Thursday, January 6, 2022

என்ற்விக். எனும் மனிதர் (பகுதி 2 )

 


பத்து  யூரோ  கொடு. 


மணித்தியாலத்துக்கா


மொத்தமாக  


என்னது  


நீதானே  கூலி எவ்வளவு தரவேண்டும்  என்றாய். 


ஆமாம். 


அது தான் பத்து  யூரோ  என்றேன். 


சற்று நேரம் எனக்குப் பேச்செழவேயில்லை.


 உறவுகளையே  பணத்தின் அடிப்படையில்  கணக்குப்பார்க்கும்  நாடென்ற  பெயர்.   ஆனாலும்   பணத்தையும்  உறவையும் தாண்டி  மனதை  நேசிக்கும் வெள்ளை   மனிதர்கள்  பலரை இங்கான வாழ்க்கையில்  நான் கண்டிருக்கிறேன். 


கூட்டு வாழ்க்கை குழம்பாத இனமும் நாடும்  என்ற பெயர் தான்  எமக்கு  ஆனாலும் , என்னைப்பொறுத்தவரை  இப்போதெல்லாம்  கொடுத்துக்கொண்டேயிருக்கும் வரை,  குனிந்து கொண்டேயிருக்கும் வரை  தான்  . நட்போ உறவோ  நிலைக்க முடிகிறது.  வாழ்வோ உடலோ  வீழ்ந்து போனால்  ஏறி மிதித்து தாண்டி நடக்கும் மனிதர்களைத் தான் அதிகம் காணவைத்தது  எனது வாழ்க்கை. 


எத்தனை நாள்.  எவ்வளவு வேலை செய்திருக்கிறாய்   அதற்கு இதுவா கூலி என்றேன். 


நான் முறைப்படி உன்னிடம் பணம் பெறுவதானால்  ரசீது எழுதி  வருமானவரி  கட்ட வேண்டும் 


ஆமாம்.  


ஆகையால்  உனக்குச் செய்த வேலைக்கு ரசீது எழுதவும் இல்லை . அதனால் வரிகட்டும் தேவையுமில்லை. 


எனக்கு வார்த்தை வரவில்லை  சங்கடமாக  இருந்தது.  ஆனாலும் இவர்  போன்றவர்களோடு முரண்பட முடியாது.  அவர்கள் மனதில் என்ன  இருக்கிறது என்று  சரியாகக்  கணிக்காமல்  நாம் வினையாற்றும்  போது  மிகவும் குழம்பிப் போய் ஆக்ரோசமாக  எதிர்வினையாற்றும்  அல்லது  அதிகமாக  உடைந்து போய்   உடலியக்கம் கூட  தளும்பும்  நிலை  அவர்கள் பலருக்கும் உண்டு. அத்துடன்  முழுவதும்  வெறுத்து விடும் வாய்ப்பும் உண்டு.   அவரின் வெறுப்புக்கு ஆளாகும் தைரியம்  ஏனோ என் மனதுக்கு  இருக்கவில்லை.   சில மனிதர்களோடான  சந்திப்புக்கள்  பிரிவைச் சந்திக்க  விரும்பாதவை.  முக்கியமாக வெறுப்பை,  அவர்கள் காயப்படும் வேதனையை  எதிர்கொள்ளவே  மனம் ஏற்காதவை, அவரும் மாதக்கணக்கில்   தொடர்ந்த வேலையில்  அப்படித்தான் மனதுக்குள்  நெருங்கியிருந்தார்..   


எதுவும் செய்யத் தோன்றாமல்  அவரையே  பார்த்திருந்தேன்.   யாரிடமும்  இலவசமாக எதுவும் பெற்றுக்கொள்ளக்கூடாது  என்ற  வழக்கம் எனக்கும் இருக்கலாமில்லையா  என்றேன் 


மெல்லிய புன்னகையுடன் என் முகத்தையே  பார்த்துக்கொண்டிருந்தார்.   அப்போதைய  அவர் மனதை  என்னால் படிக்க இயலவில்லை.


