Wednesday, January 16, 2019

பொங்கல் வாசனைகள்

நான் என் தாயகத்தை விட்டு விடைபெறுவது வரை அரிந்த செம்மண் அல்லது சீமேந்துக் கல் அடுக்கிய அடுப்பில் எரியும் பொங்கல் பானைகளைக் கண்டதில்லை.

பொங்கலுக்கு அடுப்புப் பிடிக்கவென்றே ஒரு சிறு வாளி வீட்டிலிருக்கும் அப்போது. எங்கள் பக்கம் மேற்றரையை கொஞ்சம் கொத்தினால் போதும் உள்ளே நல்ல சிவந்த செம்பாட்டுக் களிமண். அதை வெட்டி எடுத்து தண்ணிவிட்டு நல்லா குழைத்து வாளியில் நிரப்பி கவிழ்த்து பின் அதன் மேற்பக்க அச்சுமுனைப்பகுதியை கத்தியால் சீவி மழித்து, மெழுகி காய வைத்து விடுவார்கள்.

சூரியப்பொங்கலுக்கு,, பட்டிப் பொங்கலுக்கு, அருகிலிருக்கும் ஏதாவது  கோவிலுக்கு என ஒன்பது அடுப்புகளையும் மழைவர தூக்கி தாவாரத்தி்ல் வைத்து வைத்து பாதுகாத்து பொங்கலன்று பசுஞ்சாணத்தால் முற்றம் மெழுகும் போது அடுப்பையும் மெழுகி கோலத்தின் நடுவில் குடியேற்றுவார்கள்

இதே நடைமுறைதான் அருகிலுள்ள ஊரான கொழும்புத்துறையிலும் இருந்தது. அங்கு வண்டல் களிமண். அல்லது சொரிமணல். ஆதலால் பொங்கலுக்கு ஒன்று ஒன்றரை மாதத்துக்கு முன்பே அவர்கள் எங்கள் ஊரில் ரயில்பாதையை அண்மித்த வெற்றுநிலத்தில் வெட்டியெடுத்த செம்மண்ணை பெண்கள் கடகங்களிலும் ஆண்கள் உரப்பை, சாக்கு போன்றவற்றிலும் சுமந்து சென்று பொங்கலுக்கான புது அடுப்புப்பிடித்துக் கொள்வார்கள்.

நான் வேடிக்கை மட்டும் பார்க்கும் வயதில் ஒவ்வொரு பொங்கலும் கடந்த அடையாளமாக வீட்டிலும் வீதியிலும் பொங்கல் குழி இருக்கும் அப்போது.

நானறிந்து சுப்பையா குடும்பம் ஒன்று மட்டுமே அப்போது அங்கு  மட்பாண்டத்தொழில் செய்து கொண்டிருந்ததால் அரிவுவெட்டுக்குப் பின் விவசாயி கையில் பணம் புரள்வது போல வெட்டிய நெல்லை அரிசியாக்கிப் பொங்கும் இந்தக் காலப்பகுதி தான் அவர்கள் கையி்ல் சற்றுப் பணம் புரள்வதும்.

வீட்டில், அயலில், உறவில் எங்கும் புதிய மண்பானை தவிர்த்து வேறெதிலும் பொங்கிப் பார்த்ததில்லை. பொங்கல் நாளுக்கு முதலே வாங்கி வந்த பானையில் நீர் விட்டு, கசிவு தெரிகிறதா, பொங்கும் போது விண்டு விடுமா என்றெல்லாம் கவனித்து வைப்பார்கள். விண்டால் பரவாயில்லை அடுத்த நாள் பட்டிப்பொங்கலுக்கு வாங்கிய பானையில் தொடரலாம் என பாட்டி தாத்தா எண்ணுவதே இல்லை. செண்டிமன்ற் அதிகம் என்பதால் பானை விண்டால்  தம் வம்ச வாரிசுகளுக்கு ஏதாவது ஆகிவிடும் அறிகுறியோ  என்ற பயமும் அதிகம் அவர்கட்கு.

