Saturday, July 27, 2019

நாணயத்தைக் கையில் வைத்து..........

'துரோகி துரையப்பா.' துரையப்பா என்ற பெயர் காதில் விழுந்த சிறுவயதுகளில், அதற்கு முன்பே சுட்டுக் கொல்லப்பட்ட (27.07.1975) அவர் அப்படித்தான் நாம் வாழ்ந்த யாழ் சமூகத்தால் அடையாளப் படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டார்.
அதன் பின் வளர்ந்து கடந்து கொண்டிருந்த வாழ்வில் இன்று வரை அரசியல், சமூகம் , என்ற அடிப்படையில் அடிக்கடி இந்த துரோகி என்ற பதத்துக்குள் பலபெயர்கள் அடையாளப்படுத்தப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவர் எவர். எவரெல்லாம் துரோகி. துரோகம் என்றால் என்ன? என்று ஆராய்வதல்ல இந்தப் பதிவு.
மக்கள் மனம் பற்றிய என் இப்போதைய புரிதலின் படி, அதிக மக்கள் போகும் பாதைக்கு எதிர்த்திசையில் எவர் போகிறாரோ, காலத்துக்கேற்ப அவரவர் கருத்துக்கு எவர் முரணோ அவர் அவர்களுக்குத் துரோகி. அந்தப் பட்டத்துக்குள் அவர் அந்த மக்களுக்காக , தன்னலம் கருதியோ, பொதுநலம் கருதியோ அதுவரை செய்த அத்தனை நன்மையையும் மறைக்கப்பட்டு பின் மறக்கப்பட்டும் விடும். துரோகி என்ற வரலாற்றுப் பெயருடன் அவர் இறப்பு நிகழும். என்பது தான் இன்று வரை போராளித் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள் , ஊர்ப் பெரியமனிதர்கள் எனப் பொதுத்துறையில் பயணித்த அனேகமாக அனைவர்க்கும் ,அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சூழலிலும் வாழ்ந்த அவர்கள் சாரா மக்கள் கூட்டம்வழங்கிய கைம்மாறு
ஒரு இறப்பின் பரிதாபப்படக் கூடிய நகைச்சுவை என்னவெனில் ஒருவரைத் துரோகி எனச் சொன்ன மக்கள் கூட்டமே , அவரின் பெயரை, அவரின் இறப்பை தம் சுயநலத்துக்குப் பாவித்த துரோகம் .
அவர் சுட்டுக்கொல்லப்பட்ட பின் மெல்ல மெல்ல கலவரபூமியாக மாறத்தொடங்கிய மண்ணை விட்டு பொருளாதார நோக்கோடு புலம்பெயர்ந்து அகதி அனுமதி கேட்டு ஐரோப்பாவுக்குள் நுழைந்த கூட்டத்தில் ஐம்பது வீதமானோராவது ஐரோப்பிய நாடுகளின் குடிவரவுத் திணைக்களத்து விசாரணையில் அகதி அந்தஸ்துக் கோருவதற்குக் காரணமாகக் கொடுத்த அறிக்கையில் துரையப்பாவைச் சுட்டுவிட்டேன். நாட்டிலிருக்க உயிராபத்துப்பயம். என்று குறிப்பிட்டிருந்தார்கள்.