 ஞாயிற்றுக்கிழமைகளில்  மனைவியை  அழைத்துக்கொண்டு ரெஸ்டாரெண்ட்  போவது என் வழக்கம்  அதற்கு  நூறு  யூரோ  தா   போதும் என்றார்.. 


நான் அவரது முகத்தையே  பார்த்துக்கொண்டிருந்தேன். 


எனக்குப் பணத் தேவையில்லை  ஆனால்   வேலை  செய்துகொண்டேயிருக்க  வேண்டும்.  இல்லாது விட்டால் மிகவும் சிரமமாக உணர்வேன்.  வீட்டில் என் மனைவிக்கு  அமைதியின்மையை  உருவாக்குவேன் .  அதனாலேயே  வேலை செய்கிறேன்.  என் வேலைக்குரிய  ஊதியம் பெறாது போனால் என் உழைப்பு  தாழ்வாகக்கணிக்கப்படும் என என் மனைவி சொல்வார். அதனாலேயே  எனக்கான ஊதியத்தைப் பெறுகிறேன்.  வரி செலுத்துமளவு  தொகையான  ஊதியம் கிடைக்கும்  வேலைகளை நான் ஏற்பதில்லை.  


எனக்குச் செய்த வேலைக்கு  எவ்வளவு தொகை வரும் என்பது  எனக்குத் தெரியும்  என்றேன்.  புன்னகைத்தார்.     


நான் வேலைக்குப் போகுமிடங்களில்  யாரோடும் பேசுவதில்லை.  இங்கு வந்த முதல் நாளிலிருந்தே  உன்னை எனக்குப்  பிடித்திருக்கிறது. . என்னை வேலை செய்ய விட்டு  ஒதுங்கியிராது  என்னுடன்  தொடர்ந்து கூடவே  வேலை செய்தும் பேசியும் கொண்டிருந்தது  என் மனதுக்கு  மிக நெருக்கமாக  இருந்தது 


நான் புன்னகைத்தேன். 


என் கையிலிருந்த பணத்தைப் பிடுங்கி  நூறு யூரோவை மட்டும் எடுத்துக்கொண்டு  மிகுதியை , என் கையிலிருந்த   பர்சினுள்  திணித்தார்.  எனக்கொரு மகளிருந்தால் அவள் வீட்டில்  கூலி வாங்கிக்கொண்டா  வேலை செய்வேன்   உனக்கு  என்னைத் தந்தையாக எண்ணத் தோன்றவில்லையா என்றார்.  

அதிர்ந்து போயிருந்தேன்  நான்.  


உச்சந்தலையில்  கையை வைத்து  அழுத்தி, எனக்கொரு மகள் இருந்து அவளிடம்  பணம் பெற்று  மனைவியுடன்   ரெஸ்டாரெண்ட் போகவேண்டும்  என்பது என் பெரிய ஆசை  சொல்லி விட்டு  அவர் விடை பெற்ற  பின்பு,     ஏனென்றே  தெரியாமல்  அந்த நாள்  முழுதும்  அழுது தீர்த்தேன்.. அதன் பின்பும்  




                                                                              


ஏதோ  திருப்தியாக உணராமல்  மனத்தைக்  கீறிக்கொண்டேயிருந்தது. 


அடுத்தநாள்  அவரது  மனைவிக்கு  அழைப்பெடுத்து  வேலை செய்த நாட்கள்.  அவர்  பெற்றுக்கொண்ட  பணம் பற்றிய  விபரங்களைச் சொன்னபோது.   என்னால் அதிகம் வெளியில் உலவ முடியாது உன் இருப்பிடம்  இங்கிருந்து  பத்து km  தானே .  வசதியானால் வருகிறாயா  என்றார். 


வாசல் திறந்து  கைப்பற்றி  உள்ளே  வா என்ற  போதே  ,  கணவனுக்கிருக்கும்  பாதிப்பு  அவருக்கில்லை  என்றது  தெளிவும் திடமுமான  அவரது முகம். 


