Saturday, August 20, 2022

இரவல் இறக்குமதிப் பண்புகளில் தொலையும் .................................................................................................................. ஜெர்மானியம்

 அண்மையில் ஜேர்மனிய நட்பு ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது, இரண்டு மாதங்களின் முன் நான் வைத்தியசாலையில் இருந்தமை பற்றிய பேச்சு எழுந்தது. பேச்சு வளர்ந்து வளர்ந்து மெல்ல மெல்லச் சூடேற, நம் முன்னே இருந்த காப்பி காத்துக் காத்துக் குளிரத் தொடங்கியது. இதை இந்த மண்ணின் வாரிசான நான் வெளிப்படுத்துவதற்கும் , இங்கு வந்து குடியேறிய நீ வெளிப்படுத்துவதற்குமிடையே உணர்வு ரீதியாகவும் புரிதல் ரீதியாகவும் மிகப்பெரும் வேறுபாடுண்டு. உன் வார்த்தைகளாக இதை எனக்குத் தர முடியுமா என்றார்.

அவருக்குக் கொடுத்ததன் சிறு பகுதியை தமிழில் உங்களுடன் பகிர்கிறேன். பச்சைத் துவேசப் பதிவு என உங்களில் சிலர் சொல்லக் கூடும். சொன்னால்....... அவரவர் புரிதலின் அடிப்படையில் சொல்லிவிட்டுப் போங்கள் . அது உங்கள் புரிதல் பொறுத்தது. என்று புரிந்து கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் என்னால்.....
.................................................................................................................................
ஜேர்மனிய மருத்துவமும், வைத்தியக் கவனிப்புகளும் பற்றி உலகளாவிய ரீதியில் மதிப்பும், நம்பிக்கையும் அதனால் ஜெர்மனிக்குப் பெருமையும் உண்டு ..ஜேர்மனிய வைத்தியசாலைகள் எனக்கொன்றும் புதிதல்ல. இங்கு வந்து ஒரு சில வருசத்தில் அடிக்கடி சென்று தங்கி வரும் என் தாய் வீடாக மாறிப்போனவை.
தாய் வீடென நான் சொல்வதற்கு இன்னுமோர் காரணம், அங்கிருந்து கிடைத்த பரிவும் பராமரிப்பும் கூட .
முதலில் நான் வைத்தியசாலையில் தங்கியிருக்க நேர்ந்த போது நான் இங்கு வந்து ஆறுமாதங்களே ஆகியிருந்தன. அப்போது ஓரிரு டொச் வார்த்தைகளே அறிந்திருந்தேன். அந்த வார்த்தைகளோடு ஆங்கிலத்தையும் உடல்மொழியையும் இணைத்து , என் மொழியின்மை என்னை மனரீதியாகப் பாதித்து விடாத விதமாக நம்பிக்கைக்குரியதாக இருந்தது அவர்களின் கவனிப்பு.
என் வாரிசு பிறந்த போது. பொதுவான நாட்கணக்கை விட அதிகமான நாட்கள் என் உடல்நிலை கருதி வேறொரு வைத்தியசாலையில் தங்கியிருக்க நேர்ந்தது. அப்போது ஒரு சில டொச் வார்த்தைகள் தவிர ஒரு வசனத்தை முழுமையாகக் கோர்த்துப் பேசும் மொழியறிவு இருக்கவில்லை. ஆங்கிலத்தையும் கைப் பாசையையும் ஓரிரு டொச் மொழிச் சொற்களுடன் தவறான உச்சரிப்புடன் பேசும் நிலை. ஜெர்மானியர்கள் மொழி, இனக் கர்வம் கொண்டவர்கள். தம் மொழியை தவறாகப் பேசினாலும் மகிழ்ந்து கொண்டாடும் அவர்கள் அதை ஆங்கிலத்தால் அலங்காரம் செய்வதை விரும்புவதில்லை. இன்றைய இளைய சமூகம் அல்லாத,,வைத்திய, மற்றும் நிறுவன தொடர்பாடல் பதவிகளில் இருப்போர் தவிர பலருக்கும் ஆங்கில மொழி தெரிந்திருப்பதுமில்லை.
அந்நேரத்தில் எனதும் குழந்தையினதும் கவனிப்புக்காக, ஜேர்மனியில் பிறந்த வேறு நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட, ஜிவ்வியா என்ற தாதிய மாணவியை நியமித்திருந்தார்கள். பதினெட்டிலிருந்து இருபதிற்குள் இருக்கக் கூடிய அந்தப் பெண்ணுக்கு ஆங்கிலம் தெரியாது எனக்கு டொச் தெரியாது. அதே போல பிரசவம், குழந்தை, வெளிநாட்டு வைத்தியசாலை நடைமுறைகள் பற்றி எதுவுமே தெரியாது.
கட்டிலோடு கட்டியது போல் வயர்கள் தொங்க க் கிடந்த எதுவும் தெரியாத என்னைப் புரிந்து கொள்ளவைத்துச் செயற்படுத்த வேண்டும் . அந்தச் சிறு பெண்ணிடம் ஒரு முகச்சுளிப்போ முனகலோ இல்லை . புன்னகையுடன் இயங்கிய,, எனக்கான தேவைகள் அற்ற நேரங்களில் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிக்கொண்டே இருந்த அந்தப் பெண்ணின் முகம் இப்போதுவரை என் மனதில் இருக்கிறது. இடைக்கிடை அவளிடம் விசாரிக்கவரும் தாதிகள் அவளையும் தட்டிக் கொடுத்து தொடுதல் மூலமேனும் தங்கள் ஆதரவை எனக்கு உணர்த்தமுயல்வார்கள். அப்போதெல்லாம் பாலூட்டும் வசதி கொண்ட உள்ளாடைகள் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. அதையும் அவர்களே தான் வாங்கி அணிவித்தார்கள்.
அதற்குப் பின்னான காலங்கள் மெல்ல மெல்ல வேறு காரணங்களாலும் வைத்தியசாலை எனக்கு நெருக்கமாகத் தொடங்கியது.
தவிர வயிற்றில் நான்குமாதக் கருவுடன் அனுமதிக்கப்பட்டு , அவர்கள் பாதுகாப்பிலேயே தங்கியிருந்து , உரிய காலத்தில் வயிற்றைக் கீறி எடுத்துவரும் வரை அது தான் எனக்குத் தாய்வீடு.
இந்தத் தாய் வீட்டில் கூடுமான நேரம் வரை என் முதல் குழந்தையை என்னுடனேயே வைத்திருக்கச் சொல்லும் ஒரு குறிப்பையும் வைத்தியர் அனுப்பும் போதே இணைத்திருப்பார். அப்போதும் ....... பின்......
சில குறைமாதக் குழந்தைகள் அடிக்கடி வைத்தியப் பராமரிப்பைக் கோரும் தன்மையுடையவை அப்படிக் கோரும் போதும் முதல் குழந்தையை முடிந்தவரை என்னருகில் வைத்திருக்கும் வேண்டுதலை சிறுவர் வைத்தியரும் இணைத்திருப்பார். அப்போதும் அங்குள்ள தாதிகளின் கவனிப்பு நோயுற்ற குழந்தையை மட்டுமன்றி, என் மூத்த குழந்தை மீதுமிருக்கும். அதற்காகவே எனக்கென சிறிய தனியறையை ஒதுக்கியிருப்பார்கள் . தமது கடமையில் அதுவும் ஒரு பகுதியாக இல்லாத போதும் , அவளுக்கான உணவை உண்ணவும் அவளது பொழுதுபோக்குக்கும், அவளை ஆற்றுப்படுத்தவும் பலவேளைகளில் அவர்கள் மனிதாபிமானத்துடன் உதவியிருக்கிறார்கள். இங்கு தாதிய உத்தியோகத்தரை சகோதரி என்பார்கள். அப்படிப்பார்த்தால் என் குழந்தைகள் அறிந்த பெரியம்மாக்களும் சித்திமார்களும் அவர்கள் மட்டும் தான் .
சொல்லப்போனால் , தனக்கே தனக்கான உறவென அவள் அச்சிறுவயதில் தவம் போல் காத்திருந்த அவளது தம்பியின் பிறப்பின் போது கூட என்னைச் சத்திரசிகிச்சை அறைக்குள் அனுப்பி விட்டு அவள் அவர்கள் அறையில் அவர்களின் பராமரிப்பில் தான் இருந்தாள்.
பிற்காலங்களில் அவளையும் கைக்குழந்தையான அவளது தம்பியையும் அறையில் விட்டு விட்டு நான் குளியலறைக்குச் செல்ல நேர்ந்தால் கூட அவர்களே குழந்தைகளைத் தம்மோடு எடுத்துச் சென்று நான் திரும்பி வரும் போது குழந்தைகள் முகமெல்லாம் பூரிப்பாக இருப்பதைக் காணமுடியும்.
இந்த இடைக்காலங்களில் மொழி என்னை நெருங்கி வரத் தொடங்கியது . தடக்கிய நேரங்களில் தட்டிக்கொடுத்து அவர்களின் உச்சரிப்பினூடு அதை வெளியே எடுக்க முயன்றார்களேயன்றி, நான்ன் வேற்று நாட்டவள் தங்கள் மொழி அறியாதவள் என்பதை ஒரு அமர்த்தலான விடயமாகக் கையாண்டு ஒருபோதும் என்னைத் தாழ்வு நிலைக்குக் கொண்டு செல்ல முயன்றதில்லை.
நான் அறிந்தவரை , அந்தக் காலப்பகுதிவரை, ஜெர்மனி வைத்தியப்பணியாளர்களை, வேற்றுநாடுகளிலிருந்து நேரடியாகப் பணிக்கமர்த்தியதில்லை. குறிப்பிட்ட துறைசார் பணியாளர்களையும் இங்கு மீண்டும் கற்பித்துப் பயிற்றுவித்த பின்பே பணியிடங்களில் வேலைக்கமர்த்தினார்கள். அந்தப் பயிற்றுவிப்பில் அவரவர் தனிப்பட்ட குணவியல்புகள் தாண்டி பணிக்கான ஒரே சீரிய முறையை அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பதை காலத்துக்குக் காலம் வெவ்வேறு வைத்தியசாலைகளில் வெவ்வேறு காரணங்களுக்காக நான் தங்கியிருந்த போதும் பணியாளர்கள் ஒரே விதமான நடைமுறைகளைக் கொண்டிருந்ததிலிருந்து உணரமுடியும்.
நம்மவர்களுக்குத் தெரிந்த உதாரணமாக, பிரித்தானியாவில் மகாராணியாரால் கௌரவிக்கப்பட்ட வைத்தியர் மூர்த்தி ஜேர்மனியில் வாழ்ந்த பத்து வருடங்களும் அகதித் தஞ்சம் கோரிய ஒருவராக ஏற்றுக்கொள்ளப் பட்டாரே தவிர வைத்தியப் பணியாற்ற அனுமதிக்கப் படவில்லை என அறிகிறேன்.
