Thursday, February 22, 2018

மெல்ல மெல்ல இனி எல்லாம் கதைப்பன்

'பாட்டியைப் பார்க்கப் போனேன்'



கடந்து கொண்டிருக்கும் வாழ்க்கை பற்றி நினைத்துப் பார்க்கும் போதுவாழ்க்கையில் நிரந்தரமான மனிதர்கள் என்று எவரும் தங்குவதில்லை. சில சம்பவங்களில்  தங்களை  எங்கள் நினைவுகளுடன்  வாழ வைத்துக் கொண்டு அவரவர்  தத்தமக்கான  பாதைகளில் பயணித்துக் கொண்டிருப்பார்கள் , அதையும் விடவும்   நமக்கு நெருங்கியோர்  என்று எண்ணுபவர்களை விட நாங்கள்  எண்ணியே பாராத வேறு மனங்கள்  சிலவேளை எங்களுக்கு  நிரந்தரமான இடத்தையும் சில சந்தர்ப்பங்களில்  தந்திருக்கும்

அது  பாட்டி படுக்கையோடு கிடந்த காலம்,  நான் ஒரு நீண்ட காலத் தூக்கத்தை முடித்துக் கொண்டு  அப்போது தான் படுக்கையிலிருந்து  எழுந்து  என்னைச் சுற்றிய உலகத்தை  உள்வாங்க  கைகால் அசைக்க முயன்று கொண்டிருந்த காலம்.

பாட்டியின் நிலை பற்றி தகவல் வந்தது. உடன் பார்க்கவேண்டும் என்ற  தூண்டல் எழுந்தது.  சில நிமிடங்கள் பாட்டி  பல சந்தர்ப்பங்களாக நினைவுகளில் வந்து போனா. கண்களில் நீர் துளிர்த்தது நெஞ்சடைத்தது.  சற்றைக்கெல்லாம்  நான் இரண்டையும் விழுங்கிக் கொண்டு வழமை போல  மறுபடியும் செய்து வைத்த சிலைபோலானேன். 

வழமை போல வார்த்தைகளால் உணர்வுகளைத் தட்டி , கைகளால் தோளைப் பற்றி   உலுக்கி என்னை விழிப்பு நிலைக்குக் கொண்டு வர முயன்றாள்  டானா.  எனக்கு அவளிடம் விடுபட்டு தனிமையில் எனக்குள் ஒடுங்குதலே  எப்போதும் போல அப்போதும் தேவையாக இருந்தது.

அனே  எப்போதும்  போல  தன்னோடு அணைத்துக் கொண்டாள். என்   இந்த விழிப்பு நிலைக்கான மூல காரணர்கள்  சிலரில் அவள் முக்கியமானவள்  என்பதால்  அவளது அணைப்பு, முகத்தை கைகளில் ஏந்தி வைத்து  உதடு துடிக்க கண்கலங்க எனது விழிகளை  ஊடுருவும் அவளது பார்வையின் கனிவு என்னை வாய்திறக்க வைத்து விடும் 
"பா..ட்...டி ...யை  பா..ர்..க்..க... வே..ணு...ம்  போ...லி...ரு....க்..கு"
என்றேன்.

நெஞ்சோடு  அணைத்துக் கொண்டாள்.
"போகலாம்"  என்றாள்.
"அதில்லை  பார்க்க வேணும்  மாதிரி  இருக்கு அவ்வளவு தான் "
"போலாம்" 
இல்லை எனத் தலையசைத்தேன். 
"ஆசை வரும் ஆனால்    எங்கும் போவதில்லை.  பழகி விட்டது "என்றேன்
"இப்ப தவறினால்  பிறகு நீ விரும்பினாலும் பார்க்க முடியாது "

"என்னை எப்போதும் கையோடவே கொண்டு திரிந்த மாமாவையும் பார்க்க விரும்பினேன் , பின் அவர் இறந்த போது நான் அருகிலும் இல்லைம தூரத்தில் இருந்த   நான் அழவும் இல்லை.  அவரிட படத்துக்கு விளக்கு வைத்து ஒரு நாள் வணங்கவும் இல்லை. அதற்கு  அனுமதிக்கப் படவும் இல்லை.  ஒரு ஆத்ம சாந்திப் பிரார்த்தனை  அவமதிக்கப்ப்படுமானால்  அதைச் செய்வதை  விட செய்யாமல் இருத்தல்  அந்த ஆத்மாவுக்கு  அதிக ஆறுதல்  தரும்  அப்படித்தான் நான் அப்போது எண்ணினேன் அதனால்   இயந்திரமாகத்தானே  இருந்தேன்.  அப்படித்தான்  பாட்டிக்கும்"  மனதுக்குள் வந்த வார்த்தைகள்  வெளியில் வரவில்லை.  அப்போது நான் அதிகம் கதைக்க மாட்டேன்.

