Saturday, May 20, 2017

எங்கே என் தொன் மொழி.....

மொழி என்பது இனத்தின் முக்கிய அடையாளம் என்பது எவரும் சொல்லி அறிய வேண்டிய ஒன்றல்ல .  பொதுவாகவே  எந்த இனத்தவராயினும் தம் மொழி மீதான  தாழ்வான அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பதோ அன்றி இன்னொன்றை உயர்வாக எண்ணுவதோ இல்லை.  ஆனால் அண்மைக்கால அவதானிப்பின் படி   நம்  தாய் மொழியின்   தொன்பதங்கள் பல  அகற்றித் திணிக்கப்படும்  செயலுக்கு  அறிந்தும் அறியாமலும்  சாதாரண மக்களில் இருந்து அறிவு ஜீவிகள் வரை  துணை போகிறார்களோ  என எண்ணத் தோன்றுகிறது.

இதற்கு  பன்மொழிக் கல்வி , இனம் சிதறிய பன்னாட்டு வாழ்க்கை எனப் பல காரணங்களைக் குறிப்பிட முடியும் போதும் சில சொற்கள்  திட்டமிடப்பட்டே ஒதுக்கி அழிக்கப் படுவதையும் காண முடிகிறது.  அவற்றில்  பாவனையில் இருந்து அருகவைக்கப்படுவதும்  அருவருப்பாகப் பார்க்கப்படுவதுமான   சில  தமிழ்ச் சொற்கள் பற்றிப் பார்ப்போமாகில்......

இந்நிலையை அதிக தூரம் எல்லாம் போய் அவதானிக்க வேண்டியதில்லை.  எம் சுற்ற வட்டமும் முகநூலுமே பல உதாரணங்களை எமக்குத் தந்து விடும்.

முகநூலில் சில  பதிவுகளிற் கவனித்தால்  யாரோ  யாரையோ திட்டிக் கருத்திடும் போது ஒரு வசவுச் சொல்லாக  என்ன கூந்தலுக்கு .... என்ற தொடர் பாவிக்கப் பட்டிருந்தது.  அதைச் சரியாகச் சொல்லுமிடத்து  என்ன மயிருக்கு  என்ற பதமே அங்கு அவர் பாவிக்க எண்ணியதாக இருக்கவேண்டும்.  அந்தப் பதத்தில் எந்த வழுவும் இல்லை. சங்ககாலப் பாடல்களிலிருந்தே இந்த மயிர் எனும் பதம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது


உ +ம்:- மயிர் நீற்பின் உயிர் வாழாக் கவரிமா....

உடலின் உதிரும் ஒரு உப பகுதியைக் குறிக்கும் இத் தூய தமிழ்ச் சொல்லை வசவுகளுக்காக உபயோகித்து பின் அதை இன்னும் ஆபாசமான கற்பனைகளுடன் உள்வாங்கி  மயிர் என்பதை  பலர் முன்னிலையில் பேசத் தகாத ஒரு கெட்ட வார்த்தையாக  ஒதுக்கி விட்டு கூந்தல் என்கிறோம். கூந்தல்  என்பது வேறோர் கருத்துக் கொண்ட இன்னொரு தூய தமிழ்ச் சொல்  ஆக மொத்தத்தில் இரண்டின் அர்த்தத்தையும் தொலைத்து விட்டிருக்கிறோம்

அது போலவே எமது கலாச்சார வழக்கில்  மாமா  என்ற அருமருந்தன்ன  உறவு முறைப் பதம்.
பிறந்த பச்சிளம் குழந்தைக்கு தாய்க்கு முதல் தாய் மாமன் முகம் அடையாளம் தெரியும் என்பார்கள்.  தந்தை இழந்த குழந்தைக்கு தாய் மாமனே  தந்தையும் போலாவான் என்பார்கள் தாய் தந்தையர்க்கு அடுத்து அதன் அத்தனை இன்ப துன்ப நிகழ்விலும் மாமன் பங்கும் உரிமையுமே அதிகம் இருக்கும்.  தவிர,  ஒரு பெண்  நட்பு ரீதியாக  அந்நிய ஆடவர்களுடன் உரையாட நேரும் போது தன் குழந்தையிடம் அவனை மாமா என அறிமுகப்படுத்தி விடுவதன் மூலம் நீ என் சகோதரன் அந்த எல்லையில் கண்ணியத்தோடு  நில் என்ற சேதியை மிக இலகுவாக அவனுக்கு உணர்த்தி விடுகிறாள் ஒரு வழியில்  ஒருவித விகற்பமற்ற  நட்பு நிலைக்கு அந்தச் சொல் பயன்பட்டு விடுகிறது.  அப்படியானதொரு தூயசொல்லை உச்சரிக்கக் கூடப் பயந்து  மாமா என்று சொல்லி விட்டு கூடவே பதறிப்போய் அவசரமாக தாய் மாமன் என்ற  விளக்கவுரையும் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது இன்றைய பரிதாப நிலை  போலீஸ்காரனும் மாமா  கூட்டிக் கொடுப்பவனும் மாமா என்று அழைக்கப்படும் இன்றைய நிலை

ஊற்றுதல் என்பது  பெய்தல் என்ற தூய தமிழ் வழக்கின் ஒத்த பதம்.  மழை பெய்தது , பனி பெய்தது
என்பதை எல்லாம் ஏற்கும் நாம்  மூத்திரம் பெய்தல் என்ற சொல்லில் மட்டும் ஏதோ கெட்டவார்த்தை பேசுவது போல கூசிப் போகிறோம் . அதே வார்த்தையை வேற்று மொழியில் சொல்வதால் பண்பாகப் பேசிக் கொள்வது  போன்ற மயக்கத்துக்குள் முடங்கிக் கொண்டு யூரின் பாஸ் பண்ணுதல் என்ற ஆங்கிலத் தொடரையும்   urinieren  என்ற டொச் சொல்லையும் மற்றும் அதே அர்த்தம் உணர்த்தும் வேறு மொழிச் சொற்களையும்  கூச்சமின்றிப்  பாவிக்கும் எமக்கு மூத்திரம்  பெய்தல்  என்ற சொல்லில் மட்டும் கூச்சம் அல்லது ஆபாசம் எங்கிருந்து வந்தது   

உண்டி  என்ற  என்ற பதத்தை  ஏற்றுக் கொள்ளும் எம்மால்  குண்டி என்ற பதத்தை எம் மொழியில் உரைப்பதை  எதனால் ஏற்க முடியாது போயிற்று. அதை விளிப்பதற்காய் நாம் பயன்படுத்தும்   butt என்ற  ஆங்கில வார்த்தையும்   gesäß என்ற  டொச் வார்த்தையும் மேலும் எனக்குத் தெரியாத மொழிகளில் வெவ்வேறு வார்த்தைகளும் பாவிக்கப்படும் போது வராத கூச்சம் குண்டி என்று தூய தமிழிற் சொல்லும்  போது  எங்கிருந்து தப்பான கண்ணோட்டத்தோடு ஓடி வந்து விடுகிறது. எல்லா மொழியிலும் ஒரே பொருள் தான் ஒரே செயல் தான் என்பதை எதனால் உணர  மறுக்கிறோம் . மூன்று தலைமுறைக்கு  முந்திய காலத்தில் எல்லாம் சிறுநீரகம்   என்ற உறுப்பு  மூத்திரக் காய்  அல்லது குண்டிக் காய் என்றே கற்பிக்கப் பட்டிருக்கிறது.  இப்போதெல்லாம் ஆர்வம் கொண்டு அங்கிங்கென ஆராய்ந்து தேடினால் தவிர  அவை வழக்கொழிந்து விட்டன.


