Tuesday, December 19, 2017

பூப்போல் மனதை முள்ளால் கீறி வெந்நீர் ஊற்றி.......

நாக்கின் அலட்சியமான அல்லது வக்கிரமான  சுழற்சியில் வாயிலிருந்து புறப்படும் கவனமற்ற வார்த்தைகள் விஷம் தடவிய அம்பை விட அதிக ஆழமான காயத்தையும் உயிர் ஒடுங்கும் கூர்மையும்  கொண்டன.. ஒற்றை வார்த்தையில் ஒருவர் முற்று முழுதாய் அடிபட்டு விழவும், பல பந்தங்கள் ஒற்றை நொடியில் அறுந்து போகவும் காரணமாகலாம். வார்த்தைகளின் வீரியம் ஆளாளுக்கு மாறுபட்ட வீதத்தில்  காயப்படுத்தலாம் என்ற போதும் காயம் என்பது வலிதான். அது ஏற்படுத்துவதும் அழியாத வடுவே தான் . அப்படித்தான் இந்தப் பதிவும்........

அவள், எனக்கு மிக நெருக்கமான  நண்பியாக, அல்லது உறவாக... எதோ ஒரு விதத்தில் என்னால் நன்றாக அறியப்பட்டவளாக இருந்தாள். அழகியலும் , மென்மையும் , அன்பும் அதிகம் கொண்டவள். அவளது வளர்ப்புக்கு உட்பட்ட எந்தப் பறவையும் விலங்கும் அவளது கைகளுக்குள் எப்போதும் அடைக்கலம். பூனைக்குட்டியும் கோழிக்குஞ்சும் தன் தாயைவிட எப்போதும் அவள் கைகளை நாடுவது வாழ்தலின்  அழகு .

அவற்றை  அவள் எப்போதும்  தன் குழந்தைகள் என்றே சொல்லிக் கொள்வது சவேடிக்கையாக கிண்டலடிக்க வாய்ப்பாக இருந்தாலும் ரசிக்க முடியும். எதிலாவது அடிபட்டு காயப்பட்டு விழுந்த பறவை,   காகம் கொத்தி துரத்தி  கூற்ருயிராய் விழுந்த குயில் குஞ்சு, பருந்துக்குக் கல்லெறிந்து பறித்த யார்வீட்டுக்கோ உடமையான கோழிக்குஞ்சு  என்று ஒவ்வொன்றுக்காய் அழுது அவைகளைக் காப்பாற்றி விட அவள் ஓடி ஓடி தவிக்கும் தவிப்பு எல்லோருக்கும் புரிவது ஒன்றல்ல.தன்னை மட்டுமன்றி  மற்றவர்களை தானாக நேசிக்கும் மனிதம் தாண்டி அனைத்துப் பிராணிகள் மீதும் காட்டும் அன்பு என்பது தியானம் போன்றது. அது அனைவர்க்கும் வைப்பதில்லை. ஏனோ அவளிடம் அந்தக் குணாதிசயம் அடைக்கலமாகி இருந்தது.


எம் கைகடந்த விடயங்கள் நிகழும் போது விதி என்று எம்மால் இலகுவாக ஒரு வார்த்தை வடிவத்துக்குள் அடக்கிவிடும் அந்த விதிக்கு முகம் கொடுப்பது அத்தனை இலகுவானதல்ல. ஆனாலும் விதி என்ற பெயரில் நிகழும் எதிலிருந்தும் யாராலும் தப்பி விட முடிவதில்லை.  முக்கியமாக உயிரிழப்பு  அப்படித்தான் அடிபட்டு விழுந்த பறவையின் வழிகளை தாங்காது துடிப்பவளின் கைகளில் இருந்து   அவள் பெற்ற குழந்தையைப் பறித்து விளையாடியது விதி.

உயிருக்கு உத்தரவாதம் மறுக்கப்பட்ட அதனைக் அதைக் காப்பாற்றி விட ஒவ்வொரு தாயும் போல் தான் அவளும் துடித்த துடிப்பும் ஓட்டமும் , தவிப்பும் சொல்லி விளங்க வைக்க முடியாதன. வயிற்றில் உருவாகுமுன்னமே, திருமணம் என்ற ஒன்றைக் கற்பனை செய்யும் முன்னமே தனக்கே தனக்கென, முதன் முதலாய் தன உதிரத் தொடர்பில் தனக்கொரு உறவென, உருவாகாத குழந்தை மீது உயிரை வைத்து, தேடித்தேடி அதற்குப்  பெயர் வைத்துக் கனவுகண்டு காத்திருந்த குழந்தையை, கைகளில் ஏந்திய சில நாட்களுக்குள்ளாகவே, அதனை முத்தமிட்டுப் பாலூட்டும் பொச்சம் அடங்க முன்னாலேயே  மொட்டுப் போல கொண்டு போய் துயிலும் தோட்டத்தில் தூங்க வைத்தல்  என்பது இதயம் உள்ள எவர்க்கும் அத்தனை இலகுவான காரியமல்ல.  ஆனாலும் சிலர் அப்படியான சாபங்களையும் பெற்றுக்கொண்டே தான் பிறக்கிறார்களோ என்னவோ.

  தான் இத்தனை காலம் கனவுகண்டு காத்துவைத்த பெயரைக் கல்லறைத் தோட்டத்தில் எழுதிவிட்டு  அவள் முதல் முறையாக குழந்தையைப் பெயர் சொல்லி  அழைத்துக் கதறிய கதறல் யார் காதலி விட்டு மறைந்தாலும் அவள் மனதை விட்டு இலகுவில் மறையக் கூடியதல்ல.

அதிலும் தன்னவர்கள் அற்ற தேசத்தில் ஆற்றுதலுக்கு யாருமின்றி அநாதரவாய் அரைமயக்கத்தில் குழந்தையைக் கொடுத்தவனின் அரவணைப்பு கூட அற்று  ஒரு அந்நிய வெள்ளையினத் தாயின் அணைப்புக்குள்  ஆறுதல் மொழி கூட விளங்கா அவலத்தில்,  நிற்க நேர்வது என்பது மன ரீதியாக அத்தனை  இலகுவானதல்ல ஆனாலும் நேர்ந்தது.

அவ்வளவு தான். கல்யாணத்தோடு ஒடுங்கி விட்ட குதூகலத்தின் பின்னால் குழந்தை வடிவில் இருந்த வாழ்க்கை மீதான  நம்பிக்கைகளும் சிதைந்து போக   அவள் அமைதியாகி விட்டாள். அதன் பின் அவள் குழந்தைக்காக அழுது  என்றுமே  பார்த்ததில்லை. தனக்குள் ஒடுங்கி மூலையில் சுருண்டு இருப்பவள்  மெல்ல மெல்ல மனச்சோர்வுக்குள் புதையத்தொடங்கினாள். அவளில் ஏற்பட்டுக் கொண்டிருந்த மாற்றத்தைக் கூட அறிந்து கொள்ளக் கூடிய  யாருடைய  தொடர்பும் ஆதரவும் அவளுக்கில்லாது வாழ்க்கையோடுஅந்நியப்படுத்தப்பட்டிருந்தாள்






பூமியில் அவளுடைய ஆரம்பத்திலேயே அவள் இழப்புகளையும், இறப்புகளையும் அதனாலாய சமாளிப்புக்களையும்  சந்தித்திருந்ததால் எப்போதும் அவளிடம் ஆர்ப்பாட்டமில்லா அமைதியே அதிகமாக  இருந்தது. நெஞ்சுக்கு நெருக்கமான இதமான சில மனிதர்கள் , வாழ்க்கை யதார்த்தங்களால் பயணிப்பது என்றுணர்ந்த ஆரவாரமில்லாத புரிந்து கொண்ட சில நட்புக்கள், ரசனைகளை கூட்டி அவள் மீது மழைத் தாரைகளாய் பொழியும் இயற்கை இவை தவிர அவளின் தேடல்கள் அதிகமாக எதுவும் இருந்ததில்லை. ஆனாலும் இதற்கெல்லாம் சேர்த்துவைத்து  எதிர்காலத்தில் நிம்மதியான அரவணைப்பான  ஒரு வாழ்வை தான் வாழ்வேன் என்ற அவளுக்கு நெருங்கிய நேசமுள்ளவர்களால் ஊட்டப்பட்ட  நம்பிக்கை அவளுக்கும் இருந்தது.

இருந்தும் எதிர்காலம் என்பதும் அதன் சந்தோஷங்களும் எதிர்பார்ப்புக்களும் அரவணைப்புக்களும்   குழந்தையால் மட்டுமே  என  நிர்ணயிக்கப் பட்ட  அவள் வாழ்நிலையில் ,. அந்த இழப்பின் போது அவள் வாழ்வின் ஆதார சுருதியே உயிர் நாண்கள் அறுந்து அவளது  உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில் அவளை நெருங்கி நிற்க மனிதர்கள் இல்லா அந்நிய தேசத்தின்  தனிமை மட்டுமே அவளோடு கூட  இருந்தது.

