Sunday, March 7, 2021

தட்டிவான் காதல் 4 இறுதிப்பகுதி

 தட்டிவான் காதல் பகுதி 4. (இறுதி)

,..............................................................
"இப்ப பார் அந்தத் தட்டிவான் எங்களுக்குக் கிட்ட வந்து நிக்கும் "Z
"எப்பிடித் தெரியும் உனக்கு" Y
"காதலுக்கு எண்டொரு ஈர்ப்பு சக்தி இருக்கெடா . இவளின்ர கனகாலக் காதல் தவம் தான் அந்தத் தட்டிவானைத் தேடி வர வைச்சிருக்கு . " Z
நாம் நின்ற அவல நிலையிலும் அவங்களின் கிண்டல் சிரிப்பு வந்தது
அந்த செம்மண் நிற கிரவல் ரோட்டுக்கு குறுக்கால நிண்டு மறிச்ச பிறகு தான் தட்டிவான் நிண்டது . கிழங்கடுக்கினமாதிரி பிதுங்கப் பிதுங்க மனிதர்களை ஏற்றியிருந்தது. தட்டி கழட்டித் தொங்க விடப்பட்டிருக்க , விழிம்பு வரை சனம் வழிந்து கொண்டிருந்தது. அதற்குள் பயணவழியில் அங்கின்கென கூட வந்த, தலைகள் சில தெரிஞ்சது. எங்களைக் கண்டதும் விளிம்பில் தொங்கிய சிலர் கிடந்த கொஞ்ச இடத்தையும் அடைச்சு காலை அகட்டி வைச்சினம். இன்னும் சிலர் இதுக்கு மேல எத்தாதேங்கோ மூச்சு முட்டிச் சாகப் போறம் எண்டு ஓலமிட்டிச்சினம்
தட்டிவானை ஓடியவர் இறங்கி பின்னால வந்து மினிவான் கிளீனர் போல" உள்ளபோ உள்ளபோ" எண்டு கத்தினார் . எங்கேயோ கந்தோரில் வேலை செய்யிற மாதிரி தோற்றமிருந்த அப்பா வயதுக்காரர் "இன்னும் நாலுபேரை ஏத்துறது எண்டால் நாங்கள் நசுங்கிச் சாகிறதோ " எண்டு சண்டைக்குப் போனார்.
"ஏனையா தெருவில நிண்டு கையாட்டேக்க சனம் கூடிப் போச்சு எண்டு நானும் உங்களை ஏத்தாமல் வந்திருக்க வேணும். இருட்டப் போகுது இளம் பெடியள் . பொம்பிளைப் பிள்ளை வேற கூட நிக்குது. எந்தப் பக்கத்தால எவன் வந்து முடிப்பான் எண்டு தெரியாமல் கிடக்கு நிலைமை. விட்டிட்டுப் போவம் எண்டு சொல்லுற நீயெல்லாம் என்ன மனுசன் ஐயா "
"அப்ப அதை மட்டும் ஏத்துங்கோ போதும்"
"நான் தனியா போகமாட்டேண்டா. உங்களை விட்டால் எனக்கு ஆரக் கண்டாலும் பதட்டமா இருக்கும்"
"உங்கட பிள்ளையள் எண்டால் இளந்தாரிப் பிள்ளையளை இந்த நிலையில நடுத்தெருவில நிக்க விட்டிட்டுப் போகச் சம்மதிப்பீங்களே" எண்டு அதட்டிப் போட்டு ஏறுங்கோ பிள்ளையள் எண்டார்.
படியில்லாத தட்டி வானில் ஏறமுடியாமல் தடுமாறி,ரெண்டு மூண்டு தரம் உன்னி, பிறகு அவங்கள் மேல ஏறிநிண்டு கைகுடுக்க பிடிச்சுக் கொண்டு உந்தி ஏற , காத்திருந்தது போல அவ்வளவு நேரமா மழையில் ஊறின செருப்பு ஒட்டுவிட்டு அறுந்து தொங்கியது. அதை அதிலேயே கழட்டிப் போட்டுவிட்டு . மேலே ஏறி அதன் கூரையில் பிடிச்சுக் கொண்டு கழுத்தை வானுக்கு வெளியால நூற்றிப் பத்துப் பாகையில நீட்டிக் கொண்டு பயணம் செய்யத் தொடங்கின பிறகு தான் தட்டிவானில தொங்கிறது எவ்வளவு கஸ்ரமெண்டு தெரியத் தொடங்கிச்சு.
