைச்சு   சொல்லுறன்.  நீங்கள்  மூண்டு பேரும்  ஒழுங்கான   தங்கச்சிமாரா  இதிலாவது  உதவுங்கோ   நீ  நல்ல  நெருக்கம்   தானே  கங்காவோட."

"அதெல்லாம்   செய்யலாம்.  உன்ர  கல்யாணத்துக்கு   எங்கள்  மூண்டு  பேருக்கும்  முத்து  மோதிரம்   போடுவியா  நீ அதை சொல்லு  முதலில"
"வந்து  பிறந்திட்டன்  செய்து  துலைக்கிறன்"  கொஞ்சம் பொய்க் கோபத்தில்  சொன்னான்.  
"கங்கா   அக்காவிட்ட  என்னடா   சொல்லிக் கூட்டி  வர.  ஹிரஞ்சன்  உங்களை  லவ்   பண்ணுறான்   அதை  உங்களிட்ட  தன்ர   வாயால  சொல்ல வேணுமாம். சர்ச்   கு   வாங்கோ  எண்டோ ?"

  வேணுமெண்டே அவள்  சத்தமா  சொல்ல  அவன்  தடுமாறி  வெருண்டு   அவளின்   வாயப்  பொத்திறதுக்குப்  பதில் அவசரத்தில்   தன்ர  வாயை தன்ர   கையால பொத்திக்  கொண்டு

"கத்தாதடி  குரங்கு  அம்மா  நிக்கிறா"   என்றான்.  பின்

" உன்னை  விட்டால்  யாரிட்டை  நான்  இப்படி  உரிமையா  வெளிப்படையா  கேக்க  முடியும்  சொல்லு"  என்று  ஒரு  வாளி  ஐஸ்  கிரீம்  அள்ளி  வழமை  போல   தலையில்   கொட்டினான். 
"காரியம்   ஆகவேணும்  என்றால்  குளிரக் குளிரக்  கொஞ்சிப் போட்டு,  காரியம்  முடிஞ்சதும் காலகாலமாய்   துரத்தி  அடிக்கிற  உனக்கு  வைக்கிறேன்  பாருடா   வேட்டு" என்று அவளுக்கு   மனதுக்குள்   குட்டிச்  சாத்தான்  குமுறியது. 
"உனக்கு  நான்  செய்யாமல்  வேறே  யார்  செய்யிறது  சொல்லு   நான்  நாளைக்கே  கூட்டி  வரவா டா?" 
"என்ர செல்லம் கூட்டி  வாறியா டீ  என் நித்திலம் "
"அது என்ன புதிசா இண்டைக்கு நித்திலம்?"
"என்  முத்தே என்று சொல்லவந்தேண்டி கண்ணம்மா"
"ஓ.. அதுவா  சொல்லு  சொல்லு. குடுத்த  வாக்கை    நிறைவேற்றுவேன்   நம்புடா  சகோதரா. ஆனால்  நீ முத்தே  என்று கொஞ்சிப்போட்டு  முத்து மோதிரத்தில கழிச்சு விடக்கூடாது "  
அவனின்  முகம் இளகியது. 

"அதுக்கு  முதல்   உன்ர  முகத்தை   பிரெஷ்  ஆக்கு .  நான்  அது  அரைச்சு  தரட்டுமா  பூசுறியா? ஒரு  நாளிலேயே   பலன்  தெரியும்  டா."  
அவனுக்கு  காதல்  கண்ணை  மறைச்சு  பளபளப்பான ஆசைகளைக்  கிளப்ப,
"ஒவ்வொரு  நாளும்  எப்படி  டீ  நீ  வருவியா  அரைச்சுத்  தர?"  என்றான் .   
"நான்  ஒவ்விரு  நாளும்  வர  மாட்டேன். அங்க வீட்டில  நடக்கிற பஞ்சாயத்துக்கு பதில் சொல்ல  ஏலாதுடா .  பக்கத்தில்   மீராவிட்டை  கேள்.  அல்லது  நான்  சொல்லிப்போட்டுப்  போறன்.  இல்லாட்டி   ப்ரியாட்டை  கேளேன்  அவள்  வீட்டிலை  தானே  மருதோண்டி நிக்குது  செய்து  கொண்டு  வந்து  தருவாள் " 

"அம்மா  என்ன  எண்டு  கேப்பாடீ."  
"அம்மாவுக்கு  முன்னாலா  இதெல்லாம்    கொண்டு  வந்து  தருவாள்  மொக்கா. அம்மாமாரை  அவையவையின்ர  எல்லையில மதிப்பா ஒரு  சிம்மாசனம் போட்டு உட்கார்த்தி வைச்சுப் போட்டு 
அடிக்கடி  பூத்தூவி  சாமரம்  வீசிப்போட்டு இதெல்லாம்  ரகசியமா   தான்  செய்ய வேணும் மொக்கா "
அதற்குள்
" பிள்ளையள் உள்ளே  வாங்கோவன்    ரோட்டில  என்ன  குசு குசுப்பு"  என்று  அவனின்  அம்மாவின்    அழைப்பு  மணி. 
"இல்லை  நான்  போகணும்  பிரியாவிட்ட   வந்தேன்  பெரியம்மா.  இவன்  இடையில  மறிச்சிட்டான்." 
"அங்க  போனால்  இஞ்ச  வரக்கூடாது   வாசலில  நிக்கவேணும்  எண்டு  சொல்லி  விட்டவவே  கொம்மா. "  
"ஓம்   அந்த   நந்தி   தேவர்   சந்நிதியை  வணங்கிப் போட்டுத்  தான்  இங்க  பிரகாரத்துக்குள்ள  கால் வைக்க   வேணும்  அதுக்கு  முன்ன  யாரும்  மறிச்சால்  வாசலில  நில் ஜென்மக் குற்றமாகிவிடும் என்று  சொன்னவ,."  

"பிள்ளையளா  இதுகள்.  பெத்ததும்  அரைகுறை  தேடி எடுத்ததும்   தறுதலை "  வழமையான  ஆலாபனை தொடங்கியது.  
"இது   முடிய  நேரம்  எடுக்கும்  அதுக்குள் உள்ளே   வந்து  அரைச்சு  தாடி". 
"இல்லைடா  நான்  பிரியா  வீட்டில  அரைச்சு வந்து தாறன்அங்கே  தானே  மருதோண்டி இருக்கு  " 
"ஏன்  அம்மாவோட  உனக்கு  ஏதும்  கோபமா?" 
"போடா  உன்ர  அம்மாவில  என்ன  கோபம்.  உன்னை  போல  அதுவும்  ஒரு  லூசு  மனிசி "   அவனுக்கு  கோபம்  மூக்கில  ஏற,  அவள்  சைக்கிளில்   ஏறி   அவனது   தலையில்   'ணங்'  என்று   ஒரு  குட்டு  வைத்து  விட்டு பறந்து ,



பிரியா  வீட்டுக்குள்  நுழைந்து   சைக்கிளை   படார்   என்று   அப்படியே  போட்டு  விட்டு   அந்த பழைய கால ஐந்து கட்டு  உயர  வீட்டின்   எட்டுப்  படிகளையும்  இரண்டு  தாவலில்   தாவி  ஓடி  ப்ரியாவை   இழுத்துக்  கொண்டு  போய் கிணத்தடியில்  வைத்து   இரகசியம்  சொன்ன   போது,  பிரியாவின்  அம்மா  வழமை  போல  ராமாயணத்து  கூனி   போல  பார்த்தா.

  ப்ரியாவும்   அவளும்   அடிவளவுக்குள் போய்  மருதோண்டி  இல்லை  ஆயத் தொடங்க   பிரியாவின்  அம்மா   சந்தேகமா  கண்ணைக் குறுக்கி குறுக்கி   ஒரு  கூனிப் பார்வை  பார்த்துப் போட்டு,  பிறகு  அப்பாவிட்ட  போய்

"முதல்   சின்ன  வானரம்   அவசரமா   ஓடி  வந்ததப்பா.  பிறகு   பெரிய  வானரத்தை   இழுத்துக் கொண்டு  போய்  கிணத்தடியில   எதோ குசுகுசுத்தது.   பிறகு  ரெண்டுமா  சிரிச்சு  சிரிச்சு   மருதோண்டி  பிடுங்குதுகள்.  எனக்கெண்டா   அந்தச்  சிரிப்பு  நல்லதாப் படயில்ல.  இதுகள்  ஆருக்கோ  எதோ  செய்யப்  போகுதுகள் " என்று   ராணுவ  ரகசியம்  போல  சொன்னா.

அப்பா   வழமை  மாதிரி  வாசிச்சுக்  கொண்டிருந்த   தடிச்ச  புத்தகத்தை   மூடி மடியில் வைச்சுக் கொண்டு   இந்த  மொக்கு   அம்மாவைக்  கட்டினதுக்கு  எப்பவும்  மாதிரி இப்பவும்   பெருமூச்சு  விட்டுக்  கொண்டு   சாய்மனைக்கதிரையில்  இருந்து  நிமிர்ந்து   
"உனக்குப் பிள்ளைகளோட  ஒத்துப்  போகத்தெரியாது  அதுகள்  பூ  பிடுங்கினால்  சந்தேகம்   மருதோண்டி   பிடுங்கினால்  சந்தேகம்  கூடி  இருந்து  கதைச்சால்  சந்தேகம்  முதல்  உன்னை  திருத்து."  என்றார்   சற்று  அதட்டலாய்.

அம்மா  எப்பவும்   போல  அப்பா  பேசின  ஒரு  சின்ன  வார்த்தைக்கு   மூக்கைச் சிந்தி  சீலைத்தலைப்பில  துடைச்சுக்  கொண்டு  
"உதுகள்  பிள்ளையளா  இருந்தால்  நான்   என்  சந்தேகப்  படப்  போறன்.  குட்டிச்  சாத்தானுகள்"    என்று  புறுபுறுத்துக்  கொண்டு  குசினிக்குப்   போக ப்ரியாவின்   அண்ணாமார்  அம்மாக்கு  இன்னும்  ஏற்றி  விட்டு   அப்பாவுடன்  சண்டையை   வளர்த்து  விட்டு  இரவு அம்மாவும் அப்பாவும் முட்டிக்கொண்டு மோதும்  கூத்து  பார்க்க  ஆயத்தமாக,   

அவளும்  பிரியாவும்   மருதோன்றி   அரைக்கத்  தொடங்கியிருந்தார்கள்.  
"ஏய்   பிரியா   பயறும்   மஞ்சளும்  சேர்த்து  அரைடி   இல்லாட்டி   அவன்  சந்தேகப்  பட்டிருவான்."
"குரும்பட்டி   போடவா டி.  இன்னும்   நிறம்  வரும்."
"சரி  செய்" 
 மிக  கவனமா  மருதோன்றி   குரும்பட்டி   எல்லாம்  சேர்த்து  மசிய அரைச்சு   அதுக்கு  இன்னும்  நிறம்  வர  தேசிக்கா  புளியும்   விட்டுக் கலந்த  பிறகு  
"இது  வேறை  நிறமா  இருக்குமேடி.  நீ  பயறும்  கஸ்தூரி மஞ்சளும்  பாலாடையும்  எண்டு  தானே  சொன்னனீ.  அவன்  கெட்டிக்காரன்   கண்டு  பிடிச்சுடுவான்டி"   என்றாள். 
"ஹா.   நான்  என்ன மொக்கா .  வல்லவனுக்கு  வல்லவள்  முதலே   முன்யோசனையா   அதக்குள்ள   மாதுளை  வேப்பம் இலை  எல்லாம்  போடுறது  எண்டு  சொல்லி  வைச்சிருக்கேண்டி அதோட கொழும்பில பிறந்து பிளட்சில சிறுவயதை கழித்தவனுக்கு  இலைகளை மணந்து பார்த்து  கண்டுபிடிக்கத்  தெரியாதுடி "  என்றாள். 

அரைத்ததை எடுத்துப் போய்அவனிடம்  கொடுக்கும்  போ து   கொஞ்சம்  பாவமா தான்  இருந்தது   ஆனாலும்  வாழ்க்கை  சுவையாவது   இப்படி   கடக்கும்  சில   சம்பவங்களால்    எண்டு  அப்ப  தெரியாட்டியும்    எங்கட   அண்ணாவோட  தானே. இன்றைய நாள் போல்     நாளை  பொழுது  இப்படி   இருக்குமா  நாம்  எல்லாம்  இப்படி   சேர்ந்து  இருப்போமா  தெரியாது.  பிரிந்த பின்  அல்லது  இறந்த  பின்  சிலருக்கு  சில  நினைவுகளாவது   மிஞ்சும்  என்று  தோன்றி  இருக்கலாம்  ஏன்  என்றால்  அப்போது   பொம்பர்   குண்டு போடும்    காலம்.  சாவை  கையேடு கொண்டு  எந்தக் கணமும் வீதியில்  விழுந்து சிதறத்  தயாராக அலைந்த நாட்கள்.

கொடுத்ததை அவன்  பயபக்தியா   வாங்கிக்  கொண்டதை .  வீட்டில்  இரவு  படுத்திருகேக்க  நினைக்க  கொஞ்சம்  கவலையா  நிறைய  சிரிப்பா  இருந்தது  அவளுக்கு .  தனியா சிரித்தால்  அம்மா  என்ன  வானர  வேலை  செய்தனி  எண்டு சாமத்திலே  தொடங்குவா  அதால  தலையணைக்குள்   முகத்தை  குப்புற    வைச்சு  சிரிக்கிறது  தெரியாமல்  மூச்சடக்கி சிரித்து  அப்படியே ஓய்ந்து   நித்திரையாகி,   அடுத்தநாள்  அகாலமாய்  எழும்பும்  போதே  அவன் அதை  பூ சி  இருப்பானோ   பூசி  ஊற  விட்டிருந்தால்  இப்ப  முகம்  என்ன  நிறத்தில   இருக்கும்.  அருமை  ஆசையாய்   அவன்  வளர்த்து  வைச்சிருக்கிற கொஞ்சக் காலத்துக்கு  முன்னால  முளைத்த  மீசையும்  இந்த  முறை  புதிசா  வைச்சுக்  கொண்டு  வந்திருக்கிற  தாடியும்  கூட  நிறம்  மாறி செம்மறியாட்டின்  செம்பட்டைத  தாடி   போல  இருக்குமோ  நினைக்க  நினைக்க  சிரிப்பாய்  கொஞ்சம்  பாவமாய்  இருந்தது. 

