Monday, October 31, 2016

அனலை வைத்ததனாலேயே தணலானோம்

நேற்றுக்கு முதல்நாள் கடந்து போனது போல அன்றி ஆனால் அன்றும் இப்படித்தான் ஒரு தீபாவளி நாள். இப்போது போல எதையும் அர்த்தம் தேடி ஆராய்ந்து எது தேவை எது தேவையற்றது எது முக்கியமானது முக்கியமற்றது அல்லது நிராகரிக்க வேண்டியது எது என்று தீர்மானம் செய்யாத பருவமது. அப்படி ஆராய்ந்து கேள்விகள்கேட்டிருந்தால் கூட அதற்கான சரியான அங்கீகாரம் கிடைக்காமல் அந்தக் கேள்வியே  கடவுள் நிந்தனை என்று  கன்னத்தில் போட்டுக் கொள்ளச் சொல்லி கன்னத்தில் இரண்டு வைத்திருப்பார்கள் வீட்டுப் பெரியவர்கள். ஆனாலும் மனதுள் அடக்கிவைக்கப்படும் கேள்விகள் மறைக்கப்படலாமே  அன்றி மறக்கப்படுவதில்லை. தனக்கான தனித்துவமும்  தேடலுக்கான வாய்ப்புக்களும்  அமையும் போது கேள்விகள் முன்னெழுந்து பதில்களைத் தேடத்தொடங்கி விடும் என்பது தான் நிதர்சனம்.

 நான் தனிப்பட்ட நானாக, எனக்கான அடையாளங்களை என்னைச் சுற்றித் தேடுவதற்கு முன்னான காலத்தின் எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருந்த என் இறுதித் தீபாவளி அது.  அதற்கு முன் கடந்த எல்லாத் தீபாவளிகளும்  போல அந்த வருடத்திய தீபாவளிக்கும் வழமையான அத்தனை எதிர்பார்ப்புக்களும் எனக்கும்  இருந்தன.
 
அது 1987 ஆம் ஆண்டு.எங்களுக்கு முற்பட்ட தலைமுறையின் தீபாவளி போலோ, அன்றி நேற்று முதல்நாள் கடந்த தீபாவளி போலோ அன்றி,   அது மிக ஆரவாரமான தீபாவளி.  இந்த சாதாரண சீன வெடிகளும், சக்கர வாணங்களும் வெடித்து வழமைபோலக் கொண்டாடாமல் எங்களுக்காக அன்று இந்திய வல்லரசு  அக்கறையோடு அனுப்பிவைத்திருந்தவை சிவகாசிப்பட்டாசுகள் அல்ல. ஷெல்கள், விமானங்கள் பொழியும் குண்டுகள், துப்பாக்கி வேட்டுக்கள். இவைகளை ஈழத்தமிழர்களான அசுரர்கள் மீது  வெடித்து கோலாகலமாகக் கொண்டாடுங்கள் உங்கள் தீபாவளிப் பண்டிகையை என்று அன்று ஒருவேளை இந்திய மத்திய அரசு கட்டளையிட்டு தன் படைகளை அனுப்பியிருக்கலாம். அவர்களும் மிக ஆடம்பரமான வாணவேடிக்கைகளுடன் அந்தவருடத்  தீபாவளியின் அதிகாலையை ஆரம்பித்து வைத்தார்கள்.

அன்று நாங்கள் வழமை போல காலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து, முழுகி, புது உடுப்புப் போட்டுக் கோவிலுக்குப் போகவில்லை.  குளிக்காமல், முழுகாமல் பலநாள் போட்ட பழைய உடுப்புடன், வியர்வை  நாற்றத்தோடு எங்கள் ஊரின் அம்மன் கோவிலுக்குள்  இருந்தோம். வழமை போல விதவிதமான பட்சணங்கள் வேண்டாம் பசிக்கு ஒரு வாய் உணவு தானும் இல்லை.   கோவிலின் களஞ்சிய அறையில் நிவேதனத்துக்காக இருந்த சொற்ப  அரிசியையும்  கடந்திருந்த இரண்டு கிழமைகளாக ஒவ்வொருநாளும் ஒரு நேர நீர்க்கஞ்சிக்காக உபயோகித்து அதுவும் தீர்ந்து இரண்டு நாட்களாகியிருந்தன.  விடியும் ஒவ்வொரு பொழுதும், கடக்கும் ஒவ்வொரு கணமும் இது தான் வாழ்வின் கடைசிக்கணம் என உணரவைத்துக் கொண்டு நெஞ்சுக்கூட்டை உதறவைத்துக் கொண்டிருந்த வெடியோசை காதுபிழந்து ஷெல்துண்டங்களும் துப்பாக்கி  ரவைகளும் மழை பொழிந்து கொண்டிருந்த பொழுதில்  உறவுகளும் அயலும் ஒன்று கூடியிருந்தது மட்டுமே பண்டிகை போல் இருந்தது.

விடிசாமம் முழுதும் சுற்றி எங்கும்  ஒலித்த வேட்டொலிகள்  அதிகாலைப் பொழுதின் இருள் பிரியும் நேரத்தில் சற்று  அடங்கியிருந்தன. ராணுவம் எங்கே நிற்கின்றது என்ற அரவம் தெரியவில்லை.  காட்டில் எதிரிகளின் அரவங்களைக் காட்டிக் கொடுக்கும் ஆட்காட்டிக் குருவிகளின் வேலை நாட்டில் நாய்களுக்கு.  அவைகளின் குரைப்பொலி தான் எமக்கான பாதுகாப்பு எச்சரிக்கை. அதை அன்று அவர்களும் அறிந்திருந்தார்கள். ஆதலால் மனிதருக்கு முன் நாம் வளர்த்த நாய்களையே துப்பாக்கிக்கு பலி கொடுத்து எங்கள் வீடுகளின் கிணறுகளுக்குள் வீசியோ, அன்றி  எமது அடுப்புக்களுக்குள் அமுக்கி வைத்து விட்டோ தான்  அவர்கள் அன்று இரவில் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். போர் நேரத்திலும் வளர்ப்புப் பிராணியைச்  சுட்டு குடிக்கும் நீருக்குள் போடும், சமைக்கும் அடுப்புக்குள் வைக்கும் இந்தப் போக்கிரித்தனம் காக்கிச் சட்டைகளுக்கு மட்டும் தான் கை வருமோ என்னவோ.



இரவு முழுவதும் செவிப்பறையை வெடிக்கவைத்து பின்  அதிகாலை வெடிச்சத்தங்கள் அடங்கியிருந்ததில்  ராணுவம்  எதுவரை வந்து  விட்டார்கள் என்று சத்தத்தின்  தூரங்களை வைத்து தோராயமாகக் கணிப்பிட முடியவில்லை. அந்த இரண்டு கிழமைகளிலும் வழமையாகிப் போனது போல் ஆளை ஆள் தெரியாத இருட்டுப் பொழுதில்ஒவ்வொருவராக  இயற்கை உபாதைகளுக்காக கோவிலை விட்டு வெளியில்  இறங்கி அருகில் உள்ள வெறும் காணிகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் இரவுகளில் பயங்கருதி மட்டுமல்ல, ஒதுக்குப் புறமும் மறைப்புக்களும் அற்ற வசதியீனங்கள் காரணமாகவும் உண்ணவும் குடிக்கவும் எதுவும் அற்ற வயிற்றில் இருந்து  கழிவகற்ற வேண்டிய தேவைகள்  கூட அவ்வளவாக  இல்லாததாலும் அதிகம் யாரும் பகல்களில் இயற்கை உபாதைகள் பற்றி எண்ணுவதில்லை.

எல்லாநாட்களும் அதிகாலைப் பொழுது மட்டும் தான் அதற்காக அனைவருக்கும் ஒருக்கப்பட்டிருந்தது. அதிலும் புனிதம் பேணும் கோவில் வீதியைச் சுற்றி  அந்தத்  தேவைகள் தீர்க்கப்பட்ட கூச்சம் சேர்ந்த குற்ற உணர்வு, இயலாமை அநேகம் எல்லா முகங்களிலும் பிரதிபலித்தது. இருந்தும் வேறுவழியின்றி அது தான்  நடைமுறையாக இருந்தது.

அன்று வெளியில் இறங்கிய யாரும் வழமை போலத் திரும்பி வரவே இல்லை. அயலே உறவாக, உறவுகள் எல்லாமே கூடிய அயலாக, உறவுகளின்  கூட்டமாக நாம் கூடி வாழ்ந்த வாழ்க்கையில் கிட்டத்தட்ட  அனைவருமே அந்த நேரத்தில் அந்தக் கோவிலுக்குள் தான்  இருந்தோம் என நினைக்கிறேன். போனவர்கள் திரும்பி வராத போதும், வெடிச்சத்தம் ஏதும் கேட்காத நம்பிக்கையில் சுற்றுச்  சூழலில் இராணுவம் இல்லை என்ற தீர்மானத்தோடு அந்த மைமல் பொழுதில் ஒவ்வொருவராக படியிறங்கி வெளியே செல்ல, கோவிலை சுற்றி எல்லா வீடுகளையும்  இரவே ஆக்கிரமித்திருந்த இராணுவம் ஓசை அமுக்கிய வேட்டுக்கள்  மூலம் ஒளிந்திருந்து அவர்களை வீழ்த்திக் கொண்டிருந்தது.

எனக்கும் இயற்கை உபாதைகளுடனான தேவை எல்லோரையும் போல் இருந்தது. அம்மாவிடம் சொல்லக் கூட  கூச்சமாக இருந்தும் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில், கூட்டத்தில் இரகசியம் போலச் சொன்னேன். அதற்குள் என் தங்கை ஒருத்தி கைகளால் அடிவயிற்றை அழுந்தப் பிடித்துக் கொண்டு "வலிக்குது பெரியம்மா" என அரற்றிக் கொண்டிருந்தாள். அம்மா "பொறு  போனவையளைக் காணவில்லை வந்திடட்டும்" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தா. அவள் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் கோபமாகி "நீங்கள் வராட்டி இப்ப நான்  தனியாப் போவன்" என்று  சீறத் தொடங்கினாள்.

"இரு தங்கச்சியை கூட்டிக்கொண்டு போயிட்டு  வந்து உன்னைக் கூட்டிக் கொண்டு போறன் " என்று சொல்லிப்போட்டு அம்மா  போனாலும், இயற்கை பொறுக்காதே. வயிறு வலித்து முகம் வியர்த்தது. நான்  நடுவிலும் என் கைகளைப்ப்றிய படி இரு சகோதரர்களுமாக பொந்துக்குள் இருந்து வெளிப்பட்ட பாம்புக் குட்டிகள் போல கோவில் வாசலுக்கு வந்து  எட்டிப் பார்த்தோம். எந்த  அசுமாத்தமும்  ஆபத்தானதாகத் தெரியவில்லை. மெதுவாக வீதியில் கால்வைத்தோம் அவ்வளவு தான் சரமாரியாக பாய்ந்து  வந்தன வேட்டுக்கள். கோவில் சிவரோடு என்னைச் சாய்த்து இருவரும் என்னை  மூடிக் கட்டிக் கொள்ள கண்களை இறுக மூடிக் கொண்டோம்.  வேட்டு  நின்றது நாம்  அசைந்தோம். திரும்ப சரமாரியான வேட்டுக்கள் உடலை துளைக்கும் அருகாமையில் உடைகளைச் சிராய்த்துக் கொண்டு  சிவரைத்  துளைத்தன.
திரும்பவும் இறுக்கிக் கட்டிக் கொண்டு கண்களை  மூடிக் கொண்டோம்.

வேட்டொலி நின்று ,மூச்சு  சற்று  நிதானமாகி கண்திறந்து  பார்த்தபோது கோவிலுக்கு  மிக  அருகே  ஒரு  ஆறு  அல்லது  எழு அடி தூரத்தில் எங்களுக்கு  நேராக இருந்த  மதிலுக்குள் மறைந்திருந்த  ராணுவத் தொப்பி  தெரிந்தது. இப்போது நினைத்துப் பார்க்கிறேன்  அன்று அவன் மட்டும் எங்களை கொல்லவிரும்பாதவனாக, மனிதனாக இருந்திருக்க வேண்டும்.  அதன் பின்னணியில் அவனுக்கு எங்கள் வயதில் குழந்தைகளோ இளைய சகோதரங்களோ கூட  இருந்திருக்கலாம். உள்ளே ஓடி வந்தோம் அப்போது அவன்  சுடவில்லை. அம்மாவுக்காக எல்லோடும் காத்திருந்தோம். அம்மா  தொடையில் குண்டு துளைத்து இரத்தம் வடிந்த தங்கையை  தூக்க நேரமற்று இழுத்த படியே ஓடிவந்து கொண்டிருந்தா.

சூரியன் வெளிக்கிளம்பி வர அவர்கள் அன்றைய எங்கள் அஸ்தமனத்துக்கான நேரத்தை நிறுத்தி விட்டு பதுங்கிக் கொண்டார்கள்

எந்த அரவவுமே இல்லாது  இராணுவம் பதுங்கிக் கொண்டு, தங்கள் இருப்பிடத்தை மறைத்துக் கொண்ட நேரத்தில், எங்கள் ஊர் பிள்ளையார் கோவிலில் பண்டிகைக் கால விசேஷ பூஜைககளை நாட்டு நிலையின் விபரீதத்  தன்மை கருதி அன்று நடாத்தா  விட்டாலும், நித்திய பூஜை செய்ய வேண்டும் என்ற எண்ணப்பாட்டோடு,  அருகே இருந்த, நாங்கள் தங்கியிருந்த அம்மன் கோவிலில் தீபாவளி விசேட பூஜை ஏதாவது செய்ய வாய்ப்பிருக்கிறதா என்று விசாரித்து விட்டுச் செல்வதற்காக மட்டுமே அன்று எங்கள் குருக்களின் மகன், அந்தக் குடும்பத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர்கள் எண்ணிக் கொண்டிருந்த அந்த இளைஞன் சைக்கிளில் வந்தார். காவி நிற வேட்டியும் கழுத்திலிருந்து தோள் வழி இறங்கிய பூணூலும்  உடலைச் சுற்றி மூடிய காவி அங்க வஸ்திரமும்  சிங்கள பௌத்த ராணுவத்துக்கு வேணுமானால் அடையாளம்  புரியாமல் போகலாம் என்று கொண்டாலும்  இந்திய இந்து ராணுவத்துக்கு எப்படிப் புரியாமற் போகக் கூடும்.

கோவிலுக்கு எதிரே இருந்த வீதியின் எதிர்ப்பக்க வீட்டு மதிலுக்குள் மறைந்திருந்து கோவில் வாசலில் சுட்டு குப்புற விழுத்தும் அளவு ஒரு குருக்களிடம் இருந்த கோபம் என்ன? ஆக சமயம் மொழி கலாச்சாரம் என்பதெல்லாம் ஒரு  கூட்டம் தன் தேவைக்காக இன்னொரு  கூட்டத்தோடு  இணைந்து கொள்ள உபயோகிக்கும் ஒரு  தந்திர வலை. தனிப்பட்ட  நிலையில் நான்  வேறு,  நீ வேறு உன் நாடு  வேறு, எந்நாடு வேறு  என்ற சிந்தனை  தான் அடிப்படை போல இப்போது உணர்கிறேன்.
   
அன்று பகல் முழுவதும் மதிற் சுவர்களுக்குள் மறைந்திருந்து சத்தம் அமுக்கப்பட்ட துப்பாக்கியால் வீதியில் வந்தவர்களின் விதி முடித்து  விழுத்துவதே குறியாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடிக் கொண்டிருந்தது இந்தியராணுவம். பகலில் பதுங்கியிருந்து விட்டு இரவு மீண்டும் இரைதேடும் கழுகாக வெளிப்படையாக வெளிக்கிட்டு அப்பாவிப்பொது மக்கள்  மீது  எல்லாம்  சன்னதமாடி சன்னங்களைத்  தீர்த்துக் கொண்டிருந்தது.  கோவில் கதவின் இரும்புக் கம்பிகளுக்குள்  எல்லாம் துப்பாக்கியை  நீட்டிஅப்பாவிகளைச் சுட்டது. நாங்கள் மூலஸ்தானத்துக்குள் முண்டி நெருக்கிக்  கொண்டு பதுங்கிக் கொண்டோம். மூச்சுத்  திணறியது. அனுஷா அக்காவின் ஒன்பது மாத அழகான   குழந்தை மூச்சுத்  திணறி  இறந்து போனது.