அந்தளவு பேரையும் ஏத்திக்கொண்டு பெறுமாதப் பிள்ளைத்தாய்ச்சி லேபர் ரூமுக்குப் போற மாதிரி அசைஞ்சு அசைஞ்சு தட்டிவான் ஊர்ந்த அழகிருக்குப் பாருங்கோ சொல்லி வேலையில்லை. அதுக்குள்ள பொன்வானம் பன்னீர் தூவுதே இந்நேரம் .....எண்டு மழைக் காதலன் வேறு தட்டிவானுக்கு ஈடு கொடுத்துக் காதலித்துக் கொண்டிருந்தான்
"டேய் இண்டைக்கு இவள் ஜென்ம சாபல்யம் பெற்ற நாள்" Z
"ஏண்டா"X
"தட்டிவான், மழை என்று எல்லாக் காதலர்களோடும் கூடியிருக்கிறாள்" Z
"எருமை வாயை மூடு நாங்க மட்டும் தனியா இல்லை இதில . சனம் கண்டபடிக்கு கற்பனை பண்ணப் போகுது"Y
நெருமிக்கொண்டே கிசுகிசுத்ததும் அடங்கினான்
மழையில் கால் ஊறி தட்டிவானின் விளிம்புத் தகரத்தில் அழுத்தமாய் அண்டி வெட்டுவது போல வலித்தது. உள்ளங்கையும் விரல்களும் விறைத்துச் சூம்பி பிறந்த பிள்ளையின் கைகளைப் போலிருந்தன. மேல் தட்டியை பலமாகப் பற்றியிருக்க முடியவில்லை. நனைந்த சட்டை அப்போது தான் மனதை உறுத்தியது. அவங்கள் தவிர்ந்த எல்லாரும் உற்றுப் பார்ப்பது போல உடல் கூசியது.
"என்னால முடியல்லடா நோகுது ".
"கொஞ்ச நேரம் பொறுத்துக் கொள். எவ்வளவு எல்லாம் கடந்து வந்திட்டம்." Y
"கை நிக்குதில்லைடா விழுந்திடுவன் போல இருக்கு"
"அழுதிடாத மனப் பலத்தை விட்டால் தான் விழுவாய்" X
"முடியல்லடா கை விட்டிடும் போல இருக்கு"
"கீழ குனிஞ்சு ரோட்டைப் பார்க்காத தலை சுற்றும்"Z
அதற்குள் வானுக்குள் தரையில் இருந்த பெண் "புள்ளை இதில வந்து இரம்மா" எனக் கூப்பிட்டார். ஆட்களுக்கு இடையால் கண்ணை நுழைத்துப் பார்க்க வயலோடு காய்ஞ்சு வைக்கல் போலயிருந்தார். "இடமில்லையேம்மா அங்கே" என்றேன்.
"தலை சுத்திக் கித்தி ரோட்டில விழுந்து போகாத இதில இரு "எண்டு மடியை காட்டினார் .
அம்மம்மா வயது அம்மாவின் மடியில் இருக்க மனம் வரயில்லை அவவை க் கட்டிப்பிடிச்சுக் கொஞ்ச வேணும் எண்ட விருப்பம் மட்டும் வந்தது.
"இன்னும் முடியாட்டில் வந்து இருக்கிறன் அம்மா".
அவ கோதாரில போவார் கொள்ளை கொண்டு போகட்டும் எண்டு யாரையோ திட்டினா . அது அந்த வானில் வந்தவர்களையோ அவரது குடும்பத்தினரையோ இல்லை எண்டு புரிஞ்சுது.
"நாங்கள் கையை இணைச்சுப் பிடிச்சிருக்கிறம் நீ மெதுவா மேல பிடிச்சுக் கொண்டு எங்கட கையில சாய்ஞ்சு நில்" Y காதுக்குள் கிசுகிசுத்தான்
தலையைத் திருப்பிப் பார்த்தன் தட்டிவான் விளிம்பில் முழுபாதமும் பதிக்க இடமில்லாமல் குதி வெளியில தொங்க காலூண்டியிருந்த அவங்களின் கைகள் ஒரு பலமான சங்கிலியைப் போல இறுக்கமாகப் பிணைஞ்சிருந்தன. விபரிக்கத் தெரியாமல் என்னமோ ஒரு உணர்வு. ஆனால் அழுகை வந்தது. இந்தக் கைகளின் இறுக்கம் ஒருகாலமும் பிரியவே கூடாது. என்றது மனம் திடமாய் .