அவன்  பூசி  நிறம்  மாறி  இருந்தால்  விடிய  எழும்பினதில  இருந்து  கொலை  வெறியில  திரிவான்   கையில  அம்பிட்டால்  சட்னி  தான்  ஆனாலும்  அந்தத்க் கோலத்தில அவனை   பார்க்க  ஆசையாகத்தான்  இருந்தது.  ஒரு மாதிரி ஆசையை  அடக்கிக்கொண்டு  மத்தியான  சாப்பாடு முடியும் வரை  காத்திருந்து  கொஞ்சம் வெயில் சரிய
"அம்மா  மீரா  வீட்டை  போகட்டா "
"நேற்று  தானே  போனனீங்கள்  இண்டைக்கு  எதுக்கு ?" 
"அப்ப  பிரியா  வீட்டை  போட்டு  வரட்டா "
"மீரா  வீட்டை  போகேக்க  பிரியாவும்  வந்திருப்பாள்  தானே    வீட்டில்  இருக்க  போரடிக்குதா? புத்தகம்  ஏதாவது  தேடி  எடுத்துத்  தரவா  வாசிக்க "

  அம்மா  நிலைமை  புரியாமல்  வழமை  போல  கதைச்சா.   இனி  மறைச்சு  பிரயோசனம்  இல்லை. 
"ஹிரஞ்சன்  அண்ணா  வந்திருக்கிறான்  அது  தான்  மீராட்ட போட்டு  அவனையும்  பார்த்திட்டு  வர. "
 அம்மா  ஒரு  மாதிரி  ஏதாவது  வில்லங்கம்  செய்யப்  போறியா  எண்ட  மாதிரி   பார்த்தா.  பிறகு   "அவன்  நல்ல  பிள்ளை  உன்னில  வைச்சிருக்கிற  பாசத்தை  வைச்சு  நெடுக  அவனோட  விளையாடாதே "  என்று  வழமையான  அட்வைஸ்  உம்  தர   நல்ல  பிள்ளை  மாதிரி 

"ஓம்  அது  தான்  அந்த  நல்ல  பிள்ளையை  பார்க்க  போகட்டா  "என்று  அம்மாவைக்  கட்டிப்பிடிச்சு  கன்னத்தில  ஒரு  முத்தமும்  வைக்க  புன்னகைச்சா.  பிறகு எனக்கு  இண்டைக்கு  நேரமில்லை   அவனுக்கு  பிடிச்ச   மோதகம்  அவிச்சுக்  கொண்டு  நான்  நாளைக்கு  வாறன்  எண்டு  பெரியம்மாவுக்கு  சொல்லு  என்றா. 

பெரியம்மா  என்பது  அம்மாவின்   நண்பி.  அவனின்  அம்மா.  இரு குடும்பங்களும் கொழும்பில் வாழ்ந்த காலத்தில்  உடன்பிறப்பிலும் நெருக்கமாக  இருந்தவர்கள். " ஓம்"  என்று  நல்ல  பிள்ளை  மாதிரி  தலையாட்டிக்கொண்டு  பாதித் தூரம்   போகவே  பயத்தில  கைகால்   நடுங்கினது. அவளுக்கு   பிடிச்சானோ  செத்தன்  இண்டைக்கு  எண்டு  நினைச்சுக்  கொண்டு நேரா  அவன்  வீட்டுப் பக்கம் போகாமல்   ஒரு  மாதிரி அவன் கண்ணில் படாமல் மறைஞ்சு  மீரா  வீடு  வரைக்கும்  போ ய்  மெதுவா மீராவிட்டை  விசாரிக்கலாம்  எண்டு  நினைச்சு  உள்ளே  போக , மீரா   அவளைக்  கண்டதுமே  வழமை  மாதிரி  கெக்கே  பிக்கே  எண்டு  விழுந்து  விழுந்து  சிரிக்கத்தொடங்க,   பக்கத்து  மதிலுக்கால   பெரியம்மா  கண்டு  போட்டு   பெரிய வெடிச்  சிரிப்பும்  அதை  விட   பெரிய  குரலில் 

"ஓடு   கொண்ணை  கண்டான்  எண்டால்  கொல்லப்போறான்"  எண்டு   சிரிக்க,  கோட்டை  முன்வாசல்  கதவை     அடிச்சுத்  திறந்த  மாதிரி   அந்தப்  பாவி  பாஞ்சு  கொண்டு  ஓடி வந்த  நிலையிலும்   உயிரை  கையில்  பிடிச்சுக்  கொண்டு  அவள் ஓடத் தொடங்க முன்    நல்ல  கவனமா  தான்  அவனைப்   பார்த்தாள் .  மருதோண்டி  நல்ல  தாராளமா  முகத்தில  மீசை  தாடியில  எல்லாம்  சாயம்  கக்கி  எதோ அறிந்திராத  உலகத்தில் இருந்து  வந்த  வித்தியாசமான   பிராணி  போல  நல்ல  விறுத்தமா    இருந்தான். 

காலையில்   இருந்து  வெளியே வராமல் வெட்கப்பட்டு  சொந்த வீட்டுக்குள் சுயசிறை  இருந்தவன்  கொலைவெறியில  வெளிவாசல்  வீடு  எல்லாம்  விட்டுத்  துரத்த   வீட்டைச்சுத்தி  ஓடி   களைத்து   வெளியே  ஓடினால்  தப்பலாம் இந்த மூஞ்சியோட  வீதியில இறங்கி துரத்த மாட்டான்  என்று நம்பி  கேற்றை  திறக்க  பாவி  அவதானமாக   முதலே  பூட்டுப் போட்டு  வைச்சிருந்ததால  கையை  ஊன்றி  பாஞ்சு  ஏறி  மதிலால  ரோட்டில  குதிக்க,   பிரியா  லூஸ்   காத்திருந்த  மாதிரி  கங்கா  அக்காவை  கூட்டிக் கொண்டு  வந்து  நிண்டுது.  சேர்ச்சில காதலைச்  சொல்ல போட்டுவைத்த  திட்டத்தின் படி.

உயிர் பயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் போதும் கங்கா அக்காவைக்  கண்டதும்  இவன்  என்ன செய்யிறான்  என்று நின்று  பார்க்க  உயிரையும்  தாண்டிய  ஆவல்  வந்தது அவளுக்கு. 
அவ  வந்த   சிரிப்பை  அடக்கிக்  கொண்டு   வேற  எங்கேயோ   பார்த்துக்  கொண்டு. 

"சேர்ச்  ஒண்டும்  லவ்வேர்ஸ்   பார்க்  கிடையாது   நீங்க  அங்க  வைச்சு  சொல்ல  நினைச்சதை   உங்கட  அருமை  தங்கச்சி   நீங்க  வர  முன்னமே  என்னோட   கதைச்சு   சம்மதமும்  வாங்கி   வீட்டுக்கும்  சொல்லிப்  போட்டாள். இப்ப புதிசா எதை  என்னட்டை சொல்லப்போறீங்க "

 என்று சொன்னபோது, இதென்ன  வில்லங்கம்  லவ் என்றால்  ரொமான்ஸ் இருக்கும்  அதை கண்ணிலேயே  வழிய விட்டு உருகிக் கொண்டு  நிப்பினம் என்று பல  திரைப்படங்கள்,  பலப்பல காதல்  நவீனங்கள்  எல்லாத்தின்  மூலமும்  கற்று வைச்சிருந்த பிம்பத்தை  உடைச்சுக் கொண்டு     அவ  சொன்ன  அடுத்த  வார்த்தையில  தான்  அவனுக்கு  வெறி  தலைகேறி  இருக்க   வேணும்.   

"எனக்கொரு  அசமந்த  அண்ணா  இருக்கிறான்  மூண்டு  வருசமா  காதலை  நட்பு என்று  ஏமாற்றி   உங்களுக்கு  கதை  விடுறான்.  நீங்களும் எங்காவது  அருமையா அதிசய  நெல்லிக்கனி  கிடைத்தால் அவருக்கு குடுக்கிற  அளவு  நட்பு  என்று நம்பிக்கொண்டிருக்கிறீங்கள் அந்த  எருமை  தன்ர காதலை  சொல்லப்  போறதில்லை . பிறகு  நீங்க எங்காவது கலியாணம்  கட்டிப் போனப்பிறகு  வீட்டுக்குப் பின்னால கோடிக்குள்ள ஒரு கொட்டிலைக் கட்டி அதை  தாஜ்மகால் எண்டு சொல்லிக் கொண்டு, தாடி வளர்த்துக் கொண்டு அதில கிடந்தது தான்  சாகாமல் எங்கள் எல்லாருடையதும் நிம்மதியை கொல்லப் போகுது .  ஒரு மாற்றத்துக்கு  நீங்களாவது   அந்த மண்ணாங்கட்டிக் காதலை சொல்லி   அவன்ர  மூஞ்சியில  கரியை  பூசுங்கோ "  எண்டு   சொன்னா  போல   தான் வந்தனான்    அதுக்குள்ளே  நீங்களே  பூசிக்கொண்டு  நிக்கிறீங்கள் "   என்று சொன்னா

அவள் சொன்னவைகளோடு கூட  கடைசியில் சொல்லாதவைகளையும் கங்கா இட்டுக்கட்டிச்  சொன்னபோது அவள் அதிர்ந்து போய் பார்க்க
அவன் உச்சந்தலை வரை நெருப்பாகி நிற்க அது விளங்காமல்  அல்லது இன்னும் எண்ணையூற்றி எரியவிட்டு வேடிக்கை பார்க்கும் எண்ணத்தில் 

"இது தான் தலைவிதி என்றாச்சு அதில தங்கத்தைப் பூசிக் கொண்டு வந்தாலென்ன, தார்ப்பீப்பாக்குள்ள விழுந்து எழும்பி வந்தால் என்ன கட்டி  நாசமாகிப் போய் தொலைக்கத்தானே வேணும்"

என்று அவ சேர்த்துச் சொல்ல  அவன் நெருப்புப் பிளம்பாகின நேரம்  உயிரைக் காக்கிற  கடைசி முயற்சியா பிரியாவின்ர  கையில  கிடந்த  சைக்கிளை  இழுத்துப் பறிச்சுக்   கொண்டு  ஏறக்  கூட  நேரம்  இல்லாமல்  உருட்டிக்   கொண்டு  ஓடத்  தொடங்க,  

"நில்லடி  நில்லடி  ஓடாதே நில்லு அடிக்கமாட்டேன் நில்லு"

  அவன் கத்திக் கொண்டே துரத்தின நேரம், ஒருவேளை அடிக்கமாட்டான்  தானோ என ஒரு  நப்பாசையில் வீதி எல்லையில் அவள்   திரும்பிப் பார்த்த நேரம், பெறுமாதக் கர்ப்பிணியாய்  பூட்போர்ட் வரை ஒற்றை விரலில் தொங்கிக்கொண்டு சாதனை செய்த பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பக்கம் சரிந்து கொண்டு  மூச்சுவாங்க  வந்த  ஓட்டை மினி பஸ் வழமையான தன் மெயின் ரோட் பயணத்தை  கோட்டை ஷெல் அடிக்குப் பயந்து அவசரமாக மாற்றிக் கொண்டு அந்த வீதியில் தொண்ணூறு பாகை கீழிறங்கி வளைத்து  நாய் லைட் போஸ்ட்டுக்கு காலைத்தூக்கின மாதிரி ஒரு பக்கச்  சில்லு ரெண்டையும்  கொஞ்சம் மேலே தூக்கிக் கொண்டு  திருப்பிய நேரம், கண்மண்தெரியாமல் சைக்கிளோடு ஓடிக்கொண்டு முன்னால்  வருவது  தெரியாமல் பின்னால்  திரும்பி அண்ணனைப் பார்த்த அவள்  மீது மோதியது.

மோதிய மற்றும் வளைத்துத்  திருப்பிய அதிர்வில்  ஓட்டை மினிபஸ் தனக்குள் தாங்கியிருந்த கொஞ்சப்பேரை பூட் போர்ட்டில் இருந்து அவள்  மீது அவசரமாக பிரசவிக்க .....

அறிவு தெளிந்து பார்த்தபோது கண்ட கண்ணீரும் பதட்டமுமான  முகங்களுக்கு நடுவில் அவன் கங்காவுக்குப் பக்கத்தில் கண்ணீர் வடிய நின்றிருந்தான்.  அவள் கண்திறந்த போது அனைவரையும் முந்திக்கொண்டு அவசரமாக நெற்றியை வருடி 

"என்னை விட்டுப் போயிடாதடி கண்ணம்மா" என்றான். 

தைரியமாக இரு  என்பது போல் கங்காவின் கைகள் அவனது கையை ஆதரவாக  அழுத்தமாகப்பற்றியிருந்தன. 

"உங்கள் கரங்கள் பற்றிப் பந்தத்தில்  இணைந்த இன்றைய நாளில், அன்றிருந்தவர்கள் இன்றில்லாத போதும், இடையில் போர் எங்களுக்கு எவ்வளவோ அனுபவங்களை இரத்தத்தால்  எழுதி   தூரங்களால் நாம் தொலைவாகி விட்ட போதும், உண்மை நேசங்கள் இறக்கும் வரை இறப்பதில்லை  என்பதன்  அடையாளமாய் இன்னும்  நான்  இருக்கிறேன். எனக்குள் நீ  இருக்கிறாய் "


"என்  அன்பான வாழ்த்துக்கள் அண்ணா &அக்கா ."

Saturday, January 14, 2017

பொங்கிய போதே உடைந்தது .......


