Tuesday, December 19, 2017

பூப்போல் மனதை முள்ளால் கீறி வெந்நீர் ஊற்றி.......

நாக்கின் அலட்சியமான அல்லது வக்கிரமான  சுழற்சியில் வாயிலிருந்து புறப்படும் கவனமற்ற வார்த்தைகள் விஷம் தடவிய அம்பை விட அதிக ஆழமான காயத்தையும் உயிர் ஒடுங்கும் கூர்மையும்  கொண்டன.. ஒற்றை வார்த்தையில் ஒருவர் முற்று முழுதாய் அடிபட்டு விழவும், பல பந்தங்கள் ஒற்றை நொடியில் அறுந்து போகவும் காரணமாகலாம். வார்த்தைகளின் வீரியம் ஆளாளுக்கு மாறுபட்ட வீதத்தில்  காயப்படுத்தலாம் என்ற போதும் காயம் என்பது வலிதான். அது ஏற்படுத்துவதும் அழியாத வடுவே தான் . அப்படித்தான் இந்தப் பதிவும்........

அவள், எனக்கு மிக நெருக்கமான  நண்பியாக, அல்லது உறவாக... எதோ ஒரு விதத்தில் என்னால் நன்றாக அறியப்பட்டவளாக இருந்தாள். அழகியலும் , மென்மையும் , அன்பும் அதிகம் கொண்டவள். அவளது வளர்ப்புக்கு உட்பட்ட எந்தப் பறவையும் விலங்கும் அவளது கைகளுக்குள் எப்போதும் அடைக்கலம். பூனைக்குட்டியும் கோழிக்குஞ்சும் தன் தாயைவிட எப்போதும் அவள் கைகளை நாடுவது வாழ்தலின்  அழகு .

அவற்றை  அவள் எப்போதும்  தன் குழந்தைகள் என்றே சொல்லிக் கொள்வது சவேடிக்கையாக கிண்டலடிக்க வாய்ப்பாக இருந்தாலும் ரசிக்க முடியும். எதிலாவது அடிபட்டு காயப்பட்டு விழுந்த பறவை,   காகம் கொத்தி துரத்தி  கூற்ருயிராய் விழுந்த குயில் குஞ்சு, பருந்துக்குக் கல்லெறிந்து பறித்த யார்வீட்டுக்கோ உடமையான கோழிக்குஞ்சு  என்று ஒவ்வொன்றுக்காய் அழுது அவைகளைக் காப்பாற்றி விட அவள் ஓடி ஓடி தவிக்கும் தவிப்பு எல்லோருக்கும் புரிவது ஒன்றல்ல.தன்னை மட்டுமன்றி  மற்றவர்களை தானாக நேசிக்கும் மனிதம் தாண்டி அனைத்துப் பிராணிகள் மீதும் காட்டும் அன்பு என்பது தியானம் போன்றது. அது அனைவர்க்கும் வைப்பதில்லை. ஏனோ அவளிடம் அந்தக் குணாதிசயம் அடைக்கலமாகி இருந்தது.


எம் கைகடந்த விடயங்கள் நிகழும் போது விதி என்று எம்மால் இலகுவாக ஒரு வார்த்தை வடிவத்துக்குள் அடக்கிவிடும் அந்த விதிக்கு முகம் கொடுப்பது அத்தனை இலகுவானதல்ல. ஆனாலும் விதி என்ற பெயரில் நிகழும் எதிலிருந்தும் யாராலும் தப்பி விட முடிவதில்லை.  முக்கியமாக உயிரிழப்பு  அப்படித்தான் அடிபட்டு விழுந்த பறவையின் வழிகளை தாங்காது துடிப்பவளின் கைகளில் இருந்து   அவள் பெற்ற குழந்தையைப் பறித்து விளையாடியது விதி.

உயிருக்கு உத்தரவாதம் மறுக்கப்பட்ட அதனைக் அதைக் காப்பாற்றி விட ஒவ்வொரு தாயும் போல் தான் அவளும் துடித்த துடிப்பும் ஓட்டமும் , தவிப்பும் சொல்லி விளங்க வைக்க முடியாதன. வயிற்றில் உருவாகுமுன்னமே, திருமணம் என்ற ஒன்றைக் கற்பனை செய்யும் முன்னமே தனக்கே தனக்கென, முதன் முதலாய் தன உதிரத் தொடர்பில் தனக்கொரு உறவென, உருவாகாத குழந்தை மீது உயிரை வைத்து, தேடித்தேடி அதற்குப்  பெயர் வைத்துக் கனவுகண்டு காத்திருந்த குழந்தையை, கைகளில் ஏந்திய சில நாட்களுக்குள்ளாகவே, அதனை முத்தமிட்டுப் பாலூட்டும் பொச்சம் அடங்க முன்னாலேயே  மொட்டுப் போல கொண்டு போய் துயிலும் தோட்டத்தில் தூங்க வைத்தல்  என்பது இதயம் உள்ள எவர்க்கும் அத்தனை இலகுவான காரியமல்ல.  ஆனாலும் சிலர் அப்படியான சாபங்களையும் பெற்றுக்கொண்டே தான் பிறக்கிறார்களோ என்னவோ.

  தான் இத்தனை காலம் கனவுகண்டு காத்துவைத்த பெயரைக் கல்லறைத் தோட்டத்தில் எழுதிவிட்டு  அவள் முதல் முறையாக குழந்தையைப் பெயர் சொல்லி  அழைத்துக் கதறிய கதறல் யார் காதலி விட்டு மறைந்தாலும் அவள் மனதை விட்டு இலகுவில் மறையக் கூடியதல்ல.

அதிலும் தன்னவர்கள் அற்ற தேசத்தில் ஆற்றுதலுக்கு யாருமின்றி அநாதரவாய் அரைமயக்கத்தில் குழந்தையைக் கொடுத்தவனின் அரவணைப்பு கூட அற்று  ஒரு அந்நிய வெள்ளையினத் தாயின் அணைப்புக்குள்  ஆறுதல் மொழி கூட விளங்கா அவலத்தில்,  நிற்க நேர்வது என்பது மன ரீதியாக அத்தனை  இலகுவானதல்ல ஆனாலும் நேர்ந்தது.

அவ்வளவு தான். கல்யாணத்தோடு ஒடுங்கி விட்ட குதூகலத்தின் பின்னால் குழந்தை வடிவில் இருந்த வாழ்க்கை மீதான  நம்பிக்கைகளும் சிதைந்து போக   அவள் அமைதியாகி விட்டாள். அதன் பின் அவள் குழந்தைக்காக அழுது  என்றுமே  பார்த்ததில்லை. தனக்குள் ஒடுங்கி மூலையில் சுருண்டு இருப்பவள்  மெல்ல மெல்ல மனச்சோர்வுக்குள் புதையத்தொடங்கினாள். அவளில் ஏற்பட்டுக் கொண்டிருந்த மாற்றத்தைக் கூட அறிந்து கொள்ளக் கூடிய  யாருடைய  தொடர்பும் ஆதரவும் அவளுக்கில்லாது வாழ்க்கையோடுஅந்நியப்படுத்தப்பட்டிருந்தாள்






பூமியில் அவளுடைய ஆரம்பத்திலேயே அவள் இழப்புகளையும், இறப்புகளையும் அதனாலாய சமாளிப்புக்களையும்  சந்தித்திருந்ததால் எப்போதும் அவளிடம் ஆர்ப்பாட்டமில்லா அமைதியே அதிகமாக  இருந்தது. நெஞ்சுக்கு நெருக்கமான இதமான சில மனிதர்கள் , வாழ்க்கை யதார்த்தங்களால் பயணிப்பது என்றுணர்ந்த ஆரவாரமில்லாத புரிந்து கொண்ட சில நட்புக்கள், ரசனைகளை கூட்டி அவள் மீது மழைத் தாரைகளாய் பொழியும் இயற்கை இவை தவிர அவளின் தேடல்கள் அதிகமாக எதுவும் இருந்ததில்லை. ஆனாலும் இதற்கெல்லாம் சேர்த்துவைத்து  எதிர்காலத்தில் நிம்மதியான அரவணைப்பான  ஒரு வாழ்வை தான் வாழ்வேன் என்ற அவளுக்கு நெருங்கிய நேசமுள்ளவர்களால் ஊட்டப்பட்ட  நம்பிக்கை அவளுக்கும் இருந்தது.

இருந்தும் எதிர்காலம் என்பதும் அதன் சந்தோஷங்களும் எதிர்பார்ப்புக்களும் அரவணைப்புக்களும்   குழந்தையால் மட்டுமே  என  நிர்ணயிக்கப் பட்ட  அவள் வாழ்நிலையில் ,. அந்த இழப்பின் போது அவள் வாழ்வின் ஆதார சுருதியே உயிர் நாண்கள் அறுந்து அவளது  உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில் அவளை நெருங்கி நிற்க மனிதர்கள் இல்லா அந்நிய தேசத்தின்  தனிமை மட்டுமே அவளோடு கூட  இருந்தது.

ஒருவேளை வெளிநாடு....அது ஏற்படுத்திய  தூரங்கள் அதற்குக் காரணமாகவும் இருக்கக் கூடும். எவர் வந்தார்கள் எவர் போனார்கள், எவர் அணைத்தார்கள், எவர் உதாசீனம் செய்தார்கள் என்பது போலான குறை நிறை விமர்சனங்கள் எப்போதும் போல இந்த இறப்புக் கடந்த நாட்களின் பின்னும் அவள் முன்வைத்து நான் பார்த்ததில்லை.

அவளோடு இப்படியான நிலைப்பாடுகள் பற்றி ஏதாவது கதைக்கும் நேரங்களில் கூட

" விடு எனக்கு இப்படித்தான் விதிச்சிருக்கு போல"

என்பதுடன் அந்த விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவாள். குழந்தை போன பின் அதையே மாற்றி

"இந்தப் பிறப்பில் எல்லாம் அனுபவிச்சிட்டால் அடுத்த பிறப்பு என்ற ஒன்று இருக்காதாக  இருக்கக்கூடும் . அதுதான் எல்லாத்தையும் அனுபவி என்று எழுதியிருக்கிறான் கடவுள்"

என்பாள் வறண்ட புன்னகை வெறித்த பார்வையோடு.

"அடுத்த பிறவி என்ற ஒன்றை நம்புறியா நீ?"

"எனக்கு இப்போதெல்லாம் எதை நம்புவது எதை நம்பாது விடுவது என்பதில் கூட தெளிவுகள் இல்லைடி."

அவளை முற்றிலுமாய் அறிந்து அதை விடப் புரிந்திருந்ததால் அவளது சலிப்பான வார்த்தைக்குப் பதில் அல்லது ஆறுதல்  சொல்லும் திராணி என்னிடத்தில் இருக்கவில்லை.

இந்த உலகம் இந்த வாழ்க்கை, மனிதர்கள் எதிர்பார்ப்புக்கள் நம்பிக்கைகள் எல்லாமே எம் கைக்குள் அடங்காத  ஏதோ மையத்தில் இயங்குபவை. எம்மால் புரியமுடியாத ஒரு இடத்தில் ஒட்டி இருப்பது எனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது   என்றாள் எங்கோ பார்வை வெறித்திருக்க.  

அவள் உலக வாழ்க்கை மீது கொண்ட நம்பிக்கைகள் அதிகமாக அன்பிற்கான, அதன் அங்கீகாரத்திற்கான  ஏக்கங்களாகவே இருந்தன.  அதற்காக முடிந்தவரை அனைவர்க்கும் முகம் கோணாத வகையில் அவள் வளையவும் தயாராக இருந்தாள் எப்போதும். இருந்தும்...

அவள் உறவுகள் என்று ஓடி ஒடி நேசித்த அளவு நேசத்தை அவர்கள் திருப்பிக் கொடுத்ததாக நான் உணரவில்லை. தான் மன அழுத்தத்துக்குள் புதைந்து கொண்டு கிடக்கையிலும், அதைத் தனக்குள் விழுங்கி மாத்திரைகளால்  மறைத்துக் கொண்டு உறவுகள் மீதான அவளது கரிசனம் எப்போதும் போல் இதய சுத்தியோடு தான் இருந்தது.

" குழந்தையின் இறப்பின் போது கூட  ஒற்றைத் தொலைபேசித் தொடர்பு அல்லது அதுகும் இல்லாத உறவுகளின் தொடர்புகள் உனக்குத்  தேவையா" என்று நான் கேட்கையில் வறண்ட சிரிப்புக்குள் பதிலை மறைத்து விடுவாள்.

"விடு இன்னொரு தரம் பிறக்கப போகிறேனா. பிறந்தாலும் , காணப்போகிறேனா " என்பதுடன் முடிந்து விடும்.



அவள் தனக்குள் முற்றிலுமாய் உடைந்து நம்பிக்கைகள் இழந்து ஒடுங்கிய பின் அவளது நெருங்கிய உறவில் பல இழப்புக்களைப் போர் கொடுத்திருந்த போதும் எல்லா இழப்பும் அவளது குழந்தையின் இழப்புப் போலவே ஒரு செய்தியாகிப்போன வெளிநாட்டு உறவுகளுக்கு,  ஒரே ஒரு இழப்பு மாத்திரம் உலகமெல்லாம் தொலைபேசி  உள்ளவர்க்கெல்லாம் சொல்லிக் கதறும் பேரிழப்பாகத்,  தெரிந்தது.

வெளிநாட்டு வாழ்க்கை, அதன் பகட்டுக்களைப்  பிரகடனப்படுத்தும் அவர்களுக்கு  அதிகம் கதைத்துப் பேசிப் பழக்கம் கூட இல்லாத அந்தப்போராளி,  தான் பிறந்த குடும்பத்தின் உயிர் அடிவரை ஆட்டம் காண வைத்து நடைப்பிணமாக்கி  விடைபெற்ற அந்த உயிர், புலப் பெயர்ந்த இவர்களுக்கு மாவீரர் குடும்பத்து உறவு  என்ற பெருமையைப் பெற்றுக்  கொடுத்திருந்தது.


அந்த இழப்பின் போது

" போற உயிர் போயிடும் அதைப் பெற்றுச் சுமந்து கனவுகளோடு வளர்த்தவர்கள்   இனி உயருள்ள பிணம் தானே"

என்ற அவளது வார்த்தை, அந்தப் பெற்றோரை நினைத்து அவள் தவித்த தவிப்பு, அவள் அமைதியாகத் தாங்கிக் கொண்ட இழப்புக்குள் அவள் மறைத்திருந்த வலியை அப்பட்டமாக அவளுக்கே வெளிக்  காட்டியது.

அந்த இழப்புக்காய்  வெளிநாட்டில் இருந்து உறவுகள் போட்ட ஆர்ப்பாட்டங்களைக் கண்டும் அமைதியாகத்தான் இருந்தாள். அந்தத் தொலைபேசி அழைப்பு வரும் வரை.

மாவீரராகிப் போன அந்தப் போராளியை அது நெருங்கிய இரத்த உறவாக இ  ருந்த போதிலும் புலம்பெயர்ந்த பின் புலம்பெயர்ந்த ஏனையவர்களைப் போல அதன் சிறு வயதுகளில்கண்டது தவிர  தாயகத்தில் இருந்த  அவர்களுடன் அவளுக்கு அதிகத் தொடர்பிருக்கவில்லை.  இருந்தும் புதிதாகப் பொங்கிய பாசத்தில் நேரகாலமற்று ஒலித்த தொலைபேசி அருவியென வடித்த நீலிக் கண்ணீரின் பின்னால் மறைந்திருப்பது அடுத்தவருட மாவீரர் தின நிகழ்வுக்கு முன்னிற்கும்  அங்கீகாரம் என உணரமுடியாதளவு அவள்  இன்னும் முழுமையாக உணர்வு தொலைக்காதிருந்தாள்.

அடிக்கடி மிக ஆதூரமாக தொலைபேசியில் அவர்கள் பேசுவது மிக நடிப்பாக, அதைச் செவிமடுப்பது சலிப்பாகவும் இருந்தது அவளுக்கு.  இன்று ஒப்பாரி சொல்லும் இந்த உதடுகள் முன்னொரு காலத்தில் இறந்த பிள்ளை குழந்தையாக இருந்த போதே அது உண்ட உணவுக்கும் சுவைத்த ஒரு கப் ஐஸ் கிறீமுக்கும் சொந்த தந்தை வழி மாமியாரே  கணக்கெழுதி வைத்ததை நேரில்; பார்த்து திகைத்து ஓசியில்  ஒரு மிடறு நீரருந்தவும் கூசி  ஒதுங்கியவள் அவள்.

" நீங்கள் அந்தப் பிள்ளையின் அம்மாவுடன் கதைச்சீங்களா? எங்களுக்குள் கதைப்பதில் எதுகும் நேர்ந்துவிடப் போவதில்லை. அந்தப் பிள்ளையின் தாய்க்கு இது ஆறாத துயரம் அவவுக்குத் தான் ஆதரவு வேணும் அங்கே எடுத்துக் கதையுங்களன் " என்றாள்.

"அது தான் உனக்கு எடுத்தனான். நீ தான் இதுக்குச் சரியான ஆள்"

"இல்லை நீங்கள் என்னிலும் மூத்தனீங்கள்.  நீங்கள் நேரா அவையளோட கதைக்கிறது  தான் முறை அவைக்கும் அது தான் ஆறுதலா இருக்கும். "


. "இல்லை நீ தான் அதுக்குச் சரியான ஆள் ஏனெண்டால் உனக்குத் தான் பிள்ளை செத்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. எனக்கெல்லாம் இந்த விசயங்கள் பற்றி கதைக்கவோ ஆறுதல் சொல்லவோ தெரியாது. "

ஒரு வித அனுதாபம் போல ஈட்டி பாச்சிய அந்த வார்த்தைகளில் அதிர்ந்து அத ற்கு மேல் எதுவும் காதில் விழாது அப்படியே நின்றவளிடமிருந்து  தொலைபேசி நழுவிய  பின் கூட அவள் திகைப்பில் இருந்து மீளவில்லை.


"பிள்ளையைப் பறி கொடுப்பது எக்ஸ்பீரியன்ஸ் என்று சொன்னாளே ! சொல்லு, அது எக்பீரியன்சா சொல்லு, அது சாவு. நாளாந்தம் நிமிஷத்துக்கு நிமிஷம் அணுவணுவா உயிர் போற  சாவு . நான் செத்துப் போனேன்டி இதுக்கு மேல என்னை கொன்று போட என்ன இருக்கு என்று தேடி வருகீனம் சொல்லு. இவர்களுக்கெல்லாம் நான் என்ன தப்பு செய்தேன். இவள் ஆடின பழியெல்லாம் தூக்கிச் சுமக்கிற வாயில்லாத சுமைதாங்கிக் கல்லாக இருந்தது தவிர.  இப்பிடி துரத்தி துரத்தி பிள்ளையை குடுத்தவள் என்று சொல்லிக் கொல்லுறதுக்கு, 

வயித்தைக் கிழிச்சுப் பிள்ளையை   எடுத்த காயம் கூட ஆறுமுதல்  செத்துப் போன பிள்ளையை அள்ளிக் குழியில் வைக்கக் குடுத்துப் போட்டுத் துவண்டு  கிடந்த தாயை மயக்கத்தில் புணர்ந்த கொடூரனோடு தான் நான் வாழ்ந்தேண்டி. அப்போதெல்லாம் இவையளும் இந்த ரெலிபோனும் எங்கே போயிருந்தது சொல் "

அப்போது அவள் கதறியது போல் பிள்ளை இறந்த போது கூடக் கதறவில்லை. எப்போதும் எல்லாவற்றையும் நேசிக்கத்தெரிந்த அவளது வாயிலிருந்து வந்த முதல் வசவு வார்த்தை

" குடுத்துப் பார்க்கச் சொல்லு. ஒவ்வொருவரையும் பெத்தெடுத்துக் குடுத்துப் பார்க்கச் சொல்லு செத்தபிணம் எப்படி உலவுது என்ற எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்"

என்று சொல்லிச் சொல்லிக் கதறியது, தாங்க முடியாமல் அடங்கிக் கிடந்த வேதனையா? அல்லது மன அழுத்தத்தின் பீறிட்ட வெடிப்பா எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் தெரியும், தூண்டி விட்டதும் , துடிக்க வைத்ததும் அந்த வார்த்தைகள். இழப்பை விட அதிக ஆழமாய் மனதில் செருகிய ஈட்டியாய்  அவளை கிழித்துப் போட்டவை அந்த வார்த்தைகள்!

அவள் வாழ்க்கை முழுவதும் சோகங்களால் சூழப்பட்டிருந்தது  அவளுக்கு நெருக்கமானவர்களுக்குத் தெரிந்தே இருந்தது.இருந்தும் எப்போதும் எவரின் ஆறுதலையும் அனுதாபத்தையும் வேண்டாத அவளை உடைத்தது அந்த ஒற்றை வார்த்தைக் கோர்வை.. "பிள்ளை செத்த எக்ஸ்பீரியன்ஸ் உனக்குத் தானே இருக்கு"


அதன் பின் காலங்களின் பின் மனம் விட்டு அவளுடன் கதைக்கக் கிடைத்தது. அவளது அந்த உறவுகள் பற்றி விசாரித்த போது.

"அந்த தொலைபேசி அழைப்புடன் அந்த  உறவு இறந்து போனது அது பற்றி இனிப் பேசாதே " என்றாள்.

அவளது முகத்திலும் வார்த்தையிலும் இருந்த வெறுமையும் வெறுப்பும் இனி தொடராது என்பதைத் தீர்மானமாகச் சொல்லியது.

மனிதர்களை நெருங்க விரும்பாமலும், அந்நிய மண்ணில் அதன் ஆதரவற்ற தனிமையில்  அதிக மன அழுத்தமும்அதிலும்  அதிக மாத்திரைக்களுமாய் அவள் அழிந்து கொண்டிருப்பது தெரிந்தது. அந்நிலையிலும்  அவள் தான் நேசித்த எவரையும் நெருங்க விரும்பாததும் தெரிந்தது.

"நான் இன்னும் மனிதர்களை , பூமிக்குப் புதிதாக வரும் பிஞ்சுகளை எல்லாம் நேசிக்கிறேன். இவர்களை நெருங்கினால் சாபம் போடும் கீழான நிலைக்கு என்னை ஆளாக்கி விடுவார்களோ  என்று பயமாக உள்ளது. நான் நானாகவே மிகுதிக் காலத்தைக் கழித்து விட்டு போகிறேன்"

என அவள் சொன்ன போது கூட வாழ்க்கையை எதிர்பார்ப்புக்களோடும் நம்பிக்கைகளோடும்  சுவாரசியமாக வாழும் வயது தான் அவளுக்கு  .

"குழந்தையை விட முக்கியமான உறவு ஒரு தாய்க்கு வேறில்லை. இந்தப் பூமியை நிராகரித்த குழந்தைக்கும் சேர்த்து  நான் ஒரு தாயாக  மட்டுமே இருந்து விட்டுப் போகிறேன் ...." தீர்மானமாக அறுத்திருந்தாள் ஒரு நெருங்கிய இரத்த பந்தத்தை.


