Sunday, April 22, 2018

உலகப் புத்தகதினமும் (23.04) தொலைந்த நினைவுகளும்


சேக்ஷ்பியர்  இறந்த நாள் இன்று. (24.04.1564 . 23.04.1616)

அம்மாவிடம் கதைகேட்டுத் தூங்கிய நாட்களில் சொன்ன அவரது சில  கதைகள்  மனதிலோடுகின்றன. அப்பாவின் புத்தகப்பெட்டிக்குள் தூங்கிக்கிடந்த,  வளர்ந்து வாசிக்கலாம் எனக் காத்திருந்து வாசிக்காமலே போன  மற்றைய கதைகளும்   அவை மறைந்து போன  நினைவுகளும், ஒருபோர் கடந்தகாலம் என்பதை எந்தவித அடையாளச்சின்னங்களுமற்று எப்படிச்சிதைத்தெறிந்து வேரற்றவர்களாக வீசி விட்டுச் செல்கிறது என எண்ணிப் பார்க்கிறேன்.


அப்ப  அதாவது நான் சின்னவளா  இருக்கும் போது  எங்கட வீட்டில  நிறைய  ஆட்கள்  பத்துக்கு  மேல இருக்கும் எண்டு வையுங்கோவன்.  அதால இடநெருக்கடியும்   அதிகமா இருந்திருக்கக் கூடும்  எண்டு நினைக்கிறன் அதெல்லாம் அவதானிச்சுக்  கணிப்பிடுற  வயதில்லை எனக்கு அப்போது.  ஆனாலும்   அப்போது அதிகம் வசதிகளும் ஆடம்பரங்களும்  இல்லாமல் இருந்த காலம் என்பதாலும்  பாட்டி தாத்தாவின்ர  இறுக்கமான கட்டுக்கோப்புக்குள்ள  இருந்த  கூடு போல வீட்டு வாழ்க்கையில்   நெருக்கடியிலும்  மன நெருக்கமாக  வாழ்ந்த காலம்.

எங்கட   வீடு பாட்டி கால வீடு எண்டதால  வீட்டோட  ஒட்டாத தனியான  சமையலறை  முன்வாசல் விறாந்தை  என  பழையகால  அமைப்பிலேயே  இருந்தது. வீட்டின்ர ஒரு பக்கத்தில  வீட்டோட  ஓட்டினபடி பத்தி என்று சொல்லபடுற ஒரு எக்ஸ்ரா தொடுப்பு ஒன்று இறக்கப்பட்டிருந்தது.  அது வீட்டு நடமாட்டத் தொடசல்கள்  எதுவுமில்லாமல்  படிப்பதற்காக மட்டுமே  பாவிக்கப்பட்டது.  அதின்ர  நடுவில பெரிய மேசை வைச்சு  இரண்டு பக்கமும் நீள வாங்குகளும்  அகலப்பக்கத்தில்  கதிரைகளும்  போடப்பட்டிருந்தது. பகலில அதில தான் அம்மாவின்ர ரியூசன் வகுப்பு நடக்கும். மற்ற நேரங்களில் புழக்கமறிருக்கும். மாலை ஆறுமணி ஆகிச்சுதெண்டால்  வீட்டில்  இருந்தவர்கள், அவர்களின் நெருங்கிய நட்புகள் என்று  அந்தப் பத்தி  நிறைஞ்சு போயிருக்கும்.

பத்தியின்ர  தொங்கலில  பத்தியின்ர   அகலத்தை  அப்படியே அடைச்சபடி  எப்பவும் ஒரு பெரிய  இரும்புப்பெட்டி இருக்கும்.  இரும்புப் பெட்டி  எண்டதும் நீங்கள் கற்பனை பண்ணுற மாதிரி  ரங்குப்பெட்டி கிடையாது.   இரும்புப்பெட்டி  எண்டால்  இரும்புப் பெட்டி.  நாங்கள் ஒளிச்சுப்பிடிச்சு விளையாடினால்  ஆறேழு பேர்  அதுக்குள்ளே இறங்கி ஒளிச்சுக்கொண்டு  மூடி விட்டால் ஆருக்கும்  தெரியாது. ஆனால் என்ன  ஒண்டு  உன்னை  நினைச்சேன்  பாட்டுப் படிச்சேன்  படத்தில  கார்த்திக் மோனிஷாவை  மூடி வைச்ச மாதிரி  பிறகு  என்னை   நினைச்சு குடும்பம்  ஒப்பாரிப் பாட்டுப்படிக்க நேர்ந்திருக்கும் 