"நீ போகிறாய்.  உன் பாட்டியைப் பார்க்கிறாய்  அது உன் உரிமை " என மனதுக்குள் திடமூட்டிய அனே  ஜெர்மானியப் பெண். 

"விட்டால்  நாளை நாளை என ஆறப்போட்டு  இறுதியில் அந்தக் கவலையையும் விழுங்கி  அழுத்துப் பட்டுக் கொண்டு இன்னும் அதிகமாய்  இறுகிப் போய்  இருப்பாய்  இப்பவே  வா  ரிக்கற் போட "என்றாள். 

"வீடு.....  எனக்குப் பொறுப்பிருக்கு."
"ஒரு கிழமை இரண்டு கிழமை நீ உனக்காக  வாழ்ந்தால்  வீடொன்றும்  முழுகிப் போய் விடாது."  என்றாள்

"இல்லை வந்து"

"இப்படியே உன்னை விட்டால்  இன்னும் ஒரு வருடமோ  இரண்டு வருடமோ தான்  நீ.  அதுக்குப் பிறகும்  அந்த வீடு இருக்கத் தான்  போகிறது  அதை நீ  நீயாக இருந்து தாங்கிப் பிடிக்க வேண்டும் என்றால்  வெளிக்கிடு "
 சற்று அதட்டலாகச் சொல்லி  ஆறப்போடாமல்  அன்றே இழுத்துக் கொண்டு போய் விமானச்சீட்டு வாங்கிக்கொண்டு பயணத்தை உறுதிப்படுத்திய   டானா  இத்தாலியப் பெண்.

"வீடு தானே  நீ போய்  வரும் வரைக்கும்  காலையும் மாலையும் நான் வந்து பார்த்துக் கொள்கிறேன்.  தேவையானவை எல்லாம்  செய்து வைத்து விடுகிறேன் . இடையில் ஏதாவது தேவையிருந்தால் எந்த நேரமாவது  தொலைபேசியில் அழைக்கச் சொல் " என்று தானாகவே முன் வந்து  தன் தோளில் என் கடமைகளை இருவாரம்  தாங்கிக் கொண்டு  தன் கனத்த மார்புக்குள் என்னை இறுக்கி அணைத்துக் கொண்டு "நான் இருக்கிறேன்  உன் சகோதரி போல"  என்று குரல் விம்மச் சொன்னவள்  ஆபிரிக்கப் பெண்.

பின் தான் எனக்குள் அந்த மாபெரும் கேள்வி பிறந்தது.  தனியாகப் போய் வர என்னால்  முடியுமா?

போர்க்காலப் பூமி எங்கும்  தனியாகவே  பயணிக்கப் பழக்கப்படுத்தப் பட்டவள்.  சிறுவயதில் இருந்து துணிவும்  தன்னம்பிக்கையும் தவிர  வேறு எதுவும் இறுதி வரை  உன்னுடன்  கூடவராது எனச் சொல்லி வளர்க்கப் பட்டவள். கொழும்புக்கும் யாழுக்குமான போக்குவரத்து  நெருக்கடிக் காலங்களில் குண்டு மழைக்குள் சிரித்துக் கொண்டே பயணம் செய்தவளான   எனக்குள் எழுந்த  அந்தக் கேள்வி எனக்கே அதிர்ச்சியாக இருந்தது.  ஆனாலும் என் நிலை  அப்போது அது தான்    இந்தக் கேள்வியோடு தான் நான் என் வைத்தியர் முன்  அமர்ந்திருந்தேன்  பக்கத்தில் என்னோடு கூட வந்த இவோன்  இருந்தாள் .