ஒற்றை வார்த்தை போதும் ஒரு  உறவறுக்க , உயிர் கொல்ல, உணர்வற்ற உடலமாக்கி உலவ விட. ஒவ்வொருவருக்கும்அந்தவார்த்தைவாழ்க்கையின்எதோஒருமூலைக்குள்ஒளிந்துகொண்டேதான்இருக்கிறது. 

Wednesday, December 13, 2017

எல்லைக்கற்களில் காத்திருக்கலாம்.....

.
"பிள்ளையள் வேண்டாம் என்று சொன்னாலும் பரவாயில்லை நாங்கள் பொறுப்பா எல்லைகளை வடிவா அளந்து நல்ல பலப்பா இடைக்கதியால் நட்டுக் குறுக்கு வேலி போட்டு முள்ளுக்கம்பி அடிச்சுக் குடுத்திட வேணும் என்னப்பா நான் சொல்லுறது " தாத்தா கேட்டார்.

"பின்னே செய்யாமல் ? தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேற வேற தானப்பா. எல்லாம் முறைப்படி அளந்து பிரிச்சு குடுத்திட வேணும்" பாட்டி.

. "பிற்காலத்தில அதால இதால எண்டு பிரச்சனை வந்து எல்லாம் முட்டிக் கொண்டு பிரிஞ்சு போகாமல் இருக்கவேணும் எண்டால் எல்லாத்திலும் அவதானமாக தான் இருக்க வேணும்." தாத்தா

"நாங்கள் இல்லாத காலத்திலயும் இந்த கூடு கலையாமல் என்ர குஞ்சுகள் எல்லாம் சேர்ந்திருந்து  பெருகி வாழவேணு ம்" பாட்டி கண்ணை சீலைத்தலைப்பில் துடைச்சுக் கொண்டா.

எப்பவும் இப்படித்தான்  பாட்டியின் கதைக்கு தாத்தாவும், தாத்தாவின் கதைக்கு பாட்டியும் நல்ல சோக்கா தலையாட்டுவீனம் தஞ்சாவூர் பொம்மையிலும் அழகா.

"நான் ஒன்ன நெனைச்சேன். நீ என்னை நினைச்சே தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு செல்லம்மா என்னம்மா சொல்லம்மா  " என்று தாத்தாவும் ,

"மாடுமனை எல்லாம் உண்டு என்னோடு என் நெஞ்சை மட்டும் போகவிட்டேன் உன்னோடு. உன்னைத் தொட்டு நான் வாறேன்  செல்லையா என்னையா சொல்லையா " என்று பாட்டியும்

இடையில ஒருவரும் கோடு கிழிக்க விடாமல் ரெண்டுபேருமா சேர்ந்து காதலின்ர ஒற்றைக்காலில் நிண்டு கலியாணம் கட்டினவை வேற எப்பிடி இருப்பினம்?



அவையள் எல்லை பற்றிக் கதைத்துக் கொண்டிருக்க எப்பவும் போல நான் தாத்தாவின் எட்டுமுழ வெள்ளை வெட்டி கட்டின  மடிக்குள்ள குடங்கிக்கொண்டு,  கழுத்தைச் சுற்றி எப்பவும் போர்த்தியிருக்கிற சாலைவையை  இழுத்து அதால என்னையும் சேர்த்துப் போர்த்துக்கொண்டு, சால்வையில் இருந்து வரும் தாத்தாவின் பாசம் கிறங்கும் வாசத்தை அனுபவித்துக் கொண்டு, இடைக்கிடை தலையை வளைத்து சொரசொரக்கிற அவரிட மூன்று நாள் வெள்ளைத் தாடி  முகத்தில கொஞ்சிக்கொண்டு,  அதுக்குப் பதிலா அவர் உச்சியை வருடி நெத்தியில தார முத்தத்தை  எனக்கே மட்டுமான பொக்கிசம் என்ற மதர்ப்பில பெற்றுக் கொண்டு, அவை கதைச்சது  என்னவென்று சரியாகப் புரியாமல்  அலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தேன்.

பாட்டி கண்ணை துடைச்சதால எதோ கவலையான விடயம் தான் கதைக்கினம்  போல என்று  நினைச்சு எனக்கும் அழுகை வந்தது.


அதுக்குப் பிறகு ஒரு நாள், சித்தி உடுப்புத் தைக்க  துணி வெட்டேக்க அளக்கிற ரேப் மாதிரி ஆனால் அதைவிடப் பெரிசா ஒரு ரோலில சுத்தினமாதிரியான பொருள் எல்லாம் கொண்டு ரெண்டு பேர் வந்திச்சினம்  எங்கட காணி எல்லாம் திரிஞ்சு திரிஞ்சு எதோ அளந்து  எழுதிச்சீனம். பெரிய பூவரசைத் தறிச்சு  நல்ல மொத்தக் கட்டையை  முன்னால பென்சில் சீவிறது போல சீவி அவியல் காட்டின இடத்தில எல்லாம் தாத்தா நல்ல ஆழமா இறுகினார்.  பிறகு அதில சீமெந்து தூண் வைச்சு இருக்க வேணும் என்று அவர்களோடும் பாட்டியோடும் கதைச்சார்.

அவர்கள் எல்லைகள் பிரிச்சு விட்டிட்டு போனதுக்குப் பிறகு சித்திக்குக் கல்யாணம்  எண்டு  வீட்டுக்குள்ள ஒரே சந்தோஷ ஆரவாரம் வந்தது. சொந்தம் அயல் எண்டு எல்லாரும் அடிக்கடி வந்து போகத் தொடங்கிச்சினம்.

எப்பவாவது இடிக்கவாற செல்லமாச்சி  எந்தநாளும் வந்து அரிசி இடிச்சு  மாவறுத்து  புதிசா இறுக்கமா பின்னின பெரிய கடகம் பெட்டிகளில போட்டுப் போட்டு மூடி வைச்சா, விடிய வெள்ளன வந்து வெயில் ஏறுறதுக்குள்ள செத்தல் மிளகாய் சரக்குச்சாமான் வறுத்து அறவிட்டிட்டு பொழுதுபட்டு வெயில் அடங்கினப்பிறகு தூள் இடிச்சு அரிச்சு பெரிய பெரிய பழைய ஐஞ்சு கிலோ ஹோர்லிக்ஸ் போத்தலுகளில போட்டு மூடி வைச்சா.  பயறும உளுந்து  வறுத்து குத்தி வைச்சா. கொத்தமல்லியும் வேர்க்கொம்பும்  அதிமதுரமும்  போட்டு  மணக்க மணக்க கோப்பி  இடிச்சு ஆறவிட்டு  போத்திலுகளில நிறைச்சு வைச்சா.

எந்த நேரமும் ஆக்கள் வரப் போக பசுப்பால் காச்சி கோப்பி போட வாய்க்காதெண்ட படியால், எப்பவாவது  பாயாசம் காச்சும் போது மட்டும் வாங்கிற ஒரு பேணி டின்பாலை  இப்ப அளவு கணக்கில்லாமல் வாங்கிக் குவிச்சினம்.  வாங்கின எல்லாப் பொருளுக்குள்ளும் எனக்கு அதிக சந்தோசம் டின்பால் வாங்கினது தான்.  அடிக்கடி குசினிக்குள்ள  ஓடிப்போய் அதை உள்ளங்கையில  ஊத்தி நுனிநாக்கில ஒத்தி ஒத்தி ரசிச்சு ரசிச்சு சுவைச்சுக் கொண்டு திரியும் போது தான்  பார்த்தன்  வந்திருந்த ஆக்கள் தவிர எங்கட வீட்டுக் காரரிடம் சந்தோசமும், வழமையா எங்கட வீட்டில இருக்கிற கலகலப்பும் இல்லை மாதிரி தெரிஞ்சுது. வெளியால கேக்காத மாதிரி வீட்டின்ர பெரியாக்கள் ஏதோ குசு குசு என்று கதைச்சுக் கொண்டிருந்தினம்.

"பேசுக்குள்ள இவ்வளவு எண்டு தெளிவா சொன்னனீங்க  தானே" அம்மா

"ஓம். எல்லாம் சொன்னது தான் .  அப்ப ஓமோமெண்டு மண்டையை மண்டையை ஆட்டிப் போட்டு இப்ப இன்னும் கொஞ்சம் அதிகமா வேணுமாம். அந்த தோடைமரம் தங்கட பக்கமா வார மாதிரி பார்த்து எல்லையை போடட்டாம்" எண்டா அம்மம்மா ஒரு மாதிரிக் குரலில்.

அப்பத்தான் அம்மா சொன்னா "கேட்டதை குடுத்து முடிச்சு வையுங்கோ" எண்டு.

"அது உனக்குத் தந்தது பெரியபிள்ளை.  இந்தக் குழந்தைக்குச் சேரவேண்டியது"  எண்டு குசினிக்குள்ள டின்பால் ஊத்தி நக்கப் போன என்னை இழுத்து தூக்கி அணைச்சுக் கொண்டு  தாத்தா சொன்னார்.

"அது பரவாயில்லை  முற்றாகின கலியாணம் ஒரு காணித் துண்டால  குழம்ப வேண்டாம் அவளாவது வாழட்டும்."  அம்மா திடமா சொன்னா.

"அது இந்தப் பாலனைச் சேரவேண்டியது  நாளைக்கு அதுக்கொரு நல்லது கெட்டது வரும் போது என்ன செய்யிறது"  பாட்டி.

"அதுக்கு அப்பிடி ஒன்று வாறதுக்கு இன்னும் எத்தினை காலம் கிடக்கு.  இப்ப எதுக்கு அதைப்பற்றி யோசிக்கிறியள்.  இப்ப எது நடக்க வேணுமோ அதை இப்ப பாருங்கோ.  பிறகு நடக்க வேண்டியதை பிறகு பார்ப்பம்" அம்மா

"பிறகு பிள்ளையின்ர காலத்தில....."  பாட்டி இழுத்தார்

"பிள்ளையின்ர காலத்தில  என்ர  சகோதரங்கள்  என்ன ஒதுக்கி ஒண்டுமில்லாமலே  விடப் போகுதுகள்.  என்ற பிள்ளை கெட்டிக்காரி. தைரியமானவள். தகப்பனை போல துணிவா வளர்ப்பன்  தனக்கு  எது தேவையோ  அதை அவளே தேடிக் கொள்ளுவாள்.  எனக்குப் பிறகு அவளை அணைக்கவும் அன்புகாட்டவும் என்ர  சகோதரங்கள் இருந்தால் போதும் எனக்கு..  நீங்கள் ஓமெண்டு சொல்லி கல்யாண மிச்ச அலுவலை பாருங்கோ   நான் சைன் வைச்சுத் தாறன்"  அம்மா திடமா சொன்னா.

தாத்தாக்கு  கோபம் வந்தால் மற்ற ஆம்பிளைகளை போல கத்த மாட்டார்.  ஆனால் கதைக்காமலே இருந்து உயிரெடுப்பார்.  அப்பவும்  ஒண்டும் கதைக்காமல்  தான் என்னை தூக்கிக் கொண்டு வெளியில வந்தார். அதுக்குள்ளே  நான் எட்டி குசினித் தட்டில இருந்து இன்னொருக்கா உள்ளங்கையில  டின்பால்  ஊத்திக்கொண்டு நுனிநாக்கில நக்கினன். "என்ர கண்ணம்மா வளர்ந்து ஒருவழியில போறவரைக்கும் நான் இருந்திட  வேணும் ஆண்டவரே" என்று தனக்குக் கேக்கிற மாதிரி முனகினார் அது எனக்கும் கேட்டது. ஆனால்  ஆண்டவருக்கு கேட்கவில்லை.

கல்யாணத்துக்கு  முதல் திரும்பவும் காணி அளக்கிற ஆக்கள் வந்து திரும்பவும் எல்லை குத்தி   வேலிகள் அடைத்து சித்திக்கு கல்யாணம் சந்தோசமா நடந்தது. அதால அவ்வளவு  நாளா  எல்லைகள் என்ற சொல் க்ளதைக்கிற நேரமெல்லாம் வீட்டில ஏதோ ஒரு இறுக்கம் இருந்த மாதிரி இருக்க, அதைக்கண்டு எங்கட சந்தோசம் ஏதோ துலையப் போகுதோ எண்டு பயந்த மாதிரி இல்லாமல், எல்லைகள் என்பது   அர்த்தமில்லாதது மாதிரி அழவேண்டிய பயமில்லாதது மாதிரி இருக்க பிறகு நான் அதை சந்தோசமா மறந்து போனேன்.


அம்மாவின் சகோதரங்களுக்கு  அப்போது நான் தான் முதல் குழந்தை. கல்யாணத்திலும் சித்தியை விட்டு பிரியாமல் மணவறையில் இருந்த சித்திக்கும் சித்தப்பாவுக்கும் நடுவில் காலடியில் நானும் இருந்தேன். ஓமகுண்டப் புகை எல்லாம் முகத்தில வாங்கி வெந்து கொண்டு . சித்தப்பா தூக்கிக் கொண்டார். பிறகு கொஞ்ச நாளையில எங்கள் குடும்பம் அவருக்கு பழக்கத்துக்கு வர இடையில கிடந்த எல்லை வேலியையும் வெட்டிப் போட்டார். ஒருவேளை கலியாணத்தின் போது ஒற்றைக்காலில் நின்று ஒப்புக்கொண்டதை விட அதிகமாகக் கேட்ட குற்றவுணர்வாகவும்  அதை அந்த வேலியும்  எல்லையும் ஞாபகப் படுத்திக் கொண்டும் இருந்திருக்கலாம்.

  பிறகு சித்தி காணி பிரித்து எல்லை போட்டுக் கொடுத்த போதுஅவர்கள் பக்கத்தில் புதிதாகப்  போட்டிருந்த கேட்டையும் இழுத்து கட்டிப் போட்டா. எப்பவும் போல் ஒரே பாதை ஒரே வாசல்  என்று பிரிவினை தெரியாமல் இருந்தது வாழ்க்கை.



சித்தப்பா வரும் போது அவராகக் கேட்டாரோ, அன்றி அநேகமான எம்மவர் கல்யாணங்களைப் போல அவருக்காக மற்றவர்கள்  அதகடியாகக் கேட்டார்களோ தெரியாது.  ஆனால் ஒரு திருமணத்தின் ஆரம்பத்தில் பேதங்களையும் பிரிவினைகளையும் அடிமனதுக்குள் நிரந்தரமாகத்  தோற்றுவிப்பதில் இந்த அதகடித் தனங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

இருந்த போதும் சித்தப்பா   பேதங்கள் தெரியாத பாசமான மனிதன்.  நிறைய பழமைகளை கொண்ட புதுமைக்குள் வர விரும்பாத பழமைவாதி , மாசிப்பனி மூசி மூசி பெய்து கொண்டிருக்க விடிய வெள்ளன எழும்பி கிணத்தில மொண்டு மொண்டு குளிர்  தண்ணிய  தலையில  ஊத்திப் போட்டு நெத்தி நிறைய விபூதியை அப்பிக்கொண்டு வாசலில போய் கிழக்கே பார்த்து காத்திருந்து சூரிய உதயத்தை கும்பிடுவார்.

பிறகு  கையோட வந்து, அவர்களுக்கு கல்யாணம் நடந்து முடிஞ்சு அந்த கொஞ்சக் காலத்தில இன்னும் ஒரு பசுவும் பசுக்கன்று போடாததால பாட்டி தாத்தா இன்னும் அவையளுக்கு வாசலில் கட்ட பசுக்கன்று குடுகாததால, எங்கட வீட்டு முற்றத்தில கட்டி நிக்கிற ராசாத்தி பசுவுக்கு ஒரு கைப்பிடி சீமைக்கிளுவை உருவி ஊட்டி "என்னடி ராசாத்தி " என்று கேட்டு கழுத்தை தடவி, பிறகு அப்பத்தான் நித்திரையால் எழும்பி முத்தத்தில நிண்டு எத்தினை பூ புதிசா விரிஞ்சிருக்கு எண்டு எண்ணிக் கொண்டிருக்கிற  என்னையும் தூக்கிக் கொண்டு போய் சித்தியிட்ட தேத்தண்ணி வாங்கிக் குடிக்கேக்க மறக்காமல் நச் என்று தும்முவார்.

அடுப்பில சட முட என்று வெடிக்கிற பனம் பன்னாடையை விட சித்தியின் முகத்தில் அதிகமா வெடிக்கும் அந்த தும்மலுக்கு .
அது போதாமல், தான் குடிக்குமுன் அந்த தேத்தண்ணியை எனக்கு பருக்க " புள்ள இன்னும் பல்லும் தீட்டயில்ல அவளுக்கு உந்த வெறுந்தேத்தண்ணியை குடுக்காதேங்கோ விடிய வெறும் வயிறு சுட்டுப்போடும் குழந்தைக்கு . அக்கா பால் தவிர அவளுக்கு ஒண்டும் குடுக்கிறதில்லை . கண்டா கத்துவா" சித்தி சொல்லிக் கொண்டே இருப்பா சித்தப்பா பருக்கிக் கொண்டு இருப்பார்.


அம்மா எல்லா அம்மாவும் போல அன்பானவ, ஆனால் படிப்பு பழக்கவழக்கம் என்று வரும் போது நிறைய கண்டிப்பானவ எல்லா அம்மாவும் போல . காணியின் முன் பக்கம் உள்ள எங்கட வீட்டில இருந்து "புத்தகத்தை எடு" என்றுஅம்மா சொன்னால் போதும் , காணியின் முடிவுப்பகுதியில் இருந்த சித்திவீட்டுக்குள் இருக்கும் சித்தப்பாவின் ஊசிக்காதில் சுரீர் என்று ஏறி அதை விட கோபம் இன்னும் சுரீர் என்று ஏறி

"இந்தக் குழந்தைக்கு எதுக்கு இப்ப படிப்பு . அவள் படிச்சு உழைச்சு தான் இஞ்ச விடிய வேணுமா ? கொக்கா குழந்தையை கொல்லப்போறா பாரு " என்று சித்தியுடன் கத்தி விட்டு வீர நடை நடந்து வந்து என்னை காப்பாற்றித் தூக்கிப் போய் விடுவார்.

"உன்ர  மனிசன் கடைசியா புள்ளையைவெறும் மொக்காக்கி பழைய பஞ்சாங்கமா நாசமாக்கப்போகுது பார் . உன்ர மனிசன் இரவில வேலையால வந்த பிறகு பிள்ளையை படிப்பிக்க பேச அடிக்க வெருட்ட எதுவும் ஏலாது" என்று சித்தியிட்ட புறு புறுத்து புறுத்து அம்மா அது எல்லாத்தையும் பகலில் தான் செய்வா.

வடிய வடிய தலையில் நல்லெண்ணெய் ஊற்றி படிய வாரி விடும் வழக்கம்  அம்மாவுக்கில்லை . கிழமையில் ஒரு நாள் பாட்டி தான் சட்டியில சீரகம் எல்லாம் போட்டு, நல்லெண்ணெய் விட்டு அதை கொதிக்க வைத்து தடியோட ஓடி என்னைத்  துரத்தி பிடிச்சு கொதிக்க கொதிக்க தலையில் ஊத்தி " ஆண்டவரே இந்தப்பிள்ளைக்கு ஏன் இவ்வளவு கத்தை முடியை கொடுத்தாய் எண்ணெய் வைக்க சிக்குத்தட்ட என்று இவளை துரத்தி பிடிக்கவே பிராணன் போகுதே " என்று அதுக்கும் கடவுளை பேசிக்கொண்டு எண்ணெய் பூசி சீயக்காய் வெந்தயம் அவிச்சு அரைச்சு முழுக வாப்பா.

அம்மா எப்பவும் கிங் கோகனட் ஒயில் மட்டும் தலைமுடியின் வேர்ப்பகுதியில் போட்டு மசாஜ் பண்ணி , எக் ஷாம்பூ போட்டு நோகாமல் நுரைக்கத்தடவி முழுக வார்ப்பா. பாட்டியிடம் பேச்சு வாங்கிக் கொண்டே. முழுகிப்போட்டு வர ஷம்போவும் சண்டில்வூட் சோப் உம் ஓடிக்கோலனும் கலந்து வாற கதம்ப வாசத்தில எனக்கே என்னை முத்தமிட வேணும் மாதிரி இருக்கும்.

சித்தப்பா மட்டும் " உந்த கொழும்பு வளர்ப்பை கொக்கா எப்ப விடப்போறா. கண்டதெல்லாம் போட்டு பாலனின்ர ஆரோக்கியம் கெட்டுப் போச்சு " என்று சித்திக்கு அரிச்சனை செய்து கொண்டிருப்பார்.


சித்தப்பாவுக்கு அவர்கள் செய்தது எல்லாமே மிக மிக தப்பாக தெரிய, உச்சியில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் நல்லெண்ணையில் ஊறவைத்து , போதாக்குறைக்கு அதை கண்ணிலும் விட்டு கொடுமைபடுத்தி , நாள் முழுதும் அந்த எண்ணெய் உடம்பில் ஊறவிட்டு பிறகு வீட்டுக் கிணத்திலும் குளிக்க வார்க்காமல் தோளில தூக்கிக் கொண்டு தோட்டத்துக்கு போய் உச்சி தொட்டு பாதம் வரைக்கும் அரப்பு எலுமிச்சை போட்டு வைரம் பாஞ்ச தன்ர கையாலபோட்டு தேய்க்கேகுள்ளேயே என்ர கைகால் எல்லாம் பாதி கழண்டு தொஞ்சு தன் பாட்டில சோர்ந்து ஆடத் தொடங்கிடும்.

பிறகு மோட்டரை போட்டு குழாயால சீறிக்கொண்டு வாற வேகத்தண்ணியில நான் குழறக் குழற கிட்ட வைத்து முகத்தை பிடிச்சிருப்பார். அவர் குளிச்சு முடிச்சு வர முன்னமே நான் அங்கு கிடக்கும் ஏதாவதில் ஒன்றில் சுருண்டு நித்திரையாகி இருப்பேன். தூளில தூக்கிக் கொண்டு வந்து நித்திரையால எழுப்பி பிரக்கடிக்க பிரக்கடிக்க காரமா மிளகு ரசம் பருக்கி படுக்க வைப்பார்.



சிறுவயதில் நான் அதிகம் நடக்க கூட சித்தப்பா விட்டதில்லை . அனேகமா என்னை தோளில் தூ க்கிக் கொண்டு தான் திரிந்தார். நான் ஒரே முறை மட்டும் போன பத்தினிப்பாய் கண்ணகை அம்மன் கோவில் இப்போதும் நினைவிருக்கு. இப்ப எப்படி இருக்கோ தெரியாது . அப்ப பிரதான வீதிவரை தான் பஸ் ஓடினது.

வீதியில் இருந்து மண் அல்லது காட்டுப் பாதையால் நிறைய நடக்க வேண்டி இருந்த ஞாபகம். நடந்தால் கால் வலிக்கும் ,சுடுமண் காலில் பட்டு பொக்களித்து விடும் என்று அத்தனை தூரத்தையும் தோளில் தூக்கி தான் நடந்தார். அங்கே போய் யாரோ ஒரு பெண்ணுக்கு சாமிவந்து உருவாடினத்தை முதல் முதல் பார்த்து நான் பயந்து கத்தினத்தில் அவர் பிறகு தானும் அங்கு போகவில்லை.

