Saturday, November 30, 2019

சாரல் விழும் நேரம் .......

மழை பொழிந்து கொண்டிருக்கிறது. மழை பொழியும் நவம்பர் மாதக்காலைகள் இருளகற்றத் துணிவதில்லை. மழையைக் குளிரக் குளிரப் பாடும் கவிஞர்களிடம் காதல் நனைவதைக் காண்கிறேன்.

எனக்கு நவம்பர் மாதம் பிடிப்பதில்லை. அந்த மாதத்தில் தான் நிலையாமையின் தத்துவம் பற்றி அதிகமாக யோசிப்பேன்.அதற்கும் மாவீரர் நாளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இழப்புகளில்  தனிப்பட்டவைக்கும் பொதுவானவைக்குமிடையில் மிகப்பெரும்  வேறுபாடுகளுண்டு . வருடங்களில் அந்த மாதத்தை நீக்க முடிந்தவர் யாராவது இருந்தால் தயங்காமல் அவர்களைக்  கடவுளென்பேன்..

மழை கண்டால் மயிலாகும் வழக்கம் என் சிறுபராயத்திலிருந்தது. மேகமிறங்கி குளிர்காற்று வீசத்தொடங்கும் போதே வீட்டில் நடக்கும் மழை வரவேற்பு ஆரவாரத்துக்குள் நசுக்கிடாமல் வெளியேறி, ஆச்சிகாலத் தலைவாசல் குசினியை பிரித்து வீட்டின் பின்பக்கக் கோடியில் போட்ட பெரிய கற்தூணில் ஏறி நின்று கொள்வேன் .மழை நிலத்தில் விழுந்து தெறித்து காலில் மண்படாமலிருக்க.

தேடி யாராவது கண்டுபிடித்து கெஞ்சி, கொஞ்சி மிரட்டி உள்ளே கொண்டு போகும்வரை கைகளை விரித்து கழுத்தை அண்ணாந்து மழையை முகத்தில் வாங்குவது சொர்க்கம்.

விறாந்தையில் நின்றேந்தும் தாவாரத்தண்ணி உள்ளங்கை பட்டுத்தெறிப்பது சிலிர்ப்பு.

மழைக்குள் நனைந்து கொண்டே, வானம் இறங்கிப் புகார் போட்ட கடலில் ஒழியும் துளிகளைப் பார்ப்பதும், பச்சைக் குளத்தில் குழியிட்டு குமிளியெழுப்பி தாளமிடும் அழகு ரசிப்பதும் வரம்.

காற்றடிக்கும் பொழுதும் மழைபொழியும் பொழுதும் அருகில் யாருமற்ற அமைதியில் மெதுவாய் நகர்த்தும் சைக்கிளோடு நனைவது சுகம்.


உயிரைத்தீண்டும்  மழையின்  தூய்மை உணர்ந்த நான், நிலத்தில் வீழ்ந்து  புழுதியில்  கரைந்து  பெரும் அசிங்கங்களை  தன்னகத்தே கொண்டு சேறாகி  நகரும் வெள்ளம்   வாரியிறைத்துக் கறை செய்வதும்  கண்டிருக்கிறேன்.  ஆகையால்  என்னில் தெறிக்கும்  சேற்று நீர்  பற்றி அப்போதும் இப்போதும்  எப்போதும்   எப்போதும்  அலட்டிக் கொள்வதில்லை. அவைகளின் நிறம் அவற்றின் குணத்துக்கு. அது நீரின் அல்ல, சமூகத்தின் அசிங்கம்

தான் வளர்ந்ததை பெண் உணருமுன்னமே சமூகம் பராயத்தைத் தொலைக்கவைப்பது சாபம்.

பாடசாலை நாளில் அடித்துக்கொட்டிய மழையில் வெள்ளைச்சீருடையில் தெப்பலாய் நனைவது, பார்க்கும் கண்களுக்குப் பாரதிராஜா படக்காட்சி என்று உணராத போதில், உற்று உற்றுப்பார்த்து மட்டமாக வீணிவடித்தவனை பின்னால் நண்பர்களுடன் வந்தவன் இழுத்து வைத்து உதைத்து வீடுவரை துணைவந்த வரை உடல் தீண்டா அவன் கண்களுக்கு நட்பின் நிறம் எப்போதும்.

நட்பின் பார்வை காமத்தின் நிறம் கொள்ளாது. காமநிறம் கொண்ட பார்வையில் நட்பிருக்காது என்ற பாடத்தின் ஆசான் அவன் கண்கள்.





பிறகுமொரு நவம்பர் மாத மழையிரவில் அம்மாவும் நந்தினி அத்தையும் இடியப்பம் அவித்துக்கொண்டிருந்தார்கள். குண்டுச்சத்தம் அதிர்ந்து அதன் துண்டுகள் வீட்டைச் சல்லடையிட்டுக்கொண்டிருந்தன..ஒரேயொரு குப்பி விளக்கு திரியைக்குறைத்து தூங்கலாக எரிந்துகொண்டிருந்தது. அந்த வெளிச்சமும் வெளியில் தெரியாமல் மறைத்து வைத்திருந்தார்கள். நானும் பிரமிளாவும், நாதனும் புஸ்பனும் லாவணியும் குருட்டு வெளிச்சத்தில் குரண்டிப்போயிருந்தோம். அயலட்டையெங்கும் யாருமில்லை என்பதை அறியாமலிருந்தோம்.