இப்போது வைத்தியத் துறை உட்பட அதிகமான பணியாளர்களை தன்னகத்தே அழைத்துக் கொள்கிறது ஜெர்மனி. மற்றப் பணியாளர்கள் பற்றி நான் இங்கு பேசப் போவதில்லை. அந்தந்தத் துறைகளில் இங்குள்ள மக்களுக்கான பழக்கப்பட்ட நிலை பிறழ்வுறும் போது பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படப் போவதில்லை. வைத்தியத் துறை என்பது உயிரோடும் உணர்வுகளோடும் சம்பந்தப் பட்டது. அதன் பழக்கப்பட்ட நிலை பிறழ்வுறும் போது நோயாளர்களை அவர்கள் சம்பந்தப்பட்டோரை அது எவ்வளவுதூரம் பதற்றத்துக்கும், நம்பிக்கையீனத்துக்கும் சமநிலை தளம்பலுக்கும் ஆளாக்குகிறது என்பதை என், மற்றும் என்னைச் சூழ இருந்தோரின் அனுபவத்தினூடாகப் பதிவு செய்கிறேன்.
இனி நான் எழுத வந்தமைக்கான காரணத்துக்கு வருவோம்.
உனக்கு இந்தச் சத்திரசிகிச்சை அவசியமானது. வேறு மாற்றீடு கைகொடுக்குமனால் நான் அதைத்தான் முயன்றிருப்பேன் என்பதை நீ அறிவாய்.
கூறியவரும் நானும் நீண்ட கால அயலவர்கள் மட்டுமன்றி என்னை, என் குடும்பத்தை நன்கு அறிந்தவருமான வைத்தியர்.
அருகிலிருக்கும் வைத்தியசாலைக்கு அனுப்பாமல் எதற்காக என்னை இத்தனை தொலைவுக்கு அனுப்புகிறீர்கள்.
அது இந்தப் பாதிப்புக்குரிய பிரத்தியேக வைத்தியசாலை. தவிரவும் அங்கு சிறப்புச் சத்திரசிகிச்சை நிபுணராக இருப்பது எனது நண்பன். அவனது தொழில் சீர்மையில் எனக்கு மிகவும் நம்பிக்கையுண்டு. அதனாலும்.
வைத்தியர் குறித்த நாளில் வைத்தியசாலைக்குப் போயாகி விட்டது. கொரோரா கொண்டு வந்த புதிய சட்டங்களில் ஒன்றாக வாசல் வரை மட்டுமே யாரும் கூட வர முடிந்திருந்தது.
என் பத்திரங்கள் பதிவுகள் கையெழுத்துகள் எல்லாம் முடிந்து என்னை அழைத்துப் போக வந்த பெண் தாதி கருத்த பெரிய விழிகளும் அடர்ந்த இமைகளும் , கருநிற முடியும் கொண்டவராக கிறீஹ் நாட்டினராக இருக்கவேண்டும் என எண்ண வைத்தார்.
என் கணிப்பில் பொதுவாக அந்த நாட்டவர்கள் சட்டென மனிதர்களுடன் ஓட்டக் கூடியவர்களாகவும் கொண்டாட்ட மனநிலை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர் வேறுபட்டிருந்தார். எதோ அவரது வேலையை நான் குழப்பி விட்டது போன்ற அவசரம் , என் பத்திரங்களுடன் அவர் என்னை அழைத்துச் சென்ற போதிருந்தது. ஒரு ஹலோ விற்குப் பின் என்னுடன் வா என்று மட்டும் கூறி விட்டு முன்னே வேகமாக நடந்தார். இந்த நடைமுறை எனக்கிங்கு புதிது. வழமையாக எங்கே ஏன் போகிறோம் என்பதை முன்பே சொல்லி விடுவார்கள் .
எனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்ததும் வேறும் ஒரு பெண் காலில் கட்டுடன் கிடந்தார். முன்பெனில் புதியவருடன் நுழையும் போதே உனக்குத் துணையாக புதியவர் ஒருவரைக் கொண்டு வந்திருக்கிறோம் என்ற அறிமுகத்துடனேயே நுழைவார்கள். இப்போது அப்படி ஏதும் இருக்கவில்லை. ஹலோ சொன்னேன். அவரும் பதிலுக்குக் ஹலோவெனப் புன்னகைத்தார்.
எனக்கு ஜேர்மனிய மொழி தெரியுமா என்ற எந்த விசாரணையும் அற்று, என் நிறத்தை வைத்து மொழியறியாதவள் என்ற முடிவுக்கு தன்னிச்சையாகவே வந்திருந்தார் தாதி. பக்கத்தில் கிடந்த அலுமாரியைத் திறந்து காட்டி என் bag ஐக் காட்டி அதற்குள் வை என்றார் கனத்த குரலில் கரடுமுரடான அபிநயங்களுடன் . நான் புதினமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சத்திரசிகிச்சை உடைகளை எடுத்துக் கட்டிலில் வைத்து மாற்றிக் கொள் என அபிநயித்தார். டொச் மொழியை சரியாக உச்சரிக்கும் போது அது வல்லினங்களால் முகத்திலறையாது. அவரது தொடர் வன்மையான உச்சரிப்பு , பேச்சுவழக்கில் தேவையற்ற இடங்களிலும் வலிந்து திணிக்கபட்ட இலக்கணம் , வேலை நடைமுறை இங்கு கற்றவரல்ல என்ற சந்தேகத்தைத் தருவித்தது.
எனக்கு அவர் தந்ததும் உடைமாற்றத் தோன்றவில்லை. எத்தனை மணிக்கு சத்திர சிகிச்சை என்றேன். சட்டென கண்களை விரித்துப் பார்த்தார். கேட்டதே தவறு போல. என் அனுபவத்தில் பழக்கமில்லாத வழக்கத்தால் நான் அவரை வேடிக்கை பார்த்திருந்தேன் உடையை மாற்று என நான் அணிந்திருந்த உடையில் கைவைத்த போது அந்த அத்துமீறல் கோபம் தந்தது . கையை மெதுவாக விலக்கி விட்டு நானே மாற்றினேன்.
அவ்வளவு தான் அவரது கடமை முடிந்து அவர் சென்று விட்டார். பக்கத்துக் கட்டிலைத் திரும்பிப் பார்த்தேன். அவர் சலிப்புடன் நட்பாகப் புன்னகைத்தார். இந்த முதுகு திறந்த உடையுடன் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்றாவது சொல்லியிருக்கலாம். என்றேன். நான் இன்றைக்குப் போகிறேன் பெரிய நிம்மதி என்றார் அவர் பதிலாய்.
நான் ஏன் அடிக்கடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நிலையை எய்துகிறேன் என்பதற்கான பின்னணியை வைத்தியர்கள் ஆராய்ந்து குடும்ப வைத்தியர், சிறுவர் வைத்தியர் பாடசாலைகள் என்பவற்றுடன் கலந்து பேசி, தீர்வு கண்ட பின் பலவருடங்களாக எனக்கும் வைத்தியசாலைகளுக்கும் தொடர்பற்றிருந்தது. பின் நான்கு வருடங்களின் முன் ஒருமுறை நிற்கட்டுமா துடிக்கட்டுமா என இதயம் கேள்வி கேட்டதாக இயந்திரம் சந்தேகித்ததில் அவர்கள் பராமரிப்பில் இருக்க நேர்ந்தது. அப்போதும் அவர்களின் நிதானமான பரிசோதனைகளுக்கும் நெற்றி வருடல்களுக்கும் ஆறுதல் வார்த்தைகளுக்கும் மத்தியில் நான் இங்கு எவ்வளவு நாள் இருக்க நேரும், மகளின் பரீட்சை, என்னை நினைத்துத் தவற விட்டுவிடுவாளோ , டெலிபோன் மின்சாரக் கட்டணங்கள் கட்டச் சொல்லவேண்டும். வீட்டில் பிள்ளைகளுக்குத் தேவையான உணவுகள் இருக்கின்றனவா என்ற சிந்தனைகள் மட்டுமே மனதில் ஓட என்னை முழுமையாக வைத்தியப் பணியாளர்களை நம்பி ஒப்படைத்து விட்டுப் படுத்துக் கிடந்தேன்.
ஆனால் இன்று உடலின் ஒரு பாகத்தில் உயிர்ப்பயம் கொள்ளத் தேவையில்லாத சிறு சிகிச்சை அவ்வளவுதான் . இருந்தும் தாதியின் நடைமுறை சலிப்பையும் ஏனோ பதட்டத்தையும் தந்தது. பேசாமல் காலை எட்டு மணிக்கு தலையை இழுத்து மூடிக்கொண்டு தூங்கத் தொடங்கினேன்.
அருகில் அசுமாத்தம் தெரிய விழித்த போது வைத்தியர் நின்றிருந்தார் புன்னகையுடன். கால்மாட்டில் அமர்ந்து பேசிக்கொண்டே இரத்தமெடுத்தார் . என் நிறத்தின் காரணமாக இரத்தக் குழாயை தேடுவது உனக்குச் சிரமமாக இருக்கக் கூடும் என்றேன். நானும் உன் நிறம் தான். எங்கிருந்து வந்தாய் என்று நட்புடன் வினவிக் கொண்டே தன் வேலையை முடித்தவர் முப்பத்தைந்து நாற்பதுக்குள் இருந்தார். யேமன் நாட்டிலிருந்து வேலைக்காக வந்ததாகக் கூறினார். அவர் எழுந்த போது கால் தட்டித் தூரமாகிய என் காலணியை எடுத்துக் காலடியில் வைத்தார். இங்குள்ள வழமையான வைத்தியர்கள் போல.
எப்போது ஒப்பரேசன். ஏன் வந்த போதிலிருந்து இதை அணிந்திருக்கிறேன் என்றேன். யோசனையுடன் பார்த்தார். இதனுடன் இன்னும் எத்தனை மணி நேரம் இருக்க வேண்டும். அதற்குள் எத்தனை முறை குளியலறைக்குச் சென்றுவர நேரும் என்றேன். ஆமோதிப்பதாகத் தலையாட்டிச் சென்றார். உடல்மொழியிலும் பார்வையிலும் ஒரு விதமான செயலிழந்த தன்மையை உணர்ந்தேன்.
கூடவே தன் வேலை முடியவேண்டும் அதை ஏன் செய்கிறோம் என்பதை விட எப்போது செய்தாலென்ன என்ற தாதியின் மனப்பாங்கு புரிந்தது.
இடைப்பட்ட நேரத்தில் பக்கத்துக் கட்டில் பெண்ணும் நானும் அறிமுகமாகிக் கொண்டோம். இன்னும் கால் கீழே வைக்க முடியாத நிலையிலும் அவர் வீட்டுக்குச் செல்வதில் பிடிவாதம் காட்டினார். என்னுடன் கனிந்திருக்கும் அந்த முகம் தாதி உள்ளே வந்ததும் ஒவ்வொரு முறையும் மாறியது.