தட்டிவானை விட சைக்கிளில் வேகமா போகலாம் போல இருந்தது .
சாவகச்சேரிக்குக் கிட்ட மட்டும் தான் தட்டி வான் வந்தது . அப்போது இரவு ஒன்பது, பத்து ஆகியிருக்கக் கூடும் அதுக்குமேல எங்கேயும் போக முடியாது
சாவகச்சேரியில் அவனின்/ அவங்களின்/ எனதும் அம்மம்மா வீடிருந்தது
இரவு நாங்கள் போன கோலத்தைக் கண்டு அம்மம்மாவும் ஐயாவும் பதறிப் போச்சினம் . மழை நிண்டிருந்தது. ஐயா அவசரமா கிடாரத்தில தண்ணி சூடாக்கித் தந்து குளிக்கச் சொல்லிச்சினம். குளிச்சு முடிச்சு , அங்கு ஜெயந்தி அக்கா வந்து தங்கி விட்டுப் போன போது விட்டுப் போன அவளின் சட்டையைப் போட்டுக் கொண்டு வர அம்மம்மா சூடா மல்லிக் கோப்பி தந்து விட்டு, அவவிடம் என்ர தலை முடிக்கு போதுமான அளவு சாம்பிராணி இல்லை எண்டு பொச்சு மட்டையை கொளுத்தி அந்தப் புகையில் என் நீண்ட தலைமுடியை காயவிட்டா. புட்டும் ரசமும் கத்தரிக்காய் பிரட்டலோ என்னவோ சூடா த் தந்து அவங்களைப் படுக்க அனுப்பிப் போட்டு அம்மம்மா தன்ர முந்தானையால் என்னையும் இழுத்துப் போர்த்தி அணைச்சுக் கொண்டு போர்வையால் மூடிக் கொண்டு படுத்தா. எதிலோ எல்லாம் தப்பி வந்து சொந்தக் கூட்டில் சரணடைஞ்சது போல அப்படி ஒரு நிம்மதியான தூக்கம் அது.
விடிஞ்சு அம்மம்மா மத்தியானம் சாப்பிட்டு விட்டுப் போகலாம் எண்டு சொன்ன போது தான் நான் வந்த காரணம் பற்றியும் இண்டைக்கு மத்தியானம் தான் கல்யாணம் எண்டும் சொன்னன். அவங்களின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிச்சது
"எருமை மாடு இதுக்காகத் தான் எங்களை விட்டு ஓடி வந்தனியோ "Y
"சொல்லிப் போட்டு வந்தால் விட்டிருப்பீங்களோ"
"வருசங்களுக்கு முன்னால் குடுத்த வாக்குறுதி டா. உங்களைப் போல என்னோடு போன இடமெல்லாம் கூடவே காவித் திரிஞ்சவன் ."
"ஓமோம் வல்லிபுரக் கோயில் கடலிலே காவு குடுத்திருப்பான்."X
"நீங்கள் ஏண்டா வந்தனீங்கள் "
"கேக்காத. வாற கொதிக்கு வெளுத்துப் போடுவன்" Y
"நீ சொல்றா"
"உன்ர சஜீவாவின்ர மஞ்சுள தான் டெலிபோன் பண்ணினவன். தான் விடிய வெள்ளன வேலைக்குப் போக பேப்பர் office அமளிப்படுகுது. என்னண்டு பாத்தால் வடபகுதியில ஆமிக்கு அதிக இழப்பாம் இண்டைக்கு போற பிளானை கான்சல் பண்ணுங்கோ எண்டான். நாங்க போகயில்லையே எண்டதுக்கு மாலினி போறதா சஜீவ சொன்னாள் நீங்களும் போறியள் எண்டு நினைச்சன். அவளை மறியுங்கோ எண்டான். உன்ர இடத்துக்கு ஓடிப் போனால் நீ போட்டாய் எண்டினம் அப்பிடியே நாங்களும் இன்னொன்றில் ஏறி வந்திட்டம் "
எனக்குக் கண்ணீர் வந்தது மறைச்சுக் கொண்டன்.