என் கைகளைப் பற்றிக் கொண்டு  எழுந்த என் வைத்தியர் 
"உன்னால் முடியும். இனி உன் எந்தப் பயணத்திலும்  உன்னைக் கைதியாக வைத்திருப்போரை துணைவர  அனுமதிக்காதே  அது உனக்கானபாதுகாப்பல்ல.  அவர்களின்  மறைக்கப்படும் இரகசியங்களுக்கான  பாதுகாப்பு  என்பதை  உணர். தனியாக  உன் நாட்டுக்குப் போ.  உன் மனிதர்களைப் பார். நீ  தைரியமாகத் திரிந்த இடங்கள் எல்லாம் உன்னைச் சிந்திக்க வைக்கும்  நீ யாரென உணர்வாய்  திரும்பி வரும் போது  உன்னில் சிறு பகுதியேனும் கண்டடைந்திருப்பாய் "   என்று தோளணைத்து  கைகளை   இறுகப் பற்றித் தந்த நம்பிக்கை,

ஒருவர் நிமிர்ந்தெழுவதற்கு கொழுகொம்பு கூட அவசியமில்லை. அவரின் திறமை தன்னம்பிக்கை மூலம் அது இயல்பாக நிகழ்ந்தேறி விடும்.  ஆனால் அடிபட்டு வீழ்ந்து விட்டவர்  எழுவதற்கு  நிச்சயமாக நம்பகரமான புரிதலோடு  உறுதியான அன்புள்ள கைகள்  தேவைப்படுகின்றன.  ஏனெனில்   தாக்கப்பட்ட இடம் அவரது  ஆத்மாவாக  இருக்கும்.  அது அனைத்து  மன உறுதிகளையும்  தகர்த்து விடும் . அப்படித்தான் தகர்க்கப்பட்டுக் கிடந்தேன். வீழ்ந்து கிடந்த  என்னை மீட்டெடுக்க  கரிசனையோடு நீண்ட கைகளில் தான் நான் அன்று கடவுளைக் கண்டேன்.  உறவு என்பது உதிரத்தின் வழியல்ல  உணர்தலின்  வழி அமைவதென உணர்ந்தேன்.  

என் தோட்டத்துச் சிறு மலர்கள் பற்றிய என் கனவுகள்,  அதற்காக வாழ்ந்தேயாக வேண்டும் என்ற பிடிவாதம் , உறுதியின் மொத்தவடிவமான பாட்டி சாயமுன்  என்னை அன்று  பயணிக்க வைத்தது.

நீண்ட காலத்தின் பின் என்னை நானாக உணரும் சூழல்  நிறையப் பதட்டம் இருந்தது.   என் இயல்புக்கு ஒவ்வாத அந்நிலையால்  என் மீது என் பொறுமை மீது எனக்கு அதிகம் வெறுப்பு  ஏற்பட்டது.

கட்டுநாயக்காவில்  இறங்கியபோது  சரளமாக எனக்குப் பேச முடிந்த என் நாட்டின்  மூன்று மொழிகளும்  என் நாவில் எழவில்லை டொச்  உம் இல்லை. வாசிப்பு  எழுத்து  வானொலி  தொலைக்காட்சி  மனிதர்கள் என எல்லாவற்றிலிருந்தும்  ஒதுக்கப்பட்டிருந்த என்னால் அப்போது  அந்தந்த நேர அவசியத்துக்கு அடிப்படைத் தேவைகளுக்கு  இயங்க முடியுமே தவிர வேறெதுவும் கதைக்க முடியாத   அழித்து விட்ட வெற்றுக் கரும்பலகை போல  மொழி மறந்த நிலை. 

வைத்தியரின் ஆலோசனைப்படி விமான நிலையத்துக்கு வரவேண்டாம் எனநான்  கட்டாயமாக மறுத்திருந்ததால், என்னவர்கள்  நாட்டை விட்டு அனுப்பிய போதிருந்த   பிள்ளை எந்த வெள்ளத்துக்குள்ளும் சுழியோடிக் கரைசேரும்  என்ற நம்பிக்கை  அவர்களுக்கிருந்ததால், அந்தப் பிள்ளை தொலைந்து போய்  விட்டது என்பது அறியாத  அவர்களும் யாரும் வரவில்லை. 