எங்களுக்கு  நிறைய உறவினர்கள். ஆனாலும் எங்கும் இவரால்  இயல்பாக  ஒட்டிக் கொள்ள முடிவதில்லை.. இந்தக் குழந்தை மனிதன்  மேலுள்ள  காதலினால்  நானும் என் உலகத்தினைச் சுருக்கிக் கொண்டு விட்டேன் . அவரால்  சிலரோடு தான் ஒன்ற  முடிகிறது.  உனது வீட்டுக்கு வேலைக்கு வந்த நாள் முதல்  அவரில்  மகிழ்ச்சியைக் காண்கிறேன்.  அதை விட பணம் ஒன்றுமேயில்லை. 


ஆனாலும் ....... என்றேன் 


இப்படித்தான்  ஒரு வயோதிபப் பெண் மீது   அபிமானம் அவருக்கு.   தன்  தாய் போல் என்பார் .  நேரம் கிடைக்கும் போது  சென்று  பார்த்து வருவார்.  அவர்   இறந்த .போது  தன்   வங்கியிருப்பில்  இருந்த தொகை  இவர் பெயருக்கு  வந்து  சேர்ந்தது.  இன்னும் சிறிது காலம் இருந்து விட்டுச் சென்று விடப் போகிறோம்  நீயே  சொல்லு . எமக்கு  எதற்குப் பணம் . 


எதற்குப் பணம். ?  சிரிப்பு வந்தது.   பணத்தால்  அடிக்கும், பணத்துக்காக  அடிக்கும் சுயநல  உலகில் பணம் அடிவாங்கியதை   முதல் முதலாகப் பார்த்தேன்.  


உனது  சாப்பாட்டு  மேசை,, வேலை இடைவெளியில்  உன் பிள்ளைகளுடன்  ரக்ளாத்  கிரில் போட்டு உண்பது , கூடவே  , அவர்களுடன் கேம் விளையாடுவது ,  பேரீச்சம் பழக் கேக் ,  ஆரஞ்சு  கேக்  எல்லாம்  மிகவும் பிடிக்குமாம்  அவருக்கு.  எனக்கும் பிடிக்கக் கூடும்    வாயேன்  இருவரும் சேர்ந்து செய்யலாம். என்று புன்னகைத்தார்  அவர். 


நாட்கள் தொடர்ந்து கொண்டிருந் ஒரு நாளில்,  பிள்ளைகள்  காலூன்றிய பின்  தாய் நாட்டுக்குப் போகவேண்டும் என்பது  என் ஆசை என்றேன். .

 கையைப் பற்றிய படியே  தான்  அந்தக் கேள்வியையும் கேட்டார். 

                       நீ  ஏன்  உன் தாயின் நாட்டுக்குச் செல்ல  விரும்புகிறாய்  இங்கேயே இந்த நாட்டிலேயே   எங்களுடனேயே    இருந்து விடேன்.  .  அங்கே யார் இருக்கிறார்கள்  .  என்ன எஞ்சியிருக்கிறது  உனக்கு ? 


யோசிக்கத் தொடங்கினேன்.  யார் இருக்கிறார்கள்.  என்ன இருக்கிறது. வாழ்நாட்களில் பாதியை இங்கு களித்த பின் இனி  அதுவும் பழக்கமற்ற  புதிய  இடம் .   எதைக் கொண்டு வந்தேன்   எதைத்  தேடித் போகிறேன்.  தேடித் போவதற்கு  அன்பு  ஒன்று தவிர  வேறெந்தக் காரணமும் இல்லை..  


இந்த உலகில்  மிகவும் அபூர்வமான  வஸ்து வாகிப்போன  அன்பை  இத்தனை  தூரம்  கடந்து  பயணித்து  என்னால் அடைய  முடியுமா?  .  