ஒருவேளை வெளிநாடு....அது ஏற்படுத்திய  தூரங்கள் அதற்குக் காரணமாகவும் இருக்கக் கூடும். எவர் வந்தார்கள் எவர் போனார்கள், எவர் அணைத்தார்கள், எவர் உதாசீனம் செய்தார்கள் என்பது போலான குறை நிறை விமர்சனங்கள் எப்போதும் போல இந்த இறப்புக் கடந்த நாட்களின் பின்னும் அவள் முன்வைத்து நான் பார்த்ததில்லை.

அவளோடு இப்படியான நிலைப்பாடுகள் பற்றி ஏதாவது கதைக்கும் நேரங்களில் கூட

" விடு எனக்கு இப்படித்தான் விதிச்சிருக்கு போல"

என்பதுடன் அந்த விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவாள். குழந்தை போன பின் அதையே மாற்றி

"இந்தப் பிறப்பில் எல்லாம் அனுபவிச்சிட்டால் அடுத்த பிறப்பு என்ற ஒன்று இருக்காதாக  இருக்கக்கூடும் . அதுதான் எல்லாத்தையும் அனுபவி என்று எழுதியிருக்கிறான் கடவுள்"

என்பாள் வறண்ட புன்னகை வெறித்த பார்வையோடு.

"அடுத்த பிறவி என்ற ஒன்றை நம்புறியா நீ?"

"எனக்கு இப்போதெல்லாம் எதை நம்புவது எதை நம்பாது விடுவது என்பதில் கூட தெளிவுகள் இல்லைடி."

அவளை முற்றிலுமாய் அறிந்து அதை விடப் புரிந்திருந்ததால் அவளது சலிப்பான வார்த்தைக்குப் பதில் அல்லது ஆறுதல்  சொல்லும் திராணி என்னிடத்தில் இருக்கவில்லை.

இந்த உலகம் இந்த வாழ்க்கை, மனிதர்கள் எதிர்பார்ப்புக்கள் நம்பிக்கைகள் எல்லாமே எம் கைக்குள் அடங்காத  ஏதோ மையத்தில் இயங்குபவை. எம்மால் புரியமுடியாத ஒரு இடத்தில் ஒட்டி இருப்பது எனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது   என்றாள் எங்கோ பார்வை வெறித்திருக்க.  

அவள் உலக வாழ்க்கை மீது கொண்ட நம்பிக்கைகள் அதிகமாக அன்பிற்கான, அதன் அங்கீகாரத்திற்கான  ஏக்கங்களாகவே இருந்தன.  அதற்காக முடிந்தவரை அனைவர்க்கும் முகம் கோணாத வகையில் அவள் வளையவும் தயாராக இருந்தாள் எப்போதும். இருந்தும்...

அவள் உறவுகள் என்று ஓடி ஒடி நேசித்த அளவு நேசத்தை அவர்கள் திருப்பிக் கொடுத்ததாக நான் உணரவில்லை. தான் மன அழுத்தத்துக்குள் புதைந்து கொண்டு கிடக்கையிலும், அதைத் தனக்குள் விழுங்கி மாத்திரைகளால்  மறைத்துக் கொண்டு உறவுகள் மீதான அவளது கரிசனம் எப்போதும் போல் இதய சுத்தியோடு தான் இருந்தது.

" குழந்தையின் இறப்பின் போது கூட  ஒற்றைத் தொலைபேசித் தொடர்பு அல்லது அதுகும் இல்லாத உறவுகளின் தொடர்புகள் உனக்குத்  தேவையா" என்று நான் கேட்கையில் வறண்ட சிரிப்புக்குள் பதிலை மறைத்து விடுவாள்.

"விடு இன்னொரு தரம் பிறக்கப போகிறேனா. பிறந்தாலும் , காணப்போகிறேனா " என்பதுடன் முடிந்து விடும்.



அவள் தனக்குள் முற்றிலுமாய் உடைந்து நம்பிக்கைகள் இழந்து ஒடுங்கிய பின் அவளது நெருங்கிய உறவில் பல இழப்புக்களைப் போர் கொடுத்திருந்த போதும் எல்லா இழப்பும் அவளது குழந்தையின் இழப்புப் போலவே ஒரு செய்தியாகிப்போன வெளிநாட்டு உறவுகளுக்கு,  ஒரே ஒரு இழப்பு மாத்திரம் உலகமெல்லாம் தொலைபேசி  உள்ளவர்க்கெல்லாம் சொல்லிக் கதறும் பேரிழப்பாகத்,  தெரிந்தது.

வெளிநாட்டு வாழ்க்கை, அதன் பகட்டுக்களைப்  பிரகடனப்படுத்தும் அவர்களுக்கு  அதிகம் கதைத்துப் பேசிப் பழக்கம் கூட இல்லாத அந்தப்போராளி,  தான் பிறந்த குடும்பத்தின் உயிர் அடிவரை ஆட்டம் காண வைத்து நடைப்பிணமாக்கி  விடைபெற்ற அந்த உயிர், புலப் பெயர்ந்த இவர்களுக்கு மாவீரர் குடும்பத்து உறவு  என்ற பெருமையைப் பெற்றுக்  கொடுத்திருந்தது.


அந்த இழப்பின் போது

" போற உயிர் போயிடும் அதைப் பெற்றுச் சுமந்து கனவுகளோடு வளர்த்தவர்கள்   இனி உயருள்ள பிணம் தானே"

என்ற அவளது வார்த்தை, அந்தப் பெற்றோரை நினைத்து அவள் தவித்த தவிப்பு, அவள் அமைதியாகத் தாங்கிக் கொண்ட இழப்புக்குள் அவள் மறைத்திருந்த வலியை அப்பட்டமாக அவளுக்கே வெளிக்  காட்டியது.

அந்த இழப்புக்காய்  வெளிநாட்டில் இருந்து உறவுகள் போட்ட ஆர்ப்பாட்டங்களைக் கண்டும் அமைதியாகத்தான் இருந்தாள். அந்தத் தொலைபேசி அழைப்பு வரும் வரை.

மாவீரராகிப் போன அந்தப் போராளியை அது நெருங்கிய இரத்த உறவாக இ  ருந்த போதிலும் புலம்பெயர்ந்த பின் புலம்பெயர்ந்த ஏனையவர்களைப் போல அதன் சிறு வயதுகளில்கண்டது தவிர  தாயகத்தில் இருந்த  அவர்களுடன் அவளுக்கு அதிகத் தொடர்பிருக்கவில்லை.  இருந்தும் புதிதாகப் பொங்கிய பாசத்தில் நேரகாலமற்று ஒலித்த தொலைபேசி அருவியென வடித்த நீலிக் கண்ணீரின் பின்னால் மறைந்திருப்பது அடுத்தவருட மாவீரர் தின நிகழ்வுக்கு முன்னிற்கும்  அங்கீகாரம் என உணரமுடியாதளவு அவள்  இன்னும் முழுமையாக உணர்வு தொலைக்காதிருந்தாள்.

அடிக்கடி மிக ஆதூரமாக தொலைபேசியில் அவர்கள் பேசுவது மிக நடிப்பாக, அதைச் செவிமடுப்பது சலிப்பாகவும் இருந்தது அவளுக்கு.  இன்று ஒப்பாரி சொல்லும் இந்த உதடுகள் முன்னொரு காலத்தில் இறந்த பிள்ளை குழந்தையாக இருந்த போதே அது உண்ட உணவுக்கும் சுவைத்த ஒரு கப் ஐஸ் கிறீமுக்கும் சொந்த தந்தை வழி மாமியாரே  கணக்கெழுதி வைத்ததை நேரில்; பார்த்து திகைத்து ஓசியில்  ஒரு மிடறு நீரருந்தவும் கூசி  ஒதுங்கியவள் அவள்.

" நீங்கள் அந்தப் பிள்ளையின் அம்மாவுடன் கதைச்சீங்களா? எங்களுக்குள் கதைப்பதில் எதுகும் நேர்ந்துவிடப் போவதில்லை. அந்தப் பிள்ளையின் தாய்க்கு இது ஆறாத துயரம் அவவுக்குத் தான் ஆதரவு வேணும் அங்கே எடுத்துக் கதையுங்களன் " என்றாள்.

"அது தான் உனக்கு எடுத்தனான். நீ தான் இதுக்குச் சரியான ஆள்"

"இல்லை நீங்கள் என்னிலும் மூத்தனீங்கள்.  நீங்கள் நேரா அவையளோட கதைக்கிறது  தான் முறை அவைக்கும் அது தான் ஆறுதலா இருக்கும். "


. "இல்லை நீ தான் அதுக்குச் சரியான ஆள் ஏனெண்டால் உனக்குத் தான் பிள்ளை செத்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. எனக்கெல்லாம் இந்த விசயங்கள் பற்றி கதைக்கவோ ஆறுதல் சொல்லவோ தெரியாது. "

ஒரு வித அனுதாபம் போல ஈட்டி பாச்சிய அந்த வார்த்தைகளில் அதிர்ந்து அத ற்கு மேல் எதுவும் காதில் விழாது அப்படியே நின்றவளிடமிருந்து  தொலைபேசி நழுவிய  பின் கூட அவள் திகைப்பில் இருந்து மீளவில்லை.


