Saturday, August 26, 2017

என் பெயர் தமிழரசி ஆனால்.....



என்ர பெயர் தமிழரசி. ஆனால் எனக்கு தமிழ் தெரியாது. தெரியாது எண்டால் துண்டாவே தெரியாது எண்டில்லை. உங்களளவு  கதைக்கத் தெரியாது.  தாத்தாவுக்கு தமிழில நல்ல ஈடுபாடு எண்டதால  என்ர  தாத்தா வைச்ச பெயர் எண்டு அம்மா சொல்லுறவ.  நான் பிறந்து வளர்ந்தது ஒரு ஐரோப்பிய நாட்டில.  இந்தமுறை விடுமுறைக்கு இலங்கைக்குப் போனப் பிறகு எனக்கு  மனம் சரியில்லை அது என்னவென்று தெரியவில்லை.  ஆனால்  எனக்குள்ள இருக்கிறதெல்லாம் உங்களோட கதைக்க வேணும் மாதிரி இருக்கு.  உங்களுக்கு விளங்குற மாதிரி என்னால தமிழில கதைக்க முடியாது.  அதால தமிழ் தெரிஞ்ச அக்காவிட்டை சொல்லி அவமூலமா நான் உங்களோட கொஞ்சம் கதைக்கப் போறன்.
.
இந்தமுறை விடுமுறைக்கு  இலங்கைக்குப் போவம் என்று முடிவெடுத்த போதிருந்த சந்தோசம்,  ஆசை ஆசையாய் வெளிக்கிட்டு வந்த போதிருந்த உற்சாகம்,  எங்கட வீடென்று அம்மா காட்டின அம்மம்மா வீட்டுக்கு வந்து  சொந்தம் என்று அம்மம்மா காட்டின எல்லாரையும் பார்த்த சந்தோசம்  எல்லாம் எனக்கு இப்ப இல்லை.
.
வெளிநாட்டில நாங்கள் இருக்கிற வீடு போல இல்லை.  இஞ்ச அம்மம்மாவிட வீடு கிடக்கிற வளவுக்குள்ள   நல்லா ஓடி விளையாட நிறைய இடமிருக்கு,  ஆனாலும் அம்மம்மா எந்த நேரமும் "கிணறு கவனம் "எண்டு கத்திக் கொண்டே இருக்கிறா.  அம்மம்மா  துலாவைப்பிடிச்சு இழுத்து பெரிய பெரிய வாளி நிறைய தண்ணியள்ளி குளிக்கிறதைப் பார்க்க எனக்கும் அப்பிடிச் செய்யவேணும் என்று நிறைய ஆசை. ஆனாலும்  நான் கிணத்தடிப் பக்கம் போகவே கூடாதாம்.  நான் இருந்து வந்த வெளிநாட்டில குளிச்சமாதிரி பாத் ரூமுக்குள்ள  போய் தான் குளிக்கவேணும் எண்டு சொல்லுறது எனக்குப் பிடிக்கயில்லை.  அடம்பிடிச்சு அழுது ஒருநாள் வெளியில கிணத்தடியில குளிச்சன். நாலைஞ்சு வாளி தண்ணி இழுத்து ஊத்திறதுக்கிடையில அம்மா களைச்சுப் போய்  தாறுமாறெண்டு பேசத்தொடங்கீட்டா.  பிறகு  அப்பாவோட கத்த மிச்சத்துக்கு அவர் வந்து நாலு வாளி ஊத்தி விடுறதுக்கு இடையில மூச்சு  வாங்க வாங்க நாப்பது வாளி அறிவுரை சொல்லிப் போட்டார்.
.
காலமை அம்மம்மா வளவு கூட்டிற சத்தத்தில தான் நான் எழும்பிறனான்.  அதுக்குப் பிறகு சமைக்கிற இடம் பாத்திரங்கள் எல்லாம் கழுவிப்போட்டு  அம்மம்மா  இருவது வாளி தண்ணி எண்டாலும் அள்ளி தலையில ஊத்திக் குளிப்பா.  அதைப் பார்க்கேக்க எல்லாம்  எனக்கு ஒரே  குழப்பமா இருக்கும்.  தலையெல்லாம் வெள்ளையா நரைச்சு மெலிஞ்ச உடம்போட இருக்கிற அம்மம்மாவுக்கு  கிணத்தில அள்ளிக் குளிக்க களைக்கயில்லை, இளமையா இருக்கிற என்ர அம்மாவுக்கும் அப்பாவுக்கும்  ஏன் களைக்குது எதுக்குக் கத்தீனம் எண்டு. 
.
அதிலயும் நாங்கள் வெளிநாட்டில அனேகமா எல்லா நாளும் இறைச்சி தான் சமைக்கிறனாங்கள்.  இறைச்சி தான் சத்து சாப்பிடு சாப்பிடு எண்டு அம்மா கத்திறவ.  சீஸ்  இல்லாமல் பாண் சாப்பிட்டதே இல்லை.  எங்கட பிரிஜ்ஜூகுள்ள  பால் யோர்கட் எல்லாம் பெட்டி பெட்டியா அடுக்கிக் கிடக்கும். இஞ்ச அம்மம்மாவிட்ட  அப்பிடி ஒண்டுமில்லை. கோவில் கொடியேறி ட்டுது  விரதம் எண்டு  அவ  காலமையில சாப்பிடுறதும் இல்லை. நாங்கள் வெளிநாட்டில இருந்து வந்து நிக்கிறம் எண்டு மீன், றால், கணவாய், நண்டு எண்டு எல்லாம் ஆரையோ கொண்டு வாங்கிக்கொண்டு வந்து வீட்டுக்குப் பின்னால கிடக்கிற பத்தியில வைச்சுச் சமைச்சுப் போட்டு  அவ மட்டும் மரக்கறி சோறு தான் சாப்பிடுறவ.  ஆனாலும் அம்மம்மா களைக்குது எண்டு சொல்லி நான் பார்த்ததில்லை.