நான் நகர்ந்து சென்று  வீழும்  இடத்தில  முடிந்து விடும் இந்தப் பயணத்தில் ,அன்பினால்  என்னைக் நடுங்க நடுங்கக்  குளிப்பாட்டிய  சில  மனிதர்கள்  வாய்த்தது  வரம்.  அவர்களை  இழந்த பின்,   நினைவுகளையும்  அனுபவங்களையும்  காவிக்கொண்டு தானே வந்தேன்.   அவற்றை த் தவிர   என்னுடையது  என்பதில்  எது  நிரந்தரமானது.  


நான்  பெற்றுக்கொண்ட அன்பையும் ஆதரவையும் , என்னை முழுவதுமாய்  நம்பவும்  ஏற்கவும் கூடியவர்கள்  என்னிடமிருந்து  எதிர்பார்க்கும் போது  கொடுப்பதைத் தவிர    வேறு என்னதான்  வேண்டியிருக்கிறது  இந்த ஜென்மம்  நிம்மதியாய்  நிறைவு பெறுவதற்கு . 


கிழக்குப் பறவை  ஒன்று  மேற்கின்  கிளை  ஒன்றில்  இளைப்பாற  அமர்வதை  ஒரு வித அகஅதிர்வுடன்  வேடிக்கை பார்த்தவாறே  என் கரத்தைப் பற்றியிருந்த   திருமதி  என்ற்விக்கின்  கரத்தினை  என் மறுகரத்தால் பற்றிக்கொள்கிறேன் .     

Sunday, January 2, 2022

என்ற்விக் எனும் மனிதர்

 அநேகமான நேரங்களில்  நாம் எங்கிருக்க வேண்டும் என்பதையும் , என்ன செய்ய வேண்டும் என்பதையும்  அதிகாரம் மூலமான நிர்ப்பந்தத்தினூடோ அன்றி , வேறு ஏதேதோ  காரணங்களுக்காகவோ அபிமானத்தினாலோ  கூட  எம்மையன்றி  மற்றவர்களே தீர்மானிக்க நேர்ந்து விடுகிறது. 

வீட்டில் உடைந்தவைகளும் கழன்றவைகளுமாக திருத்தம் செய்ய  நிறைய உண்டு. ஒரு வேலையாளை  ஏற்பாடு செய்து  தர முடியுமா  உன்னால்  என்று ஒரு பொழுது  என் நண்பி  ஒருத்தியிடம்  கேட்டிருந்தேன்.. பிறகு  பின்னே  என்ற  இழுப்புச்  சாய்ப்புகள்  இல்லாதவள்  அவள்.  ஆம் என்றால் ஆம்  இல்லை  என்றால் இல்லை என்று உடனேயே  வினையாற்றும்   குணவியல்பு  அவளுக்கு . அதனாலேயே எப்போதும் என் தேவைகளை  அவளுடன் பகிர்ந்து கொள்ளும் .வழக்கம் எனக்கு. 

எனக்கு ஒருவரைத்  தெரியும் . அனுப்பி  வைக்கிறேன்.  ஆள் கொஞ்சம் ஒரு மாதிரி.. ஆனாலும்  நீ சமாளித்துக் கொள்வாய்.  என்றாள்.  அந்த ஒரு மாதிரி  பற்றி  எனக்கு எந்தக் கிலேசமும் இல்லை..  வேறு மாதிரி  ஒரு மாதிரியை  சோனியாவோ  அவள் கணவனோ  என்னிடம் அனுப்பி வைக்க மாட்டார்கள்  என்பது எனக்குத் தெரியும்  என்பதால்  வரும் நபர்  சற்றுச் சிடுமூஞ்சியாக  இருக்கலாம் அல்லது , ஸ்வஸ்திக் கூட்டத்தில்  எஞ்சிய  விழுதொன்றாக  இருக்கலாம்.  எதுவாக இருந்தாலும்  எனக்கு வேலை முடிந்தால்  சரி எனும்  நிலை. அவசியம் தவிர்த்து  வேறொன்றும்  பேசாமல் சமாளித்துக் கொள்ளலாம் என எண்ணிக் கொண்டேன். 