பிறகு நான் வளர்ந்து கேக்க இப்ப எல்லாம் நாட்டுப்பிரச்சனையில போக முடியாது கொஞ்சம் குறைய கூட்டிப் போவதாக சொன்னார் . நாட்டுப்பிரச்சனை குறைந்த போது நான் நாட்டில் இல்லை. நான் தாய் நாட்டை பிரிந்த அன்று அவர் உலகை விட்டுப் பிரிந்திருந்தார்.



அந்த அந்த நாட்களில் வேலையால் இரவு வரும் போது எப்பவும் கடையில் ஏதாவது எனக்கு வாங்கி வருவார் எங்கள் வீட்டை தாண்டும் போது நின்று என்னிடம் அதை தந்து விட்டு தான் போவார்.

சித்தப்பா கலியாணம் கட்டி வரும் வரை கடைப்பணியாரம் எதுவும் சாப்பிடக் கூடாது என்று எதுவும் வாங்கித் தருவதில்லை. சித்தப்பா தந்ததை நான் சாப்பிட அம்மாவுக்கும் பாட்டிக்கும் கண்களில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்

. ஆனால் வாய்திறக்க மாட்டார்கள் திறந்தால் சித்தியின் அமைதி கெட்டு விட்டாலும் என்ற பயம்.குடும்பத்தில் உள்ளவர்களுக்காக  இந்தஅமைதிகெட்டுவிடும்பயத்தை தான் ஊட்டி ஊட்டிபேசவேண்டியநேரங்கள்,தனக்கானஉரிமைகளுக்காகப் போராட வேண்டிய நேரங்கள் எல்லாவற்றிலுமே அமைதி காக்கவைத்து இறுதியில் கேள்விகளே வாழ்க்கையாகிப் போகவைப்பதில், பதில் தெரிந்தும் இறக்கும் வரை  மௌனமாகவே பழியேற்று  மறுகிச் சாவதற்கும் எங்கள் சமுதாயங்கள் குடும்பங்கள் போல வேறெங்கும் உதாரணங்கள் இருப்பதாக நான் எண்ணவில்லை. 


அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்த போது என் தம்பி என்று சொல்லித் தந்தார்கள். எனக்குப் பிடித்த பெயரையே வைக்கச் சொன்னார்கள். நான் என்னோடு கூட நேசரியில் அப்போது படித்துக் கொண்டிருந்த என் முதல்  நண்பனின் பெயரை வைத்தேன்.

அடுத்தடுத்த குழந்தைகள் பிறந்த போது அந்தப் பெயருடன் பொருந்த பெயர் வைத்து என் தம்பி என் தங்கை என்று சொல்லித்தந்தார்கள். நாங்கள் சேர்ந்து வளரத் தொடங்கினோம் .



தங்களுக்கு குழந்தைகள் வந்த பிறகும் என்னை படிக்க யாராவது வெருட்டினால் கூட சித்தப்பாவுக்கு பிடிக்காது. என்னை விட்டு சாப்பிட சித்திக்கு பிடிக்காது. என்னை விட்டு இருக்க என் தம்பி தங்கைமாருக்கு தெரியாது. அப்பவும் சித்தப்பா இரவு வேலையால் வரும்போது கடை முறுக்கு வாய்ப்பன் வடை என்று வாங்கிக் கொண்டு தான் வருவார். எங்கள் விறாந்தை வாசலில் நின்று படித்துக் கொண்டிருக்கும் என்னை கூப்பிட்டு அதைத் தந்து " பிரிச்சு தம்பி தங்கச்சிக்கும் குடுத்து சாப்பிடு " என்பார். அவரது செயல்களை அதிகம் அனுபவித்தது அவர் பெற்ற பிள்ளைகளை விட நான் தான். பின்நாட்களில் போர் அவலங்கள் என்று வந்ததில் அந்த வாய்ப்புக்கள் அதிகம் அவர்களுக்கு இருக்கவும் இல்லை சித்தப்பாவின் இந்த முகம் அவர்களுக்கு அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பும் இல்லை.


இரவு வேலையால் வந்து குளித்து சாப்பிட்டு படுக்கும் போது சித்தப்பா குடிப்பார். எங்கள் குடும்பத்தில், குடி உள் நுழைந்த முதல் சந்தர்ப்பம் என்பதால் நிறைய வீட்டில் முகச்சுளிப்பு இருந்தது. பத்தாக்குறைக்கு குடித்து விட்டு உளறத் தொடங்கினால் அது இன்னும் முகச்சுளிப்பும் முணு முணுப்புமாக மாறும். சித்தி வானமே கவிண்டு தலையில விழுந்த மாதிரி எங்கட விறாந்தையில வந்து இருந்திடுவா.

சித்தப்பா எப்போதும் நான் எது சொன்னாலும் கேட்பார். குடியிலும் உளறலிலும் கூட . நான் போய்" போதும் வாயை மூடிக் கொண்டு படுங்க சித்தப்பா" என்றால் அடுத்ததா ஒரு வார்த்தையும் சொல்ல மாட்டார் படுத்து விடுவார்.

குடிக்காத நாட்களில் இரவு நிலவு வெளிச்சத்தில் வைத்து கதைகள் சொல்லுவார் . அது இந்த உளறலை விட கொடுமையாக இருந்ததாக இப்ப நினைச்சால் தோன்றுகிறது. உள்ள புராணம் இதிகாசம் எல்லாவற்றையும் தன் விருப்பத்துக்கு கற்பனை கலந்து நல்லா கதை விடுவார். நானும் லூஸ் மாதிரி கண்ணை விரிச்சு கேட்டுக் கொண்டிருப்பன் . காண்டாமிருகம் எங்கள் வீடளவு என்பார் பிரமிப்பா இருக்கும் , அதை விட இன்னும் ஏராளம் பிரமிப்புக்களில் சித்தப்பா ஹீரோவா தெரிவார்.

பிறகு நான் அம்மாவுக்கு அந்த கதையை நான் வந்து  சொல்ல அம்மா தலை தலை எண்டு அடிச்சுக் கொண்டு அந்தக் கதையை சரியா சொல்லித்தருவா. ஆனால் நான் ஏற்கவே மாட்டேன். ஏனென்றால் உண்மைகள் எப்போதும் சுவாரசியமும் பிரமிப்பும் ஏற்படுத்துவதில்லையே.


நான் வளர்ந்தேன். என் கையை பற்றிக்கொண்டு தம்பி தங்கை முதல் அடி எடுத்து நடக்க பழகி வளர்ந்தார்கள். என் கைபிடித்து பள்ளிக்கும் போனார்கள் . நான் பழக்க சைக்கிள் பழகினார்கள் . பின் வளர்ந்து அதில் என்னை இருத்து வைத்து ஓடினார்கள் .

எங்களோடு போரும் வளர்ந்தது . சிதைத்தது சிதறி ஓடினோம் . ஒரு முறை இரவு அகோர ஷெல் தாக்குதலால் வீட்டை விட்டு ஓடி ஒரு கோவிலில் தங்கிவிட்டு அதிகாலை வீட்டுக்கு வரும் போது வீட்டுக்குள் ஆமி காத்திருந்து. பிடித்து சுடாமல் ஹவுஸ் அரஸ்ட் மாதிரி இருத்தி வைத்தார்கள் .

எங்கட வீட்டு வைக்கோற் போருக்குப் பின்னால் மறைந்திருந்து எங்கட வீடு தாண்டும் ஒவ்வொரு மனிதர்களையும் கவ்விப் பிடித்து எங்களுடன் கூட துப்பாக்கி முனையில் இருத்தி வைத்துக் கொண்டு புலிவரும் என்று காத்திருந்தார்கள்.



அன்று தம்பி ஒருவன் வேறு கோவிலில் இரவை கழித்து விட்டு, விடிய வீட்டுப்பக்கம் ஆமி என்று அறிந்து எங்களுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்ற பயத்தில்  துடித்துக்கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தான். அவனை பிடித்து விடுவாங்களோ சுட்டு விடுவாங்களோ என்ற பயத்தில் ஆமியின் ஆயுத எச்சரிக்கையையும் மீறி வாசலுக்கு ஓடிக் கொண்டே

"ஆமி இருக்கு நீ வராதேடா " என்று நான் கத்தினேன் அவன் நிக்காமல் ஓடி வந்து கொண்டே இருந்தான். அந்த நேரம் எனக்கு தம்பி உள்ளே வரக்கூடாது இவர்களிடம் மாட்டுப்படக் கூடாது என்பது தவிர உயிர் பற்றி ஆயுதம் பற்றி எதுவும் தெரியவில்லை . இருத்திவைத்த இடத்தில் இருந்து கேற் கடந்து தம்பியை நோக்கி நான் ஓட அவன் என்னை நோக்கி ஓடி வர அம்மா சித்தி மற்ற அங்க இருந்த எல்லாரும் பயந்து பதறி குழற நானும் தம்பியும் வாசலில் ஒருவரை ஒருவர் இறுக்கி கட்டிப்பிடிச்சுக் கொண்டு தான் என்ன ஆபத்தின் நுனியில் நிக்கிறோம் என்று உணர்ந்தோம்.

அன்று ஆமி சுடவில்லை காக்கிக்குள்ளும் ஈரம் இருந்திருக்கலாம் . உள்ளே இருந்து வந்தான் வெருண்டு போய் முகத்தை பார்த்தேன் அந்த நேரம் வீட்டில் நின்ற எல்லா ராணுவத்துக்கும் முகம் சோர்ந்து பரிதாபமாகத்தான் பார்த்தார்கள் போய் இருக்க சொல்லி சைகை காட்டினார்கள்.


இப்படி பல அனுபவங்களோடு உறவும் உரிமையும் உயிரை துச்சமென்று நினைக்க வைக்க நாங்கள் வளர்ந்து பின் உலகெல்லாம் சிதறி உள்ளத்தால் பிரியாமல் வாழ்ந்தோம். இடையில் நான் இங்கு வந்த பின் என் தம்பிமார் இக்கட்டான சூழ்நிலைகளை நிறைய சந்தித்தார்கள். அம்மா என்னை மறந்து விட்டு அவர்களை மீட்க அலைந்து கொண்டிருந்தா. நான் கடவுளை நம்பிக்கொண்டு விரதத்தை பிடித்துக் கொண்டு கிட்ட இந்துக் கோவில் இல்லாத காரணத்தால் மேரியம்மாவிடம் போய் மாரியம்மா தாயே என்று வரம் கேட்டுக் கொண்டிருந்தேன்.


பணம் இருந்தால் வெளிநாடுகளுக்கு வருவது மிகப் பெரிய பிரச்சனை கிடையாது. ஆனால் இங்கு நிராகரிப்பே இல்லாமல் அகதி அங்கீகாரம் கிடைக்க உண்மை ஆதாரங்கள் தேவை. அதை வைத்திருப்பவர்கள் அதை அத்தனை சோதனைச்சாவடிகளையும் தாண்டி கொண்டு வருவது உயிரைப் பணயம் வைத்த சிரமம் . நேகமாக இந்த மோட்டுத் துணிச்சல் எனக்கு எப்போதாவது இக்கட்டில் வருவதுண்டு. அப்படித்தான் அவனின் அத்தனை ஆவணங்களையும் ஒவ்வொரு சோதனைச்சாவடியிலும் உயிரை கையில் பிடித்து இங்கு கொண்டுவந்தேன் . அதனால் நிறையப்பேரிடம் அவர்களின் உயிரைப்பணயம் வைத்தது போல வாங்கிக் கட்டிக் கொண்டேன் எப்போதும். அப்போதும் நான் அவன் என் தம்பி என்னால் அவர்களை இழக்க முடியாது என்றேன் விட்டுக் கொடாமல் .



பின் கல்யாணம் என்று என் தங்கை வந்தாள். ஊரில் எல்லாவற்றையும் முற்றாக்கி விட்டு மிகுதியை இங்கு நீ கதைத்து முடி என்றார்கள். எல்லாம் ஒரு முடிவுவரை சந்தோசமாகவே நிறைவுக்கு வரும் வேளையில் எதோ கனவில் இருந்து முழிச்ச மாதிரி ஒரு கொடுமை அப்ப தான் எழும்பி நின்று " நான் இருக்க இவளுக்கு என்ன உரிமை " என்று ஜிங்கு ஜிங்கு என்று உரு வந்த மாதிரி ஆட,

சித்திப்பா  கலியாணம் கட்டி வரும் போது பேசிய காணியை விட கூடக் கேட்டு  அம்மா எழுதிக் கொடுக்க நேர்ந்த நாடகம்  அடுத்த சந்ததியில்  மீண்டும் அரங்கேறியது . கல்யாணம் பேசிய ஒரே குற்றத்துக்காக  அவள் தற்போது வாழும் நாட்டில் நான் வீடு தருவதாக ஒப்புக்கொண்டதாக ஒரு பொய் அதகடி ஒப்பனை அரங்கேறத் தொடங்கியது. ஐந்து வயதில் புரியாத உலகம்   இப்போது புரிந்தது. இது தொடரக் கூடாது  நான் கற்றுக் கொள்ளும் கரிய பக்கங்களை என் குழந்தை விரிக்கவே கூடாது  என்ற தீர்மானமும் உறுதியாகியது.  என் குழந்தைகள்  எங்கள் சமுதாய சாக்கடைகளுக்குள் எட்டிக் கூடப் பார்க்கக் கூடாது என்ற பிடிவாதம்  ஒதுங்க வைத்த போதும்,

  எப்படியாவது தங்கச்சிக்கு கல்யாணம் நடந்து அவள் சந்தோசமா இருந்தால் போதும் என்று நான் ஒதுங்கிக் கொண்டேன் ஆனால் உள்ளுக்குள் அரைவாசி செத்துப்போனேன்.



சிலருக்கு கல்யாண  வீடுகளில் தாமே மணமகளாக இருக்க வேண்டும்  இறப்பு வீடுகளில் தாமே பிரதானமாக பிணமாக இருக்க வேண்டும் என்பதான ஒரு மனப் பிறழ்வு. அடுத்தவர்  உரிமை உயர்வு  எதையும் பிடுங்கிக் குதித்தாடும் வக்கிர நோய்  இருப்பதுண்டு  வாழ்க்கையின் அர்த்தம், வாழ்நாட்களின் நிரந்தரமின்மை  புரியாத பிசாசுகள் பேயாடும் இடங்களில் அவைகளோடு கூட்டுச் சேர்ந்து  மனிதர்கள் இருக்க விரும்புவதில்லை. ஆதலால்  நான் நிரந்தரமாகவிலகிக்கொண்டேன்



பிறகு இன்னொரு தம்பியின் கல்யாணம் வந்தது. தம்பி வேறு நாட்டில் இருந்தான். முதல் மாதிரி தான் . ஆளை அடையாளம் காட்டி கல்யாணத்தை பேசி முடி என்றார்கள். இப்பவும் வளைய வேண்டிய இடத்தில் வளைந்து நெளிய வேண்டிய இடத்தில் நெளிஞ்சு புன்னகைத்து.,.. உங்களுக்கு தெரியாதா எங்கட சமூகத்தில ஒரு கல்யாணத்தை பேசி முடிக்கிறது எவ்வளவு பெரிய போராட்டம் என்று. எல்லாம் ஒரு நிறைவுக்கு வாற நேரம் பார்த்து

" அவர் வந்து எங்களோட ஒருமாசம் ரெண்டு மாசம் இருந்து பொம்பிளையோட பழகிப் பார்க்கட்டும் . ரெண்டுபேருக்கும் ஒத்து வந்தால் அப்ப கட்டி வைப்பம் சரிவராட்டி அவர் திரும்பி போகட்டும்" என்று பொம்பிளையின் அம்மா பெரிசா ஒரு வெள்ளைக்கார வெடிகுண்டை தூக்கி போட நான் அதில வெடிச்சு சிதறி கடவுளே என்ர குடுமபம் முழுதும் என்னை கூட்டி வைச்சு கும்மியடிக்கப் போகுதே என்று பயந்து அவசர அவசரமா ரெண்டு பேரையும் கதைக்க ஒழுங்கு பண்ணி விட்டன் கதைச்சு பழகி ஒத்து வருகுதோ பார்ப்பம் எண்டு.


பிறகு ஒரு மாதிரி கதைச்சு பேசி ஒத்துவந்து , கல்யாணம் வர முன்னர் முதல் கேள்வி வந்தது . அதுவும் என் முகத்துக்கு நேரே என்னை நோக்கியே வந்தது

"அவையள் அக்கா என்றால் ஏன் அடுத்த கதை கதைக்காமல் தூக்கி தலையில வைச்சுக் கொண்டாடுகீனம் நீங்கள் என்ன சொந்த அக்காவா அவையளுக்கு "

என்று. அது உண்மையாவே முக்கியமான பெரிய கேள்வி தானே இல்லையா பின்னே ? எங்கட பரம்பரையில் உறவில் ஊரில் யாருக்கும் கேட்கத் தோன்றாத , வீட்டுக்கு வர இருந்த மருமகளின் முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போனது எனக்கு.

" அவரின்ர சகோதரங்கள் இஞ்ச வந்தால் எதுக்கு உங்கட வீட்டில தங்க வேணும் நான் எல்லோ அவையளுக்கு உரிமை கூட ."

இது கேள்வி இல்லாமல் பதிலாக வந்தது அதுவும் மிக முக்கிய உண்மை தான் . இந்த அதி முக்கிய உண்மை எல்லாம் தெரியாமல் என்னை வளர்த்தது தான் என் குடும்பம் செய்த பெரிய தப்பு.


அதுக்கு பிறகு அவனை நான் தம்பி என்று சொல்லவில்லை

" இங்கே பாருங்கோ உங்களுக்கு பேசினவர் இஞ்ச வந்து உங்களுக்கு கல்யாணம் நடந்த பிறகு மற்றவை வந்து உங்களோட தங்கட்டும். பேசி இருக்கிற ஒரு வீட்டில எங்கட வீட்டுக் காரர் கல்யாணத்துக்கு முதல் கை நனைக்க சம்மதிக்க மாட்டீனம். என்னை ஒவ்வொன்றுக்கும் வில்லங்கப்படுத்திறதும் , அதுகுள்ள அவரின் தனியா இருக்கிற  மூத்த சகோதரனை உங்கள் வீட்டில் வந்து தங்க சொல்லி வற்புறுத்துவது என் வீடு எனக்கு சொல்லித்தந்த பண்பில்லை" என்றேன்.

"அது எப்பிடி நீங்க முடிவு செய்யிறது. அவையளில எனக்கெல்லோ உரிமை கூட. கூடப்பிறக்காத ஒண்டவிட்ட சகோதரம் எண்டால் பிற த்தி தானே நீங்க "

என்று மிகச்சரியான உறவு நிலை விளக்கம் வார்த்தைகளாய் உச்சியில் அறைந்தது.

பின்னே சரி தானே அது . கறிக்குப் போட்டு தேவையான வாசனையை உறிஞ்சி எடுத்த பிறகு கறிவேப்பிலையையும், சொதிக்குப் போட்டு சாறை உறிஞ்சின பிறகு அகத்தியையும் புறத்தி என்று தூக்கி வீசுறது தானே எங்கட பண்பு. பண்பு மீறினால் தப்பெல்லோ இல்லையா பின்னே ?


எப்படித் தொடரப்போகின்றன என்பதை ஆரம்பங்களிலேயே அவர்கள் உணர்த்தி விட்டபின் விலகிக் கொள்வது தான் முறை. அது நான் நேசித்த என் சகோதரங்களின் அமைதியை காப்பாற்றும்.

நாளுக்கு நாள் புதிசு புதிசா ஒவ்வொன்றிலும் குறை தேடி குற்றம் கண்டு அவைகளை என் தலையில் போட்டு சிலவேளை சண்டைகள் உருவாக்கப்பட்டு இறுக்கி அன்பா அணைத்திருந்த கைகளாலேயே ஒராளை ஒராள் அடிபட்டு மனம் உடைந்து சாவதை விட இது மேலானது. என்றோ ஒரு நாள் நான் இறந்து போகும் போது ஒருவேளை இவள் எங்கள் அக்கா என்பது உங்களுக்கு உறுத்தினால் அது நான் உங்கள் மீது வைத்த உண்மை அன்பின் பரிசாக இருக்கட்டும் என்ற முடிவுடன் ஒதுங்கிக் கொண்டேன்.



அதுக்கு பிறகு சிலவடருடங்கள் கழித்து நான் ஊருக்குப் போன போது எங்கள் வீடுகள் இருந்த காணிக்குப் போனேன் . வீடுகள் இருந்தாக அடையாளமே இல்லாமல் ஒரு காலத்தை அதன் பாசத்தை நினைவு படுத்திக் கொண்டிருந்த காணியில் , திரும்பும் இடம் எல்லாம்,

"பிள்ளை தலை பின்ன ஓடி வா "

"அக்கா விளையாட வாங்கோ "

" ஓடிவந்து ஒரு வாய் வாங்கிக் கொண்டு ஓடு செல்லம்"

என்று பாசக்குரல்கள் ஆட்களே இல்லாத காணியை சுற்றிலும் என் காதுகளில் அசரீரி போல் எதிரொலிக்க தலை சுற்றி ஆடிப்போய் அப்படியே சோர்ந்து இருந்து விட்டேன்.

சற்று தேறிப் பார்த்த போது அதில் நாங்கள் நட்ட மரங்கள், ஊஞ்சல் கட்டி ஆடிய கொப்புக்கள் , பாய் விரித்து ஒன்றாய் கூடி நிலவு வெளிச்சத்தில் கதை கேட்டுக்கொண்டே ஆ ஆ என்று வாங்கி சாப்பிட்ட நிழல் தந்த வேம்பு எதுவுமே இல்லை . நினைவுகள் கூட இனி எதுவும் வேண்டாம் என்று ஆமிக்காரனே எல்லாம் உழுது தரிசாக்கி விட்டிருந்தான்.


சித்தப்பா விரும்பாத , சித்தி போட விடாத , எங்கள் எவருக்கும் புரியாத எல்லைகள் அப்போதும் அதில் இல்லை. ஆனால் எல்லைகள் தெரிந்தவர்கள் வந்து சொல்லித் தந்து மனதில் எல்லையிட்டு விட்டார்கள். அதற்குள் தான் இனி சித்தியும்  அவர் பெற்ற பிள்ளைகளும்  நிற்பார்கள். நிற்க வேண்டும் அது தான் வாழ்வியல் யதார்த்தமும்

அவர்கள் எல்லைகளை மட்டுமல்ல அதற்குண்டான உரிமைகளையும் வரையறுத்து இருந்ததால் பாட்டி தாத்தா சொன்ன எல்லை இப்போது தான் எனக்கு சரியான அர்த்தத்தில் புரிந்தது. என் குடும்ப சனம் மொக்குகள் எதையும் பொட்டில் அடித்தது மாதிரி மற்றவர்கள் போல விளங்கச் சொல்லத் தெரியாது.

பாட்டி தாத்தா தளிர்க்கவைத்து வேரூன்றும் எதிர்பார்ப்பில் பச்சைக் கதியாலில் போட்ட எல்லைக்கு அன்று கண்கலங்கிய நான் , மனதை இறுக்கி கல்லாக்கி காற்றும் புக முடியாத இறுக்கத்தில் கல் வேலியால் எல்லையிட்டு உறவை, எல்லை தெரிந்தவர்கள் சொல்லித் தந்தது போல வரையறுத்து முடித்தேன்.