அண்டைக்கு நித்திரைக்குப் போகும் போதே நடுச்சாமம் ஆகி இருக்கும். அதற்கு முன் படுக்கைக்காக ஒரு அறையை மட்டும் மிச்சம் விட்டு விட்டு மற்ற இடங்கள் எல்லாம் கழுவி விட்டிட்டா அம்மா. காலமை வெள்ளன நாலுமணிப் பொழுதில எழும்பி,என்னை  எழுப்பி  வில்லங்கமா  முற்றத்தில் விட்டு விட்டு    இரவு படுத்த அறையையும் விறாந்தையையும் கழுவிப் போட்டு வறக்கு வறக்கு என்று முத்தத்தை கூட்டிக் கொண்டிருந்தா. நான் நித்திரை பாதியும் , குளிர் மீதியுமா நல்ல இறுக்கமா போர்த்துக் கொண்டு முற்றத்து மாமரத்தில  சாஞ்சு கொண்டு   இருந்த இடத்தில் தூங்கி வழிஞ்சு கொண்டிருந்தன்.

 சுடுதண்ணியை கிணத்தடியில நல்ல அளவான சூட்டில விளாவி வைச்சிட்டு "தலையில ஊத்திக்கொண்டு ஓடி வா "என்றா. நான் குளிச்சு முடிச்சு வர,சாமி அறைக்கு நேரே ,   வாசல் முழுவதும் பசுஞ் சாணத்தால மெழுகி வைச்சிருந்தா. அப்ப எனக்கு கத்தையா  தலைமுடி  மத்தியானம் முழுகினாலே காயாத தலை. விடியப்புறம்   ஈரத்தலையை துடைச்சப் பிறகும் உலராமல்  தலைமுடி நுனிகளில் இருந்து தண்ணி துளித்துளியா வடிஞ்சு  நனைச்சுக் கொண்டிருந்தது. 

இன்னொரு காய்ஞ்ச  துவாயைத் தலைப்பாகை போல  கட்டிக் கொண்டு   மெழுகின இடத்தில கோலம் போடத் தொடங்கினன். அந்தக் காலம்  அருகே சுந்தலிங்கம் மாமா வீட்டோடும் ஜெகம்  ஐயா  வீட்டோடும்  அதிகம் நெருக்கம் இருந்ததால , என் நட்பு வட்டமும் ஓரளவு  அப்படியே  அமைந்திருந்ததால் , அவையள் அனேகமா  முத்தத்திலும் வெளிவாசலிலும்  போடுற கோலங்களைப் பார்த்துப் பார்த்து  கோலம் மீது   பெரிய காதலிருந்தது. 

அதே போல எங்களுடைய  வீடுகளில்  அவர்களைபோல நித்தம் கோலம் போடாத  குறையும் .இருந்தது.  வருடத்தில் இருமுறை  கோலம் போடக் கிடைக்கும்  வாய்ப்பில்  அழகான கோலங்களைப் போடுவேன். 
.
எப்பவும் மாதிரி காலடியில ஈரச்சாணம் பிசுபிசுப்பா, கொஞ்சம் அருவருப்பா தான் இருந்தது. ஆனாலும், கோலம் முக்கியம் எனக்கு.  அத்துடன்   அருவெறுக்கிறதை அம்மா கண்டால் விடியக்காலமையே அரிச்சனை தொடங்கும்,  பாவம் அம்மா எனக்கான அரிச்சனையையும் பூசையையும் கொஞ்சம் பிந்தி ஆரம்பிக்கட்டும் என்று இரக்கத்தோடு நினைச்சுக் கொண்டன். 

 அதால பட்டும் படாமல் ஊன்றியும் ஊன்றாமலும் நிலத்தில் காலை வைச்சுக் கொண்டு கோலம் போட்டன். எப்பவும் மாதிரி எனக்குப் பிடிச்ச புள்ளிக் கோலம். நாலு மூலையும் நிறைகுடம் வைச்சு, அதுக்கு நடுவில நாலுபக்கமும் குத்துவிளக்கு வைச்சு, குத்துவிளக்கு திரி வாற இடத்தில அடுப்பு வைச்சால் அடுப்பு எரியும் போது குத்துவிளக்கு ஏற்றிவைத்த மாதிரி இருக்கும் அந்தக் கோலம் பொங்கல் நேரம் போட எனக்கு எப்பவும் பிடிக்கும்.
.
நான் என் விருப்பக் கோலத்தை போட, ஈரத்தலையில பனி தன் விருப்பத்துக்கு கோலம் போட, " ஹச் ஹச் " என்று தும்மத்தொடங்கினது. "உலக்கையை வைச்சு நாலு இழுவை இழுக்கிறதை விட்டிட்டு உள்ள பனி எல்லாம் தலையில வாங்கித் தும்மு" எண்டு அம்மா அதிகாலை அர்ச்சனையை அமோகமா ஆரம்பிச்சா. நான் பூசாரியின் வார்த்தைகள் காதில் விழுந்ததோ என்று தெரியாமல் கர்ப்பக்கிருகத்துள் இருக்கும் கடவுள் சிலை போல என் பாட்டுக்கு தும்மு தும்மு என்று தும்மிக் கொண்டு மூக்கு சிந்த சிந்த கோலத்தை போட்டு முடிச்சேன்.
.
கூட்டி மெழுகி நாலு  மூலையும் கரும்பும் வாழைக்குட்டிகளும் நட்டு அதிலிருந்து தொடுத்து மாவிலை தோரணம் கட்டி, கோலம் போட்ட இடத்தில் தேவையான எல்லாப் பொருட்களும் நிறைஞ்சிருந்தும் நிறைகுடமும் பொங்கல் பானையும் மட்டும் ஏற்றிவைக்க யாரும் இல்லாமல் முற்றத்தில் காத்திருந்தது. அதுக்குப் பக்கத்தில நானும் காத்துக் கொண்டிருந்தன். அம்மாவின் சகோதரங்கள் கலியாணம் கட்டி, அம்மம்மா அவர்களுக்காகக் கட்டிய வீட்டுக்குக் குடிபெயர்ந்து  சென்று நாம் தனியாகி விட்டதன் பின்னான , . வழமையான எல்லா வருடங்களும் போல ,
.
நிறைகுடம் வைச்சு பானையை அடுப்பில் ஏற்றி வைக்க முடியாமல் வயோதிபத்தை மலேரியா இன்னும் அதிகமாக்கி சுருட்டினதில தாத்தா எழும்ப முடியாமல் சுருண்டு கிடந்தார். அம்மா சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை ஏற்றினால் தான் அடுப்பில பானை பொங்கும் என்ற கட்டாய சம்பிரதாயம் போல அயலில சா( ஆ )ண் பிள்ளை தேடி அலைஞ்சு கொண்டு திரிஞ்சா.
.
அயலில அதுவும் வெளியோர் பார்வைக்கு அதிக நெருக்கமான உறவு  போல ஆண்களும் சாண்களும் இருந்தாலும் அவையளுக்கு எல்லாம் ஒவ்வொரு வீடும் அவைகளில் ஒவ்வொரு முற்றமும் இருந்ததால் அவையள் எல்லாம் அங்கே பொங்கிப் படைச்சு முடிஞ்சு தான் இங்கே பொங்கல் பானை வைக்க வரச் சம்மதமாக இருந்தார்கள் என்று நினைக்கிறேன். முதல் பொங்கி வழிவதில் கூட சகோதரப் போட்டியுள்ள   வீர குலமல்லவா அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.
.
அம்மா திரும்பி வந்து முற்றத்தில் இருந்த வாங்குப் பலகையில் இருந்து கொண்டு தலையை குனிஞ்சு கொண்டா. அம்மா அப்பிடி இருந்தால் நான் கிட்டவே போக மாட்டேன் அந்த நேரத்தில் அம்மாவின் உதடு புன்னகைத்திருக்கும். முகம் கசங்கி கண்கள் நிற்காமல் ஒழுகிக் கொண்டிருக்கும். அந்த நேரம் நான் கிட்ட போனால் இழுத்து இறுக்கி கைக்குள்ள பொத்தி வைச்சுக் கொள்ளுவா.நீ  மட்டுமேஉலகம்என்பதாகஇருக்கும் அந்த இறுக்கம். எனக்கு தெரியும் அந்த நேரம் அம்மா அப்பாவை நினைச்சு உடைஞ்சு போயிருப்பா என்று. அந்த உடைவை என்னால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை அதனால் கிட்டே போவதில்லை எப்போதும்.
.
வாழ்க்கையிலேயே மிகவும் கேவலமான , பரிதாபமான விடயம் பாசத்துக்கும் உரிமைக்கும் உறவுக்கும் கையேந்திப் பிச்சை எடுப்பது தான். அப்படி ஏந்தும் நிலையில் இரந்து நிற்பவரை பார்த்து ஒவ்வொரு முகங்களிலும் தெரியும் உதாசீனமும் இறுமாப்பும் உயிர்வரை வலிக்கவைத்து இறுதிவரை அவர்களை நிரந்தரமாக வெறுக்க வைத்து விடும். 

 எழுதிவைக்காத சம்பிரதாயங்களை வாழவைச்சுக் கொண்டு, இதை எல்லாம் தாங்கிக் கொண்டு, தாங்கினதை உள்ளே விழுங்கிக் கொண்டு உறவறாமல் காப்பதற்காக  நடித்துக் கொண்டு     அழத்தான் அம்மாவுக்கு தெரியும்.

 அந்தக் கண்ணீரில் முளைவிட்ட விதை உதாசீனத்தையே அருகே அழைத்து உதாசீனப்படுத்தும் நெருப்பாக வளரும் என அம்மா அப்போது எண்ணாது இருந்திருக்கலாம்.  அப்படி  மனம் பொங்கிய போதே அதுவரை  கடைப்பிடிக்கப்பட்ட  சம்பிரதாயம்  ஒன்று  அன்று  உடைந்தது.


.
தாத்தா சாய்மணைக்கதிரையில் படுத்தபடியே கிடந்து எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.அவரது முகம் வருத்தத்தையும் தாண்டி நிறைய வாடி இருந்தது. கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் வாரமாக வழிக்காத முகத்தின் முடிகளுக்கு நடுவே வாய்க்கால் வெட்டியது. பிறகு " குளிக்கிறதுக்கு தண்ணியை சுடவை பெரியபிள்ளை நான் மெதுவா எழும்பி குளிச்சுப் போட்டு வாறன் " என்று சொல்லிக் கொண்டு எழும்ப முயற்சித்தார்.

 அவரால எழும்ப கூட முடியாமல் கையூன்றித் தடுமாற நான் ஓடிப்போய் தாங்கிப் பிடிச்சன். கம்பளிப் போர்வை விலக்க முடியாமல் அவர் போட்டிருந்த கம்பளி உடையையும் மீறி மிகவும் ஒல்லியான அந்த வயோதிப உடல் நடுங்கியது. மெதுவா சாய்ச்சு படுக்க விட்டன். குழிவிழுந்த கண்களில் இருந்து ஈரம் வடிந்தது. பிறகு தன்ர நடுங்கிற குரலில மெதுவா
.
"கண்ணம்மா  சாமியை நல்லா மனதில நினைச்சுக் கொண்டு தண்ணி சிந்தாமல் நிறைகுடத்தைத் தூக்கி தலைவாழை இலையில வை" என்றார். வைத்தேன்.  

அம்மா  நடக்க கூடாதது  நடந்தது போல திடுக்குற்றுப் பார்த்தா 
.
"முடித்தேங்காயும் மாவிலையும் செருகி விபூதியும் பொட்டும் வை கண்ணம்மா" என்றார் செய்தேன்....... எல்லாரையும் போல.
.
"கற்பூரக் கட்டியை கொளுத்தி அடுப்பில போடம்மா". என்றார்.
.
புதிதாக இரண்டு வாரங்களின் முன் அம்மா செம்மண்ணில் செய்து வெயிலில் காயவைத்து சாணம் மெழுகி கோலத்தின் நடுவில் கிடந்த அடுப்புக்கு நடுவில் பாளை மடல்களுக்கு இடையில் கற்பூரக் கட்டியை கொளுத்திப்போட்டேன்........... எல்லாரையும் போல . அது கொஞ்ச நேரம் அனுங்கி விட்டு மெல்ல மெல்ல பற்றிக் கொண்டு எரியத் தொடங்கியது.
.
"இனி பொங்கல் பானைக்கு இஞ்சி இலையும் மஞ்சள் தண்டும் சுத்திக் கழுத்தில கட்டிப் போட்டு சாமியை நினைச்சுக் கொண்டு பானையை போட்டிடாமல் கவனமா அடுப்பில ஏற்று தங்கம்." என்றார்
.
ஏற்றினேன்............ எல்லாரையும் போல. பொங்கி எல்லாவீட்டு பானைக்கும் மேலால் வழிந்தது போலத்தான் நான்  ஏற்றிய  பானையும் பொங்கி   வழிந்தது. வழிந்த போது சின்னக் கை நிறைய அரிசியும் பயறும் அள்ளி மூன்று முறை சுற்றிப் போட்டுப் போட்டேன் எல்லாரையும் போல.
.
பொங்கல் பொங்கி முடிந்த போது எல்லா வீட்டுப் பொங்கல் பானையும் மாதிரி தான் எங்கள் வீட்டுப் பானையும் நிறைஞ்சு தான் இருந்தது. அது ஒன்றும்  ஆண்  ஒருவர் நிறைகுடம்  வைக்காததாலோ, ஆண் ஒருவர்  பானை வைக்காததாலோ,  ஆண் ஒருவர்  அரிசி போடாததாலோ   வித்தியாசமா நடுவால விண்டு போயிருக்கவில்லை.
.
அது சிலருக்கு ஆச்சரியமாகவும் ஆத்திரமாகவும் இன்னும் என்னவோ பல அந்த வயதில் எனக்கு தெளிவு படுத்தி உணரத் தெரியாத உணர்வுகளாகவும் இருந்திருக்கலாம் அன்றைய என் வயதில் கண்ணைப் பார்த்து மனதைப் படிக்க எனக்கு அனுபவம் போதியதாக இருக்கவில்லை. பெட்டைக் கோழி அதிலும் குஞ்சுக் கோழி கூவி பொழுது விடிவது என்றால் அன்றைய எங்கள் சமூகத்தில் சம்பிரதாயத்தை உடைத்த செயல் என்பதால் அது பல வித மன அலைகளை தோற்றுவிக்கத் தான் செய்திருக்கும்.
.
அதன் பின் தாத்தா உடல்நலம் தேறி பல ஆண்டுகள் எங்களுடன்  இருந்தாலும் பின்னால் வந்த எல்லா நிகழ்வுகளிலும் தான் ஒதுங்கிக் கொண்டு என்னை வைத்தே எல்லாம் செய்வித்தார்.