"பிள்ளையைப் பறி கொடுப்பது எக்ஸ்பீரியன்ஸ் என்று சொன்னாளே ! சொல்லு, அது எக்பீரியன்சா சொல்லு, அது சாவு. நாளாந்தம் நிமிஷத்துக்கு நிமிஷம் அணுவணுவா உயிர் போற  சாவு . நான் செத்துப் போனேன்டி இதுக்கு மேல என்னை கொன்று போட என்ன இருக்கு என்று தேடி வருகீனம் சொல்லு. இவர்களுக்கெல்லாம் நான் என்ன தப்பு செய்தேன். இவள் ஆடின பழியெல்லாம் தூக்கிச் சுமக்கிற வாயில்லாத சுமைதாங்கிக் கல்லாக இருந்தது தவிர.  இப்பிடி துரத்தி துரத்தி பிள்ளையை குடுத்தவள் என்று சொல்லிக் கொல்லுறதுக்கு, 

வயித்தைக் கிழிச்சுப் பிள்ளையை   எடுத்த காயம் கூட ஆறுமுதல்  செத்துப் போன பிள்ளையை அள்ளிக் குழியில் வைக்கக் குடுத்துப் போட்டுத் துவண்டு  கிடந்த தாயை மயக்கத்தில் புணர்ந்த கொடூரனோடு தான் நான் வாழ்ந்தேண்டி. அப்போதெல்லாம் இவையளும் இந்த ரெலிபோனும் எங்கே போயிருந்தது சொல் "

அப்போது அவள் கதறியது போல் பிள்ளை இறந்த போது கூடக் கதறவில்லை. எப்போதும் எல்லாவற்றையும் நேசிக்கத்தெரிந்த அவளது வாயிலிருந்து வந்த முதல் வசவு வார்த்தை

" குடுத்துப் பார்க்கச் சொல்லு. ஒவ்வொருவரையும் பெத்தெடுத்துக் குடுத்துப் பார்க்கச் சொல்லு செத்தபிணம் எப்படி உலவுது என்ற எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்"

என்று சொல்லிச் சொல்லிக் கதறியது, தாங்க முடியாமல் அடங்கிக் கிடந்த வேதனையா? அல்லது மன அழுத்தத்தின் பீறிட்ட வெடிப்பா எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் தெரியும், தூண்டி விட்டதும் , துடிக்க வைத்ததும் அந்த வார்த்தைகள். இழப்பை விட அதிக ஆழமாய் மனதில் செருகிய ஈட்டியாய்  அவளை கிழித்துப் போட்டவை அந்த வார்த்தைகள்!

அவள் வாழ்க்கை முழுவதும் சோகங்களால் சூழப்பட்டிருந்தது  அவளுக்கு நெருக்கமானவர்களுக்குத் தெரிந்தே இருந்தது.இருந்தும் எப்போதும் எவரின் ஆறுதலையும் அனுதாபத்தையும் வேண்டாத அவளை உடைத்தது அந்த ஒற்றை வார்த்தைக் கோர்வை.. "பிள்ளை செத்த எக்ஸ்பீரியன்ஸ் உனக்குத் தானே இருக்கு"


அதன் பின் காலங்களின் பின் மனம் விட்டு அவளுடன் கதைக்கக் கிடைத்தது. அவளது அந்த உறவுகள் பற்றி விசாரித்த போது.

"அந்த தொலைபேசி அழைப்புடன் அந்த  உறவு இறந்து போனது அது பற்றி இனிப் பேசாதே " என்றாள்.

அவளது முகத்திலும் வார்த்தையிலும் இருந்த வெறுமையும் வெறுப்பும் இனி தொடராது என்பதைத் தீர்மானமாகச் சொல்லியது.

மனிதர்களை நெருங்க விரும்பாமலும், அந்நிய மண்ணில் அதன் ஆதரவற்ற தனிமையில்  அதிக மன அழுத்தமும்அதிலும்  அதிக மாத்திரைக்களுமாய் அவள் அழிந்து கொண்டிருப்பது தெரிந்தது. அந்நிலையிலும்  அவள் தான் நேசித்த எவரையும் நெருங்க விரும்பாததும் தெரிந்தது.

"நான் இன்னும் மனிதர்களை , பூமிக்குப் புதிதாக வரும் பிஞ்சுகளை எல்லாம் நேசிக்கிறேன். இவர்களை நெருங்கினால் சாபம் போடும் கீழான நிலைக்கு என்னை ஆளாக்கி விடுவார்களோ  என்று பயமாக உள்ளது. நான் நானாகவே மிகுதிக் காலத்தைக் கழித்து விட்டு போகிறேன்"

என அவள் சொன்ன போது கூட வாழ்க்கையை எதிர்பார்ப்புக்களோடும் நம்பிக்கைகளோடும்  சுவாரசியமாக வாழும் வயது தான் அவளுக்கு  .

"குழந்தையை விட முக்கியமான உறவு ஒரு தாய்க்கு வேறில்லை. இந்தப் பூமியை நிராகரித்த குழந்தைக்கும் சேர்த்து  நான் ஒரு தாயாக  மட்டுமே இருந்து விட்டுப் போகிறேன் ...." தீர்மானமாக அறுத்திருந்தாள் ஒரு நெருங்கிய இரத்த பந்தத்தை.


ஒற்றை வார்த்தை போதும் ஒரு  உறவறுக்க , உயிர் கொல்ல, உணர்வற்ற உடலமாக்கி உலவ விட. ஒவ்வொருவருக்கும்அந்தவார்த்தைவாழ்க்கையின்எதோஒருமூலைக்குள்ஒளிந்துகொண்டேதான்இருக்கிறது. 

Wednesday, December 13, 2017

எல்லைக்கற்களில் காத்திருக்கலாம்.....

.
"பிள்ளையள் வேண்டாம் என்று சொன்னாலும் பரவாயில்லை நாங்கள் பொறுப்பா எல்லைகளை வடிவா அளந்து நல்ல பலப்பா இடைக்கதியால் நட்டுக் குறுக்கு வேலி போட்டு முள்ளுக்கம்பி அடிச்சுக் குடுத்திட வேணும் என்னப்பா நான் சொல்லுறது " தாத்தா கேட்டார்.

"பின்னே செய்யாமல் ? தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேற வேற தானப்பா. எல்லாம் முறைப்படி அளந்து பிரிச்சு குடுத்திட வேணும்" பாட்டி.

. "பிற்காலத்தில அதால இதால எண்டு பிரச்சனை வந்து எல்லாம் முட்டிக் கொண்டு பிரிஞ்சு போகாமல் இருக்கவேணும் எண்டால் எல்லாத்திலும் அவதானமாக தான் இருக்க வேணும்." தாத்தா

"நாங்கள் இல்லாத காலத்திலயும் இந்த கூடு கலையாமல் என்ர குஞ்சுகள் எல்லாம் சேர்ந்திருந்து  பெருகி வாழவேணு ம்" பாட்டி கண்ணை சீலைத்தலைப்பில் துடைச்சுக் கொண்டா.

எப்பவும் இப்படித்தான்  பாட்டியின் கதைக்கு தாத்தாவும், தாத்தாவின் கதைக்கு பாட்டியும் நல்ல சோக்கா தலையாட்டுவீனம் தஞ்சாவூர் பொம்மையிலும் அழகா.

"நான் ஒன்ன நெனைச்சேன். நீ என்னை நினைச்சே தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு செல்லம்மா என்னம்மா சொல்லம்மா  " என்று தாத்தாவும் ,

"மாடுமனை எல்லாம் உண்டு என்னோடு என் நெஞ்சை மட்டும் போகவிட்டேன் உன்னோடு. உன்னைத் தொட்டு நான் வாறேன்  செல்லையா என்னையா சொல்லையா " என்று பாட்டியும்

இடையில ஒருவரும் கோடு கிழிக்க விடாமல் ரெண்டுபேருமா சேர்ந்து காதலின்ர ஒற்றைக்காலில் நிண்டு கலியாணம் கட்டினவை வேற எப்பிடி இருப்பினம்?



அவையள் எல்லை பற்றிக் கதைத்துக் கொண்டிருக்க எப்பவும் போல நான் தாத்தாவின் எட்டுமுழ வெள்ளை வெட்டி கட்டின  மடிக்குள்ள குடங்கிக்கொண்டு,  கழுத்தைச் சுற்றி எப்பவும் போர்த்தியிருக்கிற சாலைவையை  இழுத்து அதால என்னையும் சேர்த்துப் போர்த்துக்கொண்டு, சால்வையில் இருந்து வரும் தாத்தாவின் பாசம் கிறங்கும் வாசத்தை அனுபவித்துக் கொண்டு, இடைக்கிடை தலையை வளைத்து சொரசொரக்கிற அவரிட மூன்று நாள் வெள்ளைத் தாடி  முகத்தில கொஞ்சிக்கொண்டு,  அதுக்குப் பதிலா அவர் உச்சியை வருடி நெத்தியில தார முத்தத்தை  எனக்கே மட்டுமான பொக்கிசம் என்ற மதர்ப்பில பெற்றுக் கொண்டு, அவை கதைச்சது  என்னவென்று சரியாகப் புரியாமல்  அலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தேன்.