எப்போதோ  நாம் மனதுக்குள் விதை போட்டு வைத்து மறந்து போன  அல்லது  முளைக்க வைக்க  யோசிக்காத  சில விடயங்களுக்கு  நீர் வார்ப்பதர்காகவே  வாழ்க்கை  சில மனிதர்களைச் சந்திக்கும்  அப்படித்தான்  அந்த  மனிதரும், அவருடனான  சந்திப்பும்.

வெள்ளையின  மக்களில்  எனக்குப் பிடித்த  முக்கிய விடயம் நேரம் தவறாமை.  அதன் மூலமாக  இன்னொருவரின் பெறுமதி மிக்க நேரத்தை  வீணடிக்காமை.  பத்துமணிக்கு  வருவேன் . உன்னை எனக்குத் தெரியாது  வாசலில்  நிற்க முடியுமா  எனத் தகவலனுப்பினார்.  பத்துமணிக்கு  ஐந்து நிமிடம்  முன்னே வாசலில்  இறங்கி நின்றேன்.  சரியாகப் பத்து மணிக்கு  அவரது வாகனம்  என் வாசலில்  வந்து நின்றது. 

இறங்கியதும், கண்களை நேராகப் பார்த்து  முகம் துலங்கிய  பெரும் புன்னகையுடன்  ஒரு ஹலோவும்  பின் காலை  வணக்கமும்.  சொன்னார் . மெதுவாகக் கைபற்றிக்குலுக்கிய போதும்   காய்த்து  மரத்துப் போன கை கடினமான  வேலையாள்  என்றது.  அந்தப் பற்றுதல்  அத்துடன் நிற்காது   என்பது  எனக்கு அப்போது தெரியாது..  

ஆனால்  அவர்  வேலைசெய்யத் தொடங்கிய  கொஞ்ச நேரத்திலேயே  அவர்  முழுவதுமாக இல்லாவிடினும்  ஓரளவு  ஆட்டிசத் தாக்கம்  உள்ளவர்  என்பது  புரிந்து போயிற்று.   புரிந்து போனதும்  அதிகமாகப்  பிடித்தும் போயிற்று.  அது உடனேயே  எனக்குப்  புரிந்து போவதற்கும் பிடித்துப் போவதற்கும்  முக்கிய காரணம் உண்டு.  

அப்படியொரு  கையைப் பற்றியபடி தான்  நான் நடை பழகினேன்.  அந்தக் கைகளுக்குள் தான்  விளையாடிக் களித்தேன் .  சண்டை  போட்டேன்.   திடமாக நிமிர்ந்து நடக்க முடியாத  அந்தத் தோள்களைச்  சிம்மாசனமாக்கி  ஊர்வலம் போனேன்.   அந்த நடைகேற்ப  சோர்ந்து வீசும் கைகளைப் பற்றிக்கொண்டு தான்  பாலவயதிலேயே கடைக்குப் போனேன்.  நான் கணக்குப் பார்த்துக் காசு கொடுத்து  மிச்சம் எண்ணி வாங்கிப் பொத்திக்கொண்டு  வர   அவர்  பொருட்கள் காவினார்.  தம்மைப்போல  இல்லாத  அப்பாவி மனிதர்கள் மீது  சேட்டை  செய்யும்  குரங்குகள் கொண்ட  சமூகம்  எம்முடையது . அவை  அவர் மீது குறுனிக் கற்கள்  வீசின ,  சீட்டியடித்தன .  பாலவயதிலேயே குரங்குகள் மீது கல்லு வீசினேன்.   கல்லு வீசியதற்காக  வீட்டில்  அடிகள் வாங்கினேன்.   வளர்ந்த பின்னும் குறிதப்பாது  கல்வீசுபவளாக  இருந்தேன். அசந்தர்ப்பமான  இடங்களில் அவைகளை விடப் பலமாகச் சீட்டியடித்து  அவைகள் தான்  பெண்பிள்ளைகளுக்குச் சீட்டியடித்தன  என மாட்டிவிட்டு  ரசித்தேன். 