 இப்பதான் உங்களால் முடியுமே தத்தா என விசாரித்த போது ஒவ்வொரு விடயமும் நாம் சுய தெளிவுடன் இருக்கும் காலத்திலேயே அடுத்த சந்ததிக்கு தெளிவு படுத்தி அதைக் கையளிக்க வேண்டும் என்றார்.
.
இப்படி என்னை வைத்தே  தாத்தா  நிறைகுடம் ஏற்றும் நாட்களில் , நாள் முழுவதும் என்னிடம்   எதோ நெருக்கமின்மையை  அந்நியத்தை  ஒரு சிலரின் பார்வையில்   உணர்வேன் . மனம் இயல்புக்கு மாறாய்  குறுகுறுக்கும்.  உணர்வுகளை  சரிபிழையை  பிரித்தறிய முடியாப் பருவத்தில்  மனம் சுருள  பூனையையோ  நாயையோ  கட்டிப் பிடித்துக் கதைத்துக் கொண்டிருப்பேன் .

அப்படி ஒரு நாளில் தாத்தா  அருகே அழைத்தார்.   கை வளைவுக்குள் அணைத்து இருத்திவைச்சு ஆதரவா தலையை தடவிக் கொண்டே " உணவுக்கு மட்டும் இல்லை செல்லம் உறவுக்கும்  அன்புக்கும்  கூட கையேந்தி யாசிக்கும் நிலை போல் வேதனையானது எதுவும் இல்லைஇந்த உலகத்தில். இதில் எது உன்னிடமுள்ளதோ  தாராளமாக அனைவருக்கும் குடு  .  ஆனால் .....

 எந்தக் காலத்திலும்,உணவுக்கும்  உறவுக்கும் அன்புக்கும், ஆதரவுக்கும்  இரக்கும் நிலை உனக்கு  வரக் கூடாது என்றால் உன்னுடைய தேவைகளுக்கு நீ யாரையும் சார்ந்திருக்கக் கூடாது. என்னிடமே கூட  பாசத்துக்கு யாசிக்கும்   நிலையில் நீ இருக்கக் கூடாது கண்ணம்மா. அப்படி ஒரு நிலை எப்பவாவது உனக்கு வருமானால் நீயே இருக்கக் கூடாது" என்றார்அறிவுரை போல.

அப்ப  நீங்கள்  என்னில் பாசமில்லையா  தாத்தா.  

தாத்தா  போகேக்கையும்  என்ர செல்லத்தை மனதுக்குள் சுமந்து கொண்டு   தான் போவன்.  தாத்தா இல்லாத காலத்திலும்,  நீ வளர்ந்தப் பிறகும்  சிலதில் தெளிவாக இரு என்று என் அனுபவத்தில  சுன்னனான் கண்ணம்மா . தன் மானம் உயிரை  விட பெரிசு தங்கம். அதை விட்டுக் குடுத்தால்  நீ ஒன்றுமேயில்லை. 
.
அது அறிவுரையா, அதீத பாசமா, அக்கறையா இன்றுவரை எனக்கது தெரியாது. ஆனால், ஒன்று தெரியும்  இந்த உலகில் எந்தவிதச் சுயநலமுமின்றி  என்னை உயிரளவு நேசித்த  அன்புள்ளம்  தந்து சென்ற அறிவுரை   அது . மந்திரம் போல மனதில் ஒட்டிக் கொண்டது.

 வளர வளர அந்த வார்த்தைகளின் ஆழம் புரியப் புரிய , வாழ்க்கை அனுபவங்களைத்தரத் தர , மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ளவும், மனிதர்களிடம்  எதிர்பார்ப்பின்மையை  வளர்க்கவும் , எந்த உடைவிலும்இருந்து நானாகவே  மீண்டு எழுந்து நிற்கும் தீவிரத்தையும் திடத்தையும், தைரியத்தையும் தந்தது. 

அதன் பின் என் வீட்டில் எப்போதுமே ஆண்கள் மட்டுமே செய்யலாம் என்று உயர்வாக்கி பிரத்தியேகமாக்கப் பட்ட எந்த விடயமும் இருக்கவில்லை. அம்மா சாண்பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை தேடி இரவலுக்குத் திரிஞ்சு பண்டிகை நாட்களிலும் கண் கலங்கவில்லை.

 மற்றவர்கள் வார்த்தைகளிலோ, அர்த்தமற்ற சம்பிரதாயங்களிலோ தங்கியிருப்பதல்ல வாழ்க்கை.   போலிகளை உடைத்துக் கொண்டு என் வாழ்நாட்களை எனக்காக நான் வாழ்வதே என் வாழ்க்கை என்ற தெளிவு தாத்தா இறந்த பின்  வாழ்க்கை  அனுபவங்களால் கற்றுத் தரத் தொடங்கியது. .
.

.நான் ஏற்றிய நிறைகுடத்திலும் என் வீடு எப்போதும் குறை ஏதும் இல்லாமல் நிறைவாகவே தான் இருந்தது.
 
.
"தேவையற்ற வரட்டுச் சம்பிரதாயங்களை உடைத்து விட்டு வெளிவருவதற்கு, சட்டங்களும் கூட்டங்களும், மாமேதைகளும்    தேவையில்லை. சம்பவங்களும் சாதாரண மனிதர்களும் சம்பவங்களும்  தேவையுணர்ந்த புரிதல்களும்     மட்டுமே போதும். "
.

Wednesday, January 11, 2017

அன்னத்தின்ர விசர்ப் பெடியன்

அந்த மனிதரை அந்த ஊர் அதிகம் அறிந்திருக்க நியாயமில்லை. அறிந்திருந்தவர்களுக்கு அவரது பெயராவது தெரியுமா தெரியவில்லை. பெயர் தெரிய உரிமை உள்ளவர்களுக்கு அவரது சொத்துப் பத்திரங்களில் இட்ட கடைசிக் கையெழுத்தில் மட்டும் ஒருவேளை அவரது பெயர் முதலும் கடைசியுமாகத் தெரிந்து நினைவில் பதியாமல் மறைந்திருக்கக் கூடும்.

அன்னம் அம்மாவின் மகன் என்றும், அன்னம்மாவின் பெடியன் என்றும், அன்னத்தின்ர விசர்ப்பெடியன் என்றும் அவரவர் மனிதாபிமானத்துக்கேற்ப அழைக்கப்பட்ட அவர் ராஜகுமாரன் போல் இரு தாய் ஒரு தந்தைக்கு மகனாக வாழ்த்த காலத்தில் ஒருவேளை அவரது பெயர் அவருக்கு நினைவிருந்திருக்கலாம். அல்லது அப்போதும் எதோ ஒரு செல்லப்பெயரால் ராசா என்றோ செல்லம் என்றோ அவர் அழைக்கப் பட்டிருக்கலாம். ஆனால்
அப்போது அவர் ராஜ குமாரன் மாதிரி இருந்திருக்கலாம் என்பதல்ல. இருந்து தான் இருப்பார்.

அவர் கொஞ்சமாகப் புழங்கிய, ஊருக்கு ஒதுக்கமான சின்னத் தெருக்களில் மிகக் குறைவாக அறிமுகமாகி இருந்த மனிதர்களின் பார்வைகளில் எப்போதும் , காவி நிறத்துக்குப் பழுத்துப் போன, ஒருகாலத்தில் வெள்ளை நிறத்தில் யாரோ கொடுத்த வேஷ்டி, சிலநேரம் மேலுடம்பு மறைத்த வேஷ்டிக்குத் தோதாக இத்துப் போன ஷர்ட். பலநேரங்களில் குளித்த ஈரம் காயாமல் அம்மன் கோவில் வெளிவாசல் பிரகார விபூதிக் கும்பாவுக்குள் இருந்து கைநிறைய அள்ளி மார்பிலும் நெற்றியிலும் அப்பிக் கொண்ட விபூதியோடு மண் சிவருக்கு சிவருக்கு வெள்ளைச் சுண்ணாம்பு அடித்து விட்டது மாதிரி இருப்பார். அந்த நாட்களில் காலையில் அவர் குளித்திருக்கிறார் என்று அர்த்தம்.

எண்ணெய் காணாத, இஷ்ரத்துக்கு வளர்ந்து, பக்க வகிடு பிரித்தது போல ஒதுங்கித் தொங்கும் தலைமுடி. முகத்தில் வளரும் முடிகளை சிரைக்க கூட தெரியாமல் ,அல்லது நினைக்காமல், அல்லது வசதியில்லாமல் மீசைக்குள் தொலைந்து கிடக்கும் உதடுகளுக்குள் அடக்கி மூட முடியாமல் வெளியே துருத்திக் கொண்டு நிற்கும் காவியேறிய முன் பற்கள். ஆண்மைக்கான இறுக்கமே இல்லாமல் தொய்ந்து தொங்கும் உடலில் சற்றே மேடிட்ட மேல் தொப்பை. கைகளை விறைப்பாக வீசாமல் ஏனோ தானோ என்று பேருக்கு ஒரு அசைப்புடன் முன்பக்கம் சாய்ந்த அடிமைத்தனமான நடை. தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் யாரைக் காணும் போதும் தன் துருத்திய பற்களால் ஹீ ஈ ஈ என்ற அப்பாவித்தனமான ஒரு இளிப்பு . மனிதர்களின் பண்பை உணர்த்தும் கண்களில் கண்களில் கள்ளம் கபடம் இல்லாத பார்வையில் இனம்புரியாத கருணையின் ஆட்சி. அவரிடம் யாரும் கவர்ந்து விட முடியாத பரம்பரைச் சொத்து அது . இப்படித்தான் என்னால் அந்த அன்னம்மாவின் விசர்ப்பெடியனை காட்சிப் படுத்த முடிகிறது.



சிதையத் தொடங்கி இருந்த பழைய கால எட்டுப்படி  வைத்த  உயர வீட்டின் வெளி விறாந்தையில் இருந்து எப்போதும் வானத்தையும் மரங்களையும் அண்ணாந்து இலக்கற்று வெறித்திருக்கும் போது மட்டும் உதடுகள் தீவிரமாக எதையோ முணுமுணுத்துக் கொண்டிருக்கும். ஒரு வேளை அந்த நேரங்களில் அவர் தன் இரு தாய்கள் ஒரு தந்தையிடம் மனம் திறந்து பேசிக் கொண்டோ அல்லது தனக்கான அவலத்தை மனுப்போட்டு அழைத்து விடச் சொல்லி தாய் தந்தையரிடமோ அல்லது கடவுளிடமோ மான சீகமாகக் கெஞ்சிக் கொண்டிருந்திருக்கலாம்.

பத்து வருடத்துக்கும் மேலான ஏராளம் ஸ்தல யாத்திரைகள் வேண்டுதல்களின் பின் பிறந்த, பிறக்கும் போதே அந்தக்கால அதிகமான பிரசவ மரணங்களில் ஒன்றாக முகம் கூடப் பார்க்காமல் தாயைப் பறி கொடுத்த அதிஸ்ரசாலி? யாகத் தான் இந்தப் பூமி அவரை வரவேற்றது. காதல் மனைவியை பறிகுடுத்துப் போட்டு மகனையும் திரும்பிப் பார்க்காமல் மூலையில் சுருண்டு கிடந்த அவரது தந்தையை திரும்ப உற்சாக மனுஷனாக்குகிறோம் பேர்வழி என்றும் , அக்காவின் குழந்தையை மாற்றாந்தாய் கொடுமை இல்லாமல் தங்கையாலே பாசத்தோடு வளர்த்து ஆளாக்க முடியும் என்ற நம்பிக்கையிலும் , அம்மாவின் ஒரே தங்கை அப்பாவின் இரண்டாம் மனைவியாகி, இவருக்கு அம்மாவாகிப் போக சீலைத் தலைப்பில் செல்ல மகனை முடிந்து கொண்டார் அன்னம் அம்மா.

உண்மையான காதலும் நேசமும் என்றும் எதனாலும் இட்டு நிரப்ப முடியாதது என்பதை பலர் புரியவைத்தும் புரியாத சமூகத்துக்கு தானும் தன் பங்குக்கு புரிய வைத்துக் கொண்டு, தாலி கட்டியது பிள்ளை வளர்க்கவே தவிர தன் மனைவியின் இடத்தை பங்கு போட அல்ல என்று கடைசிவரை நிரூபித்து மூலையில் முடங்கிக் கிடந்தே மூன்று வருடங்களுக்குள் முடிந்து போனார் அவரது அப்பா.

கணவனின் நேசிப்புஎன்றால் என்ன என்றே உணர்ந்து அறிந்திராத அன்னம் அம்மாவுக்கு அவரின் இழப்பும் அதிக அதிர்ச்சி ஏதும் தராது போனாலும் இடைக்காலத்துக்குள் அடுத்தடுத்து விடைபெற்றிருந்த தாய் தந்தைக்குப் பின் ஒரே ஆதரவாக மூலைக்குள் சுருண்டு கிடந்த மனிதனும் போய் முடிய தனிமை பயமாய் , பாரமாய் அழுத்த சீலைத் தலைப்பில் முடிந்திருந்த மகனை மடிக்குள் பொத்தி வைத்துக் கொள்ளத் தொடங்கினார்.

