Sunday, October 11, 2020

வானத்தில் உன்னைத் தேடினேன்...

 இன்று புலமைப்பரிசிற் பரீட்சையாம். முகநூல் வாழ்த்துகள் அறிவிக்கின்றன. எனது சிறுவயதிலும் இப்படியோர் நாள் வந்தது. அப்போது இணையவசதிகள் இல்லையாதலால் இது இப்படியோர் பிரத்தியேக நாள் என்பது எமக்குத்தெரியாது. பரீட்சை முடிவுகள் வெளியாகும் நாள் அதைவிடப்பிரத்தியேகமானது என்பதும் நல்லவேளை நமக்கப்போது தெரியாது. அப்போது நாம் சிறுவர்களாக இருந்தோம். அப்படியே கணிக்கவும் வளர்க்கவும் பட்டதனால் விளையாடவும், நாம் வாழும் சூழலையும் அறியவும் புரியவுமான விஷயங்களுக்குப் போதிய நேரமிருந்தது.

எனக்குப் பிரத்தியேகமாகக் கற்பிக்க அம்மாவுக்கு நேரமிராது அப்போது. வீட்டின் வலப்பக்கத்தில் நின்ற பெரிய வேம்பில் கட்டியிருந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டே வாய்பாடு பாடுவேன்.  அதேவேம்பில் ஏறி ,அதன் பருத்துச்சாய்ந்த கொப்பொன்றில் மல்லாக்கக்கிடந்து வேம்பின் கிளைகளூடாகத்தெரியும்  வானத்தைப்பார்த்துக்கொண்டே தேவாரங்களும், தமிழ்ப்பாடப்புத்தகங்களின் பாடல்களும் கூடவே சினிமாப்பாடல்களையும் ஒரே மெட்டிலேயே பாடிக்கொண்டிருப்பேன்.  பின்னேரங்களில் , அந்நாட்களில் SSLC படித்துக்கொண்டிருந்த அயலூர் மாணவிகளுக்கு  அம்மா வகுப்பெடுக்கும் போது,  அந்நேரத்தில் என்னுடன் விளையாட நாயோ ,பூனையோ, மாட்டுக்கன்றோ சம்மதிக்கவில்லையானால், எனக்கும் வேறெதனிலும் புலன் செல்லவில்லையானால் அம்மாவுக்குப்பக்கத்தில் வந்திருந்து அவர் கற்பிப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பேன். அவர்களின் அவிழ்க்கப்படாத பின்னங்களைப் பிரித்து விடைதேடுவேன். அவர்கள் தமிழ்பாடத்தின் பந்திகளை அவர்கட்கு சமமாய் வாசிக்க முயல்வேன். 

இரவுகள் மற்றைய வீடுகளில் எப்படியிருக்குமோ தெரியாது. எனது வீட்டில் இப்படித்தான்  இருந்தது.   அப்போது எனது வீட்டில்  பத்திச்சரிவில் தூணில் சாய்ந்திருந்து , மாட்டுக்குப் பனையோலை கிழித்துக் கொண்டிருப்பார் தாத்தா.  அதற்கு நேரே முற்றத்தில், மதிய வெயில் முழுதும் நெல் அல்லது மிளகாய்ப்பழத்தோடு காய்ந்து முறுகி உடைந்து பொத்தல் விட்ட நீளமான பனையோலைப்பாயின் பொத்தல்களைப் பாட்டி பொத்திக்கொண்டிருப்பார்.  அம்மா புட்டவித்துக்கொண்டிருப்பா, அனேகமா சித்தி தைத்துக்கொண்டிருப்பா. இந்த நிரந்தரம் தவிர மற்றவர்கள்  ஏதோ ஒன்றில் இயங்கிக்கொண்டிருப்பார்கள்.  அனைவருக்கும் மத்தியில் ஓய்வெடுக்காமல் ஒலித்துக்கொண்டிருக்கும் வானொலி.. நாடகம், பின்னால் தொடரும் விவசாய விளக்கம்,  செய்தி, செய்தியின் பின்னணியில், அதற்குப் பின்னால் வரும் நாட்டுக்கூத்து இப்படி எல்லாமும் பற்றிய அலசலும் ஒவ்வொன்றும் முடிந்தபின்னும் வீட்டில் நிகழ்ச்சியை நீட்டும். எனக்குப் பல புரியாது. ஆனாலும் அவர்கள் பேசுவதைப் பார்த்துக்கொண்டிருப்பேன். பின்னாட்களில் எனக்குள்ளான தேடலைத் தூண்ட  அவை  காரணமாகவும் இருந்தன.  