அம்மம்மா வீட்டுக்குப் பக்கத்து வளவுக்குள்ள ஒரு  சின்ன வீடு இருக்கு. அது ஓலையாலையும் ,நெளிநெளியான ,மெற்றால் ஆலையும் மண்ணாலையும் , கொஞ்சம் கல்லாலையும்  செய்த மாதிரித் தெரியும்.  அதுக்குள்ளே ஒரு அம்மாவும் நிறைய சின்னப் பிள்ளையளும்  இருக்கீனம்.  சிலநேரம் அம்மம்மாவிட்ட எதுக்காவது வாறவை.  இல்லாட்டி அம்மம்மா வேலிக்குப் பக்கத்தில போய் நிண்டு அவையளைக் கூப்பிட்டு காசு குடுத்து கடைக்கு அனுப்பிறவ.  அப்பவெல்லாம் மறக்காமல்" வரேக்குள்ள உனக்கு இனிப்பும் வாங்கிப் போட்டு மிச்சக் காசைக் கொண்டு வாடியம்மா " எண்டு சொல்லுறவ, சிலநேரம் தோசை இட்டலி என்று ஏதாவது சாப்பாடு செய்யேக்குள்ள  தட்டில வைச்சு வாழை இலையால  மூடி வேலியால  அம்மம்மா அவையளுக்கு குடுப்பா.  அப்பவெல்லாம் "எதுக்கு தகுதி தராதரம் இல்லாமல் உறவு கொண்டாடுறீங்க?"  என்று  அம்மா  அம்மம்மாவை  பேசுவா. "இந்த ஒரு மாதத்தால  நீ போனப் பிறகு எனக்கு அதுகள் தான் உறவு பாதுகாப்பு" என்று அம்மம்மா கோபமா வாய்க்குள்ள சொல்லுவா.   எனக்கும் அவையளோட சேர்ந்து விளையாட விருப்பம் ஆனால் அம்மா யாருக்கும் தெரியாமல் அறைக்குள்ள இழுத்துக் கொண்டு போய் நல்லா  வலிக்கிற மாதிரி கிள்ளிப் போடுவா எண்டு எனக்குப் பயம்.