மீண்டுமொரு முறை சிறுதூக்கம் போட்ட பின் அதே தாதியே வந்தார். அதே அவசரம் அதே சலிப்பு, ஆழமாய் மூச்சிழுத்து முகத்துக்கு முன்னான் மூசிவிட்டுச் செயற்படுவது முகத்தில் காறி உமிழ்வது போல இருந்தது. இவ்வொரு இன , நாட்டு நடைமுறையிலும் ஒவ்வொரு செயலும் வேறு அர்த்தங்களைக் கொள்கின்றன. பல்கலாச்சாரமக்களுடன் பழகும் போது பொதுவாக அவைகளைக் கருத்தில் கொள்ளல் முக்கியம். அவர்கள் கலாச்சாரத்திலும் முகத்துக்கு நேரே மூசி விட்டுச் செயற்படுவதற்கு அவமதிப்பதாக அர்த்தம் என்பதை நானறிவேன் என்பதை அவர் அறியாமல் இருக்கக் கூடும் . ஒரு விதமான முக்கலுடன் மூசி விட்டு கட்டிலுடன் இழுக்கத் தொடங்கினார்.
ஹாரிடாரில் கேட்டேன்
எங்கே போகிறோம்
சத்திரசிகிச்சை அறைக்கு
முதலே சொல்லியிருக்கலாமே
அதற்காகத்தானே வந்தாய்
சிறுநீர் கழிக்கும் தேவை கூடவா இருக்காது எனக்கு. அதற்காகவேனும் சொல்லியிருக்கலாம். வழமையாக அழைத்துச் செல்லுமுன் கழிவறைக்குச் சென்று வா என்று சொல்லிக் காத்து நிப்பார்கள் என்ற நினைவு வந்தது.
ஆயத்தம் செய்யும் அறைவாசலில் கொடுத்துவிட்டுச் சென்றார். அப்பாடா என்றிருந்தது.
உள்ளே வாங்கிய ஆண் பணியாளர் ஜெர்மானியர் இல்லை என்று முகம் சொன்னாலும் இங்கு வளர்ந்தவர் என்றது மொழி. புன்னகையோடு பேசிப் பேசி என் விபரங்களை எனது வாயால் கேட்டு படிவத்தில் சரி பார்த்தார். இப்போது தோற்று நீக்கி பிசிரப் போகிறேன் சற்றுக் குளிரும், ஊசியால் குத்தப் போகிறேன் சின்னதாய் நோகும் சொல்லிச் சொல்லி தன் வேலையில் கருத்தாக இருந்தார்.
காலையிலிருந்து நீர் கூட அருந்தா வெறும் வயிறு. ஸேலைன் ஏறத் தொடங்கியதும், சிறுநீர் சேரும் உணர்வைத் தூண்டத்தொடங்கியது.
உனது இந்தக் கையை கட்டிலோடும் மறுகையை கட்டிலுக்கு வெளியே ஒரு அணைவோடும் வைத்துக் கட்டப் போகிறேன்.
சரி.
சிறுநீர் உணர்வு அதிகரிக்கத் தொடங்கியது, அதற்குள் சத்திர சிகிச்சைக்குப் பாவிக்கும் பச்சைத் துணியால் கையிலிருந்து உடலில் மேற்பகுதியை மூடி முகத்தை மறைத்து மறுபக்கம் பார் என்றார்கள். அக்குளிற்கு அருகே அத்துணியின் சிறிய இடை வெளியைப் பிரிப்பது உணர்ந்து திடுக்குற்று தலையைத் தூக்கினேன். அங்கே என்ன செய்கிறீர்கள். எனக்குப் பிரச்சனை இந்த இடத்திலல்ல.
தெரியும் பதட்டப்படாதே தவறாகச் செய்ய மாட்டோம்.
இந்தப் பதட்டம் உங்கள் தாதி என்னை பொறுப்பேற்ற நேரமிருந்து தான் ஆரம்பித்தது. எது கேட்டாலும் பதிலில்லை. என் உடலை பொருள் போல நடத்தினால் பதட்டம் வரும் தானே.
புன்னகைத்தார் நான் சொல்லித்தான் செய்வேன் யோசிக்காதே.
செலைனை நிறுத்திவிட்டு சிறிய போத்தலில் என்ன ஏற்றுகிறீர்கள்
அண்டிபயாடிக்
இவ்வளவு அதிகமாகவா
ஆமாம் உன் இரத்தத்தில் கலக்கவிடவேண்டும்
சிரித்து விட்டார்கள். ஏன் நம்பிக்கையற்றிருக்கிறாய்
இதுவரை நம்பியவள் தான். உங்கள் தாதியின் நடைமுறை மனதை அந்நியமாகவும் பயமாகவும் உணரவைக்கிறது. அது உங்களவரை பதட்டமாகத் தொடர்கிறது.
மயக்க மருந்து கொடுக்கும் வைத்தியர் வந்தார். பெயரிலும் முகத்திலும் அரேபியர் என்றார். உச்சரிப்பில் இங்கு கற்றவரோ வளர்ந்தவரோ அல்ல என்றார். ஆனால் வேலையில் ஜேர்மனிய நடைமுறையைக் கொண்டிருந்தார். தன்னை அறிமுகம் செய்து என் வாயால் என் பெயர் பிறந்த திகதிகளைக் கேட்டுச் சரி பார்த்தார், ஸ்கேன் உபகரணத்தில் ஜெல்லைப் பிதுக்கியவாறே உன் கைகளை முழுவதுமாக உறங்கவைக்கப் போகிறேன் எனது பக்கம் பார்க்காதே என பச்சைத் திரையால் முகம் மறைத்தார்.
உறுப்பை மாத்திரம் உணர்விழக்க வைத்துச் செய்யப் போகிறீர்களா
இல்லை மயக்குவோம் அதற்கு முன் இந்தச் சிகிச்சைக்கு இது அவசியம்
அதற்குள் முன்னமே நின்ற அவரது உதவியாளர் உள்ளே சொல்லியிருக்கவேண்டும் சார்ஜன் வந்தார். அகன்ற புன்னகையுடன் அறிமுகம் செய்தார். என்னை அனுப்பிய வைத்தியரை தன நெருங்கிய நண்பர் என்றார். கூடவே அவரது இரு உதவியாளர்களும். உரிய இடத்தை அழுத்தி பாதிக்கப்பட்ட இடத்தைப் பிடித்தபடி இதில் தான் செய்யப் போகிறோம் பதட்டமில்லாமல் அமைதியாக உறங்கு என்றார் புன்னகையுடன்
. பதட்டப்படுபவள் அல்ல உங்கள் தாதி ஏற்படுத்திய தெளிவின்மையும் பதட்டமும் தான் உங்கள் வரை தொடர்கிறது என்று வாய்வரை வந்ததை சொல்லவில்லை. பதட்டம் போனதும், வேகமாக ஏறிக்கொண்டிருந்த சேலைன் சிறுநீரை உந்துவது உணர்ந்தது.
என் மனம் தெளிவானதும் மீண்டும் முகத்தை மூடி திரை போட்டு விட்டு ஒவ்வொரு நரம்பாக ஸ்கேன் செய்து தேடித்தேடி விரல் விரலாக உறங்க வைக்கத் தொடங்கினார்கள். அதன் வலியில் நின்றிருந்த சிறுநீர் உணர்வு முழுக்கரமும் உறங்கக் காத்தருந்த நேரத்துக்குள் ஏறி முடித்த இரு பாக்கற் சேலைனின் காரணமாக அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது.
இங்கே டாய்லெட் இருக்கிறதா
சிறுநீர் வருகிறதா
ஆமாம்.
வரும் போது போய்விட்டு வரவில்லையா நீ
இங்கே வருவதாக யார் சொன்னார்கள். கட்டிலில் கிடந்தேன் இழுத்துவந்து போட்டிருக்கிறார்கள். நான் டாய்லெட்டுக்குப் போய் நான்கு மணி நேரம் இருக்கும் .
சத்திரசிகிச்சை உடைமாற்றுமுன் அனுப்பவில்லையா.
நான்கைந்து மணி நேரத்துக்கு முதலே அதை அணியவைத்து விட்டார்கள்.
முழு ஆயத்தமும் செய்தாகி விட்டது இப்போது போவது சரியாக வராது. இதை உனக்குள் செலுத்தியபின் எழுந்திருக்கக் கூடாது. முடியாதும் கூட . சத்திரசிகிச்சைக்கான பிரத்தியேக உள்ளாடைகள் அணிந்திருக்கிறாய் தானே பயப்படாதே. இன்னும் சில நிமிடங்களில் மயக்கி விடுவார்கள். பின் உணரமாட்டாய் .
உச்சியில் உச்ச ஒளி உமிழ்ந்த லைட் இருந்த அறைக்குள் தள்ளி பச்சைதுணி மறைவுக்கருகே என் அருகில் அமர்ந்து கொண்டு இப்போது மயக்கமருந்து செலுத்தப் போகிறேன் என வைத்தியர் சொன்ன போதும் , மெல்ல மெல்ல கண்கள் சொருகுகையிலும் என் மனம் முழுவதும் சிறுநீரும் என்னை மீறி வெளியேறி விடுமோ என்ற பதட்டமுமே நிறைந்திருந்தது.
நினைவு திரும்பிய போது முதல் உந்துதல் சிறுநீராக இருந்தது. அல்லது அந்த உந்துதலால் விரைவாக நினைவு திரும்பியது . பேச விளைவதைக் கண்டு அதிகவனப்பிரிவுக்குப் பொறுப்பானவர் பொறுப்பானவர் அருகே வந்தார். நெற்றியில் கைவைத்து இவ்வளவு விரைவாக எழுந்திக்க வேடம் தூங்கு என்றார். அருகருகே எனக்கு முன் அவ்விடத்துக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் இன்னும் தூக்கத்திலிருந்தார்கள். நீ இன்னும் தெளிவு நிலைக்கு வரவில்லை தூங்கு என்றார். மீண்டும்
பின் என் தவிப்புணர்ந்து, அல்லது முதலே அறிவிக்கப்பட்டதன் படி கழிவகற்றும் பாத்திரத்தை எடுத்து அருகில் வந்தார்.
எனக்கு அது சரியாக வராது . போக வேண்டும்.
நீ எழுந்திருக்கும் நிலையில் இல்லை. சரியாகப் பேசும் நிலை கூட இல்லை . முயற்சித்துப் பார்.
முடியவில்லை.
செலைன் ஓட்டத்தை நிறுத்தினார்.
மீண்டும் முயற்சி
முடியவில்லை.
எல்லோரும் மயக்கம் மீள்வதற்காய் கிடத்திவைத்திருந்த பகுதிக்குள் வெண்கலக் கடைக்குள் யானை நுழைந்தது போல ஒரு தாதி நுழைந்தார். அத்தனை சத்தமான பேச்சும் ஓர் விதமான அங்கிடுதத்தித் தனமும் அரை மயக்கத்திலும் பதட்டம் தந்தது
இவளை இவளது அறைக்குக் கூட்டிச் சென்று சிறுநீர் கழிக்க உதவு
இல்லை நான் வேறு யாரையோ அழைக்க வந்தேன்.
யாரை
பெயரும் தெரியாமல் அறை எண்ணும் தெரியாமல் தடுமாறியது. தன் பொறுப்பின்மைக்கு தானே சத்தமாய் சிரித்தது. .பாக்கட்டுக்குள் கைவிட்டு கையேட்டை எடுத்துப் பார்த்து அறை எண் சொன்னது. அவ்விடத்துக்குப் பொறுப்பான தாதியின் முகம் கடுகடுப்புடன் புன்னகைத்தது