எல்லையிட்டபின்

" நீயும் இங்கே இல்லை காணி வீணாகப் போயிடும் விற்று விடு "

என்று பலர் சொன்னார்கள் . நான் விற்கவில்லை. இறுதி வரை என் சந்ததியும் அதை விற்க விடவும் மாட்டேன் . என் காணிக்குள் என் மூதாதைகள் , என்னைத் தூக்கி வளர்த்தவர்களின் மூச்சுக்கள் அன்பாக மூசிக்கொண்டு , என்னுடன் பேசிக்கொண்டு தூங்கிக் கிடக்கின்றன. அவர்கள் கோர்த்து வைத்திருந்த சின்னச் சின்ன கைகள் பிரிக்கப்பட்டு இரத்தம் வடிந்த, கண்ணுக்குத் தெரியாத காயமும் கண்ணீரோடு எல்லைக் கற்களில் ஒருவேளை சாபமாகக் காத்திருக்கலாம்.
.

Saturday, August 26, 2017

என் பெயர் தமிழரசி ஆனால்.....



என்ர பெயர் தமிழரசி. ஆனால் எனக்கு தமிழ் தெரியாது. தெரியாது எண்டால் துண்டாவே தெரியாது எண்டில்லை. உங்களளவு  கதைக்கத் தெரியாது.  தாத்தாவுக்கு தமிழில நல்ல ஈடுபாடு எண்டதால  என்ர  தாத்தா வைச்ச பெயர் எண்டு அம்மா சொல்லுறவ.  நான் பிறந்து வளர்ந்தது ஒரு ஐரோப்பிய நாட்டில.  இந்தமுறை விடுமுறைக்கு இலங்கைக்குப் போனப் பிறகு எனக்கு  மனம் சரியில்லை அது என்னவென்று தெரியவில்லை.  ஆனால்  எனக்குள்ள இருக்கிறதெல்லாம் உங்களோட கதைக்க வேணும் மாதிரி இருக்கு.  உங்களுக்கு விளங்குற மாதிரி என்னால தமிழில கதைக்க முடியாது.  அதால தமிழ் தெரிஞ்ச அக்காவிட்டை சொல்லி அவமூலமா நான் உங்களோட கொஞ்சம் கதைக்கப் போறன்.
.
இந்தமுறை விடுமுறைக்கு  இலங்கைக்குப் போவம் என்று முடிவெடுத்த போதிருந்த சந்தோசம்,  ஆசை ஆசையாய் வெளிக்கிட்டு வந்த போதிருந்த உற்சாகம்,  எங்கட வீடென்று அம்மா காட்டின அம்மம்மா வீட்டுக்கு வந்து  சொந்தம் என்று அம்மம்மா காட்டின எல்லாரையும் பார்த்த சந்தோசம்  எல்லாம் எனக்கு இப்ப இல்லை.
.
வெளிநாட்டில நாங்கள் இருக்கிற வீடு போல இல்லை.  இஞ்ச அம்மம்மாவிட வீடு கிடக்கிற வளவுக்குள்ள   நல்லா ஓடி விளையாட நிறைய இடமிருக்கு,  ஆனாலும் அம்மம்மா எந்த நேரமும் "கிணறு கவனம் "எண்டு கத்திக் கொண்டே இருக்கிறா.  அம்மம்மா  துலாவைப்பிடிச்சு இழுத்து பெரிய பெரிய வாளி நிறைய தண்ணியள்ளி குளிக்கிறதைப் பார்க்க எனக்கும் அப்பிடிச் செய்யவேணும் என்று நிறைய ஆசை. ஆனாலும்  நான் கிணத்தடிப் பக்கம் போகவே கூடாதாம்.  நான் இருந்து வந்த வெளிநாட்டில குளிச்சமாதிரி பாத் ரூமுக்குள்ள  போய் தான் குளிக்கவேணும் எண்டு சொல்லுறது எனக்குப் பிடிக்கயில்லை.  அடம்பிடிச்சு அழுது ஒருநாள் வெளியில கிணத்தடியில குளிச்சன். நாலைஞ்சு வாளி தண்ணி இழுத்து ஊத்திறதுக்கிடையில அம்மா களைச்சுப் போய்  தாறுமாறெண்டு பேசத்தொடங்கீட்டா.  பிறகு  அப்பாவோட கத்த மிச்சத்துக்கு அவர் வந்து நாலு வாளி ஊத்தி விடுறதுக்கு இடையில மூச்சு  வாங்க வாங்க நாப்பது வாளி அறிவுரை சொல்லிப் போட்டார்.
.
காலமை அம்மம்மா வளவு கூட்டிற சத்தத்தில தான் நான் எழும்பிறனான்.  அதுக்குப் பிறகு சமைக்கிற இடம் பாத்திரங்கள் எல்லாம் கழுவிப்போட்டு  அம்மம்மா  இருவது வாளி தண்ணி எண்டாலும் அள்ளி தலையில ஊத்திக் குளிப்பா.  அதைப் பார்க்கேக்க எல்லாம்  எனக்கு ஒரே  குழப்பமா இருக்கும்.  தலையெல்லாம் வெள்ளையா நரைச்சு மெலிஞ்ச உடம்போட இருக்கிற அம்மம்மாவுக்கு  கிணத்தில அள்ளிக் குளிக்க களைக்கயில்லை, இளமையா இருக்கிற என்ர அம்மாவுக்கும் அப்பாவுக்கும்  ஏன் களைக்குது எதுக்குக் கத்தீனம் எண்டு. 
.
அதிலயும் நாங்கள் வெளிநாட்டில அனேகமா எல்லா நாளும் இறைச்சி தான் சமைக்கிறனாங்கள்.  இறைச்சி தான் சத்து சாப்பிடு சாப்பிடு எண்டு அம்மா கத்திறவ.  சீஸ்  இல்லாமல் பாண் சாப்பிட்டதே இல்லை.  எங்கட பிரிஜ்ஜூகுள்ள  பால் யோர்கட் எல்லாம் பெட்டி பெட்டியா அடுக்கிக் கிடக்கும். இஞ்ச அம்மம்மாவிட்ட  அப்பிடி ஒண்டுமில்லை. கோவில் கொடியேறி ட்டுது  விரதம் எண்டு  அவ  காலமையில சாப்பிடுறதும் இல்லை. நாங்கள் வெளிநாட்டில இருந்து வந்து நிக்கிறம் எண்டு மீன், றால், கணவாய், நண்டு எண்டு எல்லாம் ஆரையோ கொண்டு வாங்கிக்கொண்டு வந்து வீட்டுக்குப் பின்னால கிடக்கிற பத்தியில வைச்சுச் சமைச்சுப் போட்டு  அவ மட்டும் மரக்கறி சோறு தான் சாப்பிடுறவ.  ஆனாலும் அம்மம்மா களைக்குது எண்டு சொல்லி நான் பார்த்ததில்லை.

அம்மம்மா வீட்டுக்குப் பக்கத்து வளவுக்குள்ள ஒரு  சின்ன வீடு இருக்கு. அது ஓலையாலையும் ,நெளிநெளியான ,மெற்றால் ஆலையும் மண்ணாலையும் , கொஞ்சம் கல்லாலையும்  செய்த மாதிரித் தெரியும்.  அதுக்குள்ளே ஒரு அம்மாவும் நிறைய சின்னப் பிள்ளையளும்  இருக்கீனம்.  சிலநேரம் அம்மம்மாவிட்ட எதுக்காவது வாறவை.  இல்லாட்டி அம்மம்மா வேலிக்குப் பக்கத்தில போய் நிண்டு அவையளைக் கூப்பிட்டு காசு குடுத்து கடைக்கு அனுப்பிறவ.  அப்பவெல்லாம் மறக்காமல்" வரேக்குள்ள உனக்கு இனிப்பும் வாங்கிப் போட்டு மிச்சக் காசைக் கொண்டு வாடியம்மா " எண்டு சொல்லுறவ, சிலநேரம் தோசை இட்டலி என்று ஏதாவது சாப்பாடு செய்யேக்குள்ள  தட்டில வைச்சு வாழை இலையால  மூடி வேலியால  அம்மம்மா அவையளுக்கு குடுப்பா.  அப்பவெல்லாம் "எதுக்கு தகுதி தராதரம் இல்லாமல் உறவு கொண்டாடுறீங்க?"  என்று  அம்மா  அம்மம்மாவை  பேசுவா. "இந்த ஒரு மாதத்தால  நீ போனப் பிறகு எனக்கு அதுகள் தான் உறவு பாதுகாப்பு" என்று அம்மம்மா கோபமா வாய்க்குள்ள சொல்லுவா.   எனக்கும் அவையளோட சேர்ந்து விளையாட விருப்பம் ஆனால் அம்மா யாருக்கும் தெரியாமல் அறைக்குள்ள இழுத்துக் கொண்டு போய் நல்லா  வலிக்கிற மாதிரி கிள்ளிப் போடுவா எண்டு எனக்குப் பயம்.

                                                               

.
அம்மாவும் அப்பாவும் இலங்கைக்கு வந்தப் பிறகு ஏனெண்டு தெரியா நான் வசிக்கிற நாட்டு மொழியைத்தான் வீட்டுக்கு ஆட்கள் வந்து நிக்கேக்க  கதைக்கீனம். எனக்கும் தமிழ் தெரியாது எண்டு எல்லாருக்கும் சொல்லீனம்.  ஆனால் எனக்கு  தெரியும் கதைக்கிறதும் விளங்கும் எழுதத்தான் தெரியாது . அவைக்கு நல்ல வடிவா தமிழ் கதைக்கத் தெரியும் எண்டதும். வெளிநாட்டில வீட்டில தமிழில தான் கதைக்கிறவை எண்டதும். அவைக்கு அவ்வளவா வெளிநாட்டு மொழி தெரியாது. அதால இலங்கையில தப்புத் தப்பா கதைக்கிறதை பார்க்க எனக்குச்  சிரிப்பா வரும்.  யாராவது என்னோட விளையாட வந்தால் எனக்குத் தமிழ் தெரியாது எண்டு சொல்லித் திருப்பி அனுப்பிப் போடுவீனம்.  எனக்கு கோபம் கோபமா வரும் ஆனாலும் கிள்ளிப் போடுவீனம் எண்டு பயத்தில வாயே திறக்கிறதில்லை நான்
.
ஆனாலும் ஒரு நாள் அம்மம்மா குசினிக்குள்ள தனியா இருந்த நேரம் " ஏன் நான் அவையளோட சேர்ந்து விளையாடக் கூடாது "என்று அம்மம்மாவை  கேட்டன். "அதெல்லாம் விளையாடலாம்.  அந்தக் குஞ்சுகளின்ர அப்பாவோட தான் உணர அம்மா படிச்சது உந்தக் குறுக்கு வேலி கடந்து போய் விளையாடினது" என்று அம்மம்மா சொன்னா.  "பின்ன நான் மட்டும் விளையாடக் கூடாது எண்டு இப்ப  ஏன் சொல்லுறா" என்று கேட்டன்.
.
அம்மம்மா சுவரில சாஞ்சு கொண்டு பெரிசா ஒரு பெருமூச்சு விட்டா. "உங்கட அம்மா அப்பா வெளிநாட்டுக்குப் போறதுக்கு முதல்  நாங்கள் எல்லாரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி வீட்டில ஒரே தரத்தோட தான் இருந்தனாங்கள்.  இப்ப வெளிநாட்டுக்குப் போன பிறகு  அம்மா தன்னை பெரிய உயரத்தில வைச்சுக் கற்பனை பண்ணுறதால   ஊரில வறுமையோட இருக்கிற இந்தப் பிள்ளைகள் குறைவா  தெரியுது அவவுக்கு "என்றா.
.
"அப்ப அவையிட அந்தச் சின்ன வீடளவோ இந்த வீடும் இருந்தது அம்மம்மா" என்று கேட்டன்.  அதுக்கு அவ 
"இல்லை இதைவிட அது கொஞ்சம் பெரிசா இருந்தது" என்று சொன்னா. 
"பின்ன இப்ப அது எங்க அம்மம்மா "என்று கேட்டன். அம்மம்மா கொஞ்ச நேரம் எங்கேயோ பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்தா.  பிறகு கண்ணை உடுத்தியிருந்த  சீலையில துடைச்சுக் கொண்டா. பிறகு
"அது குண்டு போட்டு உடைச்சுப் போட்டாங்கள்" என்றா.  கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தா.
"எப்ப நடந்தது  அம்மமா " என்றன்.
 "உங்கட அம்மா  வெளிநாட்டுக்குப் போனப் பிறகு தான் அது நடந்தது. "
"குண்டு போடேக்க அதில யாரும் ஆக்கள் இருக்கயிலையோ அம்மம்மா "
 "அதில  அங்கே என்ர வயதில இருந்த ஒரு அம்மம்மாவும்    ஒரு மாமாவும் செத்துப் போச்சினம். ஒரு தாத்தாவுக்கு  கால் இல்லாமல் போச்சு " 
"வேற ஒருத்தரும் இல்லையோ அம்மம்மா "
"ஒருத்தன் மட்டும் அந்த நேரம் வீட்டில இல்லாததால மிஞ்சினவன் "
"ஆர் அது . இப்ப எங்க இருக்கிறார் "
"அவையிட  மூத்த மகன்.  உங்கட அம்மாவோட தான் படிச்சவன்
"மூத்த மகன் எண்டா?"
"முதல் பிள்ளை. உங்கட குடும்பத்தில உங்கட அக்கா முதல் பிள்ளை எல்லோ அப்பிடி"
"சரி அம்மம்மா இப்ப அவர் எங்க"
அம்மம்மா கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தா. பிறகு அவவிட சொண்டு நடுங்கின மாதிரி  ஆடினது.  சீலையாலை மூக்கை உறிஞ்சி கண்ணைத் துடைச்சுக் கொண்டா.  எனக்கு அது கொஞ்சம் அருவருப்பா இருந்தது.

"கடைசியா நடந்த போர்ல உங்களைப் போல மூண்டு குஞ்சுகளையும் அவையிட அம்மாவையும் தனிய விட்டிட்டுச் செத்துப் போனான்."
 முடிக்கும் போது வந்த சத்தம் அழுத மாதிரி இருந்தது.  அதுக்கு மேல கேக்க எனக்கும் விருப்பமில்லை. கவலையா வந்தது அழுதிடுவன் மாதிரி இருந்தது. அழுதால் தேவையில்லாத கதை எல்லாம் பிள்ளைக்குச் சொல்லி அழப் பண்ணினதெண்டு அம்மா அப்பா அம்மம்மாவில கோபப்படுவீனம் எனக்கு அது விருப்பமில்லை ஆனாலும் குண்டு போட்டால் வீடு முழுவதும் கீழ விழுமா அல்லது கொஞ்சமா ஒரு பக்கத்தால உடையுமா எண்டு அறிய ஆசையா இருந்தது.

"குண்டு போட்ட உடனேயே முழு வீடும் விழுந்து போச்சா அம்மாம்மா" எண்டு கேட்டன்.
"பொது பொதுவெண்டு கொட்டினான் எத்தினை குண்டைப் போட்டான் எண்டு தெரியாது நாசமறுப்பான்  ஒரு சொட்டு நேரத்துக்குள்ள வீடு நிலத்தில கிடக்குது"  என்றா.
அது எப்பிடி விழுந்து கிடந்திருக்கும் எண்டு நான் யோசிக்கத் தொடங்கினன்
"என்ன செல்லம் பயந்து போனீங்களோ"  எண்டு என்னைக் கைக்குள்ள பொத்தி அணைச்சு நெத்தியில கொஞ்சிக் கொண்டு கேட்டா அம்மம்மா.
"இல்லை வீடு உடைஞ்ச நேரம் எப்பிடி இருந்திருக்கும் எண்டு யோசிக்கிறன்"
கொஞ்சநேரம் பேசாமல் இருந்த அம்மம்மா  பிறகு நினைவு வந்த மாதிரி 
"அது உடைஞ்சு கிடந்த நேரம் எடுத்த படம் உங்கட வீட்டில இருக்குது. அங்க போனப்பிறகு பாருங்கோ" எண்டா.
"அதெப்பிடி அம்மம்மா அந்த வீடு உடைஞ்ச படம் எங்கட வீட்டில இருக்கும் "
"அது என்ன புதினம் எண்டு எனக்குத் தெரியாது தங்கம்.  ஆனால்  உங்கட அம்மா அப்பாவுக்கு அங்க இருக்கிறதுக்கு  விசா கிடைக்க வேணும் எண்டால்   இஞ்ச நிறைய இழப்புக்கள் நடந்து உயிர்ப்பயங்களால தான் அங்க வந்ததெண்டு நிரூபிக்க வேணுமாம் எண்டு உங்கட அம்மா ரெலிபோன் அடிச்சுச் சொன்னவள். அதால அந்த மாமா தான் தங்கட வீட்டை படமெடுத்து எங்கட வீடு தான் உடைஞ்சதெண்டு உங்கட அம்மாக்கு அனுப்பினவன்."
 
அது ஏதோ தப்புச் செய்து விட்டுச் சொல்லுறது போல எனக்கு இருந்தது.  உண்மையாவே பொய்  சொல்லுறது தப்புத் தானே. 
.
அந்த மாமா  அனுப்பின ஆதாரங்கலால தான்  நாங்கள் அங்க இருக்கிறமெண்டதும் இப்ப அவர் இல்லாததும், அவரின்ர கஸ்ரப்படுற பிள்ளையளோட நான் சேரக் கூடக் கூடாது என்று அம்மா அப்பா நினைக்கிறதும்  எனக்குப பிடிக்கவில்லை.  கோபமா வந்தது.
 
"ஏன் என்ர  அம்மா அப்பா இப்பிடி இருக்கீனம்"  எண்டு அம்மம்மாவிட்ட கேட்டன். 
"உங்கட அம்மா அப்பா மட்டுமில்லை. சிலர் அப்பிடித்தான் இருக்கீனம்  அது ஏன் எண்டு எனக்குத் தெரியாது  செல்லம் ." 
"அங்க இருக்கிற எல்லாரும் இங்க வரும் போது இப்பிடித்தான் இருப்பீனமா அம்மம்மா?"
"இல்லையம்மா.  நிறையப்பேர்  நல்ல அன்பா உதவியா இருப்பீனம். இஞ்ச வாறதுக்கு நிறையக் காசு செலவாகும் தெரியுமோ செல்லத்துக்கு"
"ஓம் அம்மா அப்பா  ஊருக்குப் போகவேணும் எண்டு ஒருவருசமா   இன்னொரு வேலைக்கும் போய் சேர்த்தவை"
"அப்பிடி எல்லாம் கஸ்ரப்பட்டு பாதிப்பேர்  இஞ்ச வாறதே தங்கட மனுசரைப் பார்த்து ஆறுதல் கொள்ளத்தான்.  ஆனால் இஞ்ச அதுகள் தேடி வந்த நட்பு ,அன்பு ,ஆதரவு கிடைக்கிறது குறைவு. இஞ்ச இருக்கிறவையும் அரைவாசிப்பேர் சொந்தம் ,அயல் ,அறிஞ்சவை  தெரிஞ்சவை எண்டு சும்மா விடுறதில்லை. அதுகள் நாலு இடம் வெளிக்கிட ஏலாது.  நாலு  சாமான் சக்கட்டு வாங்க முடியாது. வந்தவையிட்ட  நீலிக்கண்ணீர் வடிச்சு வடிச்சு   கோவணம் வரைக்கும் உருவாமல் விடுறதில்லை. அதுகளும் அங்க என்ன கஸ்ர துன்பத்துக்கு நடுவில இருந்து வருகுதுகளோ என்னவோ"
"அதெண்டா என்ன அம்மம்மா?"
"இது இப்ப உங்களுக்கு விளங்காது தங்கம். வளர்ந்து அம்மா அளவா  வரைக்குள்ள  விளங்கும்."
என்று எனக்குச் சொல்லிப் போட்டு
 "அதுதான் அவளும் ஒருத்தரையும் நெருங்க விடுறாள் இல்லையோ என்னவோ. அதுகளுக்கு அங்க உள்ள பிரச்சனையும் கஸ்ர  நஸ்ரமும் அதுகளுக்குத் தானே தெரியும்"
 என்று மெல்லமா சொன்னா.
"என்ன அம்மம்மா "எண்டன் அம்மம்மா எதுவும் சொல்லில்லை

"வெளிநாட்டில தான் ஒய்வெடுக்க  நேரமில்லாமல்  ஓடியோடி  உழைக்கிறம் அதில பாதி  அந்த வரி இந்தவரி எண்டு போயிடும் மிச்சம் வீடு திண்டிடும்.  ஒரு வருத்தம் பிரச்சனை எண்டு வந்தால் அவசரம் ஆறுதலுக்கு  ஆரும் இல்லாமல் அநாதை மாதிரி அங்க இருக்கிறம் செத்தால் கூட உரிமையா அழ , தூக்கிப் போட ஆரும் இல்லை .  இஞ்சயாவது வந்து ஒரு மாதம் நிம்மதியா இருந்திட்டுப் போவம் எண்டா உலகத்துக் குடும்பப்  பஞ்சப் பாட்டெல்லாம்  எனக்குப்  பாடுறது பத்தாமல் பிள்ளைக்கும் சொல்லிக் குடுக்க வேணாம் அம்மா   அவளாவது நிம்மதியா இருக்கட்டும்"  அம்மா எண்டு கத்தினா.  கொஞ்சம் அழுத மாதிரியும் இருந்தது.

ஏனெண்டு தெரியேல்ல அம்மா அங்க இருக்கிற அம்மா மாதிரி இல்லை.  இங்க வந்தபின் அதிகமா கத்திற மாதிரி, கத்தி முடிய அழுகிற மாதிரி எல்லாம் இருக்கு.  அங்கயும் சிலநேரம் சும்மா ஓய்வா இருக்கேக்கயும்  சிலநேரம்  வேலையால வந்தும் "கஞ்சியக் குடிச்சாலும் எங்கட நாட்டில இருந்திருக்க வேணும் " எண்டு சொல்லி அழுகிறவ தான். அதுவும் ஏன் எண்டு எனக்குத் தெரியாது .  ஆனால் அது சத்தமில்லாமல் அழுவா.  அம்மா அழுதால் உடனேயே கிட்டப் போய் அணைக்கிற எனக்கு, அம்மா கத்தினால் கிட்டப் போகப் பயம். அதால  பேசாமல்  இறங்கி   இங்க வந்ததில இருந்து  எனக்கு நிறையப் பிடிச்ச  வேலிக்கரையில நிக்கிற மகிழ மரத்தடிக்குப் போனன்.

அங்க நான் பிறந்த நாட்டில சாப்பிட்ட எல்லாப் பழங்களையும் விட  இங்க அம்மம்மா வீட்டில நிக்கிற எல்லாப் பழங்களையும் விட இந்தச் சின்னப் பழத்திட சுவையும்  அதின்ர மணமும்  எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு.  பெரீய மரத்துக்குக் கீழ விழுந்து கிடக்கிற சின்னச் சின்னப் பழங்களை நான் பொறுக்கி எடுத்துச் சாப்பிடேக்குள்ள எல்லாம் அம்மம்மா சொல்லுவா "வேர்வழி விளாத்தி முளைச்சாலும்  தாய் வழி தப்பாது  உன்ரஅம்மாவும் அமிர்தத்தை குடுத்தால் கூட அதை ஒதுக்கிப் போட்டு முதலில இதைத்தான் பொறுக்கிச் சாப்பிடுவாள். அவன்  மரத்தின்ர உச்சி வரைக்கும் ஏறி ஆய்ஞ்சு கொண்டு வந்து குடுப்பான் "என்று.