அதுக்குப் பக்கத்தில  ஆளுக்கொரு கதிரை கொண்டு போய்  போட்டு  அதின்ர  மேல் மூடியை  பூட்டு விலக்கி, ரெண்டு பெரும் ரெண்டு பக்கமும்  பிடிச்சு  மேல்ப்பக்கமா  உயர்த்தித்  திறக்குறதுக்குள்ள  எனக்கும் என்ர  முதல் நண்பி  ஷிராகினிக்கும் அடிவயிறு  எக்கி முழி பிதுங்கி  மூச்சு  முட்டிப் போகும்.   அதை விட  அம்மா கண்டிடுவா  என்ற  பயம் வேற.  அந்தப் பயத்திலேயே  திரும்பிப்பாத்துக்கொண்டு  மூடியை திறந்து,  அது பதட்டத்தில  கைநழுவி  'டொமார்'  எண்டு விழ,  அம்மா  உயிர்  விழுந்து  உடைஞ்ச மாதிரி  ஓடி வருவா.   அம்மா அடிச்சுப் போடுவா என்ற   பயத்தில அதை அப்பிடியே  போட்டிட்டு  நாங்கள்  ஓடிப்போய்,  அம்மா  மரத்தில எல்லாம் எங்களை மாதிரி ஏறி வந்து அடிக்க மாட்டா எண்டதால  முத்தத்து  மாமரத்தில  ஏறித் தொங்கிக்கொண்டு கொம்பேறி மூர்க்கன் மாதிரி  அம்மா என்ன செய்யிறா எண்டு பாத்துக்கொண்டிருப்பம்.   அப்பவே ஆக்கள் இல்லாத இன்னுமொரு நாளில  அந்த புதையல் பெட்டியை திறந்து பார்க்கிறதா  திட்டமும் போட்டுக் கொள்ளுவம்.

பகல் நேரத்தில்  வீட்டில் எல்லாரும் நிக்கும்   வாரவிடுமுறை நாட்களில்  மத்தியானம் சாப்பிட்ட பிறகு  பத்தியின்ர  வாசல் பக்கமா  வீட்டு  விறாந்தையை  ஒட்டிய  வெளிச்சமும் காற்றோட்டமுமான  பகுதியில  வரிசைக்குப் பாய்களைப்போட்டு  பாட்டி தாத்தா உட்பட  எல்லாரும்  சாய்ந்து கொள்ளுவீனம் .  அப்ப  கல்கி  குமுதம்  மாதாந்தர வெளியீட்டு  நாவல்கள்   எல்லாம் தபாலில  வீட்டுக்கு  வாற  காலம்.  நீ  முதல்  நான் முதல் என  யாரும்  போட்டி போட முடியாது.   அப்படிப் போட்டி போட்டால்  அது பாட்டி தாத்தாக்குப்  பிடிக்காது  அதால பொதுவா  ஒராள்  வாசிக்கும்  மற்றவை எல்லாரும்   படுத்திருந்து  கேப்பீனம். அது முடிய  அடுத்த  அத்தியாயத்தை இன்னோராள்  வாசிக்கும்.  எனக்கு  சத்தியமா  ஒரு மண்ணும்  விளங்காது  ஆனாலும்  நானும்   அந்தப் பாயில  தான் இருந்தாக  வேணும்.  