அண்மையில் முகநூல் நண்பர் ஒருவர்  தன் பதிவொன்றில் கம்பராமாயணத்தில்  கொங்கைகள் என்று குறிப்பிடப்படும் சொல்  பெண்களின் மார்பகத்தைக் குறிக்கும் என்று தான் பதிவிட இல்லை அது கண்களைக் குறிக்கும் என கருத்துக் கிளம்பியதாகக் குறிப்பிட்டிருந்தார்.  உண்மையிலேயே கொங்கைகளை மார்பகம் என்று சொல்வது கூட சற்று வழுவானதே.  அப்படியாயின் பெண்களின் மார்பகம் எனப் பிரித்துச் சொல்லல்  அவசியமாகிறது.   அதற்கான வழுவற்ற நேரடி தூய தமிழ் சொல்லில் அது  முலைகள் என்ற ஒத்த சொல் வடிவம் பெறுகிறது.  இதற்குள் கண்கள் என்ற பதம் வரும் போது இரு தூய தமிழ் சொற்கள் தம் கருத்தை  இழக்கின்றன என்பது சிந்திக்க முடிந்த யாராலும் உணர முடியும்

உ +ம்:-அலர்முலை யணங்கனார் அல்குல்
யுரைமதித் துழலும் மனத்தினை மீட்டுன்
        பொன்னடிக் காக்குநாள் உளதோ ......
[வள்ளலார்]

                                                    
                                                          



இந்தக் குழப்பத்தில் குழம்பி எதற்காக இந்த வார்த்தை, கருத்துக்களின் அர்த்தமற்ற மாற்றப்பாடுகள் என ஆராய்ந்த போது தூய தமிழ் சொற்கள் என்று அறியப்பட்ட பல கொச்சையாகவும்  அவமதிப்பதாகவும்  பொதுவெளியில் பேசக்கூடாத விதத்திலும் அமைந்திருக்கிறதாம்  அதனாலேயே  பெயர்களை மாற்றி கருத்தை மாற்றி விடுகிறார்கள் பல அறிவாளிகள். 

//ஒரே முறை சிந்தித்துப் பாருங்கள்  பசியோடழுத  குழந்தை  முலை சுரந்த  முனைகளைக் கவ்விக் கொண்டது//   என்று ஒரு வாக்கியம் அமைய வேண்டிய  இடத்தில்  //பசியோடழுத குழந்தை  சுரந்த கண்களைக் கவ்விக் கொண்டது// என்ற வாக்கியத்துக்கும் இடையில் எவ்வளவு அபத்தமான கருத்துவேறுபாடு  உள்ளதென  அவதானியுங்கள்  

 உடற்பாகங்கள் செயற்பாடுகள்  ஒவ்வொன்றுக்கும்  பொருத்தமான ஒவ்வொரு பெயரும் ஏற்கனவே உண்டு. அவைகளை அவைகளாக உரைப்பதில் தப்பேதும் இல்லை. அதில் பெண்மை அவமானப் படுத்தப் படவும் இல்லை. அவ்வவ் பாகங்களை அவையவையாக அவற்றின் தொழிற்பாடுகளின் முக்கியத்துவத்தோடு  பார்ப்பதை விடுத்து அதிக கவர்ச்சி, வேட்கை  என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து நோக்கப் படுதலாலேயே பல பழந்தமிழ் தூய சொற்கள் மறைந்து போகின்றன. 

இன்னுமொன்று வைத்தியத் தரவில் உடல் அங்கங்களை அப்படி அப்படியே குறிப்பதை ஏற்கும் நாம் இலக்கியம் என்னும் போது மட்டும் சர்ச்சசை செய்வதும் கூச்சம் கொள்வதும் கூட மறைக்க மறைக்கத்தான் தேடலும் அதன் மீதான கவர்ச்சியும்  அதிகமாகும் என்று புரியாத  ஒரு வித மனவிரிவற்ற சமூக அடையாளமே.

எம்மை போல எதை வேண்டுமானாலும் அள்ளித் தூவலாம்  விரும்பிய எழுத்தை எல்லாம் மொழியில் கலந்து பெயராக்கலாம்  என்பது போலில்லாது  தம் இனத்துக்குள் வேற்று மொழி கலந்து விடக் கூடாது என்பதில் மேலை நாடுகள் பல மிக அவதானமாகவே  இருக்கின்றன  உதாரணமாக   ஜெர்மானியப் பிரஜாவுரிமை பெற்ற வேற்று நாட்டைத் தாயகமாகக் கொண்ட பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைக்கு  நாம் விரும்பிய பெயரை வைக்கும் நடைமுறையை கூட அந்த நாடு தடை செய்தே வைத்திருக்கிறது.   அவர்களிடம் இருக்கும் பெயர்ப்பட்டியற் புத்தகத்துக்குள் இருந்து நாம் விரும்பும் ஒரு பெயரைத தெரிவு செய்து குழந்தைக்குச் சூட்டினால் மட்டுமே அதன் பிறப்பு பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் பெற்றுக் கொள்ள முடியும்.  நாம் விரும்பிய எம் மொழிப் பெயர் தான் வைப்போம் என நாம் பிடிவாதமாக நின்றால் எதோ போனால் போகுது என்ற  பிச்சை மாதிரி  இரண்டாம் பெயராக வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் என்று அனுமதித்து விட்டு முதற்பெயரான தங்கள் பெயரையே பாவனையில் எடுத்துக் கொள்கிறார்கள்

இதிலும் எம் மூதாதைகள் பலரின் பெயர்களை உச்சரிப்பதை எள்ளிநகையாடி    வெள்ளைக்காரப் பெயரை  உச்சரிப்பதில்  பெருமை கொள்ளும் நம்மில் சிலர்  அவதானிக்க  வேண்டியது ஒன்றுண்டு. வெள்ளையன் கருப்பன்  போன்ற எம்மவர் பெயர்களையே அவர்கள் இன்னும் பரம்பரை பரம்பரையாக  பெருமையுடன் ஏற்றுக்  கொள்கிறார்கள்   உதாரணத்துக்கு  ஜெர்மானியப் பெயர்கள் தமிழ்  மொழிபெயர்ப்புடன் கீழே....








Schwarz = கருப்பு
Weißhaar = வெள்ளை முடி
Neumann = புது மனிதன்
Bergmann = மலை மனிதன்
Kreis = வட்டம்
Eisenring = இரும்பு வளையம்
Fischer = மீனவர்
Schneider = வெட்டுபவர்
Koch = சமையல்காரன்
Klein = சிறிது
Wolf = ஓநாய்
Groß = பெரிது
Braun = மண்ணிறம்
Zimmermann = தச்சன்
Bauer = உழவர்
Lang = நீளம்
König = அரசன்
Fuchs = நரி
Kaiser = சக்கரவர்த்தி
Jung = இளம்
Weiß = வெள்ளை
Keller = நிலவறை
Vogel = பறவை
Winter = குளிர்காலம்
Schuhmacher = சப்பாத்து செய்பவர்
Jäger = வேட்டைக்காரன்
Stein = கல்
Sommer = வசந்த காலம்
Engel = தேவதை
Sauer = புளி
Pfeffer = மிளகு
Anders = வேறு
Stahl = எஃகு
Stark = பலம்
Krebs = நண்டு
Sturm = புயல்
Vetter = மச்சான்
Baum = மரம்
Krieger = போர்வீரன்
Metzger = கசாப்பு
Hummel = வண்டு
Römer = ரோமன்
Mai = வைகாசி
Schnabel = அலகு // மசோதா
Blume = பூ


ஆக  மொத்தத்தில்  மொழியின்  தொன்மை உணர்த்தும் சொற்கள்  நீக்கப் படும்  போது  ஒரு மொழியின் தொன்மை  அழிக்கப்படுகிறது .  அது ஒரு இனத்தின்  தொன்மையை  மெதுமெதுவாக  மறைக்க ஏதுவாகிறது.