அந்த நோயாளியை நான் வேறு யாரிடமாவது அனுப்புகிறேன் இப்போது இவளை விரைவாகக் கூட்டிச் சென்று அவளது அறையில் உள்ள கழிவறைக்குக் கூட்டிச் செல். கூடவே நில் . தனியாக உள்ளே விட்டு வெளியே வராதே. இன்னும் நிமிர்ந்திருக்கும் நிலையில் அவள் இல்லை. விரைவாகக் கொண்டு செல்.
வழியில் இரண்டு மூ ன்று இடங்களில் நின்று விண்ணாணம் கதைத்தது கெக்கே பிக்கே என்று சிரித்தது. எனக்கு உயிர்போயக்கொண்டு இருந்தது . உச்சரிப்பும், பெயரும் ருமேனிய நேரடி இறக்குமதி என்றன.
அறை வாசலில் இன்னோர் தாதியுடன் வைத்தியசாலைக்கு சம்பந்தமில்லாத எதையோ சத்தமாக உரையாடிக்கொண்டே பொறு உள்ளே விட்டுவிட்டு வருகிறேன் என்றது என் படுக்கைக்கான இடத்தில் விட்டு விட்டு அவசரமாக மிகுதிக் கதைக்கு ஓடியது.
என் படுக்கை குளியலறைச் சுவருக்கு சமீபமாக இருந்தது. சிறுநீர் உந்தல் சிந்திக்க விடாது எழுப்பியது சுவரில் சாய்ந்து செலைன் உபகரணத்தைப் பற்றியபடி குளியலறைக்குள் நுழைந்தேன். இருக்கையில் அமர சட்டென சாய்த்தது. உள்ளுணர்வு கையை சிவரில் ஊன்றித் தாங்கி நிறுத்த முயன்று , தூங்கிக் கிடந்த கை மேலெளாது சமநிலை தளும்பியதில் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட கை நிலத்தோடு மடங்கித் துவள அதன் மீது நானும் என்னோடு செலைன்உபகரணமும் சேர்ந்து விழுந்தோம்.
சத்தம் கேட்டு பக்கத்துக் கட்டில் பெண் அழைப்பு மணியை அழுத்தியிருக்க வேண்டும். ஒரு தாதிய மாணவனும் மாணவியும் ஓடி வந்து பதட்டமாக தூக்கி கட்டிலில் கொண்டு வந்து போட்டார்கள்
ஏன் எழுந்திருந்தாய் ஏன் எம்மை அழைக்கவில்லை நீ தனியாகப் போகக் கூடாது எனப் பதறினார்கள்.
கொண்டு வந்து தள்ளி விட்டு சிறுநீர் கழிக்கப்போ என தாதியே சொல்லிவிட்டுப் போனால் பின் இவள் யாரை அழைப்பது என்றாள் பக்கத்துக் கட்டில் பெண். அவர்கள் இருவரின் முகங்களில் கோபம் வெளிப்படையாகத் தெரிந்தது. உடனடியாக வைத்தியர் வந்தார்.
பின் அடுத்த ஒவ்வொரு இரண்டு மணி நேரமும் அந்த தாதிய மாணவர்களே வந்தார்கள்.......
இரவுக்கு இங்கு பயிற்றுவிக்கப்பட்டதாக மொழியாலும் நடைமுறைகளாலும் நம்பத்தகுந்த தாதியும், அடுத்தடுத்த பகலில் வேறு தாதிய மாணவர்களும், பல் தேய்த்து விடவா? மறுகையால் முயன்று பார்க்கப் போகிறாயா? முகம் உடல் துடைக்கவா. உன் உடைகளை நாம் அணிவித்து விடலாமா எனக் கேட்டு அனுமதிபெற்றுக் கவனித்துக் கொண்டதில், ஒவ்வொரு நான்கு மணி நேரமும் இதைத்தான் செய்யப் போகிறோம் எனச் சொல்லிச் சொல்லிப் பரிசோதித்ததில், நட்பான புன்னகையில் பதற்றம் அகலத் தொடங்கியது.
நான் வரும் போதிருந்த தாதி எங்கே.
எங்களைப் பிடிக்கவில்லையா. உனக்கு எம்மை நியமித்திருக்கிறார்கள் .
பிடிவாதமாக பக்கத்துக்கட்டில் பெண் சென்ற பின்
புதிதாய் வயோதிபப்பெண் ஒருவர் முள்ளந்தண்டு சறுக்கி நிமிர முடியா வலியோடு வந்தார்.
ஆரம்ப ஆயத்தங்களை அந்தத் தாதிய மாணவர்கள் செய்தார்கள் பின் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்ட தாதி மாட்டின் எலும்பு மூட்டில் ஒட்டிக்கிடக்கும் கசியிளையத்தை நாய் பல்லால் வறுகுவது போல ர் இற்கு அழுத்தம் கொடுத்துக் கொடுத்து டொச் கதைத்தார். ரசிய அல்லது ரசியாவிலிருந்து பிரிந்த நாடுகளில் ஒன்றிலிருந்து நேரடியாகப் பணிக்கு வந்திருக்க வேண்டும். குரலில் தேவையற்ற உச்சதொனியும் அதிகாரமும் இருந்தது.
பக்கத்துக் கட்டில் பெண்ணுக்கு உணவு எடுத்துச் சாப்பிடும் படி நிமிர முடியவில்லை அதற்கேற்ப உணவுத் தட்டை நகர்த்துவது தன் கடமை இல்லையாக நடந்து கொண்டார். அந்தத் தாதி . வயோதிபத்தின், வலியின் விளைவாக அவர் சாப்பிடாமல் பிடிவாதம் பிடிக்கத் தொடங்கினார். சாப்பிடுவது சாப்பிடாதது உன் விருப்பம் என்றார் விட்டேற்றியாய். வெளியேறியபடி
அக்கறையாக இதமாகச் சொன்னால் அடம்பிடிக்கமாட்டார். அவரது தேவை ஆதரவான வார்த்தைகளுடனான கவனிப்பு என்பதை அவரை உண்ணச் சொல்லி நான் உணர்ந்தேன்.
அடுத்தநாள் படுக்கை விரிப்புச் சரி செய்து அப்பெண்ணைப் படுக்கவிட்ட போதே அவர் அலறிக்கொண்டிர்ந்தார். படுக்கையின் முதுகுப்பகுதியை அதிகமாக உயர்த்தி விட்டீர்கள் எனக்கு வலிக்கிறது சறுக்குகிறது. என்னை மீறிச் சிறுநீர் கசிகிறது என அப்பெண் அலறிக் கொண்டிருந்தார். எல்லாம் சறுக்காது சரியாகத்தான் போட்டிருக்கிறேன் அமர்த்தலாகச் சொல்லிக்கொண்டே அவர் வெளியேறினர்.
சலித்துச் சலித்துப் புறுபுறுத்துக்கொண்டே கிடந்தவரின் ஒருகால் கீழே தொங்கத்தொடங்க படுக்கையிலிருந்து அவர் கீழே நகர்வது தெரிந்தது. உணர்வற்று தொங்கிக்கொண்டிருந்த என் கையை மறுகையால் தாங்கிய படி ஓடிச்சென்று முழங்காலால் அவரது உடலை கட்டிலோடு அணை கொடுத்து தாங்கிக்கொண்டு அழைப்பு மணி அழுத்த ஓடி வந்தார்கள் அந்த தாதிய மாணவர்கள்.
என்னை வீட்டுக்கு அனுப்புங்கள். அங்கே எனக்கு உதவிக்கு வரும் பெண் என்னை நன்றாகக் கவனித்துக் கொள்வார் நான் இங்கே இருக்க மாட்டேன். கோபமாய் வேதனையாய் கெஞ்சலாய் சொல்லத் தொடங்கினார் அவர் .
பின் அவரின் தேவைகளுக்குத் தொடர்ந்து தாதிய மாணவர்கள் வரத்தொடங்கினார்கள்.
இந்தத் தாதிய மாணவர்களோ இங்கு பயிற்றப்பட்டவர்களோ அன்றி வேறு யாரிடமும் என் கவனிப்புக் கையளிக்கப் படமுன் வெளியேறிவிட வேண்டும் என்ற பதட்டத்தில் எப்போது வீட்டுக்கு விடுவீர்கள் என இத்தனைவருடகால அனுபவத்தில் இல்லாதபடிக்கு வைத்தியர்களைத் தொடர்ந்து நச்சரிக்கத் தொடங்கினேன்.
எனக்குத்தான் எல்லாம் தெரியும், மற்றவர்களின் உணர்வுகளை என் அதிகாரத்தால் மிதிக்க முடியும் என எண்ணுபவர்களில் பலரை ஆழ்ந்து நோக்கினால் எனக்கு அவர்கள் மீது ஒருவகையான பரிதாபமும் பரிகாசமுமே ஏற்படும். ஏனென்றால், அவர்கள் அதிகமாக தாழ்வுமனச் சிக்கல் கொண்டவர்களாக, அது புரியாமல் தம்மை மேம்படுத்திக் காட்டும் முயற்சியை முன்னெடுக்கும் தன்னிலை புரியா மனப்பிறழ்வு கொண்டவர்களாகவே நான் பார்க்கிறேன்.
தன்னை விட இன்னொருவரை உயர்வாக உணரும் போது, அல்லது அந்த உயர்வை மனம் ஏற்க மறுக்கும் போது தான் கொண்ட பதவியின் உதவியால் தன் ஆளுமைக்கு உட்பட்டவர்ளின் தனிமனித உணர்வுகளின் மீது ஏறி நின்று ஆடுவது. வேலையிடங்கள் பொதுவெளிகள் மட்டுமல்ல உறவு நிலைகளிலும் நான் சொன்னால் அதுதான் இறுதித் தீர்ப்பு என்பதான, அடுத்தவரின் விளக்கம் கேட்கத் தயாரில்லாத ஒரு விதமான மனநோய். உலகின் அதிகமான தொகை இந்த நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதால் இது இயல்பான ஒன்றாக ஏற்றுக் கடந்து போகப்படுகிறது என்பேன்.
இனி விடயத்துக்கு வருவோம்
.........................................................................................................................................
ஜேர்மனியில் கல்வி சரியில்லை அதனால் லண்டனுக்குப் போகிறோம் கனடாவுக்குப் போகிறோம் என்று பெயர்ந்தவர்கள் பலரைக் கண்டு என் குழந்தைகளும் நல்ல கல்வி பெற முடியாமல் போய்விடுவார்களோ என்று ஜேர்மனிய வாழ்வின் ஆரம்பத்தில் நானும் பயந்திருக்கிறேன். அப்போது நான், இலங்கையிலிருந்து என் னுடலுக்குள் காவிவந்த என்னைத் தொலைத்து விட்டு, அடுத்த கிளை அறியாத கூட்டுப்பறவையாக, என் மூளைப் பகுதியை பூஞ்சணம் போன்ற ஒரு தொப்பி மூடியிருப்பவளாக மாறியிருந்தேன் . சிந்திக்கவும் செயற்படவும் முடியாத என்னால் அப்போது மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுப் பயப்பட மட்டுமே தெரியும். என் இயல்புக்கு மாறாய்.
என் குழந்தைகள் வளர வளர, அவர்கள் கற்கக் கற்கத்தான் நானும் இந்த நாட்டையும், வாழ்வையும் கல்விமுறையையும் கற்கத் தொடங்கினேன். இன்னும் சரியாகச் சொல்வதானால் அவர்களுக்காக அதனால் உன்னிப்பாகக் கற்க முயன்றேன்.