நீரில் வீழ்ந்தால் கையை காலை அடித்து  கரைஏறத்தான் முயல்வோம்  அப்படித்தான் அன்று  நான் கட்டுநாயக்காவில்  இருந்து  ரக்சி ஸ்ராண்ட் தேடித் பிடித்து  என் பலவீனத்தை  உள்ளே மறைத்துக் கொண்டு தாறுமாறா  மூன்று மொழிகளிலும் தடுமாறி, நாட்டை விட்டுப் போய்  காலமாகி விட்டதால் மொழி மறந்து போய்  விட்டதென  நடித்து  அதற்குள் கொஞ்சம் கருணையான பார்வையோடு  தெரிந்த ரக்சிக் காரரைத் தேடிப் பிடித்து மாமா வீடு சென்று  சேர்ந்ததும்.

பேச்சற்ற  என் விறைத்த  நிலையை பயணக் களைப்பு  என எண்ணிக்  கொண்டார்கள்.    விடியக் காலையில்  நிறைய  நல்லெண்ணையும்  சின்னவெங்காயமும் கத்தரிக்காயும் முட்டையும் போட்டுப் பொரித்து  அதற்குள்  சிவத்தப்பச்சயரிசி மாவும் உளுத்தம் மாவும்  கலந்து புட்டவித்து  நல்ல சூட்டோட  பிசைந்து  "சாப்பிடு  ராவு  ராவா  மூச்சு விடாத  வரட்டு  இருமல்"  என்று மாமி கொடுத்த  சாப்பாடு  நீண்ட வருடத்துக்குப் பிறகு அக்கறையும் அன்புமாகப் பரிமாறப்பட்ட உணவு.  கண்ணீர்  வந்தது. 

வெள்ளவத்தை  எனக்கு மிகவும் பழக்கமான இடம் வெள்ளவத்தை  மார்க்கெட்டில் பேரம் பேசி  காய்கறி வாங்கப் பிடிக்கும்  அதனாலேயே  ஒரு காலத்தில் மார்க்கெட்டில்  இருந்த எல்லோரோடும் நல்ல நட்பிருந்தது.  வெள்ளைவத்தை  மார்க்கட்  காரன் ஒரு நாளைக்கு இவளைத் தத்துக் கேட்டு  வந்து நிக்கப் போறான்  என்று பலரும் கிண்டலடிக்கும் அளவு அவர்களோடு அன்னியோன்னியம் இருந்தது.  போனால் நங்கி  எனக் கூப்பிட்டு  பிடித்தவைகளை  அவை எவ்வளவு அருமையாக இருந்த போதும்எடுத்து வைத்துத்  தரும் சில வியாபாரிகள்  இருந்தார்கள் .  அவர்களை அந்த இடங்களைப் பார்க்கவேணும் எனத் தோன்றியது   அந்த மூலைக் கடையில் கச்சான் வாங்கும் ஆசை வந்தது 

அவர்கள் அறிந்த எனக்கு வழக்கமில்லாத  வழக்கமாய் "வெளியில் போகலாமா"  எனத் தயங்கித் தயங்கி  அனுமதி கேட்ட என்னை  மாமி ஒரு மாதிரிப் புதுமையாகப் பார்த்தா.   தனியாகப் போய் கொஞ்சம் கப்பல் வாழைப்பழம் கொஞ்சம் நெல்லிக்காய்   கொஞ்சம் அம்பிரல்லா காய் கொஞ்சம் பட்டுப் புளி  மட்டும் வாங்கிக் கொண்டு, தாய் மொழியும் மறந்து  மலங்க , மலங்க முழிச்சுக் கொண்டு ஆயிரம் ரூபாவைத் தாரை வார்த்துப் போட்டு வந்து பலதடவை போல அப்போதும்   என்னை  அவமானமாக  உணர்ந்தேன்.

"மாணிக்கப் பிள்ளையார் கோவிலுக்கும் போயிட்டு, அப்பிடியே  முன்னால  பிளட்ஸில    உன்ர பிரென்ட் டையும்  பார்த்துக் கொண்டு  வா "என்று அனுப்பி  வைச்சா.  நீண்ட காலம்  வெளியுலகத்தோடு தொடர்பற்று  இருந்ததால்  ஒரே நாளில் அங்கிங்கென  அலைவது எனக்கு  அன்று வித்தியாசமான  உணர்வைத் தந்தது  .

எனக்கு மிக நெருக்கமானவர்கள்  வாழ்ந்த,  அடிக்கடி  என் வரவைக் காத்திருந்த  அந்த பம்பலப்பிட்டி பிளட்சை  பஸ்ஸில் சென்று  அடையாளம் பிடிக்கும் தன்மையை  அப்போது முற்றாக நான் இழந்திருந்தேன். அதைக்  கடந்து போய்  இறங்கி  நெஞ்சு  பதறப் பதற  திரும்பி  நடந்து வந்து  அடையாளம் பிடித்தேன் .