Saturday, May 13, 2017

மாயவலைக்குள் சிக்கும் மானுடம்

இதில் நான் பதிவிடப் போவது ஆண்கள் பற்றிய குறைகளோ அல்லது பெண்கள் பற்றிய நிறைகளோ அல்ல. நீங்கள் உணர்வது போல் , இரண்டு பக்கமும் இரண்டும் தாராளமாகவே உள்ளது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. குறையும் நிறையும் நிறையவே உள்ள உங்களில் ஒருத்தி தான். ஆனால் நான் சொல்ல வருவது எங்களில் சிலருக்குள் ஒளிந்திருக்கும் இன்னொரு அலட்சியமான, அருவருப்பான முகம் பற்றி. என் மனதை உறுத்தும் நான் செய்த அலட்சியம் பற்றியும்.....

அந்தப் பெண்ணை எனக்கு முன்னமே அதாவது இலங்கையில் இருக்கு போதே  தெரிந்திருந்தது. அவரது திருமணம் காதலாகவோ அன்றி இல்லாமல் எதோ ஒரு வகையிலோ  இருக்கலாம்.  அது இங்கு அவசியமற்ற ஒன்று. எனக்குத் தெரிந்தபோது  அவர் திருமணமானவராக இருந்தார் . அப்போது  வறுமையில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த அவருக்கு  அவரை நம்பியே குழந்தைகளும் கணவனும் இருந்தார்கள்.  வெளிவட்டாரத்தில்   எல்லோருடனும் நட்புப் பேண முயன்று எப்போதும் கலகலப்புக்குள் தன் வறுமையை மறைத்த அந்த லாவகம் அந்தப் பெண்ணைப் பார்க்கும் போது சற்று புருவமுயர்த்த வைத்தது எப்போதும்.

வேலையில்லாத கணவனுக்கு வருமானம் தேடி தெரிந்த இடமெல்லாம் கடன் பட்டு காதில் தோடு கூட இழந்த நிலையில் கணவனை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு குழந்தைகளுடனும், வறுமையுடனும், கடனுடனும் போராடிய போது அதிகமாகிப் போனால் முப்பது வயது கூட இருக்காது அவருக்கு அப்போது. அப்போதும் அந்த முகத்தின் புன்னகையும் கலகலப்பும் அழிந்திருக்கவில்லை.

அதன் பின் நீண்ட பல வருடங்களின் பின் அவரை நான் இருக்கும் நாட்டில் சந்தித்த போது நிறையவே மாறியிருந்தார். அவரிடம் நிரந்தரமாக இருந்த புன்னகையும், கலகலப்பும், கண்களில் இருந்த தன்னம்பிக்கையும் முற்றாகத் தொலைந்திருந்தது. கூட்டுப் பறவையைப் பிடித்து காட்டில் விட்டது போல் ஒரு பதட்டமும், படபடப்பும், அந்நியமும் அந்தக் கண்களில் நிரந்தரமாக இருந்தன. கோர்வையாக பேச முடியாமல் சம்பந்தமில்லாதவைகளை கலந்து பேசும் குழப்பம் இருந்தது. அப்படி அவர் பேச முயன்ற போதும் கூட அவரை முடிந்தவரை பேச்சால் பார்வையால்  ஒதுக்கி விட்டு, என்னுடன் சுவாரசியமாக உரையாடுவதில், அதுகும் ஒரு சதத்துக்கும் பெறுமதியில்லாத விடயங்களை  அல்லது சற்று கொச்சையான  நகைச்சுவைகளைப் பேசிச் சிரிப்பதில் ஆர்வமாக இருந்தார் எனக்கு அறிமுகமே இல்லாத தன கணவர் என அப்பெண்ணால் அறிமுகப்படுத்தப்பட்ட நடுத்தர வயதும் தாண்டிய அந்த மனிதர்.

ஒவ்வொரு தரமும் அந்தமனிதர் நிறுத்தும் போது கிடைக்கும் இடைவெளியில் கதைக்க முயல்வதும் அதற்குள் கணவன் முந்திக் கொண்டு விட, நத்தைக் கூண்டுக்குள் சுருள்வதும் போல அந்தப் பெனின் பரித்தவிப்பு அப்படமாகப்  புரிந்தது. கிடைத்த சற்று நேரத் தனிமைக்குள் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்து நீங்கள் மட்டும் கதைப்பதானால் கதையுங்கள் என்று சற்று எச்சரிக்கை போல் சொல்லிவிட்டு நகரத்தான் அன்று என்னால்  முடிந்தது. அதன் பின் எப்போதும் தனக்கு நேரம் கிடைக்கும் எல்லாப் பொழுதுகளிலும்  அவர் என்னுடன் தொலைபேசித்தொடர்பில் இருக்க முனைந்தது போல் என்னால் முடியவில்லை. ஆனாலும் அவரோடு கதைத்ததில் பெற்றுக் கொண்ட தகவல்கள் அவர் கதைத்த விதம் என்பன அவர் பல வருடங்களாக மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்ததை உணர்த்தியது.

இலங்கையில் இருந்தகாலத்தில் மனைவியை வீடுவீடாக அனுப்பி கடன்வாங்குவதும் , மிகுதி நேரங்களில் அவவின் சீலைத் தலைப்புக்குப் பின்னால் மறைந்து தொங்குவதும் தவிர ஒன்றுமே தெரியாமல் அதாவது  வேலைக்குப் போய் சம்பாதித்து குடும்பம் பராமரித்தல்  அயலட்டை உறவு பேணல்  என்ற அடிப்படை வாழ்முறைகள் கூடத் தெரியாமல்  இருந்த கணவனுக்கு, இங்கு வந்த பின் அதிகம் உலகம் தெரிந்து விட்டிருந்தது. தன்னை மிகப்பெரிய மேதாவி என்று எண்ணிக்கொண்டிருந்தார். மனைவியை பிள்ளைகளை நீண்ட இழுத்தடிப்பின் பின் தவிர்க்க முடியாமல் வெளிநாட்டுக்குக் கூப்பிட்டார்

  குடும்பத்துக்குத் தேவையானது அன்பும் ஆதரவும். அதற்கும்  மேதாவித்தனத்துக்கும் சம்பந்தமில்லை என்பது சாதாரணர்களுக்குப்  புரியும். ஆனால் இப்படியான அதிமேதாவிகள் தங்கள் மேதாவித்தனங்களை காட்டுவதற்குப் அடிமட்டத்தில் வைத்து அதிகாரத்தோடு  பயன்படுத்திக் கொள்வது குடும்ப அங்கத்தினரை மட்டுமே என்பதால் அவர்களுக்குப் புரிவதில்லை என நினைக்கிறேன். .

அதிகம் தெரிந்தவராக வெளிநாட்டில் தன்னை மனைவிக்குக் காட்டிக் கொண்ட  அவருக்குத் தெரியாமல் போனது கணவனுக்கான கடமையும், மனைவிக்கான உரிமையும், கல்யாணத்துக்கான அர்த்தமும் என்று நினைக்கிறேன்.





வெளிநாட்டவர்கள் மட்டுமே வாழும் கிராமம் ஒன்றில்  ஒதுக்குப் புறமாக  அமைந்திருந்தது  அவர்கள் வீடு. அடுத்த வீட்டினருடன் கூட தொடர்பாடல் இல்லாத அளவு மொழியறியாத, அறியவிட விரும்பாத அடக்குமுறை . வெள்ளைக்காரர் என்ற எதோ ஒரு அந்நியத்தன்மை , பதட்டம். எந்த தமிழர்களையும் காணாத வாழ்க்கை..... தொலைபேசியில் யாரையும் தொடர்பு கொள்ளக் கூட கையில் காசில்லாத, தொலைபேசி அட்டை வாங்க முடியாத கையறு நிலை. ,வாசல் விட்டு வெளியே வராத சிறை. மனதளவிலும் .