வீட்டுக்குக் கிட்ட  ரெயில்பாதை  எண்டாதாலும், அந்த நேரம் கொழும்பிலிருந்து  ஆக்களைக் கூட்டிக்கொண்டு  இன்ரசிற்றி  வரும்  பிறகு ஒரு மணித்தியாலத்தால  காங்கேசன்துறையில்  இருந்து  வெளிக்கிட்டுஆட்களைக் கொழும்புக்குக்  கூட்டிக்கொண்டு போற எனக்குப் பிடிக்காத   யாழ்தேவி போகும்.  அது போய்  கொஞ்ச நேரத்தில எண்ணைக் கோச்சி,  மழைகாலத்தில  வாற  சிவப்பட்டை  நிறத்தில  பேனையட்டை  மாதிரி  நீளமா  உருண்டு திரண்டு  வரும்.  நான்   இதை எல்லாம் விடுப்புப் பார்க்காத   ஒரு வில்லங்கமும் செய்யாமல்  வலு சொல்லுக்கேட்டு  இரு எண்ட  இருக்கிற பிள்ளை  எண்டதாலும்    அவைக்கு  என்னில  நல்ல நம்பிக்கை  எண்டதாலும் .  அதால  அந்தப் பாயில  தான் சிறையிருந்தாக வேணும்.  எனக்கு விளங்காத  மாதிரி  என்னோடவே இருக்கிற   என்ர  நாய்க்கும் பூனைக்கும்  கூட அவையள் என்ன வாசிக்கீனம்  எண்டு விளங்காது.  அதால  அவையின்ர  காலடியில   நாங்கள்  தனியா  ஒரு குழு அமைச்சு  ஆளையாள்  தடவிக்கொண்டிருப்பம். 

அதுவும் பொறுக்காமல் பூனையை நாயை அளைஞ்சு  உண்ணி  கடிக்கப்போகுது,  குக்கல் வரப்போகுது  எண்டு  சாட்டுச் சொல்லி  அந்த வாசிப்பாளர்கள்  பட்டியலில்  கட்டாய உறுப்பினராக  என்னையும் இணைச்சு  வைச்சு  வாசிக்கும்  படி தண்டனையும்  வழங்கப்பட்ட  போது  இரண்டாம்  வகுப்பு.

விளங்கிச்சோ  விளங்கவில்லையோ  (சத்தியமா  ஒண்டும் விளங்கேல்ல  அப்ப)  ஆனால்  வாசிச்சன்.  எங்கு  காற்புள்ளி  எங்கு அரைப்புள்ளி  எங்கு முற்றுப்புள்ளி  எதில் நிறுத்துவது  எதில்  இழுத்துச் செல்வது  எந்த இடத்தில்  உணர்ச்சி கொடுப்பது  எல்லாமும் அப்போது கற்றுக்கொண்டது  தான்.    வாசிச்ச  எதுவும் விளங்காட்டியும்  காரணமே இல்லாமல்  சில  நாவல்களின் பெயர்கள்  மனத்துக்கு  நெருக்கமாகின.  மாறக்க முடியாமலும் போயின.

அந்த வயதில்  தூங்கவைக்க கதை சொல்லும் போதெல்லாம்   நிலவுக்குள் பாட்டி அப்பம் சுட்டா   என்ற  முட்டாள் கருத்துக்களை மனதில் விதைக்கும் கதைகளை  அம்மா சொல்வதே இல்லை. பேய்  பூதம் எதுவும்  அம்மாவின் கதைகளில் வராது.  புராணம் இதிகாசத்தில் கூட  சில குறிப்பிட்ட பாத்திரங்களின் பகுதிகளையே  அதிகமாக  சொல்லுவா.  ஒரு கட்டத்தில் புராணம் இதிகாசம் எல்லாம் முடிந்து  சொல்ல  வேறு கதையில்லாமல் போய்  அம்மா வாசித்த நாவல்கள் என்னைத் தூங்கவைக்கும் கதைகளாகிப் போயின.   அதற்குள்ளும்  துளைச்சுத் துளைச்சு  மதுரை பற்றி எரிஞ்ச போது  கண்ணகி ஏன்  எரியேல்ல?  ராமர்  சுக்கிரீவனோட  என்ன பாசையில  கதைச்சவர்.  சாவித்திரி மாதிரி  ஏன்  எல்லாரும் யமனோட  சண்டை பிடிக்கயில்லை  என்ற மாதிரி  சமூக நாவல்களிலும்  கேள்வி கேட்கத் தொடங்க   ஒரு கட்டத்தில்  அம்மா பொறுமையிழந்து  அம்மாவுக்கு  இவ்வளவும் தான் தெரியும்   இந்தக் கதைப்புத்தகங்கள்  எல்லாம்  அந்த இரும்புப்பெட்டியில தான் இருக்கு  வளர்ந்து எடுத்து வாசிச்சு  விளங்கிக் கொண்டு அம்மாவுக்கும்  சொல்லித்தா   என்றா. 