அதற்கு மேலும் அங்கிருக்க  முடியாதெனவும் இருந்தால் ஹிந்திய ராணுவக் கலாச்சாரம் கோவிலை கொலைகாடு ஆக்கி புனிதமாக்கி விடும் என்றும் அஞ்சி அடுத்த நாள்  விடிந்த போது 'உதிர்ந்தால் மயிர் வாழ்ந்தால் உயிர்' என்ற மனம் வெறுப்புற்ற  நிலையில் எஞ்சி இருந்தவர்கள் காயப்பட்டவர்களைத்  தாங்கிக் கொண்டு கோவிலை விட்டு வெளியே வந்தோம். உணவில்லாத  பலகீனம்  கால்கள் தள்ளாடின.

ஒரு கோவிலைச்சுற்றி  வயதானவர்கள் குழந்தைகள் பெண்கள் என்ற எந்த வேறுபாடுமின்றி   வீசி எறிந்த வெற்றுப் பேப்பர் போல் உறவுகளையும்  நட்புகளையும் அயலையும் சிதறிப் போட்டிருந்தார்கள். நான் மிக மதிப்பும் பாசமும் வைத்திருந்த என் கல்வியின் முதல் வழிகாட்டி என் முதல் பாடசாலையின் அதிபர். தனது  ஊரில் ஏராளம் காணி பூமியோடு ராஜா மாதிரி வாழ்ந்த செல்வராஜா மாஸ்ரரும் ஏனோ எங்கள் ஊருக்கு வந்து அனாதையாய் இறந்து விழுந்து கிடந்து நனைந்து வீங்கிப் போய் இருந்தார். கொன்ற அவங்கள் மட்டும் அந்த நேரம் கண்ணில் பட்டால் துப்பாக்கியை பறித்து.

உச்சந்தலையிலே அடிக்கவேண்டும் என்ற வெறி  முதல் முதல் மனதில் வந்தது.   அன்று எங்கள் எந்தக் கோவிலிலும் பூஜை நடக்கவே இல்லை.
பின் நாங்கள் ஒருமாதகாலம் ஸ்ரான்லிகொலீஜில் எம்மைப் போல சொந்த ஊரில் அன்னியனால்  அகதியாக்கப் பட்டவர்களோடு  தங்கியிருந்து நாளுக்கு நாள் பல இறப்புச் செய்திகள் அறிந்து கொண்டும் அழகூட முடியாதவர்களாகி மரத்துப் போயிருந்த அம்மாமாரின் மடிகளுக்குள் வெறும் பொம்மைகளாக சுருண்டு கிடந்து விட்டு ஒரு மாதம் கழிந்து வீட்டுக்குப்  போகக் கூடியதாக நம்பப்பட்ட சூழ்நிலையில் வீட்டுக்குத்  திரும்பினோம்.

வீதியெங்கும் அதிக மனிதரில்லை. காற்றெங்கும் பிணவாடை. மனம் செத்து உடல் சோர்ந்திருந்தது. ஒரு  அபாய இரவில் ஓடுகையில் நெருங்கிய  உறவுகளை அங்கிங்கென  தவற விட்டிருந்தோம். திரும்பிப் போகும் போது எங்கள் எண்ணிக்கையற்ற அன்றில் கூட்டில் எத்தனை பறவைகளை இழந்திருப்போமோ என்ற பயம் இருந்தது.

ராணுவம் சுட்டு எங்கள் அடுப்புகளுக்குள்ளேயே போட்டிருந்த எங்கள் அன்பான வளர்ப்புப் பிராணிகள், புழுக்களாக பிறப்பெடுத்து  வாசல்வரை வந்து  நன்றி மறக்காமல் வரவேற்றுக் கொண்டிருந்தன.  எங்களுக்கு முதலே வந்திருந்த பாட்டி  "என்ர குஞ்சுகள், என்ர செல்லம், என்ர கண்ணம்மா"  என்று பைத்தியம் பிடித்தது போல அரற்றிக் கொண்டு தேடிக்கொண்டிருந்தா.  அவவின்ர குணம் தெரியாமல் துப்பாக்கியை நீட்டி மிரட்டி அவவின்ர அரற்றலை  அடக்க  நினைத்த இராணுவத்தை பார்த்து  "எடுபட்டு வந்தேறி என்ர  வீட்டுக்குள்ள என்ற குஞ்சுகளைத்  தேடுறதுக்கு நீ  என்னடா முதலாளி" என நெஞ்சை  நிமிர்த்திக்கொண்டு  உள்ளே போனா.  அவன் துப்பாக்கியால் தள்ளினான்.  "என்ர வீடு.  எத்தனை பரம்பரை இருந்தாண்ட காணி  தெரியுமோ என்ர வீட்டுக்குள்ள என்னைத்  தடுக்க  நீ  ஆரெடா எடுபட்டு  வந்த பரதேசி " என்று  பேசிக்கொண்டு உள்ளே  போக நினைச்சதுக்குக் காரணம் எங்களையும் அதற்குள் சுட்டு வைத்திருக்க்கக் கூடும்  என  நினைத்திருக்கலாம்.

அவன் பொறுமையற்று துப்பாக்கி நெஞ்சுக்கு நேரே  நீட்டினான். "எனக்கு என்ர  குஞ்சுகள் வேணும். அதுகள் இல்லாட்டில் உசிர் எனக்கு  மசிரெடா" என்று பாட்டி வீரவசனம் பேசிக்கொண்டிருந்த கொண்டிருந்த போது, ராணுவத்தின் கோபம் உச்சத்தில் நின்ற போது,  "பாட்டி"  என்றேன்.  திரும்பிய பாட்டியின் கண்கள் உடைந்து வழிய, இராணுவத்தினன் கை சற்றுத்  தளைய, என்னதும் எனது பின்நின்ற என் சகோதரங்களின் கண்களிலும் பாட்டி மீது துப்பாக்கி  நீட்டிய ஆத்திரத்தின் அனல் இருந்தது.

இப்படித்தான் எப்போதும் எல்லா  இடங்களிலும் தீபம் ஏற்றவேண்டிய பிஞ்சு வாழைகளில் காலத்துக்குக் காலம் யாராவது  தீவைத்துக் கொண்டிருந்தார்கள். அதனால் தான்  அனல் பற்றத்  தொடங்கியது  என் மண்.



Saturday, October 29, 2016

சிந்தித்தால் சிரிப்பு வரும்


"சொன்னால் உங்களுக்குப் பிடிக்காது " பீடிகையோடு தான் ஆரம்பித்தேன்   அந்தக் கதையை. அதைச் சொல்வதில் பெரிதாக எந்த ஆர்வமும் எனக்கிருக்கவில்லை.  ஏனெனில்   அந்தக்  கதை  பற்றி  எனக்கே   உலகமகா   குழப்பங்களும், கேள்விகளும்  ஆயிரம்.  ஒரு  நிகழ்வு  ஒரு  சம்பவத்தால் மட்டுமே அடையாளப்படுத்தப்படுமெனில் அது பற்றிய குழப்பங்களும் குறைவாகவே  இருக்கும். பல சம்பந்தமில்லாத சம்பவங்களால் ஒரு பண்டிகை அர்த்தப்படுத்தப்பட்டு கொண்டாடப்படும் எனில் அது பற்றிய   குழப்பங்களும் அதிகமாகவே   இருப்பதில்  எதுவும்  புதினமில்லை.   

அவர்கள் கதைகேட்கும் ஆவலோடு என்னைச்  சுற்றி வர   அமர்ந்திருந்தார்கள். தீபாவளி  என்ற   பண்டிகை   உருவானதற்கான காரணங்களாக    நான்  கேட்ட, வாசித்த பல  கதைகளை  எல்லாம்  கோர்த்து   ஒரு  மாதிரி  ஒரு கதம்ப மாலையாக்கி கதை போல சொல்லிக் கொண்டிருந்தேன். அல்லது கதைவிட்டுக் கொண்டிருந்தேன். இடையிடை   அங்கங்கே   பொருத்தமில்லாத   சம்பவங்கள் சிலும்பிக் கொண்டு   நின்றதில்  எனக்கே கொஞ்சம்   சங்கோஜமும்   இருந்தது. நாங்கள்   வளர்ந்த   காலங்கள்   போல கதை   சொன்னால்   அதை  அப்படியே   நம்பு   என்று  சொல்லி   அவர்கள்   சிந்தனை  விருத்தியை   முளையிலேயே   கிள்ளிவிடும்  பழக்கமும் எனக்கில்லை.  சொன்னதை  அப்படியே  ஏற்றுக் கொண்டு  தலையாட்டும்  வாத்துக் கூட்டமும்  அதுவல்ல   என்பதும்  எனக்குத் தெரியும்  அதனால் ஆரம்பம்  முதலே   ஒருவிதத்  தயக்கம்  இருந்தது     எங்கே " கதை விடுறீங்களோ "?  என்று  கேட்டு  விடுவார்களோ  என்று. 

கதை  தொடங்கி   சற்று  நேரம்  வரை    அப்படி   எந்த  அபாயமும்  நிகழாமல்   போனதில்  சற்று   ஆசுவாசமாகி   நான்  கதையை   தொடர்ந்து  கொண்டிருக்க முதல்   கேள்வி  சின்னதா  திரி  பற்றின   சத்தம்   போல  வெளிக்கிட்டது .  பின்  படபடவென  பற்றிக் கொண்டு  வெடிக்கத்  தொடங்கியது . 

"இரண்ணியாட்சன்  எதற்கு  வேதங்களை   மறைத்தான்.  அதன்   மூலம்   என்ன தீமைகளைக்  கடவுள்  அல்லது   தேவர்கள்   புரிந்தார்கள் ?"                          
அவ்வளவு  தான்   நான்  மெதுவாகப்  பின்வாங்கி   சுருளத்   தொடங்கினேன்
      
"வராக அவதாரத்தில் பூமிக்குள் பன்றியாகப் புகும் போது கடவுள் புத்தி   இருக்குமா அல்லது  பன்றிப் புத்தி  இருக்குமா ? "

 "எனக்குத்  தெரியாதே "

 "அப்போ   நீங்க  ஏன்  உங்களுக்கு சொன்னவையிட்ட   கேக்கவில்லை?"  
என்  நாக்கு   பதிலற்று   புதையத்  தொடங்கியது 

"விஷ்ணு  ஏன்  அடிக்கடி  வேஷம்   மாறினார்.  அப்ப  அவரென்ன   நடிகரா?"
எனக்கு   நடிப்பாகக்  கூட   சாதாரணமாக   இருக்கமுடியவில்லை 

"பூமியை துளைத்துக் கொண்டு வேறு  அலுவலா   போன   விஷ்ணு  போன காரியத்தை முடிக்கிறதை விட்டிட்டு  இடையில்   எதுக்கு பூமா தேவியை  திருமணம்  செய்தார். பொறுப்பே இல்லையா அந்த மனுஷனுக்கு? "

 "அது  விஷ்ணுவிடம்  தான்   கேட்கவேணும்"  

  " நீங்க  ஏன்  கேட்கல்ல  ?"

   "விஷ்ணுவிட்டையா? 
"ம் "
"நான்   காணலையே   அவரை"

    "உங்களுக்கு  சொன்னவையிட்ட   கேட்டிருக்கலாமே?" 

என்னிடம் பதிலில்லை கேட்பதற்கான வாய்ப்புக்களை  அதிகம் கொண்டதல்ல எங்கள் வளர்ப்புமுறை. திருப்பிக் கேள்வி கேட்டால் பெரியோரை   மதிக்காதோர் என்றும், கடவுள் நிந்தனை செய்தோம் என்றும் கொள்ளப்படுவோம்  என்று சொன்னால்,  எதையும் கேள்வி கேள் வந்த பதிலை உந் அறிவுக்குள் நின்று ஆராய்ந்து பார். உனக்குக் குழப்பமான எதற்கும் தலையசைக்காதே  என்று வளர்க்கப்படும்   இவர்களுக்கு  அது அந்தக் காலம், அதன் மனிதர்கள் வாழ்முறை எதுவும்  புரியாது.


"மானுட  உருவத்தில்  உள்ள  ஒருவர்,  அதிலும்  கடவுள்  எப்படி  ஒரு மிருகத்தை   திருமணம் செய்யலாம்.  விஞ்ஞான  அடிப்படையிலும்   சாதாரண வாழ்வியலிலும்   தப்பான   ஒன்றை  எல்லோரிலும்   மேலான   கடவுள்  எப்படி செய்யலாம்? " அது தப்பான வழிகாட்டல் அல்லவா. அதை  அதுவும் வழிகாட்ட வேண்டிய கடவுளே செய்யலாமா?

பெரிய   வாண்டு  கேட்ட  கேள்விக்குப்  பதிலில்லை   என்னிடம்.
 " பன்றிக்கும்   மனிதருக்கும்   எப்படி   குழந்தை   பிறக்கும் ? அது பன்றி வடிவத்தில் இருக்குமா, மனித வடிவத்தில் இருக்குமா, இரண்டும் கலந்த உருவத்தில் இருக்குமா?" 


"நீங்க  சின்னப்பிள்ளைகள்   இதெல்லாம்   கதைக்கக்  கூடாது " 

சிறுவயதில்   நான்  பெற்றுக் கொண்ட  பதிலை    அப்படியே   கவனமாகப்   பாதுகாத்து   சந்ததி   சொத்தாக   திருப்பிக்கொடுத்தேன்.

"சரி  பவுமன்  எப்படி  பன்றி  உருவமே  கலக்காத  மனித  உருவில்  பிறந்தார்?"

 "அவர்  கடவுளின்   குழந்தை  அதனால். "

"அப்போ கடவுளின் குழந்தை  கடவுள் தானே எதுக்கு  அசுரன் ஆனார்?"

"தெரியாது. "

"நிறத்தில் கருமையாகவும் பலத்தில் வலிமையாகவும் உள்ளவர்கள்   எல்லோரும் ,அசுரர்   என்றே  அழைக்கப் படுவார்களா?"
             
"ஆமாம்  என்று   தான்  நினைக்கிறேன் "

"போனவருடம்  தீபாவளிக் கதை  சொன்ன போது  ராவணனை  அழித்து  விட்டு   இராமன்  அயோத்திக்குத்   திரும்பின   நாள்  தான்  தீபாவளி   என்றீங்களே?"
           
"ஆமாம்   அப்படியும்  சொல்வார்கள்.  அதையும்  விடவும்   இன்னும்  ஏராளம்   கதைகள்   இருக்கு"

"அப்ப  தீபாவளி  என்றால்  என்ன  என்று  இன்னும்  யாருக்குமே  சரியாகத்
தெரியாதா ?"

"ஒவ்வொரு   பகுதியினர்   ஒவ்வொன்று   சொல்கிறார்கள்" 

 "ஓ.......  அப்போ   கட்டுக் கதையா?"

ஒரு  வாண்டு   கெக்கட்டமிட்டுச்  சிரித்தது   மற்றவைகளும்  கூடிச்  சிரித்தன   என்னை  கேலி  பண்ணுவது    போல   உணர்ந்தேன். அந்தக்  கேலி எனக்கானது மட்டுமா  என்பது  எனக்குள்  கேள்வி.  

"அப்போ   இராவணன்   யார்?"

"இலங்கையை   ஆண்ட  மன்னன் "

"அவன்  அரக்கனா?"

"அப்படித்தான்  சொல்வார்கள்" 

"அப்போ   அவன்  வழிவந்ததாகச்  சொல்லப்படும்   நாங்கள்   அரக்கர்களா?" 