பாட்டி கண்ணை துடைச்சதால எதோ கவலையான விடயம் தான் கதைக்கினம்  போல என்று  நினைச்சு எனக்கும் அழுகை வந்தது.


அதுக்குப் பிறகு ஒரு நாள், சித்தி உடுப்புத் தைக்க  துணி வெட்டேக்க அளக்கிற ரேப் மாதிரி ஆனால் அதைவிடப் பெரிசா ஒரு ரோலில சுத்தினமாதிரியான பொருள் எல்லாம் கொண்டு ரெண்டு பேர் வந்திச்சினம்  எங்கட காணி எல்லாம் திரிஞ்சு திரிஞ்சு எதோ அளந்து  எழுதிச்சீனம். பெரிய பூவரசைத் தறிச்சு  நல்ல மொத்தக் கட்டையை  முன்னால பென்சில் சீவிறது போல சீவி அவியல் காட்டின இடத்தில எல்லாம் தாத்தா நல்ல ஆழமா இறுகினார்.  பிறகு அதில சீமெந்து தூண் வைச்சு இருக்க வேணும் என்று அவர்களோடும் பாட்டியோடும் கதைச்சார்.

அவர்கள் எல்லைகள் பிரிச்சு விட்டிட்டு போனதுக்குப் பிறகு சித்திக்குக் கல்யாணம்  எண்டு  வீட்டுக்குள்ள ஒரே சந்தோஷ ஆரவாரம் வந்தது. சொந்தம் அயல் எண்டு எல்லாரும் அடிக்கடி வந்து போகத் தொடங்கிச்சினம்.

எப்பவாவது இடிக்கவாற செல்லமாச்சி  எந்தநாளும் வந்து அரிசி இடிச்சு  மாவறுத்து  புதிசா இறுக்கமா பின்னின பெரிய கடகம் பெட்டிகளில போட்டுப் போட்டு மூடி வைச்சா, விடிய வெள்ளன வந்து வெயில் ஏறுறதுக்குள்ள செத்தல் மிளகாய் சரக்குச்சாமான் வறுத்து அறவிட்டிட்டு பொழுதுபட்டு வெயில் அடங்கினப்பிறகு தூள் இடிச்சு அரிச்சு பெரிய பெரிய பழைய ஐஞ்சு கிலோ ஹோர்லிக்ஸ் போத்தலுகளில போட்டு மூடி வைச்சா.  பயறும உளுந்து  வறுத்து குத்தி வைச்சா. கொத்தமல்லியும் வேர்க்கொம்பும்  அதிமதுரமும்  போட்டு  மணக்க மணக்க கோப்பி  இடிச்சு ஆறவிட்டு  போத்திலுகளில நிறைச்சு வைச்சா.

எந்த நேரமும் ஆக்கள் வரப் போக பசுப்பால் காச்சி கோப்பி போட வாய்க்காதெண்ட படியால், எப்பவாவது  பாயாசம் காச்சும் போது மட்டும் வாங்கிற ஒரு பேணி டின்பாலை  இப்ப அளவு கணக்கில்லாமல் வாங்கிக் குவிச்சினம்.  வாங்கின எல்லாப் பொருளுக்குள்ளும் எனக்கு அதிக சந்தோசம் டின்பால் வாங்கினது தான்.  அடிக்கடி குசினிக்குள்ள  ஓடிப்போய் அதை உள்ளங்கையில  ஊத்தி நுனிநாக்கில ஒத்தி ஒத்தி ரசிச்சு ரசிச்சு சுவைச்சுக் கொண்டு திரியும் போது தான்  பார்த்தன்  வந்திருந்த ஆக்கள் தவிர எங்கட வீட்டுக் காரரிடம் சந்தோசமும், வழமையா எங்கட வீட்டில இருக்கிற கலகலப்பும் இல்லை மாதிரி தெரிஞ்சுது. வெளியால கேக்காத மாதிரி வீட்டின்ர பெரியாக்கள் ஏதோ குசு குசு என்று கதைச்சுக் கொண்டிருந்தினம்.

"பேசுக்குள்ள இவ்வளவு எண்டு தெளிவா சொன்னனீங்க  தானே" அம்மா

"ஓம். எல்லாம் சொன்னது தான் .  அப்ப ஓமோமெண்டு மண்டையை மண்டையை ஆட்டிப் போட்டு இப்ப இன்னும் கொஞ்சம் அதிகமா வேணுமாம். அந்த தோடைமரம் தங்கட பக்கமா வார மாதிரி பார்த்து எல்லையை போடட்டாம்" எண்டா அம்மம்மா ஒரு மாதிரிக் குரலில்.

அப்பத்தான் அம்மா சொன்னா "கேட்டதை குடுத்து முடிச்சு வையுங்கோ" எண்டு.

"அது உனக்குத் தந்தது பெரியபிள்ளை.  இந்தக் குழந்தைக்குச் சேரவேண்டியது"  எண்டு குசினிக்குள்ள டின்பால் ஊத்தி நக்கப் போன என்னை இழுத்து தூக்கி அணைச்சுக் கொண்டு  தாத்தா சொன்னார்.

"அது பரவாயில்லை  முற்றாகின கலியாணம் ஒரு காணித் துண்டால  குழம்ப வேண்டாம் அவளாவது வாழட்டும்."  அம்மா திடமா சொன்னா.

"அது இந்தப் பாலனைச் சேரவேண்டியது  நாளைக்கு அதுக்கொரு நல்லது கெட்டது வரும் போது என்ன செய்யிறது"  பாட்டி.

"அதுக்கு அப்பிடி ஒன்று வாறதுக்கு இன்னும் எத்தினை காலம் கிடக்கு.  இப்ப எதுக்கு அதைப்பற்றி யோசிக்கிறியள்.  இப்ப எது நடக்க வேணுமோ அதை இப்ப பாருங்கோ.  பிறகு நடக்க வேண்டியதை பிறகு பார்ப்பம்" அம்மா

"பிறகு பிள்ளையின்ர காலத்தில....."  பாட்டி இழுத்தார்

"பிள்ளையின்ர காலத்தில  என்ர  சகோதரங்கள்  என்ன ஒதுக்கி ஒண்டுமில்லாமலே  விடப் போகுதுகள்.  என்ற பிள்ளை கெட்டிக்காரி. தைரியமானவள். தகப்பனை போல துணிவா வளர்ப்பன்  தனக்கு  எது தேவையோ  அதை அவளே தேடிக் கொள்ளுவாள்.  எனக்குப் பிறகு அவளை அணைக்கவும் அன்புகாட்டவும் என்ர  சகோதரங்கள் இருந்தால் போதும் எனக்கு..  நீங்கள் ஓமெண்டு சொல்லி கல்யாண மிச்ச அலுவலை பாருங்கோ   நான் சைன் வைச்சுத் தாறன்"  அம்மா திடமா சொன்னா.

தாத்தாக்கு  கோபம் வந்தால் மற்ற ஆம்பிளைகளை போல கத்த மாட்டார்.  ஆனால் கதைக்காமலே இருந்து உயிரெடுப்பார்.  அப்பவும்  ஒண்டும் கதைக்காமல்  தான் என்னை தூக்கிக் கொண்டு வெளியில வந்தார். அதுக்குள்ளே  நான் எட்டி குசினித் தட்டில இருந்து இன்னொருக்கா உள்ளங்கையில  டின்பால்  ஊத்திக்கொண்டு நுனிநாக்கில நக்கினன். "என்ர கண்ணம்மா வளர்ந்து ஒருவழியில போறவரைக்கும் நான் இருந்திட  வேணும் ஆண்டவரே" என்று தனக்குக் கேக்கிற மாதிரி முனகினார் அது எனக்கும் கேட்டது. ஆனால்  ஆண்டவருக்கு கேட்கவில்லை.

கல்யாணத்துக்கு  முதல் திரும்பவும் காணி அளக்கிற ஆக்கள் வந்து திரும்பவும் எல்லை குத்தி   வேலிகள் அடைத்து சித்திக்கு கல்யாணம் சந்தோசமா நடந்தது. அதால அவ்வளவு  நாளா  எல்லைகள் என்ற சொல் க்ளதைக்கிற நேரமெல்லாம் வீட்டில ஏதோ ஒரு இறுக்கம் இருந்த மாதிரி இருக்க, அதைக்கண்டு எங்கட சந்தோசம் ஏதோ துலையப் போகுதோ எண்டு பயந்த மாதிரி இல்லாமல், எல்லைகள் என்பது   அர்த்தமில்லாதது மாதிரி அழவேண்டிய பயமில்லாதது மாதிரி இருக்க பிறகு நான் அதை சந்தோசமா மறந்து போனேன்.