                                                             

"அதிலுள்ள  புத்தகங்களா?  அது பெட்டி  நிறைய  இருக்கே    நான் எடுக்கலாமா   பேசமாட்டீங்களா?"

"இல்லை   அது  உன்னுடையது  தான்  அதிலுள்ள எல்லாம் உனக்குத் தான்.  நானே வாசிக்காத  புத்தகங்கள் எல்லாம் இருக்கு.  நீ வளர்ந்து வாசிக்க வேண்டும் அறியவேண்டும் என வயிற்றில் இருக்கும் போதே  வாங்கிச் சேர்த்தவைகளும் உண்டு வளர்ந்த பின் வாசி "

  என்பதற்கு மேல் அம்மா  ஏதும் சொல்லவில்லை. அம்மா அனுமதி தந்தும் அப்போது நான் ஏனோ அதைத் திறக்கவில்லை வளர்ந்து வாசிக்கக் காவலிருந்தேனாக  இருக்கக் கூடும்  

பிறகு  காலம் தனக்கான மாற்றங்களோடு  கடந்து போனபோது  வீடு மெல்ல மெல்ல  தனியாகத் தொடங்கினது.  ஷிராகினியின்  அம்மாவுக்கு  வேலையிடம்  மாறியபோது, எங்கள்  வீட்டிற்கு முன்னால்   அவர்கள் வாடைக்கிருந்த எங்கள்  ஆச்சியின் வீட்டிலிருந்து  காலி செய்து  கொண்டு போனார்கள். 

எனக்குத் தனிமையும்  நாய் பூனையும் மட்டுமே நெருக்கமாக  மிஞ்சின நாட்களில்  அந்த  இரும்புப்பெட்டிக்கு  மேலே ஏறி இருந்து சிறுவர் கதை  வாசிப்பதும்  வானொலி கேட்பதும்   பிடிச்சிருந்தது.  என் வீட்டில் மற்ற எல்லாப் பொருட்களையும் விட அதனோடு ஏனோ எனக்கு  இனம்புரியாத ஒரு நெருக்கமிருந்தது.

ஒரு முறை அம்மா திறக்கும் போது பார்த்தேன்   அது முழுவதும் புத்தகங்களே  நிறைந்திருந்தன .  பாவிக்காத  காற்றுப்படாத பழைய புத்தக வாடை முகத்தில்  போக்கென அடித்தது .பொன்னியின் செல்வன், தீக்குள் விரலை வைத்தால்,  குமாரபுரம், வாடைக்காற்று, நிலக்கிளி   என மேலிருந்த சிலவற்றின்  பெயர்களை வரிசையாக  மனம் படித்துக் கொண்டது.

அது ஒரு பெட்டி  அதைத்திறந்தால்  அம்மாவுக்கு பிடிக்காது. என்ற நிலை மாறி  அதைத் திறந்து  எந்தச் சேதமும் இல்லாமல்  எதையும் கலைக்காமல் மூடி வைக்க  அனுமதி  தந்திருந்தா   என்றளவில் மட்டும் மனதிலிருக்க ,   இரும்புப்பெட்டிக்கு மேல ஏறி இருந்தும் அதை திறந்து பார்க்கும் ஆவலை பின்னாட்களில்  மறந்து போனன்.  கையில் கிடைத்த வாராந்தர  மாதாந்தர  ஜனரஞ்சக  நாவல்களை  எல்லாம்  வாசிக்கத் தொடங்கியிருந்தேன்.

பின்  இன்னும் கொஞ்சம் வளர்ந்தபின்னான  காலத்தில் ஒரு தனிமையான  நாளில்  செய்வதற்கு  ஏதுமற்று அலைந்தபோது  கண்ணில்  பட்டது இரும்புப்பெட்டி.   திறந்து தான் பார்ப்போமே எனத்திறந்த போது முகத்திலடித்த  காற்றுப்படாத  அடைத்த வாசனையோடு  திறந்து கொண்ட பெட்டிக்குள்  குளிர்ந்து போயிருந்தன  புத்தகங்கள்.  கிண்டக் கிண்ட கிளறக் கிளற  அடுக்கடுக்காய் வந்து கொண்டிருந்த  அவைகளை  வாசிக்க முடியும் என்று கூட  அப்போது தோன்றவில்லை.   எதற்காக வெளியில் உள்ள புத்தகங்களோடு  இவைகள் இல்லை என்ற கேள்வி மட்டுமே பெரிதாக  இருந்தது .