ஹ்ம் இது தான் கடைசிப் பயணமாக இருக்கலாம்
பஸ் பிடிச்சு வீட்டுக்குப் போனால் வீடே துடைத்துக் கொண்டு கல்யாணத்துக்குப் போயிருந்தது. மாற்றக்கூட உடுப்பு / திறப்பிருக்கேல்ல . ஜெயந்தி அக்காவின் சட்டை தொள்ளலாக இருந்தது. சம்மாடிக் கட்டி சட்டையை விரிச்சு முழுக்காலையும் மூடி சாமியார் நிஷ்டையில் இருப்பது போல பேசாமல் இருந்தன்
இருந்தால் போல பாத்தா ஆமிக்காரன் துரத்தி பதகளிச் ச மாதிரி அம்மா ஓடி வாறா. என்னம்மா எண்டு நானும் பதறிப் போய் கேட்டால் , "நேற்றுக்குள்ள வந்திடுவன் , பிந்தினால் கல்யாண வீட்டுக்கு நேரா வருவன் எண்டு கடிதம் அனுப்பின பிள்ளையை காணாட்டில் நான் என்னவெண்டு நினைக்க " வழியில கொழும்பு பஸ்ஸை சுட்டவங்களாம் மறிச்சவங்களாம் பிடிச்சவங்களாம் எண்டெல்லாம் சனம் கதைக்குது.
"க்கும் சொன்னவை வாயால சுட்டிருப்பினம். நாங்க வந்த நேரம் எதுவும் காணல்லை அம்மா".
அம்மாவுக்கு பொய் சொல்ல ஒரு மாதிரித்தான் இருந்தது. எண்டாலும் இப்ப எல்லாத்தையும் சொன்னால் கல்யாணத்துக்குப் போகாமல் விறாந்தையில இருந்து அழத் தொடங்குவா. கல்யாணவீட்டில சுடச்சுட இந்தக் கதை தான் ஓடும் எல்லாத்தையும் சந்திக்கிற மனநிலை எனக்கில்லை அப்போது. பிறகு நல்லமாதிரி வந்து இறங்கிற ஒரு நாளில இந்தக் கதையை சொல்லலாம் என நினைச்சுக் கொண்டன்.
"ஆரோட வந்தனி"
"அவங்களோட தான் கொண்டு வந்து கந்தையாகடைச் சந்தியில இறக்கிப் போட்டு அங்கால போறாங்கள் "
"அப்ப சரி பயமில்லை . கெதியா வெளிக்கிடு ."
வெளிக்கிட்டு மினி பஸ் பிடிச்சு , தட்டிவான் ஏறின தூரமளவு தூரத்துக்குப் போய் இறங்கேக்க முகூர்த்த நேரம் நெருங்கியிருந்தது.
குடல் தெறிக்க ஓடி அங்க போனால் கலியாணத்துக்கு வந்த சனம் எல்லாம் வெளிக்கிட்டு சோடிச்சுக் கொண்டு நிக்குது . கல்யாண மாப்பிள்ளை கட்டிலில் குப்பறக் கிடக்கிறான் ". எழும்பன் ராசா" எண்டு தாய்க்காறி கெஞ்சிக் கெஞ்சி திருப்பள்ளியெழுச்சி பாடிக்கொண்டிருக்கிறா. அவன்
"எழும்புறன் எண்டால் எழும்புவன் தானே போங்கோ அங்கால "எண்டு முகத்தை நிமிர்த்தாமல் கத்திக் கொண்டிருக்கிறான்.
அவவிட வாயைப் பொத்தி இஞ்சால இழுத்து கொஞ்சி போகும் படி சைகை காட்டிப் போட்டு
"டேய் சித்தப்பா நீ எழும்பிறதுக்குள்ள ஆராவது தாலியைக் கட்டிப் போடப் போறான் எழும்படா" எண்டதும் துள்ளிக் குதிச்சு எழும்பினவன் முகத்தில் அத்தனை பிரகாசம். கிட்ட வந்தான் கண்களில் கண்ணீர் முட்டியிருந்தது.
"நான் வருவன் எண்டு சொன்னாள் எப்பிடியும் வருவன் தெரியுமெல்லோ "
அவன் பதில் சொல்லில்லை . முகத்தின் பிரகாசத்தில் உதட்டின் துடிப்பில் பதிலிருந்தது
அண்ணன் வயதுள்ள, இரத்தபந்தத்தில் சித்தப்பா முறையானவன் . வீம்புக்கு சித்தப்பா எண்டு கூப்பிடும் எல்லாத் தரமும் அவனிடமிருக்கும் சங்கோஜமும் சந்தோசமும் அப்பவும் இருந்தது.