எனக்கென அருகிருந்து கற்பிக்க பிரத்தியேக நேரமென எதுவும் ஒதுக்கப்பட்டதில்லை. இடையிடை "செல்லம் அந்தச் சத்தகத்தை எடு." "க்ரொஸ்பீஸ் எங்கேயோ விழுந்திட்டுது ஒருக்கால்  தேடித்தா ராசாத்தி."  "இந்தாம்மா தேத்தண்ணியை ஒருக்கா எடுத்து ஐயாட்டக் குடு" என்ற மாதிரியான ஏவல்களைச் செய்து கொண்டே  சத்தமாகப் படிப்பேன். எங்காவது பிழைக்கும் போது எவராவது இருந்த இடத்திலிருந்தே திருத்துவார்கள். கௌரியை மறக்காமல் கெ ளரி என்று வாசித்து அம்மா பொறுமையிழந்து அடித்து களேபரமாகும்.  அப்போது அடுத்த வீட்டிலிருந்து சித்தப்பா வந்து  "இது உத்தியோகம் பார்த்துத்தான் உவைக்கு வயிறு நிரம்பவேணுமாக்கும் குழந்தையை குழந்தையா விடாமல் படிப்பெண்டு அடிச்சுக் கொல்லுகீனம்" என்று புறுபுறுத்துக்கொண்டு தூக்கிக்கொண்டு போவார். அத்துடன் அன்றைய படிப்பு ஓவர். 

நாளைக்கும் அத்தனை காட்சியும் நடக்கும் நான் கௌரியை சத்தமாக வாசிக்காமல் கெ ளரி என இரகசியமாக உச்சரித்து எழுதுவேன். இவ்வளவும் தான் ஐந்தாம் வகுப்புவரை என் படிப்பின் லட்சணம். அதிலும் ஐந்தாம் வகுப்புவரை நான் படித்தது நான்காண்டுகள் மட்டுமே. அதுவும் ஒரு பிரபலமான மனிதரின் பெயரில் அமையப்பெற்ற அதிகம்பேர் அறிந்தேயிராத ஒரு  மூலையிலிருந்த சிறு பாடசாலையில்.

இருந்தாற்போல் ஒருநாள் பொதறிவுப் பரீட்சை என்றார்கள். வகுப்பில் எல்லோரும் ஒன்றாக எழுதினோம். பின்னொரு நாள் "எங்கட பள்ளிக்கூடத்திலும் மூண்டு பிள்ளைகள் பாஸ்பண்ணிப் போட்டினம்" என்று அதிபர் உற்சாகமாக ஓடித்திரிந்தார் . காலையில் எல்லாரும் கூடித்தேவாரம் பாடி முடிய. மூன்றுபேரையும் முன்னே அழைத்து நிற்பாட்டி ஏதோ நிறையநேரம் சொல்லிக்கொண்டிருந்தார். புரியும் ஆர்வம் கூட இல்லை. அப்போது நாம் மூவரும் interval இற்கு விளையாடுவது பற்றியோ, நெல்லிக்காயோ கறுவாவோ பங்குபோடுவது பற்றியோ விவாதித்துக்கொண்டிருந்திருக்கலாம். கதைக்கக்கூடாது. நிமிர்ந்து நேராக நில்லுங்கோ உங்களைப்பற்றித்தான் அதிபர் சொல்லுறார் கேளுங்கோ என வகுப்பாசிரியரின் கடமையுடன் பக்கத்தில் நின்று சர்மாசேர் சொன்னது நினைவிருக்கிறது.