நான்காம் ஆண்டுடன், அதன் இறுதித் தவணையில், ஆண்களுக்கு, பெண்களுக்கெனத் தனித்தனியான பாலியல் கல்வி மற்றும் அது சம்பந்தமான விழிப்பூட்டல், கையேடு என்பவற்றுடன் இங்கு ஆரம்பப்பாடசாலையை நிறைவு செய்கிறார்கள்.
நாலாம் ஆண்டின் இறுதியில் பெறப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் அடுத்ததரப் பாடசாலைக்குத் தேர்வு செய்கிறார்கள். பிள்ளைகளின் மூளை வேகம், மொழித்திறன், செயற்திறன் ஊக்கம் என்பவைகளையும் கொண்டு ஆசிரியர்கள் பிள்ளைக்கான அடுத்த பாடசாலையை சிபாரிசு செய்கிறார்கள். இதில் நூறுவீதமும் இன அடிப்படைத் தெரிவு கலக்கவில்லை எனச் சொல்ல மாட்டேன் ஆனால் எல்லோரும் அப்படியல்ல என்று சொல்ல முடியும். மொழிப்போதாமையை எடுத்துக் காட்டும் போது தான் எம்மவர்கள் பலர் இங்கு பிள்ளைகளுக்கு கல்வி சரியில்லை என்ற வார்த்தைக்குள் நிலைமையை மூடுகிறார்கள்.
அடுத்தடுத்த தரங்களில் நான்கு வகையான பாடசாலைகள் இருக்கின்றன. முதல் மூன்று பாடசாலைகளிலும் அதே பாடங்கள் பிள்ளைகளின் செயற்பாட்டு சிந்தனை வேகத்துக்கு ஏற்ப கற்பிக்கப்படும் . சிறுவயதில் சரியான பெறுபேறுகளைப் பெற வசதிகள் அமையாத குழந்தை வளர்த்து படியேறிச் செல்வதற்கு வாய்ப்பாகவே உள்ளது கல்வி முறை.
ஆனாலும் இந்தத் தரங்கள் தங்கள் நாட்டின் எல்லாவிதப் பணிகளுக்குமான பணியாளர்களை ஆரம்பத்திலிருந்தே உருவாக்க வாய்ப்பாகின்றன. பத்தாமாண்டில் பெரும் பெறுபேறுகள் அவர்களின் பணிநிலைதேர்வைத் அதற்கான கல்வியை முன்வைக்கின்றன.
இனி பத்தாமாண்டுக்குப் பின்னான உயர்கல்விக்கு வருவோம்
எங்கள் நாட்டின் A/L போன்றது மூன்றாண்டுகளுக்கான கல்வி. இந்த மூன்றாண்டுகள் முடிவில் குறித்த மாணவர் பத்தொன்பது இருபது வயதை அண்மித்து விடுவார்.
இறக்கை முளைத்த குஞ்சுகளை முதுகில் வைத்து முக்கி முக்கிப் பறந்து அவைகளையும் போட்டடித்து தாமும் விழுந்துடையும் வழக்கம் இந்த மக்களிடமில்லை. வாழும் வரை அவரவர் வாழ்க்கை அனுபவிப்பதற்கே என்பதான மனப்பான்மை யுடையவர்கள். ஆக .
இருபதிற்குப் பின்னான உயர்கல்விக்கு அவர்களுக்குத் தேவைப்படும் பணத்தையும் வாழ்க்கைச் செலவையும் அவர்களே பூர்த்தி செய்ய நேரும் போது, பயிற்றப்படும் பணிக்கான சம்பாத்தியதோடு கூடிய கல்விகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
அடுத்து, பல்கலைக்கழகக் கல்விச் செலவுக்காகவும் இதுவரை படித்த அழுத்தத்திலிருந்து சிறிது ஓய்வு தேவை என்பதற்காகவும் பயணம் போகவும் விரும்புகிறார்கள். அதற்கான பணத்தை சம்பாதிக்க தொழிற்சாலைகள் உட்பட கல்வித்தகமை தேவையற்ற உடலுழைப்பை நாடும் வேலைத்தளங்களைத் தெரிவு செய்கிறார்கள்.
இந்தக் காலப்பகுதியில் சாரதிப்பத்திரம், அதிக விலையற்ற கார், பயணங்கள் என சொந்த உழைப்பு,வாழ்க்கையை ரசிக்க வைக்கிறது அவர்களை. அதுவே போதும் என எண்ணும்படியும் சிலவேளைகளில்.
இன்னோர் விடயம் இந்தக் கல்விக் காலத்தின் தேர்வுப் புள்ளி. அது இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகளைக் கொண்டு அமைவதல்ல. வகுப்புச் சோதனைகள், வகுப்புச் செயற்பாடுகள், மற்றும் வாய்வளியான மொழிதல்கள் எல்லாவற்றின் அடிப்படையிலும் ஒவ்வொரு தவணையிலும் அவர்களுக்கு வழங்கப்படும் பெறுபேறுகள் ஐம்பது வீதமும் மற்றைய ஐம்பது இறுதிப் பரீட்சை பெறுபேற்றிலுமிருந்து கூட்டப்பட்டு பின் சராசரிப் புள்ளி பெறப்படுகிறது.
வைத்தியக் கல்வி பற்றி மட்டும் பார்ப்போம். முன்பு சராசரிப் புள்ளி இரண்டுக்குள் இருந்தால் போதும் என்றிருந்தது வருடாவருடம் தேய்ந்து தேய்த்து வந்து போன வருடம் ஒன்று தசம் ஒன்று. இவ்வருடம் ஒன்றில் வந்து நிற்கிறது. இதற்கு மேல் தேய வாய்ப்பில்லை.
இந்தச் சராசரியை எடுப்பதானால் உயர்பள்ளியின் காலம் முழுவதும் முழுக் கவனத்தோடு இருந்தால் மட்டுமே சாத்தியம் . இந்த முழுக்கவனம் என்பது கல்வி தவிர மற்ற அனைத்திலுமிருந்து அவர்களைத் தள்ளி வைக்கிறது. படிப்பு பெரும் சுமையென அழுத்ஹ்டும் போது அதிலிருந்து விடுபட்டு இலகுவான கல்வி முறைகளை நாடுகிறார்கள்.
தவிரவும், ஐந்தாமாண்டில் ஸ்கொலஷிப் பரீட்சைப் பெறுபேறுகளை வைத்துக் கொண்டு நான் வைத்தியராகி சேவைசெய்யப் போகிறேன் என்ற பேட்டி கொடுக்க வைப்பவர்களோ அல்லது இங்கே கிடைக்கவில்லையானால் வேறு எங்காவது கிழக்கைரோப்பிய நாடுகளுக்காவது சென்று வைத்தியக் கல்வியைக் கற்று கொண்டு வா. அப்பத்தான் எங்களுக்கு மரியாதை என பணத்தை வாரியிறைக்கும் யாழ்ப்பாணிகள் அல்ல இவர்கள். வேற்று நாட்டுக் கல்வி இங்கு தரமுள்ளதாக ஏற்கப்படுவதில்லை என்ற விபரம் புரிந்தவர்கள் .
இந்த மருத்துவக் கல்விக்கான காலம் ஒரு செமஸ்டரிலும் தடுக்காது தாண்டினால் ஏழு வருடங்கள். எழுவருட முடிவிலும் ஒரு சாதாரண வைத்தியராகாகமுடியுமே அன்றி தனியே தொழில் நடத்தும் அல்லது சிறப்புப் பிரிவுக்கான வைத்தியர் என்ற தகுதியை அனுபவமும் மேர்கல்வியும் இல்லாமல் பெற முடியாது ஆக , இந்தக் காலப்பகுதியில் முப்பது வயதை அண்மித்து விடும் வாழ்க்கை.
இருபதிலிருந்து முப்பது வாழ்வின் மிக முக்கியமான காலப்பகுதி, உற்சாக தீவிரமான இயங்குபகுதியும் இளமைக்கு இறக்கை முளைக்கும் பகுதியும் அது தான். அதை அவர்கள் கல்வியிலும் பொருளாதார போதாமையிலும் கழிக்க நேரும் இப்படியான காரனகளும் அவர்களின் பணித்தேர்வை நிர்ணயிக்கின்றன.
மற்றது , அவர்களை அவர்களே நிர்ணயிக்கும் சுதந்திரம். என் குழந்தைகள் உட்பட , பள்ளி தாண்டி தேர்வுகளை ஆராயும்போதே, தனக்கு அதன் மீதான ஆர்வத்தை வயதை, ஆகும் காலத்தை கிடைக்கும் ஊதியத்தைக் கணிப்பிட்டே கூடுதலாக தொடரப்போகும் கல்விப்பாதையைத் தேர்வு செய்கிறார்கள். இந்தத் தேர்வில் பத்து வருட காத்திருப்புக்கான விருப்பு அடிபட்டுப் போகிறது.
இது இப்போது மருத்துவத்துறைப் பற்றாக்குறையைத் தோற்றுவித்திருக்கிறது. மருத்துவம் சார் வேறு துறைகளில் கற்பவர்கள் கூட வைத்தியசாலை இருபத்திநான்கு மணிநேர வேலையை விட மருத்துவம் சம்பந்தமான நிறுவனங்களில் பணியாற்றும் போது காலையிருந்து மாலை வரை சாதாரண பணியக நேரம் பணியாற்றினால் போதுமானது. மிகுதி நேரம் வாழ்வதற்கானது எனக் கணிப்பிட்டுக் கொள்கிறார்கள். அதன் விளைவு மருத்துவரல்லாத மருத்துவப்பிரிவு பணியாளர்களின் இறக்குமதி.
இந்த இறக்குமதிகள் தொழிற் கல்வியை சேவையை மட்டும் காவிவருவதற்குப் பதிலாக தத்தம் நாடுகளில் உள்ள நடைமுறைகளையும் காவி வருகின்றன. கூடவே வேற்று நாட்டுக்குப் போய் பணி செய்யும் தகைமையுடையோர் தாம் என்ற மிதப்பையும், இங்கிருப்பவர்களை விட தாம்குறைந்து கணிப்பிடப்பட்டு விடக் கூடாது என்ற பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. அந்தத் தாழ்வு மனச் சிக்கல் அடுத்தவரின், நோயாளிகளின் உணர்வுகளை மதிக்காத மேலாத்திக்கமாக வெளிப்படுத்தப் படுகிறது.
இது இப்படித்தான் இருக்கும் இருக்கவேண்டும் எனப் பயிற்றப்பட்டு, பழக்கப்பட்டுப் போன நடைமுறை இந்தப் புதியவரவுகளால் கைக்கொள்ளப்படாமல் குழம்பும் போது ஒரு சீரிய நடைமுறைக்குப் பழக்கப்பட்ட நோயாளிகளும், அதற்கேற்ப இங்கு பயிற்றப்பட்ட பணியாளர்களும் பதட்டமடைவதும் கோபமடைவதும் நம்பிக்கை இழப்பதும் தவிர்க்க முடியாதவை ஆகின்றன.
என் பள்ளிப் பருவத்தில் அம்மா வைத்தியசாலையிலிருந்த காலத்தில் கண்ட கிரீடம் சூட்டிய , தரையில் கால் பாவாத மருத்துவத்துறைப் பணியாளர்களை இவர்கள் இப்போது இங்கு நினைவுபடுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். தாய் வீடென ஆறுதல் உணர்த்திய இடம் பதட்டம் தரும் இடமாக உணரத் தொடங்குகிறது