வேலை என்றும் கல்வி என்றும் நகருக்குச் செல்லும் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் அவர்கள் அத்தனை பேரின் நலத்தை மட்டுமே தன் வாழ்வாக எண்ணிய அந்தப் பெண்ணின் உள்மனம் ஒரே ஒரு ஆதரவான வார்த்தைக்காய் ஏங்கியதைக் கவனிக்க நேரமில்லாது போயிற்று. "உனக்கு ஒன்றும் தெரியாது வெளியே வந்து மானத்தை வாங்காதே" என்ற அன்பான? அடக்கு முறைக்குள் அவர் வளர்த்த வளர்ப்பு முறையைத் தொலைத்துக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு அம்மாவிடம் கதைக்க எதுகும் இருக்கவில்லை. அவரின் கணவருக்கு மனைவி மூலம் அறிமுகமாகும் பெண்களுடன் கதைக்க இருக்கும் ஆயிரம் அவசியமான விடயங்கள், அருவருப்பான நகைச்சுவைகள் தவிர மனைவியிடம் கதைக்க தேவையிருக்கவில்லை.. உலகமெல்லாம் சிதறிவிட்ட உறவுகளுக்கு இந்தப் பெண்ணை நினைக்க அல்லது நலம் விசாரிக்க  நேரம் இருக்கவில்லை.

அவரது நிலை புரிந்திருந்தும், எப்போதும் அவரை அனுசரித்து நடக்க முயன்றும், அவர் எதிர்பார்த்தது போல் தொலைபேசியுடன் தூங்கி தொலைபேசியுடன் எழுந்திருக்க என்னால் முடியவில்லை என்பது ஒரு பக்கம், மறுபக்கத்தில் மனைவியுடன் கதைத்து சிரிக்க நேரமில்லாது, மனைவிக்குத் தெரிந்த பெண்களுடன் வாழ்நாட்கள் முழுவதுமே பேசி , சிரித்து, ரசித்து வாழ்த் தெரிந்த பல மனிதர்களுள் ஒருவராக, வயோதிபப் போர்வையில் இளமைச் சில்மிசங்களுக்கு அலையும் அவரது கணவன் பற்றிய அருவருப்பும் அவரது தொடர்பில் இருந்து என்னை ஒதுங்கியிருக்க வைத்தது. ஆனால் அந்தப் பெண் அடிப்படையில் எவருக்கும் எந்தவிதத் தொந்தரவும் கொடுக்காதவர் . என்னிடம் அத்தனை நெருக்கத்தை அவர் சாதாரணமாக எதிர்பார்க்க மாட்டார் என்பதும் தெரியும். அவரது நோயின் தீவிரம் அவரை அந்தளவுக்கு என்னிடம் எதிர்பார்க்கத் தூண்டியிருக்கலாம். இதைப் பதிவிடும் இக்கணம் எனது செயல் எனக்கே வெறுப்பாகிப் போன குற்ற உணர்வுடனே எழுதுகிறேன். நாளாந்தம் அவருடன் பேச சிறிது நேரத்தை ஒதுக்க விரும்பாதது  இப்போது மனதில்  குத்துகிறது. ஆனால் அப்படி நான் ஒதுக்கியிருந்தால் கூட எதுவும் பெரிதான மாருதல்கல்பட்டிருக்க வாய்ப்பில்லை.

அடிப்படை அன்பு என்ற நிரந்தர அத்திவாரம்  இல்லாமல் இளமையின் துள்ளலிலோ, அல்லது வேறு எதையும் எதிர்பார்த்தோ ஒரு திருமணம். அதை ஸ்திரப்படுத்தி தக்கவைத்துக் கொள்ளக் குழந்தைகள் . எல்லாவற்றையும் தமக்குள் விழுங்கிக் கொண்டும் கலாச்சாரமும் குடும்பமும் காப்பாற்றிவிட போலிப் புன்னகையில் பொசுங்கிக் கொண்டிருக்கும் வாழ்க்கைத் துணை. வெளி உலகுக்கு சில குடும்பங்கள் வாழ்வது போல் அவர்கள் வாழ்வும்......,.

வீட்டில் இருப்பவர்கள் எங்கே போகிறார்கள், எப்போது வருவார்கள் என்ற விபரம் கூட அறிவிக்கப் படாத வாழ்க்கை வெளிநாட்டில் அப்பெண்ணுக்கு.. முதலில் சோகமாகி, பின்பு குழப்பமாகி, பதட்டமாகி, நினைவுகள் தொலைந்து, பேச்சு மறந்து......... தனக்குள்ளேயே உறையத் தொடங்கிய உணர்வுகளுடன், அந்த உயிரின் பயணம் நகரத் தொடங்கியிருந்தது.

ஆனால் இத்தனைக்குள்ளும் மருத்துவர் அந்தப் பெண்ணின் நோய் நிலை, அதற்கான காரணிகள், தீர்வுகள் என்பவற்றை எப்போதும் விளக்கமாகச் சொல்லிக் கொண்டே இருந்தும் வெறும் மாத்திரைகளை வாங்கிக் கொடுக்க மட்டுமே மனமிருந்த மனிதர்களுக்கு அந்த மனதைப் பகிர்ந்து கொள்ள நேரம் இருக்கவில்லை. மனப்பகிருதலே அவருக்கு அப்போது  முக்கியமாகத் தேவைப்பட்ட மருந்தாகவும் இருந்தது. முப்பத்தைந்துக்குள் முடங்கிய வாழ்க்கை, நாற்பத்தைந்துக்குள் இறுகிய ஜடமாகி, ஐம்பதில் அடக்கமாகியது.

படுக்கைவரை பகிர்ந்த துணைக்கு மனதைப் பகிரும் ஆர்வம் இருக்கவில்லை. மனைவியின் நோய் நிலையைக் கூட மற்றவர்களுக்கு உற்சாகமாக விளக்கி அதையே ஒரு சம்பாசனையாக உருவகித்து தன்னைச் சுற்றிக் கூட்டம் கூட்டிவிடத் தெரிந்த கணவனுக்கு அதில் ஒரு வார்த்தையேனும் மனைவியிடம் பேசும் ஆசை இல்லாமல் இருந்தது. " இனி அவ வெறும் சைபர் தான் டாக்டர் கை விரித்து விட்டார்" என்பதையும் மிக சுவாரசியமாக சொல்லும் கணவன்.... " அம்மாவையே கட்டிப் பிடிச்சுக் கொண்டு இருந்தால் எங்கள் வாழ்வில் எதுகுமே இல்லையா" என்று கேட்கும் பிள்ளைகள்......

எமது நாட்டில் எல்லா உறவுகளோடும் கூடி இருந்த காலங்களிலும் எல்லார் வாழ்விலும் எல்லாமும் இருந்தது. இங்கு அம்மாவுடன் பேசும் சொற்ப நேரத்தில் எதுகும் இழந்து விடப் போவதில்லை. என்பது புரியாமல் மாயைக்குள் தொலைந்து கொண்டிருக்கும் பிள்ளைகளும் .....
கணவனை மட்டுமே நம்பி அறியாத இடத்துக்கு வந்து விட்ட ஒரே காரணத்துக்காக மனைவியை ஒரு பொருளாய் கூட மதிக்காது தூக்கி மூலையில் போட்டு விட்ட கணவன்.... மீனுக்கு தண்ணீரிலே தான் பலம் என்பதை உணர்த்தியது அந்தப் பெண்ணின் தரையில் விழுந்த வாழக்கை.