கல்யாணம் முடிஞ்சது. பெண் மாப்பிள்ளை ஏறிய காரில் என்னையும் வந்து ஏறு எண்டு கார் வெளிக்கிடும் வரைக்கும் வாயாலும் கையாட்டியும் கூப்பிட்டுக் கொண்டேயிருந்தான்.
காருக்குப் பின்னால் இரண்டு வான்களும் ஒரு தட்டிவானும் நிண்டது . வான்களில் ஆட்கள் ஏறேக்கையும் "போய் ஏறனம்மா " எண்டு சித்தி சொல்லேக்கையும் நான் ஏறாமல் மறைவா நிண்டன். தட்டிவானில் இப்பவாவது நல்லமாதிரி பெருமையா போகலாம் எண்டு.
முக்கியமான எல்லாரையும் ஏத்தி அனுப்பிப் போட்டு கடைசி ஆளாய் அம்மம்மா வானில ஏறேக்க, "ஏதோ நிலைமை சரியில்லை போல சனம் கதைக்குது. புள்ளையை பத்திரமா கூட்டிக் கொண்டு கெதியா வீட்டுக்குப் போய் சேர் பெரியபிள்ளை" ஏண்டா.
பாட்டி பேச்சுக்கு எப்பவும் எதிர்ப்பேச்சு இருந்ததேயில்லை வாகனங்கள் வெளிக்கிட்டுப் போக தட்டிவான் பின்னால எதோ தட்டுமுட்டுச் சாமான் எல்லாம் ஏத்திக் கொண்டு போனது. இப்போது தட்டிவானைத் தவற விட்டது கவலையா இல்லை.
வீட்டுக்குப் போய் இரண்டு நாட்கள் இருந்து போட்டு மூன்றாம் நாள் பக்கத்தில் சுந்தலிங்கம் மாமாவிட்டை போய் அவர் கிணத்தடியில் உடுப்புக்குச் சவுக்காரம் போட்டுக் கொண்டிருக்க பக்கத்துக் கல்லில் இருந்து கொண்டு" நாளைக்கு என்னை பஸ் ஏத்தி விடுங்கோ மாமா "எண்ட போது
"கொழும்பு பஸ் ஒடயில்லையாம் பிள்ளை. விசாரிச்சுக் கொண்டு தான் வந்தனான்" எண்டார்.
"பரவாயில்லை வவுனியா வரைக்கும் போற எதிலையாவது ஏத்தி விடுங்கோ "
"இதப் பதட்டம் அடங்க பஸ் ஓடும் அப்ப போகலாம் தானே பிள்ளை".
"ஐயோ மாமா எனக்கு சனி ஞாயிறு கிளாஸ் . திங்கள் வேலை. நான் வெள்ளி இரவே அங்க நிக்க வேணும் "
"போக்குவரத்து சீரில்லை எண்டு வேலையில சொல்லலாம்."
"இல்லை மாமா நான் போகணும்"
"பிள்ளை மாமா சொல்லுறதை கேக்கோணும்" .
இப்ப அவருக்கு ஆதரவா நந்தினி அதையும் வந்தா
மாமாவுக்கு பெண் பிள்ளைகள் உயர்ந்தால் அவ்வளவு பிடிக்கும் . அதிலும் பிரபலமானால் இன்னும் பிடிக்கும் எண்டது எனக்குத் தெரியும்
"மாமா இந்தக் கிழமை வீரகேசரியில என்ர 'கண்ணை இமைமறந்தால்' தொடர்கதை வாசிச்சீங்களோ.
"பின்ன மாமா வாசிக்காமல் ...... கேக்கிறவைக்கெல்லாம் என்ர மருமோளின்ர கதை வாசியுங்கோ எண்டு சொல்லிச் சொல்லி வாசிக்கக் குடுக்கிறனான். "
"சின்னப் பெட்டை. குழப்படிப் பெட்டையாவும் இருக்கிறாள் வயதுக்கு ஒவ்வாத வில்லங்கமான கதை அது. அவள் தான் எழுதிறாள் எண்டு நம்ப முடியேல்ல எண்டேக்க மாமாக்கு எவ்வளவு சந்தோசம் எண்டு நினைக்கிறாய்."