பிறகு ஒரு நாளில் தமிழும் கணிதமும் பரீட்சை என்று சொல்லி தமிழ் கற்பித்த சர்மாசேரும் கணிதம் கற்பித்த சுந்தரம் சேரும் எங்கள் மூவரையும் தங்கள் சைக்கிளில் இருத்தி town இல் உள்ள. பெரிய பாடசாலை ஒன்றுக்குக் கூட்டிப்போனார்கள். எங்களுக்கு அது எங்களுடையது அல்லாததால் அந்நியமாக இருந்தது. பிரமாண்டங்கள் பற்றிய கற்பனைகள் கூட எமக்கப்போதில்லை. 

பின் ஒரு நாளில் ஒரு பத்துமணிப்பொழுதில் அதிபர் என்னைத்தூக்கித் தலையில் வைக்காத குறையாக ஆனந்தக் கூத்தாடினார். அவர் உருவாக்கி வளர்த்த பாடசாலையில் முதல் முதலாக ஒரு மாணவி  முதல் மூன்று இடங்களுக்குள் சித்தியடைந்ததாக. பாடசாலை  முழுவதும் ஓடித்திரிந்தார். நாங்கள்  வேடிக்கை பார்த்தோம் .  உடனடியாக இனிப்புவாங்கி பாடசாலைக்கே பகிர்ந்தளித்தார். எம் மூவரில் இருவரான ராதுவும் அவனும் தமக்குக் கிடைத்த  இனிப்புகளிலிருந்து ஒவ்வொன்றை  எனக்குத் தந்து தங்கள் மகிழ்வைப் பகிர்ந்தார்கள். . சர்மாசேரும்., சுந்தரம் சேரும் கட்டியணைத்தார்கள் . அதுவென்ன கொண்டாட்டம் என்பது கூட எனக்கப்போது புரியவில்லை . ஒவ்வொரு முறை ரிப்போர் வரும்போதும் அம்மா கொஞ்சிப்போட்டு ஏதாவது வாங்கித்தருவது போல் இதுவும் ஒரு சோதனை என்பதாகத்தான் எனக்கப்போது புரிதல் இருந்தது. 

ஆனால் அது இனித்தொடரப்போகும் அனைத்துக்குமான ,என்னை நான் அறிந்து கொள்வதற்குமான    சோதனைதான் என்பதற்கான பிள்ளையார்சுழி வீட்டிற்கு அந்த விடயம் அறிவிக்கப்பட்டதுமே போடப்பட்டது.


வீட்டில் பாட்டிக்கு முகம்  இருண்டு போனது.  

"என்ர செல்லக்கண்ணம்மா கெட்டிக்காரியெண்டு எனக்குத் தெரியும் தானே".  என்று  தாத்தா  கட்டிப்பிடிச்சுக் கொஞ்சியபோது  

"கொஞ்சம் சும்மா  இருங்கோ பாப்பம்" என்று முதல் முறையாக  எனக்கு முன்னால்  தாத்தாவை  பாட்டி  அடக்கினார்.  தாத்தா முதல் முறையாக  பாட்டியுடன்  கோபப்பட்டதையும்  பார்த்தேன்.  

"நாளைக்குப் பள்ளிக்கூடத்துக்கு  ஏதாவது குடுத்துவிடவேணும் . என்ன தங்கச்சி குடுத்து விடலாம்"  என்று சித்தியிடம் கேட்ட  அம்மாவை 

"அதெல்லாம் ஒண்டும் தேவையில்லை சும்மாயிரு பெரியபிள்ளை"   என்று  அம்மாவை  அதட்டிய பாட்டியிடம் 

"என்னம்மா  உங்களுக்கு. எதுக்கு ஒண்டும்  வேண்டாம். பள்ளிக்கூடத்திலை என்ன நினைப்பினம் . பிள்ளை பாவம்"   என்று என்று பாட்டியை சித்தி கோபப்பட்ட போது, 

"அவள்  அறிஞ்சால்  அழப்போறாள்".. என்று  மூக்கைச் சிந்தி சேலை முந்தானையில் துடைத்த பாட்டி அன்று எனக்கு  இன்னோர்  அவதாரமாகத் தெரிந்தார். 