தம்மை  மாமனிதர்கள்  என மார்தட்டிக் கொள்ளும் மனிதர்களை விட   கபடமற்று  நேசிக்கத் தெரிந்த மனதளவிலும்  மனிதர்களான  இவர்களைத்  தான் வளரவளர  எனக்குப் பிடிக்கத் தொடங்கியது.

அந்நாட்களில் , வறுமைப்பட்ட  வீடுகளின் மூலைகளில் மார்தட்டாத  இந்த  மனிதர்களை   அதிகம் காண முடியும் .  என் வீட்டைச் சூழ  வறுமைப்பட்ட  வீடுகளும்  அந்த வீடுகளில்  மூலைகளும்  அந்த மூலைகளில்  மனிதர்களும்  இருந்தார்கள்.   

அதிகமாய் மற்றவர்கள் கணக்கிலெடாத அவர்களோடு   நான் விளையாடுவதும்   சிரிப்பதும்  அவர்களுக்கும் , எனக்காகவே  குண்டுமணிகள்    சேகரிப்பது  அவர்களுக்கும் பிடித்திருந்தது.  என்னை  நாய்  துரத்தினால்  நாயைக் கடிக்கும்  ஆவேசம் அவர்களுக்கு  வருவது எனக்குப்    பிடித்திருந்தது. 

காலத்துக்கு   ஒரு நோக்கம் இருக்கிறது .   நாம் எதுவாக வேண்டும்  பல வேளைகளில்  காலமே  தீர்மானிக்கிறது .  அதற்கேற்ற  மாதிரியே   அது  காய்களை நகர்த்துகிறது , சந்திப்புகளையும்    சம்பவங்களையும்   ஏற்படுத்துகிறது  என்றே  நினைக்கிறேன் . வாழ்க்கை  காலத்துக்குக் காலம் அப்படியான  மனிதர்களை   அறிமுகப்படுத்திக் கொண்டேயிருந்தது,  அல்லது  எந்த ஒரு மனிதக் கூட்டத்துக்குள்ளும்  அவர்களே  என்னை  ஈர்த்தார்கள்  மனதுக்குள்  நெருங்கினார்கள்.  பயமின்மையை  பாதுகாப்பை  உணரவைத்தார்கள் 

அதனாலோ என்னவோ  அவர்களையெல்லாம்  நம்பினேன்.  கண்டமாத்திரத்தில்  நேசம் கொள்ள முடிந்தது. யாரென்று  தெரியாதவர்களுக்காக  எல்லாம்   வாதாடி  உறவுகள் வரை பலருடனும் முரண்படவும் உறவறுக்கவும்  வைத்தது. ஆனாலும்  காலம் இங்கு வந்த பின்பும் கூட  இந்த அறிமுக ஏற்பாட்டை  நிறுத்த  நினைக்கவில்லை.  இப்போது  வீட்டில் திருத்தவேலை செய்ய வந்த  இந்த Herr. Entwick  வரை. 

நான் அழைத்திருந்த வேலை  இரண்டாவது  நாளின்  மதியத்துடன்  முடிந்து போயிற்று. எனினும்  அவர்  விடைபெறுவதற்கான  ஆயத்தங்களற்று வேலை முடித்த  இடத்தை  துப்பரவு  செய்யும் பணியிலிருந்தார்.   மாலை  கோப்பி நேரத்தின் போது, தனியாக இருந்து  அருந்தாமல் , சாப்பாடு மேசையில் அமர்ந்து  கோப்பியை  கப்பில் ஊற்றியவாறே வீட்டில் ஒவ்வொருவராக  விசாரித்ததிலிருந்தே   சேர்ந்திருந்து  கோப்பி  குடிக்க விரும்புகிறார்  என்பது  புரிந்தது. 