பதிலற்றுக் களைத்துப் போனேன்   நான். 

"அப்போ   ராவணன்  போல   தப்பை   தட்டிக்  கேட்பவன்   எல்லாம்  அரக்கனா? அவரவர் பூமிக்குள் வந்து அவர்களையும் உடமைகளையும் நாசம் பண்ணிவிட்டுச் செல்வோர்  தேவபரமாத்மாக்கள்.  தட்டிக் கேட்பவர்கள் எல்லோரும்  அரக்கர்கள் அப்படியா ?"

பதிலில்லை   என்னிடம்.

கேள்வி கேட்ட ஒன்றின் மூக்கு நுனி சிவந்தது. 

"அசுர  குலத்தை  அழித்ததாகச் சொல்லப்படும்   வரலாற்றை   அசுரர்கள்  என்று சொல்லப் படும்   நாங்களே   பண்டிகை  என்று   கொண்டாடலாமோ"? 

பதிலில்லை   என்னிடம் 

"அப்போ   பின்னால்   ஒரு  காலத்தில்  மே  மாதத்தில்  வரும்  17,18 ஆம்   திகதிகளைக்   கூட   அசுரர்களை  வென்றழித்த  பண்டிகை  என   அறிவித்தால் விசாரிக்காமல்   கொண்டாடுமோ   எங்கட  சந்ததி? "  

சற்றுப் பெரிய   வாண்டு   சத்தமாக  கண்களில்   அனலுடன்   வார்த்தைகளில்   கனலுடன்   உறுக்கிக்  கேட்ட  கேள்வியில்  நடுங்கிப் போன    என்னிடம் பதிலில்லை   ஆனால்   

"தீபாவளி  என்பது  எம்மைச்  சூழவும்  உள்ள  இருளகற்றி ஒளியேற்றி     மனதிலும் உள்ள தீயகுணங்களான இருளை அகற்றுவதற்காக   நிர்ணயிக்கப்பட்ட  தினம்  என்று  இனி   எடுத்துக் கொள்வோம்"   


என  முடித்துக்  கொண்டேன்.   

எப்போதும்    அவர்களிடம்   அர்த்தங்களோடு   ஆயிரம்   கேள்விகள்   உள்ளன.   எங்களிடம் தான் விளக்கங்களோடு சரியான  விடைகள்   எப்போதும்  இல்லை .  

ஏனெனில்,  நாம்  சிந்திப்பதே  தப்பெனவும்,  காட்டிய  வழியில்   கூட்டத்தில்   ஒரு மந்தையாகக்  கூடி  நடத்தலே  சரியெனவும்   தட்டி  வளர்க்கப் பட்டவர்கள் ஆதலால்  தான்  இன்னும்   தீர்வுகளற்ற  கேள்விகளாகவே  நிற்கிறோமோ   என்னவோ!

Saturday, October 22, 2016

நான் நடந்த பாதையிலே.....9

வேடிக்கையே வாழ்க்கையின் வினைகளா? 


"நிலானி " எப்பவும் போல் அதிக சத்தமில்லாத , அதிகளவு அமைதியோடு அழைத்து தன் முன்னே போடப்பட்ட கதிரையைச் சுட்டிக் காட்டி வந்து அமரும் படி அபிநயித்தார் Mr.K. வார்த்தைகளை அதிகம் கொட்டுவதில் விருப்பில்லாத அவருக்கு வாய் நிறைய இருக்கும் முத்து உதிர்ந்து விடாத அவதானம் எப்போதும் இருக்க, மொழியை சிக்கனமாய் செலவழிப்பவர் .
.
நிலானி போய் அவர் முன்னே இருந்த கதிரைக்குள் அடங்கிக் கொண்டு அவரைப் பார்த்தாள். எப்போதும் போல் தன் கண்ணாடிக்குக் கீழான அடிப்பார்வையில் புன்னகை கலந்து "உங்களது வேலையில் எனக்கும் டைரக்டர்ஸ் இற்கும் முழு திருப்தி " என்ற முதல் கிண்ண ஐஸ் எடுத்து அவளது தலையில் மெதுவாக கவிழ்க்க, புன்னகைத்தாள். கண்களுக்கு நேராகப் பார்க்காமல் அடிப்பார்வையில் உறுத்துப்பார்த்தபடி பேசுபவர்கள் எம்மை பேச்சினூடு அளவிட்டுக்கொண்டே நம் மனம் சஞ்சலப்படுத்தும் ஒரு இடத்தில் தமது கருத்தை திணிக்கமுயல்பவர்கள் என்பதை அறியாத வெகுளி என அவர் நிலாநியையும் தப்பாக எடைபோட்டிருக்கக் கூடும்.
.
"உங்களைப் போல பொறுப்பானவர்களிடம் தான் பொறுப்புகளை நம்பி ஒப்படைக்க முடியும் நிலானி " என்று அடுத்த கிண்ணம் ஐஸை கொஞ்சம் அதிகமாகவே அள்ளி தலையில் கவிழ்த்த போது , தான் சுதாகரித்துக் கொண்டதை புன்னகை குறைந்து கண்களில் அதிகரித்த அவதானத்தில் காட்டி "இன்னும் என்ன வேலை என் தலையில் கட்டப் போறீங்க Mr. K" என்றாள் சலிப்பான புன்னகையுடன்.
.
"வேலை அதிகமா நிலானி?" அதே தோலுக்கு வக்ஸ் தடவும் இதமான குரல் . தடவி விட்டு தோல் கிழிய உரித்து எடுப்பார்கள் என்பது நிலானிக்குப் புரிந்திருக்க , "வேலை தந்த உங்களுக்கு தெரியாதா வேலை அதிகமா இல்லையா என்பது Mr.K?" அதே மாறாத புன்னகையுடன் கேள்வியை அவரை நோக்கித் திருப்பிப் போட்டாள். அவர் முகத்தில் யோசனை போல் போலியாக பூசிக் கொண்டார்.
.
"எனக்கும் தெரியும் வேலை கொஞ்சம் அதிகம் தான் ஆனாலும் உங்கட கெட்டித்தனத்துக்கும் சுறுசுறுப்புக்கும் இது பெரிய கஸ்ரமான விஷயம் ஒன்றும் இல்லை." இப்போது ஐஸை வாளியோடே கவிழ்த்து அவளது தலையில் கொட்டினார். ஐந்து நிறுவனங்களுக்குள் நிலானி எந்த நிறுவனத்தின் வேலை செய்கிறாளோ அதற்குப் பொறுப்பான டைரக்டரின் பெயர் குறிப்பிட்டு அவரின் பர்சனல் எக்கவுன்ஸ், அண்ட் personal shares நீங்க தான் மெய்ன்டென் பண்ண வேணும் என்று அவர் விரும்பிறார் என்றார். சட்டென நிமிர்ந்து சற்றும் யோசிக்காமல் அவசரமாய் உறுதியான குரலில் "NO" என்று சற்றுச் சத்தமாகவே மறுத்தாள் நிலானி. பின் Mr.K எத்தனை எடுத்துக் கூறியும் , அவள் சற்றும் மாறாமல் தான் கொண்ட முடிவில் தெளிவாக உறுதியாக இருந்தாள்.
.
"டைரக்டர் சொல்லுற வேலையை செய்ய மறுத்தால் வேலை விட்டு போக வேண்டியும் வரலாம் நிலானி " கோபப்படாமல் அக்கறை போல் தனது அடுத்த பயங்காட்டிப் பலகீனப்படுத்தும் ஆயுதத்தை அவர் அவள் மீது பிரயோகித்த போது,
.
"அப்படி வற்புறுத்தி என்னை பெர்சனல் வேலை செய்ய வைத்தால் நானே வேலை விட்டு போகும் முடிவு தான் எடுப்பேன் Mr.K " என்றாள் திடமாக.
.
"நிலானி boss சொன்னபடி அவரிட வேலைகளும் ஏற்றுக் கொண்டு செய்தால் மற்றவர்களை விட boss இன் ஆதரவு அதிகம் இருக்கும் துணிந்து சலறி இங்கிரிமன்ட் டிமான்ட் பண்ணலாம் " என்று நடைமுறை ஆசை காட்டினார்.
.
" என்னிடம் எது உள்ளதோ அதை வைத்துக் கொண்டு அதற்குள் கணக்குப் போட்டு கஸ்ரமில்லாமல் வாழக் கற்றுக்கொண்டவள் நான். நான் இங்கு வரும் போது தந்த வேலையும் அதற்கான சலறியும் எனக்கு போதும்" என்றாள் அவள் தீர்மானமாக.
.
அவர் யோசனையாக பார்த்தார். பின் "யோசிச்சு சொல்லுங்க வேலையில் இருந்து நிக்க வேண்டிய நிலை வரலாம். " என்றார் மீண்டும் பயமுறுத்துவது போல் , தன் இயல்பான இரகசியக் குரலில்
.
அவள் அமைதியாக எழுந்து தன் இடத்துக்கு வந்தாள் . அமர்ந்தாள். கணமும் யோசிக்காமல் முகம் நிறைந்த தீவிரத்துடன் பேப்பர் எடுத்தாள் . பேனா பிடித்த கை இடமும் வலமுமாக வேகமாக நகர்ந்தது. எழுதியதை எடுத்துப் போய்" Mr. K" என்றாள் நிமிர்ந்தவரை நோக்கி சிந்திய புன்னகையுடன் , கையில் கிடந்த கவரை நீட்டும் போது வாய் " sorry" என முணுமுணுத்தது.



அவளிடம் வாங்கிப் பிரித்து கண்களை ஓடவிட்டவரின் முகத்தில் சின்னதாய் அதிர்ச்சி பரவ,
.
" ரிஸிக்னேஷனா நிலானி ?" என்று கேள்வியானார்.
.
" பெர்சனல் வேலை செய்யாவிட்டால் இது தானே நடக்கும் என்றீங்க Mr.K. கொம்பனியா நிராகரிக்கும் போது இரு தரப்புக்கும் மனக்கசப்பு ஏற்படும். staff இற்கு எல்லாம் இது ஒரு பொழுது போக்கு கதையாகும். அதனால நானாகவே விலகிப் போயிடுறேன்."
.
சொன்னவளின் முகத்தில் வலிந்து வருவித்துக் கொண்ட புன்னகைக்குள் திடம் இருந்தது . ஆழ்ந்து பார்க்க அந்த முகத்தில் செயலற்ற கவலையும் தெரிந்தது.
.
அவள் வேலை விடயத்தில் எந்த வித பிரச்சனையும் பண்ணாதவள். தன்னால் எவ்வளவு முடியுமோ, மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்க முடியுமோ அப்படி இருப்பவள். தனக்கு சரி என்று படும் விடயங்களில் எப்போதும் தன் கருத்தை விட்டுக் கொடுக்காத பிடிவாதம் இருந்தாலும் , நேர்மையானவள் . பார்த்துக்கொண்டிருந்த staff அதிர்ந்து போக , நான் மட்டும் அவளது அந்த முடிவை ஊகித்தே இருந்ததால் அவளது செய்கைக்கான அர்த்தம் புரிந்தது.
.
இப்படித்தான் அவளது பழைய office பற்றி, அந்த அவலத்தில் தான் மாட்டிக்கொண்டது பற்றி சொல்லி உடைந்து அழுத நாளில்........
.
அவளது பள்ளிக் குறும்பு அடங்காத வயதில் அவள் வேலைக்குப் போன ஆரம்ப நேரம் அது. உரிய வேலைகள் முடிந்ததும் மிஞ்சிய நேரமெல்லாம் கிண்டலும் கேலியும் பகிடியுமாக office ஐக் கலங்கடித்த நிலானியின் அலுவலக வேலையில், படிப்பின் நேர்த்தி கலந்த அக்கறையோடான ஈடுபாடு நிர்வாகத்துக்கு நிறையவே பிடித்திருந்தது.
.
முதலாளித் தனத்தை தேவையற்ற விடயங்களில் ஒதுக்கி வைத்து, தொழிலாளிகளோடு இயல்பாகப் பழகிய அந்த நிர்வாகிகளுக்கு , மனத்தில் கள்ளம் இல்லாமல் , ஏய்த்தலும் ஏமாற்றுதலும் தெரியாது இருந்த அந்தச் சின்னப் பெண்ணிடம் தமது தனிப்பட்ட கணக்கு வழக்குகளை ஒப்படைத்தல் நம்பிக்கைக்கு உரியதாக இருந்தது.
.
அதிலும் குடும்ப நிறுவனமான அதில், சேர்மனான தந்தைக்கு அவளது நேர்மையும் , எந்த நிலையிலும் சொன்ன சொல்லு மாறாமல் பிடிவாதம் காத்த நம்பிக்கையும் அதிகம் பிடித்துப் போக , அலுவலகத்தின் பண , மற்றும் வங்கி நடவடிக்கைகள் அவளது அதிகாரத்தின் கீழ் வந்திருந்தன.
.
எப்போதும் இறுகப் பூட்டிய அவளது மேசை லாச்சிக்குள் கிடந்த பெட்டிக்குள் நிர்வாகிகள் இல்லாத நேரங்களில் அலுவலகப் பாவனைக்கான பணக் கட்டுக்கள், கையெழுத்துப் போடாத காசோலை தவிர, சேர்மனின் கையெழுத்திட்ட வெற்றுக் காசோலைகளையும் அவளிடம் ஒப்படைத்திருந்தார்கள் அவள் அவர்கள் அலுவலகத்தில் இல்லாத பொழுதுகளில் மேசை விட்டு விலகாமல் புதையல் காக்கும் பூதமாய் அதைக் கட்டிக் கொண்டே கிடந்தாள்.
.
அந்தப் பொறுப்பைப் பொறுப்பேற்ற போது , அடுத்தவரின் காசோலை , அதிலும் ஒப்பமிட்ட காசோலை வைத்திருப்பது என்பது, வைத்திருப்பவருக்கும், கொடுத்தவருக்கும் எவ்வளவு அபாயமான விடயம் என்பது, திரிகோணமலையின் ஒரு சிற்றூரில் , ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த அவளுக்குப் புரிந்திருக்கவில்லை. அதுகும் தன் அலுவலக வேலைகளில் ஒன்றெனவே அவள் எண்ணிக் கொண்டாள்.
.
எல்லா பொறுப்புக்களுக்கும், அவளது வேலைக்கும் ஆரம்பத்தில் இருந்து அவளது எக்கவுண்டன் ஹேமந்த கொடுத்த ஆதரவில் , அவரில் வைத்த நம்பிக்கையில் எதுகும் பாரதூரமாக பயப்படக்கூடியதாகத் தெரியவில்லை அவளுக்கு. அந்த எண்ணத்தில் மண்ணைப் போடும் அளவு யாரும் தவறான அனுபவங்களை அங்கு அவளுக்கு ஏற்படுத்தாமல் தான் இருந்தார்கள் என்பதால் , அவளுக்கு அதன் அபாயம் புரியாமலேயே இருந்தது. அவன் வரும் வரை.
.
அந்த நிறுவனத்தின் டைரக்டர்களில் ஒருவராக புதிதாக அவன் அறிமுகப்படுத்தப் பட்ட போது முதலாளி வர்க்கத்துக்கே உரிய மிடுக்கும், அவன் உயர்கல்வியை முடித்துவந்த அமெரிக்கக் குளிர் தந்த குளிர்ச்சியுமாக இயல்பிலும் லட்சணம் பொருந்தியவனாக அவன் சற்று அழகாகவே இருந்தாலும், அவன் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவன் என்பதற்கு மேல் அவளுக்கு அவன் பற்றிய அபிப்பிராயம் ஏதுமில்லாது இருந்தது.
.
ஆனால் , நிறுவனம் ஓரளவு அதிகநேசமும், சலுகைகளும் குடுத்துக் கொண்டாடிய நிலானி அவனுக்குப் பிரத்தியேகமாகத் தெரிந்தாள். அதை அவனது நாளாந்த நடவடிக்கைகளில், நிலானியும் மற்றவர்களும் அப்படித்தான் உணர்ந்து கொண்டிருந்த ஒரு நாளில்....
.
வேலைகள் அதிகமற்று , அலுப்படித்து , அரட்டையடித்துக் கொண்டிருந்த ஒரு பொழுதில் ,அவள் கூட வேலை செய்த ஒருத்தியின் கையெழுத்தை அச்சுப் பிசகாமல் அப்படியே தன் கையால் எழுதி அசத்திய போது, கூட வேலை செய்த ஒவ்வொருவரும் "என் சிக்னேச்சர் வைத்துக் காட்டு பார்ப்போம் " என்று எதோ மஜிக் வித்தை நடப்பது போல் குவிந்து கும்மாளம் போட, சிலரின் கையொப்பத்தை அப்படியே எழுதிக் காட்டியவள்,
.
"உங்கட கையெழுத்து என்ன சேர்மனின் கையொப்பமே கண் மூடித் திறப்பதற்குள் அப்படியே வைப்பேன்" என்று வீரப் பிரதாபத்தில் தலை நிமிர்ந்து சொன்னாள்.
.
அதுவரை கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து அத்தனையும் அவதானித்துக்கொண்டிருந்த அவன் எழுந்து வந்தான். நட்பாக புன்னகைத்தான்.
.
"என் தந்தையின் கையெழுத்தா..... யாராலும் முடியாது " என்றான் ஏளனமாக,
.
தீவிர தன்னம்பிக்கை கொண்டவர்களிடம் பாவிக்கப்படும் எதிர்மறைப் பேச்சு வார்த்தைகள் அவர்களை விழுத்த விரிக்கப்படும் வலை என்று தெரியாமல் ,
.
"என்னால் முடியும்" என்றாள் தலை நிமிர்த்தி.
.
" யாராலும் முடியாது " அவன் விரித்த வலையை சொடுக்கினான்.
.
" என்னால் முடியும்" என்றாள் திடமாக.
.
"பொய் ஜம்பம் அடிக்காமல் முடிந்தால் செய்து காட்டு" மேலும் இறுக்கமாக வலையை சொடுக்கினான்.
.
சிலர் கற்றுக் கொள்ளும் கல்வி அனுபவங்களை, சுயநலமாக்கி, வார்த்தைகளால் மற்றவர்களை வளைத்து சிந்தனை மழுக்கி தமக்கு வேண்டிய பதிலை பிடுங்கி எடுத்தபின் அவர்களது வாழ்க்கையோடு அவர்களையும் உடைத்து தெருவில் போடும் சுயநலத்துக்குப் பாவிப்பது போல் அவனும் அவனது செய்கைகளும் அழிவு தரும் அறிவோடு இருந்தன.
.
"என்னால் முடியும் ஆனால் அது கூடாது ஆபத்து." மீண்டும் அவள் சொன்ன போது
.
" you can`t நிலானி " என்று கேவலமாக் நகைத்தான்
.
கூடவே,
.
"ஒரு பழமொழி சொல்வாங்க. ஒருவரின் ஒரு வார்த்தை பொய் என்று நிரூபிக்கப் படும் போது இதுவரை பேசிய எல்லா வார்த்தைகளும் சந்தேகிக்கப் படுகின்றன என்று அப்படி தான் இதுவும் உங்களால் முடியாது " சொல்லி கட கடவென சிரித்தான்.
.
தோல்வியை ஏற்க முடியாமல் வெறித்து முன்னே கிடந்த வெற்றுத் தாளை எடுத்த போது அவசர வேலை போல ஹேமந்த அவளை அழைத்தார்
.
" just a minute ஹேமந்த." என்று முதலாளித்தனத்துடன் அவன் தடுக்க,
.
சேர்மனே அசந்து போகும் விதத்தில் கணத்துக்குள் அவரைப்போலவே அச்சொட்டாக கையெழுத்திட்டாள் நிலானி. அவனின் கண்களில் கூர்மை பரவி முகம் மலர்ந்தது.
.
"yes I accept that you can do it. " தப்பு செய்தது போல் தயங்கி நின்றவளைப் பார்த்து
.
" இதில் பயப்பட ஏதுமில்லை just a fun எழுதியதை கிழிச்சுப் போட்டால் போயிற்று "
.
என்று சொல்லி தன் கையாலேயே கிழித்து குப்பைக் கூடையில் போட்டு விட்டு நகர்ந்த போது மலர்ந்திருந்த அவனது முகத்தின் கூரான பார்வை அர்த்தத்தோடு அவளைக் குத்திக் கொண்டிருந்தது .
.
(குத்திக் கொண்டிருந்த பார்வை எப்படி ரணப்படுத்தியது என்று அடுத்த பதிவில் பார்ப்போமா நட்புக்களே )

