Sunday, April 23, 2017

எனது பார்வையில் குற்றம் 23


"குழந்தை என்பது அப்பா என்ற ஒருவர் மட்டும் கொண்டாடும் விடயமா?  அதிலுள்ள அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு அப்பா என்ற அந்தஸ்தைக் கொடுக்கும் உனக்கு நான் அந்த உரிமையையும் மரியாதையையும் கொடுக்கவேண்டும் இல்லையா"   பிறக்கப்போகும் குழந்தையின் பெயருக்கு முன்னால் தாய் தந்தை இருவரின் முதலெழுத்தையும் இணைத்துவிட விரும்பும் ஒரு சமவுரிமைக் கணவன்.

"புள்ளை பெத்துக்கிறதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும் என்றோ, யாரோ ஒருவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளணும் என்றோ அவசியமில்லை.  என் குழந்தையும் உன்னைப்போலவே இருக்கணும் என  நினைக்கிறியா? அது எனக்குப் பிடித்தமாதிரி இருக்கணும்  அதுக்கு யாரோ ஒருவனின் வெறும்  (....) குரோமசோம்  போதும்  என்று தன்னுரிமை வாதமிடும் ஒரு மனைவி.

பெண்ணை பெண்ணாகப் பார்க்கமறுக்கும், தாயானால் மட்டுமே அவள் பெண்ணாக ஏற்கப்படுவாள் என்பதை வார்த்தை வீச்சுக்களால் ஆதாரப்படுத்தும் எம்  சமூகத்தின் பிரதிநிதியாய் ஒரு குடும்பத்தலைவி,  தாய்மையடையாத பெண்ணைக் குற்றவாளிக் கூட்டில் நிறுத்திவிட்டு  ஆண் என்பவன் ஆண்மைக் குறைபாடற்ற பிள்ளைவரம் தரும் கடவுளாகவே  வக்காலத்து வாங்கும்  பெண்ணாதிக்கப் பெண்மணிகள்  சமூகம்... 

இப்படி குழந்தை என்பது பலதரப்பட்ட மனிதர்கள் சமூகம் என  எல்லா இடத்திலும் முக்கியப்படுத்தப்படும் ஒரு விடயமாகவே  பார்க்கப்பட்டு பல குடும்ப , சமூகப் பிரச்சனைகளுக்கும், தனிமனித  மனச்சிதைவுகளுக்குக் காரணமாக அமைந்த போதும்,  மறுபக்கத்தால் தேடுவாரற்ற  குழந்தைகள் சமுதாயம் ஒன்றும் புறக்கணிப்பு ஏற்படுத்திய பலவித மனநிலைச் சிக்கல்களுடன்  பல்கிப் பெருகி  வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்த அபத்தம் கூட மிக ஆபத்தானது ஒன்றாகவே  கவனிக்கப்படவேண்டியுள்ளது என்பதை எந்தவித ஆர்ப்பாட்டமமும் இன்றி ஆதாரங்களுடன் பேசவந்திருக்கும் திரைப்படம்  குற்றம் 23.



உள்ளடக்கம் திருப்திகரமாக  உள்ள எதுவும் ஆர்ப்பரித்து தன்னை அடையாளம் காட்டவேண்டிய அவசியமில்லை என்பதன் இன்னொரு ஆதாரம்  இத்திரைப்படம். தொடராக ஏற்படும் கர்ப்பிணிகளின் மரணம்,  அல்லது கொலை பற்றிய தேடலும் அதன் பின்னணியுமே கதைக்களம்.மேற்சொன்ன விபரங்கள் போதும் நீங்கள்  சட்டமிட்டு ஒரு கதையை அதற்குள் பொருத்திவிட . அதற்கு மேல்,  வெளியாகி சொற்பதினங்களேயான ஒரு படைப்பின் உள்ளடக்கத்தைப்  பகிரங்கப்படுத்துவது  விமர்சன  தர்மமும் அல்ல.  (ஆனால் கதை பற்றி என் தனிப்பட்ட தேடலொன்று உண்டு அதை இதன் முடிவில் தனியாகப் பார்ப்போம். )

பிரபல, பிரமாண்டங்கள்  என்று யாருமில்லாத, கதையை நாயகமாகக் கொண்டு அதற்கு தம் கதாபாத்திரங்களால் அனைவருமே உரிய அளவில் சிறப்பாக உயிரூட்டியிருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்,

அருண் விஜய்க்கு பாண்டவர் பூமி, என்னை அறிந்தாலுக்குப் பிறகு  இன்னொரு சிறப்பான  வாய்ப்பாக அமைந்திருக்கிறது இப்படம்.  எந்த அலட்டலும் இல்லாமல்  துப்பறியும் அதிகாரி பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்  மனிதர். இடைக்கிடை  இளமைக்கால போலீஸ் அதிகாரி சரத்குமாரை நினைவுபடுத்தினாலும் அது கூட எதார்த்தமான ஒன்றாக கம்பீரமாக பொருந்தியிருக்கிறது.