அம்மாவிடம் கேட்டபோது  எங்கோ  பார்த்தா.

"அவைகளைப் பழுதாக்கி  விடாதே.  அதற்குள்  உள்ளவை எல்லாம்  உன் அப்பாவுடையவை.  உனக்கானவை  நீ  பிறந்து வளர்ந்து வாசிக்கச் சேமிக்கப்பட்டவை " 

என்ற போது அம்மாவின் குரல் மாறி கரகரப்பாக இருந்தது.

"இவ்வளவும் வாசிச்சீங்களா?"

"நான் வாசித்தவைகளில்  பிடித்தவைகளை  மேலே போட்டு வைத்திருக்கிறேன்.   மற்றப்படி அதிலுள்ளவை  அப்பாவுடையவை" 

"அடியில்  கடையில கணக்கெழுதிற  கொப்பி மாதிரி  இருக்கேம்மா  அதுவுமா?"

"கணக்கெழுதி இருப்பவை  அப்பாவினுடைய  கணக்குகள் "  

"அப்படிக் கொப்பிகளில் வேறு எதுவோ  பந்தி பந்தியா  எழுதியவை  நிறைய  இருக்கு அதுவுமா?"

"அது அப்பாவின் அம்மா அப்பாவுடையன.  உனக்காகத்தான்  சேர்த்து வைச்சிருந்தார். நீ வளர்ந்து உனக்கு இவைகளில  ஆர்வம் வந்தால்  பாவிக்கட்டும் என்று வைச்சிருந்தார்."

"என்ன அது?"

"ஆயுர்வேதம்  என்று சொல்லுற  இயற்கை வைத்தியம்"

"அப்பிடியெண்டா?" 

"பரியாரி எண்டு தாத்தா சொல்லுவாரே   அது "

"சிங்களத்திலும் எழுதி   இருக்கே அம்மா" 

"அது சிங்கள  பிரதேசத்தில் செய்யும் முறை  வெதமாத்தயா  என்று சொல்லுறது "

"அப்பாவிட  அப்பா  சிங்களப் பரியாரியா?"

"அப்பா  மட்டுமில்லை  அம்மாவும் சிங்கள வைத்தியமுறையும் தெரிஞ்ச தமிழ் பரியாரிகள்"

"ஏம்மா  அவை  என்னோட  இல்லை.?"

அம்மாவின் கண்கள் கலங்கின. 

"ஹ்ம்... சாமிக்கு  அவசரம்  அதுதான்  எல்லாருக்கும் பொதுவா  நீ இருக்கிறியே. எல்லாரும்  உனக்குள்ள  இருக்கீனம்"

"எனக்குப் பிடிக்கலை மா"

"என்ன பிடிக்கலை ?"

"எனக்கு  இங்க இருக்க பிடிக்கலை"

"ஏன்?"
 
"நிறைய சொல்ல வருது சொல்லத் தெரியல்ல  ஆனால்  பிடிக்கலை." 

அம்மா  யோசனையா பார்த்தா  பின்  அந்தப் பெட்டிக்குள்  இருந்து ஒரு புத்தகத்தை  தூக்கித் தந்தா. 

"வாசி  பிடிக்கும் . வாசிக்க வாசிக்க  உலகம் உனக்குக் கிட்ட வாற மாதிரி இருக்கும் .  உலகம் விளங்கும்."   என்றா. 

வாசிக்க  வாசிக்க  உலகம் பிடித்ததோ  இல்லையோ    மனிதர்களை  விளங்க வைத்தது  உலகம் புரியத் தொடங்கியது.

அது அப்பாவின் பெட்டி.  அதில் என் மூதாதைகளின் கையெழுத்துகள்  அவர்கள் பாவித்த,  அப்பா ரசித்த  விடயங்கள் அடங்கிய புத்தகங்கள் நிறைந்திருக்கின்றன என்பதே  எனக்கு மிகவும் பிடித்திருந்தது.   அநேகமான நேரங்கள்  அதைக் கிளறுவதில்  கழியத் தொடங்கின. 