பெரியாசுப்பத்திரியும், கிரீடம் சூடிய டாக்குத்தரும்

 நான் பதினோராம் ஆண்டு கற்கும் காலத்தில் அம்மாவுக்கு வயிற்று வலி வந்து, பெரியாஸ்பத்திரி எனப்படும் யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்கள். அம்மாவின் சிறுநீரகத்தில் உள்ள கல்லை வெளியேற்றியபின், இரண்டுநாள் வலியின் அயர்ச்சியையும் தூக்கத்தையும் சேர்த்துவைத்து ஓய்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அது எனக்கு வைத்தியசாலையில் அதிக நேரத்தை செலவிடும் முதல் அனுபவம். அம்மா தூங்கிய பின் ஒவ்வொரு கட்டிலாக வேடிக்கை பார்த்தபடி அம்மாவின் கால்மாட்டில் அமர்ந்திருந்தேன்.

படுக்கை விரிப்புகளும், நோயாளியருகே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்களும், பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையும், அவர் தம் உடை, பேச்சும் அவரவர் பொருளாதார கல்வி நிலைமைகளைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன.
அம்மாவின் கால்மாட்டுக்கு நேரே இருந்த கட்டிலில் படுத்திருந்த அம்மா, அழகானவராகவும் செழிப்பானவராகவும், என்னைத் தன்னருகே அழைத்துக் கையைப் பற்றியபடி பேசுவதில் விருப்புக் கொண்டவராகவும் வசதி படைத்தவர் போலுமிருந்தார்.
அவருக்கு அடுத்த கட்டிலில் , நைந்து போன வொயில் சீலை ஒன்றை இரண்டாகவோ நான்காகவோ மடித்து , படுக்கை விரிப்பாக விரித்து சீத்தைத் துணியில் உறை போட்ட தலையணையில் ஒரு அம்மா படுத்திருந்தார். மிதந்து உப்பிக் கிடந்த அவரது வயிறு தவிர அந்த உடலில் வேறெங்கும் தசை மிதப்பு என்பதே அற்றுக் கிடந்தது. எனது கவனம் அதிகமான நேரம் அவரை அவதானிப்பதிலேயே இருந்தது. அவர் கிடந்த கோலம் அப்படி. அவருக்கு உதவிக்கென இன்னோர் அம்மா . அதே நைந்து போன இன்னோர் சேலையைச் சுற்றிக்கொண்டு சிவரில் சாய்ந்து குந்தியிருப்பார். அவர் தினமும் அனலைதீவிலிருந்து இவரைப் பார்ப்பதற்காக இங்கு வந்து குந்தியிருப்பதாகவும் தன்னால் அவரது நாளாந்த உழைப்பும் ஊதியமும் போக்குவரத்துக் காசும் வீணாவதாக, என் அம்மா தூங்கிய பின், அவரைப் பார்க்க வந்த அம்மா சென்ற பின், என் அம்மாவுக்குக் கொடுக்கும் குடிபானத்தைக் கரைத்து அந்த அம்மாவின் தலையை நிமிர்த்திப் பருக்கி விடும் போது அந்த அம்மா கூறியிருக்கிறார்.
வைத்தியர் பார்வையிடும் நேரங்களில் வசதிபடைத்தவர்களிடமும் கொஞ்சமேனும் கற்றவர்களிடமும் வைத்தியரிடம் சொல்லவும், கேள்விகள் கேட்கவும் நிறைய விடயங்களும் வைத்தியரிடம் நேரமும் நிதானமும் இருந்தது. அந்த நைந்து போன சேலைக்கார அம்மாவிடம், சொல்வதற்கு வலியும், எப்ப விடுவியள் டொக்டர் என்ற தேய்ந்த குரலும் மட்டுமே இருந்தன. வைத்தியர்களிடமும் ஆளுக்காள் மாறுபட்ட பதில்களும் இருந்தன. இந்த அம்மாவு க்கு மட்டும் மாறினப்பிறகு துண்டு வெட்டலாம் என்ற பதில் தான்எல்லோரிடமும் இருந்தது. மூன்று நாட்களாக எனக்கந்தச் சூழல் அப்படியே பழக்கமாகி இருந்தது.
அங்குள்ள இந்தக் காலத்தைப் பற்றி இங்கிருந்து கொண்டு என்னால் கூற இயலவில்லை ஆனால் அந்தக் காலத்தில் அங்குள்ள எம் வைத்தியர் பலருக்கு கொம்புகளும் கிரீடங்களும், நிலத்தில் பதியா பாதங்களும் இருந்தன. அவர்களில் ஒருவன் அவனாக இருந்தான்.
அந்தக் கால மைக் மோகன் மேடைஏறும் ஸ்டைலில் வெள்ளை டவுசர் வெள்ளை சேர்ட், கருத்த தடித்த இடுப்புப் பட்டி, மிதப்பான பார்வை மிடுக்கான நடை என வாழ்வின் வலி மிகு பக்கங்களும் , சமூகத்தின் விளிம்பு நிலை மக்களும் அறியாமல் வளர்ந்த வைத்தியசேவைக்குத் தகுதியற்றவன் போலிருந்தான்.
அம்மாவுக்கும் அம்மாவின் கால்மாட்டிலிருந்த அம்மாவுக்கும் அனேகமாக நோய் குணமாகி இருந்தது. ஆனாலும் அவனுக்கு அவர்களிடம் மினக்கெட அதிக நேரமிருந்தது.
நைந்து போன மற்ற அம்மாவிடம் நின்று கதைக்க நேரமற்று தன் பரிவாரங்களுடன் ஹீரோ நடை நடந்த அவனை அந்த அம்மா வலிந்து அழைத்து அந்த அம்மாவால் சாப்பிட முடியவில்லை என்றார் . சாப்பிட முடியாவிட்டால் குடிக்கக் குடுங்கோ
குடிக்கவும் முடியவில்லை என்கிறார்
என் குடிச்சால் என்ன செய்யுது
முட்டுது ஐயா
எங்க முட்டுது
தொண்டைக்க முட்டுது
என்ன வந்து முட்டுது
ஐயா.....
அந்த அம்மாவை நெருங்கி அவரது உடலைத் தொட்டுப் பேச விருப்பற்று தன் உடலில் வயிறில் நெஞ்சில் தொண்டையில் எனக் கைவைத்து இங்க முட்டுதா அங்க முட்டுதா அது முட்டுதா இது முட்டுதா எனக் கேட்டுக் கொண்டே ஹா ஹா ஹா எனச் சிரித்தவன் குடியுங்கோ எல்லாம் முட்டாமல் உள்ள போகும் என்று சொல்லிக் கொண்டே கடந்தான்
இல்லை ஐயா என்ற ஈனக்குரல் அவனை எட்டக் கூட இல்லை.
அவரிலிருந்து மூன்றாவது நோயாளியை அவன் கடக்குமுன்னே சத்தமாக அந்த அம்மா மூச்சு வாங்கினார். திரும்பிப் பார்த்தேன் நெஞ்சு மேலேறி மேலேறி இறங்கியது. அவருடன் கூட நின்ற அம்மாவின் டாக்குத்தரையா என்ற தேய்ந்த குரல் அவனது காதுக்குள் நுழைந்தால் செவிப்பாதை அசுத்தமாகி விடும் என நினைத்தானோ என்னவோ காதை மூடியே வைத்திருந்தான்.
எனக்கு கோபம் சூடேறும் வயது அது. தவிரவும் என் அம்மா என் நண்பியின் அப்பாவான வைத்தியரின் நேரடிக் கவனிப்பில் இருக்கிறார் என்பதை அவனும் அறிந்திருந்தது அவன் அம்மாவின் படுக்கை அருகில் நின்று என்னுடன் வழிவதில் புரிந்திருந்தது டொக்டர் நீங்கள் ஒருக்கா இஞ்சை வாங்கோ என்று அதட்டலுக்கு அருகே வந்து உதெல்லாம் படிப்பறிவு இல்லாத கூட்டத்தினர நடிப்பு எனச் சொல்லிக் கொண்டே அந்த அம்மாவின் கட்டிலுக்கு அருகே போகவும் அவர் கடைசியா இழுத்த மூச்சை வெளியே விட்டார் அவனையே பார்த்தபடி.
கூடவந்த தாதிக்கு எதோ சைகை செய்தபடி அவன் விடுவிடென வெளியேற, அவர் போர்வைத் துணியை இழுத்து அந்த அம்மாவின் முகத்தை மூடினார் . அந்த மற்ற அம்மா முடங்கி வளைந்து கட்டில் காலைப் பற்றிக் கொண்டு என்ர மச்சாள் போட்டியே என ஈனக்குரலில் அழத் தொடங்கினார்.
சிலர் எம் வாழ்வில் எமக்கு யாராகவும் இருக்க மாட்டார்கள். சிலவேளை ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மட்டும் தான் அவர்களைச் சந்தித்தும் இருப்போம், நல்லதாகவோ கெட்டதாகவோ, படிப்பினையாகவோ அவர்கள் ஏற்படுத்திச் செல்லும் காயத்தின் வடு மட்டும் கடைசிவரை மறப்பதேயில்லை.
ஏன் சொல்கிறேன் என்றால்............
பதிவு நீண்டு விடும் .நாளைக்குச் சொல்லுறேன்

Thursday, January 6, 2022

என்ற்விக். எனும் மனிதர் (பகுதி 2 )

 


பத்து  யூரோ  கொடு. 


மணித்தியாலத்துக்கா


மொத்தமாக  


என்னது  


நீதானே  கூலி எவ்வளவு தரவேண்டும்  என்றாய். 


ஆமாம். 


அது தான் பத்து  யூரோ  என்றேன். 


சற்று நேரம் எனக்குப் பேச்செழவேயில்லை.


 உறவுகளையே  பணத்தின் அடிப்படையில்  கணக்குப்பார்க்கும்  நாடென்ற  பெயர்.   ஆனாலும்   பணத்தையும்  உறவையும் தாண்டி  மனதை  நேசிக்கும் வெள்ளை   மனிதர்கள்  பலரை இங்கான வாழ்க்கையில்  நான் கண்டிருக்கிறேன். 


கூட்டு வாழ்க்கை குழம்பாத இனமும் நாடும்  என்ற பெயர் தான்  எமக்கு  ஆனாலும் , என்னைப்பொறுத்தவரை  இப்போதெல்லாம்  கொடுத்துக்கொண்டேயிருக்கும் வரை,  குனிந்து கொண்டேயிருக்கும் வரை  தான்  . நட்போ உறவோ  நிலைக்க முடிகிறது.  வாழ்வோ உடலோ  வீழ்ந்து போனால்  ஏறி மிதித்து தாண்டி நடக்கும் மனிதர்களைத் தான் அதிகம் காணவைத்தது  எனது வாழ்க்கை. 


எத்தனை நாள்.  எவ்வளவு வேலை செய்திருக்கிறாய்   அதற்கு இதுவா கூலி என்றேன். 


நான் முறைப்படி உன்னிடம் பணம் பெறுவதானால்  ரசீது எழுதி  வருமானவரி  கட்ட வேண்டும் 


ஆமாம்.  


ஆகையால்  உனக்குச் செய்த வேலைக்கு ரசீது எழுதவும் இல்லை . அதனால் வரிகட்டும் தேவையுமில்லை. 


எனக்கு வார்த்தை வரவில்லை  சங்கடமாக  இருந்தது.  ஆனாலும் இவர்  போன்றவர்களோடு முரண்பட முடியாது.  அவர்கள் மனதில் என்ன  இருக்கிறது என்று  சரியாகக்  கணிக்காமல்  நாம் வினையாற்றும்  போது  மிகவும் குழம்பிப் போய் ஆக்ரோசமாக  எதிர்வினையாற்றும்  அல்லது  அதிகமாக  உடைந்து போய்   உடலியக்கம் கூட  தளும்பும்  நிலை  அவர்கள் பலருக்கும் உண்டு. அத்துடன்  முழுவதும்  வெறுத்து விடும் வாய்ப்பும் உண்டு.   அவரின் வெறுப்புக்கு ஆளாகும் தைரியம்  ஏனோ என் மனதுக்கு  இருக்கவில்லை.   சில மனிதர்களோடான  சந்திப்புக்கள்  பிரிவைச் சந்திக்க  விரும்பாதவை.  முக்கியமாக வெறுப்பை,  அவர்கள் காயப்படும் வேதனையை  எதிர்கொள்ளவே  மனம் ஏற்காதவை, அவரும் மாதக்கணக்கில்   தொடர்ந்த வேலையில்  அப்படித்தான் மனதுக்குள்  நெருங்கியிருந்தார்..   


எதுவும் செய்யத் தோன்றாமல்  அவரையே  பார்த்திருந்தேன்.   யாரிடமும்  இலவசமாக எதுவும் பெற்றுக்கொள்ளக்கூடாது  என்ற  வழக்கம் எனக்கும் இருக்கலாமில்லையா  என்றேன் 


மெல்லிய புன்னகையுடன் என் முகத்தையே  பார்த்துக்கொண்டிருந்தார்.   அப்போதைய  அவர் மனதை  என்னால் படிக்க இயலவில்லை.


 ஞாயிற்றுக்கிழமைகளில்  மனைவியை  அழைத்துக்கொண்டு ரெஸ்டாரெண்ட்  போவது என் வழக்கம்  அதற்கு  நூறு  யூரோ  தா   போதும் என்றார்.. 


நான் அவரது முகத்தையே  பார்த்துக்கொண்டிருந்தேன். 


எனக்குப் பணத் தேவையில்லை  ஆனால்   வேலை  செய்துகொண்டேயிருக்க  வேண்டும்.  இல்லாது விட்டால் மிகவும் சிரமமாக உணர்வேன்.  வீட்டில் என் மனைவிக்கு  அமைதியின்மையை  உருவாக்குவேன் .  அதனாலேயே  வேலை செய்கிறேன்.  என் வேலைக்குரிய  ஊதியம் பெறாது போனால் என் உழைப்பு  தாழ்வாகக்கணிக்கப்படும் என என் மனைவி சொல்வார். அதனாலேயே  எனக்கான ஊதியத்தைப் பெறுகிறேன்.  வரி செலுத்துமளவு  தொகையான  ஊதியம் கிடைக்கும்  வேலைகளை நான் ஏற்பதில்லை.  


எனக்குச் செய்த வேலைக்கு  எவ்வளவு தொகை வரும் என்பது  எனக்குத் தெரியும்  என்றேன்.  புன்னகைத்தார்.     


நான் வேலைக்குப் போகுமிடங்களில்  யாரோடும் பேசுவதில்லை.  இங்கு வந்த முதல் நாளிலிருந்தே  உன்னை எனக்குப்  பிடித்திருக்கிறது. . என்னை வேலை செய்ய விட்டு  ஒதுங்கியிராது  என்னுடன்  தொடர்ந்து கூடவே  வேலை செய்தும் பேசியும் கொண்டிருந்தது  என் மனதுக்கு  மிக நெருக்கமாக  இருந்தது 


நான் புன்னகைத்தேன். 


என் கையிலிருந்த பணத்தைப் பிடுங்கி  நூறு யூரோவை மட்டும் எடுத்துக்கொண்டு  மிகுதியை , என் கையிலிருந்த   பர்சினுள்  திணித்தார்.  எனக்கொரு மகளிருந்தால் அவள் வீட்டில்  கூலி வாங்கிக்கொண்டா  வேலை செய்வேன்   உனக்கு  என்னைத் தந்தையாக எண்ணத் தோன்றவில்லையா என்றார்.  

அதிர்ந்து போயிருந்தேன்  நான்.  