பொங்கலை விட பொங்கலுக்கு அடுத்த நாள்  பட்டிப் பொங்கல் சிறப்பாக இருக்கும். பட்டிப்பொங்கல் சூரியனுக்கல்ல பட்டிக்கு நன்றி சொல்வதற்கானது என்பதால் காலை நான்கு மணிக்கு முதல் எழுந்து பனிக் குளிருக்குள் அரக்கப்பரக்க முழுகி மெழுகி கோலம் போட்டு சூரியன் எழும்பி வரும்போது பொங்கி வழியும் அவசியம் எல்லாம் இல்லை. மேய்ச்சலுக்குப் போன பசுக்கள் எருதுகள்  பசியாறி நிறைவாக வீட்டுக்கு வந்த பின் குளிப்பாட்டி விபூதி சந்தனம் குங்குமம் இட்டு கழுத்துக்கு பூமாலை போட்டு பட்டியில் கட்டிவைத்து அவர்கள் இருப்பிடத்துக்கு நடுவே மெழுகி கோலமிட்டு பொங்குவது.


                                                         

வீட்டில் எல்லாரும் தங்கள் இடத்திற்குள் குழுமி இருப்பதும், விளக்கும் அடுப்புமா ஜகஜகவென்று ஜோதிமயமாக இருப்பதிலும் குதூகலித்துப் போய் கும்பம் வைத்த வாழையிலை தொடக்கம் திருவிற தேங்காய் வரை தலையாட்டி தலையாட்டி தாவெனக்க் கேட்பதும். கிட்டக் கிடைக்கும் யாரையும் பிடித்துக் கொஞ்சி அரம் மாதிரி தம் நாக்கினால் நக்கி விட்டு பதிலுக்கு, கழுத்தின் தொங்கு தோலைத் தடவி கொஞ்சிவிடு என கழுத்து வழைத்துக் கேட்பதும், இன்றெல்லாம் கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் உணரமுடியாத சுகானுபவங்கள்.

பட்டிப் பொங்கல் அன்று தான் மூன்று ,ஐந்து ஏழு, என ஒற்றை விழ  அதிகம் அதுவும் பாரம்பரியப் பலகாரங்கள் மட்டும் செய்வார்கள். அந்த ஒரு நாள் மட்டுமே பொரித்த மோதகம் செய்வதும். அப்போது இவைகள் நலனுக்கு வேண்டி வருடமொருமுறை தில்லியம்பலப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று பொங்குவார்கள். அப்போதும் இந்தப் பொரித்த மோதகம் கட்டாயம் இருக்கும். காரணம் இன்று வரை எனக்குத் தெரியாது. அப்போது எதையும் ஆராய்ந்து கேட்கும் வயதில்லை. கேட்க நினைக்கும் இப்போது பாட்டி தாத்தா இல்லை. சின்னப்பாட்டி இருக்கிறா கேட்கலாம். ஆனால்....

என்ர . மாலுக்குட்டி  இஞ்சவாம்மா என்று கூப்பிட்டு பக்கத்தில இருத்தி அது ஏனென்டால் ..... ஏனெண்டால்..... அக்காவையும், அம்மானையும் தான் கேட்க வேணும் செல்லம்  என்று அப்ப மாதிரித்தான் இப்பவும் பதில் சொல்லுவா. ஆனாலும் பாட்டி தாத்தா விசேசமா செய்த எல்லாத்திலும் விபரங்களற்று கூடவே இருந்தவ.

அன்றைய கால அந்த வாழ்வு அப்படித்தான் இருந்தது. எல்லா நிகழ்விலும் உறவுகள் குடியிருந்தன. பாசம் பொங்கி வழிந்தது. ஜீவகாருண்ணியம் மிகுந்திருந்தது.

"பசுவுக்கெல்லாம் பொங்கிறீங்க நாய் பாவமில்லையா கவலைப்பட மாட்டானா" என்று கேட்டால்,

" இஞ்ச வா தம்பி" இதிலை படு என்று அதையும் கொண்டுவந்து மாட்டுக்கட்டைக்குள் விட்டு விட்டு, "பூசாவைத்தேடிக்கொண்டு வாங்கோ இல்லாட்டி நாளைக்கு பூனை பாவம் அதுக்கும் பொங்கு எண்டு நிப்பாள் " என எல்லாவற்றையும் வேடிக்கையாகவும் புரிதலோடும் பார்க்க அன்றைய மனிதர்களால் முடிந்தது.