மாமாக்கு முகமெல்லாம் ஒளி தெரிஞ்சது.
"அடுத்த கிழமை கதை குடுக்கயில்லை எண்டால் பிறகு போட மாட்டினம் மாமா "
முழுக்கதையும் குடுத்தப் பிறகு தான் பிரசுரிப்பே ஆரம்பிச்சிருந்தது எண்டதை மறைச்சு மாமாவின் பலவீனத்தை பாவிக்க கவலையா இருந்தது
"அப்ப சரி. நான் ஏத்தி வான்காரரிட்டை சொல்லியும் விடுறன் . நீ வவுனியவில கவனமா இறங்கி அண்ணையிட்டை சொல்லி ரயிலேறிப் போ. "
"சரி பிள்ளை அவங்கள் எதில வருவாங்கள் எண்டு தெரிஞ்சால் எல்லோ நான் அதில ஏத்த. முடியும் "
"அவங்கள் இப்ப வரயில்லை மாமா"
"ஏன்"
"அவங்களுக்கு அட்மிசன் வந்திட்டுது. ரெண்டு கிழமையில பிளைட் . அனேகமா இது தான் கடைசிப் பயணம் வீட்டுக்காரரோட நிண்டிட்டு வரட்டும். நான் போறன் எண்டு தெரிஞ்சால் ஒருத்தனாவது உடன கூட வருவான். இல்லாட்டி அனுப்பி விடுவினம். பிறகு நான் நீ எண்டு மற்றதுகளும் வெளிக்கிடும். புடுங்குப்பாடு வரும் . இது உச்சக் கட்ட நேரம் என்னோட யான பயணத்துக்கு அடிபட்டு அவங்களுக்குள் அந்தக் குடும்பங்களுக்குள் என்னால் எப்போதும் பிரிவினை வரவேண்டாம் . நான் தனியாவே போவன் .
மாமா நிமிர்ந்து முகத்தைப் பார்த்த்தார்.
"என்ன உச்சக் கட்டம் "
"நான் உச்சி வெயில் எண்டு சொன்னனான் "
ஒருகாலமும் இல்லாமல் அம்மாக்கும் சித்திக்கும் கூட ஆளுக்கொரு பொய் சொல்லி பிடிவாதமாக அங்கிருந்து வெளிக்கிட்ட பயணம் தான் இறுதிப்பயணம் என அப்போது தெரியாமல் இருந்தது எனக்கு.
இனி இந்த வாழ்க்கை தனக்கு நெருக்கமாக இப்படியான மனிதர்களைக் கொண்டிருக்கப் போவதில்லை என்பதுவும் . விக்கிரமாதித்தன் முதுகில் தொங்கும் வேதாளமாய் வாகாக முதுகில் ஏறி அமர்ந்து கொள்ள நேரத்துக்கு ஒரு கதை சொல்லி அழுத்தும் வேதாளங்களையே வாழ்வு சந்திக்கப் போகிறது என்பதுவும் இந்த வெகுளி நான் இவ்விடத்தில் இறந்து , வாழ்வை மனிதர்களைக் கற்றுக்கொள்ளப் புதிதாய் ஒரு ஜென்மம் எடுக்கப் போகிறேன் என்பதுவும் கூட எனக்கப்போது தெரியாமல் தான் இருந்தது.
அன்றைய பயணம் என்றும் போல் உற்சாகமாக
இல்லை. அடித்து மூலையில் போட்டது போலிருந்தது. தட்டிவானில் பயணித்த பாதையில் எதிராக மினிபஸ் பயணித்த போது எதிர்ப்பக்கமிருந்து ஒரு தட்டிவான் கடந்தது.
அது கடந்த பிறகும் ஜன்னலில் கன்னத்தை வைச்சு தலையைத் திருப்பிப் பாத்துக்கொண்டிருந்தன். எதிர்க்காற்றில் பறந்து வந்த பாலியாற்று மண் துணிக்கை கண்ணில் விழுந்திருக்கவேணும் போல, கண்ணைக் கரித்துக் கொண்டு உருண்ட ஒரு துளி தட்டிவான் போன பக்கத்துக்கு பறந்து கொண்டிருந்தது . கலங்கிய கண்களுக்குள் தட்டிவான் வண்ணங்களை இழந்திருந்தது.
# நினைவுகளிற்கு லில்லியின் குணம் #