நான் விட்டு வந்தவர்களின் முகவரிகள்  தொலைபேசி இலக்கங்கள்  எதுவும் என்னிடமில்லை. அதற்குள் நுழைந்த போது நினைவடுக்கின் எங்கோ ஓர்  மூலையில்  அந்த பிளாக் ஆங்கில  எழுத்தும்  இலக்கமும் நினைவு வந்தது, அதன்  கடற்கரையோர  பல்கோனில்  நின்று சிரிக்கச் சிரிக்கப் பேசுவது  நினைவு வந்தது  அதை வைத்துக் கொண்டே  நடந்து பெல் அடித்தபோது  திறந்தவள் பார்வையில் கேள்விகள் அற்று "நான் .....டீ "என்ற போது இறுகக் கட்டிக் கொண்டாள்.

வாழ்வில்  எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நட்பு  எனக்குப் பெரு வரம்  அவள் போல.  அவளுடன் ஏதோ  எல்லாம் பேசத் தோன்றியது  ஆவலுடன்.  பேசவில்லை.  அவள் நண்பியாக  இருந்த போதும் மூத்தவள்.  ஒரு அக்காவுக்குரிய  கண்டிப்பும் அக்கறையும்  உரிமையும் கொண்டு அணைத்தவள். மடியில் குப்புறக் கவிழ்ந்து கதறத் தோன்றியது.  முடியவில்லை     அவள் எனக்காக பிரத்தியேகமாக  விருந்து வைக்கவில்லை.  சாப்பிட்டுக் கொண்டிருந்ததை  அப்படியே பிசைந்து  ஊட்டினாள்.  கண்ணீர்  வந்தது. நான் என் கல் தன்மையில் இருந்து இளகிக் கொண்டிருந்தேன்.  உயிரானவர்களை  பிறநாட்டில் விட்டுச் செல்லாதிருந்தால் இங்கேயே இருந்து விடவேண்டும் எனத் தவித்தது மனது. அழுகை வந்தது  உடைந்து, உடைத்துக் கொட்ட மனமில்லை.
 "போகணும் டீ"  என விடைபெற்றேன்.

மாலை மாமி முடிந்தவரை  வெளியில் அழைத்துப் போனா.  ரோயல் பேக்கரி,  பலூடா ஹவுஸ்  என  பிடித்து அதிகம் உண்ட இடமெல்லாம் கூட்டித் திரிந்து விட்டு  திரும்பி  வரும் போது  சொன்னா 
"நானுன்னோட  ஆறுதலா  கதைக்க  வேணும்."
என் முகத்தைப் பார்த்தே  என்னைப் படித்து விடக் கூடியவர் மாமி. இன்னொரு குடும்பத்தில் இருந்து  வாழ்க்கைப்பட்டு வந்து  வந்த இடத்தில்  உள்ள குழந்தையின் மனதில்  உயரிய  இடம் பிடிப்பது  அத்தனை இலகு அல்ல ஆனால்  என் மாமி  எனக்கு  அப்படித்தான்  இருந்தார்.

உடைந்த போதல்ல, சிறு வயதில் இருந்து  உடைக்கப்பட்ட  போது, முறைக்குமுறை  குறிப்பிட்ட  ஒருத்தியின் கொழுப்பெடுத்த திருகு தாளங்களின்  பழியை சுமப்பதற்காகவே  வளர்க்கப்பட்டது போன்ற   நிலையில் துடித்துத் தவித்த  போதெல்லாம்    என்னை  அதிகம் புரிந்து வைத்திருந்தவரும்,  ஓய்வு நேரங்களில் எல்லாம்  எவரையும் அண்டாமல் எல்லாச் சந்தர்ப்பங்களிலும்   அணைத்துக் கொண்டவருமான  மாமி  இன்றில்லை.  அவர்  கதைக்க நினைத்ததை  நான் கடைசி வரை கதைக்கவும் இல்லை. 

"என் ஊர். அங்கு நான்  தனியாகப் போவேன்  எனப் பிடிவாதமாக  நின்று  அன்று  இரவு பஸ்ஸில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஏற்றி விட்டார்கள். 