மடிக்குள் கிடந்த பிள்ளை வெளி உலகம் கற்க மறந்தது. நிறைந்து கிடந்த சொத்து வயிற்றுப் பசி போக்க மிச்சம் மிச்சமாய் போதுமாய் இருக்க , கல்வியும் அறிவும் சொந்த உழைப்பும் மகனுக்கு கட்டாயத் தேவை இல்லை என்று முடிவு செய்தது அதிக அறிவும் அனுபவமும் இல்லாத பாசம். அறிவோடு பிறந்த பிள்ளையின் மூளையில் சாம்பல் படர, அதை ஊதிவிட்டு தூண்டிவிட அறிவற்று அன்னம் அம்மாவும், ஊதிவிட்டு தூண்டி விடக் கூடாது என்று சில அறிவுள்ள உறவுகளும் ஆதாயத்துக்காகக் காத்திருக்க அன்னம்மாவின் அருமந்த பிள்ளை விபரம் கெட்ட அசமந்த பிள்ளையாக வளரத் தொடங்கியது.

அந்தக் காலத்தில், சிலவேளை இந்தக் காலத்திலும் ஏதாவது பெயர் சொல்லும் உத்தியோகம் செய்து கொண்டு , ஆடம்பரமாய் திரிஞ்சு கொண்டு, அதிகாரமாய் கதைத்துக் க்லோண்டு இருப்பவர்களைத் தான் உலகம் அறிவாளிகள் என்று நினைத்து அவர்கள் என்ன சொன்னாலும் அதில் அர்த்தம் அதிகமா இருக்கும் என்று நம்பி விடுகிறது. அப்படித்தான் உடன் பிறந்த ஒரே உறவையும் இழந்த அன்னம் அம்மாவும் ஒன்றுவிட்ட இரண்டு விட்ட உறவுகள் சொன்னதை எல்லாம் அக்கறையில் வழிகாட்டுகிறார்கள் என்று நம்பிக் கொண்டு, அவர்கள் சொன்ன படி நடக்க வெளிக்கிட்டதில், இருந்ததில் அங்கே என்ன அநியாயம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த மனிதர்கள் எப்போதுமான சாதாரண மனிதர்கள் மாதிரி எமக்கெதுக்கு வம்பு என்று விலகிக் கொண்டார்கள்

அடிக்கடி இருமல் இருமல் என்று மொசுமொசுக்கை இலையை மட்டும் பாலில் போட்டு அவிச்சுக் குடிச்சு கை மருந்தில் சரியாகிப் போயிடும் என்று சாதாரணமாய் சொல்லிக் கொண்டிருந்த இருந்த அன்னம் அம்மா சடுதியாய் TB நோய்க்கு பலியாகிப் போக, இரண்டுங்கெட்டான் வயதில் நின்ற அவரின் அருமை மகன் எதிர்பாராத இழப்பில் உலகம் இருண்டு பேதலித்து வெருண்டு அணைப்பார் இல்லாமல் அலைய, அன்னம் அம்மாவின் மகன் என்ற பெயர் அவவின் இறப்புக்குப் பின்னால் அன்னம்மாவின் விசர்ப் பெடியன் என்று மாறிப் போனது.

செத்தவீட்டுடன் பாடை படலை தாண்ட ஒரு மாதிரி எல்லா உறவுகளையும் ஒதுக்கி உடைத்துக் கொண்டு அவரின் மகனை சொத்துக்களுக்கான சொத்தாக கைகளில் பிடித்துக் கொண்டு, அவரில் பரிதாபப்பட்டு எந்த உறவு நெருங்கி அரவணைத்துக் கொள்ள முற்பட்டாலும் , சொத்தைக் குறிவைத்து பெடியனைக் கைக்குள்ள போடப் பார்க்கினம் என்று ஒரு புரளியைக் கிளப்பி விட்டுக் கொண்டு , தன்மானம் அவமானம் பார்க்கிற சூடு சுரணை உள்ள மனிதர்கள் சூடுபட்ட வலியோடும் கொதியோடும் ஒதுங்கிக் கொள்ள அன்னம்மாவின் பெடியன் தனிச்சு சுருண்டு அனாதையாய்ப் போனது அந்தப் பெரிய வீட்டுக்குள்.

தாய் போன ஆரம்ப காலங்கள் எதோ பேருக்கு அவருக்கு சாப்பாடு போட்ட அன்னம் அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரனின் குடும்பம் அவர் லீவு முடிந்து வேலைக்கு வெளிகிட்டு கொழும்புக்கு மெயில் ரயில் ஏற , அந்த அப்பாவிக்கு சாப்பாட்டுக்கு லீவு விட்டு விடுவார்கள்.
ஏதாவது ஒரு உறவுக்கார வீட்டில் ஒட்டிக் கொண்டால் அவரது சாவுக்கு முன் கையெழுத்து வாங்கிவிடக் காத்திருக்கும் அத்தனை சொத்தும் கைமாறிவிடும் பயத்திலும், பெடியன்ர காணி பூமி எல்லாம் ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு ஒரு வாய் சோறு போடாமல் இருக்குதுகள் என்று வசை கேட்க நேரும் என்ற பயத்திலும் அந்த அப்பாவி மனிதனை இருத்தி வைத்து நீ யார் வீட்டிலாவது ஒண்டிக் கொண்டால் நித்திரையில் அடிச்சுச் சாக்காட்டிப் போடுவீனம் என்றும் , எங்காவது சாப்பிட்டால் சாப்பாட்டுக்குள் விஷம் வைச்சுக் கொண்டு போடுவீனம் என்றும் நம்பும் படி சொல்லிப் பயம் காட்டி வைக்க, உயிரைக் கரும்பென்று நினைச்சு அது நித்திரையில் கூட நிம்மதி இல்லாமல் பசி சுமந்து ஓடிக் கொண்டு , கோவில் அன்னதானத்தைக் கூடப் புறக்கணித்து பட்டினியில் சுருண்டு கொண்டு மெல்ல லெல்ல பிச்சைக்கார விசரன் என்று சிறுவர்கள் கண்டு பயந்து ஒதுங்கி ஓடும் நிலைக்கு மாறிக் கொண்டிருந்தது.

எப்போதாவது பசி பொறுக்காது அம்மா அதிகம் நம்பிய, அவர்களின் வீட்டுக்கு போய் எப்போதுமான அவர்களின் கட்டளைப்படி ஊத்தைக் காலுடன் படியேறாமல வாசல் படி திறக்கும் வரை காத்திருக்க ,காதில் தொங்கும் காப்பளவு வளையத்துக்குள் பென்சில் போட்டு சுருட்டிய காதோரத்துக் முடி ஸ்பிரிங் மாதிரி துள்ள , முகம் நிறைய பூசிய மஞ்சளும், கண்முட்டிய மையும் அமாவாசையை வட்டமாக்கி நெற்றியில் வைத்த பெரிய பொட்டுமாக கதவு திறக்கும் யாரவது அழகு ராணி வெளியே நிற்கும் அப்பாவியைப் பார்த்து மூக்கைப் பொத்திக் கொண்டு சீ ஈ ஈ என்று அலற, அந்த அலறலில் அல்லது அலங்காரத்தில் பயந்தோ அல்லது தன் அவலத்தில் வெட்கியோ பசியோடு அது ஓடி வந்து சுருண்டு கொள்ளும்.

சிலவேளைகளில் அந்த வீட்டின் ஆணழகன்கள் யாராவது கதவு திறந்து அவர்களின் கண்களில் பட்டு விட்டால் இப்படி ஒரு ஜென்மம் உறவென்று வாசலில் நிப்பதே வேலைவெட்டியற்ற அவர்களின் முக்கிய சுழட்டல் தொழிலுக்கு அவமானமாக இருக்கும் என்ற பயத்தில் காலால் அடித்தே விரட்டி விடுவார்கள். இதனால் எப்போதும் அது மனிதர்களை விட்டு ஒதுங்கி பசியை உறவாக்கி சுருண்டு கிடந்தாலும் அந்த அசமந்த மூளைக்குள்ளும் உறவுகளை தனக்கு உரிமை உள்ளவர்களை அடையாளம் உணர்ந்திருந்தது.

அப்படி எப்போதாவது தனக்கு உரிமை உள்ள உறவு தேடி அது போகும். வாசலில் ஏற விடாத பழக்கத்தில் படியேறவே தயங்கும். வற்புறுத்தினால் வீட்டின் வெளி விறாந்தையில் சாய்மனைக் கதிரைக்குள் இருக்கும் அந்த வீட்டுப் பெரியவரின் காலடியில் அமர்ந்து அவரது மடிக்குள் இருக்கும் அந்த வீட்டுக் குழந்தையை குறுகுறு என்று பார்க்கும். " குளிக்கிறியா?" என்றால் மறுத்து தலையாட்டும், சாப்பிடக் கேட்டால் கை நீட்டாது முகம் இருண்டு தலை கவிழ்ந்திருக்கும். உள்ளே இருந்து யார் வந்தாலும் அதே ஈ ஈ ஈ என்ற இளிப்புடன் பௌவியமாக எழுந்து நிற்கும். "உடம்பும் உடுப்பும் ஊத்தையா இருக்கு குளி தம்பி" என்று யாராவது அதட்டிச் சொல்லி விட்டால் அது நின்ற நிலையிலேயே நடுங்கிப் போகும். குளித்து மாற்ற உடுப்பில்லை என்று கைகளை விரித்து அப்பாவியாகக் காட்டும். அதில் குளிக்க மாட்டேன் என்று பொருள் இருக்கும்

"ஏண்டா இப்பிடி இருக்கிறாய் எந்தக் கொம்மாவாவது ஒருத்தி போகேக்குள்ள சேர்ந்து போயிருக்க வேண்டியது தானேடா" என்று அந்த வீட்டின் பாட்டி விசும்பத் தொடங்க அதன் கண்கள் கலங்கிப் போகும் . பெரியவரின் மடியில் இருக்கும் குழந்தையின் பாதங்களை தன் உள்ளங்கை தாங்கி தடவிய படி படியே "வா வா" என்று அன்பாககை  நீட்டி  அழைக்கும்." நான் சொல்லுறதாவது விளங்குதாடா உனக்கு" என்று அந்த வீட்டு அம்மா அழுதால், அது புரியாதது போல் " புள்ளை புள்ளை" என்று கைகளால் சுட்டிக் காட்டும். வா வா என்று கை நீட்டும். அவரை வழிக்குக் கொண்டு வர அந்த வீட்டின் இளம் பெண்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

"பிள்ளை தானே வேணும். இப்பிடி தாடியும் மீசையுமா இருந்தால் பிள்ளை பயந்து போகும், குளிக்காமல் தொட்டால் பிள்ளைக்கு வருத்தம் வரும் எல்லாம் ஷேவ் செய்ய  விட்டு  குளிச்சு சாப்பிட்டிட்டு வந்தால் பிள்ளை வந்து மடியில இருந்து விளையாடும்" என்பார்கள். அதன் கண்களில் ஆவல் தெரியும் போதே அவசரமாக யாராவது ஒருவர் போய் அழைத்துவருபவர் முடிவெட்டி சவரம் செய்ய ஆரம்பித்து விடுவார். குளிக்கும் போதே தன் ஒற்றை வேஷ்டியை தோய்த்துக் காயப்போட்டு விடும். குளித்ததும் கட்டிக் கொள்ள. வேறு உடை கொடுத்தாலும் உறவுக்குப் பயத்தில் மிகுந்த சங்கோஜத்துடன் வேண்டிக் கட்டிக் கொண்டு,

சம்மணம் கட்டி முறைப்படி முதல் கவளம் உருட்டி தட்டின் ஓரத்தில் கடவுளை கும்பிட்டு ஒதுக்கி வைத்து சாப்பிட்டு முடித்து குழந்தையை தூக்கி மடியில் வைத்துக் கொள்ளும். அந்தக் கண்களில் கிடந்த கருணை, அரவணைத்த கைகளில் கிடந்த அவதானம், மற்றவர்கள் கண்ணீரில் தலை குனிந்த போது கண்களுக்குள் திரண்டு கிடக்கும் ஈரம் எல்லாமே அந்த அப்பாவிகள் அறிவோடு சிந்தித்துக் கொண்டு இந்த சுயநல சமூகத்துக்கு தனி ஒரு அப்பாவியாக முகம் கொடுக்க முடியாத அவலத்தில் ஒடுங்கிப் போன வலியை உணர்த்திக் கொண்டிருக்கும்.

"அவையள் கேக்கிற இடத்தில எல்லாம் கையெழுத்துப் போட்டுக் குடுத்திட்டு நீ இங்க வந்து இரடா தம்பி. அங்க தனியா பட்டினியோட அனாதையா கிடந்தது சாக வேண்டாம்" என்று எப்போதும் அது வரும் போது சொல்லும் புத்தி மதியை சலிக்காமல் அவர்கள் சொல்வார்கள் அது சலிக்காமல் குனிந்த தலையை சம்மதமாய் அசைக்கும். எப்போதும் போல் இரவு வரை எல்லாம் குழப்பமில்லாத ஒழுங்கில் நடக்கும். இரவில் தூங்கும் போது அதுக்கு பயம் வரும். யாரையாவது நம்பி அவையளோட போய் தங்கினாய் எண்டால் இரவு நீ நித்திரையா கிடக்கை குள்ள அடிச்சே சாக்கொண்டு போடுவீனம் என்று, அன்னம் அம்மா இறக்கும் போது பாதுகாவலர் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டவர்கள் அச்சுறுத்திய நினைவு வந்து எப்போதுமான இரவு போல அதுக்கு பயம் காட்டும். பதறிப் போகும்  மாற்றிக் கட்டிய புதிய துணியை அவிழ்த்து வைத்து விட்டு தன்இத்துப் போன  மங்கல் வேட்டியை கட்டிக் கொண்டு இரவோடு இரவா தனது இருளுக்குள் திரும்ப தொலைந்து போகும்.