இண்டைக்கு ஏனோ தெரியா நிறையப் பழம் விழுந்திருக்கு. வேலிக்கு மற்றப் பக்கமும் விழுந்திருக்கும் போல, பக்கத்து வீட்டுப் பிள்ளை பொறுக்கிக் கொண்டு நிண்டா.  என்ர கைநிறைய இருந்த பழங்களை அவவுக்கும் குடுக்கலாம்  எண்டு நான்  வேலியால கையை நீட்டின நேரம், அவவும் கைநிறைய பழங்களை வேலியால எனக்கு நீட்டின நேரம்  ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில சிரிப்பு வந்தநேரம், 

"உனக்கு இஞ்ச ஒண்டும் தெரியாது உன்ர  எண்ணத்துக்கு திரியாதே  வந்து என்ர  கைக்குள்ள இரு "எண்டு என்ர அம்மாவும்,
 "கண்ட இடமெல்லாம் பொறுக்கித் தின்னாதே "எண்டு அந்தப் பிள்ளையின்ர  அம்மாவும்  ஒரே நேரத்தில கத்தின நேரம் 
எங்கள் ரெண்டு பேரின்ர கையும் நடுங்கி எல்லாப் பழமும் வேலி எல்லையில வீணா விழுந்து போச்சு. 

அம்மம்மா  கிணத்துக் கட்டில இருந்து அழத்தொடங்கினா. அது ஏன் எண்டு எனக்குத் தெரியாது.  ஆனால் நானும் அந்தப் பிள்ளையும் இப்பவும் ஒரே நேரத்தில தான்  "அம்மம்மா"    வெண்டு அக்கறையோட  கூப்பிட்டம்.


Monday, July 31, 2017

பெண் எனும் பெருமருந்து + கொடும் விஷம்


தலைப்பைப் பார்த்ததுமே  வேடிக்கையாக சிலருக்கும், வெறுப்பாக சிலருக்கும் ,கோபமாக சிலருக்கும் இருக்கக் கூடும். எனக்கும் அப்படித்தான்  ஆனால் இந்த மூன்று உணர்ச்சிகளும் சேர்ந்தே இருக்கிறது. 

கைகால் முளைத்த இந்த மாபெரும் மருந்தை எம் சமூகத்தில்    பரவலாக  பலரும் பல்வேறு நோய் தீர்க்கும் சிறந்த ஔடதமாகவே  உபயோகித்து வருகிறனர்  என்பதைப் பார்க்கும் போது நாம்  சுய அறிவு வளர்ச்சி பெற்ற ஒரு சமூகத்தில் தான் வாழுகின்றோமா என்ற குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒரு ஆண் அளவுக்கு மிஞ்சி குடித்து, உலகை மறந்த மயக்கத்திலே திரிகிறானா?
 பிடித்து இழுத்து வந்து போடு ஒரு கால் கட்டை. நிறுத்தி விடுவான்.

பெண் பித்துப் பிடித்து   ஸ்திரீ லோலனாகி   அலைகிறானா?
பிடித்து இழுத்து வந்து போடு ஒரு கால்கட்டை   அவன்  திருந்தி விடுவான். 

தெருப்பொறுக்கியாகி  வலுச்சண்டைக்கு ஆள் சேர்க்கிறானா?
பிடித்து இழுத்து வந்து போடு ஒரு கால் கட்டை அடங்கிக் கிடப்பான்.  

உழைப்புப் பிழைப்பற்று பொறுப்பற்று இருக்கிறானா?
பிடித்து இழுத்து வந்து போடு ஒரு கால் கட்டை பொறுப்பு தானாக வந்து விடும்.

 சற்று மூளை பிசகியது போல அலைகிறானா?
பிடித்து இழுத்து வந்து போடு ஒரு கால் கட்டை தெளிவாகி விடுவான்.

இந்த மருந்து  இந்த நோயாளிகளால்  ஜீரணிக்கப் படுகிறதோ, இல்லையோ நிச்சயமாக , மருந்துக்கே தன் நிலை ஜீரணமாகாமல்  வீணாகிப் போகிறது என்ற உண்மை இந்த சமூகம் அறியாமலா இருக்கப் போகிறது.

ஒரு  குடிகாரனை ,அல்லது எப்போதும் போதை மயக்கத்தில்  இருப்பவனை  மாற்றி எடுத்து மனிதனாக்க இன்றைய காலத்தில் அதற்கென்றே எத்தனையோ மருந்து வகைகள், பிரத்தியேக வைத்தியசாலைகள் , ஆற்றுகை ஆலோசனை மையங்கள் வந்த பின்பும் இன்றும்  எம்மவர்களுக்கு அதை ஏற்றுக் கொள்வதை விட ஒரு பெண்ணின் வாழ்வை  இதற்காகப் பயணம் வைப்பது இலகுவாக இருக்கின்றது.  அல்லது  செலவற்றதாக அல்லது தம் மீதிருக்கும் பொறுப்பை அடுத்தவர் தலையில் ஏற்றி வைத்து விட்டு இளைப்பாறுவது போன்ற ஆசுவாசமாக இருக்கிறது.  சரி  அப்படி ஒரு கால்க்கட்டுப் போட்டாயிற்று என்று வைத்தாலுமே அதன் பின் புதிதாய் வந்த ஒருத்திக்கு தன்னை மாற்றிக் கொண்டு இருக்கப் போகிறானாஎன்றுபார்த்தால் ...

அதன்   பின் அனேகமாக அது நித்தப் போர்க்களமாகவே தான் இருக்கிறது. இதற்கிடையில்  திட்டமிடா நிலையில்  குழந்தைகளும் வந்து சேர்ந்து கொள்கின்றன.   அவை தம்  குழந்தைமை வழிகாட்டலை தொலைத்து விட்டு இவற்றையே கண்டு வளர்வதால் ஒன்றில் இப்படியான ஒரு குடும்பச் சூழ்நிலைக்கு  முழு எதிர்ப்பானவர்களாகவோ  அன்றி இன்னொரு குடிகாரனாகவோ  அன்றி ஆண்களை நம்பாத அடக்கியாளும் பெண்ணாகவோ உருவெடுக்கத்தான் அவர்களால் முடிகிறதே தவிர சிறந்தவொரு, அது கூட வேண்டாம்   சாதாரண சமூகப்  பிரஜையாகக் கூட  இந்தச் சமூகத்தில் அவர்களால் உருவாக முடிவதில்லை.

'பலமரம் பார்த்த தச்சன்  (இந்த  வார்த்தைப் பிரயோகத்துக்கு மன்னிக்கவும். பழமொழிக்காகவே பதிவிட்டேனேயன்றி ஒரு குறிப்புணர்த்தல் அல்ல) ஒரு மரமும் அரியான்'என்பது போல பலரோடு அலைந்தவனை ஒரு கட்டுக்குள் போடுவது என்பதே சிரமமான விடயம் என்றாகும் போது  அப்படி ஒரு கலியாணம் கட்டி வைத்தாலும் பல மரம் தாவி சுவையறிந்த வௌவால்  ஒரு மரத்தில் நிலைக்குமா என்பது யோசிக்க வேண்டிய விடயமே.  எவரும் தன் அனுபவப் படிமங்களினூடே தான் தன்னை சுற்றிய உலகைப் பார்ப்பார்கள் என்ற அடிப்படை விதிப்படி  படி பார்த்தால்  பல குடும்பங்களில் உள்ள மனைவிகள்  மீதான கணவன்களின்  சந்தேகத்துக்கு வித்திடுவது எதுவென இலகுவில் புரிந்து விடும்.  கூடவே இத்தனை மனவுளைச்சலை தாங்கும் ஒருத்தி தன் சகிப்புக்கள் எல்லை கடந்த ஒரு நிலையில்  "போதும் நீ போ" என  ஒதுக்கிவிட்டு நகர்ந்து போக நேராதா?

யார் எவர்  என்று தெரியாத, தனக்கு உரிமையற்றவர்களிடம் எல்லாம் சண்டைக்குப் போகும் எதோ ஒரு வித மன வக்கிரம் கொண்டவன் ஒருவனை, ஒருத்திக்குக்  கட்டிவைப்பதான் மூலம் அமைதி கொள்ளவைத்து  அடக்கிவைக்க முடியுமானால் அதில் சொல்லப்படுவது என்ன? அவனுக்கு மூர்க்கமும் ஆவேசமும் தோன்றும்  நேரமெல்லாம் யாரோ எவரோ வாங்கும் அடி உதையை  நீமட்டும் வீட்டுக்குள் தனியாக உரிமையோடு வாங்கு.அதற்கான அனுமதியை  ஊர்கூட்டி உரிமையோடு வழங்கி வைத்திருக்கிறோம் என்பதா?  அல்லது தெருவில் அவன் அடிபட்டுத் திரிந்தால் மற்றவர்கள்  திருப்பியடித்து காயப்படுத்தி விடுவார்கள்  அல்லது குடும்ப மானம் போய் விடும். ஆதலால்  அவனில் எந்தக் காயமும் ஏற்படாது, குடும்பமானம் சந்தி சிரித்து விடாமல் இருப்பதற்காய்  'அவனின் மதம் ஓயும் வரை மனைவியான நீ  அடிபட்டுச் சா'  என்பதா? 

உழைக்க மறுத்து திரியும்  பொறுப்பற்ற சோம்பேறிக்கு ஒருத்தியை இழுத்து வந்து கட்டி வைத்தால் அவள் அவனுக்கும் சேர்த்து உழைத்து  குடும்பத்தையும் சேர்த்து சுமக்கும் , தன் தலைக்கு விஞ்சிய பொறுப்புக்குத் தள்ளப்பட்டு விட மாட்டாளா?  போதும் போதாமைக்கு அவனது கைச் செலவுக்கும் சேர்த்து உழைக்கவேண்டிய நிலையும்,  அப்படி அவன் கேட்கும் போதெல்லாம்  கொடுக்காது விட்டால் ஆண் என்ற ஆதிக்கத்தில் அடியும் உதையும் வாங்கிக்கொண்டு வருசா வருஷம் வாரிசுகளையும் பெருக்கிக் கொண்டு  அயல்வீடுகளில் குத்தி இடித்து  வீட்டிலும் போய் குத்து வாங்கும் பெண்களை அயலில் காணாமல் நாம்  இவ்வாழ்வைக் கடக்கவில்லை  என்பதை நீங்களும் உணர்வீர்கள் .

பிறப்பில்  சீராக இருந்து  இடைக்காலத்தில் சற்று மூளை பிசகி பிதற்றுகின்றானா அவனுக்கும் வைத்தியசாலை  வைத்தியம் எதுவும் தேவையே இல்லை. பெண்ணே சரியான மருந்தென தீர்மானித்து விடுகிறார்கள்.   அவள் பொறுமை உள்ளவள் என்றால் குரங்கு கையில் கிடைத்த பூமாலையாகி  ஒரு கட்டத்துக்குமேல்  சகித்து சலிப்பாகி மனம்  சின்னாபின்னமாகி
மனச்சிதைவடைந்த நிலைக்கே வந்து விடுகிறாள். மனைவி பொறுமையற்றவள் எனில் வன்முறையை கையில் எடுத்தாள் என்றால் அவனுக்கு நோய் நிலை முற்றி விடும்.

இந்த எதிர்பார்ப்புக்கள் நம்பிக்கைகள் எல்லாமே நிறைவேற சாத்தியமான ஒரு புள்ளியும் உண்டு.  அது என்றோ எங்கோ ஒருவன் யாரோ ஒருத்திமேல் கொண்ட தீராத காதலால் தன் தகாத பழக்க வழக்கங்களை அவளுக்காக மாற்றிஇருக்கலாம். அவளும் அவன் மீது கொண்ட காதலால் நம்பிக்கையோடும் பொறுமையோடும் முயன்று இருவரும் ஒரு திருந்திய சிறந்த வாழ்வை வாழ்ந்திருக்கலாம் .  அதை மனதில்  கொண்டு பின்னாளில் அதுவே ஒரு தீர்வு போல புலியை பார்த்து பூனை குறிசுட்ட கதையாக கேலிக்குரியதாக அல்லது மிக காயப்படுத்துவதாக மாற்றமடைந்து இருக்கலாம்.




ஆனால் .... நாம் தீர்மானம் செய்து திணித்த முடிவை   வெற்றிகரமாக நிறைவேற்றிவிட நாம் கொண்டிருக்கும் ஆயுதம்  என்னவென்றால்,எம் சமுதாய அமைப்பில் கழுத்தில் ஒரு முறை விழுந்து விட்டால்,விழுந்தது இறுக்கிக் சாகும் நிலை வந்தாலும் , அது விலங்கெனினும் சகித்துக் கிடக்கும் மனப் பக்குவத்தில் பெண்ணை குடும்பமும் சமூகமும் சேர்ந்து மனச்சலவை செய்து  உருவாக்கி வைத்திருக்கும் கட்டுப்பாடு அல்லது சமூகக் கடமைப்பாடு. .  

அது என்ன மாதிரியெனில்  சில மேற்குலக நாடுகளில்,  வீதிக்கும் வீட்டுக் காணி எல்லைக்கும் இடையில் உயரமான மதில்களோ  வேலிகளோ எழுப்பப்படாமல் மிக பதிவான ஒரு அடிக்குக் உட்பட்ட   உயரத்தில் மதில்கள் இருக்கும். தங்கள் காணிகளில் உலவும் தம்வீட்டு  நாய்கள்  வீதியில் இறங்கும் அபாயம் உண்டு என்பதால் அது குட்டியாக இருக்கும் பருவத்தில்  எல்லையில் வேலிபோல  கம்பிகளை சுற்றி  அதில் சிறியளவு அதிர்வு தரக்கூடிய அளவில் குறைந்தளவு மின்சாரம் பாச்சி இருப்பார்கள். துள்ளிக்கொண்டு வீதிக்கு ஓட நினைக்கும் நாய் அதில் மோதுண்ட அதிர்வில் பயந்து திரும்பி விடும். பலமுறை அப்படியான  அனுபவத்தைப் பெற்றபின்  அவ் வேலியைநீக்கி விடுவார்கள். ஆனாலும் அதன் பின் அதன் அடிமனதில் அதைத் தாண்டக் கூடாது என்ற எண்ணம் திடமாகப் பதிவாகி இருக்கும்.   தன் வாழ்விடத்தில் உயிராபத்து ஏற்படும் அபாயம் ஏதும் நிகழும் நிலைவந்தால் கூட அது அந்த எல்லைகளை தாண்டி வீதியில் இறங்கித் தன்னைக் காக்கத்  துணியாது. 

எம்மைப் பொறுத்தவரை அப்படியான மின்சாரம் பாச்சிய கம்பிகளின் வேலையை எம் நாவே  செய்து கொள்வதால் தாண்ட தைரியம் அற்ற,தாண்டி விட்டு நம் சமூகத்தின் பார்வைக்கும் நாக்குக்கும் முகம் கொடுக்கும் திராணியற்ற பலவீன நிலையில் நிகழும் அதிக தற்கொலைகளையும் குற்ற உணர்வே அற்று இதற்கு இதை விட நல்லவொரு தீர்வு இருக்க முடியாது என்பது போல வேடிக்கை பார்க்கும் வக்கிரத்திற்கு நன்றாகவே பழக்கப் பட்டிருக்கிறோம்.

இதற்கெல்லாம்  வசதியாக  அமையப்பெறுபவர்கள்  தாயை, தந்தையை  அல்லது இருவரையும் இழந்த  நிலையில்  மற்றோரின் பராமரிப்புக்குள் ஒடுக்கப் பட்டிருக்கும்  பரிதாபத்துக்குரிய  சீவன்கள்.    ஏதோ  ஒன்றில் தள்ளி விட்டு விட்டு  வாழ்வமைத்துக் கொடுத்துய் விட்டேன் என மார்தட்டிக் கொண்டு எது நடந்தாலும் கண்டு கொள்ளாமல் ஒதுங்கி விடுவார்கள்   அப்பெண்ணின் பாதுகாவலர்களாக  அறியப்பட்டார்.   நாதியற்ற சீவன் தானே என்ன நாய்ப்பாடு படுத்தினாலும்  போக்கிடமற்றுக் காலுக்குள்ளேயே  விழுந்து கிடக்கும் என்ற திட்டமிடலோடு தான் இப்படியான வைத்தியத்துக்கான  மருந்து நிலையான பெண்கள் தீர்மானிக்கப் படுகிறார்கள்.  ஆக அவர்களுக்கான முன் வாழ்விலும் அமைதியில்லை. திருமண வாழ்வும் பணயம் வைக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.

மேற்படி இந்நடைமுறைகள்  காலமாற்றத்தில் தம் தடங்களையும் சற்று மாற்றி அல்லது விரித்துக் கொண்டு பயணிக்கத் தொடங்கிய படிமுறை மாற்றத்தில் இன்று  மேற்குறிப்பிட்ட இத்தனை சீரழிவுகுள்ளும்  அடங்கும் ஆண்களின் முக்கிய தகுதி ஊரிலிருந்து ஒரு பெண்ணை ஸ்பொன்சர் செய்து கூப்பிட முடிந்த  வெளிநாட்டு நிரந்தர வதிவிட உரிமையாக இருக்கிறது. நெருப்பில் விழுந்த விட்டில் போலாகிவிடப் போகிறது கனவு சுமந்த தம் வாழ்வு என அறியாது அப்படி வந்து சேரும் பெண்கள் சுதாரித்துக் கொண்டு இந்தப் பந்தத்தை விட்டு வெளியேறிவிடாமல் கட்டிப் போடக்கண்டு பிடித்திருக்கும் விலங்கு இன்னும் வேடிக்கைக்கும் வேதனைக்கும் உரியது.

"மனிசி வந்தவுடன ஒரு குழந்தையைக் குடுத்துப் போடு. அப்பத்தான் அங்க இங்க என்று விலகாமல் வீட்டுக்குள்ள கிடக்குங்கள். இல்லாட்டி ஆபத்துத்தான்"  என்று ஆணுக்கு நெருங்கிய வட்டாரங்கள் கொடுக்கும் அறிவுரையைக் கேட்டால் முகத்திலேயே காறியுமிழத் தான் தோன்றும்.  மேற் குறிப்பிட்ட அறிவுரைக்குள் அடங்கியிருக்கும் ஒரு அநாகரீகமான  கட்டாயத் திணிப்பு தம்பதிகள் இருவருக்கான தனிப்பட்ட தாம்பத்தியத்துக்குள் மூக்கு நுழைக்கும் மிக அருவருப்பான செயல் என்பதோ அல்லது  அறியாத புதிய நாட்டில் அவனை மட்டுமே நம்பி வந்து அந்தரித்து நிற்கும் அவளின் விருப்பின்றிய இத் திணிப்பு ஒரு வித ஆணாதிக்க வல்லுறவு என்பதோ இவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.

மொத்தத்தில் குழந்தை கூட இருவரின் அன்பின் அடையாளச் சின்னமல்ல. ஒருத்தியை ஒவ்வாத சிறையிலடைக்க   அவளது கால்களில் நீங்கள் பூட்டும் விலங்கென்றே நீங்கள் விளங்கிக் கொள்வதால் அதையும் எந்தவொரு எதிர்கால லட்சியத்தோடும் வழிநடத்த எண்ணுவதில்லை.

ஒரு காலத்தில் வெள்ளைக்காரர்கள் வாழ்க்கை முறையைப் பார்த்து முகத்தைச் சுளித்த  எம் சமுதாயத்தைப் பார்த்து இன்று வெள்ளையின நாடுகளின் காவற்துறையும், குடும்ப நல மன்றங்களும், குடும்ப நீதிமன்றங்களும் வெளிப்படையாக காறித் துப்பவில்லை, முகம் சுளிக்கவில்லை  அவ்வளவு தான்.

இத்தனை தூரமும் இந்தக் கட்டுரையில்  ஆண்களை மட்டுமே சாடிக் கொண்டிருப்பதாக உங்களுக்குத் தோன்றினால் அதன் பின்னால் உள்ள தூண்டி யார்  என ஆராய்ந்து பாருங்கள்.  இப்படியான திட்டங்களை தீட்டி அதற்கான அபலைப் பெண்களைத் தேர்ந்தெடுப்போர் நிச்சயமாக  அந்தந்தக் குடும்பங்களில் உள்ள ஆண்கள் அல்ல.  குறிப்பிட்ட ஆணுக்கு நெருங்கிய உறவில் உள்ள பாட்டி. அம்மா, சித்தி ,மாமி,  அக்கா,  என்ற பெண் என்னும் கொடும்  விஷங்களே என்பது உணர்வீர்கள் 

இவர்களின்  இந்த விளையாட்டுக் கல்யாணங்கள்  ஒரு காலத்தில் முற்று முழுதாக செல்லுபடியாகியது.  தற்காலத்தில் எமது சந்ததியில்  ஒரு கூறிப்பிட்ட பகுதியினராவது எதிர்ப்பையும் வெறுப்பையும் தாங்கிக்கொண்டு அதை ஆராய எதிர்க்கத் தொடக்கி விட்டோம்.  அடுத்த சந்ததி தன்னைக் கட்டுப்படுத்தும்  அனைத்தையும் தட்டி விட்டுத் தாண்டிச் செல்லும் என நான்  எண்ணுகிறேன். அப்போது  உங்கள் சுயநல விளையாட்டுக் கல்யாணங்களின் விபரீதங்களே உங்கள் முகத்தில் ஓங்கி  அறைந்து கற்பிக்கும் தனிமனித வாழ்வும் அதன் உரிமைகளும் பற்றி.

"மீட்டும் விரல்கள் மீட்டினாலன்றி எந்த வீணையும் சுபராகங்களை இசைப்பதில்லை"




Saturday, July 22, 2017

ஒரு ஆத்மாவின் விடைபெறும் கானம்


"Nobody can save me......"  என்ற  இறுதி  வரிகளோடு ஓய்ந்து விட்டது அந்தக் குரலும்,  அதன் ஆத்மா தாங்கிய  அழுத்தங்களும் வலிகளும்.