கல்யாணத்தின் பின் கழுத்தில் கணவனையும் , நெஞ்சில் பிள்ளைகளையும் சுமந்து கொண்டு தன்னைத் தொலைத்து விட நிர்பந்திக்கப் படும், தொலைத்துவிடும் பெண்களுக்குப் பின்னால் இப்படி உதாசீனமாக ஒதுக்கப் படும் ஒரு எதிர்காலமும் இருக்கலாம் , அந்த நாளில் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் திகைப்புக்குள் அமுங்கி, அதிர்வுக்குள் மூழ்கிப் போகலாம் என்ற அதிர்வை எனக்குள் எழுப்பியது மௌனமான இந்தப் பெண்ணின் வெறித்த பார்வை.

கணவனைப் போல் பிள்ளைகள் போல் அவரும் வீடு தாண்டி வெளியேறி தனக்கான வேலை, தனக்கான பொது இடங்கள், நட்புக்கள், ஏன் தன்னை புரிந்து, தன்னுடன் பேசி, மனம் பகிரும் ஒரு துணை எல்லாமே நாடியிருக்க முடியும்...... வீட்டில் இரு என்ற கணவனின் கட்டளை..... பிள்ளைகளுக்கான காத்திருப்பு........ எங்கள் கலாச்சார வழமை என்ற கண்ணுக்குத் தெரியாமல் பின்னப் பட்ட வலைக்குள் சிக்கிக் கொண்டு , உணர்வு உறிஞ்சப்பட்டு கோமாவில் கிடந்த போது எவர் முகத்திலும் அந்தப் பெண்ணின் நிலைக்குத் தாமும் காரணமாக இருக்கலாம் என்ற சிறு வருத்தமும் இருக்கவில்லை.

அவர் இறந்த போது அவர் அத்தனை காலம் அவர்  தேடியது போல் அதிக மனிதர்கள் சேர்ந்திருந்தார்கள். அவருக்குத் தெரிந்த, அவர் பேச ஏங்கிய ஒரே மொழியில் பேசிக்கொண்டிருந்தார்கள் அவரது உடலுக்கருகே.

வெளிநாட்டுக்கு வந்து மனைவி குழந்தைகளைத் தன்னிடம் எடுக்கும் வரை அம்மனிதர் ஆடிய திருக்கூத்துக்களும் அவைகளை மனைவி அறிந்து விடுவாரோ என்ற தப்பிக்கொள்ளும் அல்லது தன்னை உத்தமராகக் காட்சிப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாகத்தான் அவர் வெளியுலகத் தொடர்பை மனைவிக்கு மறுத்திருந்தார் என்பதை அப்பெண்ணின் உடலுக்கு அருகே குசுகுசுத்துக் கொண்டிருந்தவர்களின் பேச்சில் இருந்து அறிந்துகொள்ள முடியாமல்  காரணமே தெரியாமல் ஒடுக்கப்பட்டு முடங்கி கட்டையாகக் கிடந்தார் அப்பெண்

ஒரு பிறப்பெடுத்து , அதில் குடும்பம் , அடக்குமுறை , அவமானம், உதாசீனம் , கலாச்சாரம், அனைத்தையும் வாழவைத்து, உதாசீனமும் அடக்குமுறையுமே  ஒரு நோயாகி அதையும் அணுவணுவாக அனுபவித்து மெல்ல மெல்ல மூளைச்சாவுக்கு பலியாகி இருந்தது ஆரோக்கியமான அந்த உடல்.

இறப்பு அவருக்கு விடுதலையாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் எதைச் செய்யலாம் எதைச் செய்யக் கூடாது  எத்தன எல்லை எதுவரை  என்ற கனதியான பாடத்தை வாயே திறவாமல்  அவர் கற்பித்துச் சென்றிருந்ததை இறுதி வழியனுப்பலுக்கு வந்திருந்த பல பெண்களின் சோர்ந்த முகங்கள், அதில் புதிதாய் தெரிந்த சிலிர்ப்பு  என்பன  அதிர்வாக எழுதியிருந்தன. அந்த அதிர்வு சில சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

Tuesday, May 9, 2017

ஜெர்மன் பாட்டியும் காட்டுக் காஞ்சோண்டியும்.......