பிறகொரு நாள் தானே நினைத்து திரும்ப வரும். ஆரம்பம் இருந்து அத்தனை காட்சியும் எப்போதும் போல் அரங்கேறும். இந்த தொடர் காட்சிகள் நீண்ட இடைவெளியாக மீண்டும் தொடராமல் அது தளரத் தொடங்கியது. ஒவ்வொன்றாக கையெழுத்து வைத்துக் கொடுத்து எஞ்சிய தன் ஒரே காணித் துண்டில் தன் பேரன் பேர்த்தியின் பழைய வீட்டுக்குள் முடங்கி கிடந்தது. எவருக்கும் அதைக் அழைத்துக் கொண்டு போய் அருகில் வைத்துப் பார்க்கத் தோன்றவில்லை. பார்க்கத் தோன்றியவர்களை, பாதுகாவல் ஒப்பம் இட்டவர்கள் அனுமதிக்கவில்லை. எதிர்த்துக் கொண்டு கடைசி காலத்திலாவது பாதுக்காப்புத் தேடும் பலம் அதற்கு இருக்கவில்லையோ, அல்லது எல்லாம் வெறுத்து போனால் போதும் என்று முடங்கிப் போனதோ தெரியாது. யாருக்கும் பாரமில்லாமல் தன் சோகங்களை முடித்துக் கொண்டு ஒருநாள் அது இறந்து போனது. ஊருக்கும் சொல்லாமல் உறவுக்கும் சொல்லாமல் வண்டிலில் ஏற்றி வெட்டியானுக்கு காசு கொடுத்து தனியாக அனுப்பிவைத்து எரித்து முடித்து விட்டு

ஒவ்வொரு காணி வித்த காசும் ஒவ்வொரு எஜன்ருக்கு கைமாறி காதலிச்ச பெட்டையளை கைகழுவிப்போட்டு ஒவ்வொரு வாரிசாக ஒவ்வொரு நாட்டுக்கு விமானம் ஏற, இரண்டு மூன்று காணிகள் வித்த காசுகளில் கெட்டுப் போன பெயர்களை சீ .... தனத்தால் ஈடுகட்டிக் கொண்டு ஒவ்வொரு அழகிகளா கழுத்தில் தாலி என்று புதிசா ஒரு நகையை மாட்டிக் கொள்ள இவர்கள் அனைவரையும் கரை ஏற்றவே பிறப்பெடுத்தது போல அருமந்த பிறவி ஒன்றை அப்பாவியாக்கி அரைவிசராக்கி மூன்று பேர் வாழ்த்த வாழ்க்கையை அர்த்தமற்று முடித்து வைத்த உறவு என்ற சுயநலங்களின் வெளிநாடுகளில் கட்டப்பட்ட ஆடம்பர சந்ததிகளின் அத்திவாரத்தில் கீழ் ஒரு ஜென்ம சாபம் புதைந்து கிடப்பதை புதிய சந்ததிகள் புரியாமல் போனாலும், தெய்வம் நின்று கொல்லும் என்பது உண்மையாக இருந்தால் ஏதாவது ஒரு அவல சந்தர்ப்பம் நேர்கையில் வீட்டு வாசலில் விரட்டியடித்தவர்களுக்கு காலம் கடந்து அவர்கள் தவறுகள் உணர்வுகளால் தண்டிக்கப் படலாம் .

இறுதியாய் அதைக் கண்ட போது வெறுப்பு வேதனை சலிப்பு எல்லாம் சேர்ந்த பெருமூச்சுடன் அதன் பார்வைக்குள் எல்லோரையும் அந்நியமாய் நோக்கிய ஒரு வெறிப்பு இருந்தது மட்டும் இன்று வரை கண் விட்டு அழியாத காட்சியாக ஞாபகம். அந்த வெறுத்த வெறித்த பார்வை தான் இறுதியில் கிடைக்கும் ஞானமோ என்பது என் இறுதி வரும் போது ஒரு வேளை எனக்கும் புரியலாம். ஆனால்....

தனிமைப் பிறப்பு என்பது பலரும் நினைப்பது போல வரமல்ல. சாபம். நெருங்கிய மனிதர்களுக்காக ஏங்கி, ஒட்டி வருபவர்களை எல்லாம் உறவென்று நம்பி , ஒட்டியிருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே இழக்கும் வரை எல்லாவற்றையும் சந்தோஷமாக இழந்து , வளையும் வரை வளைந்து இறுதியில் முறிந்து மண்ணில்  விழும் தருணத்தில், காரியம் எல்லாம் கை கூடி விட்ட பின் ,முகமூடி கழன்ற உண்மை முகங்கள் கண்டு தோற்று வெறுத்து நொந்து  ஒதுங்கிப் போகும் சாபம் அது. கடைசி நேரம் அந்த மனிதரின் கண்களில் இருந்ததும் அதுவாகவும் இருக்கலாம்.

என்ன ஒன்று உன் பலவீனம் என்று எதை நினைத்து நம்பவைத்து அடிபட்டாயோ அதையே பலமாக்கு , அதாலேயே திருப்பித்தாக்கு அடிபட்டவருக்குத் தான் தெரியும் அதை விடப் பலமாகத் தாக்கிக் கொண்டே தன்னை நிமிர்த்தும் வித்தை என்பதை உணரவும் உணர்த்தவும் சிவசுப்பிரமணியம் போல பலருக்கும் யாருமே இல்லாமல் போவதால் தர்மத்தை மிதித்துக் கொண்டு அதர்மங்கள் எழுகின்றன.

.

Friday, January 6, 2017

இருமனம் கொண்ட திருமண வாழ்வில்......

வாழ்க்கைப் பாதையில் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ நகர்வுகள் மட்டும் நிறுத்தமின்றி நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அப்படித்தான் எதிர்பார்த்து பலரும் எதிர்பாராத சிலரும் கண்டங்கள் கடந்து வேறு ஒரு கலாச்சாரப் பின்னணியில் வேற்று மொழியில் வாழும்நிலை ஏற்பட்ட , போதும் எமது உணவு வழக்கத்தில் இருந்து சடங்குகள் சம்பிரதாயங்கள் வரை பலதையும் விட்டு விட முடியாமல் , அல்லது விரும்பாமல் இன்னும் ஒரு கட்டாயக் கடமை போல் கடைப் பிடித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
.
வேறு கலாச்சார, நடை, உடை, பாவனை பின்னணியில் இருந்து வந்து முற்று முழுதாக மாறுபட்ட சூழலில் வாழ்ந்தாலும், ஆராய்ந்து பார்த்தால் எல்லா மனிதனுக்குள்ளும் அவனது அடிப்படை ஆரம்ப வளர்ப்பு வாழ்க்கை முறை தான் எந்தப் பின்னணியில் வாழும் போதும் மனதின் அடியாழத்தில் பதிந்திருக்கிறது போல் தோன்றுகிறது. வாழும் சூழலுக்கு எம்மை மாற்றிக் கொண்டு வாழ்கிறோம் என்று சொல்பவர்களில் கூட மன ஆழத்தில் அவர்களை அறியாத தாக்கமாய் அவர்களின் அடிப்படை அடையாளம் தங்கியிருந்து அரித்து அரித்து அழுத்திக் கொண்டிருக்கின்றது என்பது தான் அவர்களே உணராத அல்லது ஒத்துக் கொள்ள விரும்பாத உண்மை.
.
நாம் மட்டுமல்ல ஐரோப்பாவுக்குள் இருக்கும் ஒரே சமயத்தை சேர்ந்த வெவ்வேறு நாட்டு மக்களே வந்து சேர்ந்து வாழும் நாடுகளில் வெளியே எல்லோரும் ஒன்று போல் தோன்றினாலும் தங்கள் அடையாளங்களை தொலைக்க அவர்கள் விரும்புவதில்லை. அனேகமாக இறப்பு நிகழ்வுகள் ஒரே மாதிரி அனுஷ்டிக்கப் பட்டாலும் சந்தோஷ நிகழ்வுகளில் நாட்டுக்கு நாடு வேறுபட்ட மக்களின் வேறுபாடுகளை உணர முடியும்.
.
பொதுவா ஜெர்மானியர்கள் திருமண விழா மட்டுமல்ல பெரிதா எந்த விழா என்றாலும் அதிக விருந்தினர் ஆடம்பரம் என்றெல்லாம் அதிகம் கொட்டி செலவு செய்வதில்லை. பிள்ளைகள் வயது வர தமக்கான வழிகளில் தனியாக போய் விடுவதும் அவர்களது வாழ்க்கை, திருமணச் செலவுகளை அவர்களே பார்க்க வேண்டிய நிலையில் இருப்பதும் அதற்கு ஒரு காரணம். அந்தத் தருணத்தில் தமக்கு நெருங்கிய சிலருடன் திருமண நிகழ்வுகள் முடிந்து விடுவதும் உண்டு. சில நேரங்களில் தம் அனைத்து உடன் பிறப்புகளையும் கூட அழைக்க முடியாமல் போவதும், அழைத்தவர்களும் ஏதாவது வசதியின்மை காரணமாக சமூகமளிக்காமல் போவதும் நடக்கும் . எம்மைப் போல், ஜெர்மனியில் தங்கையின் பிள்ளை யூனிவேசிட்டி புகுமுக தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் நேரம், அதற்கு அனுசரணையாக இருப்பதை விட்டு, லண்டனில் அக்காவின் பிள்ளையின் சாமத்திய வீட்டுக்கு சாத்துப்படி சாத்திக் கொண்டு போய் சமூகமளிக்கவில்லை என்றோ, பிரான்சில் அக்காவின் கணவன் சாகக் கிடக்க கனடாவில் தங்கையின் கணவனின் பிறந்தநாள் பெருவிழாவில் ஒருதுண்டு கேக் சாப்பிட பிளேன் ஏறிப் போகவில்லை என்றோ அவர்கள் ஜென்மப் பகையை வளர்த்துக் கொள்வது இல்லை.
.
சில பெற்றோர் பிள்ளைகளின் வாழ்வின் ஆரம்பத்தில் செலவின் ஏதாவது ஒரு பகுதியை ஏற்பதும் உண்டு. ஆனால் பிரமாண்ட திருமணம் என்றெல்லாம் நடப்பதில்லை. சில வேளைகளில் மணமகளுக்கான உடையை கூட வாடகைக் கடைகளில் எடுத்து அணிந்து அந்த செலவை கூட மிச்சம் பிடிப்பதும் உண்டு,. கேட்டால் ஒரு சில மணி நேரத்துக்காக தேவையில்லாமல் காசைக் கொட்டி வாங்கி வீட்டுக்குள் வீணாக பூட்டி வைக்கவா என்று சொல்வார்கள் . அந்த நேரங்களில் எல்லாம் ஒரே விழாவுக்கு மட்டும் கட்டிய பட்டுச் சேலை இன்னொரு விழாவுக்கும் கட்டினால் கெளரவம் குறைந்து போய் விடும் என்று எங்கள் பெட்டிகளுள் தூங்கும் பட்டுச் சேலைகள் நினைவில வராமல் இருப்பதில்லை.
.
எனக்குத் தெரிந்து துருக்கியர்கள், ரஷ்யர்கள், கசஸ்தானியர்கள், சிரியர்கள் கிரீஸ் நாட்டவர்கள் எங்களைப் போலவே பெரிய ஆடம்பரமாக, அதிக கூட்டத்தோடு தான் தங்கள் வீட்டுத் திருமணங்களை பெரும்பாலும் நிகழ்த்துகிறார்கள். இதில் அழைப்பு விடும் முறை கூட எங்களைப் போவே உண்டு. பெண் எடுத்த வழி, கொடுத்த வழி சொந்தம். அவர்களை முறைப்படி அழைக்காது விட்டால் குற்றம் என்ற எமது அதே நடை முறைககள் இருந்தாலும் மொய் எழுதும் கலாச்சாரம் தவிர்க்கப் பட்டு , பரிசுகளில் அவற்றின் விலைகளில் கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் உண்டு.
.
திருமண விழா என்ற அடிப்படையில் ஒரு கிறீஹ்லான்ட் திருமணத்தை குறிப்பிடுகிறேன். இவர்களும் மற்றைய இனத்தவர்களைப் போல் தமது துணையை தாமே தேடி முடிவு செய்து கொண்டாலும், எந்த நாட்டில் வாழும் போதும் திருமணச் சடங்கை தங்கள் நாட்டுக் கலாச்சார வடிவிலேயே நடத்திக் கொள்கிறார்கள். இதில் ஒரு வினோதம் என்னவென்றால்,

                                                       

.
திருமணத்துக்காக பெண்ணுக்குத் தயார் செய்யப்பட்ட புதிய ஆடை மற்றும் சோடனை நகைகள் எல்லாம் புதிதாக மணப் பெண் அணிவதில்லை. முதலில் அவை அலங்கரிக்கப் பட்ட கட்டிலில் பார்வைக்காகப் பரப்பி வைக்கப் பட்டிருக்கும் . திருமணத்தன்று திருமணத்துக்கு முதல், மணப்பெண்ணின் மைத்துனி, அல்லது ஒன்றுவிட்ட சகோதரி அதாவது கசின் என்ற வார்த்தைக்குகுள் அடக்கமாகக் கூடிய உறவில் திருமணவயதில் இருக்கும் பெண், அப்படி குடும்பத்தில் யாரும் இல்லாத பட்சத்தில் மணப்பெண்ணின் நெருங்கிய, திருமணத்துக்குக் காத்திருக்கும் தோழி அந்த உடைகள் சோடனைகளை அணிந்து வீட்டுக்கு முன்னே வீதியில் இறங்கி திருமணத்துக்காக வீட்டுக்கு வந்திருக்கும் உறவினர் நண்பர்களுடன் நடனமாடுவாள். முதலில் அவளை நடுவில் விட்டு உறவினர் கூட்டம் சுற்றி நின்று நடனமிட்டு , பின் தம் கைகளோடு அவளின் கைகளை இணைத்துக் கொண்டு வட்டமாக சுற்றி ஆடுவார்கள். அவர்களைப் பொறுத்தளவும் இப்படியான நிகழ்வின் மூலம் கல்யாணத்துக்குக் காத்திருக்கும் அந்தப் பெண்ணுக்கு விரைவில் திருமணம் நிறைவேறும் என்பது அவர்களின் ஐதீகம். அதன் பின்னே மணப்பெண் அந்த உடையை அணிந்து திருமணத்துக்குத் தயாராவார்.
.
நிச்சயதார்த்தத்துக்கு இடது கை மோதிர விரலிலும் , திருமணத்தின் போது வலது கை மோதிர விரலிலும் மோதிரங்களை அணிவித்து, தேவாலயத்தில் திருமணத்தை முடித்துக் கொண்டு மண்டபத்துக்கு வரும் போது, வாசலிலேயே இரண்டு வீட்டு உறவினர்களும் இரு பக்கமும் கூடி நின்று காலகாலமாய் ஒரே ஒரு வாழ்த்துப் பாடலை மட்டுமே இசைக்கிறார்கள் . ( அந்தப் பாடல் link ஐ கீழே இணைக்கிறேன். ) பின்னர் அவர்களின் விருந்துகள் ஆட்டம் பாட்டம் எல்லாம் ஒரே மாதிரியான மற்ற இனத்தவர்கள் போலவே இருந்தாலும் தமக்கான சில அடையாளங்களை எந்த இனமும் இலகுவில் மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை. என்பதை நாடு விட்டு வந்து நான்கு தலை முறை கடந்த பின்பும் நடந்த இந்த திருமணம் காட்சிப் படுத்தி, நாலு தலை முறையும் ஒரே குரலில் உறுத்திப் படுத்தி இருந்தது.
.
கலாச்சாரங்களும் , காட்சிகளும் வேறு பட்டிருந்தாலும் உலகமெல்லாம் அநேகமான திருமணங்களின் எதிர்பார்ப்பும் இருமனம் ஒன்றி இறுதி வரை இணைபிரியாமல் வாழ வேண்டும் என்பதாகவே இருக்கிறது . மனதைத் தவிர்த்து விட்டு மற்றவற்றைக் கவனித்து நிகழ்த்தப்படும் திருமணங்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்பது புரியவில்லை. சிலவேளை அதில் ஒரு மனம் இப்படி ஒரு வாழ்நாள் எதிர்பார்ப்பில் இருக்கக் கூடும். கூடி ஒலிக்கும் வாழ்த்துக்களும் வாழ்தலையே ஓங்கி ஒலிக்கின்றன . இறைவனும் அப்படியே தான் ஆசிர்வதிக்கிறான் என்று நினைக்கிறேன். ஆனால் எந்த விழா எப்படி நடந்தாலும் .......,
.
"வாழ்கின்ற வாழ்வினில் அன்பிருந்தால் தான் வெள்ளி விழாக்களும் உண்டு. "