அதிகாலை  முதல்  சித்தி   ஒவ்வொரு பஸ்சாகக்  காத்திருந்தும்,  ஊர் வருவதற்கு  மூன்று ஊருக்கு  முன்னமே  நான் இறங்க ஆயத்தமாக எழும்பி  நின்றும்  என் ஊர் என்னால் அடையாளம் கண்டு பிடிக்கப்படாமல்  கடந்து கொண்டிருந்தது  அக்கு வேறு  ஆணி வேறாக  சிறு புல் பூண்டுகளைக் கூட  அறிந்து வைத்திருந்த  என்னால் என் ஊரை  அடையாளம்  காண முடியாமல்  தொலைந்திருந்தேன் அப்போது. 

கச்சேரியடி   எனக்கு மிகவும் பழக்கப்பட்ட இடம். என் இளமை முகிழ்த்த காலக் குழப்படிகளுக்கும்  உற்சாகங்களையும்  தன்னுள் மறைத்து வைத்திருக்கும் இடம். கச்சேரி  வந்தபோது  அரக்கப்பரக்க  இறங்கி,  அத்தனை தூரம் எனக்கு நெருக்கமும் மகிழ்வும்  உற்சாகமும் தந்த இடத்தைக் கண்டு கூடப் பயந்து என் இயல்புக்குப் பழக்கமற்ற நிலையில்   ஏதோ  தெரியாத கிரகத்துக்கு  வந்து விட்டது போலப் பதறி நடுங்கி   பின் நேராக வந்த வழியில்   நடக்கத் தொடங்கினேன்.

அந்தச் சித்திக்கு  என்னை நெருங்கிய வயதில்லை  ஆதலால்  என்னில் போட்டி  இல்லை,  அவர் குழந்தைகளுக்கும் என்னை நெருங்கிய வயதில்லை  அதனால்  பொறாமையும்  இல்லை.  தவிரவும்  அவரது  திருமணத்துக்கு முன்னம் போல,  அவருக்குக் குழந்தைகள் பிறந்த பின்னும் கூட  நான் மகள்  என்பது இன்னும் அந்த மனதில்மறையாமல்  இருப்பது கூட அவரது அந்த மனநிலைக்குக் காரணமாக இருக்கலாம். ஆதலால்  அவரால் மட்டும் தான் அந்த வார்த்தை இன்னும் என்வரையில்பெறுமதி இழக்காமல்இருக்கிறது.

அவரால் மட்டும் தான் வந்து இறங்கியவுடன்  வந்தவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள், ஏன் வந்தார்கள்  என்பது அறியாமல், சுயபுராணம் பாடாமல்  தங்கள்  குழந்தைகளின்  பெருமையும் புராணமும் சொல்லி வெறுப்பேற்றாமல்  ஒரு மனுஷியா    இருக்கமுடியும். அதிகம் கதைக்கவில்லை.  அவர் பார்த்துக் கொண்டே  இருந்தார்  எனக்குத் தெரியும் அது கணிப்பீடென.  சித்தி அதிகமாக  கேள்வி எல்லாம்  கேட்க மாட்டா. கனக்கக் கதைக்கவும் மாட்டா.ஆனாலும்கணக்கெடுத்துவிடுவா. 

சித்தி வீட்டில்  இருந்து மெயின் ரோட்டில் நேரா சில கடைகள்  தாண்டி  ஒழுங்கையால்  திரும்பி  நாலைஞ்சு  வீடு கடந்தால்  மாமா  வீடு.   அங்கு தான் பாட்டி இருந்தா.  நான் வளர்ந்த  சூழல். குதூகலமாக பறந்த சொக்கம் . இப்போது   தனியாகப் போக  முடியாமல் நெஞ்சடித்தது  சித்தி கூடவே வந்தா.  வழியெல்லாம்  உறவுகள்  வேலியால்  மதிலால் எட்டி  யார் என விசாரித்தது  மனதுக்குள் அன்னியமாக உணர்ந்தது.  வார்த்தை இழந்தவளுக்கு  தன்னிலை மறைப்பதற்கு  புன்னகை தவிர பேச்சேது?  கடந்தோம்.