அம்மாவின் சகோதரங்களுக்கு  அப்போது நான் தான் முதல் குழந்தை. கல்யாணத்திலும் சித்தியை விட்டு பிரியாமல் மணவறையில் இருந்த சித்திக்கும் சித்தப்பாவுக்கும் நடுவில் காலடியில் நானும் இருந்தேன். ஓமகுண்டப் புகை எல்லாம் முகத்தில வாங்கி வெந்து கொண்டு . சித்தப்பா தூக்கிக் கொண்டார். பிறகு கொஞ்ச நாளையில எங்கள் குடும்பம் அவருக்கு பழக்கத்துக்கு வர இடையில கிடந்த எல்லை வேலியையும் வெட்டிப் போட்டார். ஒருவேளை கலியாணத்தின் போது ஒற்றைக்காலில் நின்று ஒப்புக்கொண்டதை விட அதிகமாகக் கேட்ட குற்றவுணர்வாகவும்  அதை அந்த வேலியும்  எல்லையும் ஞாபகப் படுத்திக் கொண்டும் இருந்திருக்கலாம்.

  பிறகு சித்தி காணி பிரித்து எல்லை போட்டுக் கொடுத்த போதுஅவர்கள் பக்கத்தில் புதிதாகப்  போட்டிருந்த கேட்டையும் இழுத்து கட்டிப் போட்டா. எப்பவும் போல் ஒரே பாதை ஒரே வாசல்  என்று பிரிவினை தெரியாமல் இருந்தது வாழ்க்கை.



சித்தப்பா வரும் போது அவராகக் கேட்டாரோ, அன்றி அநேகமான எம்மவர் கல்யாணங்களைப் போல அவருக்காக மற்றவர்கள்  அதகடியாகக் கேட்டார்களோ தெரியாது.  ஆனால் ஒரு திருமணத்தின் ஆரம்பத்தில் பேதங்களையும் பிரிவினைகளையும் அடிமனதுக்குள் நிரந்தரமாகத்  தோற்றுவிப்பதில் இந்த அதகடித் தனங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

இருந்த போதும் சித்தப்பா   பேதங்கள் தெரியாத பாசமான மனிதன்.  நிறைய பழமைகளை கொண்ட புதுமைக்குள் வர விரும்பாத பழமைவாதி , மாசிப்பனி மூசி மூசி பெய்து கொண்டிருக்க விடிய வெள்ளன எழும்பி கிணத்தில மொண்டு மொண்டு குளிர்  தண்ணிய  தலையில  ஊத்திப் போட்டு நெத்தி நிறைய விபூதியை அப்பிக்கொண்டு வாசலில போய் கிழக்கே பார்த்து காத்திருந்து சூரிய உதயத்தை கும்பிடுவார்.

பிறகு  கையோட வந்து, அவர்களுக்கு கல்யாணம் நடந்து முடிஞ்சு அந்த கொஞ்சக் காலத்தில இன்னும் ஒரு பசுவும் பசுக்கன்று போடாததால பாட்டி தாத்தா இன்னும் அவையளுக்கு வாசலில் கட்ட பசுக்கன்று குடுகாததால, எங்கட வீட்டு முற்றத்தில கட்டி நிக்கிற ராசாத்தி பசுவுக்கு ஒரு கைப்பிடி சீமைக்கிளுவை உருவி ஊட்டி "என்னடி ராசாத்தி " என்று கேட்டு கழுத்தை தடவி, பிறகு அப்பத்தான் நித்திரையால் எழும்பி முத்தத்தில நிண்டு எத்தினை பூ புதிசா விரிஞ்சிருக்கு எண்டு எண்ணிக் கொண்டிருக்கிற  என்னையும் தூக்கிக் கொண்டு போய் சித்தியிட்ட தேத்தண்ணி வாங்கிக் குடிக்கேக்க மறக்காமல் நச் என்று தும்முவார்.

அடுப்பில சட முட என்று வெடிக்கிற பனம் பன்னாடையை விட சித்தியின் முகத்தில் அதிகமா வெடிக்கும் அந்த தும்மலுக்கு .
அது போதாமல், தான் குடிக்குமுன் அந்த தேத்தண்ணியை எனக்கு பருக்க " புள்ள இன்னும் பல்லும் தீட்டயில்ல அவளுக்கு உந்த வெறுந்தேத்தண்ணியை குடுக்காதேங்கோ விடிய வெறும் வயிறு சுட்டுப்போடும் குழந்தைக்கு . அக்கா பால் தவிர அவளுக்கு ஒண்டும் குடுக்கிறதில்லை . கண்டா கத்துவா" சித்தி சொல்லிக் கொண்டே இருப்பா சித்தப்பா பருக்கிக் கொண்டு இருப்பார்.


அம்மா எல்லா அம்மாவும் போல அன்பானவ, ஆனால் படிப்பு பழக்கவழக்கம் என்று வரும் போது நிறைய கண்டிப்பானவ எல்லா அம்மாவும் போல . காணியின் முன் பக்கம் உள்ள எங்கட வீட்டில இருந்து "புத்தகத்தை எடு" என்றுஅம்மா சொன்னால் போதும் , காணியின் முடிவுப்பகுதியில் இருந்த சித்திவீட்டுக்குள் இருக்கும் சித்தப்பாவின் ஊசிக்காதில் சுரீர் என்று ஏறி அதை விட கோபம் இன்னும் சுரீர் என்று ஏறி

"இந்தக் குழந்தைக்கு எதுக்கு இப்ப படிப்பு . அவள் படிச்சு உழைச்சு தான் இஞ்ச விடிய வேணுமா ? கொக்கா குழந்தையை கொல்லப்போறா பாரு " என்று சித்தியுடன் கத்தி விட்டு வீர நடை நடந்து வந்து என்னை காப்பாற்றித் தூக்கிப் போய் விடுவார்.

"உன்ர  மனிசன் கடைசியா புள்ளையைவெறும் மொக்காக்கி பழைய பஞ்சாங்கமா நாசமாக்கப்போகுது பார் . உன்ர மனிசன் இரவில வேலையால வந்த பிறகு பிள்ளையை படிப்பிக்க பேச அடிக்க வெருட்ட எதுவும் ஏலாது" என்று சித்தியிட்ட புறு புறுத்து புறுத்து அம்மா அது எல்லாத்தையும் பகலில் தான் செய்வா.

வடிய வடிய தலையில் நல்லெண்ணெய் ஊற்றி படிய வாரி விடும் வழக்கம்  அம்மாவுக்கில்லை . கிழமையில் ஒரு நாள் பாட்டி தான் சட்டியில சீரகம் எல்லாம் போட்டு, நல்லெண்ணெய் விட்டு அதை கொதிக்க வைத்து தடியோட ஓடி என்னைத்  துரத்தி பிடிச்சு கொதிக்க கொதிக்க தலையில் ஊத்தி " ஆண்டவரே இந்தப்பிள்ளைக்கு ஏன் இவ்வளவு கத்தை முடியை கொடுத்தாய் எண்ணெய் வைக்க சிக்குத்தட்ட என்று இவளை துரத்தி பிடிக்கவே பிராணன் போகுதே " என்று அதுக்கும் கடவுளை பேசிக்கொண்டு எண்ணெய் பூசி சீயக்காய் வெந்தயம் அவிச்சு அரைச்சு முழுக வாப்பா.

அம்மா எப்பவும் கிங் கோகனட் ஒயில் மட்டும் தலைமுடியின் வேர்ப்பகுதியில் போட்டு மசாஜ் பண்ணி , எக் ஷாம்பூ போட்டு நோகாமல் நுரைக்கத்தடவி முழுக வார்ப்பா. பாட்டியிடம் பேச்சு வாங்கிக் கொண்டே. முழுகிப்போட்டு வர ஷம்போவும் சண்டில்வூட் சோப் உம் ஓடிக்கோலனும் கலந்து வாற கதம்ப வாசத்தில எனக்கே என்னை முத்தமிட வேணும் மாதிரி இருக்கும்.

சித்தப்பா மட்டும் " உந்த கொழும்பு வளர்ப்பை கொக்கா எப்ப விடப்போறா. கண்டதெல்லாம் போட்டு பாலனின்ர ஆரோக்கியம் கெட்டுப் போச்சு " என்று சித்திக்கு அரிச்சனை செய்து கொண்டிருப்பார்.


சித்தப்பாவுக்கு அவர்கள் செய்தது எல்லாமே மிக மிக தப்பாக தெரிய, உச்சியில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் நல்லெண்ணையில் ஊறவைத்து , போதாக்குறைக்கு அதை கண்ணிலும் விட்டு கொடுமைபடுத்தி , நாள் முழுதும் அந்த எண்ணெய் உடம்பில் ஊறவிட்டு பிறகு வீட்டுக் கிணத்திலும் குளிக்க வார்க்காமல் தோளில தூக்கிக் கொண்டு தோட்டத்துக்கு போய் உச்சி தொட்டு பாதம் வரைக்கும் அரப்பு எலுமிச்சை போட்டு வைரம் பாஞ்ச தன்ர கையாலபோட்டு தேய்க்கேகுள்ளேயே என்ர கைகால் எல்லாம் பாதி கழண்டு தொஞ்சு தன் பாட்டில சோர்ந்து ஆடத் தொடங்கிடும்.

