Sunday, December 23, 2018

லட்சுமணன் கோடுகள்

அவனைச் சில நாட்களாகத் தொடர்ந்து அவதானித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.  அவன் எப்போதும் தன் தாயை  எதற்கும் நச்சரிப்பவன் இல்லையானாலும் இப்போது  சில நாட்களாக பணம் கேட்டு முன்னும் பின்னும் அலைந்து கொண்டு நை... நை  என்று விடாமல்  நச்சரித்துக் கொண்டு  அதிக விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள பேரங்காடிக்கு அழைத்துச் செல்லும் படியும் தாயைச் சுற்றிச் சுற்றித்   திரிந்து கொண்டிருந்தான்.

தாய் அடுப்பில் வதங்கிய முருங்கைக்காயை கிளறி விட்டவாறே "சமைக்க விடுடா.  உப்புக்குப் பதிலா சீனியைப் போட்டிடப் போறேன்."  என்றாள்.

"இல்லாட்டி மட்டும் ஏதோ பெரிய திறமாய்  சமைக்கிற  மாதிரி.  நீங்க  எதைப் போட்டாலும் ஒரே மாதிரி கண்ணை  மூடிக்கொண்டு  விழுங்கிற மாதிரித்தான்  இருக்கும்.  என்ர விதி  இந்த வயித்தில  பிறக்கவேணும் என்று இருந்திருக்கு"  என்று  அப்பாவியாய்  முகத்தை  வைத்து அதிகமாய்  நடித்தவன்  தாய் கரண்டிக் காம்பை  ஓங்கியதும் ஓடிப்போய் தள்ளி நின்று சிரித்தவாறே  திரும்பவும் "காசும்மா " என்று ஆரம்பித்தான்.

"எதுக்குடா பணம் " எனக் கேட்டு தாயும் மழுப்பலும் கிண்டலுமாக அவனுக்கு விட்டுத்தராத விதமாகவே  பேசிக்கொண்டிருந்த போதிலும் அவன்  தன் நச்சரிப்பை  நிறுத்தியிருக்கவில்லை. இறுதியில் சலித்துப் போனவனாக  "நான்  கிப்ட்  வாங்க வேணும் காசு தாங்கம்மா"  என்றான்.

"அடடே  என்னிடமே காசு வாங்கி  எனக்கே வாங்கித்தரப் போகிறாயா  கில்லாடி  டா நீ தங்கம் " என்ற போது உதட்டை கோணலாகச் சுழித்து " மா  கனவில இருந்துவெளியே  வாங்கோ" என்றான்
"ஏண்டா?"
"இவவுக்கேல்லாம்  நாங்க கிப்ட்  வாங்கிடுவோமாக்கும் " என்றான் கிண்டலாக.  கூடவே
"நான் என் சகோதரங்களுக்கு  கிப்ட்  வாங்க வேணும் காசு தந்து  நான் சொல்லுற இடங்களுக்கு  கூட்டிட்டுப் போங்க"  என்றான் அன்புடன் கூடிய உரிமையின் அதிகாரத்துடன்.

"அடே  மகனே வழித்தேங்காய்  எடுத்து  தெருப்பிள்ளையாருக்கு உடைக்கிறது  என்று கேள்விப்பட்டிருக்கிறியா?"

"அதெல்லாம் நாங்க கேள்விப்பட்டிருக்கிறோம்.இப்ப நீங்க காசு தாங்க."

"கிப்ட்  சொந்தக் காசில வாங்கணும்  டா."

"இப்ப வாங்கிறதை  எழுதி வையுங்க  நான் உழைக்கும் போது அப்பிடியே திருப்பித்தாறேன். "

"தந்திட்டாலும்"

"ஹலோ  I`m kumaran. Son of .....  என்று   தன் வழமையான  M . குமரன். சண்  of  மகாலஷ்மி  பட  டயலாக்கில்    ஆரம்பித்து  பாசத்தையும் கூட  விட தன்மானமும், நேர்மையும் முக்கியம். அம்மா எல்லாம் சொல்லித்தான் வளர்த்திருக்கா.  எல்லாம்  ஞாபகமா திருப்பித்தருவோம்  இப்ப பணத்தைத் தாங்க  மேடம் "என்றான்.  பேச்சில் சற்று தென்னிந்திய சினிமாவாடையடித்தது. சொந்த மண் விட்டு விலகியிருப்பதில் அவர்களது  தாய் மொழியில் வேறு வாசங்கள் கலப்பது  போன்ற  சில தவிர்க்க முடியாது அடையாளங்கள்  தொலைவதை சங்கடத்துடன்  அவதானித்துக் கொண்டிருந்தேன்.