உச்சந்தலையில்  கையை வைத்து  அழுத்தி, எனக்கொரு மகள் இருந்து அவளிடம்  பணம் பெற்று  மனைவியுடன்   ரெஸ்டாரெண்ட் போகவேண்டும்  என்பது என் பெரிய ஆசை  சொல்லி விட்டு  அவர் விடை பெற்ற  பின்பு,     ஏனென்றே  தெரியாமல்  அந்த நாள்  முழுதும்  அழுது தீர்த்தேன்.. அதன் பின்பும்  




                                                                              


ஏதோ  திருப்தியாக உணராமல்  மனத்தைக்  கீறிக்கொண்டேயிருந்தது. 


அடுத்தநாள்  அவரது  மனைவிக்கு  அழைப்பெடுத்து  வேலை செய்த நாட்கள்.  அவர்  பெற்றுக்கொண்ட  பணம் பற்றிய  விபரங்களைச் சொன்னபோது.   என்னால் அதிகம் வெளியில் உலவ முடியாது உன் இருப்பிடம்  இங்கிருந்து  பத்து km  தானே .  வசதியானால் வருகிறாயா  என்றார். 


வாசல் திறந்து  கைப்பற்றி  உள்ளே  வா என்ற  போதே  ,  கணவனுக்கிருக்கும்  பாதிப்பு  அவருக்கில்லை  என்றது  தெளிவும் திடமுமான  அவரது முகம். 


எங்களுக்கு  நிறைய உறவினர்கள். ஆனாலும் எங்கும் இவரால்  இயல்பாக  ஒட்டிக் கொள்ள முடிவதில்லை.. இந்தக் குழந்தை மனிதன்  மேலுள்ள  காதலினால்  நானும் என் உலகத்தினைச் சுருக்கிக் கொண்டு விட்டேன் . அவரால்  சிலரோடு தான் ஒன்ற  முடிகிறது.  உனது வீட்டுக்கு வேலைக்கு வந்த நாள் முதல்  அவரில்  மகிழ்ச்சியைக் காண்கிறேன்.  அதை விட பணம் ஒன்றுமேயில்லை. 


ஆனாலும் ....... என்றேன் 


இப்படித்தான்  ஒரு வயோதிபப் பெண் மீது   அபிமானம் அவருக்கு.   தன்  தாய் போல் என்பார் .  நேரம் கிடைக்கும் போது  சென்று  பார்த்து வருவார்.  அவர்   இறந்த .போது  தன்   வங்கியிருப்பில்  இருந்த தொகை  இவர் பெயருக்கு  வந்து  சேர்ந்தது.  இன்னும் சிறிது காலம் இருந்து விட்டுச் சென்று விடப் போகிறோம்  நீயே  சொல்லு . எமக்கு  எதற்குப் பணம் . 


எதற்குப் பணம். ?  சிரிப்பு வந்தது.   பணத்தால்  அடிக்கும், பணத்துக்காக  அடிக்கும் சுயநல  உலகில் பணம் அடிவாங்கியதை   முதல் முதலாகப் பார்த்தேன்.  


உனது  சாப்பாட்டு  மேசை,, வேலை இடைவெளியில்  உன் பிள்ளைகளுடன்  ரக்ளாத்  கிரில் போட்டு உண்பது , கூடவே  , அவர்களுடன் கேம் விளையாடுவது ,  பேரீச்சம் பழக் கேக் ,  ஆரஞ்சு  கேக்  எல்லாம்  மிகவும் பிடிக்குமாம்  அவருக்கு.  எனக்கும் பிடிக்கக் கூடும்    வாயேன்  இருவரும் சேர்ந்து செய்யலாம். என்று புன்னகைத்தார்  அவர். 


நாட்கள் தொடர்ந்து கொண்டிருந் ஒரு நாளில்,  பிள்ளைகள்  காலூன்றிய பின்  தாய் நாட்டுக்குப் போகவேண்டும் என்பது  என் ஆசை என்றேன். .

 கையைப் பற்றிய படியே  தான்  அந்தக் கேள்வியையும் கேட்டார். 

                       நீ  ஏன்  உன் தாயின் நாட்டுக்குச் செல்ல  விரும்புகிறாய்  இங்கேயே இந்த நாட்டிலேயே   எங்களுடனேயே    இருந்து விடேன்.  .  அங்கே யார் இருக்கிறார்கள்  .  என்ன எஞ்சியிருக்கிறது  உனக்கு ? 


யோசிக்கத் தொடங்கினேன்.  யார் இருக்கிறார்கள்.  என்ன இருக்கிறது. வாழ்நாட்களில் பாதியை இங்கு களித்த பின் இனி  அதுவும் பழக்கமற்ற  புதிய  இடம் .   எதைக் கொண்டு வந்தேன்   எதைத்  தேடித் போகிறேன்.  தேடித் போவதற்கு  அன்பு  ஒன்று தவிர  வேறெந்தக் காரணமும் இல்லை..  


இந்த உலகில்  மிகவும் அபூர்வமான  வஸ்து வாகிப்போன  அன்பை  இத்தனை  தூரம்  கடந்து  பயணித்து  என்னால் அடைய  முடியுமா?  .  


நான் நகர்ந்து சென்று  வீழும்  இடத்தில  முடிந்து விடும் இந்தப் பயணத்தில் ,அன்பினால்  என்னைக் நடுங்க நடுங்கக்  குளிப்பாட்டிய  சில  மனிதர்கள்  வாய்த்தது  வரம்.  அவர்களை  இழந்த பின்,   நினைவுகளையும்  அனுபவங்களையும்  காவிக்கொண்டு தானே வந்தேன்.   அவற்றை த் தவிர   என்னுடையது  என்பதில்  எது  நிரந்தரமானது.  


நான்  பெற்றுக்கொண்ட அன்பையும் ஆதரவையும் , என்னை முழுவதுமாய்  நம்பவும்  ஏற்கவும் கூடியவர்கள்  என்னிடமிருந்து  எதிர்பார்க்கும் போது  கொடுப்பதைத் தவிர    வேறு என்னதான்  வேண்டியிருக்கிறது  இந்த ஜென்மம்  நிம்மதியாய்  நிறைவு பெறுவதற்கு . 


கிழக்குப் பறவை  ஒன்று  மேற்கின்  கிளை  ஒன்றில்  இளைப்பாற  அமர்வதை  ஒரு வித அகஅதிர்வுடன்  வேடிக்கை பார்த்தவாறே  என் கரத்தைப் பற்றியிருந்த   திருமதி  என்ற்விக்கின்  கரத்தினை  என் மறுகரத்தால் பற்றிக்கொள்கிறேன் .     

Sunday, January 2, 2022

என்ற்விக் எனும் மனிதர்

 அநேகமான நேரங்களில்  நாம் எங்கிருக்க வேண்டும் என்பதையும் , என்ன செய்ய வேண்டும் என்பதையும்  அதிகாரம் மூலமான நிர்ப்பந்தத்தினூடோ அன்றி , வேறு ஏதேதோ  காரணங்களுக்காகவோ அபிமானத்தினாலோ  கூட  எம்மையன்றி  மற்றவர்களே தீர்மானிக்க நேர்ந்து விடுகிறது. 

வீட்டில் உடைந்தவைகளும் கழன்றவைகளுமாக திருத்தம் செய்ய  நிறைய உண்டு. ஒரு வேலையாளை  ஏற்பாடு செய்து  தர முடியுமா  உன்னால்  என்று ஒரு பொழுது  என் நண்பி  ஒருத்தியிடம்  கேட்டிருந்தேன்.. பிறகு  பின்னே  என்ற  இழுப்புச்  சாய்ப்புகள்  இல்லாதவள்  அவள்.  ஆம் என்றால் ஆம்  இல்லை  என்றால் இல்லை என்று உடனேயே  வினையாற்றும்   குணவியல்பு  அவளுக்கு . அதனாலேயே எப்போதும் என் தேவைகளை  அவளுடன் பகிர்ந்து கொள்ளும் .வழக்கம் எனக்கு. 

எனக்கு ஒருவரைத்  தெரியும் . அனுப்பி  வைக்கிறேன்.  ஆள் கொஞ்சம் ஒரு மாதிரி.. ஆனாலும்  நீ சமாளித்துக் கொள்வாய்.  என்றாள்.  அந்த ஒரு மாதிரி  பற்றி  எனக்கு எந்தக் கிலேசமும் இல்லை..  வேறு மாதிரி  ஒரு மாதிரியை  சோனியாவோ  அவள் கணவனோ  என்னிடம் அனுப்பி வைக்க மாட்டார்கள்  என்பது எனக்குத் தெரியும்  என்பதால்  வரும் நபர்  சற்றுச் சிடுமூஞ்சியாக  இருக்கலாம் அல்லது , ஸ்வஸ்திக் கூட்டத்தில்  எஞ்சிய  விழுதொன்றாக  இருக்கலாம்.  எதுவாக இருந்தாலும்  எனக்கு வேலை முடிந்தால்  சரி எனும்  நிலை. அவசியம் தவிர்த்து  வேறொன்றும்  பேசாமல் சமாளித்துக் கொள்ளலாம் என எண்ணிக் கொண்டேன். 

எப்போதோ  நாம் மனதுக்குள் விதை போட்டு வைத்து மறந்து போன  அல்லது  முளைக்க வைக்க  யோசிக்காத  சில விடயங்களுக்கு  நீர் வார்ப்பதர்காகவே  வாழ்க்கை  சில மனிதர்களைச் சந்திக்கும்  அப்படித்தான்  அந்த  மனிதரும், அவருடனான  சந்திப்பும்.

வெள்ளையின  மக்களில்  எனக்குப் பிடித்த  முக்கிய விடயம் நேரம் தவறாமை.  அதன் மூலமாக  இன்னொருவரின் பெறுமதி மிக்க நேரத்தை  வீணடிக்காமை.  பத்துமணிக்கு  வருவேன் . உன்னை எனக்குத் தெரியாது  வாசலில்  நிற்க முடியுமா  எனத் தகவலனுப்பினார்.  பத்துமணிக்கு  ஐந்து நிமிடம்  முன்னே வாசலில்  இறங்கி நின்றேன்.  சரியாகப் பத்து மணிக்கு  அவரது வாகனம்  என் வாசலில்  வந்து நின்றது. 

இறங்கியதும், கண்களை நேராகப் பார்த்து  முகம் துலங்கிய  பெரும் புன்னகையுடன்  ஒரு ஹலோவும்  பின் காலை  வணக்கமும்.  சொன்னார் . மெதுவாகக் கைபற்றிக்குலுக்கிய போதும்   காய்த்து  மரத்துப் போன கை கடினமான  வேலையாள்  என்றது.  அந்தப் பற்றுதல்  அத்துடன் நிற்காது   என்பது  எனக்கு அப்போது தெரியாது..  

ஆனால்  அவர்  வேலைசெய்யத் தொடங்கிய  கொஞ்ச நேரத்திலேயே  அவர்  முழுவதுமாக இல்லாவிடினும்  ஓரளவு  ஆட்டிசத் தாக்கம்  உள்ளவர்  என்பது  புரிந்து போயிற்று.   புரிந்து போனதும்  அதிகமாகப்  பிடித்தும் போயிற்று.  அது உடனேயே  எனக்குப்  புரிந்து போவதற்கும் பிடித்துப் போவதற்கும்  முக்கிய காரணம் உண்டு.  

அப்படியொரு  கையைப் பற்றியபடி தான்  நான் நடை பழகினேன்.  அந்தக் கைகளுக்குள் தான்  விளையாடிக் களித்தேன் .  சண்டை  போட்டேன்.   திடமாக நிமிர்ந்து நடக்க முடியாத  அந்தத் தோள்களைச்  சிம்மாசனமாக்கி  ஊர்வலம் போனேன்.   அந்த நடைகேற்ப  சோர்ந்து வீசும் கைகளைப் பற்றிக்கொண்டு தான்  பாலவயதிலேயே கடைக்குப் போனேன்.  நான் கணக்குப் பார்த்துக் காசு கொடுத்து  மிச்சம் எண்ணி வாங்கிப் பொத்திக்கொண்டு  வர   அவர்  பொருட்கள் காவினார்.  தம்மைப்போல  இல்லாத  அப்பாவி மனிதர்கள் மீது  சேட்டை  செய்யும்  குரங்குகள் கொண்ட  சமூகம்  எம்முடையது . அவை  அவர் மீது குறுனிக் கற்கள்  வீசின ,  சீட்டியடித்தன .  பாலவயதிலேயே குரங்குகள் மீது கல்லு வீசினேன்.   கல்லு வீசியதற்காக  வீட்டில்  அடிகள் வாங்கினேன்.   வளர்ந்த பின்னும் குறிதப்பாது  கல்வீசுபவளாக  இருந்தேன். அசந்தர்ப்பமான  இடங்களில் அவைகளை விடப் பலமாகச் சீட்டியடித்து  அவைகள் தான்  பெண்பிள்ளைகளுக்குச் சீட்டியடித்தன  என மாட்டிவிட்டு  ரசித்தேன். 