எனது வசிப்பிடத்துக்கு அண்மையில் இருக்கும் ஒரு பாட்டி. எப்போதும் என் அம்மம்மாவை நினைவு படுத்தும் அளவு, அன்பை , அக்கறையை, ஆதரவை, advaice ஐ கூட தாராளமாக வாரி வழங்குவார். தான் சொன்னது கேட்காவிட்டால் சிலநேரம் கோபத்தையும். தொண்ணூறு வயதை நெருங்கியும் அவர் தனிமையை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வது எனக்குப் பிடிக்கும். எல்லா வயதானவர்களையும் போல் அவருக்கும் எப்போதும் பேசுவதற்கு யாராவது தேவை. நேரம் இருக்கும் பொழுதுகளில் அவருக்காக நேரத்தை ஒதுக்குவதுண்டு. மூத்தோர் வாழ்க்கை அனுபவங்கள் எந்தப் புத்தகமும் கற்றுக் கொடுக்காத நல்ல வழிகாட்டி வாழ்க்கைக்கு என்பதை வாழ்க்கை எனக்கு பலதவைகள் குட்டிக் குட்டி கற்பித்திருப்பதால் அவவோடு கதைத்துக் கொண்டிருக்க எனக்கும் பிடிக்கும். கூடவே ஜேர்மனிய பண்டைய வாழ்க்கை முறை உணவுப்பழக்கங்கள் குடும்ப உறவு நிலைகள், கொஞ்சம் ஊர் விடுப்பு எல்லாம் அறியலாம்.
தவிர முதியவர்களுக்காக சற்று நேரமொதுக்கிப் பேசிக்கொண்டிருந்தால் அவர்களின் மலரும் நினைவுகளின் பகிருதல்களின் பின் புதிதாய் இரத்தம் பாச்சியது போல் புத்துணர்வோடு செயற்படுவார்கள். என் அம்மம்மாவின் கடைசி காலங்களில் அவவை பார்த்து அவவுடன் இருந்து அவதானித்திருக்கிறேன். இப்போதெல்லாம் வயதானவர்களுக்கு ஒரு சிறு செயல் செய்யக் கிடைத்தாலும் அதைச் செய்யும் போது அம்மம்மாவுக்கே செய்வது போல் எதோ ஒரு நிறைவு. தலையில் தூக்கி வைத்து வளர்த்தவர்களுக்கு எல்லாம் கடைசி காலங்களில் கூட இருந்து வாயில் ஒரு பிடி அரிசி கூட போடாமல் நாட்டைப் பிரிந்த குற்றத்துக்கு பிராயச்சித்தம் போல்.
.
இந்தப் பக்கத்து வீட்டுப் பாட்டி ஒரு நாள் காணா விட்டாலும் ஓடி வந்து தேடுமளவு மனதுக்குள் என்னை நெருங்கி இருந்தார். பொதுவாக அவரைத் தேடி நான் போவது மிக மிக அரிது. அவர் தான் தேடி வருவார். "உனக்கு நேரமிராது எனக்குத் தெரியும்" என நான் போகாததுக்கு தானே சமாதானமும் சொல்லிக் கொள்வார். கடந்தசில வாரங்களாக வரவில்லை தேடிப்போய் பார்த்த போது அசைவு குறைத்து மூலையில் ஒடுங்கி இருந்தார்,. கை கால்கள் இறுக்கமாக உணர்ச்சியற்று இருக்கிறது தனியாக வீதியில் இறங்க பயமாக இருக்கிறது என்றார். சரிதான் என்று ஓடி ஓடி நேரத்தைத் தேடித் பிடித்து சற்று நேரம் பாட்டியைக் கூட்டிக் கொண்டு சற்று வெளியே நடப்போம் என்று வெளிக்கிட, இயற்கை மருத்துவம் படிச்ச பாட்டி "சற்றுத் தூரமாக உள்ள மூலிகைக் காட்டுக்கு கூட்டிப் போகிறாயா?" என்றார்.கூடவே தன்னிலும் வயதான கால்கள் இரண்டும் அம்மிக் குழவி போல வீங்கிய ஒரு தோழியும் சேர்த்துக் கொண்டார்.
.
இப்படியே இவர் அவருக்குச் சொல்லி, அவர் இவருக்குச் சொல்லி ஆள் எண்ணிக்கை கூடி இறுதியில் சில பாட்டீஸ் பல குட்டீஸ் என்று ஒரு கூட்டமாகி மூலிகைக் காட்டுக்கும் போனோம். ஒரு புல் பூண்டு மிச்சமில்லை வேரிலிருந்து குருத்துவரை, மொட்டிலிருந்து விதை வரை எந்த நோய்க்கு எதை எப்படி பாவிப்பது எப்படி பதப்படுத்தி வின்ரர் நேரத்துக்கு சேர்த்து வைப்பது என்று பாட்டி படிப்பிக்கத் தொடங்க, நிப்பாட்டேன் பாட்டி என்று என் கண்கள் கெஞ்சியதை பாட்டி கவனிக்கத் தயாராகவே இல்லை.
.
ஊரில் இருந்த காலத்தில் வீட்டுக்குப் பின்னால வளவுக்கை போய் கறிவேப்பிலை உருவி வந்து கழுவிப் போட்டு சாம்பாரில் போடு என்று வீட்டில் சொன்ன குற்றத்துக்கு, அடிவளவு தாண்டி அடுத்ததாய் கிடந்த வெறும் வளவுக்குள் போய் கறிவேப்பிலைக்கும் பன்னை இலைக்கும் வித்தியாசம் தெரியாமல் உருவிக் கொண்டு வந்து கழுவி கொத கொத எண்டு கொதிச்சுக் கொண்டிருந்த சாம்பாரில் போட்டு ஒரு பெரீய குடுமபத்தையும் வந்திருந்த விருந்தினரையும் பட்டினியில் போட்ட பெருமை உள்ள அறிவாளி. எனக்குப் போய் வேலை மினக்கெட்டு விவரம் சொல்லிக் கொண்டிருந்தா பாட்டி
.
"உடம்பில தண்ணி கோர்த்து கால் வீக்கம் இருக்கு அவிச்சுக் குடிச்சால் தண்ணி இறங்கி விடும்" என்று சொல்லி ஒரு மூலிகையை அதிகமா ஆய்ந்து சேர்த்துக் கொண்டே ,
"இதனால் கை கால்கள் எல்லாம் மெதுவாக அடித்தால் இது பட்ட இடம் எல்லாம் எரிவு தோன்றும் இரத்தம் ஓடும் . மரத்த நிலை மாறி சாதாரண இயங்கு நிலைக்கு வரும். ஒரு மாதம் தொடர்ந்து செய்தால் நடக்க முடியாமல் உடல் சோர்ந்து விறைத்து இருக்கும் முதியவர்களால் நடக்க முடியும் " என்று சொன்னார்.
.
"அப்ப நீங்கள் அடியுங்கோ நான் இலை ஆய்கிறேன் " என்றேன் .
" பூச்சி இருக்கும் கையுறை போடு" என்ற பாட்டியின் எப்போதுமான அறிவுரையால் கையுறையோடு ஒரு பெரிய பை நிறைய அந்தச் செடியின் இலைகளைப் பறித்துக் கொண்டு பார்த்தால் ஏராளம் முதியவர்கள் பாட்டி சொன்னது போல் அந்தச் செடியை பிடுங்கி தம்மை தாமே அடித்துக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு சிறப்பான மூலிகையாக இருக்கிறதே நானும் முயற்சிப்போம் என்று ஒரு செடியைப் பிடுங்கினேன்
.
வெயில் எறித்த படியால் கை கால் எல்லாம் முற்றாக உடையால் மூடி இருக்கத் தேவையிருக்கவில்லை. முழங்காலுக்குக் கீழ் மூடாத காற் பகுதி எல்லாம் செடியால் எனக்கு நான் அடித்துத் தண்டனை கொடுக்க நல்லாத்தான் இருந்தது. பின்னால் தான் நான் செய்த தப்பு உறைத்தது.



.
நான்பிறந்த மண்ணை, அதன் செடிகளை, ஒரு புல் பூண்டு ஒதுக்காது ஒவ்வொன்றாய் விபரமாய் மாமா சொல்லிக் கொடுத்து வளர்த்த நாட்களை எல்லாம் மறந்ததுக்கு தண்டைனையை ஜெர்மனியில் வைத்துக் காஞ்சோண்டி கொடுத்து விட்டது. கை கால் எல்லாம் தாறுமாறாக கடித்து சுணைத்து கொப்பளமாகி கடிஎறும்புப் புற்றுக்குள் குடி இருந்தது போல் ஆகிப் போச்சு.
.
"எரியும் என்று தானே சொன்னாய் பாட்டி கடிக்கும் என்று சொல்லலையே. இது தான் என்று சரியா தெரிஞ்சால் இந்தப் பக்கமே வந்திருக்க மாட்டேன்" என்றேன்.
.
சத்தியமா கண் முட்டி அழுகை வந்து விட்டது. அவ்வளவு சுணை . பாட்டி கோபப்படாமல் உனக்கு சென்ஸிட்டிவ் தோல் அது தான் சிவந்து போச்சு நாளைக்கு மாறிப்போம் என்றார் குழந்தைக்கு சமாதானம் சொல்வது போல். கூடவே அதன் மருத்துவ விளக்கங்களையும் சொல்லிக் கொண்டிருந்தார். என்னவோ பாட்டி கை கால்களை அசைத்து விரல்களை நீவி முகம் உற்சாகமாகி இருந்தார் .
.
கடித்துச் சுணைத்து எம்மை ஓட ஓட விரட்டும் காஞ்சோண்டி ஜெர்மன் மொழியிலும் காய வைப்பதோடு கிட்டத்தட்ட ஒத்த சொல்லான எரித்தல் என்ற அர்த்தத்தைக் குறித்தே வருகிறது. உடலில் உள்ள தேவையற்ற நீரை எரிக்கிறது என்கிறார்கள். குருத்தை பச்சையாக சலாட் செய்தும், இலைகளை சூப் மற்றும் வேறு உணவுப் பொருட்களோடு கலந்தும் பலவகை உணவுகளைத் தயாரிக்கிறார்கள்.
.
தேனீராக மருந்துக் கடைகளில் மட்டுமே கிடைக்கும் சற்று அதிக விலை கொண்ட இந்த மூலிகையை எமது நாட்டில் நாம் சற்று அதிகமாகவே ஒதுக்கி வைத்து விட்டோமோ என்று தோன்றுகிறது.
.
சிறுவயதில் தாத்தாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு தோட்டத்துக்குப் போகையில் "காஞ்சோண்டி பட்டிடும் கண்ணம்மா கையோட வா" என்று கைக்குள்ளே கொண்டு நடந்ததும்,
"அங்கேயிங்கே ஓடாதே காஞ்சோண்டி கீஞ்சோண்டி பட்டிடப் போகுது "என்று சித்தப்பா தூக்கித தோளில் போட்டு காடுகாட்டியதும்
பாம்பு பாம்பு என்று பயங்காட்டிற மாதிரி "காஞ்சோண்டி காஞ்சோண்டி" என்று பயங்காட்டியே கையில் பிடித்தபடி இயற்கையோடு வாழக் கற்றுக் கொடுத்த மாமாமாரும் காட்டிய பயத்தில் காஞ்சோண்டியை கண்டாலே விஷப்பாம்பு மாதிரி விலகியோடிய எனக்கு இன்றைய பாட்டியின் பாடம் படிப்பினை போலவே இருந்தது.
.
ஏனெனில் உயரத்தில் இருக்கும் எட்டா நிலவுக்கு கொட்டாவி விடும் எமக்கு குப்பையில் கிடக்கும் குண்டுமணிகளை மாலையாக்கத் தெரிவதில்லை. அதை யாரோ எடுத்துக் கிரீடத்தில் வைத்தபின் தான் கையில் கிடந்த காலில் மிதித்த பொருளின் பெறுமதி பலருக்கும் புரிகிறது என்பது மறுக்க முடியா உண்மை தானே
.
(காஞ்சோண்டி என்பது பேச்சு வழக்குச் சொல். இதன் தாவரவியல் பெயர் எனக்குத் தெரியாது . டொச் மொழியில் Brennesseln )