பிறகு மோட்டரை போட்டு குழாயால சீறிக்கொண்டு வாற வேகத்தண்ணியில நான் குழறக் குழற கிட்ட வைத்து முகத்தை பிடிச்சிருப்பார். அவர் குளிச்சு முடிச்சு வர முன்னமே நான் அங்கு கிடக்கும் ஏதாவதில் ஒன்றில் சுருண்டு நித்திரையாகி இருப்பேன். தூளில தூக்கிக் கொண்டு வந்து நித்திரையால எழுப்பி பிரக்கடிக்க பிரக்கடிக்க காரமா மிளகு ரசம் பருக்கி படுக்க வைப்பார்.



சிறுவயதில் நான் அதிகம் நடக்க கூட சித்தப்பா விட்டதில்லை . அனேகமா என்னை தோளில் தூ க்கிக் கொண்டு தான் திரிந்தார். நான் ஒரே முறை மட்டும் போன பத்தினிப்பாய் கண்ணகை அம்மன் கோவில் இப்போதும் நினைவிருக்கு. இப்ப எப்படி இருக்கோ தெரியாது . அப்ப பிரதான வீதிவரை தான் பஸ் ஓடினது.

வீதியில் இருந்து மண் அல்லது காட்டுப் பாதையால் நிறைய நடக்க வேண்டி இருந்த ஞாபகம். நடந்தால் கால் வலிக்கும் ,சுடுமண் காலில் பட்டு பொக்களித்து விடும் என்று அத்தனை தூரத்தையும் தோளில் தூக்கி தான் நடந்தார். அங்கே போய் யாரோ ஒரு பெண்ணுக்கு சாமிவந்து உருவாடினத்தை முதல் முதல் பார்த்து நான் பயந்து கத்தினத்தில் அவர் பிறகு தானும் அங்கு போகவில்லை.

பிறகு நான் வளர்ந்து கேக்க இப்ப எல்லாம் நாட்டுப்பிரச்சனையில போக முடியாது கொஞ்சம் குறைய கூட்டிப் போவதாக சொன்னார் . நாட்டுப்பிரச்சனை குறைந்த போது நான் நாட்டில் இல்லை. நான் தாய் நாட்டை பிரிந்த அன்று அவர் உலகை விட்டுப் பிரிந்திருந்தார்.



அந்த அந்த நாட்களில் வேலையால் இரவு வரும் போது எப்பவும் கடையில் ஏதாவது எனக்கு வாங்கி வருவார் எங்கள் வீட்டை தாண்டும் போது நின்று என்னிடம் அதை தந்து விட்டு தான் போவார்.

சித்தப்பா கலியாணம் கட்டி வரும் வரை கடைப்பணியாரம் எதுவும் சாப்பிடக் கூடாது என்று எதுவும் வாங்கித் தருவதில்லை. சித்தப்பா தந்ததை நான் சாப்பிட அம்மாவுக்கும் பாட்டிக்கும் கண்களில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்

. ஆனால் வாய்திறக்க மாட்டார்கள் திறந்தால் சித்தியின் அமைதி கெட்டு விட்டாலும் என்ற பயம்.குடும்பத்தில் உள்ளவர்களுக்காக  இந்தஅமைதிகெட்டுவிடும்பயத்தை தான் ஊட்டி ஊட்டிபேசவேண்டியநேரங்கள்,தனக்கானஉரிமைகளுக்காகப் போராட வேண்டிய நேரங்கள் எல்லாவற்றிலுமே அமைதி காக்கவைத்து இறுதியில் கேள்விகளே வாழ்க்கையாகிப் போகவைப்பதில், பதில் தெரிந்தும் இறக்கும் வரை  மௌனமாகவே பழியேற்று  மறுகிச் சாவதற்கும் எங்கள் சமுதாயங்கள் குடும்பங்கள் போல வேறெங்கும் உதாரணங்கள் இருப்பதாக நான் எண்ணவில்லை. 


அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்த போது என் தம்பி என்று சொல்லித் தந்தார்கள். எனக்குப் பிடித்த பெயரையே வைக்கச் சொன்னார்கள். நான் என்னோடு கூட நேசரியில் அப்போது படித்துக் கொண்டிருந்த என் முதல்  நண்பனின் பெயரை வைத்தேன்.

அடுத்தடுத்த குழந்தைகள் பிறந்த போது அந்தப் பெயருடன் பொருந்த பெயர் வைத்து என் தம்பி என் தங்கை என்று சொல்லித்தந்தார்கள். நாங்கள் சேர்ந்து வளரத் தொடங்கினோம் .



தங்களுக்கு குழந்தைகள் வந்த பிறகும் என்னை படிக்க யாராவது வெருட்டினால் கூட சித்தப்பாவுக்கு பிடிக்காது. என்னை விட்டு சாப்பிட சித்திக்கு பிடிக்காது. என்னை விட்டு இருக்க என் தம்பி தங்கைமாருக்கு தெரியாது. அப்பவும் சித்தப்பா இரவு வேலையால் வரும்போது கடை முறுக்கு வாய்ப்பன் வடை என்று வாங்கிக் கொண்டு தான் வருவார். எங்கள் விறாந்தை வாசலில் நின்று படித்துக் கொண்டிருக்கும் என்னை கூப்பிட்டு அதைத் தந்து " பிரிச்சு தம்பி தங்கச்சிக்கும் குடுத்து சாப்பிடு " என்பார். அவரது செயல்களை அதிகம் அனுபவித்தது அவர் பெற்ற பிள்ளைகளை விட நான் தான். பின்நாட்களில் போர் அவலங்கள் என்று வந்ததில் அந்த வாய்ப்புக்கள் அதிகம் அவர்களுக்கு இருக்கவும் இல்லை சித்தப்பாவின் இந்த முகம் அவர்களுக்கு அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பும் இல்லை.


இரவு வேலையால் வந்து குளித்து சாப்பிட்டு படுக்கும் போது சித்தப்பா குடிப்பார். எங்கள் குடும்பத்தில், குடி உள் நுழைந்த முதல் சந்தர்ப்பம் என்பதால் நிறைய வீட்டில் முகச்சுளிப்பு இருந்தது. பத்தாக்குறைக்கு குடித்து விட்டு உளறத் தொடங்கினால் அது இன்னும் முகச்சுளிப்பும் முணு முணுப்புமாக மாறும். சித்தி வானமே கவிண்டு தலையில விழுந்த மாதிரி எங்கட விறாந்தையில வந்து இருந்திடுவா.

சித்தப்பா எப்போதும் நான் எது சொன்னாலும் கேட்பார். குடியிலும் உளறலிலும் கூட . நான் போய்" போதும் வாயை மூடிக் கொண்டு படுங்க சித்தப்பா" என்றால் அடுத்ததா ஒரு வார்த்தையும் சொல்ல மாட்டார் படுத்து விடுவார்.

குடிக்காத நாட்களில் இரவு நிலவு வெளிச்சத்தில் வைத்து கதைகள் சொல்லுவார் . அது இந்த உளறலை விட கொடுமையாக இருந்ததாக இப்ப நினைச்சால் தோன்றுகிறது. உள்ள புராணம் இதிகாசம் எல்லாவற்றையும் தன் விருப்பத்துக்கு கற்பனை கலந்து நல்லா கதை விடுவார். நானும் லூஸ் மாதிரி கண்ணை விரிச்சு கேட்டுக் கொண்டிருப்பன் . காண்டாமிருகம் எங்கள் வீடளவு என்பார் பிரமிப்பா இருக்கும் , அதை விட இன்னும் ஏராளம் பிரமிப்புக்களில் சித்தப்பா ஹீரோவா தெரிவார்.

பிறகு நான் அம்மாவுக்கு அந்த கதையை நான் வந்து  சொல்ல அம்மா தலை தலை எண்டு அடிச்சுக் கொண்டு அந்தக் கதையை சரியா சொல்லித்தருவா. ஆனால் நான் ஏற்கவே மாட்டேன். ஏனென்றால் உண்மைகள் எப்போதும் சுவாரசியமும் பிரமிப்பும் ஏற்படுத்துவதில்லையே.


நான் வளர்ந்தேன். என் கையை பற்றிக்கொண்டு தம்பி தங்கை முதல் அடி எடுத்து நடக்க பழகி வளர்ந்தார்கள். என் கைபிடித்து பள்ளிக்கும் போனார்கள் . நான் பழக்க சைக்கிள் பழகினார்கள் . பின் வளர்ந்து அதில் என்னை இருத்து வைத்து ஓடினார்கள் .