Sunday, January 1, 2017

கலாச்சாரத்தின் பெயரால் விலை போகும் கலாச்சாரம்


கண்டம், நாடு,  இனம் , மொழி, சமயம்   என்ற  ரீதியில்   தான்  அனேகமாக  நாங்கள்  எங்கள்  கலாச்சார   பண்பாட்டு  விழுமியங்களைக்   கடைப்பிடித்துக் கொண்டும்  அடையாளப்படுத்திக் கொண்டும்  இருக்கிறோம்.  இருந்தும்   கண்டம் , நாடு   தாண்டி  வாழ  நேர்கையில்  வாழ்வதற்கான  சந்தர்ப்பங்களை  நாமே  தேடிக் கொள்ளும்  போது  அவைகளைத்  தொடர்வதற்கான   வாய்ப்பு  வசதிகள்   ஓரளவு  குறைவாகவே   இருந்தாலும்  முற்று  முழுதாக  அவைகளை   விட்டுக் கொடுக்க வேண்டிய   சூழ்நிலைக்கு  யாரும்  யாரையும்   வற்புறுத்துவதில்லை.  எங்கள்  வாய்ப்புக்கள்  வசதிகளை  நாடி  நாமே  அவைகளை  விட்டு   ஒதுங்கி  விடுவது  தான்  த ற்போதய  சூழலில்  அதிகளவு  நிதர்சனமாக  இருக்கிறது  போலிருக்கிறது.
.
போரின்  போர்வையில்   ஈழத்தமிழர்கள்   புலம்பெயர்ந்த   ஆரம்ப  காலங்களில்   வதிவிட  அனுமதி பெற்றுக் கொள்வதற்காக  வெள்ளையினப்  பெண்களை  மணந்த  ஆண்கள்  உண்டு.  பின்னாட்களில்  ஒரு  வித  ஒப்பந்தம் போல  வதிவிட   அனுமதிக்காக  வெள்ளையினப் பெண்ணை பெயருக்கு  சட்டப்படி   மணப்பதும்   குறிக்கப்பட்ட   காலத்தின்   பின்  விசா   நிரந்தரமாகியதும் ,  சட்டப்படி  விவாகரத்து   எடுத்துக் கொண்டு  ஆரம்பத்தில்  பேரம் பேசப்பட்ட   தொகையை   அந்தப் பெண்ணுக்குக்  கொடுத்து   ஒப்பந்தத்தை  முடிவுக்குக்  கொண்டு   வருவதுமான   நடைமுறைகளும்   இருந்தன.  காலப் போக்கில்   அரசாங்கங்களுக்கு   மூக்கில்  வியர்த்து   சட்டத்தை   இறுக்கிய பின்  இந்த  நடை முறையும்  காலாவதியாகியது.
.
இருந்தும் தங்கள்   எதிர்பார்ப்புக்களை   பூர்த்தி  செய்து  கொள்ள   காலத்துக்குக்  காலம்  மக்கள்  எதோ  ஒரு  விதத்தில்   புதிய  யுக்திகளைக்  கண்டு பிடித்துக்  கொண்டு  தான்  இருக்கிறார்கள்.  அப்படிப்பட்ட   இரண்டு  சம்பவங்கள்   தான்  நான்  தொடர்ந்து   உங்களுடன்  பேசப்போகும்  விடயம்.   அதிக  தூரத்துக்கு, எனக்கு  அந்நியமான   இடங்களுக்கு  சென்று  இந்தப்  பிரச்சனை பற்றி   எடுத்துக்காட்ட   நான்  விரும்பவில்லை.  நான்  வாழும்  சூழலில்  எனக்கு   மிகவும்   அண்மிய  பகுதியில்   நடக்கும்  சம்பவங்களும்  நேரடி  உரையாடல்களுமே  இக்கட்டுரையின்  மூலாதாரம்
.
கோடைகால   மாலை  நேரங்களில்  காலாற   நடக்கும்,  அடுக்குமாடித்  தொடர்களில்   வசிப்பவர்கள்   வெளியில்  வந்து   இயற்கைக்  காற்றை   உள்ளிழுத்து   ஆழச்  சுவாசிக்கும்   அமைதியான   பூங்கா   அது.  சுற்றிலும்   அண்மைக்காலத்தில்   மிக  அதிகமாக   தன்னை  விஸ்தரித்துக் கொண்டு,  இது  வரை   இருந்த   டொச்  மொழிக் கல்வி  தவிர   ஆங்கிலமொழி  உயர்கல்விக்   கூடங்களை  அதிகமாக  உருவாக்கிக் கொண்டு   வெளிநாட்டு  மாணவர்களுக்கு   அதிக  வாய்ப்புக்களை    கொடுத்திருக்கும்  பல்கலைக்கழகங்கள்.   அதைச்  சூழ   உள்ள  வீடுகளில்  வாடகை  கொடுத்துத்  தங்கியிருக்கும்   வெளிநாட்டு   மாணவ  மாணவிகள். 
.
இந்த   வெளிநாட்டு   என்ற  பதத்துக்குள்   அதிகம்  அடக்கமாகி   இருப்பவர்கள்   ஆபிரிக்க,  ஆசிய   இனத்தவர்கள். இதில்   இலங்கையில்   இருந்து   கற்க  வந்தவர்கள்  0.01 % வீதமாக   இருக்கலாம்   அதற்கு   உயர்கல்விக்கு   செல்வதெனில்   ஆங்கில  நாடுகளுக்குத்  தான்  செல்ல  வேண்டும்   என்ற   எம்மவர்களின்   மன  நிலை  தொன்று  தொட்டு    மாறாமல்  இருப்பதும்  ஒரு  காரணமாக   இருக்கக்  கூடும்.   மற்றப்படி  அனேகமாக   எல்லா  இனங்களுமே   சம  அளவில்   கற்கும்  இதில்  கிட்டத்தட்ட   எங்கள்  அடிப்படைக் கலாச்சாரத்தோடு   ஒத்துப் போகக்  கூடிய ,  எங்களை  விட   கலாச்சாரம்   பண்பாடு   அதற்கான   கவுரவக்  கொலைகள்   என்று  கூச்சல்   போடும்  அயல் நாடான  இந்தியாவில்   இருந்து  வந்த   மாணவ  மாணவிகள்  பலரின்   கலாச்சாரம்    பற்றிய   சிறு  கண்ணோட்டமே  இக்கட்டுரை. 

.
சம்பவம் 1 :=
-----------------
அந்த மனிதர்   65 தாண்டிய   ஜேர்மனிய   இனத்தவர்.     அதாவது   பணியில்   இருந்து   ஓய்வு பெற்று விட்ட   வசதியான  மனிதர்.   வயதின்  காரணமாக    செய்யப்பட்ட   கண்பார்வைச்  சிகிச்சையின்  பின்   இன்னும்  சற்று   அதிகமாக   கண்பார்வை  பாதிக்கப்பட்ட,   பார்க்கும்  திறனை  இழந்து   விடாத  மனிதர்.   கடந்த  முப்பது   வருடங்களுக்கு  மேலாக   விடுமுறை நாட்களை   இலங்கை   இந்தியாவில்   மட்டுமே   களித்துக் கொண்டு,  அந்தக்  கலாச்சாரங்களை , உணவுவகைகளை   அங்குள்ள  மக்களின்  அழகை , பண்பை   மிக  நேசிக்கும்   ஆசியப் பெண்  எனில்   கை  குலுக்கிக் கொள்ளக்  கூட அவர்கள் பண்பாடு  இடம் கொடுக்குமோ என்று   யோசிக்கும்  மனிதர்.    எனக்கு   ஓரளவு   அறிமுகமானவர்.  மனம்  விட்டுப் பேசும்,   உலக  நடப்பு  விவாதிக்கும்  நண்பர்.  அந்தப்  பூங்காவில்   ஓய்வாக ,நான்  கொண்டு  சென்ற  வேலைகளில் கவனமாக  இருந்த  என்  அருகில்   வந்து  அமர்ந்தார்.
.
தன்  பெரிய வீட்டில்    தனக்காக  ஒரு  பகுதியை தனியான வெளி  வாசல்  உள்ள வாழ்விடமாக    ஒதுக்கிக் கொண்டு   மிகுதியை   அடிப்படைக்  கட்டணச்    செலவுகளை   பூர்த்தி செய்யக்  கூடிய   அளவு  குறைந்த    வாடகை  மட்டும்  வாங்கிக்  கொண்டு   இந்திய   மாணவிகளுக்கு  வாடகைக்கு  விட்டிருக்கும்  மனிதர். அவரது  முக்கிய தேவை  வாடகை  மூலம்  வருமானம்  அல்ல. தாராளமாக  ஓய்வூதியம் பெறக்கூடிய  பணியிலிருந்து ஓய்வு பெற்ற அவர்   அந்த  வீட்டுச்  சூழலில்   தன்  தனிமை  போக்கப் பட  வேண்டும்  என்பதற்காகவே  வாடகைக்கு விட்டிருந்தார் .
.
 கல்விக்காலம்  முடிய  சொந்த  நாட்டுக்குத்   திரும்பிப்  போகவேண்டிய   நிலையில் வதிவிட அனுமதி   இருந்தும்  வழமையான   பல  மாணவிகள்   போல  அவர்  வீட்டில்  தங்கியுள்ள மாணவிகள்  பலருக்கும்    திரும்பித்  தாய் நாட்டுக்குச்  செல்வதில்   விருப்பம்   இல்லை.  அப்படியாயின்  அவர்கள்   இங்கேயே  நிரந்தரமாக   ஒரு  வேலையைத்  தேடிக் கொண்டு  தொடர்ந்து  வேறு  ஏதாவது   படிப்பதாக   விசாவை   நீடிக்க  முடியும்.  ஆங்கிலத்தை  மட்டும்   வைத்துக் கொண்டு இந்த நாட்டின்  உயிர்நாடியான  டொச்  மொழி   தெரியாத  இவர்கள்,    இவர்களது   உயர்கல்விக்கு   ஏற்ற வேலைகளை   இங்கு  தேடுவது   சிரமமானது .  ஆகவே   அவர்கள்   விரும்பாவிடினும்   திரும்பிச்  செல்லவேண்டிய   நிலைப்பாடே   நிர்ப்பந்தமாக   இருக்கையில்,  திரும்பிச்  செல்லாமல்   இருப்பதற்காக   அவர்களில்   சிலர்   எடுக்கத்  துணியும்  விபரீத  முடிவுகள்   தான்  வேடிக்கையானது.
.
வாடகை   வீடு  கொடுத்த  அந்த  மனிதரிடம்   என்னைத்  திருமணம்   செய்து  கொள்கிறாயா உன்  கண்  தெரியாத   குறைக்குக்  கண்ணாக   உன் வயோதிபத்துக்குத்  துணையாக   உன்னோடு   இருக்கிறேன்  என்று   கேட்ட   மாணவியின்   வயது   23,   தான்  போட்ட   திட்டத்தை   அவள்   பிடுங்கிக்  கொண்டு  வென்று  விடப் போகிறாள்   என  சண்டை போட்டு   விடயத்தை   அம்பலத்துக்குக்  கொண்டுவந்த   மாணவியின்   வயது   22  இந்தக்  கேலிக் கூத்தைப் பார்த்து   விக்கித்து   நின்ற,   வேடிக்கையாகச்  சிரித்த   மாணவிகளும்   உண்டு.  
.
இதனைச்  சொல்லி  விட்டு

 "எனக்குத்  தெரியும்   தனியாக   இருக்கும்  வாரிசற்ற  என்  இறப்புக்குப்  பின்  என்   சொத்துக்கள்,  வங்கிப் பணம்,  முக்கியமாக   திருமணத்துக்குப் பின்  கிடைக்கும்   நிரந்தர  வதிவிட   உரிமை   இவைதான்   அவர்களுக்குத்  தேவை. நான்  இறந்த  பின்  அவளுக்குப்  பிடித்த  அவளது  நாட்டுக்காரனை   இங்கு  கூப்பிட்டுக்  கொள்வாள் "  என்றார்  அந்த  மனிதர் .