CHESTER CHARLES BENNINGTON
20.03.1976  ---  20.07.2017  †

Linkin Park  இசைக்குழுவின் பிரதான பாடகர்   செஸ்ரர் சார்லஸ்  பெனிங்ரன்  நேற்று முன்தினம்  கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதை   சடுதியாக அறிந்த போது மனம் ஒரு முறை ஸ்தம்பித்ததே தவிர அந்த முடிவில் அதிர்ச்சியேதும் ஏற்படவில்லை.  எப்போதும் வெளிப்படையான , ஒப்பனைகளற்ற  வார்த்தைகளால் தன் உணர்வுகளைக் கவிவடித்து இசையமைத்துப் பாடும் அவரது பாடல்கள்  அவர் தனது முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் என்பதை  வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தும் ,   அவைகளில்  அவரது மனதின் வலிகளை அப்பட்டமாக அவர் உணர்த்திக் கொண்டிருந்த போதும், அவை வெறும் பொழுதுபோக்குப் பாடல்களாக  மக்கள் மத்தியில்  பிரபலமாகி   ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தியிருக்க  தன் வலிகளையும்  ரசிகர்கள் மகிழ்ச்சிக்கு  காணிக்கையாக்கி விட்டு இறந்து போனார் என்பதே அதிக வேதனையான விடயம்.  
.
மனவழுத்தம்  அல்லது மனச்சிதைவு,  மனச்சோர்வு  (Depression) என  வகைபிரித்துச் சொல்லப்படும்   நோய் நிலையினால் பாதிக்கப்பட்டிருக்கும்  மற்றையோரை விட தங்கள் படைப்புக்களால் நேரடியாக சமூகத்துக்கு முகம் கொடுக்கும்  எழுத்தாளர்களையும்,  கலைஞ கர்களையும் இலகுவில் அடையாளம் கண்டு கொள்ள முடியும் .  அவர்களது படைப்புக்களில் இடைக்கிடையாவது மன அழுத்த வெளிப்பாட்டுகள்  ஓவியங்களாக , பாடல்களாக கவிதைகளாக  வெளிப்படுத்தப் பட்டு  விடும் என்பது மட்டுமல்ல  மற்றவைகளை விட அவை   மிக  அனுபவபூர்வமாக உணர்ந்து தத்ரூபமாக சித்தரிக்கப் பட்டிருக்கும்.  அப்படித்தான் இவரது பாடல்களும் அனேகமாக எப்போதும்  வெளிப்படுத்திக் கொண்டே இருந்தன. 
.
அமெரிக்காவின்  அரிஸோனாவில்   பிறந்த  இவருடைய முதல்  இறுவட்டான
Hybrid Theory   2000  ஆம் ஆண்டு வெளியானது. அதற்காக  RIAA  (Recording Industry Association of America) வைர விருது வழங்கிக் கௌரவித்தது.  அதனுடன் அதிகளவில் பிரபலமாகியது  அதனைத்    தொடர்ந்து கிட்டத்தட்ட ஒன்று விட்டு ஒரு ஆண்டாவது அவரது புதிய இசை இறுவட்டுக்கள் வெளியாகி  காற்று வெளிகளில் வெற்றிகரமாக  அவரது குரலில்  இசையை கலந்து கொண்டேயிருந்தன.
.

ஆரோக்கியமற்ற  பாலபராயத்தைக் கொண்டிருந்ததே இவரின் பின்னாலான அத்தனை சிதைவுகளுக்கும் காரணமாக இருந்திருக்கலாம்.  தன் ஏழாவது வயதில் இருந்து  பதின்மூன்றாவது  வயதுவரை  தன் தந்தையின்  நண்பரால் தொடர்ந்து  பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளான இவர்  தனது இந்த அவலம் பற்றி வெளியில் சொல்லத் தயங்கியமைக்கு  இரண்டே காரணங்கள் தான்.  ஒன்று  அதை அவர் வெளிப்படுத்துமிடத்து  சிறுவனான தன் குரல் பெரியோர் மத்தியில் ஒரு பிரச்சனையாக எடுக்கப்பட்டு தான் காப்பாற்றப் படுவோம் என்பதை விட தான் பொய் சொல்வதாக குற்றஞ்சாட்டப் படலாம் என எண்ணினார். காரணம்  அந்நிலைக்குத் தன்னைத் தள்ளியவர் அறிமுகமற்ற ஒருவர் அல்ல. தந்தையின் நண்பர் என்பதால் தன் வாதம் நம்பப்படாமல் போகும் என நம்பினார்.  மற்றையது  தன்னை  ஓரினச் சேர்க்கையாளன் வரிசையில் சேர்த்து விடுவார்களோ என்ற பயம். இந்தக் குற்ற  உணர்வும் தாழ்வு மனப்பான்மையும்   பாடசாலையில் மற்ற மாணவர்களுடன் அவர்கள் போன்று இயல்பாக சேர்ந்திருக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிட, தனக்குள் ஒதுங்கிக் கொண்டவரை தம் பங்குக்கு காரணம் புரியாமல் சகமாணவர்களும் ஒதுக்கிக் கொண்டார்கள்.   தன் மனவழுத்தங்களுக்கு வடிகால் போலும்  தன்னை ஆறுதற் படுத்தவும் தனிமைக்குள் புதைந்து அவர் தன்னோடு தானே  பேசிக்கொண்ட மொழிகள் கவிதையும் ,ஓவியமும்.
.
தன்னை விட பதின்மூன்று வயது அதிகமான ஒரே சொந்தச்  சகோதரனைக் கொண்டிருந்த  இவருக்கும் சகோதரனுக்கும் வயது இடைவெளி காரணமாக அதிக வெளிப்படையாக பேசிப்பழகும் வாய்ப்புக்கள் குறைவாகவே இருந்ததில் அதிகமாக தனிமை உணர்வை சிறு வயதிலேயே உணரத்தொடங்கியிருந்தார் .    அமெரிக்கக் காவற்துறையின் சிறுவர் துஷ்பிரயோகத துப்பறியும் பிரிவில் கடமையாற்றிய இவரின் தந்தையால்  தன் மகனின் நிலைபற்றி உணரமுடியாதது  தான்   சமூக  வாழ்வியலின் வெளிப்படையான  அருவருப்பான முகம் என்றால் ,
.
தன் பதினோராவது  வயதில் பெற்றோரின் விவாகரத்துக்குப்  பின்  தந்தையிடம் வளர்ந்த இவர் தன் மனதுக்கு அமைதி தேடி போதைவஸ்து ,  மதுபாவனை  போன்ற தன்னிலை மறக்கும் வழிகளுக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டிருந்து விட்டு  தன் பதினேழாவது  வயதில்  தாயுடன் இணைந்து அவரது பாதுகாப்புக்குள் வந்த பின்  போதையில் இருந்து அவரை மீட்பதற்காக அவரது அம்மாவான  மருத்துவத் தாதியினால்  வீட்டுச்சிறை வைக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப் பட்டமை இன்னொரு நேர்மாறான    வேதனையான  பக்கம்.  இக்காலத்தில் மனிதர்களைக் கொன்றுவிட்டு எங்காவது ஓடவேண்டும் போன்றதொரு வெறிக்கு ஆளாகியிருந்ததாக அவரே பிற்காலத்தில் கூறியிருக்கிறார்
.

ஆரோக்கியமற்ற அவரது  சிறுவயது மனநிலையின் காரணமாக கல்வியில் எந்தவொரு உயரமான நிலைக்கும் வரமுடியாது போன அவர் தன் பாடசாலைக்காலம் முடிய  பேர்கர் கிங் உணவகத்தில் சிறிது காலம்  தொழில் புரிந்த  பின் முழுநேரப் பாடலாசிரியரும் பாடகரும் ஆனபோது புகழும் பணமும் தேடிவரத் தொடங்கின .   பிரபலமான பின் போதை வஸ்துப் பழக்கத்தில் இருந்து முழுவதுமாக வெளியே வந்தாலும் தன் மதுப் பழக்கத்தில் இருந்து அவரால் வெளிவர முடியாமற் போயிற்று.  மன அழுத்தம் அதிகமாகிய வேளைகளில்  தன்னால் இயல்பாக  ஒன்றில்  நிதானமாக நிலைத்திருக்க   முடியவில்லை என்றும்  அவரை பிரபலமாக்கி உலகத்துக்கு அடையாளப்படுத்திய  தன் பிரியமான இசைக்குழுவை விட்டே வெளியேறிவிடவும்  துடித்திருக்கிறார்.
.
ஒன்பது வருடகாலமே நீடித்த அவரது முதல் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்த பின்,  இறப்புவரை நீடித்த  அவரது  மறு திருமண  வாழ்விலுமாகச் சேர்த்து  ஆறு குழந்தைகளுக்குத் தந்தையான செஸ்ரர்  தன் வாழ்வில்  தன் உண்மை நிலையுணர்ந்து  நிரந்தர நேசிப்புக்கு ஆளானது இரண்டாவது மனைவியிடம் மட்டுமே.  பாலபராயம் தொட்டு பலரும் பலசந்தர்ப்பங்களிலும் சிதைத்துப் போட்ட ஒரு மனதை நேசித்து அவரை மனச்சிதைவில் இருந்து வெளியில் எடுக்க அவரது காதல் மனைவி  எவ்வளவு போராடிய போதும் இறுதி வரை அதிலிருந்து வெளியே வரமுடியாதவராகவே   மனைவி பிள்ளைகள் சுற்றுலாவுக்குச் சென்று  தான்  தனிமைப்பட்டு நின்ற ஒரு சந்தர்ப்பத்தில்  கழுத்தில்  சுருக்குப் போட்டுக் கொண்டு  தன் வலிகளில் இருந்து விடுபட்டு   உலகுக்கும் விடைகொடுத்து  விட்டார்.

 இது  அந்தப் பெண்ணைப் பொறுத்தவரை நேசம் கொண்ட அவரது  மனதை  இறுதிவரை அழுத்தும் ஒரு விடயமாக இந்த மரணம்  இருக்கக் கூடும்.  ஏனெனில்,   நடைமுறை வாழ்வை எடுத்துக் கொண்டோமானால்,  எவரெவரோ  எல்லாம் உருவாக்கிவைத்த  மனச்சிதைவாளரை  மீட்டெடுக்க  வேறு எவரோ தான் அவர்மீது கொண்ட நேசம் மற்றும் புரிதல் காரணமாக  நம்பிக்கையுடன்  போராடிக் கொண்டிருப்பார். மீட்டே எடுக்க முடியாத நிலையில் அவர்கள் தம்மை மாய்த்துக் கொள்ளும் போது தம்மை அறியாமலேயே தம்மை  நேசித்த இன்னொருவரை அல்லது சிலரை  மனச்சிதைவுக்குள் தள்ளி விடுகிறார்கள்  என்பதை  அவர்கள் உணர்வதில்லை உணர்ந்தால் வாழ்வதற்காக போராடக் கூடும் .

தன் இறுதி இறுவட்டான  one more light  உடன்  ரசிகர்கள் மனதை வரிகளாலும் வலிகளாலும் ஆட்கொண்ட அந்தக் கவி, தன் குரலால் ஆத்மாவை வருடிய இசை  இறப்புக்குப் பின்னால் இன்னொரு வெளிச்சம் கிடைக்கும் என எண்ணிப்  புறப்பட்டு விட்டது.  அவர்கள் தீர்மானித்து  விட்டால் Nobody can save them!




I’m dancing with my demons
I’m hanging off the edge
Storm clouds gather beneath me
Waves break above my head
At first hallucination
I wanna fall wide awake now
You tell me it’s alright
Tell me I’m forgiven
Tonight
But nobody can save me now
I’m holding up a light
Chasing up the darkness inside
'Cause nobody can save me

Stare into this illusion
For answers yet to come
I chose a false solution
But nobody proved me wrong
At first hallucination
I wanna fall wide awake
Watch the ground giving way now
You tell me it’s alright
Tell me I’m forgiven
Tonight
But nobody can save me now
I’m holding up a light
I’m chasing up the darkness inside
'Cause nobody can save me

Been searching somewhere out there
For what’s been missing right here
I’ve been searching somewhere out there
For what’s been missing right here

I wanna fall wide awake now
So tell me it’s alright
Tell me I’m forgiven
Tonight
If only I can save me now
I’m holding up a light
Chasing up the darkness inside
And I don’t wanna let you down
But only I can save me

Been searching somewhere out there
For what’s been missing right here

....................................................................................................................................................

என் குறிப்பு :- 


தனிப்பட்ட முறையில் இவரது எழுத்தில் நான் கவரப்பட்டிருப்பதல்ல இப்பதிவின் காரணம்.  சமூகம். அது தான் காரணம்   எம்மைச் சுற்றியுள்ள எம் சமூகத்துக்காகவே  அவரது வாழ்க்கையைப் பதிவிட்டிருக்கிறேன்.   குழந்தைக்கால  மன அழுத்தம்  ஏற்பட பல காரணங்களில் பாலியல் துஷ்பிரயோகம் முக்கியமானது. அதற்கு முக்கியமான காரணிகளாக அமைபவர்கள்  அக்குடும்பத்துக்கு அறிந்தவர் அல்லது நெருக்கமானவராகவே   அநேகமான சந்தர்ப்பங்களில் அமைவதால் குழந்தை ஊமையாக்கப்பட்டு  வெளிப்படுத்தமுடியா உணர்வுகளுடன் தன்னைத் தனிமைப்படுத்தக் கற்றுக் கொள்கிறது . அதிலிருந்தே தொடராக அதனது அத்தனை சிதைவுகளும் ஆரம்பிக்கிறது.  நாங்கள் குடும்பத்தை குடும்ப மானத்தை கட்டிக் காக்கிறோம் பேர்வழி என்று  ஒரு மனதை அணுவணுவாக சிதைத்து சீரழிந்த,  நம்பிக்கையற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.  அல்லது உருவாவதை  வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

எவ்வளவோ சாதனைகளைச் செய்யக் கூடிய அறிவுள்ள அவர்கள் படைப்புக்களை   அதற்குள்       எ ன்ன உணர்த்துகிறார்கள் என்று  உணர விரும்பாமல் விழுந்து  விழுந்து ரசிக்கிறோம். எம்மைச் சந்தோசப்படுத்திக் கொண்டே  நாம் பார்த்திருக்க தம் படைப்புக்களில்  ஒரு விடைபெறுதலை உணர்த்தி விட்டு அவர்கள் கையசைத்து விடுகிறார்கள் .

முதல் நாள் அதிர்ச்சி,  இரண்டாம் நாள்  ஒரு உச்சுக் கொட்டல்,  மூன்றாம் நாள் வாழத்தெரியாதவர்  என்றொரு  பட்டமளிப்பு  கடந்து விடுகிறோம். 

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மட்டுமல்ல,  சிறுவயதில் ஏற்படும் குடும்ப  ஒடுக்குமுறை நிராகரிப்பு  தனிமைப்படுத்தல்  போன்றவற்றின் அழுத்தங்களும் பின்னாட்களில் இப்படியான நோயாளிகளையே உருவாக்குகிறது என்பதை  ஒரு துளி  அன்பை ஆதரவை வழங்க மறுக்கும்  நீங்களும் உணர்வீர்கள்.   நானும் உணர்வேன் .  





Monday, June 26, 2017

அறிவீர்களா? அறிவாளிகளே!

இன்றைய மெல்லிய குளிர் வருடிய மஞ்சள் மாலை. வழமை போல் நேரமிருக்கும் நேரங்களில்  என்னோடு கூடியிருக்கும்  என் நந்தவனம். நடுவில் நெக்கார் நதியிலிருந்து சின்னதாக ஒழுகி வழிந்து நகரும் வாய்க்காலை சற்று அகலவிரித்து சிறைப்பிடித்த சின்னக் குளம். எதிரே குழந்தைகளின் விளையாட்டுச் சாதனங்கள் அடங்கிய விளையாட்டுத் திடல் அருகில் மரவாங்கில் என் இருப்பிடம். கையெட்டும் தூரத்தில் பலவண்ண  ரோஜாவும், லில்லியும்   கையில் இருந்த புத்தகத்திலும் விளையாட்டு இடத்திலுமான எப்போதும் போல் என் இரு கண்கள்.
.
எனக்கு அண்மையில் நீரைச் சிறைப்பிடித்து விதம் விதமாக சீறும் வண்ணம் குழந்தைகளைக் கவர அழகு படுத்தி இருந்தார்கள்,. கூடவே, குழாய்க் கிணறு, மற்றும் வேறு பொறி முறைகளையும் அதை இயக்கி அறிந்து கொள்ளும் வண்ணம் அமைத்திருந்தார்கள். குழந்தைகள் வேர்க்க விறுவிறுக்க வெறும் பாத்திக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருதார்கள் வழமை போல.
.
அந்தக் குழந்தைகளில் அந்த இரு சிறுவர்களும் அடக்கம். பெற்றோருடன் வந்திருந்தார்கள். பெற்றோர் தமிழ் கதைத்துக் கொண்டிருக்க , இவர்கள் டொச்சில் கதைத்துக் கொண்டிருந்தார்கள் . வெளிநாட்டில் பிறந்த பெரும்பான்மையான பிள்ளைகள் போல. பெற்றோரையும் சிறுவர்களையும் தவிர அவர்களுடன் கூட வந்தது அப்பாவினதோ அல்லது அம்மாவினதோ தம்பியாக, அல்லது உறவாக அதுவும் இல்லாட்டில் நாடி வந்த நட்பாக , இருக்கலாம்,. தன் குடும்பத்தோடு இருந்தால் மிடுக்காக முறுக்கிக் கொண்டு கிண்டலாக கலகலத்துத் திரியும் இருபதுகளில் இருந்தான். ஊரில் இருந்து வந்து இன்னும் மேற்கத்தியத்துடன் ஒட்டிக்கொள்ளாத , புரிந்து கொள்ள அவகாசம் போதாத பேதலிப்பு முகத்தில் ஒரு வலிந்த புன்னகையாக ஒட்டியிருந்தது.
.
வரும்போதே அவர்கள் முன்னே வர அவர்களின் நொறுக்குத்தீனிகள், தாகசாந்திப் போத்தல்கள் அடங்கிய பையை முதுகில் சுமந்து கொண்டு சற்றுப் பின்னடைந்து சோர்வுடன் முகத்தில் ஒரு ரெடிமேட் புன்னகையுடன் தான் வந்தான். சத்தியமாக அந்த முகத்தில் உயிர்த் துடிப்பு இருக்கவே இல்லை. வந்த நேரம் முதல் குழந்தைகளுக்குப் பின்னே திரிவதும் அவர்களைப் பாதுகாப்பதுமே அவன் அதி முக்கிய வேலையாக இருந்தது.  அம்மா அப்பா குழந்தைகளை மறந்து தமக்கு அறிமுகமானவர்கள், உறவுகள் நட்புக்கள் என்று பாரபட்சமின்றி தெரிந்தவர்களின் தலைகளை எல்லாம் உருட்டிக் கொண்டிருந்தார்கள்., குழந்தைகள் தமக்குத் தேவையான எல்லாவற்றுக்கும் அவனை தமிழில் ஏவிக் கொண்டு தாங்கள் டொச்சில் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
.
நினைத்த போதெல்லாம் அவன் மீது நீர் எத்தினார்கள். அவனது வெளீர் நீல நிற ஷர்ட் கடும் நீலமாகி உடம்போடு ஓட்ட  அவன் ஈரமாகி ஒதுங்கினான்  , ஓடி வந்து பெற்றோரிடம் முறையிட்டார்கள். அவர்கள் தங்களது விண்ணாணம் கலைந்த வெறுப்பில் நிமிர்ந்து சற்று உறுத்து அன்னியப்படுத்திப் பார்க்க , அவன் அவசரமாக குழந்தைகளின் சேட்டைக்கு தன்னைப் பலியாக்கிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அந்த இடத்தில் கிடந்த அத்தனை வெறும் பாத்திரங்களிலும் நீர் நிறைக்கச் சொன்னார்கள். அவன் குழாய் கிணற்றின் அழுத்தியை அமுக்கி அமுக்கி வியர்க்க வியர்க்க நீர் நிறைத்து முடிய" Du hast nichts im Kopf " என்றார்கள் கிண்டலாகச் சிரித்துக் கொண்டே.
.
அவன் அப்போதும் அதே மொழி விளங்கா சமாளிப்புப் புன்னகையில் நின்றான்.  "உனக்கு இங்கே ஒன்றும் இல்லையா என்று தலையைத் தொட்டுக் காட்டி இப்ப எதுக்குத் தண்ணி கவிட்டு ஊற்று" என்றார்கள் அதிகாரத் தொனியில். அந்த வார்த்தைக்குள் அதன் தொனிக்குள் பெற்றோரின் வளர்த்தல் பண்பு தாராளமாகவே தெரிந்தது. அவனது முகம் கன்றிப் போனது.  தலை கவிழ்த்து ஒவ்வொரு பாத்திர நீராக  கவிழ்த்து  ஊற்றினான். அதோடு சில துளி அவமான ,அல்லது கையாலாகாத , அல்லது கட்டாய சகிப்பினாலான கண்ணீரும்  சிந்தியிருக்கலாம்.  அவ்வளவுக்கு அவனது முகம் கசங்கியிருந்தது.

அதிலிருந்த வேற்றினக் குழந்தைகள் பெரியவர்கள் வேடிக்கையாக வெறுப்பாக, வேதனையாக ஒரு காட்சிப் பொருள்; போலப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கலங்கிய கண்களை மறுபக்கம் திரும்பி மறைத்துக் கொண்ட அவனது உதடுகளில் எழுதி வைத்த அதே புன்னகை மிகக் காய்ந்து கிடந்தது. சாதனை புரிந்து விட்டது போன்ற  வெற்றிக் களிப்பில் பெற்றோரிடம் ஓடி வந்து விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
.
எனக்கு எதிர் வாங்கில் இருந்த அந்தப் பெற்றார் என்னைப் பார்த்துப் புன்னகைத்து "அவங்கள் வலு துடியாட்டம். ஆரைக் கண்டாலும் முட்டாளாக்காமல் விட மாட்டாங்கள்" என்றார்கள் என்னிடம் பெருமையாக. மரியாதைக்குக் கூட அவர்களைப்பார்த்து ஏனோ புன்னகைக்க விருப்பமில்லாமல் இருந்தது. எழும்பி அந்த இடத்தைத் தாண்டி நடக்கத் தொடங்கினேன். " இப்பிடித் தான் சில தமிழர். தமிழர்களோட சேர மாட்டினம். தமிழ் விளங்காத மாதிரி வெள்ளைகளோட தான் கதைப்பினம்" என்று அந்தப் பையனுக்கு என்னைப் பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தது முதுகுக்குப் பின்னே கேட்டது.   இந்த முதுகுக்குப் பின்னே பேசுவது மொழிபேசும் வலு  வாய்க்கப்பெற்றதனால் மற்றெந்த ஜீவராசிகளையும் விட  மனித குலத்துக்கே வாய்க்கப்பட்ட  மாபெரும் சாபக்கேடுகளில் ஒன்றென  எப்பவும் போல் எண்ணிக்கொண்டேன். 