Wednesday, October 12, 2016

நான் நடந்த பாதையிலே 8

மெல்ல மெல்லப் பிடிக்கிறதே......


வீதி நெடுக வீடுகளும், வீடுகள் நிறைய பசுமையுமாக காலைச் சூரியனின் ஒளித் தெறிப்பைக் கட்டுப்படுத்தி வைத்திருந்ததில் இரவின் மடியில் தூங்கிய தென்றல் நிலவின் ஈரம் கலந்து கன்னம் வருடிச் செல்லும் சிலிர்ப்பில் பாதையில் நடப்பது இதமாகவே இருந்தது. வீடு இருந்த ஒழுங்கையில் இருந்து காலிவீதியில் ஏறும் மூலையில் வழமை போல் , கச்சானும் கடலையும் வறுபட்ட வாசம் மூக்கை துளைத்து நல்லூர் கோவில் திருவிழாவை நினைவுபடுத்த, கச்சான் கடை யோகநாதனும் , எதிர்ப்பக்கத்தில் இளநீர்க் குவியலுக்கு நடுவில் பளபளவென்று கத்தியைத் தீட்டிக் கொண்டு நெடு நெடு என்று நின்ற விதாரணவும் ஒரே நேரத்தில் தத்தமது மொழியில் காலை வணக்கம் சொன்னார்கள், திருப்பி நானும் மொழிந்து , நடந்து ,காலி வீதி கடந்து , பஸ்ஸுக்குக் காத்திருக்கையில் ..
.
முகத்தில் அடித்த வெயில் , வாகனப்புகையில் கிளம்பிய தூசி எல்லாமே இந்த மூன்று மாதங்களில் பழக்கமாகி கொஞ்சம் பிடிக்கவும் தொடங்கியிருந்தது. சரிந்து விழுந்து உங்களைச் சாகடிக்கப் போகிறேன் என்று பயமுறுத்திக் கொண்டே சாய்ந்து செல்லும் கூட்டம் பிதுங்கிய பஸ்சிற்குள் , சாகவும் இடிபடவும் துணிந்து, ஏறவும், நெருக்குதல்களின் அழுத்தங்களில் எலும்பு நொறுங்கி கைகால் பிடுங்குப்படாமலும் நீந்தி நழுவிப் போய் டிரைவர் இற்குப் பின்புறமாக நிற்கவும் பழக்கமாகி இருந்தது. நகரும் வண்டிக்குள் இருந்து காலி வீதி நீளக் கடைகளை பராக்குப் பார்க்கப் பிடித்தது.
.
ஷோக்கேஸ் பொம்மைகளில் பிடித்த மாதிரியான உடையை , hand bags ஐ, தினுசான காலணிகளை கண் வைத்து , பின் கடைகளைக் குறித்து வைத்து ,வேலை முடிந்து வீட்டுக்குப் போய் யாரையாவது பிடிவாதமாய் இழுத்துக்கொண்டு , குறித்து வைத்த ஒவ்வொரு கடையும் தேடி அதை வாங்கு முன், அதை யாராவது வாங்கி விடுவார்களோ என்று ஏங்கி ஏங்கி office இல் தலைக்குமேல் குவிந்த files இற்கும் கணக்குப் புத்தகங்களுக்கும் நடுவில் வேலை செய்கையில் , முகத்துக்கு முன்னே வந்து நின்று "அதை யாராவது வாங்கி விட வேண்டும் " என்று வாய் விட்டு பிரார்த்தனை செய்யும் நிலானிக்கு லேட்ஜரைத் தூக்கி அடிக்க அதிகம் பிடித்தது.
.
அவள் தடுக்கிறேன் பேர்வழி என்று தன் லெட்ஜரை தற்காப்புக் கவசமாக்க, அந்தச் சண்டையை எதோ அரச காலத்து வாட்போர் அளவுக்கு கற்பனை பண்ணி , எப்போதும் அமைதியான Mr. K அமைதி இழந்து, நடுவு நிலை நடுவராகி , நடுங்கி நடுங்கி நடுவில் வர, staff தங்கள் காரணமற்ற இறுக்கம் தவிர்த்து சிரிக்க , இப்போது office இற்கு எங்களையும் எங்களுக்கு office ஐயும் ஓரளவு பிடிக்கத் தொடங்கி இருந்தது .
.
நினைவுகளோடே பயணித்து , தரிப்பிடத்தில் பஸ்சிலிருந்து முக்கித்தக்கி பிரசவமாகி பிதுங்கி விழுந்து, தடுமாற்றம் கலைந்து நிமிர்ந்து நின்று ஒரு முறை என்னை நானே நோட்டமிட்ட போது , யாரையோ கோபமாகத்திட்டும் நிலானியின் குரல் நிரும்பிப் பார்க்க வைத்தது . அவசரமாய் வந்து நின்று, அதை விட அவசரஅவசரமாய் வெளிக்கிட்ட பஸ்சில் இருந்து, தள்ளி விழுத்தியது போல் தடுமாறி கீழே சாய்ந்து குதிக்கமுயன்றுகொண்டிருந்தாள் பூமா அவளைக் கைலாகு கொடுத்துத் தாங்கிய படியே "ஹரி ஹரி ஜண்ட " ( சரி சரி போ ) சொல்லிக்கொண்டிருந்தார் கண்டக்டர். பூமாவின் புடைத்த வயிற்றைச் சுட்டிக் காட்டி அவனைத்தான் சிங்களத்தில் திட்டிக் கொண்டிருந்தாள் நிலானி.
.
தனக்காக நிலானி வக்காலத்து வாங்குவதைக் கூட கவனிக்கும் திராணி அற்று அடிவயிற்றை ஒரு கையால் பற்றி முகத்தில் வழிந்த வியர்வையை மறுகையால் துடைத்துக் கொண்டே சோர்ந்து நின்ற பூமாவைப் பார்க்க பாவமாக இருந்தது. கர்ப்பம் சுமந்த பெண்களுக்கான அலுவலக நேர ஒவ்வொரு பஸ் பயணமும் நாள் வருமுன் கட்டாயப் பிரசவிப்புக்கு ஆளாக்கி விடுமோ குழந்தை நசிந்து இறந்து விடுமோ என்ற பயம் எப்போதும் போல் அப்போதும் தோன்றியது.


.
மக்கள் வரிப்பணத்தை பொக்கற்றுக்குள் போட்டுக் கொண்டு குட்டி குட்டியாய் ஏராளம் குடும்பம் வைத்து இருட்டு வாழ்க்கை வாழும் பல அரசியல்வாதிகள், அலுவலக நேரத்துக்கு மட்டுமாவது ஒரு குட்டி பஸ், கர்ப்பிணிகள் மட்டும் பயணம் செய்யும் வகையில் பணியில் அமர்த்தக் கூடாதா என்ற என் எப்போதுமான , எப்போதும் எந்த அரசியல் வாதியும் சிந்திக்கவே நினைக்காத நடைமுறையில் எப்போதும் சாத்தியமாகவே மாட்டாத சிந்தனை எப்போதும் போல் மனதில் ஓடியது.
.
வாழ்வாதார பொருளியல் நெருக்கடி உடல் எந்தவிதப் பாதிப்பான நிலையில் இருக்கும் போதும் நெருக்குதல்களும் தாண்டி அதற்குள் நெருக்கிப்பிடித்து உயிர்வாழ்தலை உறுதிப் படுத்தும் வாழ்க்கையின் போராட்டம் மனதை வலிக்க வைத்தது. தலைநகர் வாழ்வின் சொந்த வீடு இல்லாத (அதிகமானோர் அதே நிலை தான் ) ஒவ்வொரு குடும்பத்தின் உழைப்பும், வீட்டின் ஏதாவது ஒரு இருண்ட மூலை அறையை ஒதுக்கி, அல்லது யாழ்ப்பாண வீடுகளின் விறகு அடுக்க பாவிக்கும் தாழ்வாரம் போன்ற பகுதியை ஒதுக்கி அனெக்ஸ் என்ற பெயரில் வாடகைக்கு விடும் landlord களால் முடிந்த வரை கறக்கப்படும் கொடுமையும்,
.
அந்த நிலவரம் புரியாமல் ஊரில் இருந்து அலுவலாகவும் அலுவல் இல்லாமலும் தலைநகருக்கு வந்து நட்பையும் உறவையும் காரணம் காட்டி கூடவே தங்கி நின்று , அலுவலக நிலைமை தெரியாமல் வற்புறுத்தி லீவு எடுக்கவைத்து , காரணமில்லாமல் கொழும்பு சுற்றிக் காட்டவைத்து, அதனுடன் யாழ்ப்பாண வாழ்வை ஒப்பிட்டு நாற்பது நொட்டை நொடுக்கு சொல்லி செல்லும் மனிதர்கள் திரும்பிச் சென்றபின் land lord நீட்டும் தண்ணீர் மின்சாரம் உட்பட வந்து நின்றவர்களுக்கான மேலதிக வாடகையும் கட்ட வேண்டிய அவலத்தில் மாதவருமானம் தடுமாற, அதைச் சமாளிக்கும் வழி தெரியாது, வந்தவர்கள் சொல்லிச்சென்ற நொட்டைகளுக்கான பதிலை எல்லாம் நாகரீகத்துக்காக அவர்கள் முகத்துக்கு முன் சொல்லாமல் அவர்கள் போன பின் மனதுக்குள் சேர்த்துவைத்து office நேரத்தில் காரணமில்லாமல் எப்போதும் சம்பந்தமற்றுப் புலப்பும் பூமாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.
.
தம்பதிகளுக்குள் அளவற்ற நெருக்கம் இருந்தும் அதைப்பகிர்ந்து கொள்ள நேரமற்று மனதை அழுத்தும் பொருளாதார , அலுவலக ,குடும்ப , வேலைச் சுமைகளை தலைக்கு மேல் சுமந்து கொண்டு , மகிழ்வான தருணங்களை தொலைத்து விட்டு மனம் புகைய, புலம்பித்திரியும் அப்பாவிகளை அலுவலகங்களில் தேடிப்பிடித்து , கதை போட்டு கதை பிடுங்கி, அழையா விருந்தாளியாய் குடும்பத்துக்குள் நுழைந்து பற்றவைத்து விடும் பொன்னுத்துரை அடுத்த பஸ்ஸில் இருந்து இறங்கி ஓடி வந்து அதி முக்கிய கேள்வியாய்.
.
"மெய்யே பூமா இப்பவும் உன்ர மனுஷன் ஓவர் time எண்டு நேரம் பிந்தித்தான் வாறவனே.? மனிசி மாசமா இருக்ககேக்குள்ள தான் உந்த சேட்டை எல்லாம் வேலை இடங்களில தொடங்குவீனம். இப்ப அதட்டி வெருட்டி அச்சறுக்கை பண்ணி வை. பிறகு ஐயோ Mr.பொன்னுத்துரை என்னைக் காப்பாற்றுங்கோ எண்டு என்னட்டை ஓடிவந்து நிக்கக்கூ டாது சொல்லிப்போட்டன் " என்று சொன்ன விதத்தில் அக்கறை இருக்கவில்லை.ஐயோ அப்படி வந்து என் காலில் விழுந்து கதறு என்ற எதிர்பார்ப்பும் , குடும்பத்தை கொளுத்தி விட்டு எரியும் நெருப்பை அழகு பார்க்கும் ஆவலும் இருந்தது. கோபமாக எதோ சொல்ல வாயெடுத்த நிலானியின் கைகளை அழுத்தினேன்.
.
பூமா பதில் சொல்ல வேண்டிய கேள்வி அது. இந்த மனிதரின் எப்போதுமான கொளுத்தி வைத்து குளிர்காயும் நடவடிக்கைகளில் எப்போதும் அவள் office இல் குழம்பி அழுத நேரங்களில் அழுத்தி அழுத்தி அவளுக்குக் கொடுத்த advaice இப்போது வேலை செய்தது. "Mr. பொன்னுத்துரை நீங்க வேலைக்கு வந்தால் உங்கட அலுவலை மட்டும் பாருங்க . என்ர குடும்பம், என்ர ரூபன் பற்றி எனக்குத் தெரியும். " முதல் முறையாய் அவரை ஒதுக்கி வைத்து கோபமாய் சொல்லிய பூமாவை அதிசயமாய் பார்த்தார் மனிதர். பின் பார்வையில் தெரிந்த தீயை மறைச்சுக் கொண்டு "யாரவோ உன்னை நல்லா மாத்திப் போட்டினம். இதெல்லாம் நல்லதில்லை கண்டியோ " என்றார் நிலானியை கோபமாய் முறைத்துக் கொண்டே. அவளது புன்னகை அவருக்கு இன்னும் உள்ளே கொதித்திருக்கலாம்
.
ஆனால் ஏனோ அந்த மனிதனுக்கு உதறி எறிபவர்களை விட்டு ஒதுங்கிப் போகும் சுரணை எப்போதும் இருப்பதில்லை. அரச அலுவலகங்களில் இருந்து ஒய்வு பெற்ற பின்பும் இன்னொரு இளையவரின் வேலையை தட்டிப் பறித்துக் கொண்டு , பொழுது போக்க வேலைக்கு வந்து வில்லங்கம் தரும் பலரில் இந்த பொன்னுத்துரையும் ஒருவர். இவர்கள் வேலை செய்த அரச அலுவலகங்களில் இருந்து இவர்களின் அறிமுகத்தின் மூலம் அணைவின் காரணமாக இலகுவாகக் கிடைக்கும் ஒரே ஒரு கையெழுத்துக்காக தனியார் நிறுவனங்கள் வேலையற்ற இந்த ஆசாமிகளை வைத்து staff இன் உயிர் எடுக்கும். அந்த மனிதர் எப்போதும் உயிர்பிடுங்குதலை அலுவலகக் கடமை போலவே செய்தார்.
.
கையெழுத்து..... நினைவு வந்த போதே நிலானியின் மீது பரிதாபம் வந்தது. எங்கெல்லாம் மனிதர்களின் தலைஎழுத்தின் அவலம் வாய் விரித்து விழுங்கிவிடக் காத்திருக்கின்றது என்று சலிப்பாக இருந்தது.
.
நிலானியிடம் நான் அதிசயித்த பல திறமைகளில் ஒன்று அவள் மற்றவர்களின் நடை , குரல் பேச்சு , என்று எல்லாவற்றையும் அப்படியே பிரதிபலிக்கக் கூடியவள். அதேமாதிரி மற்றவர்களின் கை எழுத்தையும், கையொப்பத்தையும் கூட பார்த்து சில நிமிடத்தில் அப்படியே எழுதக் கூடியவள். அப்படித்தான் அவளது பழைய அலுவலகத்தில் அப்படி எல்லோரின் கையெழுத்தையும் வேடிக்கையாக எழுதப் போக , அவளது துருதுருப்பில் இளமையின் பூரிப்பில் ஏற்கனவே கண்வைத்து காத்திருந்த , அவளது டைரக்டர் ஒருவனின் கையில் அது சிக்கிக் கொண்டது. அவன் அதைவைத்து அவளது தலைவிதியின் ஒரு காலகட்டத்தை தன் கையால் எழுத ஆரம்பித்திருந்தான்.
.
( எப்படி எழுதினான் என்பதை அடுத்த பதிவில் வாசிப்போமா நட்புக்களே)
.