அப்பா  அது இது என்று பேதமில்லாமல்  வாத்சாயனரில்  இருந்து  வாலிவதம் வரை  உலகப்பெரும் தலைவர்களில்  இருந்து  உதவாக்கறை  வரை  எல்லாமும் ஏராளமாய்  சேர்த்து வைத்திருந்தார் .    நேரமிருக்கும் நேரங்களில்  எல்லாம்  அந்தப் பெட்டிக்குள் அம்மா பத்திரமா வைத்திருந்த  அப்பாவின்  ஒரு போர்வை விரித்து  அதன் மீது ஒரு தலையணையை  வைத்து  பெட்டிக்குள் இறங்கியிருந்து  அதற்குள் இருப்பவற்றை  வாசிக்கும் போது  நான் இருக்கும் சூழல்  மறந்து போகும் .   அப்பாவின் அணைப்புக்குள்  எனக்கு மட்டுமே உரிமையான  ஒரு இடத்துக்குள்  இருப்பது போன்ற உணர்வு  என்னை  ஆட்கொள்ளத் தொடங்கியது.  அது மனதுக்கு  நிறைவாகவும் பிடித்தமாகவும் இருந்தது.   அதனோடு சேர்த்து  புத்தகங்களை  உறவாக்கிக்கொண்டு  வாசிப்போடு பேசிக்கொண்டிருத்தல் அதிகமாகப் பிடிக்கத் தொடங்கியது.

இருந்தும்  வயதுக்கொவ்வாதவை,  வாசித்தால் விளங்காதவை  என  பல தொகையாகக் காத்திருக்க,  நான்  வயது வரவும்  வாசிக்கவும்  காத்திருக்க ,  வாசித்த பின்பும்  அவைகளோடு  இன்னும் அதிகமாக  என் பங்குக்கு வாங்கி  சொத்துப் போல சேர்த்துவைக்கக் காத்திருக்க, போர்  இந்த உணர்வுகள்  எதுவும்  புரியாமல்  மூர்க்கமாகப் புகுந்து  வீட்டை விட்டு அடித்துத்  துரத்த , நாங்கள்  வீட்டை விட்டு  ஓடிப்போனோம்  அகதிகளாக .  

திரும்பி வந்த போது  பாதி வீடில்லை.  படுக்கையில்லை  பொருட்கள்  இல்லை.  திரும்பவும்  ஒருமுறை ஓடிப்போய் விட்டுத் திரும்பி  வந்த போது  வீடேயில்லை.   இருந்தும் இன்றுவரை  என்னை அதிகம் பாதித்த  விடயம் அந்த இரும்புப்பெட்டியும்  அதிலிருந்த அப்பாவினதும் அம்மாவினதும்மான  மனத்தேடல்களை  எனக்குச் சொல்லக் காத்திருந்த  புத்தகங்களும் இல்லை என்பது தான்

அப்பாவழி  மூதாதைகளின்  நினைவுச் சின்னங்களும்  இல்லை  அம்மாவழி  மூதாதைகளுடன் வாழ்ந்த வீட்டில்  வாசற்படிக் கல்லும்  நினைவுக்குக் கூட   இல்லை.  நினைவுகளை நெஞ்சு நிறையச்  சுமந்து கொண்டு வந்த  இடத்தில்,  வந்த காலத்தில் வாசிக்கவும்  பேசவும்  சொந்த மொழியும் இல்லை என்னோடு எதைப்பற்றிப் பேசவும் யாரும் இருக்கவில்லை.. 

என் மண்ணிலிருந்த இறுதிக் காலங்கள் பேனா மொழியை ஓரளவு  எனக்கு வசப்படுத்திக் கொண்டு  எழுத்துத் துறையில்  மெதுவாக  படியேறிக் கொண்டிருந்த  தருணமது.  அதையும் விடுத்துப் புலம்பெயர்ந்த போது எல்லா  இல்லைகளுக்குள்ளும் அமுக்கப்பட்டு   என் எழுத்தும் இல்லையாகி  நானும் இல்லை என்றாகிப்  போனபின் 

"உயிர்த்தெழு"