பட்டிப்பொங்கல் படையலில் பலகாரம் மட்டுமல்ல பழவகை காய்கறி அபாரமாக இருக்கும். வாழையிலைகளில் அத்தனையும் பரப்பி அவைகளின் நலம் வேண்டிப் பிரார்த்தித்து ஒவ்வொருவருக்கும் முன்னால் படைத்து அவர்கள் சாப்பிடும் வரை கழுத்தை நெற்றியை தடவிக் கூடவேயிருந்து பின்னாலேயே எமக்கு சாப்பாடாகும்.

மொத்தத்தில் பொங்கல் என்பது பரஸ்பரம் வாழ்ந்து வாழவைத்து முழுவதும் நன்றி பகிரும் நிகழ்வாக நிறைவேறும்.

இப்போது பரவலாக வெளிவரும் படங்களில் தேடினேன்  எங்குமே இந்த மண்ணடுப்பை காணக்கிடைக்கவேயில்லை. மண்பானை இல்லை. அனேக உலோகப் பானைகளின்  கழுத்தில் இஞ்சி மஞ்சல் கட்டப்படவும் இல்லை. உலோகப்பானைக்கு அது அவசியம் இல்லை . என்பது அது கட்டப்படும் காரணம் அறிந்தோர்க்கு மட்டுமே புரியும்.

எல்லாத்தானிய இலைகளும் இருக்க  தொற்று நீக்கி மூலிகைகளான இந்த இரண்டும் கட்டப்பட, புதிய மண் பானை, புதிய விளைச்சலின் பரீட்சிக்காத முதல் அரிசி, முதல் பயறு, கருப்பஞ்சாறு போன்றவை காரணமாக இருந்தன. கழுத்திலிருந்து பானைவாய்வரை சிலும்பி நிற்கக் கட்டப்படும் இந்த இலைகள் வெளியே தென்னம்பாளை நெருப்பில் காண்டற்று பானை சூடேறும் போதும், பானைக்குள் நீர் கொதித்து பொங்கும் போதும் மண்பானை வழி இதன் மருத்துவக்குணங்கள் உள்ளே கடத்தப்பட்டுக்  கலக்கும் வாய்ப்புண்டு கூடவே சிலும்பி நிற்கும் இலைகள் பொங்கும் நீரில் அவிந்து விடுவதால் புதிய பயறு புதிய அரிசி போன்றவற்றால் குடலுக்கு தீங்கேற்படாதிருக்கவும் வழிவகுத்திருந்தது.

இப்போதெல்லாம்  வாழ்க்கை அவசரமயமாகி விட்டதா,  நீங்கள்  அறிந்த உணர்ந்த  பலகாரணங்களினாலா  தெரியவில்லை.   சமையலறைகளில் காஸ்  அடுப்பு இடம்பிடித்து, மாத வருமானத்தில் நிரந்தரமாக தனக்கென ஒரு பணத்தொகையை ஒதுக்கவைத்து  வளவுக்குள் விழும் பாளையும் ஓலையும் மட்டையும் பண்ணாடையும்  அடிவளவுக்குள்  ஒதுக்கி  கொழுத்தி எரிக்கப்படும் குப்பைகள்  ஆகிவிட்டன.. புதிய மண்பானை தாங்கும் சூட்டில் தென்னம்பாளைமடலின் மென் நெருப்பில்  பொங்கிய பொங்கல் , இப்போது  கடையில் வாங்கிய அரிசி சர்க்கரை பருப்பு பலங்களை வைத்து  உலோகப்பானையின் கட்டை நெருப்பில் வேகிறது.

பால் பசுவிலிருந்தல்ல பக்கற்றிலிருந்து வரும் அல்லது மாவைக்கரைத்தால்  பால் வரும் என்ற விளக்கத்துக்குள் குழந்தைகள்  வளரும் காலத்தை  அருகிய நிலையில்  பட்டிப் பொங்கல் வாழ்த்துச் சொல்லி  பசு இல்லாத வீட்டில் அடுப்படியில் சர்க்கரை சாதம் செய்து  அண்டை  அயலுக்குப் பகிர்ந்தளிக்கிறோம். .

ஆனால் இன்றும் நாம் பொங்கல்  என்று ஒரு நாளைக் கொண்டாடிக்கொண்டே  இருக்கின்றோம்.
குதூகலிப்பதும்  கொண்டாடுவதும்  தானே வாழ்க்கை தரக்கூடிய  சுவாரசியங்கள். அந்தவகையில் மனம் மகிழ்ந்து பொங்கினால் போதும் என்பதாகவேனும் பொங்கல் இருந்துவிட்டுப் போகட்டுமே .