Friday, October 7, 2016

நான் நடந்த பாதையிலே 7

என் கை எழுத்தின் தலைஎழுத்து


"Get in நிலானி " என உரிமையுள்ளவன் போல் அதிகாரமாய் அவன் கூறியபோது அதிர்ந்து நின்று வெறித்துப் பார்த்த நிலானியின் கண்கள் கலங்கி உதடு துடித்துக் கொண்டிருந்தது. கீழ் உதட்டை மேற் பற்களால் இறுகக் கடித்துக் கொண்டு கண்களை மூடி இரண்டு பெரிய மூச்சுக்களை வேகமாக வெளியேற்றினாள். முகம் சற்று நிதானத்துக்கு மாறி இருந்தது. அந்த இடத்தில் அவனுக்கு சம்மந்தமில்லாதவள் போல் என்னையும் இழுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள். 
.
"நிலானி do what I say." அவனது குரலில் கோபமும் அதிகாரமும் பொறுமை இழப்பும் கலந்திருந்தன. நின்று திரும்பி தீர்க்கமாகப் பார்த்து " who are you?" என்று அதட்டிய அவளது குரலில் ஆத்திரமும் அலட்சியமும் இருந்தன. அதிர்ந்து உடனேயே நிதானித்து, முகம் இளக 
வீதி என்றும் பாராமல் " Love you நிலானி " என்றான். அவள் வேகமாய் அவனருகே வந்து உதட்டுக்குள் நெரிபட்ட வார்த்தைகள் சத்தத்தைக் குறைத்து வெறுப்பை கூட்டிப் பிரதி பலிக்க, "but I don't like you. I can't love you because you are a cheat" என்றாள். 
.
விபரம் ஏதும் புரியாமல் சம்பந்தமில்லாத ஒருத்தியாய் நடுவில் நிற்பது சங்கடமாய் உறுத்த. "நான் போகவேணும். நாளைக்கு office இல் பார்க்கலாம் நிலானி" என்றேன். அதற்காகவே காத்திருந்தவன் போல "ப்ளீஸ்" என்று போகும் படி கைகளால் சைகை காட்டினான் அவன். "இல்லை நானும் வாறன் போகவேண்டாம்" என்று அவசரமாக மறுத்து கையைப் பற்றிக் கொண்டவளின் கைகளில் இருந்த நடுக்கம் உறுத்தியது. அவளை அந்த இடத்தில் தனியாக விட்டு விலக தயக்கமாக இருந்தது. எதோ விபரீதம் போல் தோன்றியது. 
.
பொதுவிலேயே தமக்கான சொந்தப் பிரச்சனைகளுக்குள் நட்பின் அடிப்படையில் கூட காரணமற்று இன்னொருவரைச் சம்பந்தப் படுத்துவது பலருக்கும் சங்கடமான ஒன்று. பல சந்தர்ப்பங்களில் அப்படி ஏதாவது சுயநலமான காரணங்களை உள் மறைத்துக் கொண்டே நட்பின் போர்வையில் நெருங்குபவர்கள் பலரிடம் கற்றுக் கொண்டு காயப்பட்ட பாடங்கள் என்னைப் பதப்படுத்தியி ருந்தன. அந்தக் காயங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள எப்போதும் , எதிராளியைப் பேசவிட்டு , எதிர்த்து எதுவும் வாதாடாமல் அமைதியாக அவதானித்து உல் அர்த்தங்களை கிரகித்துக் கொண்ட பின் , உரையாடல் இறுதியில் அமைதியான ஒரு, வாழ்நாட்கள் முழுவதுக்குமான வாழ்த்துடன் அப்படியான மனிதர்களிடமிருந்து நிரந்தரமாகவே ஒதுங்கி விடும் என் சுபாவம் நிலானியின் விடயத்தில் மாறி இருந்தது. அவள் அப்படி எதோ ஒரு காரணத்திற்காக நெருங்கியவள் அல்ல,. பழகிய சொற்ப நேரத்தில் நெஞ்சம் தொட்டவள். முகமூடி போட்டு பொய் வார்த்தைகளால் சோடனை செய்யாதவள் என்பது உணர அவளை விட்டுப் போவதில்லை இனி எப்போதும் என்ற முடிவு தீர்மானமாகியது மனதில். 
.
என் கரத்தை இறுகப் பற்றியிருந்த நிலானியின் கரங்களை முறைத்து விட்டு "நான் உன்னோடு தனியாக பேச வேண்டும் " அதட்டினான் அவன். வீதி மெல்ல திரும்பி வேடிக்கை பார்க்கத் தொடங்கியிருந்தது. அவள் இன்னும் அதிகமாய் அவனை நெருங்கினாள். கண்களில் நெருப்பெரிய முறைத்து, "நான் மிகவும் சாதாரணமானவள். இதில் செத்து விழுந்தால் கூட யாருக்கும் அடையாளம் தெரியாத அனாதைப் பிணம். செய்திப் பேப்பர் கூட பிரசுரிக்க இடமிருக்கிறதா என்று யோசிக்கிற நிலையில் வாழ்பவள். நீ அப்படி இல்லை தலை நகரின் பெரும் புள்ளிகலீல் ஒரு வீட்டு வாரிசு. பிரபலமான ஒரு நிறுவனத்தின் முதலாளி வர்க்கத்தில் ஒருவன். ஒரு கூச்சல் போட்டேன் என்று வை நாளைக்கு மூன்று மொழிப் பத்திரிகையிலும் நீ தான் தலைப்புச் செய்தி." அவளது உதடுகளுக்குள் நெரிபட்ட வார்த்தையின் அதிர்வை அவனது முகம் அப்பட்டமாகக் காட்டியது 
.
"கொன்னுடுவேன் " அவனது வார்த்தைகள் உறுமலாய் வர , நிதானமாய் நிமிர்ந்து அலட்சியமாய் சொன்னாள் "போர் பூமியில் பிறந்து சாவுகளுடன் வளர்ந்தவள் . உன் கொலைப்பயமுறுத்தலுக்கு பயந்திடுவேன் என்று நினைச்சியா? நடுத்தெருவில என்னை நானே கொழுத்திட்டு நீ தான் கொழுத்தினாய் என்று நம்பவைச்சு, செய்தியாலே உன்னை ஓதுங்கி ஒடுங்க வைக்க எனக்கு முடியும் . உனக்கு எதிரான எல்லாக் குற்றச்சாட்டும் எழுதி, எனக்கு ஏதாவது ஆனால் நீதான் காரணம் என்றும் எழுதி உனக்குத் தேவையான என் sign போட்டு உனக்கான இடத்திலேயே மறைச்சு வைச்சிருக்கிறேன் நான். ஒரு அவலமான முடிவை நான் எடுத்தால் நீ ஆபத்தில் மாட்டுவாய். அதனால ஒதுங்கிப் போயிடு என்னை என் பாதையில் போக விடு. " அதட்டலாக கூறிய போது அவன் மனம் அதிர்ந்ததை உடல் பிரதிபலிக்க என் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினாள் நிலானி. 
.
முகத்தில் கோபம் இருந்த போதும், பற்றியிருந்த விரல்களின் நடுக்கம் அவளின் மென்மையை உணர்த்திக் கொண்டிருந்தது. கேள்வி கேட்காமல் கூடவே நடந்த போது தன்னைச் சற்று ஆசுவாசப் படுத்தி " sorry டா " என்றாள். "எதுக்கு நிலானி விடுங்க" என்ற போது "இந்த நீங்க வாங்க போங்க எல்லாம் விட்டிடலாமேங்க " என்று உரிமையாய் சொல்லிய புன்னகைகையில் இவ்வளவு நேர ஆக்ரோஷ முகம் எங்கோ தொலைந்து முழுவதும் மகிழ்ச்சிக்கு மாறி இருந்தாள். 
.
இலங்கையின் தலைநகரில் வாழ்வது என்பது, எரிக்கும் வெயிலில் உச்சி உருகி உடலில் வழிந்தாலும், வேலை முடிந்த மாலைகளில் திருவிழாக் கூட்டமாய் நெரியும் பஸ்ராண்டுகளில் தொலைந்தாலும், ஓரங்களில் வீசிப்போட்ட ஊசிப்போன சாப்பாட்டுப் பாசல்களின் புளிச்சல் நாத்தத்தில் சுவாசிக்கவே வெறுத்துப் போனாலும், வாழ்க்கை சுறுசுறுப்பானது, உற்சாகமானது, ஓய்ந்து அழுந்திக் கிடக்கத் தேவையில்லாதது. மனதுக்குள் எந்தப் பிரச்சனையையும் அதிக நேரம் அழுத்திக் கொல்லாமல் அடுத்த அலுவலுக்கு அவசரமாகத் தாண்ட வேண்டிய அவசரமானது. அதனால் என் வரையில் அது அழகானது. அப்படி நெரிசல் முட்டிய பஸ் ஸ்ராண்டில் வந்து காத்து நின்ற போது நிலானியும் சற்று முன் நடந்த எல்லாம் மறந்து உற்சாகமாய் கதைத்தாள். பின் 
.
"அவன் பற்றி இன்னொரு நாள் சொல்லுறேன். இப்ப திரும்பவும் என் மூட் ஸ்பாயில் பண்ண விரும்பல்ல "என்றாள். "அப்படி சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை நிலா. என்னோடான உங்கள் நட்பு என்பது உங்கள் மூக்கு நுணி வரையும் என் கைகளை அனுமதிப்பது மட்டுமே. மூக்கு நுணி தீண்டும் உரிமை எனக்கு இல்லை. இது வரை உடையாமல் தொடரும் என் நட்புகளில் நான் கடைப்பிடிக்கும் முக்கிய விடயம்." புன்னகைத்தாள் "ஒரு நாளிலேயே என்னை இவ்வளவு கவர்ந்த ஒரு சகோதரியிடம் சொல்லும் அனுமதி எனக்கு உண்டா." ஏனென்றாள். "எனக்கு நெருங்கியவர்களிடம் என்னைப்பற்றி மறைப்போடு பழக என்னால் முடியாதே" என்றவளின் அப்பாவிப் புன்னகை பிடித்திருந்தது. " அப்படியானால் என் காது மனதுக்குள் திறக்குமே" என்றேன். கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தாள். பார்வையில் அலாதியான நெருக்கம் இருந்தது. 
.
எமக்கான 100 இலக்க பஸ் வந்தது. இலக்கம் பஸ்சுக்கானது என்பதை பிழையாக விளங்கிக் கொண்டு நூறு பேரை அந்தச் சிறிய வண்டிக்குள் அடைந்து விடும் கட்டாயத்தில் நடத்துனர் வீதியில் நின்றவர்களை கை பிடித்து இழுக்காத குறையாக இழுத்து உள்ளே அடைந்து கொண்டு "இஸ்சரட்ட ஜண்ட. இஸ்சரட்ட ஜண்ட" (முன்னாடி போ முன்னாடி போ ) என்று கத்திக் கத்தி பஸ்ஸின் கர்ப்பிணி வயிற்றை ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஒவ்வொரு மாதம் அதிகமாக்கி பொரும வைக்க. நாம் பின்பக்க வாசலால் ஏறி, நடக்க முடியாமல் சனக்கூட்டத்தில் மிதந்து, சாரதி இருக்கைக்கு பின்னால் வரை வந்து, கம்பியில் கை பிடித்து , ஒரு மாதிரி கீழே இடம் பிடித்துக் கால் பதித்து ஒருவரை ஒருவர் பார்த்து ஆசுவாசமாகப் புன்னகைக்க., கோல்பேஸ் கடலின் காற்று நுரையோடு மிதந்து வந்து முகத்தில் மோதியது இதமாய் . கரை எங்கும் குடைப் பூக்கள் பலவண்ணங்களில் கைமரங்களில் பூத்திருந்தன. பூக்களுக்கு அடியில் காதலோ , காதல் என்ற பெயரில் ஒளிந்து கொண்ட வேறு எதுவோ அரங்கேற்றிக் கொண்டிருக்கும் பரகசிய உண்மை புன்னகைக்க வைத்தது ,

 