எங்களோடு போரும் வளர்ந்தது . சிதைத்தது சிதறி ஓடினோம் . ஒரு முறை இரவு அகோர ஷெல் தாக்குதலால் வீட்டை விட்டு ஓடி ஒரு கோவிலில் தங்கிவிட்டு அதிகாலை வீட்டுக்கு வரும் போது வீட்டுக்குள் ஆமி காத்திருந்து. பிடித்து சுடாமல் ஹவுஸ் அரஸ்ட் மாதிரி இருத்தி வைத்தார்கள் .

எங்கட வீட்டு வைக்கோற் போருக்குப் பின்னால் மறைந்திருந்து எங்கட வீடு தாண்டும் ஒவ்வொரு மனிதர்களையும் கவ்விப் பிடித்து எங்களுடன் கூட துப்பாக்கி முனையில் இருத்தி வைத்துக் கொண்டு புலிவரும் என்று காத்திருந்தார்கள்.



அன்று தம்பி ஒருவன் வேறு கோவிலில் இரவை கழித்து விட்டு, விடிய வீட்டுப்பக்கம் ஆமி என்று அறிந்து எங்களுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்ற பயத்தில்  துடித்துக்கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தான். அவனை பிடித்து விடுவாங்களோ சுட்டு விடுவாங்களோ என்ற பயத்தில் ஆமியின் ஆயுத எச்சரிக்கையையும் மீறி வாசலுக்கு ஓடிக் கொண்டே

"ஆமி இருக்கு நீ வராதேடா " என்று நான் கத்தினேன் அவன் நிக்காமல் ஓடி வந்து கொண்டே இருந்தான். அந்த நேரம் எனக்கு தம்பி உள்ளே வரக்கூடாது இவர்களிடம் மாட்டுப்படக் கூடாது என்பது தவிர உயிர் பற்றி ஆயுதம் பற்றி எதுவும் தெரியவில்லை . இருத்திவைத்த இடத்தில் இருந்து கேற் கடந்து தம்பியை நோக்கி நான் ஓட அவன் என்னை நோக்கி ஓடி வர அம்மா சித்தி மற்ற அங்க இருந்த எல்லாரும் பயந்து பதறி குழற நானும் தம்பியும் வாசலில் ஒருவரை ஒருவர் இறுக்கி கட்டிப்பிடிச்சுக் கொண்டு தான் என்ன ஆபத்தின் நுனியில் நிக்கிறோம் என்று உணர்ந்தோம்.

அன்று ஆமி சுடவில்லை காக்கிக்குள்ளும் ஈரம் இருந்திருக்கலாம் . உள்ளே இருந்து வந்தான் வெருண்டு போய் முகத்தை பார்த்தேன் அந்த நேரம் வீட்டில் நின்ற எல்லா ராணுவத்துக்கும் முகம் சோர்ந்து பரிதாபமாகத்தான் பார்த்தார்கள் போய் இருக்க சொல்லி சைகை காட்டினார்கள்.


இப்படி பல அனுபவங்களோடு உறவும் உரிமையும் உயிரை துச்சமென்று நினைக்க வைக்க நாங்கள் வளர்ந்து பின் உலகெல்லாம் சிதறி உள்ளத்தால் பிரியாமல் வாழ்ந்தோம். இடையில் நான் இங்கு வந்த பின் என் தம்பிமார் இக்கட்டான சூழ்நிலைகளை நிறைய சந்தித்தார்கள். அம்மா என்னை மறந்து விட்டு அவர்களை மீட்க அலைந்து கொண்டிருந்தா. நான் கடவுளை நம்பிக்கொண்டு விரதத்தை பிடித்துக் கொண்டு கிட்ட இந்துக் கோவில் இல்லாத காரணத்தால் மேரியம்மாவிடம் போய் மாரியம்மா தாயே என்று வரம் கேட்டுக் கொண்டிருந்தேன்.


பணம் இருந்தால் வெளிநாடுகளுக்கு வருவது மிகப் பெரிய பிரச்சனை கிடையாது. ஆனால் இங்கு நிராகரிப்பே இல்லாமல் அகதி அங்கீகாரம் கிடைக்க உண்மை ஆதாரங்கள் தேவை. அதை வைத்திருப்பவர்கள் அதை அத்தனை சோதனைச்சாவடிகளையும் தாண்டி கொண்டு வருவது உயிரைப் பணயம் வைத்த சிரமம் . நேகமாக இந்த மோட்டுத் துணிச்சல் எனக்கு எப்போதாவது இக்கட்டில் வருவதுண்டு. அப்படித்தான் அவனின் அத்தனை ஆவணங்களையும் ஒவ்வொரு சோதனைச்சாவடியிலும் உயிரை கையில் பிடித்து இங்கு கொண்டுவந்தேன் . அதனால் நிறையப்பேரிடம் அவர்களின் உயிரைப்பணயம் வைத்தது போல வாங்கிக் கட்டிக் கொண்டேன் எப்போதும். அப்போதும் நான் அவன் என் தம்பி என்னால் அவர்களை இழக்க முடியாது என்றேன் விட்டுக் கொடாமல் .



பின் கல்யாணம் என்று என் தங்கை வந்தாள். ஊரில் எல்லாவற்றையும் முற்றாக்கி விட்டு மிகுதியை இங்கு நீ கதைத்து முடி என்றார்கள். எல்லாம் ஒரு முடிவுவரை சந்தோசமாகவே நிறைவுக்கு வரும் வேளையில் எதோ கனவில் இருந்து முழிச்ச மாதிரி ஒரு கொடுமை அப்ப தான் எழும்பி நின்று " நான் இருக்க இவளுக்கு என்ன உரிமை " என்று ஜிங்கு ஜிங்கு என்று உரு வந்த மாதிரி ஆட,

சித்திப்பா  கலியாணம் கட்டி வரும் போது பேசிய காணியை விட கூடக் கேட்டு  அம்மா எழுதிக் கொடுக்க நேர்ந்த நாடகம்  அடுத்த சந்ததியில்  மீண்டும் அரங்கேறியது . கல்யாணம் பேசிய ஒரே குற்றத்துக்காக  அவள் தற்போது வாழும் நாட்டில் நான் வீடு தருவதாக ஒப்புக்கொண்டதாக ஒரு பொய் அதகடி ஒப்பனை அரங்கேறத் தொடங்கியது. ஐந்து வயதில் புரியாத உலகம்   இப்போது புரிந்தது. இது தொடரக் கூடாது  நான் கற்றுக் கொள்ளும் கரிய பக்கங்களை என் குழந்தை விரிக்கவே கூடாது  என்ற தீர்மானமும் உறுதியாகியது.  என் குழந்தைகள்  எங்கள் சமுதாய சாக்கடைகளுக்குள் எட்டிக் கூடப் பார்க்கக் கூடாது என்ற பிடிவாதம்  ஒதுங்க வைத்த போதும்,

  எப்படியாவது தங்கச்சிக்கு கல்யாணம் நடந்து அவள் சந்தோசமா இருந்தால் போதும் என்று நான் ஒதுங்கிக் கொண்டேன் ஆனால் உள்ளுக்குள் அரைவாசி செத்துப்போனேன்.



சிலருக்கு கல்யாண  வீடுகளில் தாமே மணமகளாக இருக்க வேண்டும்  இறப்பு வீடுகளில் தாமே பிரதானமாக பிணமாக இருக்க வேண்டும் என்பதான ஒரு மனப் பிறழ்வு. அடுத்தவர்  உரிமை உயர்வு  எதையும் பிடுங்கிக் குதித்தாடும் வக்கிர நோய்  இருப்பதுண்டு  வாழ்க்கையின் அர்த்தம், வாழ்நாட்களின் நிரந்தரமின்மை  புரியாத பிசாசுகள் பேயாடும் இடங்களில் அவைகளோடு கூட்டுச் சேர்ந்து  மனிதர்கள் இருக்க விரும்புவதில்லை. ஆதலால்  நான் நிரந்தரமாகவிலகிக்கொண்டேன்



பிறகு இன்னொரு தம்பியின் கல்யாணம் வந்தது. தம்பி வேறு நாட்டில் இருந்தான். முதல் மாதிரி தான் . ஆளை அடையாளம் காட்டி கல்யாணத்தை பேசி முடி என்றார்கள். இப்பவும் வளைய வேண்டிய இடத்தில் வளைந்து நெளிய வேண்டிய இடத்தில் நெளிஞ்சு புன்னகைத்து.,.. உங்களுக்கு தெரியாதா எங்கட சமூகத்தில ஒரு கல்யாணத்தை பேசி முடிக்கிறது எவ்வளவு பெரிய போராட்டம் என்று. எல்லாம் ஒரு நிறைவுக்கு வாற நேரம் பார்த்து

" அவர் வந்து எங்களோட ஒருமாசம் ரெண்டு மாசம் இருந்து பொம்பிளையோட பழகிப் பார்க்கட்டும் . ரெண்டுபேருக்கும் ஒத்து வந்தால் அப்ப கட்டி வைப்பம் சரிவராட்டி அவர் திரும்பி போகட்டும்" என்று பொம்பிளையின் அம்மா பெரிசா ஒரு வெள்ளைக்கார வெடிகுண்டை தூக்கி போட நான் அதில வெடிச்சு சிதறி கடவுளே என்ர குடுமபம் முழுதும் என்னை கூட்டி வைச்சு கும்மியடிக்கப் போகுதே என்று பயந்து அவசர அவசரமா ரெண்டு பேரையும் கதைக்க ஒழுங்கு பண்ணி விட்டன் கதைச்சு பழகி ஒத்து வருகுதோ பார்ப்பம் எண்டு.