                                                               



அவர்கள்  அங்காடிக்குப் போனபோது கூடவே  போயிருந்தேன்.  ஒரு குறிப்பிட்ட  தொகையைச் சொல்லி  அதற்குள் உங்களுடைய  பரிசுப்பொருட்களை  வாங்குங்கோ  செல்லம் என அவனது தாய் சொன்னாள்.  ஒவ்வொரு பொருளாக ஆவலுடன் பார்ப்பதும்  எதன்  மீதும்  திருப்தியற்று  அதிக கவனமெடுத்து  அவர்களுக்குப் பிடித்ததாகத் தேர்ந்தெடுக்க விளைவதுமான  அவனது  செயலில் இருந்த  நேசத்தை  நெகிழ்வுடன் கவனித்துக் கொண்டிருந்தேன்.  உண்மையைச் சொன்னால்  எல்லோரையம்  சகோதரமாக  எண்ணி  அணைத்த  எனக்கெல்லாம்  உண்மை  நேசிப்போடு நெருங்க  ஒரு சகோதரம்  கூட உடன் பிறக்காததாலும் சகோதர பாசத்தோடு கையோடு கொண்டு திரிந்தவை  எல்லாம் என் முதுகுக்கான கத்தியை தங்கள் மறுகையில் மறைத்துத் திரிந்தவை என்பதை  அனுபவங்கள் கற்றுத் தந்த பின்    இப்போதெல்லாம் மனம்  களைத்துச், சோர்ந்து, தோற்று  என்று  கூடச் சொல்லாம், தோளிலும்  இடுப்பிலும் சுமந்த   எல்லாவற்றையும்  மனதிலிருந்து இறக்கிவைத்து  இளைப்பாறக் கற்றுக் கொண்டு விட்டது .  இப்படி  எங்காவது  காண நேரும் போது  மட்டும்  அதை மிக ஆவலாகப் பார்ப்பேன். மனம் நெகிழ்ந்து கண் கசிந்து  விடும்.

பரிசுப்பொருட்கள் தெரிவு செய்யும் படலம் திருப்தியற்றே  தொடர்ந்து கொண்டிருந்தது.  ஒவ்வொரு கடையாக நகர்ந்தவன்  இடையில்  காலணிக் கடைக்குள்  நுழைந்தான்.   தனக்கான குளிர்காலக் காலணிக்கான  பணத்தை  அவன் முதலே  வாங்கி வைத்திருக்க வேண்டும்,  தனக்குப் பிடித்த  காலணியைத் தன் சகோதரங்களின்  ஆமோதிப்புக்கும் தன் மிகுந்த பரிசீலனைக்கும் பின்  வாங்கிக் கொண்டான் . 

கடைக்கு வெளியே போட்டிருந்த கதிரையில்  அமர்ந்திருந்த தாயிடம்  வந்தான்  , கைகளுக்குள் பொத்தியிருந்த மிகுதிப்பணத்தைத் தாயிடம் நீட்டியவன்,   அதை  சற்று யோசனையுடன் பார்த்தான். பின்   காசைக் கொடுக்காமல் கைகளைப் பின்வாங்கி  பணத்தை  எண்ணத் தொடங்கினான்.  ஏதோ  தவறு நடந்த பாவனையில்  சப்பாத்துப் பெட்டியும்,  மிகுதிப்பணமும்  அதன் பற்றுச் சீட்டுமாக  மீண்டும் கடைக்குள்  ஓடினான்.  திரும்பி வந்த போது முகத்தில் தெளிவும்,  புன்னகையும் , நிமிர்வும் இருந்தது.

"என்னடா?"  என்றாள்  தாய்.