                                                               

.
அம்மாவும் அப்பாவும் இலங்கைக்கு வந்தப் பிறகு ஏனெண்டு தெரியா நான் வசிக்கிற நாட்டு மொழியைத்தான் வீட்டுக்கு ஆட்கள் வந்து நிக்கேக்க  கதைக்கீனம். எனக்கும் தமிழ் தெரியாது எண்டு எல்லாருக்கும் சொல்லீனம்.  ஆனால் எனக்கு  தெரியும் கதைக்கிறதும் விளங்கும் எழுதத்தான் தெரியாது . அவைக்கு நல்ல வடிவா தமிழ் கதைக்கத் தெரியும் எண்டதும். வெளிநாட்டில வீட்டில தமிழில தான் கதைக்கிறவை எண்டதும். அவைக்கு அவ்வளவா வெளிநாட்டு மொழி தெரியாது. அதால இலங்கையில தப்புத் தப்பா கதைக்கிறதை பார்க்க எனக்குச்  சிரிப்பா வரும்.  யாராவது என்னோட விளையாட வந்தால் எனக்குத் தமிழ் தெரியாது எண்டு சொல்லித் திருப்பி அனுப்பிப் போடுவீனம்.  எனக்கு கோபம் கோபமா வரும் ஆனாலும் கிள்ளிப் போடுவீனம் எண்டு பயத்தில வாயே திறக்கிறதில்லை நான்
.
ஆனாலும் ஒரு நாள் அம்மம்மா குசினிக்குள்ள தனியா இருந்த நேரம் " ஏன் நான் அவையளோட சேர்ந்து விளையாடக் கூடாது "என்று அம்மம்மாவை  கேட்டன். "அதெல்லாம் விளையாடலாம்.  அந்தக் குஞ்சுகளின்ர அப்பாவோட தான் உணர அம்மா படிச்சது உந்தக் குறுக்கு வேலி கடந்து போய் விளையாடினது" என்று அம்மம்மா சொன்னா.  "பின்ன நான் மட்டும் விளையாடக் கூடாது எண்டு இப்ப  ஏன் சொல்லுறா" என்று கேட்டன்.
.
அம்மம்மா சுவரில சாஞ்சு கொண்டு பெரிசா ஒரு பெருமூச்சு விட்டா. "உங்கட அம்மா அப்பா வெளிநாட்டுக்குப் போறதுக்கு முதல்  நாங்கள் எல்லாரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி வீட்டில ஒரே தரத்தோட தான் இருந்தனாங்கள்.  இப்ப வெளிநாட்டுக்குப் போன பிறகு  அம்மா தன்னை பெரிய உயரத்தில வைச்சுக் கற்பனை பண்ணுறதால   ஊரில வறுமையோட இருக்கிற இந்தப் பிள்ளைகள் குறைவா  தெரியுது அவவுக்கு "என்றா.
.
"அப்ப அவையிட அந்தச் சின்ன வீடளவோ இந்த வீடும் இருந்தது அம்மம்மா" என்று கேட்டன்.  அதுக்கு அவ 
"இல்லை இதைவிட அது கொஞ்சம் பெரிசா இருந்தது" என்று சொன்னா. 
"பின்ன இப்ப அது எங்க அம்மம்மா "என்று கேட்டன். அம்மம்மா கொஞ்ச நேரம் எங்கேயோ பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்தா.  பிறகு கண்ணை உடுத்தியிருந்த  சீலையில துடைச்சுக் கொண்டா. பிறகு
"அது குண்டு போட்டு உடைச்சுப் போட்டாங்கள்" என்றா.  கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தா.
"எப்ப நடந்தது  அம்மமா " என்றன்.
 "உங்கட அம்மா  வெளிநாட்டுக்குப் போனப் பிறகு தான் அது நடந்தது. "
"குண்டு போடேக்க அதில யாரும் ஆக்கள் இருக்கயிலையோ அம்மம்மா "
 "அதில  அங்கே என்ர வயதில இருந்த ஒரு அம்மம்மாவும்    ஒரு மாமாவும் செத்துப் போச்சினம். ஒரு தாத்தாவுக்கு  கால் இல்லாமல் போச்சு " 
"வேற ஒருத்தரும் இல்லையோ அம்மம்மா "
"ஒருத்தன் மட்டும் அந்த நேரம் வீட்டில இல்லாததால மிஞ்சினவன் "
"ஆர் அது . இப்ப எங்க இருக்கிறார் "
"அவையிட  மூத்த மகன்.  உங்கட அம்மாவோட தான் படிச்சவன்
"மூத்த மகன் எண்டா?"
"முதல் பிள்ளை. உங்கட குடும்பத்தில உங்கட அக்கா முதல் பிள்ளை எல்லோ அப்பிடி"
"சரி அம்மம்மா இப்ப அவர் எங்க"
அம்மம்மா கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தா. பிறகு அவவிட சொண்டு நடுங்கின மாதிரி  ஆடினது.  சீலையாலை மூக்கை உறிஞ்சி கண்ணைத் துடைச்சுக் கொண்டா.  எனக்கு அது கொஞ்சம் அருவருப்பா இருந்தது.