பிறகு ஒரு மாதிரி கதைச்சு பேசி ஒத்துவந்து , கல்யாணம் வர முன்னர் முதல் கேள்வி வந்தது . அதுவும் என் முகத்துக்கு நேரே என்னை நோக்கியே வந்தது

"அவையள் அக்கா என்றால் ஏன் அடுத்த கதை கதைக்காமல் தூக்கி தலையில வைச்சுக் கொண்டாடுகீனம் நீங்கள் என்ன சொந்த அக்காவா அவையளுக்கு "

என்று. அது உண்மையாவே முக்கியமான பெரிய கேள்வி தானே இல்லையா பின்னே ? எங்கட பரம்பரையில் உறவில் ஊரில் யாருக்கும் கேட்கத் தோன்றாத , வீட்டுக்கு வர இருந்த மருமகளின் முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போனது எனக்கு.

" அவரின்ர சகோதரங்கள் இஞ்ச வந்தால் எதுக்கு உங்கட வீட்டில தங்க வேணும் நான் எல்லோ அவையளுக்கு உரிமை கூட ."

இது கேள்வி இல்லாமல் பதிலாக வந்தது அதுவும் மிக முக்கிய உண்மை தான் . இந்த அதி முக்கிய உண்மை எல்லாம் தெரியாமல் என்னை வளர்த்தது தான் என் குடும்பம் செய்த பெரிய தப்பு.


அதுக்கு பிறகு அவனை நான் தம்பி என்று சொல்லவில்லை

" இங்கே பாருங்கோ உங்களுக்கு பேசினவர் இஞ்ச வந்து உங்களுக்கு கல்யாணம் நடந்த பிறகு மற்றவை வந்து உங்களோட தங்கட்டும். பேசி இருக்கிற ஒரு வீட்டில எங்கட வீட்டுக் காரர் கல்யாணத்துக்கு முதல் கை நனைக்க சம்மதிக்க மாட்டீனம். என்னை ஒவ்வொன்றுக்கும் வில்லங்கப்படுத்திறதும் , அதுகுள்ள அவரின் தனியா இருக்கிற  மூத்த சகோதரனை உங்கள் வீட்டில் வந்து தங்க சொல்லி வற்புறுத்துவது என் வீடு எனக்கு சொல்லித்தந்த பண்பில்லை" என்றேன்.

"அது எப்பிடி நீங்க முடிவு செய்யிறது. அவையளில எனக்கெல்லோ உரிமை கூட. கூடப்பிறக்காத ஒண்டவிட்ட சகோதரம் எண்டால் பிற த்தி தானே நீங்க "

என்று மிகச்சரியான உறவு நிலை விளக்கம் வார்த்தைகளாய் உச்சியில் அறைந்தது.

பின்னே சரி தானே அது . கறிக்குப் போட்டு தேவையான வாசனையை உறிஞ்சி எடுத்த பிறகு கறிவேப்பிலையையும், சொதிக்குப் போட்டு சாறை உறிஞ்சின பிறகு அகத்தியையும் புறத்தி என்று தூக்கி வீசுறது தானே எங்கட பண்பு. பண்பு மீறினால் தப்பெல்லோ இல்லையா பின்னே ?


எப்படித் தொடரப்போகின்றன என்பதை ஆரம்பங்களிலேயே அவர்கள் உணர்த்தி விட்டபின் விலகிக் கொள்வது தான் முறை. அது நான் நேசித்த என் சகோதரங்களின் அமைதியை காப்பாற்றும்.

நாளுக்கு நாள் புதிசு புதிசா ஒவ்வொன்றிலும் குறை தேடி குற்றம் கண்டு அவைகளை என் தலையில் போட்டு சிலவேளை சண்டைகள் உருவாக்கப்பட்டு இறுக்கி அன்பா அணைத்திருந்த கைகளாலேயே ஒராளை ஒராள் அடிபட்டு மனம் உடைந்து சாவதை விட இது மேலானது. என்றோ ஒரு நாள் நான் இறந்து போகும் போது ஒருவேளை இவள் எங்கள் அக்கா என்பது உங்களுக்கு உறுத்தினால் அது நான் உங்கள் மீது வைத்த உண்மை அன்பின் பரிசாக இருக்கட்டும் என்ற முடிவுடன் ஒதுங்கிக் கொண்டேன்.



அதுக்கு பிறகு சிலவடருடங்கள் கழித்து நான் ஊருக்குப் போன போது எங்கள் வீடுகள் இருந்த காணிக்குப் போனேன் . வீடுகள் இருந்தாக அடையாளமே இல்லாமல் ஒரு காலத்தை அதன் பாசத்தை நினைவு படுத்திக் கொண்டிருந்த காணியில் , திரும்பும் இடம் எல்லாம்,

"பிள்ளை தலை பின்ன ஓடி வா "

"அக்கா விளையாட வாங்கோ "

" ஓடிவந்து ஒரு வாய் வாங்கிக் கொண்டு ஓடு செல்லம்"

என்று பாசக்குரல்கள் ஆட்களே இல்லாத காணியை சுற்றிலும் என் காதுகளில் அசரீரி போல் எதிரொலிக்க தலை சுற்றி ஆடிப்போய் அப்படியே சோர்ந்து இருந்து விட்டேன்.

சற்று தேறிப் பார்த்த போது அதில் நாங்கள் நட்ட மரங்கள், ஊஞ்சல் கட்டி ஆடிய கொப்புக்கள் , பாய் விரித்து ஒன்றாய் கூடி நிலவு வெளிச்சத்தில் கதை கேட்டுக்கொண்டே ஆ ஆ என்று வாங்கி சாப்பிட்ட நிழல் தந்த வேம்பு எதுவுமே இல்லை . நினைவுகள் கூட இனி எதுவும் வேண்டாம் என்று ஆமிக்காரனே எல்லாம் உழுது தரிசாக்கி விட்டிருந்தான்.


சித்தப்பா விரும்பாத , சித்தி போட விடாத , எங்கள் எவருக்கும் புரியாத எல்லைகள் அப்போதும் அதில் இல்லை. ஆனால் எல்லைகள் தெரிந்தவர்கள் வந்து சொல்லித் தந்து மனதில் எல்லையிட்டு விட்டார்கள். அதற்குள் தான் இனி சித்தியும்  அவர் பெற்ற பிள்ளைகளும்  நிற்பார்கள். நிற்க வேண்டும் அது தான் வாழ்வியல் யதார்த்தமும்

அவர்கள் எல்லைகளை மட்டுமல்ல அதற்குண்டான உரிமைகளையும் வரையறுத்து இருந்ததால் பாட்டி தாத்தா சொன்ன எல்லை இப்போது தான் எனக்கு சரியான அர்த்தத்தில் புரிந்தது. என் குடும்ப சனம் மொக்குகள் எதையும் பொட்டில் அடித்தது மாதிரி மற்றவர்கள் போல விளங்கச் சொல்லத் தெரியாது.

பாட்டி தாத்தா தளிர்க்கவைத்து வேரூன்றும் எதிர்பார்ப்பில் பச்சைக் கதியாலில் போட்ட எல்லைக்கு அன்று கண்கலங்கிய நான் , மனதை இறுக்கி கல்லாக்கி காற்றும் புக முடியாத இறுக்கத்தில் கல் வேலியால் எல்லையிட்டு உறவை, எல்லை தெரிந்தவர்கள் சொல்லித் தந்தது போல வரையறுத்து முடித்தேன்.


எல்லையிட்டபின்

" நீயும் இங்கே இல்லை காணி வீணாகப் போயிடும் விற்று விடு "

என்று பலர் சொன்னார்கள் . நான் விற்கவில்லை. இறுதி வரை என் சந்ததியும் அதை விற்க விடவும் மாட்டேன் . என் காணிக்குள் என் மூதாதைகள் , என்னைத் தூக்கி வளர்த்தவர்களின் மூச்சுக்கள் அன்பாக மூசிக்கொண்டு , என்னுடன் பேசிக்கொண்டு தூங்கிக் கிடக்கின்றன. அவர்கள் கோர்த்து வைத்திருந்த சின்னச் சின்ன கைகள் பிரிக்கப்பட்டு இரத்தம் வடிந்த, கண்ணுக்குத் தெரியாத காயமும் கண்ணீரோடு எல்லைக் கற்களில் ஒருவேளை சாபமாகக் காத்திருக்கலாம்.
.