வேலையாளாக  வரும் ஒருவர்  இத்தனை  உரிமைஎடுப்பது   வழமையாகச் சாத்தியமில்லை  எனினும், என்னால் அவரை  முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்ததில்  அல்லது  அப்படி நான் நம்பியதில்  அது  அதிர்ச்சியாக இருக்கவில்லை. போலியற்ற  களங்கமற்ற இந்த வகை  மனிதர்கள் , பலவிதங்களில்  மிகுந்த கெட்டிக்காரர்கள்.  நடிப்புக்கும்  நேசத்துக்குமான  வேறுபாடுகளை  மனதுக்குள்  நுழைந்து   புரிந்து  கொள்ளக் கூடியவர்கள். தமக்கு  இசைவான  இடங்களிலன்றி  இவர்களால் அமைதியாக  இருக்க  முடியாது  என்பதை அவர்கள் உடல்மொழியே  காட்டிக் கொடுத்து விடும்  என்பது  அனுபவத்தில்  உணர்ந்திருக்கிறேன் .  அந்த மனிதர்  இயல்பாகப் பேசிச் சிரித்து, காப்பிக்கேற்றலைத் தூக்கி  ஊற்றிய போது  உதடுகளில் சுளிப்பும்  கரங்களில்  நடுக்கமுமற்றிருந்தார்.   சிறுவயதில்  என்னைப் பற்றியிருந்த  கரத்தை   எனக்கு  நினைவு படுத்தினார் .    அது போன்றவர்களிடம்  உரிமையுணர்வு அதிகமிருக்கும்.  இந்த மனிதரிடமும்  அது அரும்புவதை  அவதானித்தேன்  ஏனோ  நிம்மதியாக  உணர்ந்தேன். 




                                                                         

கோப்பி  குடித்தாகி  விட்டது  பேசியாகி விட்டது . புறப்பட  ஆயத்தமாகிறார்  எனப் பார்த்துக் கொண்டிருந்த போது ,  அதை ஆட்டி,  இதை இழுத்து  சுவரில்   பேப்பர்  சுருங்கியிருந்த   மூலையைத் தட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்.   இனி  எப்போது  வீட்டில் நிற்பாய்  என்றார்    எதார்த்தமாக.  சொன்னேன்.   விடைபெற்றுச் சென்று விட்டார். 

சொன்ன நாளில்  அதே  குறித்த  நேரத்தில்  அவர் தட்டிச் சுரண்டிப் பார்த்த  இடங்களைச்  செப்பனிடுவதற்குரிய பொருட்களுடன்  வந்திறங்கினார்.   ஒரு வேலையாளுக்குரிய எல்லையற்று   வேலை தொடங்கியது  கொஞ்சம் திகைப்பாக இருந்தது.. இருப்பிடம்  நாளுக்கு நாள் வீடு   ஒவ்வொரு பகுதியாக  அவரின் அடையாளங்களுடன்  மாறத் தொடங்கியது.  கூலி  பேசவில்லை.. வேலை  நேர  முடிவில்  கூலி  குடுக்க நான் முயலும் போதெல்லாம்   முடிவில்  பார்த்துக் கொள்ளலாம்  என்பதே பதிலாக  வரத் தொடங்கியது.  முடிவில்  ரொக்கமாக  ஒரு பெரிய தொகை  என் தலையில்  விழுந்து  அழுத்தப் போகிறது  என்ற பயம்  என்னை  அரிக்கத் தொடங்கியது. 