கோல்பேஸ் கடற்கரையும் முகத்தில் மோதி தலை முடி கலைக்கும் குளிர்காற்றும் எவ்வளவு பிடிக்குமோ அதேயளவு கடற்கரைக்கு அருகே நிறுத்தியுள்ள பீரங்கிகளைப் பார்க்கவும் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை வயிற்றில் சுமந்துகொண்டு மசக்கையும் வாந்தியும் பசியுமாக அம்மா கிடந்த நாட்களில் எல்லாம் மாலை நேரங்களில் அப்பா இங்கு கூட்டி வந்து காற்றில் நடக்கவைத்து தானே கைப்படச் சமைத்த உணவை அந்தப்பீரங்கிகளுக்கு அடியில்உட்கார்ந்தபடி உண்ணவைத்து அது சற்றுச் சமிபாடடையும் வரை மீண்டும் நடந்து கொண்டே முதலாம் இரண்டாம் உலகயுத்த அதன் பின்னான எங்கள் நாட்டின் அரசியல் வரலாற்றையும் விளக்குவதாக, அதற்குள் இரண்டு முறையாவது அம்மாவின் பிடிவாதத்தில் ஐஸ் கிரீம் சாப்பிட்டு விடுவதாகவும். இரவு வரை அதிலேயே கழித்து விட்டு செக்கண்ட் ஷோ படம் பார்த்து விட்டு வீட்டுக்குப் போவதாக அம்மா சொல்லி நான் கேட்டிருக்கிறேன் . அதை சொல்லும் நேரங்களில் அம்மாவின் முக விகசிப்புக்குள் இருக்கும் அப்பா மீதான காதல் எனக்குப்பிடிக்கும் அதனாலேயே அந்தப் பீரங்கிகளை பார்க்கும் போதெல்லாம் அம்மா அப்பா கூடி நடப்பது போல அதனடியில் பேசிக்கொண்டிருப்பது போல அவர்கள் கரங்களுக்குள் நான் இருப்பது போலமிகவும் மகிழ்வான ஒரு உணர்வு இருக்கும்
.
வளர்ந்தபின் நான் பலதடவை யோசித்திருக்கிறேன் மசக்கை நேரம் பாற்பொருட்கள் கண்டாலே குமட்டிக்கொண்டு வரும். இதற்குள் எப்படி இத்தனை ஐஸ்கிரீம் என்று ஆனாலும் கேட்டதில்லை. அவர் அருகில் இருந்து அதையும் ஊட்டியிருந்து அது வாந்தியாகாமல் இருந்திருக்கலாம். இன்றுவரை அவர்களின் தனிப்பட்ட காதல் கதைக்குள் நான் நுழைந்து பார்த்ததில்லை. ஆனாலும் ஐஸ்கிறீம் பார் என்று நட்புகள் என்னை கிண்டல் செய்யுமளவு நான் உணவாக அதை உட்கொள்வதற்கும், தோற்றத்தில் குணத்தில் வேறு யாரையும் கொள்ளாது இருவரிலும் சரிபாதி நான் கொண்டுள்ளமைக்கு அந்த நெருக்கமான நேசிப்பு தான் காரணம் என்று தோன்றும். அதுவே ஏதோ வரம் போல் உணர்வதுண்டு. 
.
வழமைபோல் கோல்பேஸ் காற்றுக்குள் தொலைந்திருந்தவளை " நான் அவனிடம் மாட்டிக்கொண்டேன்" என்ற நிலானியின் குரல் மீட்டு வந்தது . அதிர்ந்து பார்த்தபோது
அவளது முகம் கலவரமாகி இருந்தது. "நான் தெரியாமல் மாட்டிக் கொண்டேன் " என்றாள் காதருகே. கேள்வி போல்பார்வையில் அதிர்ந்த என்னை "அவன் என் சாவு வரை துரத்துவான் போல பயமா இருக்கு " என்ற போது குரலில் நிறைய கலக்கம் இருந்தது. "இவனை நெருங்கினால் நான் கம்பி எண்ண வேண்டி வரலாம்" என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு. "நிலா" என்றேன் அதிர்வாய் "எல்லாருக்கும் தலை எழுத்து சரியில்லை என்று சொல்லுவீனம். எனக்கு மட்டும் என் கையெழுத்தில் இப்படி ஒரு தலைஎழுத்து எழுதி இருக்கு போல ...... " அவள் சொல்லட்டும் எனக் காத்திருந்தேன். "அவன் எனது...,...,...... " வாக்கியத்தை முடிக்காமல் கண்கள் கடலை நோக்க பஸ் கோல்பேஸ் கடற்கரையைக் கடக்க .......
.
( அவன் அவளது .......... அடுத்த அத்தியாயத்தில் கேட்போமா நட்புக்களே)
.
***********
மாலினி

நான் நடந்த பாதையிலே.. 6

அவள் என்றால் அது நானும் அவளும்

அத்தனை அமளிதுமளிக்குள்ளும் நேரான பார்வையோடு நிமிர்ந்து புன்னகைத்தாள் நிலானி. "என்ன சொன்னனீர் அப்பாவோ ? நான் எ..ப்..ப்..ப்..ப்பிடி" தடுமாறி கோபமாக அதிர்ச்சியாக Mr. பொன்னுத்துரை கேட்டபோது ஒவ்வொரு ப் இற்கும் எதிரில் நின்டவர்களின் முகமெல்லாம் காறித் துப்பியது போல் எச்சில் மழை . ஆனால் இப்போது முன் போல் நகைச்சுவையாக ரசிக்கத் தோன்றாமல் வெறுத்திருந்தது எனக்கு. அவள் பதில் சொல்லாமல் முகத்துக்கு நேரே புன்னகைத்தாள். அவளது நேர்ப்பார்வையில் இருந்த தீட்சண்யம் பிடித்தது எனக்கு. வாயே திறக்காமல் ஒற்றைப் பார்வையிலும் எடுத்தெறிந்த புன்னகையிலுமாக எதிராளியை அசைத்துப் பார்க்கும் அடி அது.
.
"என்ர மகள் வேற இடத்திலை எல்லோ வேலை செய்யிறாள்" என்றார் அவசரமாக. அவள் நிதானமாகச் சொன்னாள்"அது யார் என்று எனக்குத் தெரியாது ஆனால் நான் உங்கட கீப்புக்குப் பிறந்த உங்கட மகள். " Mr.பொன்னுத்துரை அதிர்ந்தது ஓரடி பின் வாங்கி உடல் குலுங்கியதில் அப்பட்டமாகத் தெரிந்தது. ஒவ்வொரு முகத்தையும் கண்களில் அதிர்வுடன் முகத்தில் அவமானத்துடன் வேகத்தில் கோபத்துடன் பார்த்தார். பின் "அப்பிடி ஒருத்தி இருந்தால் எல்லோ" என்றார். பூமாவின் உதட்டுக்குள் விழுங்கிய கேலிச் சிரிப்புக்குள் மற்றவர்கள் கண்களுக்குள் மறைத்துக் கொண்ட நகைப்புக்குள் எல்லோரும் அவர்மீது நிறையவே வெறுப்பு வளர்த்து வைத்திருப்பது தெரிந்தது.
.
"அப்ப நீங்க அண்டைக்கு ஓட்டோவில கூட்டிக்கொண்டு போன லேடி?" கெக்கே பிக்கே என்று ஒரு வித்தியாசமான சிரிப்புடன் கேட்டாள் சுகந்தி. "அவள் தான் என்ற மனிசி " என்பதில் ஆரம்பித்து மனைவி பிள்ளைகள் அவர்கள் வேலை செய்யும் இடங்கள் எல்லாம் ஒரு பதட்டத்தோடு ஒப்புவித்தார். அத்தனை காட்சியும் ஆவலாகப் பார்த்து எல்லா விபரமும் அறிந்த பின் அவசரம் போல் நிதானமாக, கோபம் போல் அமைதியாக " what happened here. I have to tell chairman " என்றார் Mr.K சலிப்பாக மூச்சு விட்டது டிபார்ட்மெண்ட். " நான் வெளியே போனதும் என் டிபார்ட்மெண்ட் இல் என்ன வேலை Mr. பொன்னுத்துரை. எப்பவும் இங்கு வந்து ஏதாவது பிரச்சனை பண்ணிக் கொண்டு ." என்று தன் மெதுவான குரலில் கோபமானார் Mr.k
.
"நான் சும்மா தான் புதுசுகள் வந்திருக்கு விபரம் கேப்பம் எண்டு வந்தனான். " அவர் சொல்லும் போதே "எந்த பெண்ணுக்குப் பின்னால என்ன பிரச்சனை இருக்கு அதை எப்படி ஊதி பெரிசாக்கி கலர் கலரா தோரணம் கட்டிoffice சுவர் எல்லாம் தொங்கவிடலாம் என்ற அக்கறையில வந்தவர். " சீறிய சுகந்திக்கு அவரில் நிறையவே ஆத்திரம் இருந்தது தெரிந்தது.
.
நடைமுறைப் படுத்த முடியாத கோபம். அவமானம் எல்லாமுமாக அவரின் கறுத்தமுகம் இன்னும் அதிகம் கறுத்து வியர்த்து வழிந்தது. வாசல் வரை போய் கதவு திறந்தவர் சினிமா வில்லன் பாணியில் நின்று திரும்பி கோபமாக முறைத்து நிலானியைப் பார்த்துச் சொன்னார் "இதெல்லாம் நல்லதுக்கு இல்லை. நீர் அனுபவிக்கப் போறீர். எங்கட குடும்பங்களில இளம் பிள்ளையள் அடங்கி ஒருங்கி நடக்குங்கள் . பொம்பிளைப் பிள்ளையளே நீங்கள் எல்லாம்." என்றார் கோபத்தில் வாய் கொன்னைதட்டி வார்த்தைகள் கொளகொளத்தன. " உங்கட பிள்ளைகளை பொத்தி வைச்சிட்டு வெளியே வந்து வேறு வீட்டுப் பொம்பிளையளோட அதுகும் உங்கட கடைசிப் பிள்ளையிலும் குறைந்த வயதுள்ள பிள்ளைகளோட கூட இப்படி கேவலமா கதைக்கிற ஆட்களோட இப்படி இருந்தால் தான் நாங்களும் வாழ முடியும்" நிதானமாகச் சொன்னவள்
.
"நீங்க நினைக்கிற மாதிரி நாங்க காக்கா பிடிச்சு கைக்குள்ள போட்டு வேலை எடுக்க தேவையில்லை. இந்த வேலைக்கு உரிய தகுதியோட எக்ஸ்ராவா ஒரு தகுதி எனக்கு இருக்கு Mr. பொன்னுத்துரை. ஒரு புது இடத்துக்கு வேலைக்குப் போறதுக்கு முதல் அந்த கொம்பனி நடை முறைகள் மட்டும் இல்லை staff பற்றியும் விசாரிச்சுக் கொண்டு தான் போவன் ஏன் என்றால் உங்களை மாதிரி ஜென்மங்களுக்கு எல்லாம் ஈடு கொடுத்துக் கொண்டே வேலையும் பார்ப்பது, பாம்புப் புத்துக்கு நடுவில படுத்து நித்திரை கொள்ளுற மாதிரி அதற்கு தயார்ப் படுத்தணுமே" என்றாள் நிலானி . "நான் உம்மோடை எதுவும் கதைக்க இல்லையே அந்தப் பிள்ளையோட எல்லோ கதைச்சனான்". எப்படியும் நிலானியை மடக்கும் ஆவேசம் அவரிடம் இருந்தது. நிலானி புன்னகையுடன் நிதானமாக "அவள் என்றால் அது நானும் அவளும்" என்றாள். அந்தக் கண்களில் நிச்சயமாக கள்ளமில்லா சுயநலம் நாடாத ஒரு உண்மை நட்பு தெரிந்தது.
.
அந்தக் கணத்தில் என் அத்தனை வயது வரை கூட நடந்த என் மாலதி, மஞ்சு, ரேகா, அனு, விஜி , ராது, ஜீவி என்று எல்லோரின் முகமும் மனதில் வந்து போக எனக்கு அவர்கள் அளவு இவளையும் அந்த ஒரு நாளிலேயே பிடித்துப் போனது. Mr. பொன்னுத்துரை பள்ளுப் போன நாய் கடிக்கத் துரத்துவது போல கருவிக் கொண்டு போனார். வாசல் கதவுக்கு அருகே இருந்த மேசையின் கதிரைக்குள் தன் உடலை கஸ்ரப்பட்டுத் திணிச்சுக் கொண்டு, மிகப் பாரமான தன பெரிய வயிற்றைத் தூக்கி மவனமாக மடியில் வைத்து அதை வெள்ளை ஷர்ட் போட்டு மறைத்து நீலக் காற்சட்டையின் இடுப்புப் படி கூட தன வயிற்றை அழுத்திவிடாமல் அதில் தோள் ப ட்டி சொருகி சின்னப்பிள்ளைகள் சண் சூட் போட்டமாதிரி அதை தொழில் கொழுவிக்கொண்டு இருந்த இடத்தில் இருந்து கடமை உணர்ச்சியோடு நித்திரை கொண்டு கொண்டிருந்த Mr. குணசேகர தலையை கூட நிமிர்த்தி நித்திரை கலைக்க விரும்பாமல் வெறும் அரைக் கண் மட்டும் திறந்து பற தெமில என்று புறுபுறுத்து தன நிறத்தை காட்டி விட்டு மீண்டும் தூக்கத்துள் தொலைந்து போனார் .
.
அதன் பின் அந்த இடத்தில் எதுவும் பிடிக்கவில்லை. வேலையில் கவனம் செலுத்த முனைந்து முகத்தையும் முழுக் கவனத்தையும் அதுக்குள்ளேயே பதித்துக் கிடந்த போது " காம கண் ணத்த? "(சாப்பாடு சாப்பிடவில்லையா?) கேட்ட இனிமையான குரலில் முகம் நிமிர்த்திய போது அதை விட அழகான புன்னகையில் அவள் நின்றாள். "மம சஜீவ" ( நான் சஜீவ) என்றாள் மிக நெருக்கமாக. கை பற்றி "(என்டகோ)" வாங்கோ என்று இருவரையும் அழைத்துச் செல்கையில் ஒரு வானத்துத் தேவதை இறங்கி வந்து பூமியில் நடப்பது போல் இருந்தது அவ்வளவு அழகாக இருந்தாள். நடை கூட மிதப்பது போல் மென்மையாக ஒரு வித்தியாச அழகாக.
.
அவர்கள் எங்கள் முதுகுப் பக்கமாக இருந்த export டிபார்ட்மெண்ட். அவர்களோடு கூடி இருந்து சாப்பிட்டபோது அவர்களுக்குள் எங்கள் டிபார்ட்மெண்ட் இற்குள் இல்லாத நெருக்கமும் இறுக்கமின்மையும் நிறைந்திருக்க சிரிப்பாக, நட்பாக , கல கல என்று இருந்தார்கள். அவர்களின் boss அவர்களோடும் எம்மோடும் மிக இயல்பாக நட்பாக இருந்தது பிடித்திருந்தது. யாரையும் பற்றி குறை சொல்லாமல் எக்கவுன்ஸ் டிபார்ட்மெண்ட் staff பற்றிய பின்னணிகள் கொஞ்சம் கொஞ்சம் சொன்னார்கள். அவர்களின் இறுக்கங்களுக்குள் இறுக்கி வைத்து வெளியே புன்னகைக்கும் மன வேதனை புரிந்தது. "so sweet you are" என்று கண்பார்த்துச் சிரித்த ப்ரீத்தியை " like a baby" என்று கன்னம் கிள்ளிய நிரஞ்சலாவை எல்லோரையும் பிடித்தது
.
வேலை முடிந்து கூடி நடந்த போது சற்று யோசனையாக தெரிந்தாள் நிலானி. காரணம் கேட்காமல் கூடவே நடந்த போது "office பிரச்சனை அங்கேயே விட்டிடணும். வெளியே அதைக் காவி வந்தால் வாழ முடியாது" என்றாள் திடீர் என்று. "ஆனாலும் கஸ்ரமா இருக்கு நிலானி" என்றேன். முகத்துக்கு நேர் தீர்க்கமா பார்த்தாள். பின் நிதானமாக சொன்னாள் "நான் முதல் வேலை செய்த இடத்தில் எவ்வளவு சவாலுக்கு முகம் கொடுத்தேன் தெரியுமா?" என்றாள். " Mr.பொன்னுத்துரை மாதிரி அதிகமா அங்கு" என்றேன்.
.
என் வயது தான் இருந்தாள். அனால் குழந்தையைப் பார்ப்பது போன்ற பாவனையில் என்னைப் பார்த்து, "பெரிய ஒரு கிரிமினல் குற்றத்தில் மாட்ட இருந்தேன் அது தான் office மாறினேன்" என்றாள். திடுக்குற்று அதிர்ந்து பார்த்தபோது அமைதியாய் புன்னகைத்தாள். எதிர்பாராத நேரத்தில் சரேலென எங்களை உரசிக் கொண்டு வந்து நின்ற காரின் Ac கதவைத் திறந்து " get in " நிலானி என்று உரிமைத் தொனியில் அதிகாரமாய் அவன் சொன்ன போது திடுக்குற்று, அதிர்ந்து வெறித்துப் பார்த்த நிலானியின் கண்கள் கலங்கி முகம் வெளிறி , உதடு துடித்துக் கொண்டிருந்தது.
.
(நான் நடந்த பாதையில் வந்து இணைந்து கொண்ட அவள் நடந்த முட்பாதையை...தொடரவா?... )
.
மாலினி