"உங்களுக்கு  விசரே  அம்மா.  இவள் பாஸ் பண்ணினால்  அவள் ஏன் அழவேணும்"  என்று சற்றுக் கோபமாகவே  பேசிய சித்தியிடம் 

"தான் கொலசிப்பாசாகிப் போடவேணும் எண்டு என்ர பிள்ளை  எவ்வளவு ஆசைப்பட்டுப் படிச்சது. தான் கெட்டிக்காரி  எண்டு  அவளுக்கு  எவ்வளவு நம்பிக்கை. . இப்ப  தனக்குக் கிடைக்காதது இவளுக்குக் கிடைச்சதெண்டால்  என்ர பிள்ளை  எப்படித்தாங்கும்"  பாட்டி மீண்டும் தன்  சின்னமகளுக்காக மூக்கைச் சிந்தி  சேலையில்  துடைத்தார். பின் என்னைக் கூப்பிட்டார்.  அருகே  போனேன். 

"சித்தி உன்னை விடக் கெட்டிக்காரி.  கொலசிப் சோதினை பாஸ் பண்ணினால் போடிங்கில இருந்து படிக்கச் சொல்லுவாங்கள்  அது தான்  பயந்து போய்  அவள்  பாஸ் பண்ணக்கூடாது எண்டு விட்டவள்.நீ சும்மா  துள்ளிக் குதிச்சு  ஓடித் திரிஞ்சு  அவளை   அழப்பண்ணக் கூடாது  பக்குவமா  இருக்கவேணும்  என்ன"  என்று கொஞ்சம் அதிகாரம் போலும் கட்டளை போலும் சொன்னா.  எனக்கு  அது புதிசாக  இருந்தது. ஹ்ம்  பிள்ளைப்பாசம் தான் உலகில் உயர்ந்த முட்டாள்த்தனம்  என்பதும் அது மனிதர்களை  எந்நேரத்திலும்  எப்படியும் மாற்றும் என்பதும் அப்போது புரிந்திருக்காததால்  நிறையவே  அதிர்ந்திருந்தேன்.பின் அவளுக்கு அமையாதது  உனக்கு அமைந்தால் அவள் தாங்கமாட்டாள்  என்பதே வாழ்க்கை முழுவதும் தொடர அதிர்ச்சி நீங்கி  அமைதி வந்தது  கூடவே  மனத் தூரமும். 

யாரும்  அருகில் நிற்காத  நேரத்தில்" சித்தி  பிள்ளைக்கு பிடிச்சமாதிரி  சட்டை தைச்சு  தாறன். இன்னொருநாள்  பிள்ளைக்கு  கேக்  அடிச்சுத் தாறன் " என்று சொல்லி  கட்டிப்பிடித்துக் கொஞ்சிய சித்தியின் கண்கள்  கலங்கியிருந்தன.    சித்திக்கு மட்டுமே  வாழ்வின் நியாயங்களும், உரிமைகளும், வலிகளும் புரிவதாகவும் , ஆனாலும் வாழ்க்கைநீரோட்டத்தில் கலந்து நீந்த வேண்டிய கட்டாயத்தில்  அவர் அனைத்தையும் புரிந்து குமைந்து கொண்டும்  மௌனியாகவே இருப்பதாக  நான் இப்போதும் எண்ணுவதுண்டு. 

இரவு வீட்டில்  ரேடியோ  ஒலிக்கவில்லை. யாரும் அதிகம் பேசவில்லை.  அம்மாவின் மற்றத் தங்கைகள் என்னை நெருங்குவதும் கூடத் தப்புப் போல  இடைவெளி கொண்டார்கள். அந்தக் கண்களில்  இருந்த  கனிவும் மகிழ்வும் என் நினைவில் இருக்கின்றது இப்போதும். 

இரவு அம்மா சாப்பாடு தீத்தும் போது கண்கள் கரைந்து வழிந்து கொண்டே இருந்தன.  "என்னம்மா  என்றேன்"  மடிக்குள் அமர்த்திக்கொண்டு  அழுதுகொண்டே  இருந்தா.  "அப்பா  இருந்திருக்கலாம்."  என்றா. 