 c90 அல்லது  அந்த  வகையறாவைச் சேர்ந்த  மோட்டர்  பூட்டின  ஏதோ ஒரு இரண்டு சில்லு வாகனம்  அதில  வண்டியும் தொந்தியுமா  பிள்ளையார்  எலிவாகனத்தில  வாற  மாதிரி  ஒரு மனிதர்  அது போதாதுக்கு  அவரின் காலடியில் நெஞ்சு வரை  உயரத்துக்குப் பொருட்கள்  சீட்டின் பின் பக்கத்தில் இரண்டு வாழைக்குலையோடு எங்களைக் கடந்து பின் சடன் பிரேக் போட்டு நின்று, 
"தங்கச்சி " என்று சித்தியை  கூப்பிட்டு 
"எங்கட பெரியக்காவிட  பிள்ளையெல்லோ"  என்ற வார்த்தையில்  அதீத நெருக்கம் இருந்தது. 

"ஓம்  ஒருத்தருக்கும் அடையாளம்  தெரியயில்லையாம்  உமக்கென்னண்டு தெரிஞ்சது " எண்டா      சித்தி. 

"இதென்ன கதை. மோட்டார் சைக்கிள் கடக்கைக்குள்ள  கண்ணாடிக்குள்ள  அவளின்ர முகம் தெரிஞ்சது   எங்கட கண்ணுக்கு முன்னால வளர்ந்து,  எல்லாரையும் உரிமையா  அதிகாரம் பண்ணிக்கொண்டு,  கலகலத்துத் திரிஞ்ச   எங்கட பிள்ளையை   எனக்கு அடையாளம் தெரியாதோ . அதிலையும் ".......

 என்று ,கடந்து போன  நான் கடைசியாக  ஊரிலிருந்த  ஒரு சம்பவத்தை  நினைவில் வைச்சு  "நாங்கள்  எல்லாம் அண்டைக்கு வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே  எல்லோ இருந்தனாங்கள்.  துணிவா  தெருவில  இறங்கினது  இவள் தானே. விடியப்புறம்  கடையைத் தட்டி  "வந்து நிக்கிறது  யார் என்று  எனக்குத் தெரியும்  நீ  கடையைத் திறந்து பாண் பெட்டியையும்   ஒரு குலை வாழைப்பழமும் தா  அண்ணை"  எண்ட  அந்தத் துணிவு  எங்கட  பெரியக்காட  பிள்ளையை தவிர  ஆருக்கு வரும் சொல்லும்"

   என்று சொன்ன இராசரெத்தினம் அண்ணை,  ஏதோ  ஒரு தீவுப்பகுதியில்  இருந்து  அயலூரில்  கடை போட்டுப் பிழைக்க வந்த எனக்கு  உறவற்ற , என்னால் நினைக்கப்படாத  மனிதர்.  உறவென்று  எண்ணியவர்கள் பலரின்   மனதில்  அன்று நான் இருக்கவில்லை.  ஆனால்  நான் மறந்து போன என்னை நினைவில் வைத்து அன்று எனக்கே   அடையாளம் காட்டியவர் அவர் தான்.

இப்படி ஒரு நிலையைத் தான் என் வைத்தியரும்  எதிர்பார்த்திருக்கலாம்.

நான் பார்த்துக் கொண்டே நின்றேன்  கண் கலங்கியது  கதைக்கமுடிய வில்லை. 

"இதென்ன  இவள்  இதுக்குள்ள ஒம்பது  கேள்வி,  ஓராயிரம் கிண்டல்,  ஒருவருசத்துக்குப் போதுமா  சிரிச்சிருப்பாளே.  ஏன்  கதைக்கிறாளில்லை " என்றார்.

எனக்கும் கதைக்க ஆசை  அப்போது.  கதைக்காமல்  விட்டு, கதைப்பதை காதில் விழுத்த யாருமில்லாமல் என் கதைகள்  உதாசீனப்படுத்தப் பட்டு, க தைப்பது அர்த்தமற்றது என்றாகி,    கதை மறந்து விட்டது  என்ற கதையைக்  கூடக் கதைக்க முடியவில்லை.
 
சித்தி  கையில் இறுக்கமா பிடித்துக் கொண்டா .
ஒரு ஆதரவு போல
"இப்பத்தானே  வந்தவள். கன காலத்துக்குப் பிறகு  எல்லாரையும் கண்டவள்  போகப்போக  மெல்ல மெல்ல கதைப்பாள்" 
என்றா  சமாதானமா.....

"ஓம்... போகப் போக  மெல்ல  மெல்ல  இனி  எல்லாம் கதைப்பன்"










.