                                                .
வீதியில் அல்லது விதியில் எதிர்ப்பட்டு இடறும், அல்லது  ஊளையிடும் எல்லாவற்றுக்கும்  என் நேரத்தை செலவு செய்து  கல்லெறியும் பழக்கம் எப்போதும் எனக்கு இல்லை. நின்று காதுகொடுக்கும் அளவு மதிக்கவும் விரும்புவதில்லை.  ஒதுங்கி விலத்தி நகர்ந்து விடுவேன். இன்று ஏனோ அப்படி ஒதுங்கி வர முடியவில்லை. திரும்பிப் போய் "அம்மா தாயே எனக்கு மொழியும் இனமும் ஒரு பிரச்சனையே இல்லை. ஒரே பிரச்சனை நான் ஒரு மனுஷியாக இருக்க விரும்பிறேன் அதனால் மனிதர்களோடு மட்டும் தான் கதைக்க விருப்பம் . மனித உருவத்தில் இருப்பவைகளோடு அல்ல " என்று சொல்லிவிட்டு திரும்பி நடந்த போது அவனது உதடுகளில் அழுகை துடித்துக் கொண்டிருந்தது.
.
இப்படித்தான் ஒரு முறை ஊருக்குச் சென்றிருந்த போது லண்டனில் இருந்து வந்திருந்த ஒரு குழந்தை
தன் அம்மம்மாவை மொன்ஸ்ரர் என்று சொல்லி தாய்க்கு அடையாளப்படுத்திக் கொண்ருந்தது. அதன் அம்மா தன் தாய் பற்றிய குழந்தையின் உவமையை ஒரு மழுப்பல் சிரிப்புடன் பெருமையாக தலைநிமிர்ந்து உள்வாங்கிக் கொண்டே தலை முழுவதும் தும்பைப் பூவாக நரைத்த வயோதிபத்தாயை தமது தேவைகளுக்காக ஏவிக் கொண்டே ஊரில் இருந்த தன் மூத்த சகோதரங்கள் அவர்களின் வளர்ந்த குழந்தைகளுக்கு ராஜ தோரணையில் அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். கண்டிக்க அறிவுரை சொல்ல வேண்டிய தன் குழந்தையை விட்டு விட்டு. யாழ்ப்பாணத்தில் மொன்ஸ்ரர் என்ற சொல்லை அதிகம் நாம் பாவிப்பதில்லையாதலால் அந்த இடத்தில் இருந்த அவரின் உறவினர்களுக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள்.  அவரோடு கதைக்கவும் அதன் பின் எனக்கேதும் இருக்கவில்லை.
.
இப்படிப் பல சந்தர்ப்பங்களில் பலரைக் கண்ட பின்பும் எனக்குப் புரியாத ஒன்று இந்த மொழி அறிதலின் ஒதுக்கலை எங்கிருந்து எப்போது நாம் கற்றுக் கொள்கிறோம். தாய் மொழிக்கு அடுத்ததாக இன்னொரு மொழி அறியும் போதா? அல்லது தான் இன்னொரு மொழி அறிந்த பின்  தன் இனத்தவரைக் காணும் போது தன்னை மேம்படுத்திக் காட்டும் சின்னத்தனத்தை கற்றுக் கொள்ளும் போதா? வெளிநாட்டுக்கென  விமானத்தில் ஏறும் போதே , இதற்கான ஒத்திகையும் தீர்மானமும் ஆரம்பித்து விடுகிறதா? சொந்த இனத்தை இங்கு வரவழைத்து அந்நிய மொழியில் அவமானப் படுத்தும் குரூரத் திருப்தியின் காரணம் அறியாமையா? ஆதிக்கமா? சொந்த ஊருக்குச் சென்றும் இந்த மொழிச் சிலம்பத்தில் உறவைச் சிக்கவைத்துச்  சிதைக்கும்  மனப்பான்மை இன்றுவரை புரியவே இல்லை.
.
எனக்குப் புரிவது எல்லாம் ஒன்றே ஒன்று தான். மனிதவள மேம்படுத்தலுக்கான ஆராட்சிகளுக்கும் தொடர்பாடலுக்கும் பேச்சு , எழுத்து மொழி அறிதல் முக்கியமான விடயமே தான். . இதயங்களை நேசிக்க, மனங்களை உணர, கண்கள் வழி மனங்கள் பேசும் மௌன மொழி போதுமானது .  சிறியதொரு  அணைப்பு. கைகளை இறுகப்பற்றிக் கொள்ளும் நெருக்கம்  இவையெல்லாம் சொல்லாத நேசத்தை  வார்த்தைகளால் அதிகம்உணர்வு ரீதியாக இதயம் தொடச்  சொல்லி விட முடிவதில்லை. இதயத்தில் ஈரம் இருப்பவர்கள் எல்லோருக்குமே தெரிந்த மொழிகள் இவை

. புரிந்தால் அதனூடு பேசிப்பாருங்கள் . புரியாவிட்டால் அமைதியாகவாவது இருந்து விடுங்கள் வார்த்தை வீரியங்களால் மனங்களைச் சிதைத்துப் பார்க்கும் குரூரம்  என்பது அடிவேரில் அனல்நீர் ஊற்றுவது போல. உங்களுக்குள் ஈரம் இருந்தால் அனலின் தகிப்பு நன்றே புரியும். இல்லாவினினும் கூட , நீங்கள் அறியாத மொழிகளும் கேள்விப்படாத விடயங்களும் தான் பூமியில்  ஏராளமுண்டு  என்பதும் கூட புரியாதவர்கள் எனில்  புரியாமல் போகட்டும்.

மனிதாபிமானம் என்ற ஒரு
சொல் உங்கள் தாய் மொழியில் உண்டு அதாவது அறிவீர்களா அறிவாளிகளே?


Sunday, June 11, 2017

பட்டிப்பூக்கள்

நீங்கள் எத்தனை பேர் இது பற்றி அறிந்திருப்பீர்களோ தெரியவில்லை. அதாவது பதிவின் முன்பகுதியில் உள்ள என்னைப் பற்றியல்ல. பின்பகுதியில் உள்ள மலர் பற்றி ....

அப்போது எனக்கு எத்தனை வயதிருக்கும் என்ற விபரம் எல்லாம் இப்போது தெரியாது. கண்ட செடி கொடி எல்லாம் வீட்டில் கொண்டு வந்து நாட்டி வைத்து அதன் பக்கத்தில் போய் இருந்து கொண்டு "எப்போது நீ பூப்பாய்" என்று அதனிடமே கேட்டுக் கொண்டிருந்த வயது.

எல்லோருக்கும் இருக்கும் பிரத்தியேக ரசனைகள் போல எனக்கும் ஒரு குறிப்பிட்ட வண்ணம் அதிகம் பிடிக்கும்.
ஒருமுறை தாத்தாவோடு வயற்கரையால் வரும் போது மலர்ந்து நின்று வா என்று அழைத்தது அந்த வண்ணம். அவ்வளவு தான் பெயர்த்து எடுத்து வந்தாச்சு. அப்பவும் தாத்தா சொன்னார் அட இது பட்டிப்பூ வீட்டில் வளர்த்தால் பாட்டி கத்துவா பாட்டிக்குத் தெரியாமல் அடிவளவுக்கை புழக்கம் இல்லாத இடத்தில கறிவேப்பிலைப் பற்றைக்குள் நட்டுவை" என்று. நான் அதை வீட்டின் முற்றத்தில் நடுநாயகமா மற்றப் பூங்கன்றுகளுக்குள் மறைச்சு நட்டுவைச்சு பாட்டி கவனிக்காமல் அது வளர்ந்து பூக்கத் தொடங்க,

"ஐயையோ சுடுகாட்டுப் பூ இதை யார் இங்க கொண்டு வந்தது" என்று ஏதோ சுடுகாட்டையே நடுவீட்டுக்கை கொண்டு வந்து, அதில பிணத்தை வைத்து எரித்த மாதிரி பதறிப் போய் குதிச்சு, பிடுங்கி எறிஞ்சு, பிறகு நான் அழுது வடிஞ்சு, பாட்டியும் தாத்தாவும் சண்டை
பிடிச்சு ...... பிறகு நான் அதை மறந்து போனன் அது வேறு கதை.
பிறகு கொஞ்சக் காலத்துக்குப் பிறகு ரேடியோவில் பாட்டு மட்டும் இல்லை ஆட்கள் பேசுற மற்ற நிகழ்ச்சிகளும் காதில் விழத் தொடங்கிய பருவம் அது.
எப்பவும் வாய் மூடாத எங்கட வீட்டு ரேடியோவில் இசையும் கதையும் தொடங்கினால் சித்திக்கு காற்றில் எல்லாம் காது முளைத்திருக்கும். எனக்கு ஒரு மண்ணும் விளங்காமல் ஆர்வமில்லாமல் தலையே விதியே கடனே என்று கையுக்க கிடந்த காலம்..

'பட்டிப் பூக்கள்' இசையும் கதையும் அறிவிப்பில் வித்தியாசமா அந்தப் பெயர் சொன்ன போதே ஏனோ பிடித்துப் போய் மனதுக்குள் பூப்பூத்தது . அதில் அந்த மலர் பற்றிய மருத்துவ விளக்கம் கதையோடு கலந்திருக்க, அது பற்றி ஆராயத் தோன்றாவிடிலும் மனதில் பதிந்து தான் போனது. அன்றிலிருந்து Dr.ஜே. ஜெயமோகனின் எழுத்துப் பிடித்தது. அந்த எழுத்துக்காகவே இசையும் கதையும் பிடித்தது. அதுவே வளர்ந்தபோது எனக்கான முதல் அடையாளமும் தந்தது அதுவும் வேறு கதை.

அப்போது மனதில் பதிந்து மறக்க மறுத்த பட்டிப் பூக்களை இணைய வசதி வந்த பின் தேடத் தொடங்கினேன். இன்று எழுத்துலகில் இல்லாத Dr.ஜெயமோகன் அன்று தந்த விபரங்கள் மிகக்கொடிய நோய் ஒன்றில் இருந்து உயிர்காக்கும் அந்த மூலிகைச் செடியின் உயரிய சக்தி பற்றி விபரித்திருந்தது.
எழுத்து என்பதும் வெறும் கற்பனை அல்ல. அதில் நடைமுறை வாழ்வுக்கு அவசியமான எதைக் கலக்கவேண்டும் என்பதைக் கற்றதும் பெரிய புகழ் பெற்ற படைப்பாளிகளிடம் அல்ல. இலைமறைகாயாக இருந்து எழுத்துலகில் மறைந்தே போன இவர் போன்ற இன்னும் சிலரிடமுமிருந்தே.


"நாம் எப்போதும் இப்படித்தான் ஆராயாமல் அறியாமல் யாரோ சொன்னார்கள் என்பதற்காக அவசியமானவற்றை தள்ளியும், அவசியமற்றவற்றை அருகேயும் வைத்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பட்டிப் பூக்களை சுடுகாட்டில் போட்டு விட்டு கடதாசிப் பூக்களை வீட்டில் வைத்திருப்பது போல "
.
மாலினி





*********************************************************************************
நித்தியக கல்யாணி, நயனதாரா அல்லது பட்டிப்பூ என்றும் சுடுகாட்டுப்பூ (பூச்செடி) என்று அழைக்கப்படும் செடி, மடகாசுக்கரில் மட்டுமே காணப்பட்ட ஒருவகைச் செடியாக இருந்தது. பின்னர் இது வெப்பமண்டலப் பகுதிகளுக்கும், மென்வெப்பமண்டலப் படுதிகளுக்கும் பரவியது. இச்செடியின் பூ வெள்ளை நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலோ காணப்படும். பூவிதழ்கள் கூடும் நடுப்பகுதியில் அடர்ந்த சிவப்பு நிறமாகக் காணப்படும். இதன் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் காத்தராந்தசு ரோசியசு (Catharanthus roseus) என்பதாகும்.
மடகாசுக்கரில் இயற்கையில் காணப்படும் வகையான இச்செடி இன்றையச் சூழலில் அருகிவருகின்றது. இதற்கான காரணம் காடுகளை வெட்டியும் எரித்தும் வேளாண்மை செய்யும் முறையால் இயற்கைச் சூழிடங்கள் அழிகின்றன[1]
இம்மருந்துச்செடி ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வளரும். இரு மாதங்களில் 60 முதல் 80 சென்றி மீட்டர் உயரம் வளரும் செடியாகும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் 2.5 – 9 செ.மீ நீளமும் 1 – 3.5 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். அகலமான இந்த இலைகளின் மேற்பரப்பு பளபளப்பாகவும், நுண்மயிர்கள் இல்லாமலும் இருக்கும். இலைகள் எதிரெதிராக அமைந்திருக்கும். இலைக்காம்பு 1 - 1.8 செ.மீ நீளம் இருக்கும். இலையின் நடு நரம்பு வெளிறிய பச்சை நிறத்தில் இருக்கும். இலைக்காம்பு [2][3][4][5]
மருத்துவப் பயன்கள்[தொகு]
நீரிழிவு, சிறுநீர்த்தாரை, வெள்ளை இரத்தப்புற்று நோய். இப்பூச்செடியில் இருந்து இரத்தப் புற்றுநோய் (இலூக்கேமியா), சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கான மருந்துகள் பிரித்தெடுக்கப்படுவதால்[1] அதிகம் அறியப்படுகின்றது. குறிப்பாக வின்பிளாசிட்டீன், வின்க்கிரிசுட்டீன் போன்ற உயிர்வேதிப் பொருள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. சென்னை கிருத்துவக் கல்லூரியிலும் மேலை நாடுகளிலும் இதற்கான ஆய்வுகள் நடைபெறுகின்றன
இச்செடியின் பூ வெள்ளை நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலோ காணப்படும். பூவிதழ்கள் கூடும் நடுப்பகுதியில் அடர்ந்த சிவப்பு நிறமாகக் காணப்படும்.
Catharanthus roseus white CC-BY-SA.jpg
நித்திய கல்யாணி
இதன் ஐந்தாறு பூவை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிதாகம், அதிமூத்திரம், உடல் பலவீனம், மிகு பசி, பசியின்மை தீரும்.வேர்ச்சூரணம் 1 சிட்டிகை வெந்நீரில் 2, 3 முறை கொடுக்கச் சிறுநீர்ச் சர்க்கரை குறையும். நோய் கட்டுப்படும்.
.
நன்றி: இணையம்

Thursday, June 8, 2017

காலமாகிக் கடந்த ஒரு காலச் சின்னம்



காலம்   காலமாகிக் கொண்டே  பயணிக்கும்  பாதையில்   தன்  மேல் பதித்துக்கொண்ட அடையாளங்களையும்  அழித்தழித்துப் புதுப்பித்துக் கொண்டே  நகர்ந்து செல்லும்.  அதன் கடந்தகால அடையாளங்களை  எவ்வளவு தான் புதுப்பித்தபோதும்  உணர்வுகளோடு நிகழ்காலத்தில் அவைகளை அப்படியே மீட்டெடுத்துவிட  எதிர்காலத்தால் என்றுமே  முடிவதில்லை எப்போதுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்களை விட  எப்போதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்தவர்கள்  மனதில் அடியாழத்தில் தமக்கான ஒரு  இடத்தை நிரந்தரமாகப்  பிடித்துக் கொள்வது போல குறிப்பிட்ட  ஒரு  இடத்துக்கு அதிக சம்பந்தமில்லாது  வெறும் இடைத்தங்கல் பறவையாய்  தங்கிப்போன   ஒருவரின் மனதில்  ஒரு காலம் அதுசம்பந்தப்பட்ட இடம் நிகழ்வுகள்  தன் நினைவுகளை ஆழப் பதித்திருக்கலாம்.

 அடையாளமிழந்து அடிக்கல் வரை  சிதைந்து  அனேகமாக அனைவரின் நினைவுகளிலும்  இருந்து அழிந்து போன   அந்த இடமும்  எனக்கு அப்படித்தான். என் மூளையின் ஞாபகச் சுவர்களில்  எழுத்துக்கள்  அழியத் தொடங்குமுன்,  முன்பொரு  காலத்தில் இது இப்படி இருந்தது
அதை நான் எப்படியெப்படி எனக்குள் வாங்கிக் கொண்டேன் என ஒரு காலப்பகுதியின் சாதாரண வாழ்வியல் அடையாளங்களை  ஒரு குழந்தையின்  நினைவுகளில்  ஆவணப்படுத்தி விட்டுச் செல்ல விரும்பும் இடங்களில் இது மனதில் முதலிடத்தில்  இருக்கிறது.

அப்போது, என் சிறுவயதுகளில்  எனக்கு மிகவும் வெறுப்பானதும் பயமானதும் விடயங்களில் முக்கியமானவை  இரண்டு.  ஒன்று  பாம்பு மற்றது   பயணம்.  வாழ்க்கையில் ஓய்ந்திருத்தலும் உறவொதுங்கியிருத்தலும் ஒருவித சாதல் நிலைபோல  மனநிலை கொண்ட மூன்றாம் தலைமுறை மனையாட்சி செய்த காலமது என்பதால்  நான் மாட்டேன் என அடம் பிடித்தாலும்  பயணங்கள் தவிர்க்கப்பட முடியாதனவாகவே  இருந்தன . மாட்டேன் என்பதற்குப் பின்னால் ஏதும் மாபெரும் வரலாற்றுக் காரணங்கள் இல்லை.   இலங்கை போக்குவரத்துச் சபைக்குச்  சொந்தமான  கதவற்ற  பஸ்,  அது குபுகுபு என வெளித்தள்ளும் டீசல் புகை கானல் வெயிலில் மேலெழுந்து பறக்கும்  புழுதியோடு கலந்து  பின்வாசல் வழியாக நேரடியாகவே மூச்சில் மோதும். 

நிற்கவும் இடமின்றி , இருக்கையில் இருப்பவர்கள் குழந்தையா குஞ்சா என்று கூட பார்க்காமல் அவர்கள் மடியிலும்  உட்கார்வது போன்ற நிலையில்  எண்ணிக்கையற்று உள்வாங்கப்படும் பயணிகள்,  கசகச என ஒரு கதம்ப வியர்வை மணம். போதும் போதாதுக்கு  அந்த நெரிசலுக்குள்ளும் சில  ஈர அடுப்புக்கள் வாயால் குபுகுபு என ஊதித்தள்ளும்  பீடி, சுருட்டு, சிகரட் என ஒன்றாக்கிக் கலந்த மூச்சுத் திணறும் புகைமூட்டம் . பின் சீட்டில் யாரோ பாட்டியோ, தாத்தாவோ  தனக்குப்பக்கத்து சீட்டை உரிமையோடு வளைத்துப் பிடித்து பக்குவமாய் உட்கார வைத்திருக்கும்  காய்ந்த வாழையிலையால் மூடிகட்டிய புகையிலைக் கட்டு, அரைப் புழுங்கல்நிலையில் அந்த இலைகளில் இருந்து வெளிவரும் ஒரு வித தலை சுற்றும் மணம் .  இவ்வளவும் ஒன்றாகச் சேர்ந்து பஸ்ஸில் ஏறியதுமே  தொடங்கும் தலைவலியும் வாந்தியும், இறங்கும் வரை நிற்பதில்லையாதலால்  பயணம்  என்று சொன்னாலே பலியாட்டுக்கு மாலைபோட்டு பலிபீடத்தில் நிறுத்திவைத்த  நிலைக்கு வந்து விடும் மனம்.   இவைகளைத் தாண்டி  குதூகலித்த  ஒரு இடமும் உண்டென்றால் அது........


தோளில் ஒரு குட்டிப் பயணப் பை,  அது கொள்ளாது எனக்குப் பிடித்தது  அவனுக்குப் பிடித்து  மற்றவனுக்குப் பிடித்தது மேலும் மற்ற மற்றவர்களுக்குப் பிடித்தன  என்று போன லீவுக்குப் பிறகு வாங்கிச் சேர்த்த  விளையாட்டு பொருட்களும், எங்கள் எல்லாருக்கும் பிடித்த ஒரு பெரிய பக்கெட் மோல்ரீஸ்ற் உம்.  கண்டி வீதியில் எங்களுக்கு அண்மையில் இருந்த  பஸ்ராண்டில்  காத்து நிற்கும் போதே மனம் பறக்கத் தொடக்கி விடும்.  பஸ்ஸில்  ஏறி கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையாக விரியும்  எங்கள் மதிப்பங்குளம் விளையாட்டு மைதானம்,   வயல் வெளிகள், தென்னந்  தோட்டங்கள் கடந்து நாவற்குழிப் பாலத்தை  பஸ் கடக்கும் வரை  முகத்தில் மோதும் அந்தக்  குளிர்ந்த காற்றில் கிறங்கி  வேலியோரக் காட்சிகளில் மயங்கி முடித்து  இனிப் பார்ப்பதற்கு எனக்குப் பிடித்தது போல எதுவுமில்லை என்ற நிலையில் ஜன்னலுக்கு வெளியே இருந்த பார்வையை திருப்பி  பஸ்ஸின் உள்ளே பார்க்க   தலைவலிக்கப் போவது போல  வாந்தி வரப் போவது போல மனதுக்குள்  அபாய அறிவிப்பு   அதிரும்.  அந்த நேரம்  அம்மாவின் மடியில் தலையைக்  குப்புற வைத்துப் படுப்பது தான்.  ஆனையிறவு  வரை கண்ணைத் திறப்பதோ  தலையை நிமிர்த்துவதோ  இல்லை.  ஆனையிறவு வந்ததும் எழுப்பி நிமிர்த்தி இங்க பாரு கடல் என்று சொன்னால் தலைவலியும் வாந்தியும் எங்கோ ஓடிப் போயிடும். கடலைக் கண்டதால் அல்ல. நான் நேசிக்கும் இடத்தை நெருங்கி விட்டேன் என்பதனை அறிந்து கொள்ள நான் அப்போது நிர்ணயித்து வைத்திருந்த அடையாளம்  1946 ஏக்கர் விஸ்த்தீரணம் கொண்ட  ஆனையிறவு உப்பளம்

 1938 ஆம்  ஆண்டிலிருந்து  1990  வரை இயங்கியது  இவ்வுப்பளம்.  அருகே உப்பு உற்பத்திமையக் கட்டிடம். அதனருகே  உப்பை ஏற்றி பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லக் காத்திருக்கும்  கனவாகனங்கள்.  பார்வைக்கெட்டிய தூரம் வரை பரந்திருக்கும்   கடல். அதனை நடுவே  ஊடறுத்து  பாம்பு போல நீண்டு நெளிந்து  பயணிக்கும் புகையிரதப் பாதை.   அதன் இருபக்கமும் சதுரச் சதுரப்   பாத்திகளில் வெண்மையாக விளைந்து மினுங்கும் உப்புநீர்ப் பூக்கள் . கொதிக்கும் வெயிலில்  பெயருக்குக் கூட நிழல் கொடுக்க  ஒரு சிறு மரமும்   இல்லாத  கடல் அலை முடியும் கரைகளில் பரந்து கிடக்கும் உப்புக் குவியலை   வாரிக் கொண்டிருக்கும் ஆண் தொழிலாளர்கள்,  கடகங்களில் அள்ளி,  தலைகளில் சுமந்து கொண்டு போய் சிறு வெள்ளை மலை போல குவித்துக் கொண்டிருக்கும் பெண்கள் . கருவாடு போல மிக கறுத்துமெலிந்து,   பாதங்களும்  உள்ளங்கைகளும் உப்பில் ஊறவைத்துக் காயவிடப்பட்டிருக்கும்  மாங்காயையோ, தேசிக்காயையோ  நினைவுறுத்தும்  அவர்களின் உருவ அமைப்பு.  இந்தத் தொழிலாளர்களின் உழைப்பில் அப்போது வருடமொன்றிற்கு கிட்டத்தட்ட  70,000  மெட்ரிக் தொன் உப்பை உற்பத்தி செய்து , 1980 களின் முற்பகுதியில் உப்பு உற்பத்தியில் தன்னிறைவு கண்டு மேலதிக உப்பை மாலைதீவு  ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்த  ஆனையிறவு உப்பளம்  1990 இல் முழுவதுமாக தன் செயற்பாட்டுக்களை நிறுத்திக் கொண்டதுடன்  ஆனையிறவு என்றதும் உப்பளம்  என்ற தன் அடையாளத்தை அழித்துக் கொண்டு பின்வந்த காலங்களில், தன்மீது  வேறொரு வரலாற்று அடையாளத்தைக் கல்வெட்டிக் கொண்டது.  