"கடைசியா நடந்த போர்ல உங்களைப் போல மூண்டு குஞ்சுகளையும் அவையிட அம்மாவையும் தனிய விட்டிட்டுச் செத்துப் போனான்."
 முடிக்கும் போது வந்த சத்தம் அழுத மாதிரி இருந்தது.  அதுக்கு மேல கேக்க எனக்கும் விருப்பமில்லை. கவலையா வந்தது அழுதிடுவன் மாதிரி இருந்தது. அழுதால் தேவையில்லாத கதை எல்லாம் பிள்ளைக்குச் சொல்லி அழப் பண்ணினதெண்டு அம்மா அப்பா அம்மம்மாவில கோபப்படுவீனம் எனக்கு அது விருப்பமில்லை ஆனாலும் குண்டு போட்டால் வீடு முழுவதும் கீழ விழுமா அல்லது கொஞ்சமா ஒரு பக்கத்தால உடையுமா எண்டு அறிய ஆசையா இருந்தது.

"குண்டு போட்ட உடனேயே முழு வீடும் விழுந்து போச்சா அம்மாம்மா" எண்டு கேட்டன்.
"பொது பொதுவெண்டு கொட்டினான் எத்தினை குண்டைப் போட்டான் எண்டு தெரியாது நாசமறுப்பான்  ஒரு சொட்டு நேரத்துக்குள்ள வீடு நிலத்தில கிடக்குது"  என்றா.
அது எப்பிடி விழுந்து கிடந்திருக்கும் எண்டு நான் யோசிக்கத் தொடங்கினன்
"என்ன செல்லம் பயந்து போனீங்களோ"  எண்டு என்னைக் கைக்குள்ள பொத்தி அணைச்சு நெத்தியில கொஞ்சிக் கொண்டு கேட்டா அம்மம்மா.
"இல்லை வீடு உடைஞ்ச நேரம் எப்பிடி இருந்திருக்கும் எண்டு யோசிக்கிறன்"
கொஞ்சநேரம் பேசாமல் இருந்த அம்மம்மா  பிறகு நினைவு வந்த மாதிரி 
"அது உடைஞ்சு கிடந்த நேரம் எடுத்த படம் உங்கட வீட்டில இருக்குது. அங்க போனப்பிறகு பாருங்கோ" எண்டா.
"அதெப்பிடி அம்மம்மா அந்த வீடு உடைஞ்ச படம் எங்கட வீட்டில இருக்கும் "
"அது என்ன புதினம் எண்டு எனக்குத் தெரியாது தங்கம்.  ஆனால்  உங்கட அம்மா அப்பாவுக்கு அங்க இருக்கிறதுக்கு  விசா கிடைக்க வேணும் எண்டால்   இஞ்ச நிறைய இழப்புக்கள் நடந்து உயிர்ப்பயங்களால தான் அங்க வந்ததெண்டு நிரூபிக்க வேணுமாம் எண்டு உங்கட அம்மா ரெலிபோன் அடிச்சுச் சொன்னவள். அதால அந்த மாமா தான் தங்கட வீட்டை படமெடுத்து எங்கட வீடு தான் உடைஞ்சதெண்டு உங்கட அம்மாக்கு அனுப்பினவன்."
 