"இல்லம்மா.  காசேல  ஒரே  சனம்..  அவ  நான்  குடுத்த  காசை விட அதிகமா  மிச்சம் தந்திருக்கிறா.  அது தான் கொண்டு போய்  குடுத்திட்டு  வந்தனான்."  என்றான்

"ஏண்டா பேசாமல் அந்தக் காசை நீயே எடுத்திருக்கலாமே. எடுத்திருந்தால் ,  கிப்ட்  இற்குப் பணம் தா  என்று அம்மாவை  அரிச்சுக் கொண்டு  திரியத் தேவையில்லை  எல்லா"  என்றேன்.

"அது  என்னுடைய  காசில்லை. கடை மூடும் போது   கணக்குப் பார்க்கும் போது  வரும் குறைவான  பணத்தை  அந்தக் கடை  அவவின் சம்பளத்தில்  பிடித்துக் கொள்ளும்.  அந்தக் காசில்  அவவின்  கவலை  கலந்திருக்கு.  இன்னொருவரை  அழவைத்துப் பெறுவது  பாவப் பணம்.  ஏமாற்று வேலை  அது எனக்குத் தேவையில்லை " என்றவன்,

திரும்பவும்  "பரிசு வாங்க வேணும் பணம் தாங்கம்மா"  என்று ஆரம்பித்தான்.  இப்போது தாய் தன் பணப் பையை  அவனிடம் கொடுத்தாள். அவளது  கண்கள் கலங்கி  உதடுகள்  துடித்துக் கொண்டிருந்தன.

அந்தச் சந்தர்ப்பத்தில் இந்தக் குழந்தைகளின்  கடந்த காலம்  என் நினைவுகளைக் கீறுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அப்போது  அவர்கள் மிகச் சிறியவர்கள். அவர்கள்   வீட்டில் பணம்  பொருள்  என அடிக்கடி  தொலைந்து கொண்டே இருக்கும்.  அவர்களின் தாய் குடும்பத்திருட்டுப் பற்றிய  அனுபவங்களைக் கொண்டிராமையால்,  அந்தத் திருட்டுக்களின்   ஆரம்ப காலங்கள்  அவளால்  அவதானிக்கப் படாமலும்,  பின் கைமாறி எங்கோ வைத்து விட்டேன்,  என்றும் ஏதோ  பொருட்கள்  வாங்கிவிட்டு  மறந்து விட்டேன்  என்றும்  தன்னைச்  சமாதானப் படுத்திக் கொண்ட காலங்கள்  கடந்து, வீட்டில் தொடர்ந்து  திருட்டுப் போகும் பணம் பற்றிய  அவளது  தேடல்கள்  சற்றுத் தீவிரமாக , எப்போதும் கலகலப்பற்றிருந்தாலும் சத்தமின்றியிருந்த   வீட்டில் அமைதி குழம்பியது.


  காணாமல்  போவன  பற்றிய கேள்விகள் அவளிடமிருந்து எழும்போதெல்லாம்  உண்மை மறைத்துத் தப்பிக் கொள்ள  பெற்றவனாலேயே  பிள்ளைகள்  மீது  திருட்டுப் பட்டமாகச் சாட்டப்பட்ட  பொல்லாத காலங்களில் , திருடவேண்டிய தேவைகள்  கூட  ஏற்படாத வயதில் உள்ள குழந்தைப்  பிள்ளைகளைச் சந்தேகிக்கவும்  முடியாமல்,  திருடு போகும் பாதையும்  புரியாமல்,  பிள்ளைகளைக் கேட்டால்  அவர்கள்  உடைந்து நொருங்கி, அவர்கள் மனதில் இறுதிவரை  அது ஒரு வடுவாகவே  பதிந்து விடும் என்றும்,  விசாரிப்பதன் மூலம்  தெரியாத ஒன்றை அவர்களுக்கு  அறிமுகம் செய்து  கற்றுக்கொள்ளத் தூண்டுவது போலாகும் என்றும் மனப் போராட்டத்துடன்  தத்தளித்து ,   ஒருவேளை  தன் குழந்தைகள் அப்படியொரு  பழக்கத்துக்குப் ஆட்பட்டுக் கொண்டால்  அதைத்  தாங்கும் சக்தியற்றவளாக ,  தவறான  வாரிசுக்களை  இந்தப் பூமிக்கும், களங்கமான ஒரு பெயரை தன் பரம்பரைக்கும்,  வலியோடும்  அவமானத்தோடுமான  ஒரு வாழ்வைத் தன் குழந்தைகளுக்கும்   விட்டுச் செல்வதை  விட, அவர்களையும் கொன்றுவிட்டு இறந்து விடலாம் என்ற முடிவுக்குக் கூட  அவள்  வந்திருக்கிறாள். அவளறியாது அவளது வங்கிக் கணக்கில் குறைந்து செல்லும் பணத்துக்கான விளக்கத்தை   வங்கி அதிகாரிகள்  அவளைக் கூப்பிட்டு  cc டிவி  பதிவுகளுடன்    நிலைமையை  நிரூபிக்கும் வரை.