  என  முதற் புத்தகத்தை  அனுப்பியவர்   என் ஆசான்.  மீண்டும்  வாசி வாசி என  ஊக்கிய  என் அன்னை.   கையில்  புத்தகம் கொடுத்து  வாசி  என்றும்  பேனா  கொடுத்து  எழுது  என்றும் பிஞ்சுக் குரலில் ஆணையிட்ட  என் குஞ்சுகள்   தூரமாகிப் போயும்  உரிமை கொண்டு தேடி நான் அங்கிங்கென  அவர்களிடம் தவறவிட்டவைகளை  அப்படியே  பாதுகாத்து வைத்திருந்து அனுப்பிய என்  நட்புகள்

அவர்களுக்காகவே  என்னை உயிர்ப்பித்து  மெல்ல மெல்ல  என்னை மீண்டும்  வடிவமைத்து  உடைந்து போன நினைவுகளின் பொக்கிஷம் ஒன்றின் உதிர்ந்து போன ஞாபகச் சுவர்களின்   பொத்தல்களை  புதிய  சேகரிப்புக்களால் தேடித்தேடி பழையதை   இட்டு நிரப்ப முயன்று கொண்டிருக்கும்  இப்போது  சொல்கிறேன் 

அனுபவமும்  புத்தகங்களும் மட்டுமே வாழ்வில் நிரந்தரமான  வழிகாட்டிகள். குழந்தைகளை வாசிக்கவையுங்கள்  அது  சிந்தனையைத் தூண்டும்  ஆளுமை வளர்க்கும்.      




Thursday, April 5, 2018

குக் குக் கூ...........விக் கொண்டே கரையும் துளிகளில்..........

சுவரில் இருந்து கூடு திறந்து சின்னதாய் ஒருமுறை செட்டையடித்து, செல்லமாய் கூவி நேரத்தை ஒருமுறை நினைவுறுத்தி விட்டு உள்ளே சென்று அப்பாவியாய் அமர்ந்து கொள்ளும் சின்னக் குருவியின் மணிக் கூடுகள் உருவான இடத்தைப் பற்றிக் கொஞ்சம் பேசுவோமா?
.
உண்மையில் இந்த மணிக்கூட்டில் இருந்து வரும் பறவை கூவும் ஒலி அதற்காக அமைக்கப் பட்டதல்ல. orgel என்ற இசை வாத்தியத்தில் வழிந்த இசையில் தற்செயலாக இந்த குக் குக் கூ... சத்தமும் பறவையின் சிறகடிப்பு போன்ற இசையும் பிடித்துப் போக, 1629 ஆம் ஆண்டு முதல் முதல் இந்தக் குக் கூ.. ஒலி (Kuckuck ) பிரத்தியேகமாக பதிவு செய்து வைக்கப் பட்டது.
.
பின் நாட்களில் ஜெர்மனியின் Schwarzwald Kreis மாவட்டத்தின் Triberg மற்றும் அதனைச் சுற்றி உள்ள மலைகிராமங்களில் உள்ளோர்களால் உருவாக்கப் பட்ட பறவையின் கூண்டு போன்ற மணிக்கூட்டுக்கு மணி ஒலிச் சத்தமாக இந்தக் கூவும் குரல் இணைக்கப் பட்டது. அத்துடன் அந்த மணிக்கூட்டுக்கு குக் கூ .. மணிக்கூடு (Kuckucks uhr) பெயரும் சூட்டப் பட்டது.
.
இந்தக் குக்கூ ... மணிக்கூடு 1730 இல் Franz Anton Ketterer என்பவரால் உருவாக்கப் பட்டது என்று ஒரு ஆராட்சியாளரும், இல்லை அவரது தந்தையால் அதற்கு முதலே இது உருவகம் பெற்றிருந்தது, அதை மகன் வெளிக் கொணர்ந்தார் என்று இன்னொரு ஆராட்சியாளரும், அதுவுமில்லை 1742 இல் Michael Dilger உம் Matthäus Hummel என்பவரும் இணைந்து உருவாக்கியதாக மற்றொரு ஆராட்சியாளரும் சொன்ன போதும்,
.
Triberg என்ற மலைக் கிராமத்துக்கு அருகே உள்ள பண்ணையில் இருந்து சகோதரர்களான Aandreas அவரிலும்  இரு வயது இளைய தம்பி Christian Herr ஆகியோர் இணைந்து செய்த குக் கூ..,,. மணிக்கூடு முதல் முதலில் வெளி உலகப் பாவனைக்கு வந்து இன்று உலக வீடுகள் பலவற்றின் வரவேற்பரைகளில் கூவிக்கொண்டிருக்கும் குக் கூ... குருவிகளுக்கு மூதாதையாகிப் போனது.
.
இந்த Triberg வெள்ளியை உருக்கி வார்த்தது போல் உச்சி மலையில் இருந்து அவசரமில்லாமல் ஒடுங்கி ஒழுகும் அழகிய நீர்வீழ்ச்சி கொண்ட ஒரு சுற்றுலாத் தலமாதலால் ஆரம்ப காலம் தொட்டு இந்த மணிக்கூட்டு உருவாக்கம் சுற்றுலாப் பயணிகளுடனான வியாபாரத்தைக் குறிவைத்த வீட்டுக் கைத்தொழிலாக இந்தக் கிராமத்தில் வளர்ந்தது.
.
அவரவர் கற்பனைக் கேற்ப அதன் வடிவங்களில் சிறிய மாறுதல்களை ஏற்படுத்தும் போதும் அதன் அடிப்படை வடிவமும் கூவும் குரலும் என்றும் மாற்றம் பெறாமல் இருப்பது அதன் தனிச் சிறப்பு.