Tuesday, May 2, 2017

நந்தவனத் தோட்டத்தில் .......

எங்கட வீட்டில அப்ப  என்ர சின்னவயதில  ஏராளம் பசுமாடுகள் இருக்கும். வயல் விதைப்புக் காலங்களில் மட்டும் தான் அவைகளை வீட்டில் கட்டிவைத்து, காலையில மாட்டுக் கட்டை துப்பரவாக்கிய பிறகு  பனையோலை கிழிச்சுப் போடுவீனம்.  மத்தியானம்  களனியும் புண்ணாக்கும் கரைச்சு வைச்சப் பிறகு வளவுகளில் கொஞ்சம் நீண்ட கயிற்றோடு காலாற உலவவிட்டு வைச்சிருப்பினம். பின்னேரம் அவைகளை கொண்டு வந்து அவரவர் இடங்களில் கட்டிப் போட்டு வயலில களைபிடுங்கின கோரைப்புல்லைக் கொண்டுவந்து அடிவேரை வெட்டிப் போட்டு சாப்பிடக் கொடுப்பினம்.  வயல் அறிவு வெட்டுக் காலம் வரை  அது தொடரும்.
.
வயல் அரிவு வெட்டின பிறகு , காலமையில எல்லாரையும் ஒண்டா சாச்சுக் கொண்டு போய் நெடுங்குளம் தாண்டி வயல் தொடக்கத்தில விட்டிட்டு வருவீனம். பின்னேரம் வயிறு முட்ட மேஞ்சு போட்டு கனத்த மடி அசைய தளதள என்று வரிசையாக  அவர்கள் வரும் அழகும் வாசலிலேயே நின்று , கீழ் கழுத்து தொங்கு தோலை வருடி" வாடி ராசாத்தி" என்று ஒவ்வொருவரையும் அவர்களது கட்டுமிடத்தில் கட்டி விடும் தாத்தா பாட்டியின் கருணையும்,  கண் மூடும் வரை மறக்காது எனக்கு.
.
இப்ப அதுவல்ல இந்தக் கதை. தடவி வளர்த்த இந்தப் பசுக்களை கன்றுப் பருவம் தாண்டி தனியா அவிழ்த்து மேய அனுப்புமுதல் குறி சுடுவது பற்றியும், குறி சுடுபவர்மீது நான் வளர்த்துக் கொண்ட தீராத கோபமும் பற்றித் தான் சொல்ல வந்தேன். அதைச் சொல்வதுக்கும் ஒரு காரணம் உண்டு. அது உங்களால் ஏற்க முடிந்த, அல்லது முடியாத காரணம் என்றாலும் சில காரியங்களுக்குப் பின்னால் காரணங்கள் உண்டு என்பதை ஏற்பீர்கள் எனத் தான்  நினைக்கிறேன்.  என்னைப் போலவே பலரது பல காரியங்களுக்குப் பின்னாலும் காரணங்கள் இருந்தன என்பது நீங்கள் ஏற்க மறுத்தாலும் மறைக்க முடியாத உண்மைகள்.
.
முதல் இருந்த பசுக்களுக்கு எப்போது குறி சுட்டார்கள் என்று  எனக்குத் தெரியாது.எனக்குக் கொஞ்சம் புதினம் பார்க்கும் வயதில் தான் குறிசுடுற ஆள் வந்து அடிவளவுக்குள்ள கன்றுக் குட்டியை கொண்டு போய் ரெண்டு ரெண்டு காலா ஒன்றாக் கட்டி படுக்கவைத்து , அதை ரெண்டுபேர் காலால உழக்கிப் பிடிச்சிருக்க, தலையை மண்ணோட சேர்த்து இன்னொராள் அமத்திப் பிடிச்சுக் கொண்டிருக்க, ஒரு பெரிய அகலச்சட்டியில தக தகவெண்டு தணல் கணகணக்க, வீட்டில எல்லாரும் மூலைக்கு மூலை நடக்கக் கூடாத எதுவோ நடக்கிற மாதிரி சோகமா சோர்ந்து போயிருக்க, காதுக்குத்து சடங்கு மாதிரி இதுவும் எதோ கட்டாயம் நடந்தாக வேண்டிய சடங்கு மாதிரி ஒரு இறுகிப் போன முகபாவனையோடு பாட்டி வழமை மாதிரி அசங்காமல்  அரசோச்சிக் கொண்டிருக்க, அவ அரசோச்சிற அழகை வழமை மாதிரி தாத்தா பெருமையா பார்த்துக் கொண்டிருக்க, நான்.....
.
வழமை மாதிரி எல்லாரும் அசந்த நேரத்தில பதுங்கிப் பதுங்கி அடிவளவுக்கு போய் வைக்கோல் போருக்குப் பின்னால மறைஞ்சு கொண்டு என்ன நடக்குது என்று பார்த்த நேரம் தான் கம்பியை தணலில சூடுகாட்டி செவ செவ என்று அனல்  மின்னிய கம்பியால குறிசுடுற அந்தக்  கொடுமை நடந்தது. விழுந்து கிடந்த இளங்கன்று வீரிட்டு கத்தியது. அதை விட சத்தமா நான் வீரிட குறிசுட்டவர் கை நடுங்கி தாறுமாறா குறி இழுக்க M என்ற அந்த எழுத்து எதோ கோணல் மாணல் கோலமாக கன்றுக் குட்டியின் தொடைப்பகுதியைப் பொசுக்கிக்  காயமாக்கியது.
.
அதன் பின் அன்று போட்ட கூச்சலும், முற்றமெல்லாம் உருண்டு உருண்டு சத்தமிட்டு அழுது அழுது ஒரு ஜென்மத்துக்கு போதுமான அளவு செய்த பிறதட்டையுமாக குறிசுடல் படலம் நிரந்தரமாக என்குள் வீட்டைப் பொறுத்தளவும் நின்று போனது.
.
பாட்டி கையெடுத்துக் கும்பிடாத குறையா குறிகார மனிதரிடம் மன்னிப்புக் கேட்டு, பேசின காசை கொடுத்தா.  தாத்தா அந்தாளின்ர  தோளில கைபோட்டு அணைக்காத குறையா அழைச்சுக் கொண்டு வாசல் வரைக்கும் போய் அந்தாளை வழியனுப்பிப் போட்டுத் திரும்ப, அதுவரைக்கும் சித்தியின்ர மடிக்குள்ள கிடந்து ககன் முகம் வீங்கிச் சிவக்க  அழுதது எல்லாம் மறந்து போன மாதிரி வெளிக்கிட்டு ஓடிப் போய் "இனி இந்தப் பக்கம் நீங்க வந்தா சும்மா நிண்ட கன்றுக்கு நெருப்புக் கோல் வைச்சு இழுத்த மாதிரி , நெல்லடுப்புக்குள்ள கம்பியை சூடு காட்டி உங்கட முதுகில இழுப்பேன் " என்று சொன்ன போது நேசரிக்கும் போகாத வயது எனக்கு.