அது ஏதோ தப்புச் செய்து விட்டுச் சொல்லுறது போல எனக்கு இருந்தது.  உண்மையாவே பொய்  சொல்லுறது தப்புத் தானே. 
.
அந்த மாமா  அனுப்பின ஆதாரங்கலால தான்  நாங்கள் அங்க இருக்கிறமெண்டதும் இப்ப அவர் இல்லாததும், அவரின்ர கஸ்ரப்படுற பிள்ளையளோட நான் சேரக் கூடக் கூடாது என்று அம்மா அப்பா நினைக்கிறதும்  எனக்குப பிடிக்கவில்லை.  கோபமா வந்தது.
 
"ஏன் என்ர  அம்மா அப்பா இப்பிடி இருக்கீனம்"  எண்டு அம்மம்மாவிட்ட கேட்டன். 
"உங்கட அம்மா அப்பா மட்டுமில்லை. சிலர் அப்பிடித்தான் இருக்கீனம்  அது ஏன் எண்டு எனக்குத் தெரியாது  செல்லம் ." 
"அங்க இருக்கிற எல்லாரும் இங்க வரும் போது இப்பிடித்தான் இருப்பீனமா அம்மம்மா?"
"இல்லையம்மா.  நிறையப்பேர்  நல்ல அன்பா உதவியா இருப்பீனம். இஞ்ச வாறதுக்கு நிறையக் காசு செலவாகும் தெரியுமோ செல்லத்துக்கு"
"ஓம் அம்மா அப்பா  ஊருக்குப் போகவேணும் எண்டு ஒருவருசமா   இன்னொரு வேலைக்கும் போய் சேர்த்தவை"
"அப்பிடி எல்லாம் கஸ்ரப்பட்டு பாதிப்பேர்  இஞ்ச வாறதே தங்கட மனுசரைப் பார்த்து ஆறுதல் கொள்ளத்தான்.  ஆனால் இஞ்ச அதுகள் தேடி வந்த நட்பு ,அன்பு ,ஆதரவு கிடைக்கிறது குறைவு. இஞ்ச இருக்கிறவையும் அரைவாசிப்பேர் சொந்தம் ,அயல் ,அறிஞ்சவை  தெரிஞ்சவை எண்டு சும்மா விடுறதில்லை. அதுகள் நாலு இடம் வெளிக்கிட ஏலாது.  நாலு  சாமான் சக்கட்டு வாங்க முடியாது. வந்தவையிட்ட  நீலிக்கண்ணீர் வடிச்சு வடிச்சு   கோவணம் வரைக்கும் உருவாமல் விடுறதில்லை. அதுகளும் அங்க என்ன கஸ்ர துன்பத்துக்கு நடுவில இருந்து வருகுதுகளோ என்னவோ"
"அதெண்டா என்ன அம்மம்மா?"
"இது இப்ப உங்களுக்கு விளங்காது தங்கம். வளர்ந்து அம்மா அளவா  வரைக்குள்ள  விளங்கும்."
என்று எனக்குச் சொல்லிப் போட்டு
 "அதுதான் அவளும் ஒருத்தரையும் நெருங்க விடுறாள் இல்லையோ என்னவோ. அதுகளுக்கு அங்க உள்ள பிரச்சனையும் கஸ்ர  நஸ்ரமும் அதுகளுக்குத் தானே தெரியும்"
 என்று மெல்லமா சொன்னா.
"என்ன அம்மம்மா "எண்டன் அம்மம்மா எதுவும் சொல்லில்லை

"வெளிநாட்டில தான் ஒய்வெடுக்க  நேரமில்லாமல்  ஓடியோடி  உழைக்கிறம் அதில பாதி  அந்த வரி இந்தவரி எண்டு போயிடும் மிச்சம் வீடு திண்டிடும்.  ஒரு வருத்தம் பிரச்சனை எண்டு வந்தால் அவசரம் ஆறுதலுக்கு  ஆரும் இல்லாமல் அநாதை மாதிரி அங்க இருக்கிறம் செத்தால் கூட உரிமையா அழ , தூக்கிப் போட ஆரும் இல்லை .  இஞ்சயாவது வந்து ஒரு மாதம் நிம்மதியா இருந்திட்டுப் போவம் எண்டா உலகத்துக் குடும்பப்  பஞ்சப் பாட்டெல்லாம்  எனக்குப்  பாடுறது பத்தாமல் பிள்ளைக்கும் சொல்லிக் குடுக்க வேணாம் அம்மா   அவளாவது நிம்மதியா இருக்கட்டும்"  அம்மா எண்டு கத்தினா.  கொஞ்சம் அழுத மாதிரியும் இருந்தது.