பொத்தலாக ஓட்டை விழுந்து போன வீட்டின் மேற்பகுதியிலிருந்து அங்கிங்கெனாத படி ஒழுகிக் கொண்டிருந்தது மழை. வாளி சருவம் குடம் என எல்லாப்பத்திரமும் வைத்து முடித்து, கட்டுப்படாத ஒழுக்கை அம்மா பயன்படுத்த அனுமதிதராமல் பொக்கிசமென பொத்தி வைத்து எனது எதிர்காலத்தில் ஒப்படைக்க விரும்பிய, அப்பாவின் மிகப்பெரியதும் கனமானதுமான இரும்புப்பெட்டிகளில் ஒன்றைத்திறந்து அதற்குள்  தங்கமென மின்னும் பித்தளையிலானபெரும்  அண்டாவிலிருந்து வரிசையாக கைக்குள் பொத்தும் சின்னஞ்சிறு பாத்திரம் வரை அடுக்கிய அடுக்குக் குலைத்து ஒழுக்குக்கு வைத்தபோதும் மழை வீட்டுக்குள் வெள்ளம் போட்டது

காயப்பட்டதும் இறந்ததுமான உடல்களை, தண்டவாளத்தில் மனிதவலுவில் உந்தி நெம்பும் ஊர்தியொன்றில் வைத்துக் கொண்டுவந்து அவர்கள் விறாந்தையில் கிடத்திக்கொண்டிருந்தார்கள். அவைகளை ஏற்றிப்போக வெளிச்சம் அணைக்கப்பட்ட வாகனங்கள் முடக்கில் தயாராக நின்றன. ஏற்றிக்கொண்டிருந்தாலும் தொடர்ந்து விறாந்தை நிறைந்து கொண்டிருந்தது. ௸ல்லும் வெடியும் நெருங்கி அதிரும் இரவில் உடல்களுடனும் உச்சவலியின் அனுக்கத்திலும் இருப்பது பயமாக இருந்தது. விறாந்தையிலிருந்து வழிந்து சொட்டிய இரத்தத்தோடு தாவாரத்தண்ணி சிவப்பாக ஓடிக்கொண்டிருந்தது. முதல் முறையாக மழை ஏந்தத் தயங்கியது கை.

இறுதியாய் என் வீட்டில் வாழ்ந்திருந்த நாளும், அந்த வீடும்   விட்டோடிய அந்த நாளுடன் அற்றுப்போய் வெறும் மண்மேடாக்கப்பட்டதுடன் என் அப்பாவின் நினைவுதாங்கி அம்மா பாதுகாத்த அனைத்தும், அப்பாவின் புகைப்படம் கூட அற்று  ஒரு காலம் முற்றாகக் கரைந்து போயிற்று அன்றைய மழை கரைத்த போதில்.

பின் வந்த மழைகள் எல்லாம் எங்கெங்கோ பெய்தன. நான் காய்ந்து போயிருந்தேன். நனைத்துக் கொள்ளத் தோன்றவில்லை.

கொழும்பில் இருந்த காலத்திலும் மழை பெய்தது. அதில் தூய்மை இருக்கவில்லை. அதுவரை சீழும் காயமும்  பட்டுவிடாமல் இருந்த எனக்கு நிறையப் புண்களும் வலியும் தந்து குடைபிடிக்கவும் வெள்ளத்தை விட்டு விலகிச்செல்லும் எண்ணமும் சொல்லித்தந்தது.

பிறிதொரு நாளில்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகும் வழியில் எமது வாகனத்துக்கு அரைமணிநேரம் முன்னால் போன ராணுவட்றக் பிரட்டப்பட்டு ராணுவம் ஆடிய சன்னதத்தில் வைத்தது வைத்தபடி வெறுங்கையுடன்  காட்டுக்குள் சிதறி ஓடி ஏதாவதொரு வாகனத்துக்காய் மறைந்து காத்திருந்த நாளில் இறுதியாய் ஒருமுறை மழை நனைத்தது.

மழையில் மாற்றுடையும், மாற்ற இடமுமற்ற அன்றும் வெண்ணிற கொட்டன் சல்வார் அணிந்திருந்தேன். அந்தக்காடு ,அதிலிருந்து தூரம் நடந்து பாதுகாப்பான பகுதியில் வெளியேறிச் செல்லும் வழி, அனைத்தும் தெரிந்திருந்தும் உடை உடலோடு ஒட்டியிருந்த போது மனதின் துணிவெல்லாம் வெளியேறியிருந்தது. நண்பிகளை நிமிர்ந்து நோக்கவும் கூசியது. உடலை ஒடுக்கி கூனிக்குறுகி ஒடுங்கி நின்ற போது,

எதிர்பாராமல் எதிரில் வந்தான். எங்கள் பஸ்ஸுக்குப் பின்னால் வந்த மூன்றில் ஏதோ ஒரு பஸ்ஸில் வந்து, எங்களைப்போல் சிதறி ஓடியிருக்க வேண்டும். கருப்பு நிறத்தில் ஏதோ அடர்நிறக் கோடிட்ட நனைந்த ௸ர்ட்டைக் கழற்றி நீட்டினான். வாங்கிப் போர்த்திக்கொண்டு "நீ அண்ணனாகப் பிறந்திருக்கலாம்டா" என்ற ,வாழ்வில் சொல்லியிருக்கவே கூடாதென, வாழ்க்கை வலித்த போதெல்லாம் நினைவில் வந்து முகத்திலறைந்த அந்த வார்த்தையைச் சொன்னேன்., ஆமியிடம் அகப்பட்டது போல அதிர்ந்த கண்கள், நீண்டகாலமாய் நினைவிலறைந்தன.

பின் நான் இங்கு வந்து விட்டேன். இங்கு வந்தபின் பெய்யும் மழைக்கு இருளினதும் இடியினதும் சாயல். அது மனதில் குளிர்வதில்லை. குளிர் இல்லாத மழையில் என் பெயரில்லை. அதன் வெம்மைக்கு எஃகென இறுகிய என் நினைவுகளை நெகிழ்த்தும் தன்மையுண்டு.