தாத்தா இரவு நீண்ட நேரம் தனியாக  முற்றத்து மண்கும்பியில்  அமர்ந்து என்னை  மடிக்குள் பொத்தி வைத்துக் கொண்டிருந்தார். நான் வானத்தின் நட்சத்திரங்களுக்குள்  முதன் முதலாக என்  அப்பாவைத்  தேடிக்கொண்டிருந்தேன். தாத்தாவின் கண்கள்  நிலவொளியில்  பளபளத்தன.  துடைத்தேன்.  "என்னடா பார்க்கிறாய்   கண்ணம்மா"  என்றார். "இந்த நட்சத்திரங்களில்  எது  என் அப்பாவாக  இருக்கும்  தாத்தா"  என்றேன். 

தாத்தா முகத்தை இழுத்து தனக்குள் பொத்தினார். "எந்த நட்சத்திரத்துக்குள்ளும்  அப்பா இல்லை செல்லம்  எங்கேயும்  அப்பாவைத் தேடக் கூடாது. அவர் உனக்குள்  இருக்கிறார்.  உனக்கென்று நான் இருக்கிறேன்.  நான் உன்னோட  இல்லாத காலத்தில் அன்புக்காக  யாரிடமும்  பிச்சையெடாதே.  ஆதரவுக்கு  இரந்து நிற்காதே.. இன்னொன்றோடு  ஒப்பிட்டு நீ தாழ்த்தப்படும் போதும்,, நிராகரிக்கப்படும் போதும்  கால்களுக்குள்  சுருளாமல் அவைகளை விட்டு  ஒதுங்கவும் விலகவும் கற்றுக்கொள்" என்றார். தாத்தாவின்  வார்த்தைகள் மட்டுமே  எனக்கு வேதவாக்கு எப்போதும். 





புலமைப்பரிசில் பரீட்சை  சித்தியடைந்தால் அந்தக் காலத்தில்  விரும்பிய உயர்தரப் பாடசாலைகளில் இடம் கிடைக்கும்  மாதம் மாதம் கல்விக்கென ஒரு சிறு  தொகையும் , பாடசாலை ஆண்டுத் தொடக்கத்தில் வாங்கப்பட்ட பாடசாலை  உபகரணங்கள்  அனைத்துக்குமான பற்றுச் சீட்டும்  அனுப்பப்படும் போது, செலவானதொகை மீண்டும் கிடைக்கப்பெறும் . 

கற்கும் திறனுள்ள மாணவர்கள்  வறுமை  நிமித்தம்  தம் கல்வியைத் தொடரமுடியாது போய்விடக் கூடாது    என்ற காரணத்தினால் உருவாக்கப்பட்ட  அந்தத் திட்டத்தில் , அரச மாதவருமானம் பெறும் பெற்றோர்களைக் கொண்டிராத , மற்றும்  தந்தையை இழந்த .மாணவர்கள் சித்தியடையும் போது மட்டுமே இந்தத் தொகை வழங்கப் பட்டது  ஆதலால்  அப்படியான குழந்தைகள்  சித்தியடைவதை   அதிகம் விரும்புவோராக  சமூக அக்கறை கொண்ட  ஆசிரியப் பெருந்தகைகள்  பலர் அப்போது இருந்தார்கள்.   

ஆண்டு ஒன்றிலிருந்து பிரத்தியேக வகுப்புகளுக்கு  அனுப்பி புலமைப்பரிசில் பரீட்சிக்குத் தோற்றுவிக்க  ஆயத்தம் செய்யும் வசதி கொண்ட இப்போதுள்ள  பெற்றார்களின்  நோக்கம் என்னவென்பது  சத்தியமாக  எனக்குப் புரியவேயில்லை.  தம் பிள்ளைகளின் மனதில்  அவர்களையொத்த பருவத்தினரோடு ஏற்படுத்திவிடும் போட்டியா, அல்லது, பெற்றோர்களுக்கு ள்ளான  போட்டியா  அல்லது அதுவொரு  சமூக  அந்தஸ்த்தா என்பது  எனக்குப் புரிவதேயில்லை.  ஆனாலும் இரண்டு விடயங்கள்  நன்றாகவே  புரிகிறது. 