ஏனெண்டு தெரியேல்ல அம்மா அங்க இருக்கிற அம்மா மாதிரி இல்லை.  இங்க வந்தபின் அதிகமா கத்திற மாதிரி, கத்தி முடிய அழுகிற மாதிரி எல்லாம் இருக்கு.  அங்கயும் சிலநேரம் சும்மா ஓய்வா இருக்கேக்கயும்  சிலநேரம்  வேலையால வந்தும் "கஞ்சியக் குடிச்சாலும் எங்கட நாட்டில இருந்திருக்க வேணும் " எண்டு சொல்லி அழுகிறவ தான். அதுவும் ஏன் எண்டு எனக்குத் தெரியாது .  ஆனால் அது சத்தமில்லாமல் அழுவா.  அம்மா அழுதால் உடனேயே கிட்டப் போய் அணைக்கிற எனக்கு, அம்மா கத்தினால் கிட்டப் போகப் பயம். அதால  பேசாமல்  இறங்கி   இங்க வந்ததில இருந்து  எனக்கு நிறையப் பிடிச்ச  வேலிக்கரையில நிக்கிற மகிழ மரத்தடிக்குப் போனன்.

அங்க நான் பிறந்த நாட்டில சாப்பிட்ட எல்லாப் பழங்களையும் விட  இங்க அம்மம்மா வீட்டில நிக்கிற எல்லாப் பழங்களையும் விட இந்தச் சின்னப் பழத்திட சுவையும்  அதின்ர மணமும்  எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு.  பெரீய மரத்துக்குக் கீழ விழுந்து கிடக்கிற சின்னச் சின்னப் பழங்களை நான் பொறுக்கி எடுத்துச் சாப்பிடேக்குள்ள எல்லாம் அம்மம்மா சொல்லுவா "வேர்வழி விளாத்தி முளைச்சாலும்  தாய் வழி தப்பாது  உன்ரஅம்மாவும் அமிர்தத்தை குடுத்தால் கூட அதை ஒதுக்கிப் போட்டு முதலில இதைத்தான் பொறுக்கிச் சாப்பிடுவாள். அவன்  மரத்தின்ர உச்சி வரைக்கும் ஏறி ஆய்ஞ்சு கொண்டு வந்து குடுப்பான் "என்று.

இண்டைக்கு ஏனோ தெரியா நிறையப் பழம் விழுந்திருக்கு. வேலிக்கு மற்றப் பக்கமும் விழுந்திருக்கும் போல, பக்கத்து வீட்டுப் பிள்ளை பொறுக்கிக் கொண்டு நிண்டா.  என்ர கைநிறைய இருந்த பழங்களை அவவுக்கும் குடுக்கலாம்  எண்டு நான்  வேலியால கையை நீட்டின நேரம், அவவும் கைநிறைய பழங்களை வேலியால எனக்கு நீட்டின நேரம்  ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில சிரிப்பு வந்தநேரம், 

"உனக்கு இஞ்ச ஒண்டும் தெரியாது உன்ர  எண்ணத்துக்கு திரியாதே  வந்து என்ர  கைக்குள்ள இரு "எண்டு என்ர அம்மாவும்,
 "கண்ட இடமெல்லாம் பொறுக்கித் தின்னாதே "எண்டு அந்தப் பிள்ளையின்ர  அம்மாவும்  ஒரே நேரத்தில கத்தின நேரம் 
எங்கள் ரெண்டு பேரின்ர கையும் நடுங்கி எல்லாப் பழமும் வேலி எல்லையில வீணா விழுந்து போச்சு. 

அம்மம்மா  கிணத்துக் கட்டில இருந்து அழத்தொடங்கினா. அது ஏன் எண்டு எனக்குத் தெரியாது.  ஆனால் நானும் அந்தப் பிள்ளையும் இப்பவும் ஒரே நேரத்தில தான்  "அம்மம்மா"    வெண்டு அக்கறையோட  கூப்பிட்டம்.