தம்மை  மாமனிதர்கள்  என மார்தட்டிக் கொள்ளும் மனிதர்களை விட   கபடமற்று  நேசிக்கத் தெரிந்த மனதளவிலும்  மனிதர்களான  இவர்களைத்  தான் வளரவளர  எனக்குப் பிடிக்கத் தொடங்கியது.

அந்நாட்களில் , வறுமைப்பட்ட  வீடுகளின் மூலைகளில் மார்தட்டாத  இந்த  மனிதர்களை   அதிகம் காண முடியும் .  என் வீட்டைச் சூழ  வறுமைப்பட்ட  வீடுகளும்  அந்த வீடுகளில்  மூலைகளும்  அந்த மூலைகளில்  மனிதர்களும்  இருந்தார்கள்.   

அதிகமாய் மற்றவர்கள் கணக்கிலெடாத அவர்களோடு   நான் விளையாடுவதும்   சிரிப்பதும்  அவர்களுக்கும் , எனக்காகவே  குண்டுமணிகள்    சேகரிப்பது  அவர்களுக்கும் பிடித்திருந்தது.  என்னை  நாய்  துரத்தினால்  நாயைக் கடிக்கும்  ஆவேசம் அவர்களுக்கு  வருவது எனக்குப்    பிடித்திருந்தது. 

காலத்துக்கு   ஒரு நோக்கம் இருக்கிறது .   நாம் எதுவாக வேண்டும்  பல வேளைகளில்  காலமே  தீர்மானிக்கிறது .  அதற்கேற்ற  மாதிரியே   அது  காய்களை நகர்த்துகிறது , சந்திப்புகளையும்    சம்பவங்களையும்   ஏற்படுத்துகிறது  என்றே  நினைக்கிறேன் . வாழ்க்கை  காலத்துக்குக் காலம் அப்படியான  மனிதர்களை   அறிமுகப்படுத்திக் கொண்டேயிருந்தது,  அல்லது  எந்த ஒரு மனிதக் கூட்டத்துக்குள்ளும்  அவர்களே  என்னை  ஈர்த்தார்கள்  மனதுக்குள்  நெருங்கினார்கள்.  பயமின்மையை  பாதுகாப்பை  உணரவைத்தார்கள் 

அதனாலோ என்னவோ  அவர்களையெல்லாம்  நம்பினேன்.  கண்டமாத்திரத்தில்  நேசம் கொள்ள முடிந்தது. யாரென்று  தெரியாதவர்களுக்காக  எல்லாம்   வாதாடி  உறவுகள் வரை பலருடனும் முரண்படவும் உறவறுக்கவும்  வைத்தது. ஆனாலும்  காலம் இங்கு வந்த பின்பும் கூட  இந்த அறிமுக ஏற்பாட்டை  நிறுத்த  நினைக்கவில்லை.  இப்போது  வீட்டில் திருத்தவேலை செய்ய வந்த  இந்த Herr. Entwick  வரை. 

நான் அழைத்திருந்த வேலை  இரண்டாவது  நாளின்  மதியத்துடன்  முடிந்து போயிற்று. எனினும்  அவர்  விடைபெறுவதற்கான  ஆயத்தங்களற்று வேலை முடித்த  இடத்தை  துப்பரவு  செய்யும் பணியிலிருந்தார்.   மாலை  கோப்பி நேரத்தின் போது, தனியாக இருந்து  அருந்தாமல் , சாப்பாடு மேசையில் அமர்ந்து  கோப்பியை  கப்பில் ஊற்றியவாறே வீட்டில் ஒவ்வொருவராக  விசாரித்ததிலிருந்தே   சேர்ந்திருந்து  கோப்பி  குடிக்க விரும்புகிறார்  என்பது  புரிந்தது. 

வேலையாளாக  வரும் ஒருவர்  இத்தனை  உரிமைஎடுப்பது   வழமையாகச் சாத்தியமில்லை  எனினும், என்னால் அவரை  முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்ததில்  அல்லது  அப்படி நான் நம்பியதில்  அது  அதிர்ச்சியாக இருக்கவில்லை. போலியற்ற  களங்கமற்ற இந்த வகை  மனிதர்கள் , பலவிதங்களில்  மிகுந்த கெட்டிக்காரர்கள்.  நடிப்புக்கும்  நேசத்துக்குமான  வேறுபாடுகளை  மனதுக்குள்  நுழைந்து   புரிந்து  கொள்ளக் கூடியவர்கள். தமக்கு  இசைவான  இடங்களிலன்றி  இவர்களால் அமைதியாக  இருக்க  முடியாது  என்பதை அவர்கள் உடல்மொழியே  காட்டிக் கொடுத்து விடும்  என்பது  அனுபவத்தில்  உணர்ந்திருக்கிறேன் .  அந்த மனிதர்  இயல்பாகப் பேசிச் சிரித்து, காப்பிக்கேற்றலைத் தூக்கி  ஊற்றிய போது  உதடுகளில் சுளிப்பும்  கரங்களில்  நடுக்கமுமற்றிருந்தார்.   சிறுவயதில்  என்னைப் பற்றியிருந்த  கரத்தை   எனக்கு  நினைவு படுத்தினார் .    அது போன்றவர்களிடம்  உரிமையுணர்வு அதிகமிருக்கும்.  இந்த மனிதரிடமும்  அது அரும்புவதை  அவதானித்தேன்  ஏனோ  நிம்மதியாக  உணர்ந்தேன். 




                                                                         

கோப்பி  குடித்தாகி  விட்டது  பேசியாகி விட்டது . புறப்பட  ஆயத்தமாகிறார்  எனப் பார்த்துக் கொண்டிருந்த போது ,  அதை ஆட்டி,  இதை இழுத்து  சுவரில்   பேப்பர்  சுருங்கியிருந்த   மூலையைத் தட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்.   இனி  எப்போது  வீட்டில் நிற்பாய்  என்றார்    எதார்த்தமாக.  சொன்னேன்.   விடைபெற்றுச் சென்று விட்டார். 

சொன்ன நாளில்  அதே  குறித்த  நேரத்தில்  அவர் தட்டிச் சுரண்டிப் பார்த்த  இடங்களைச்  செப்பனிடுவதற்குரிய பொருட்களுடன்  வந்திறங்கினார்.   ஒரு வேலையாளுக்குரிய எல்லையற்று   வேலை தொடங்கியது  கொஞ்சம் திகைப்பாக இருந்தது.. இருப்பிடம்  நாளுக்கு நாள் வீடு   ஒவ்வொரு பகுதியாக  அவரின் அடையாளங்களுடன்  மாறத் தொடங்கியது.  கூலி  பேசவில்லை.. வேலை  நேர  முடிவில்  கூலி  குடுக்க நான் முயலும் போதெல்லாம்   முடிவில்  பார்த்துக் கொள்ளலாம்  என்பதே பதிலாக  வரத் தொடங்கியது.  முடிவில்  ரொக்கமாக  ஒரு பெரிய தொகை  என் தலையில்  விழுந்து  அழுத்தப் போகிறது  என்ற பயம்  என்னை  அரிக்கத் தொடங்கியது. 


***************************


ஊரில்  நான் வளர்ந்த  வீட்டின்  வெளி விறாந்தை மூலையின்  அத்திவாரப்பகுதியில்  செல் விழுந்து  துளைத்ததில்  மூலைப்பகுதி முக்கோண வடிவில்  அத்திவாரத்துடன்  விரிசல்  விட்டிருந்தது.   அந்தப்பகுதித் தூண்  எந்த நேரத்திலும்  விழுந்து விடும் வகையில் அந்தரத்தில்  சரிந்து நின்றது .  என் ஓட்டமும்  துள்ளலுமான  அவதானமின்மையில்  என்றாவது  ஒரு நாள்  அது என்மீது  விழுந்து விடக் கூடும் என்பதாக  அம்மா  எப்போதும் பயந்து கொண்டேயிருந்தா.  அந்தப்பக்கம் போகும் போதெல்லாம்  பேயைக் கண்டவ  போலக் கத்திக்கொண்டிருந்தா,   

அப்போது தாத்தாவுக்கு  வயதாகி  இருந்தது.  தன்  இயக்கங்களிலிருந்து  ஓய்ந்திருந்தார்.  தனது  வார்த்தைகளை  அதிகமாய்  அவர்  இழந்திருந்தார்.  எஞ்சிய  வார்த்தைகளை  அனேகமாக  எனக்காக மட்டுமே  ஒதுக்கியிருந்தார்.   ஆதலினால் அந்த  விரிசல்  நீண்ட காலம் அடைபடாமலே கிடந்து  அறைக்குள்  தூங்கும் போதும்   வெளியே வீடு  விழுந்து விடுமோ  எனப் பயமுறுத்தியது 

அம்மா  கூட்டுக் குருவி போல் .  அதையே  உலகமென்று  நம்பவும் ஏற்கவும்  காலத்தாலோ  சம்பிரதாயத்தலோ  என்ன  மண்ணாங்கட்டியாலோ  நிர்ப்பந்திக்கப்பட்டவர்.. அம்மாவின் கூட்டைச்  சேர்ந்தவர்கள் பலரும் வந்தார்கள்  போனார்கள். உறவென்றார்கள், பாதுகாப்பென்றார்கள் உறவாடினார்கள் . அத்தனையையும்  பாதுகாப்பாக  பிளந்து கிடந்த மூலை எட்டாத தூரத்தில் பாதுகாப்பாக   நின்று  சொன்னார்கள்.  பின்னொரு நாளில்  தாத்தா  இறந்தபின் அம்மா நாயாய் அலைந்து  யாரோ  ஒரு  உறவினரைப்  பிடித்து  அந்த மூலையைச் செப்பனிட்டுக் கொண்டா.   

அரிசியிடிக்க வந்த  செல்லம் ஆச்சி  மட்டும்  வெளியால  ஒரு கூலிக்காறனைப் பிடிச்சுச்  செய்திருந்தால்  எப்பவோ   கொஞ்சக் காசில செய்திருப்பான். இது  ஒற்றிக்கு ரெட்டைச் செலவு என்று நீளமாய்  பெருமூச்சு  விட்டுக்கொண்டே  உரல் கழுவியது நினைவிருக்கிறது. 


*************************************


ஒன்றைத் தொட்டு  ஒன்றாக  வேலைகள்  அனுமார்  வாலாகி  ஒருபடியாக  முடிவுறுவதற்குள்  அவர்  எங்கள் குடும்பத்தில்  ஒருவராக  உரிமையுடன் உறவாடத் தொடங்கியிருந்தார்.  இந்த இடைப்பட்ட  மாதங்களுக்குள்  பெரிதாக  ஒளிவுமறைவற்று  எல்லாவற்றையும்  பேசும்படி  காலம் மாற்றியிருந்தது. இன்னும் நிறையச் செய்யவேண்டியிருக்கிறது .  இத்துடன் ஒரு இடைவெளி விட்டு  மீண்டும் ஆரம்பிக்கலாம்   எனக்குச் சற்று  ஓய்வு தேவைப்படுகிறது. என்று அவர் சொன்ன நாளில் அவருக்கான  பணத்தைக் கொடுத்துக் கணக்கு முடிக்கத் தயாரானேன். 

அப்போது   அவர் சொன்ன தொகையில், அவர் எதிர்பார்த்த  உறவு முறையில்   எனக்கு மயக்கமே  வந்து விட்டிருந்தது.  


(தொடரும் ............)