நான் நடந்த பாதையிலே.. 5

எல்லாமே ஒரு அட்ஜஸ்ட்மெண்ட் தான்

இழுக்க இழுக்க நீண்டு கொண்டே போன பாஞ்சாலியின்ர சேலை போல இருந்தது final எக்கவுண்ஸ் . " இதில வேலை செய்து வெற்றிக் கொடி நாட்டினாற் போல தான்." ஒரு மண்ணும் ஒழுங்கா தலையில் ஏறாமல் முணு முணு த்த என்னை பக்கத்தில் இருந்த சுகந்தி பார்த்துச் சிரித்து " இது தானே ஆரம்பம் போகப் போக பூதம் கிளம்பும்" என்று சினிமா வில்லன் மாதிரி வில்லங்கமா வசனம் பேசினாள். எக்கவுன்ஸ் பேப்பர் புரட்டிப் பார்த்ததிலேயே வியர்த்து வடிய,
.
tea time என்று தேநீர் காவி வந்த பையன்கள் இன்னும் பயமுறுத்தினார்கள். பந்திக்குப் பரிமாறுவது போல் ஒருவன் பெரீஈஈஈஈய மரத்தட்டத்தில் கப் அண்ட் சோஸர் காவிக் கொண்டு வர, பக்கத்தில் ஒருவன் அதிலிருந்து ஒவ்வொரு மேசைக்கும் ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டு , சிரிப்பும் இல்லாமல் ,கதையும் இல்லாமல் , கடு கடு என்று கடுக்கா புளி நிறத்திலும் வர, கணபதிப்பிள்ளை என்று பெயரும் சொன்னார்கள். பின்னால் ஒருவன் வாளி போல் இரு கைகளிலும் பெரிய கேற்றல்களை பாரமாக தூக்கிக் கொண்டு, ஒவ்வொரு மேசையாக ஊற்றிக் கொண்டு வந்தான்.
.
ஊரில் பத்துப் பதினோரு மணிக்கு மாட்டுக் கொட்டிலுக்குள் ஒவ்வொரு மாட்டுக்கு முன்னாலும் வாளி வைச்சு வைச்சு கிடாரத்தில் இருந்து களனி அள்ளி ஒவ்வொன்றுக்காக ஊற்றுவது நினைவு வந்ததை தவிர்க்க முடியாமல், அவசரமாய் ஒரு சந்தேகம் வர , குனிந்து பார்த்தேன். எனக்கும் எல்லாருக்கும் இரண்டு கால்கள் மட்டும் தான் இருக்க , சந்தேகம் தீர்ந்த திருப்தியில் நிம்மதியா நிமிர்ந்தேன்.
.
அதற்குள் நிலானி எட்டிப் பார்த்து "எக்கவுன்ஸ் டிப்பார்ட்மெண்ட் staff மட்டுமே இவ்வளவு என்றால் ஐந்து கொம்பனி workers உம் சேர்த்தால் அரைவாசி இலங்கை இதுக்குள்ள தான் கிடக்குமோ?" என்று அந்த அதி முக்கியமான கேள்வியை கேட்க, அவசரமாக திரும்பி" இல்லை இப்ப புதுக் கட்டிடம் கட்டுப் படுகுது அதுவரைக்கும் export டிபார்ட்மெண்ட் உம் இங்கே ஷிப்ட் பண்ணி இருக்கிறதால தான் இவ்வளவு நெருக்கம் அவர்கள் போக இங்கே நெருக்கம் இராது." என்று தெளிவான ஆங்கிலத்தில் உறுதியாக சொன்ன ருவைஸா இந்தக் கம்பனியின் பேரபிமானி என்பதை சொல்லாமல் சொன்னாள்.
.
export டிபார்ட்மெண்ட்! அது வேறா என்று குழப்பத்தோடு பார்க்க , எங்களுக்கு முதுகுக்கு பின்னால் முதுகைக் காட்டிய படி இன்னொரு கூட்டம் இருந்தது . போர்க்கால பள்ளிக் கூட நெருக்கியடித்த வகுப்பறை மாதிரி. அவர்களுக்கு முகத்தைக் காட்டிய படி அங்கேயும் ஒரு வாத்தியார் இருந்தார். உண்மையாகவே வேடிக்கை பார்த்தே சோர்ந்த களைப்பைக் களைய தேத்தண்ணி போல இருந்ததை எடுத்து வாயில ஒரு மிடறு உறிஞ்ச...... கடவுளாணை இப்படி ஒரு சொர்க்க பானத்தை நான் வாழ்க்கையில் எப்போதும் அருந்தியதே இல்லை. வாய்க்குள் கிடந்ததை விழுங்க முன்னம் , அவசர அவசரமா மேசையில் கிடந்த புத்தகம் எல்லாம் ஒதுக்கி , தலையை மேசைக்குக் கீழ் குனிந்து, மிக அவதானமாக அந்த அமிர்தத்தை விழுங்கினேன். ஒரு மிடறு உள்ளே போய் ஒரு லீட்டர் வெளியே வந்து விடுமோ என்ற பயத்துடன்.
.
tea time இல் Mr.K வெளியே போனார். கொலைப்பசியில் கவளம் கவளமா அள்ளி விழுங்கிற மாதிரி, கொலை வெறியோடு அவசர அவசரமா வார்த்தைகளை கடித்து விழுங்கினாள் சுகந்தி. இந்த அலுவலக முதல் நாள் நாடகத்தில் அவள் தான் எனக்கும் நிலானிக்கும் பொழுது போக்குக் கதாபாத்திரம் அந்த நேரம் வரை.

.
கதவு திறந்து ஒரு வேக வீச்சில் "மெய்யே பூமா உங்கட கணக்கர் ரெண்டு சிங்களப் பெட்டையளை எடுத்திருக்கிறாராம். என்ன புதினம், இவருக்கு என்ன மண்ணை விளங்கப் போகுது. எப்பிடி கதைக்கப் போறாராம் அவளவையோட. பல்லைக் காட்டிக் கொண்டு வீணி வடிக்கப் போறாரே?" என்று வாசல் திறந்த போதே கேட்டுக் கொண்டு புயல் அடித்த வேகத்தில் நுழைந்த மனிதன் ஒரு அலுவலகத்துக்கு முழுவதும் பொருந்தாத பேச்சவார்த்தையில் , அரசாங்க வேலை வயதைத் தாண்டி இருந்தார். இருந்தவர்கள் எல்லாம் இழுத்து மூடி குளிருக்கு குறாவும் அளவு பேசும் போதெல்லாம் வாயாலேயே சாரல் அடித்தார்.
.
தர்மசங்கடமாய் எங்களையும் அவரையும் மாற்றி மாற்றி பார்த்த பூமா முகத்தில் அப்பாவித்தனத்தை பூசிக்கொண்டு , அதன் மேல் நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் வைத்துக் கொண்டு , அந்த அடையாளத்தை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தாள். அப்படி ஒரு மனிதர் அங்கு நிப்பதே தெரியாத மாதிரி , தூக்கி வீசின பொருளை மதியாத மாதிரி அவரவர் இருக்க, இன்னும் கடு கடு என்று வாய்க்குள் பொரியத் தொடங்கிய சுகந்தியும் அவரின் தரம் உணர்த்தி விட, எவரும் பேசாமல் இருந்தும் அவர் பேசி ஆராய்ந்து கொண்டிருந்தார் எங்களை.
.
குடு குடு என்று அதகடியில பறக்கிற காகம் மாதிரி ஒரு நடை, அதுக்கேற்ற விளக்கமா எழுத முடியாத ஒரு வில்லங்க பார்வை. " என்ன சுமதி நல்ல சின்னப் பெட்டையளா , சிரிப்பும் செழிப்புமா எடுத்து வைச்சிருக்கிறார் கணக்கர் நீ கவிழப் போறாய் " வயதுக்கு ஒவ்வாத பேச்சில் வயதின் பண்புகாத்தார். நெருப்பாய் முறைத்தாள் அந்த சுமதி. கோபம் வந்தது எனக்கு, கஸ்ரப்பட்டு அடக்கி "நாங்கள் தமிழ் தான் " என்றேன் கஸ்ரப்பட்டு உருவாக்கிய புன்னகையுடன். மேலும் அந்த மனிதன் கதைப்பதை பொறுக்கும் பொறுமை இல்லாமல்.
.
ஓடி வந்து பக்கத்து கதிரையை, வலு பக்கத்தில் இழுத்துப் போட்டு பக்கத்தில் நெருக்கிக் கொண்டு அமர்ந்தார். மூக்குப் பொடி நாத்தம் மூக்கைப் புடுங்கியது. வாய் திறந்த போது அடை மழை சாரல் அடித்தது. அதை விட இடிபடும் அளவு கிட்ட வந்து முகத்துக்கு கிட்ட நெருக்கி பிடிச்சு கதைக்க தொடங்க, எப்போதும் குடும்பத்தின் யாராவது ஒருவரின் கை அணைப்புக்குள் இருந்து கொண்டு , அந்நியர்களை தள்ளி வைத்தே பழக்கப் பட்ட எனக்கு முதல் முறை இதயம் இங்கிதம் இல்லாமல் வெளியில் வந்து அடித்துத் துடித்தது.
.
"இஞ்ச பாரும் வேலையில முன்னேறுறது எண்டால் முதலில காக்கா பிடிக்கத் தெரிய வேணும். பிறகு முதலாளிய கைக்குள்ள போடத் தெரிய வேணும். உதெல்லாம் இந்தக் காலப் பெட்டையளுக்கு சொல்லித்தரத் தேவையில்லை "என்ற போது , இப்படி மனிதன் இப்படி வார்த்தை , நான் சந்திப்பது வாழ்வின் முதல் தரம் என்பதால் பேச்சு வரவில்லை எனக்கு. "இப்ப என்னை பாருமன் எனக்கு ஊரில குடும்பம் இருக்கு. இஞ்சையும் ஒருத்தியை கீப்பாக வைச்சிருக்கிறன் இதெல்லாம் ஒரு தவறும் இல்லை." எனக்கு மூச்சு விடுவதே சிரமம் போல் நடுங்க தொடங்கியது. "நான் என்னைப் பற்றி சொல்லிப் போட்டன் நீர் மறைக்காமல் எனக்கு உம்மை பற்றி சொல்லும். எல்லாம் ஒரு அட்ஜஸ்ட்மெண்ட் தானே . உமக்கு இந்த office இல நெருங்கின ஆள் யார்? ஆரைப் பிடிச்சு வந்தனீர் " அதிர்ந்து அடக்க முடியாமல் நான் அழத்தொடங்க,
.
"அதை நான் சொல்லுறன் அப்பா. நீங்கள் சொல்லித் தந்த மாதிரி நான் இன்ரவியூக்கு வரும்போதே கதைச்சு, சிரிச்சு , மயக்கி ,மந்திரிச்சு வலையில் விழுத்தி வேலைக்கு எடுபட்ட மாதிரித் தான், அவவுக்கும் சொல்லிக் குடுத்தனான்." நிலானி office முழுக்கக் கேட்கும் சத்தமா சொன்ன போது, office அதிர்ந்து நிமிர, Mr. பொன்னுத்துரை கதிரையை தள்ளி விழுத்தி, துள்ளி எழும்ப, Mr.k தனது வழமையான அன்ன நடையில் அவசரமில்லாமல் உள்ளே வந்து அவசரமாய் அதிர .......................
.
(அடுத்த பதிவில் தெளிவோமா) மாலினி