ஒன்று ஐந்து  வருடமாக அவர்களின் குழந்தைப் பருவத்தை அழித்து உள்ள இடமெல்லாம் காசுகட்டி  அனுப்பி  திணிதிணியெனத் திணித்து ஒருநாள்  பரீட்சைத் தாளில் வாந்தியெடுக்கப்படும்  சித்தியடைவால் , அதை  ஊடகம் முழுவதும் பரப்பிப் பெருமை கொள்வதாலும்   நாம் எதுவுமே அடைந்துவிடப் போவதில்லை. இன்னும் சொன்னால்  வசதி வாய்ப்புள்ள நாம் , வசதியே இல்லாத இன்னொருவருக்கான  வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் கொடுமையைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பேன்  நான். பசித்தவன் தட்டிலிருக்கும் உணவைத் தட்டிக் கொட்டுவதை விடக் கொடுமையானது  கல்விக்கான வாய்ப்பைத் தட்டிவிடுதல் . 

இனி மிகுதிக்கதைக்கு  வருவோம்.  ஐந்தாம் வகுப்புப் பிள்ளையின் பரீட்சையில்  அந்தஸ்த்துத் தேடுவதான பெற்றோர்  அன்றும் இருந்தார்கள்  என்பதை  மறுக்க முடியாது.  அப்படியானவர்கள்  என் அயலிலும் இருந்தார்கள். என் உறவிலும் நட்பிலும்  இருந்த வயதொத்த   சிறுமிகளின் பெற்றோரிடம் இந்த மாற்றங்களை  நான்  காணத் தொடங்கினேன். என்னைப்போலல்லாது  தாய் தந்தை, அவர்களால் மட்டுமே  நிர்ணயிக்கப்படும் தனிக்குடும்பம் குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு  வழங்கப்படும் அனைத்து  உரிமைகளும்  என கட்டான  குடும்ப அமைப்பைக் கொண்டிருந்த அவர்களின்  தாய்களுக்கு தங்கள் நட்பிலும் உறவிலும் உள்ள , தாலியறுந்த ஒரே காரணத்தால்  தன்  திறமைகள் குன்றி சந்தோச நிகழ்வுகள்  நிராகரிக்கப்பட்டவளின் குழந்தை தங்கள் பிள்ளைகளை விட ஒரு படி உயர்ந்து விட்டதான மன மாயையை  விளையாடப்போன நேரங்கள் எனக்கு  உணர்த்தத் தொடங்கின. ஊமையாய் காயப்பட்டது மனம் என்னவென புரியவும் வெளிப்படுத்தவும்  தெரியவில்லை/. 


தன்  பாடசாலையில் முதல்  சித்தி என்பது அதிபரை  சில ஆசிரியர்களை  அதிக உரிமை கொள்ள வைத்தது. தாம்  படித்த  நடுத்தரப் பாடசாலை ஒன்றில் என் கல்வியைத் தொடரவைப்பதாக முடிவு  செய்திருந்த  அம்மாவின் முடிவை  அவர்கள்  விரும்பியிருக்கவில்லை.  அதிபர்  வேறோர்  உயர்தரப் பாடசாலையை  முடிவுசெய்திருந்தார்.  அம்மா  எதற்காக  அதை மறுக்கிறார்  என்பது புரியாமல் பிடிவாதமாக அம்மாவைச் சம்மதிக்கவைத்து அந்தப்பாடசாலையில்  சேர்த்தார்கள். சேர்க்கும் நாளிலும் நாம் போய்ச் சேர்ந்தபின்  அதிபர்  அங்கு வந்து சேர்ந்து அருமை பெருமைகளைப் பிரஸ்தாபித்து, "என்ர மகளும் இங்கு தான் படிச்சவ. நான் நல்ல உச்சத்தில கொண்டுவந்து  இங்க தந்திருக்கிறன் பிள்ளையை  டாக்டராக்கி  அனுப்புறது  உங்கட பொறுப்பு"  என்று ஒரு கோரிக்கையும்  வைத்துவிட்டுப் போனார். 