இத்தனை வருடமாக இத்தனையாயிரம் பேர் நாளாந்தம் சுட்டுக்கொல்லும் அளவு அத்தனை வலிய சீவனா துரையப்பா என கிண்டலாகவும், துரையப்பா கதையை விட்டு விட்டு வேறு கதை விடு எனக் கோபமாகவும் அதிகாரிகளால் கேட்கப்பட்டவர்கள் உண்டு.. நான் இதில் கூறவந்தது இதுவல்ல. யாழ் நகரில் திரு அல்பிரட் துரையப்பாவை ஞாபகப் படுத்திக்கொண்டிருக்கும் கட்டிடத் தொகுதிகள் பற்றியதுமல்ல. இது நீங்கள் பலர் அறியாத ஒரு மூலையில் நிகழ்ந்தது. அது.........
கொழும்புத்துறை என்ற சிறு கிராமம் பற்றியது, யாழ் கடநீர்ஏரியிலிருந்து பாண்டியன் தாழ்வு சுண்டுக்குளி வரை கொழும்புத்துறை என்பதற்குள் அடங்கினாலும், தற்போதுள்ள மணியன் தோட்டம் , வளன்புரம் போன்ற குடியேற்றக்கிராமங்கள் உருவாவதற்கு முன்னான காலத்தில் சில குறுக்குத் தெருக்களையும் அவை சந்திக்கும் பிரதான வீதியையும், கடல்வழிப் போக்குவரத்தின் துறைமுகத்தையும் கொண்ட இறுதிக் கிராமம்.
குறைந்தளவான மக்கள் தொகையைக் கொண்ட ஊரில் உயர் கல்வியறிவும், பொருளாதார வசதியும் மிக்கவர்கள் விரல் விட்டு எண்ணும் தொகையினராகவே இருந்திருக்கிறார்கள். மாதச் சம்பளம் என்பதும் இந்த ஒரு குறிக்கப்பட்ட சிறு தொகையினரிடமே இருக்க, அன்றாடம் காய்ச்சிகளான ஏனைய மக்களின் தொழில் கடலை நம்பியே இருந்தது.
பெருவலை, தொலைதூரக் கடற்பயணம் எல்லாம் இவர்கள் மீன்பிடி வழக்கில் இருந்ததாக நான் அறியவில்லை.. ஆகவே அவர்கள் அள்ளிவரும் கடல் வளமும் அவர்கள் நாளாந்தப் பொழுதை நடாத்த மட்டுமே போதுமானதாக இருந்தது.
அயலூரான அரியாலைக்கும் கொழும்புத்துறைக்கும் கைத்தொழிற் பொருளாதாரத் தொடர்புகள் இருந்தன. அரியாலைத்தென்னந்தோட்டங்களின் தேங்காய் மட்டைகளை மாலைவேளைகளில் பெண்கள் கடகத்தில் உயரமாக அடுக்கி தலையில் சுமந்து சென்று கடல்கரைச் சேற்று மண்ணில் புதைப்பார்கள். மற்றும் மாட்டுக்கு உணவாகப் பயன்படுத்தப்படும் பனையோலை ஈர்க்குகள், பனைமட்டைகள் அனைத்தும் ஆண்கள் சைக்கிளிலும் சுமந்து சென்று பச்சைமட்டையில் நார் உரித்து காயவிடுவார்கள்.
போனவருடம் தாட்ட மட்டைகள் காலைகளில் தோண்டி எடுத்து அலசி தண்ணீர் வழிய வழிய தலையில் சுமந்து வரப்பட்டு வீட்டிலிருக்கும் இளவயதுப் பெண்களால் மட்டையடித்துத் தும்பாக்கிக் காயவிடப்படும். மாலைகளில் புதியமட்டைகளை வாங்கி வந்து கடலில் தாட்டுவிட்டு வந்ததும் அவரவர் வீட்டு வாசலில் கயிறு திரிக்கும் உபகரணத்தோடு பெண்கள் கயிறு திரிக்க , ஆண்கள் உரித்தெடுத்த நாரில் இறால் கூடு முடைவதும், வலைதைப்பதுமாக ஒரு சாண் வயிற்றுக்கு நாள் முழுவதும் உடம்பு முறிய உழைத்தார்கள்.
துறைமுகம் என்பதால் பூநகரி வெட்டுக்காடு போன்ற பக்கங்களில் விளையும் தென்னையும் நெல்லும் கடல்வழி வத்தைப் போக்குவரத்தும் அதைச் சுமக்கும் மாட்டுவண்டிக்களுமாக எப்போதும் உயிர்ப்போடு இயங்கி அதன் மூலம் உயிர்வாழ்ந்த அந்தக் கிராமத்துக்கு
இடையில் மழையோ, அன்றி வேறு காரணமோ, அனைவரும் சைவமதத்தைத் தழுவியவர்களாக இருந்ததால் கோவில் திருவிழாவோ ஆரம்பித்து விட்டால் மச்சம் புரளாது. மச்சம் புரளாவிடத்து மீன்பிடி இராது. மீன் பிடிக்காவிட்டால் வருமானமிராது. அன்றாடங்காய்ச்சி மக்களின் குடல் காயும்.
தவிரவும் கல்விசார் முக்கிய பிரச்சனை ஒன்றும் அங்கிருந்தது. ஐயர்கடைச் சந்தி என வழங்கப்படுமிடத்தில் அமைந்துள்ள கொழும்புத்துறை இந்துமகாவித்தியாலயம் மட்டுமே அவ்விடத்து மாணவர்களுக்கெல்லாமாக இருந்த ஒரே பாடசாலை. பல்சமூகம்சார்.மத்தியில் அமைந்திருந்தது அது, அதனால் சிலபகுதி மாணவர்கள் உளவியல் பிரச்சனைகளையும் சந்திக்க நேர்ந்தது.
வசதி படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளை காசைக் கொட்டி யாழில் பெரியதாகச் சொல்லப்பட்ட பாடசாலைகளுக்கு அனுப்ப. வறிய பிள்ளைகளின் கல்வி ஈடாடிக் கிடந்த காலத்தில் யாழ் நகர மேயர் துரையப்பாவின் பார்வையின் கீழ் வந்தது அக்கிராமமும் அதன் வறுமையும்.
ஒரு குடும்பத்தில் ஓரளவு பாடசாலைத் தகுதி கொண்ட ஒவ்வொருவரையாவது அவரவர் தகுதிக்கேற்ப மின்சாரசபை , கூட்டுறவுச் சங்கங்கள் போன்றவற்றில் பணிக்கமர்த்தி, மாதவருமானத்துக்கு அம்மண்ணிற்கு வித்திட்டு வைத்தார். கூடவே
1964 ஆம் ஆண்டு அவர்கள் மண்ணிலேயே 'துரையப்பா வித்தியாசாலை'
என்ற என்ற பத்தாம் தரம் வரையுள்ள பாடசாலையை அமைத்து, அந்த மண்ணின் சிறந்த கல்வியாளரும், மண்நேயம், மனிதநேயம் மிக்கவருமான திரு .செல்வராஜா அவர்களை அதிபராக நியமித்து அம்மண்ணின் கல்விவறுமையையும் தீர்த்து வைத்தார்.



அந்த ஏணியைப் பற்றிக்கொண்டு ஏறத்தொடங்கி எத்தனையோ உயரத்துக்குச் சென்றுவிட்ட அந்த மக்களின் வேர்களிடம் இன்றும் அவருக்கான நன்றியும் அஞ்சலியும் கசிந்துகொண்டேயிருப்பதை ஒரு நாணயத்தைக் கையில் வைத்து இருபக்கங்களும் பிரட்டிக்கொண்டே எண்ணிப் பார்க்கிறேன்