நான் நடந்த பாதையிலே... 4


பேசியது நான் இல்லை


எழுந்து சென்று Mr. k இன் மேசையில் இருந்த ரிசீவரை எடுத்து " ஹலோ" வினேன். எதிர்ப்புறத்தில் சிங்களத்தில் பேசிய ஆண்குரல் எனக்கு அறிமுகமானதல்ல . சற்றுக் குழம்பி விட்டு " May I know who is speaking there?" என்றேன். "மம ஹேமந்த. நிலானித ?" ( நான் ஹேமந்த நிலானியா?) என்றது எதிர் முனை. சற்றுக் காத்திருக்கச் சொல்லி நிலானி யைக் கூப்பிட்டு றிசீவரை அவளிடம் கொடுத்து விலக , "ஓ நிலானியா நான் மாலினி என்று நினைத்தேன். சொறி" என்று எப்போதும் புன்னகைக்கும் உதடுகளால் கண்களில் மன்னிப்புடன் மெதுவாக சொன்ன Mr. k இற்குள் இல்லாத பதவிக்கான அதிகாரத் தொனி ஏனோ ஒரு வித பரிதாபத்தை ஏற்படுத்துவது போல் இருந்தது எனக்குள்.
.
என் இடத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கையில் " காது மட்டுமா சரியா கேட்காது. காதில கேட்கிற சத்தமா கத்திச் சொன்னாலும் எதுவும் புரியாதே பூனைக் கண்ணனுக்கு" என்று கோபமாய் முணுமுணுத்த சுமதியின் கண்களில் கோபத்துக்குள் மெதுவாய் காதல் எட்டிப் பார்த்தது. பலர் உதடுகளில் அவர் பெரிதாக எதோ தப்பை செய்து விட்டது போன்ற கேலிப் புன்னகை இருந்தது. அவரின் சங்கோஜமான நடைக்குப் பின்னான காரணம் ஒருவித தாழ்வுமனப்பான்மை போல மெல்லப் புரிவது போல் இருந்தாலும், இவர்கள் ஏன் ஒற்றுமையாக, உல்லாசமாக, போலிச்சண்டைகளுடன் உல்லாசமாக என் பழைய ஆபீஸ் இல் இருந்தவர்கள் போல் இல்லை . வேலைகளையும் தாண்டி என்னால் இங்கு நிலைத்திருக்க முடியுமா? இப்படி சூழல் பைத்தியமாக்கி விடுமே என்னை என்று தோன்றியது.
.
கதைத்து விட்டு டெலிபோனை வைக்கும் போதே முன்வரிசை எக்கவுண்டன். சிவநாயகி Mr.k இன் மேசைப் பக்கம் பார்த்து முறைத்துக் கொண்டே. " நீங்கள் என்னுடைய staff. உங்கட இண்டர்காம் இற்கு பாஸ் பண்ணுப்படாத கால்ஸ் என் telephone இல் ரிஸீவ் பண்ணலாம் நிலானி" என்றாள். உன் சிம்மாசனத்துக்கு நிகரான சரியாசனம் எனக்கு வேண்டும்`` என்ற போராட்டத்தின் உட் கருத்தை முகமும் வார்த்தைகளும் Mr. K யை நோக்கி பிரதிபலிக்க எனக்கு இங்கு நெருக்கம் வராவிட்டாலும் சுவாரசியமான கதாபாத்திரங்களோடு சோர்வில்லாமல் நேரம் நகரும் என்ற நிம்மதி வந்தது.
.
தன் இருப்பிடம் நோக்கி நடந்த நிலானியை இடைமறித்து அறிமுகமற்றவளிடம் முதல் நாளே இங்கிதமற்று "யார் போனில் " என்று நட்புப் போல் கேட்ட சுபாஷினியின் கேள்வி பலரிடமும் இருந்ததை நிமிர்ந்து ஆவலாய் பார்த்த அவர்கள் முகங்கள் அவர்களின் அடையாளங்களை என்னுள் பதிவிட, எதிலும் பட்டுக் கொள்ளாமல் லெட்ஜரில் முகத்தைப் புதைத்துக் கொண்டு யாரையோ பற்றிப் புறுபுறுத்துக் கொண்டு வேலையில் ஆழ்ந்திருந்த சுகந்தியை எனக்குப் பிடித்திருந்தது.
.
டெலிபோனில் யார் என்று கேட்டவளுக்கு இயல்பாக " firend" என்று சொன்ன நிலானியின் பதிலில் சற்று நம்பிக்கை இன்மையும் ஏமாற்றமும் எட்டிப் பார்த்த முகங்களை கணத்துள் படித்துக் கொண்டு " boy firend" என்று சற்று சத்தமாக சொல்லி அவர்களின் எதிர்பார்ப்பை திருப்தியில் நிறைவேற்றிய நிலானி என்னைக் கடக்கையில் "என் பழைய office எக்கவுண்டன். மிச்சம் பிறகு சொல்லுறேன் " என்றாள் மெதுவாக. "முக்கியமில்லை நிலானி. நான் யாரிடமும் அவர்களின் சொந்த விடயம் கேட்கிறதும் இல்லை அவர்களின் முதுகுக்கு பின்னால் ஆராய்வதும் இல்லை. எனக்கு firend என்றால், சுயநலத்துக்காக , காரணத்தோடு நெருங்கி நட்பை கேவலப் படுத்தாமல் இருந்தால் மட்டும் போதுமானது". புன்னகைத்தேன். குனிந்து முகத்துக்கு நேராய் பார்த்து புன்னகையோடு சொன்னாள் "என் நல்ல firend என்றால் நான் வெளிப்படையா இருந்து தானே பழக்கம். I like you மாலினி".
.
நிலானி தன் இடத்தில்அமர்ந்த போது லெட்ஜரில் இருந்து முகத்தை எடுக்காமல் "இதுகளின்ர கேள்விக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லத் தேவையில்லை விடுப்பு விண்ணாணத்துக்குத் தான்வேலைக்கு வாறதுகள்" என்ற சுகந்தி வார்த்தைகளில் துப்பியது அந்த staff மீது மட்டுமான வெறுப்பில்லை போல் இருந்தது. அவளது முகத்திலும் அந்த வயதுக்கான உற்சாகம் ,மலர்வு இருக்கவில்லை. வெறுப்பாய் கடுகடுப்பாய் இருந்தாலும் அவள் போலி இல்லாதவள் என்பது தெரிய மனம் இலகுவாக அவளை ஏற்றது. "இனி வருவான் அவன் மிச்ச விடுப்பு பிடுங்க" புறுபுறுத்துக் கொண்டே திரும்ப வேலைக்குள் மூழ்கினாள்
.
//இனி வருவான் அவன் மிச்ச விடுப்பு பிடுங்க"// என்ற அடைமொழிக்குள் யாரோ ஒரு வில்லங்கம் அறிமுகமாகப் போகிறது என்று நானும் நிலானியும் நிமிடம் நிமிடமாய் எதிர்பார்ப்பும் சற்று வேடிக்கையான மனநிலையுமாகக் காத்திருக்க........ வந்த மனிதன் நிலானியை அத்தனை தூரம் கோபத்தின் உச்சியில் வெடிக்கவைத்து, staff அத்தனை பேரையும் அதிரவைத்து, என்னை இந்த office வேண்டவே வேண்டாம் என்று அழ வைப்பான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை .
.
(வந்தவரை சந்திக்க அடுத்த அத்தியாயத்துக்கு நடப்போமா நட்புக்களே ) மாலினி

நான் நடந்த பாதையிலே... 3

குழப்பங்கள் இனிதே ஆரம்பம்


பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். பொன்னான ஒரு புதன் கிழமை முதல் திகதியில் புது அலுவலகத்தில் பொன்னடி பதிக்கும் திருநாள் இனிதே குழப்பங்களோடு ஆரம்பமானது. 
.
அப்போது தலைநகரத்துத் தனி வீடுகளில் காலை ஆறுமணிக்குப் பிறகு எட்டுமணி வரை குழாய்களில் நூல் போல ஒழுகும் தண்ணியை பொறுமையாக அரைமணி நேரம் ஒரு வாளி தண்ணி சேகரித்து, பொறுமையே இல்லாமல் அவசரமாக ஐந்து நிமிஷத்தில் காக்கா குளியல் குளித்து, அதற்குள் ஐம்பது தரம் யாழ்ப்பாணத்தில் வாளி வாளியாய் அள்ளி ஊற்றிய தண்ணீர் கனவுகளில் கண்ணீர் வராமல் வேதனைப்பட்டு, அவதி அவதியாய் ஆயத்தமாகும் போதே அடைத்து மூடிய வீடுகளுக்குள் தண்ணீரை விட வியர்வை அதிகமாக குளிப்பாட்டி விடும். 
.
அப்படி வியர்வையிலும் குளித்து ஆயத்தமாகி வெளியே வந்து பஸ்சுக்கு ஓடுகையில் சுள் என்று நெற்றியில் அடிக்கும் குளிர்காற்று வீசாத காலை வெயில் மேலும் முகத்தில் வியர்வையாகி ஒழுக ..... எப்போதும் அப்படித் தான். 
.
ஆனால் இந்த பொன்னான புதனுக்கு முதல் நாள் வரை, வியர்வையும் , வெக்கையும் , தூசும் வீட்டு வாசலோடு முடிந்து விடும். வாசலால் இறங்கி வீதிக்கு வர office வான் வரும் . உள்ளே ஏறியதும் உலகத் தொடர்பை அறுத்த கருத்தக் கண்ணாடிகளுக்குள் ஏசி நடுங்க வைக்கும். பிரிட்ஜ் இல் வைத்த ஆப்பிள் போல அசங்காமல் கூட்டிச் சென்று கசங்காமல் office வாசலில் எல்லோரையும் பெரேரா இறக்கி விடும் வரை வெளிச்சம் ,வெயில் , தூசு தெரியாத ஒரு உலகம். office வாசலில் இருந்து உள்ளே போகும் வரை சின்னதா தங்கமஞ்சளாய் மின்னும் வெயில். உள்ளே போனதுமே ஏசி இன் கும் என்ற இரைச்சலில் , சுவர் மூலையில் இருந்து மெதுவாக வழியும் இசையில், மெதுவா சுவாசம் வருடும் எயர் ப்ரெஷனரின் றோஸ் மணத்தில் , சிரித்த சிநேகமான முகங்களில் ஒரு சொர்க்கத்துக்குள் நுழைந்த இதம் இருக்கும். பழைய office. 
.
வெயில் நெற்றியை சுட்ட , வியர்த்து வழிந்து உடம்பில் ஒட்டிக்கிடந்த உடுப்பில் மனம் அருவருத்து வழிந்த, அதனோடு வாகனப் புகையும் தூசியும் ஒட்டிக் கொண்ட காலையில், பஸ்சுக்கான காத்திருப்பிலேயே சூரிய வெப்பத்தை விட அதிமா கொதி ஏறிக் கிடந்தது மனம். ஒவ்வொரு பஸ்சும் இந்தா அந்தா என்று எதோ இப்பவே பிரசவிக்கப் போற பெண் மாதிரி முக்கி முனகிக் கொண்டு வந்து ஒரு பக்கம் சாய்ந்து நின்றும் எதுகும் பிரசவிக்காமல் இன்னும் இன்னும் உள்ளே மனிதர்களை ஏற்றிக் கொண்டிருந்தது. 
.
போதாக்குறைக்கு பம்பலபிட்டிய , கொல்பிட்டிய, கோல்பேஸ், பிட்டகொட்டுவ என்று கூவிக் கூவி மினி பஸ்ஸின் வயிற்றை தோல் வெடிக்கும் வரை நிறைக்கத் துடித்த மினி பஸ் சாரதிகள். ஒவ்வொரு பஸ்ஸாக வியர்த்த முகத்தில் வாரியிறைத்த தூசு. கண்மை கரைந்து, face கிரீம் இல் குழைந்து , லிப்ஸ்டிக் இல் கலந்து வடிய, பஸ்சுக்கு காத்து நின்ற நட்பென்ற பிரகிருதி ஒன்று " ஏண்டி சும்மாவே பிசாசு போல தானே இருப்பாய் அப்புறம் எதுக்கு மினக்கெட்டு பிசாசு வேஷம் போட்டிருக்கே" என்று கிண்டலடித்து கொதி ஏற்ற " இருக்கிற கொதியில .. நீவேற உருப்படியா உங்கட office போற ஐடியா இருந்தா தள்ளிப்போய் நில்." நான் உதட்டுக்குள் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப,..,... 
.
"உன்ர நீட்டுக் காலால எட்டி உதைச்சாலும் உதைப்பாய் கழுதை. கவனம் ரைட் ஸ்கேர்ட் கிழிஞ்சிடும்" என்று இளித்துக்கொண்டே ஓடிப்போய், வந்து அரைகுறையாய் நின்று வெளிக்கிட்ட பஸ் பூட்போர்ட் இல் குரங்கு போல் தாவி தொங்கியது. கவலையா இருந்தது யாழ்ப்பாணத்தில் பள்ளிக் காலம் முழுக்க சைக்கிள் ஓடி சாகசம் செய்தது தவிர இந்த பஸ் பயணம் எல்லாம் அதிகம் பழக்கமும் இல்லை. ரசிக்கவும் இல்லை. கொஞ்சம் இதுவும் கற்றிருக்கலாமோ என்று தோன்றியது. 
.
நேரம் போகப் போக இனி காத்திருக்கேலாது என்ற நிலையில் எதோ வந்த ஒரு பஸ்சுக்குள் ஒரு மாதிரி திணிந்து , கசங்கி , உள்ளே நுழைந்து வேண்டுமென்று , வேண்டாம் என்று இடித்த இடி மன்னர்களின் இடி எல்லாம் தாங்கி, இறங்கும் இடம் வரை நெருக்கம் குறையாமல் பயணம் செய்து , ஒரு நாள் முழுவதும் குத்துச் சண்டைப் போட்டியில் குத்து மட்டுமே வாங்கியது போல் களைத்து, கசங்கி, நொறுங்கி , இறங்கும் இடத்தில் வெளியே பிதுங்கி விழுந்து கடந்து போன பஸ்ஸை தனிய நடந்து கொண்டே பைத்தியம் மாதிரி திட்டி office மாறிய குற்றத்துக்கு என்னையே குத்திக் கொலை செய்யும் ஆத்திரத்துடன் புது office வாசலுக்குப் போன போது மூச்சு வாங்கியது. 
.
ரிஷப்ஷனில் எனக்கு முதலே நிலானி காத்திருந்தாள். நட்பாகப் புன்னகைத்தாள். பத்து நிமிடம் வரையான காத்திருப்பின் பின் Mr. k வந்து உள்ளே அழைத்துக் கொண்டு போனார். அவருக்குப் பின்னால் நடக்கும் போதே இவ்வளவு நேர எரிச்சல் அடங்கி சிரிப்பு வரத் தொடங்கியது. அப்படி ஒரு பிரத்தியேக நடை அவருடையது எந்தப் பக்கமும் ஆடாமல் அசையாமல் ,அதிகம் கைவீசாமல் , காலுக்கும் நிலத்துக்கும் நோகாத, மணவறைக்கு வரும் பெண் கூட நடக்காத ஒயில் நடை அது . "இந்த ஒயில் மன்னன் குயில் போலவும் கூவுவாரோ " என்றேன் மெதுவாய் நிலானியிடம். குப் என்று பொங்கிய சிரிப்பை அவள் கைகளால் பொத்தி அடக்க, வந்த சத்தத்தை தும்மல் என்று நினைத்து . " are you sick நிலானி ?" என்று Mr. k கேட்ட போது இந்த மனுஷன் அப்பாவியோ என்றும் தோன்றியது. 
.
எக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் இற்குள் நுழைந்த போது ஒரு office இற்குள் நுழைந்த உணர்வில்லாமல் இடைவெளியே இல்லாமல் மேசை போட்டு எல்லாத்தையும் எல்லாரும் நிறைத்திருந்தார்கள். பள்ளிக் கூடத்தில் ஆசிரியருக்குப் போடுவது போல் Mr. k இன் மேசை staff அனைவரையும் பார்த்திருக்க, முன் வரிசையில் புன்னகையாய், வேண்டாவெறுப்பாய், சுடுதண்ணி குடிச்ச நாய் போல், எதற்கும் சம்பந்தமே இல்லாத கனவுலகில் இருப்பது போல், கொம்பனியையே தலையில் தாங்கும் தீவிரத்தில் ஐந்து பெண் எக்கவுண்டன் களும் ஐந்து விதமாக இருந்தார்கள். அடுத்த வரியில் நாங்கள். 
.
மூன்று பேர் இருந்தார்கள் எனக்கும் நிலானிக்குமான மேசை மட்டும் மனிதர்கள் இல்லாமல் மேசையின் நீளமளவு விரிந்த பக்கங்கள் நிறைந்து உயர்ந்த காஷ் புக் , அதன் ரெண்டு கரையையும் நிறைத்த லெட்ஜரும் ஜெர்னலும் (சத்தியமா இதுவரை வேலை செய்த இடத்திலும் audit இற்குப் போன இடங்களிலும் இப்படி புத்தகங்களை நான் காணவே இல்லை. ) நடுவில் பிரிண்ட் ரோலுடன் பெரிய கல்குலேட்டருமாக, வேலையைப் பயமுறுத்திய அடையாளங்கள். " இதில இருந்தால் எங்கட நெற்றியாவது வெளியே தெரியுமா?" என்றாள் நிலானி. திரும்பிப் பார்த்தேன் அடையாளம் தெரியாமல் புத்தகங்களுக்குக் கீழ் தெரிந்தாள் ஒருத்தி. புன்னகையே இல்லாமல் அன்னியமாகப் பார்த்தாள். எங்கள் பின்னால் இன்னும் வரிசைகள் நீண்டிருந்தன. 
.
Mr.k ஒவ்வொருவராக அறிமுகம் முடிந்து, கடந்த வருட final அக்கவுண்ட்ஸ் file தந்து "படிச்சுப் பாருங்க கொம்பனி நடைமுறை புரியும்" என்றார். விரித்து வேடிக்கை பார்க்க நேரம் நகர்ந்தது. நெஞ்சு மட்டும் புத்தகங்களைப்பார்த்த பதட்டம் குறையாமல் அடித்துக் கொண்டிருக்க, விண்ணாணம் கேட்க அடிக்கடி எங்கள் பக்கம் திரும்பிய முகங்களைப் பார்த்து நானும் நிலானியும் இரகசியமாக சிரித்துக் கொள்ள , அந்த டெலிபோன் வந்தது. 
.
மாலினி call for you. என்றார் Mr. k. அதற்குள் யார் ? யாருக்கும் நான் நம்பர் குடுக்கலையே குழப்பமாய் எழுந்து டெலிபோனை எடுக்கப் போக எல்லாக் கண்களும் விடுப்போடு என் பின்னால் நகர........
.
(அடுத்த அத்தியாயத்தில் பேசுவோமா? ....) மாலினி