 " எப்படித்  தெரியும்"   என்றேன்.  "அவர்கள் போட்ட   சண்டையில்   சேர்ந்து   போட்ட  திட்டம்  எல்லாம்  வெளியில்   கக்கியதைப்  பார்த்தேன்"   என்றார்.

"வேற்று மொழியாயிற்றே  உங்களுக்கு  எப்படிப் புரிந்தது " என்றேன் 

"அவர்களும்  வேறு வேறு  மாநிலத்தைச்  சேர்ந்த  வெவ்வேறு மொழியைப் பேசுவோர்  தான்   ஆதலால்  ஆங்கிலத்தில்  தான்  பொதுவாகப் பேசிக் கொள்வார்கள்.  எனக்குத் தாராளமாக   அங்கிலம்  தெரியும்"  என்றார்.

  "ஆசிய   நாடுகளை ,  அதிலும்   இலங்கை  இந்திய   கலாச்சாரப்  பண்பாடுகளை   அதிகம்  விரும்புபவன்   நான்  இவர்கள்   இவ்வளவு   கேவலமாக   அதை  விலைபேசி   வெளிநாட்டில்   வாழ்க்கையைத்  தக்கவைத்துக் கொள்ள   முயற்சிக்கும்   வழிவகை   ஒரு  வித   விபச்சாரத்  தனமாக   உள்ளது"

   என்று  சொன்னபோது   காறித்  துப்பவில்லை   கண்கள்   நடிப்பில்லாமல்   கலங்கியிருந்தன.   அந்த  இடத்தில்   நாம்  பேசிக்கொண்டிருந்த  நேரத்தில்  எம்மைக்  கடந்து  சென்ற   மாணவிகள்   பலரின்  திரும்பிப்   போக  விருப்பமில்லாத   பலவிதமான   குரல்களில்   இதுவும்  ஒன்று.


.
சம்பவம் 2 :=
---------------
  நான்  வேலைபார்க்கும்   நிறுவனத்துக்குள்  அதிகளவில்   உள்வாங்கப் பட்டிருக்கும்,   கல்லூரி   விடுமுறைக் காலத்தில்  மட்டும்  வேலை பார்க்கும்  மாணவ, மாணவிகள். வேலை   மற்றும்  இடைவேளை  நேரங்களில்  அவர்கள்   ஒன்றாகக்  கூடிக்  கொள்ளும் போது  சலிப்புகள் அற்ற    அவர்களது   கலகலப்பு  எனக்கு  மிகவும்  பிடிக்கும்.   ஆகவே   வேலை  நேரங்களிலும் , வசதி  கிடைக்கும்  போது  அவர்கள்  பகுதியில்   எப்போதும்  என் பார்வை இருந்து  கொண்டிருப்பதும்   புதிதாக   அதுவும்  விடுமுறைக்கால   வேலைக்கு  வருபவர்களை   அதிகளவில்  தங்களுடன்  சேர்த்துக் கொள்ள  விரும்பாத,   நட்புடன்  நெருங்காத அநேக    சக  ஊழியர்கள்   மத்தியில்  இவர்களுடைய  தேவைகள்   வேலைகள்   பற்றிய இரண்டு  பகுதிக்கும்  பாலமாக  இருக்கும்  பொறுப்பு    என்னிடம்  இருப்பதால்  அவர்களுடன்   நெருங்கிப் பேசவும்   அவர்கள்   நெருக்கமாக   என்னோடு  நட்புக் கொள்ளவும்  வாய்ப்பான  சந்தர்ப்பங்கள்  அதிகம்.
.
அவர்களில்  பொதுவில்   கவனித்த   ஒரு  விடயம்    இந்திய,  பாகிஸ்தான்,  பங்களாதேஷ்   போன்ற   இடங்களில்  இருந்து   வந்த  மாணவர்கள்   அதிகமானவரை   மற்றைய   வெள்ளைத்தோல்   மாணவர்களிடம்   இருந்து  விலகி  வேலைமறந்து   சுவாரசியமாக   மாணவிகளை   பேசிப்பேசி  தம்  கட்டுப்பாட்டுக்குள்   கொண்டுவரப்   பிரயத்தனப் பட்டுக்  கொண்டிருப்பார்கள்.  ஆரம்பம் அது  வயதுக் கோளாறு    என்றே    தோன்றினும்   போகப்போக   அதன்  ஆழத்தில் என்னவோ   உறுத்தியது.  மெல்ல  மெல்ல   கதை   போட்டுப்  பிடுங்க  பிடுங்க   வெளிவந்த  விடயம்  மனதுக்கு   சற்று  அருவருப்பும்   மிக வெறுப்பும்  தந்தது.  இந்தப் பெண்களோடு  நெருக்கமாகி  சேர்ந்து  ஒரு வாழ்க்கையை  தொடங்கி திருமணப்பதிவு  வரை சென்று விட்டால் விசா   பிரச்சனை  தீர்ந்து  விடும். சொந்த நாட்டுக்குத்   திரும்பிப் போக வேண்டி  நேராது  என்பது  தான்  அவர்களின்  பதிலில்  மறைந்திருந்த  அடியாழத்  தொனி.  அதிலும்  ஒருவன்   நேரடி  வாக்குமூலமாகத்  தந்த போது  அதிர்ந்து   போனது   மனது.
.
சாப்பாட்டு   நேரம்  கடந்த   ஓய்வு  நேரத்தில்  எதிரில்  வந்து  அமர்ந்தான்   அவன்.   வேலையிடம்  தவிர   அவனைப் பலமுறை  பல  இடங்களில்  எனக்கு   மிக  அறிமுகமான   ஜேர்மனிய   இளம்பெண்  ஒருவருடன்   நட்பு   எல்லை   தாண்டிய   சற்று  நெருக்கத்தில்   கண்டிருந்ததால்   "உனக்கு   மெலானியை   தெரியுமா "  என்றேன்.  சட்டென   காரணமற்று  அவன்  முகம்  இருண்டது.  எதோ   களவு   கண்டுபிடிக்கப் பட்டது   போல  பார்வை   தடுமாறியது.   சும்மா  சொல்லு.  காதல்   தானே   என்றேன்   வேடிக்கையும்  கிண்டலுமாக.  பதிலில்லாமல்   எங்கோ   பார்த்தான்.

 "சரி...  மெலானியை ப்பற்றி   உனக்கு  நன்றாகத்   தெரியுமா"   என்றேன்.
"ஆமாம்   அவள் என்னுடன்   கூடப்படிப்பவள்   மற்றைய  மாணவ மாணவிகளை   விட   ஆரம்பத்திலேயே  என்னை  நெருங்கியவள் "என்றான்.
 "அவ்வளவே  தானா "  புன்னகைத்தேன். 
"இல்லை  நான்  அவளோடு  தான்  தங்கியிருக்கிறேன்".   
"அதாவது" 
"லிவிங்  டு கெதர்".
"உன்   செலவுகள்   இந்த  விடுமுறைக்கால   வருமானத்துக்குள்   கட்டுபடியாகுமா?"
"மெலானியிடம்  சொந்தமாக   பிளாட்   இருப்பதால்   தங்குமிடச்  செலவு   என்னை   அதிகம்  பாதிப்பதில்லை .  மிகுதிக்கு   இப்படி   வேலை   செய்வது   போதும்   வரும் போது  கட்டாய  வைப்பில்  இட்ட  தொகை  அப்படியே   உள்ளது.  எக்ஸாம்  பணம்  கட்ட  நேரும் போது அதிலிருந்து  கட்டிக் கொள்வேன் ."
"மெலானியை   திருமணம் செய்து கொண்டு   இங்கேயே   செற்றில்  ஆகிவிடப் போகிறாயா?"
"இங்கே   செற்றில்  ஆகும்  விருப்பில்  தான்   படிப்பு  முடிய   அவளைக்   கட்டிக் கொள்ளலாம்   என்று   நினைக்கிறேன். "
"உன்   ஆசியக்  குடும்பம்   வேறு  எதிர்பார்ப்புக்கள் வைத்திருப்பார்களே" 
"அவர்கள்   இப்படி   ஒரு  கல்யாணத்தை   ஏற்க  மாட்டார்கள்   இதையும்  நான்   தொடர்ந்து  வாழ்வதற்காக   கட்டப்  போவதில்லை.  விசாவுக்காக."
"மெலானி   பாவம்  இல்லையா?" 
"வெள்ளைக்காரர்களுக்கு   கற்பு ,  ஒருத்தனோடு மட்டுமே  வாழ்க்கை   அப்படி  எல்லாம்  ஒரு   ஒழுங்கான  கலாச்சாரம்   உண்டா   என்ன.  இப்போது   நான்  தேவைப்படுகிறது   அவளுக்கு   எனக்கு   அவள்  மூலம்  சில  சலுகைகள்   தேவைப்படுகின்றன.  கொடுத்து  வாங்கல்  அவ்வளவே. நான்  அப்படி   ஒரு  வாழ்க்கை  தேடிக் கொண்டால்   என்னவர்களால்    தாங்க   முடியாது.  என்னாலும்  அப்படியோர்   வாழ்க்கையை ஏற்று   வாழ  முடியாது.  இங்கு  என்னை   அனுப்பி   படிப்பிக்க  என்  குடும்பம்    எவ்வளவு   கஸ்ரப்பட்டு  பணம்  ஒதுக்கியது   என்பதை   நான்  அறிவேன்.  நான்  இங்கேயே   வாழ்க்கையை  தொடக்கி  விட்டல்   அந்தப் பணத்தை   எப்படி திருப்பிச்  செலுத்துவது.  என்  அன்பான  குடும்பம்  என்மீது   வைத்த   நம்பிக்கையை   என்ன  செய்வது ?"
"அப்போ   அவர்கள்   அனுப்பி  படிப்பித்து   வாங்கிய   சான்றிதழையும்   மெலானி  மூலம்  கிடைக்கப் போகும்   வதிவிட   உரிமையையும்   கொண்டு   அதிகமான   விலைக்கு   நீ   விலை   போகப் போகிறாய். பின்   உன்னை   அதிக  விலை  கொடுத்து   வாங்கியவளுடன்  இங்கு  வந்து   வாழப் போகிறாய்   மெலானி   பற்றி   யோசித்தாயா?"
"அவர்களுக்கு   இதெல்லாம்   பெரிய   விடயம்  இல்லையே   நான்  போனால்   நாளை   இன்னொருவன்"
"சொன்னாளா   உனக்கு?"  
"இல்லை   அப்படித்  தானே   இங்கு  நடை முறை."
"கற்கவந்ததே  இரண்டு  வருடக்  கல்வி   அதில்   ஒரு வருடத்துக்குள்   இவ்வளவு   அறிந்திருக்கிறாயே.   உன்  பார்வையில்   அவர்கள்   காதலற்ற ,  கனவுகள்   இல்லாத ,  காமம்   மட்டுமே   கொண்டவர்கள்.  ஒரு   துணையை  நேசித்து   அதனுடன்  மட்டும்  வாழ   முடியாதவர்கள்.  அப்படித்தானே ?" என்றேன்.
'ஆம்'  என்பது போல  அமைதியாக இருந்தான்  
"என்  பார்வையில்   நீ  செய்வது   என்ன  தெரியுமா ?  உன்  தேவைக்காக   உன்னை ,  உடலை  , மனச்சாட்சியை  , விற்கும்   விபசாரம்   ஆண்  விபச்சாரம்"
முகம்  கன்றியது . என்  வார்த்தைகள்   அவனைக்  குத்தியிருக்கலாம்   அது பற்றி   எந்த   குற்ற  உணர்வும்  எனக்கில்லை .  காரணம்  இந்த  ஒருவனின்   வாயில்   ஒலித்தது     பலரின்  குரல் என்பதும்    பாதைகள்  மட்டுமே  வேறு  வேறு என்பதும்   நான்  கண்டிருக்கிறேன்  .
.
அந்த  மெலானி     வசதியான   குடும்பத்தைச்   சேர்ந்த ,  விவாகரத்தான  பெற்றாருக்குப்   பிறந்த ,  பாசத்துக்கு ,  நிரந்தர   குடும்ப   அமைப்பு  முறைக்கு   ஏங்கும்  ஒரு  பெண்.  வாழ்க்கை   பற்றிய   ஆசியக்  கனவுகள்   அவளுக்கு   ஏராளம். அவளது   கற்பனைகள்    பாட்டியாகி ,  பூட்டியாகி   என்று   கூட்டுக் குடும்ப   ஆசையில்   விரியும் .     இந்தியத்  திரைப்படங்களைப் பார்த்துப் பார்த்து   அப்படி  ஒரு  வாழ்வுக்காக  ஏங்கி   ஆசியக்  கணவனுக்காய்   காத்திருப்பவள்.  இவனது  மனநிலை  அறிந்தால்  அவளது  மனதில்  அது  எத்தனை  பெரிய  பாதிப்பைத்  தரும் விடயமாக   அமையும்  என்று  நினைத்துப் பார்த்தேன்
.
ஆக   மொத்தத்தில்   கலாச்சாரம்  கலாச்சாரம்   என்று  வாய்கிழியக் கத்திக்  கொண்டிருக்கும்   நாம்  தான்   வசதிகளுக்காகவும்  வாய்ப்புக்களுக்காகவும்   அவைகளை   கேவலமாக   விலைபேசிக் கொண்டிருக்கிறோம்  என்று  தோன்றுகிறது.   கூக்குரல்  இடாதோர்  இயல்பாகவே  வாழ்க்கையை  ரசித்து  அனுபவித்துக் கொண்டு அவர்கள் அவர்களாகவே  நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்  போலிருக்கிறது.

பி.கு./ துருக்கி  போன்ற  நாடுகளிலிருந்து  வரும் ஆண்களுக்குள்ளும் வெள்ளையினப்  பெண்களை  உறவுமுறையை பயன்படுத்தி  ஆதாயம்  பார்க்கும்  இந்தக்  கேவல  நடைமுறை  நன்றாகவே  ஊடுருவியிருக்கிறது என்பதை   பல ஜேர்மனிய  துருக்கியப் பெண்களின்  வாக்குமூலங்களில்  இருந்து  அவதானிக்க  முடிந்தது.