***************************


ஊரில்  நான் வளர்ந்த  வீட்டின்  வெளி விறாந்தை மூலையின்  அத்திவாரப்பகுதியில்  செல் விழுந்து  துளைத்ததில்  மூலைப்பகுதி முக்கோண வடிவில்  அத்திவாரத்துடன்  விரிசல்  விட்டிருந்தது.   அந்தப்பகுதித் தூண்  எந்த நேரத்திலும்  விழுந்து விடும் வகையில் அந்தரத்தில்  சரிந்து நின்றது .  என் ஓட்டமும்  துள்ளலுமான  அவதானமின்மையில்  என்றாவது  ஒரு நாள்  அது என்மீது  விழுந்து விடக் கூடும் என்பதாக  அம்மா  எப்போதும் பயந்து கொண்டேயிருந்தா.  அந்தப்பக்கம் போகும் போதெல்லாம்  பேயைக் கண்டவ  போலக் கத்திக்கொண்டிருந்தா,   

அப்போது தாத்தாவுக்கு  வயதாகி  இருந்தது.  தன்  இயக்கங்களிலிருந்து  ஓய்ந்திருந்தார்.  தனது  வார்த்தைகளை  அதிகமாய்  அவர்  இழந்திருந்தார்.  எஞ்சிய  வார்த்தைகளை  அனேகமாக  எனக்காக மட்டுமே  ஒதுக்கியிருந்தார்.   ஆதலினால் அந்த  விரிசல்  நீண்ட காலம் அடைபடாமலே கிடந்து  அறைக்குள்  தூங்கும் போதும்   வெளியே வீடு  விழுந்து விடுமோ  எனப் பயமுறுத்தியது 

அம்மா  கூட்டுக் குருவி போல் .  அதையே  உலகமென்று  நம்பவும் ஏற்கவும்  காலத்தாலோ  சம்பிரதாயத்தலோ  என்ன  மண்ணாங்கட்டியாலோ  நிர்ப்பந்திக்கப்பட்டவர்.. அம்மாவின் கூட்டைச்  சேர்ந்தவர்கள் பலரும் வந்தார்கள்  போனார்கள். உறவென்றார்கள், பாதுகாப்பென்றார்கள் உறவாடினார்கள் . அத்தனையையும்  பாதுகாப்பாக  பிளந்து கிடந்த மூலை எட்டாத தூரத்தில் பாதுகாப்பாக   நின்று  சொன்னார்கள்.  பின்னொரு நாளில்  தாத்தா  இறந்தபின் அம்மா நாயாய் அலைந்து  யாரோ  ஒரு  உறவினரைப்  பிடித்து  அந்த மூலையைச் செப்பனிட்டுக் கொண்டா.   

அரிசியிடிக்க வந்த  செல்லம் ஆச்சி  மட்டும்  வெளியால  ஒரு கூலிக்காறனைப் பிடிச்சுச்  செய்திருந்தால்  எப்பவோ   கொஞ்சக் காசில செய்திருப்பான். இது  ஒற்றிக்கு ரெட்டைச் செலவு என்று நீளமாய்  பெருமூச்சு  விட்டுக்கொண்டே  உரல் கழுவியது நினைவிருக்கிறது. 


*************************************


ஒன்றைத் தொட்டு  ஒன்றாக  வேலைகள்  அனுமார்  வாலாகி  ஒருபடியாக  முடிவுறுவதற்குள்  அவர்  எங்கள் குடும்பத்தில்  ஒருவராக  உரிமையுடன் உறவாடத் தொடங்கியிருந்தார்.  இந்த இடைப்பட்ட  மாதங்களுக்குள்  பெரிதாக  ஒளிவுமறைவற்று  எல்லாவற்றையும்  பேசும்படி  காலம் மாற்றியிருந்தது. இன்னும் நிறையச் செய்யவேண்டியிருக்கிறது .  இத்துடன் ஒரு இடைவெளி விட்டு  மீண்டும் ஆரம்பிக்கலாம்   எனக்குச் சற்று  ஓய்வு தேவைப்படுகிறது. என்று அவர் சொன்ன நாளில் அவருக்கான  பணத்தைக் கொடுத்துக் கணக்கு முடிக்கத் தயாரானேன். 

அப்போது   அவர் சொன்ன தொகையில், அவர் எதிர்பார்த்த  உறவு முறையில்   எனக்கு மயக்கமே  வந்து விட்டிருந்தது.  


(தொடரும் ............)