 .
 பின் அந்தக் காயம் புண்ணாகி இரத்தம் வடிந்தது. இலையான் மொய்க்காமல் பாட்டி தெளிவெண்ணையும் கற்பூரமும் காச்சி "அம்மாவை மன்னிச்சுக் கொள்ளடி ராசாத்தி"  என்று சொல்லிச் சொல்லி  பூசி கவனமாக மாறவைக்கப் பட்ட பின்பும் அந்தநெருப்பில் வெந்த அடையாளம் வடுவாகி, கன்று என்பது மாறி பசுமாடு  சொல்லி அது வாழ்ந்த  காலமெல்லாம் இருந்தது,. அதைப் பார்க்கும் போதெல்லாம் எதோ ஒரு வஞ்சம் என் மனதிலும் இருந்தது.
.
அது ஒரு சாதாரண, உடைமை அடையாள கிராமத்து நடைமுறை என்பது புரிந்த பிற்காலத்திலும் குறி சுட்டவர்  மீது தப்பே இல்லை. அது அவர் தொழில்  என்று உணர்ந்த பின்பும் யாழ்ப்பாணம் விட்டு விலகும் வரை அவரைக் காணும் போதெல்லாம் முகம் திருப்பும் வஞ்சம் போல் ஏனோ மனதில் படிந்திருந்தது அந்த நிகழ்வு.

      


.
ஏராளம் உறுப்பினர்கள் நிறைந்த எங்கள் வீடு கல்யாண வீடுபோல எவ்வளவு கலகலப்பாக , பாசமாக எப்போதும்  இருக்குமோ , அதேயளவு சமயங்களில் மிக அவலமாகவும் இருக்கும், எனக்கு  விருத்தெரியாத காலத்திலேயே எப்போதும் எவரையாவது இழந்து விடப் போகும் பதட்டம் எப்போதும் வீட்டுக்குள் ஒட்டி  இருக்கும், இலங்கையில் எந்தப் பகுதியில் பிரச்சனை என்றாலும் ரேடியோ செய்திக்கு முன்னால் கூடியிருக்கும் பதகளிப்பும் , பட்டென மரித்துப் போகும் புகையிரதச் சேவையிலிருந்து எப்போதாவது மதிய யாழ்தேவி அல்லது மெயில்ரயில் என்று சொல்லப்பட்ட அதிகாலை புகையிரதத்தைக் காத்து எஞ்சிய எங்கள் இரத்தங்களுக்காய் சாப்பாடு தண்ணி இல்லாமல் இழவு விழுந்த வீடு மாதிரி வீடே தவம் கிடக்கும்.
.
எதோ வீடு செய்த புண்ணியமோ என்னமோ ஒவ்வொரு முறையும் உடைமைகளைத் தொலைத்தும் எங்கள் உரித்துடைய உறவுகள்  உயிரோடு  வந்தார்கள். ஒரு முறை தென்பகுதிக் கலவரத்தில் இருந்து தப்பி  வரும்போது அந்த விரிந்த திடகாத்திரமான முதுகு முழுவதும் முழு வளர்ச்சி பெற்ற சாரைப் பாம்பின் உடலளவு தடிப்பில் ஏராளம் கோடுகள் இழுக்கப்பட்டு முதுகு முழுவதும் இறைச்சியாகி சீழ் வடிந்து கொண்டிருந்தது.
.
வீடு  அதிர்ந்தது பின் அழுதது. பின் உயிர் தப்பியதே போதும் என்று ஆறுதல் கொண்டது. அவங்கள் திருக்கை வாலாலும் சைக்கிள் செயினாலும் அடித்ததாக பேசிக்கொண்டார்கள். பின் எவ்வளவு கேவலமாக ஒருவர் உயிர் தப்ப பதுங்க முடியுமோ அப்படியெல்லாம் பதுங்கி தப்பி உயிரைக் கையில்; கொண்டு உறவுகளுக்காக வந்த கதையை எல்லாரும் கூடி குசு குசு என்று கதைத்துக் கொண்டார்கள் .
.
பிறகு சிலகாலங்களின் பின் அவர் வேலை மாறி வேறு இடத்தில் தொழில் புரியத் தொடங்கினார். அப்போதும் பதட்டங்கள் சூழ்ந்த விபரம் புரியாத வயது தான் . திரும்பவும் திரும்பவும் எப்போதுமான ஒரே மாதிரியான  காத்திருப்பு, கண்ணீர், உடமையற்று உயிரோடு ரயில் கொண்டு வந்து கொட்டிய உடல். பின் ஒவ்வொரு முறையும்  இப்படித்தான் தொடர்ந்தது அப்போதும் அவர்கள் உடலால் இறந்து விடவில்லை எம் காத்திருப்பை ஏமாற்றாமல் திரும்ப திரும்ப வந்தார்கள் எமக்காக. . ஆனால் ....
.
ஒரு முறை அடித்து உடைத்தது போதாது என்று மயங்கி விழுந்த மனிதனின் விரிந்து பரந்த மார்பில் இரும்புக்கம்பியை நெருப்பில் காச்சி சிங்களத்தில் குறிசுட்டு அனுப்பி இருந்தார்கள் கார் நம்பர் தகட்டுக்கு ஸ்ரீ எழுதினது மாதிரி. அது பொங்கி சிதம்பி சிதல் வடிந்து பின் மெல்ல மெல்ல மாறி வடுவாக நிரந்தரமாக..... இத்தனைக்கும் அவர் செய்த ஒரே குற்றம் சிங்களவர்களுக்கு அதிகாரியாக இருந்தது. நல்ல நண்பனாக பழகியது. தரம் பார்க்காமல் ஒவ்வொரு விடுமுறைக்கும் அவர்களைக் கூட்டிவந்து யாழ்ப்பாணம் காட்டியது என்று பல .
.
என்னை தொங்கவிட்டு தூக்கிச் சுமந்த இளமை முறுக்கேறிய தோள்களும் முதுகும் , தூக்கி ஊட்டி வளர்த்துத் தூங்க வைத்த  மார்பும், என் கண்களை உறுத்தும் போதெல்லாம் அந்த வடுக்களை என் கைகள் நெருடிப் பார்க்கும் நேரமெல்லாம்... விலா எலும்புகளில் உடைவுகள் இருக்கின்றன என்று மனம் உறுத்தும் நேரமெல்லாம்,  என்னோடு சேர்ந்து நான் வளர வளர  என் மனதுக்குள் வளர்ந்ததுக்குப் பெயர் வஞ்சம்.
.
வஞ்சம் விதை விதைக்க துவேசம் முளை விடும். முளைவிட்டபின் விதைத்தது தவறில்லை விளைந்தது தான் தவறு என்பது எந்த வித நியாயம். இப்படித்தான் எல்லா இடத்திலும் எதோ ஒரு காரணி எல்லாவற்றையும் ஆரம்பித்து வைத்தது.
.
நந்தவனங்களில்  விஷ முள்ளு விதைத்த கதை நொந்த மனங்களில் எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் வஞ்சமாகப்  பதிவாகியே இருக்கிறது. அனல் காச்சி இழுத்த வடுக்களைப் போல உடல் சாயும் வரை  அவை மறைவதேயில்லை.

.