பால் போலிருந்த  அவளது  மனதின்  பலவீனம்  எல்லாவிதத்திலும்  பலியாகிக்கொண்டிருந்ததை  தொடர்  ஆதாரங்கள்  ஒவ்வொன்றாக நிரூபித்துக் கொண்டிருந்த  அந்த நேரத்திலும் திருட்டுக்கும் , பொய்களுக்கும்  தன் குழந்தைகளுக்கும் எந்த விதச் சம்பந்தமும்  இல்லை என்ற  மிகுந்த நிறைவுடன்  ஆவாசமாக மூச்சு விட்டுக் கொண்டாள்.

குடும்பத்தைத் தாண்டிய  ரகசிய வாழ்முறைகள் கொண்ட  எங்குமே, குடும்பத்துக்குள்  பொய்யும்  திருட்டும், நெருக்கமின்மையும், விரோத மனப்பாங்கும்   தவிர்க்க  முடியாதனவாகவே   ஆகிவிடுகின்றன. குடும்ப நபர்களிடம்   பொய்யும்  களவும் , இரகசியத் தொடர்புகளும்  முளைவிடும் போதே  கூட இருப்பவரின் பொறுமை பறிபோய்  குடும்ப  அமைப்பு  உடையத் தொடக்கி விடுகிறது,    சிறிய  அளவில்  தொடங்கும் அவை , குழந்தை மனங்களைக் கொன்று , வன்முறைகள்  மூலம்  குடும்பத்தைத்  தின்னத் தொடங்குகின்றன. 

சிலுவைகளைச் சுமப்பதற்காய்  பாவப்பட்ட  இயேசு பாலன்களும்  பாலகிகளும்  அவதரித்துக் கொண்டிருக்கும்  இந்தப் பூமியில் அவர்கள்   வரவுகளை ஊர் கூட்டிக் கொண்டாடுவது  கூட   எமது பாவங்களின்  பழியை  வருந்திச் சுமக்க, இதோ  இன்னொரு தாய் ஈன்றெடுத்து  அனுப்பி  வைத்திருக்கிறாள்  என்ற மகிழ்வில் தானோ  என்று இப்போதெல்லாம் எண்ணத்   தோன்றுகிறது.

நான் யோசனையூடே   அவர்களைப் பார்க்கிறேன்.   அந்த முகங்களில்  முன்பிருந்த   பதட்டங்களும் , பயங்களும் , கூட்டுக்குள் பதுங்கும் ஒருவித ஒடுங்கிய பார்வையையும் இப்போதில்லை. அவர்கள்  அதைக் கடந்து   வெளியே  வந்து விட்டார்கள்.  இப்போது   நத்தார் கால அலங்கார  விளக்குகளை  விட  அதிக வண்ணக் கனவுகளுடன்  பிரகாசிக்கும் அந்த முகங்களையும்  கண்களையும்  பார்க்கிறேன்.  அன்று  அந்த வெளியேற்றம் நிகழாது  போயிருந்தால்  அவர்கள்  வீட்டுக்குள்  இருந்தே சகல தீய பழக்கங்களையும்  கற்றிருப்பார்கள், அல்லது  பழியேற்கும் பலிக்கடாக்களாக  முடங்கி  ஒன்றுமேயில்லாதவர்களாக ஆகியிருக்கவும் கூடும்.

வாழ்கையின் மீது  அலங்கோலமாக  வரையப்படும்  கோடுகளை வாழ்தலின்  நிமித்தம்  தாண்டித்தான்  ஆகவேண்டியிருக்கிறது.  தாண்டினால்  தொலைந்து போக   எல்லாக்  கோடுகளும்  லட்சுமணன்  கோடுகள்  அல்லவே.