  கடலிடம் மனத்தைக் கொடுத்துவிட்டுக்  கடக்க  சூரையும் பாலையுமாக விரியும் காடுகள் , காட்டுப் பழச் சுவைகளின் நினைவுகளில் நாவினடியில் மெதுவாய் நீருறத் தொடங்கும்.   ஆனையிறவு கடந்து  மூன்றாவது  தரிப்பிடத்தில்  வீதியின் ஓரத்தில் விரவியிருக்கும் சிவந்த  பாலியாற்றமண்ணையும் குருணிக் கற்களையும் சறாச் என்று தேய்த்து செம்புழுதியை  மேலெழுபிப் பறக்க விட்டு  நிறுத்தத்தில் தரிக்கும் பஸ்ஸில் இருந்து  உற்சாகப் பந்தாய் குதித்தால்  விழுந்து விடாமல் ஏந்திக் கொண்டு முத்தமிட இப்போதில்லாத  அந்தக் கை அப்போது  காத்திருக்கும்.

இறங்கியதும் உயர்ந்து நீண்டு செல்லும்   வீதியின்   இந்தப்பக்கமாக  சற்றுத் தாழ்ந்த நிலப்பரப்பில் அந்த நிறுவனத்தின் ஊழியர்களால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்ட , குட்டியாய் ஆனால் வருடாந்த மற்றும் முக்கிய உற்சவங்கள் நடக்கும்  ஒரு கோவில். அதற்கு எதிராக அந்தப்பக்கமாக  வீதியிலிருந்து கிளைபிரித்து குறுக்காக  நேரே  செல்லும்  சொரசொரவென   சிவப்பு நிற பாலியாற்று மண் சாலை .   அதில்  ஒரு கையால் மார்போடு தூக்கியணைத்து நடந்தவாறே  மறுகையால் சுட்டி அதோ தெரியுது  பாரு வாசி கண்ணம்மா  எனும்போது  எழுத்துக் கூட்டிக் கூட்டி ஒவ்வொரு சொல்லாக  அந்த இடம் வார்த்தைகளால் வடிவம் பெறும்  பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம். 

 ஒரு இருபத்தைந்து அடி நடந்தால்  ஊர்மனையோடு ஒட்டிக் கொள்ளாமல் காட்டுக்குள் தனிப்பட  கிட்டத்தட்ட  220  ஏக்கர் நிலப்பரப்பை  வளைத்து அமைக்கப்பட்ட அந்தத் தொழிற்சாலைப் பிரதேசம். அதன் பிரதான நுழைவு வாசலில் பெரியதொரு  அகல கேட். அதை நெருங்க நெருங்க   நாசியைச் சுரண்டும்   குளோறின் நெடி.. கேற்றுக்குப்  பக்கத்தில் தொழிற்சாலைக்கு எதிர்ப்புறமாக செக்கியூரிட்டிக் கட்டடம்.  கதவு திறக்க முன்னமே கம்பிக் கதவுக்குப் பின்னால் இருந்து விபரம் வினவும் காவலர்கள் . விபரங்கள் சரிபார்க்கப்பட்ட  பின்  அதற்குள்  நுழைந்தால் விருந்தாளிகளைக் கூட்டிச்செல்ல  அந்தச் சிறு கொலனி போன்ற பிரதேசத்துக்குள் இருந்து   உரியவர் வரும் வரை காத்திருப்பதற்கான  ஒழுங்காக இருக்கைகள் அடுக்கப்பட்ட  கச்சிதமான இளைப்பாறு மண்டபம் .

அதற்கெதிரே பாரவூர்திகள்  பயணிக்க வசதியாக பரந்திருக்கும் பாதைக்கு சற்றுத் தள்ளி ஆரம்பிக்கும் நெடிய  கோபுரங்களைக் கொண்ட அந்தப் பிரமாண்டமான  வெண்ணிறக் கட்டிடம்.  அதன் உச்சிகளில் கிடந்த அகன்றுயர்ந்த  புகைப்போக்கிக்கருவிகளினூடே குபுகுபுவென புகையை வெளித்தள்ளிக் கொண்டிருக்க ,  அதனை அண்டிய  பின் சுற்றுப் பகுதிகளில் இதன் பாதிப்புக்களால் சற்று  மஞ்சள் பாரித்த புற்களும் செடிகளும், அந்தப் பகுதி முழுவதற்கும் கேட்கும் படி பத்து யானைகள் ஒரே நேரத்தில்பெருங்குரலெடுத்துப்  பிளிறுவது போல் அதிரவைக்கும் மணிக்கொருதரம் ஒலிக்கும் சங்கொலி.  புதிதான ஒரு உலகத்துக்குள் நுழைந்தது  போன்ற பிரமையை ஏற்படுத்திக் கொண்டு நிமிர்ந்து நிற்கும்  சோடா பக்டரி என்று அழைக்கப்பட்டஅது ,  திரு .ஜி.ஜி பொன்னம்பலம் அவர்கள்  இலங்கை அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக இருந்த  காலத்தில் தமிழ்ப்பிரதேசங்களில் நிறுவப்பட்ட  தொழிற்சாலைகளில் ஒன்றான 1954 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட  பரந்தன் கெமிக்கல் கொப்பரேஷன். 






இந்த இரசாயனத் தொழிற்சாலைக்கு அதிகம் தேவையான மூலப்பொருட்களில் ஒன்றான கடல் நீர்  உப்பை ஆனையிறவு உப்பளத்தில் இருந்து பெறக்கூடிய வாய்ப்பிருந்ததால் அதனை அண்மிய பிரதேசமான பரந்தனில் இத்தொழிற்சாலை அப்போது நிறுவப் பட்டது.  குளோரின், ஐதரோகுளோரிக்அமிலம்  மற்றும் கோஸ்டிக் சோடா  போன்ற இரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்தமையால் அது அப்போது  சோடாப் பக்டரி என  பொதுமக்களால் அழைக்கப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன்.

அந்த சோடாப் பக்டரி பிராந்தியத்துக்குள் நுழைந்து கொண்டு எப்போதும்  இரசாயன மணம் நாசியரிக்கும்  காற்றைச் சுவாசித்துக் கொண்டு நடந்தால்  தொழிற்சாலைக் கட்டிடங்கள்  முடிந்து சற்றுத் தூர இடைவெளியின் பின் குடியிருப்புப்  பகுதி ஆரம்பமாகும்   தார்பாவாத பாலியாற்று மணற் செஞ்சாலைகளில்நடந்து சென்றால்   பொதுவாக  ஊர்மனைகளில் இருப்பது போல குறுக்குத் தெருக்கள் பிரித்து வீதிகள் அமைக்கப் படாமல் ஒரு பகுதியை வட்டமிட்டது போல  நேராகச சென்று  வளைவாகத் திரும்பும்  வீடுகள்.  அதில் ஒரு வீடு தான் என்வரவுக்காக எப்போதும் வாசல் திறந்து வைத்துக் காத்திருந்து  என் சிறுவயதுக் காலச் சந்தோசம் முழுவதையும் தனக்குள் தத்தெடுத்துக் கொண்டிந்தது.

தொழிற்சாலைக் குவாட்டஸ்  என்பதால் ஒவ்வொரு வீட்டுக்குமிடையில்  பெரிதான வேறுபாடுகள் இருக்காது.  குடும்ப அங்கத்தவர்களைக்கணிப்பிற் கொண்டு  அறைகளின் எண்ணிக்கையில் மட்டும் வேறுபாடுகள் இருக்கும். மற்றப்படி  முதலாளி தொழிலாளி என்ற அதி   பெரிய வித்தியாசங்களை  வீடமைப்புக் கொண்டிருக்கவில்லை  எனினும், உள்வீட்டுப் புழங்கு பொருட்களில்  அந்த வித்தியாசம் இருந்தது.

வீடுகளின் பின் புறத்தில்  சமயற்கட்டையும், நீர்க்குளாயைத் திறந்தால் குளோரின் வாசனையுடன் குபுகுபுவென எந்நேரமும்  நீர்பாயும்    குளியலறையையும்  தாண்டி  படியிறங்கி  நடந்தால் வெறும் பசிய நிலப்பரப்புக்கள். அவற்றைத் தாண்டி  நீண்ட தூரம் பின்னோக்கி நடந்தால் வெண் மணற் தரையில்  முதிரை  வீரை பாலை  மரங்களோடு  காரை கிளாத்தி  போன்ற  முட்செடிகள் பற்றையாகக் கிடக்கும்.  யாழ்ப்பாணப்பகுதிகளில்  நீரூற்றிக் காப்பாற்றி வளர்க்கப்படும்  எக்ஸ்போ(f)றா  அங்கு காடுகளில் மரங்கொள்ளாமற்  பூத்துக்குலுங்கும்.

வீடுகளுக்கு  முன்புறத்தில் வீதிக்கு  எதிர்ப்பக்கமாக  தூரம் தூரமாக ஒவ்வொரு வீட்டுக்கு எதிரிலும் பாலை மரங்கள். பகல் முழுவதும்  வீடுகளையும் சுற்றுப் புறங்களையும் சுற்றியலைந்த கோழிகளின் இரவுப்படுக்கைகள்  அவை.  அவற்றின் அடியில்  தரையில்  ஆழஅடித்து  ஊன்றப்பட்ட  மரக்கட்டைகளில்  பகல்  முழுவதும் காடுகளைச் சுற்றியலைந்து  இரவு கட்டைக்கு வரும் நாட்டு மாடுகள் கட்டப்பட்டிருக்கும்.  ஒவ்வொரு காலையும் மாலையும்  சமையலறையில் இருந்து பொங்கி  வீட்டு வாசல் வரை பசும்பால் வாடையை அவை பரப்பிக் கொண்டிருக்கும் .

குடியிருப்புக்களின்   மத்தியில் பெரிதாக ஒரு விளையாட்டு மைதானம்.  அதனோடு கூட கிளப் என அவர்களால் அழைக்கப்பட்ட ஒன்று கூடல்  மண்டபம்.  அதனோடு சேர்ந்து சிறுவர் பாடசாலை.  வாசிகசாலை.  அவர்களுக்கான  அத்தியாவசியப்  பொருட்களுக்கான விலைக்கட்டுப்பாடுகள்   கொண்ட விற்பனை  நிலையம்.  

அதற்குள் இருந்த சிறுவர் பாடசாலைக்கான வயதெல்லை தாண்டிய சிறார்களுக்கான  வெளியிற் சென்று கற்பதற்கான வாகன வசதி,  வருடாந்த  ஒன்று கூடல் நிகழ்வுகள்.  ஒளிவிழா என்ற பெயரில் பெரியளவில் நடக்கும் நத்தார் விழா.  என் சிறுவயதுகளில் அந்த விழாவுக்காகவே  அங்கு போன குதூகல நினைவுகள் இப்போதும் உண்டு.  தவிரவும்  தூள் உப்புப் பாவனையும் அங்குள்ள குடியிருப்புக்களில் தான் அப்போதிருந்ததாக நினைவுண்டு.
தொழில் நிமித்தம் பல ஊர்களிலும் இருந்து வந்து அப்படியொரு குடியிருப்புக்குள் ஒன்று சேர்ந்திருந்த அந்தக் குடும்பங்களிடம்   யாழ்ப்பாணத்தின்  மற்றெந்தப் பகுதிகளிலும் இல்லாத அளவு சாதி சமய பேதமற்ற ஒற்றுமை இருந்தது அப்போது.  அண்டை அயல் தான் அவர்களுக்கு உரிமை உள்ள உறவுகளாக இருந்தன.  அப்படியே முறை சொல்லி அழைத்தும் கொண்டார்கள். அதன் படி வாழ்ந்தும் கொண்டிருந்தார்கள். ஒரு வீட்டுக்கு உறவினர் வந்தால் எல்லா வீடும் உறவு கொண்டாடியது . மாலையில்  விளையாடுவதற்காக  கிளப்புக்குப் போக வீதியில் இறங்கினால் பேதமற்று எல்லாக் குழந்தைகளுமே வந்து ஒட்டிக் கொள்வார்கள்.  விளையாடி முடித்து கூட்டமாக காட்டுக்குள் இறங்கி நேரம் போவது தெரியாமல் அலைந்து  பிடுங்கி உண்ட பழவகைகளின் சுவைகளைப் பின் எப்போதும் எந்த விலை கொடுத்தபோதும் வாங்கித்தர வாழ்க்கையால் முடியவில்லை.

அண்மையில் இருந்த இரணைமடு நீர்த்தேக்கத்தின் உதவியால் காலபோகம் சிறுபோகம் என இருபோகம் விளையக் கூடிய அப்பிரதேசத்தில்  இந்தக் குடியிருப்பில் இருந்தவர்களுக்குச் சொந்தமான வயல்களும்  கணிசமான அளவில்  இருந்தன.  அனல் பறக்கும் வெக்கை மட்டுமல்ல  சிறு சிறு நீர்த்தேக்கங்கள் போல  குளங்களும் காடுகளும் சூழ்ந்திருந்ததால்  நுளம்பும் தாராளமாகவே இருந்தது.  இரண்டு நாட்களுக்கு ஒருமுறை  மாலையில் பாவனைப் பொருட்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி ஒன்றாக அடுக்கி  படங்கு போன்ற பாரிய பொலித்தீன்  விரிப்புக்களால்  மூடிவைத்துக் கொண்டு நுளம்பெண்ணை அடிக்க வருபவர்களுக்காக காத்திருப்பார்கள்.

அவர்கள் வந்து விசிறிச்செல்லும் நுண்ணுயிர்க்கொல்லிஇரசாயனப்  புகையில் வீடுகள் ஒருதரம் மூழ்கி வெளிவந்தால் நாற்றம் மூச்சை அரித்தாலும் அன்றிரவு  நுளம்புக்கடியில் இருந்து தப்பிக் கொள்ளலாம் அடுத்தநாள் நுளம்பு வலை மூடாவிடில் எத்தனை துரத்தினாலும்  நுளம்பு தம் இரத்ததா தாகத்தை தீர்க்க மறப்பதில்லை. 

காடண்மிய பகுதி என்பதால்  காட்டுப் பூனையும்  பாம்பும் பாம்பாட்டிகளும் தாராளம்.  மழைகாலம்  அடித்துப் பாயும் வெள்ளத்தில் நீந்தி மிதக்கும் பாம்புகள் பற்றிய  பயம் தாராளமானது.  வேலையாட்களிடம் முழங்காலுயர கறுத்த றப்பர் சப்பாத்தக்க்கள் மழை மற்றும் இரசாயனக் கூட வேலைகள் சம்பந்தமான பாதுகாப்புக்காக வழங்கப் பட்டிருந்ததால்  மழை நேரங்கள் அவர்களைத் தவிர மற்றவர்கள் வெள்ளத்தில் இறங்க மிகவும் தயங்கவேண்டிஇருந்தது.  இருந்தும்  அதிகமான  மனிதப் புழக்கம் இல்லாத இடம் என்பதால் அந்த வெள்ளம் கூட என்னில் துள்ளி விளையாட வா என்பது போல துப்பரவாகவே இருக்கும். வெள்ளம் வடிந்து காட்டுவழியே  வாய்க்கால் நோக்கிப் பாய்ந்ததன் பின் கூட்டி மெழுகியது போல அத்தனை துப்புரவாக அழகாக இருக்கும் காட்டு மணலில் காலணியைக் கழற்றி விட்டு ஊன்றி நடக்கும் சுகம் சொல்லிப் புரியாது. 

தற்போது போல இறக்குமதி  செய்ய வேண்டிய தேவையற்று இலங்கை முழுவதற்குமான குளோரின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய நிலையில் இயங்கிய  அந்த சோடாப் பக்டரிக்கும்  மனிதர்கள் போல , மற்றும் எல்லாமும் போல இறந்த காலம் என்ற ஒன்றை உள்நாட்டு யுத்தத்தின் வடிவில் காலம் குறித்தது.

பயிரும் பச்சையுமாக இருந்த அந்தப் பகுதி பரந்தன் படைமுகாமாகியது . மக்கள் வெளியேறத் தொடங்கினர். இப்படைமுகாமை  அழிக்க புலிகள் பலதடவை முயன்றதில், அழிக்க, அழிக்க அது மீண்டும் மீண்டும் முளைத்ததில்  அதனைச் சூழ்ந்த பகுதிகளும்  குண்டுவீச்சில் குளித்து இரத்தத்தில் மிதக்கத் தொடங்கின.  யுத்தம் வளர வளர தொழிற்சாலைகளில் இருந்த உபகரணங்கள் ஒவ்வொன்றாக  ஆயுதம் தூக்கிய  அனைத்துக் குழுவின்னரதும் தேவைகளுக்கேற்ப  அபகரிக்கப் படத்  தொடங்கின.  நாம் மட்டும் குறைச்சலா என்ன என்பது போல எஞ்சிய சொஞ்சிய பொருட்கள் வண்டிகள்  உபகரணங்களையும்  தூரத்தில் வரும் போதே தொழிற்சாலையை அடையாளம்  காட்டிக் கொண்டிருந்த  பாரிய நீர்நிரப்புக் கொள்கலனையும் அள்ளிக்கொண்டு போய் ஆனையிறவு முகாமில் குவித்து உக்க  வைத்தது  ராணுவம் .

 இப்படியே தொடர்ந்து கொண்டிருந்த சமர் கிளிநொச்சியை மீட்டு, அதிகளவாக பெண் போராளிகளைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட பெரும் சமரான ஓயாத அலைகள் மூன்றில்  ஆனையிறவைக் கைப்பற்றியபின், இராணுவப் படைத்தளங்கள் அப்பகுதியிலிருந்து முற்றுமுழுதாக அப்புறப்படுத்தப் பட்டன. இரசாயனத் தொழிற்சாலை குண்டுகளால் தகர்ந்திருந்தது.  இப்படியாக ஒரு தொழிற்சாலை மையம் வரலாற்றில்  தன் பெயரைப் பதித்து விட்டுச் சிதைந்து போனது.

பின் அந்தப் பகுதியைப்  புலிகள் தம்வசம் வைத்திருந்தார்கள்.  பரந்தன் புலிகள் வசம் வந்தபின் அங்கு வேரூன்ற வைக்கப்பட்ட  மக்கள் மீண்டும் குடியேறத் தொடங்கினர். முன்போல  தொழிற்சாலை மேலதிகப் படிகளுடனான வருமானமும் வேலையும் இல்லையாயினும்   அவர்களுக்கான  நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை ஊதியம் வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது. மேலதிகத் தேவைகளை தம் காணிகள் மூலமான மிக குறுகிய அளவான பயிர்ச்செய்கை மூலம் கிடைத்த வரும்படிகளைக் கொண்டு காஸ்ர ஜீவனம் நடத்தத் தொடங்கிய மக்கள்  முகாமிட்டிருந்த புலிகளுடன் நெருக்கமாகியும் இருந்தனர்.

காட்சி மாறியது  இந்தியக் காக்கிச் சட்டைகள்  ஈழத்தில் காலடி வைத்தன.   சமாதானப் படை சண்டைப் படையாகிப் போர் வெடித்தது . புலிகளின்  சுதந்திர நடமாட்டம் குறைந்த போனது.  மறைந்து வாழ நிர்ப்பந்திக்கப் பட்ட புலிகள்  தங்களை ஆதரித்த மக்களை நாடவேண்டிய நிலையில் இருந்திருக்கலாம். மாலை இருள் கவிந்த  பொழுதுகளில் சில   வீடுகளின் பின் பகுதிகளில் இருந்த காடுகளினூடாக  அவர்கள் வருவதும்,  அந்தக் கஸ்ர  சீவனத்திலும்  அவர்களுக்காகச் சமைத்துவைத்து வைத்து  நாளுக்கு    ஒரு  தடவை   அரை வயிறாவது  அவசரமாக அவர்களை உண்ணவைத்துக் காப்பாற்றிய அந்த மக்கள்  காட்டிக் கொடுக்கப் பட்டார்கள்.

ஒருநாள் இருள்கவிந்த நேரம் பின்வாசல் வழியாக அவர்கள் வரும் நேரத்தில் வேறு கூட்டம் வந்தது.  வாங்கோ தம்பிமார் என்ற கிசுகிசுப்பான குரலிலான அன்பான உபசரணை  அன்று தான் அந்தச் சூழல் மக்களுக்கு இறுதி நாளாக இருந்தது .  கூடவே கொண்டுவந்து ஒளித்துவைத்த  பொல்லுகள் புளிச்ச மட்டைகள்  போன்றவற்றினாலான  சரமாரியான  தாக்குதலில் எலும்புடைந்து சுருண்டு கூழாகிப் போன மக்கள் அவ்விடத்திலான  தமக்கான நிலங்களையும் உதறிவிட்டு சொந்த மண்ணில் சொந்த மொழி பேசுவோரால்  அகதியாக்கி ஓடவைத்து தொழிற்சாலைக்கு முன்னரான அவர்களது பூர்வீகப் பிரதேசங்களில் வெறும் ஒட்டுக் குடித்தனத்தில் ஒண்டவும்  ஒடுங்கவும் வைத்தது.  அதனோடு பழைய தொழிற்சாலையின் எஞ்சிய அடையாளங்களைச் சுமந்திருந்த மக்களும்  வாழ்வியல் போராட்ட  நீரோட்டத்தில் கலந்து கரைந்து அடையாளம் தொலைந்து காணாமற் போனார்கள்.

இப்போது மீண்டுமொரு முன்னெடுப்பில் அவ்விடத்தில்  புதிதாய்  ஒரு தொழிற்சாலை பிறப்பெடுக்கும் முயற்சிகளின் பின்னணியில் உற்பத்தி சிறக்கலாம்  வருமானம் பெருகலாம் . இரசாயன வளத்தில் தன்னிறைவும் அடையலாம் ஆனால்  அந்த முன்னைய காலம் அதன் நினைவுகளை சிலவேளை வரலாற்றில் சிலவரிகளால் பதித்துவிட்டு நிரந்தரமாக உறங்கிவிடும். 

ஆனால் அந்த இடமும்  அது பற்றிய நினைவுகளில் இங்கு பதிவிடாதவைகளும், இராணுவக் காவல் போட்டபின்பும்  வீட்டுக்கு ஒழித்து மூத்தவர்கள் மூச்சுத் திணறத் திணற சைக்கிள் மிதித்து  இறுதியாய் நாங்கள் கூடிச் சென்று கால்நனைத்த  இரணைமடுத் தண்ணீரின் குளிர்ந்த நினைவுகளும், அப்போது போர் உக்கிரம் பெறவில்லையாதலால் காவலில் நின்றும் குழந்தைகள் என  விரட்டிவிட்ட  இராணுவத் துப்பாக்கியும் , பின் எப்போதும் அப்படி நேசமான மனிதர்களை வாழ்க்கை சந்திக்கவேயில்லையாயினும்,  இனி எப்போதுமே அப்படியொரு நாள்  திரும்பி வரப் போவதில்லையாயினும்  இறக்கும் தருணத்திலும்  ஒரு பட்டம் பூச்சியின் வண்ணங்களாய்  கடந்த நினைவுகளுடன்  வாழ்க்கை கண்மூடும் .