                                           .
இன்று இந்த இடத்துக்கு சம்பந்தமில்லாத நிறுவனங்கள் கூட அதைப் போல பிளாஸ்ரிக், உலோகம், கண்ணாடி என்ற பலவித மூலப் பொருட்களில் அதை உருவாக்கி விற்பனைக்கு விட்டுள்ள போதும் இதன் தாயகத்தில் அடிப்படையில் இருந்தது போலவே மரமும் மற்றும் இயற்கை மூலப்பொருட்களும் கொண்டே இதன் கூடும் அலங்காரமும் செய்யப்படுகிறது. இருந்தும்  எப்போதுமே எல்லாவிடயங்களிலும் அசலுக்கு இருக்கும்  தனிச் சிறப்பும் மதிப்பும் நகலுக்குக் கிடைப்பதில்லை. நகலால் அசலாக எப்போதும் பரிணமிக்கவும் முடிவதில்லை.  இந்த குக்கூ.. வுக்கும் அதுவே பொருந்தும்.
.
மிகச் சாதாரண விலைகளில் சின்னதாய்  சுவரில் கொழுவுவதில்  இருந்து ஆளுயரத்துக்கு  நிறுத்தி வைக்கக் கூடிய  கூடுவரை   மூன்று நான்கு ஆயிரம் யூரோ தாண்டிய நிலையிலும் விற்பனையாகும் இந்தக் குருவிக் கூடுகள் ஆண்டு முழுவதுமான சுற்றுலாப் பயணிகளுக்காக வீதி முழுவதும் கடைபரப்பப் பட்டிருக்கும்.

மலையில் அமைந்திருக்கும் கிராமம் என்பதால்  குளிர் சற்றல்ல  கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்  இக்கிராமத்துக்கு பொதுவாக  உறைபனிக் காலத்தில் சுற்றுலாப்பயணிகள் வருவதில்லை என்பதால் விற்பனை நிலையத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்தாலும் நத்தார் காலத்தில் வியாபாரம் மீண்டும் களைகட்டும். 
.
நத்தார் காலத்தில் இந்த நீர் வீழ்ச்சியை நெருப்பில் உருக்கி, நிறங்களில் குழைத்து வாணங்களில் வேடிக்கை காட்டும் மஜிக் நிகழ்ச்சி பிரபலமானதால் எலும்பு உருக்கும் குளிரிலும் அந்த வண்ண நீரின் வாணவேடிக்கை பார்க்க இலட்சங்களை தாண்டி எண்ணிக்கையற்றுக் குவியும் மக்கள் வாங்கிச் செல்லும் நினைவுப் பொருள் இதுவாகவே இருக்கிறது
..
எங்கே எப்படி யாரால் உருவாக்கப் பட்ட போதும், கூடு திறந்து வெளிவந்து செட்டையடித்து சிலுப்பி கூவும் ஒவ்வொரு மணித் துளியிலும் கடக்கும் எங்கள் ஆயுளை இந்தச் சின்னக் குருவிகள் நினைவுறுத்துவதாகவே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.