புலமைப்பரிசில் சான்றிதழ்  கொடுத்தால்  கடையில டாக்டர்  சேர்டிபிக்கேட்  வாங்கலாம் போல  அவ்வளவு இலகுவாகத்தான்  நானும் அப்போது நினைத்தேன் 


ஆனால்  என் பழைய பாடசாலை  அதிபரின் ஆசையும்  அந்த உயர்தரப் பள்ளியும்  என் வீட்டில் அரசலும் உரசலுமாக  நிரந்தரக் காயத்தைக் கொடுக்கத் தொடங்கியது.  படித்துமுடித்த பாட்டியின் சின்ன மகள்  தன் பாடசாலைக்கும்  நான் படித்துக்கொண்டிருக்கும்  பாடசாலைக்கும் இடையிலான நடைமுறை   ஒப்பீடுகள், நாளாந்தம் வார்த்தைகளால் என்னைக் காயப்படுத்தத் தொடங்கியது. நின்றால் நடந்தால் இருந்தால் எல்லாம் குற்றமாகியது  கதைக்க  கருத்தை  வெளிப்படுத்தப் பயந்தேன்.  எல்லா  இரவுகளும் அப்பாவை வானத்தில்  தேடத் தொடங்கினேன். என் அப்பா,  என் அம்மா என தனியாகப் போய்விடத் தவித்தது  மனம்.   

பாடசாலைக்குப் போவது வெறுத்தது  அது படிப்பின் மீதான கவனத்தை  சிதறடித்தது. எப்போதும் எல்லாப் பாடத்திலும் உச்சப் புள்ளியே  எடுத்துப் பழக்கப்பட்ட மனம் புள்ளிகள் குறைவதை பார்த்து  அதிர்ந்தது. எதிலும் ஆர்வமற்றுப் போனது.  அடிக்காத அம்மா, கையில்   கண்ணில் கண்டதால எல்லாம்   தாறுமாறாக அடிக்கத் தொடங்கினா.  புத்தகத்துக்கு முன்னால் அமர்ந்தால் காரணமில்லாது அழுகை வந்தது. தலைவலி  நிரந்தரமானது. கண்ணில் பிழை என்று  கண்ணாடி வாங்கி போட்டார்கள் கண்ணீரும் தலைவலியும் கடைசிவரை நிற்கவே இல்லை . பாடசாலையில் சந்தோசமாய் உற்சாகமாய் நடிப்பது முள்ளை விழுங்கிவிட்டு நிற்பது போல சிரமமாக இருந்தது. .  வீட்டில் இருக்க வெறுத்தது.   கொலசிப் பாசாகினால்  போடிங்கில இருந்து படிக்கவேணும் எண்டு தான் என்ர பிள்ளை  பாசாகயில்லை  என்ற பாட்டியின் வார்த்தைக்குள்  எனக்காக நல்லவொரு செய்தி இருப்பதாகத் தோன்றியது. 


என்னை ஹொஸ்ரலில்  விடுங்க  என்ற என் பிடிவாதமும் அம்மாவின் நிராகரிப்பும்  பாடசாலைக் காலம் முடியும் வரை தொடர்ந்தது.

  என் அதிபர்  நினைத்தது போல ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைச் சித்தியைக் கொடுத்து ஒரு உடல் பரிசோதனைக் கருவியைக்கூட வாங்கமுடியாது. வாழ்க்கை என்பது வேறு என்ற படிப்பினையோடு பள்ளிவாழ்க்கை முடிந்தது  

வெளியே  வந்தபின் வாழ்க்கை நிதானமாக அடித்தடித்து  தனது பாடத்தைக் கற்பிக்கத் தொடங்கியது, அந்தக் கற்றலில்  மூலம்  என்னைத் தேடவைக்கத் தூண்டியது.  அந்தத் தேடலில் அடைவதே  நான்  என்பதும், யாரும் உடைக்கமுடியாத என்னதான பிம்பம் என்பதும் புரியத் தொடங்கியது. 


ஆக ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில்  பரீட்சை என்பதும் அதன் சித்தி என்பதும்.....