தென்றலாக வரும் மகிமா நம்பியார்  மெல்ல அள்ளிக்கொள்ளத் தோன்றும், இடைக்கிடை சற்று அனல் வீசி  முரண்டு பிடிக்கும்  வீட்டுப் பெண்போல அழகும்  இயல்பான நடிப்புமாக சற்று மனதுக்குள் எட்டிப் பார்க்கிறார் . எங்கள் வீட்டில்,உங்கள் வீட்டில், பக்கத்து வீட்டில், நட்பில் உள்ளது போல  தோற்றமும் பாவனைகளுமாக தன் கண்களுக்குள்  உணர்ச்சிகளைக் கொண்டுவரும் அபிநயா கவனிக்க வைக்கிறார்.  அதே போல வம்சி கிருஷ்ணா.  குறிவைத்த அந்தப் பார்வை....அமர்த்தலான அந்த முகம்  அழுத்தமான அந்தத்  தோற்றம்   பாத்திரத்துக்கு  ஏற்ற தேர்வு மாத்திரமல்ல நடிகனாக மனதில் நிற்கக் கூடிய அறிமுகம். 

அதிக சினிமா அறிமுக வெளிச்ச  முத்திரைகள்  விழாத நடிகர்கள் தேர்வு கதையை கதாபாத்திரங்களினூடு உள்வாங்கி ஒன்றிப்போக வைத்த  சிறந்த யுக்தி. கதையோடு ஒட்டாது கௌரவப் பாத்திரங்கள் போல வந்து போன விஜயகுமாரையும் தம்பி ராமையாவையும்  தவிர  கதை முழுவதும் கதைமாந்தர்கள் உலவினரே அன்றி  எந்த நடிகரும் தனிப்பட தன் பெயரோடு கண்ணுக்குத் தெரியவில்லை என்பது  இயக்குனரின் பெருவெற்றி என்றே நான் சொல்வேன். 

கண்ணை உறுத்தாத கமெரா. உரையாடலின் சத்தத்தை மேவாத பின்னணி இசையும்,  கவிஞர் விவேகாவின் பாடல் வரிகளும் மனம் தொட்டுச் செல்கின்றன . அதிலும்  சிந்தூரி விஷாலின் குரலில் படம் முழுவதும் மெல்லிய ஹமிங்  ஒலியுடன் தொடரும் " தொடுவானம் நேற்று அது தொலைதூரம்....." பாடல் அதன் படைப்பாளிகளைத் தேடவைக்கக் கூடியது.


இத்தனைக்கும் பின்னணியில்  ஒரு துப்பறியும் படத்தை இறுதிவரை முடிச்சவிழ விடாது பார்வையாளரை சலிப்புற வைக்காது   தொய்வற்று நகர்த்தும் தன் திறமையை தன் முன்னைய திரைப்படங்கள் போலவே இதிலும் நிரூபித்த  இயக்குனரின் திறமை பாராட்டுக்குரியது.  ஒரு திரைப்படக் கதைநகர்த்தல் என்பதைத் தாண்டி துப்பறியும் கதைகளிலும் சமூகத்துக்கு அவசியமான எதோ ஒரு செய்தியைச் சொல்ல முடியும் என்பதைச்  சொல்லும் அவர் முயற்சி  அறிவழகன் மீதான அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பர்ப்பை மேலும் தூண்டியிருக்கிறது.
எல்லாக் குற்றவாளிகளினதும் பின்னணியில் அவர்களை நியாயப்படுத்த ஒரு கதை இருக்கும் .
அதற்காக அவர்கள் செய்வது எல்லாம் நியாயமாகி விடாது  என்ற தீர்க்கமான ஒரு கருத்துக்குப் பின்னால் 
தாய்மை :- பெற்றெடுப்பதில் மட்டுமல்ல தத்தெடுப்பதிலும்  என்பது   சிறந்ததொரு நிறைவு.

.......................................................................................................................................
மேலும்   என்னை அதிகம் ஈர்த்த விடயம் ஒரு கதாசிரியாரின் கதையை  வேறொரு படைப்பு வடிவத்தில் வெளிக்கொணர உரிமை பெறும் போது அந்த எழுத்துக்குக்  கொடுக்கப்படும் உச்சபட்ச மரியாதையே  அந்தக்  கதையின் மூலக்கருவைச்  சிதைத்து விடாமல் அந்த எழுத்தாளரின் அடையாளத்தைக் காப்பாற்றுவது  தான். அனால் அது நடைமுறையில் மிக அரிதாகவே உள்ள போதும் இத்திரைப்படத்தில்,   கதையின் பின்னணியில் உருவாக்கப்பட்ட  உரையாடல்கள் ,  பாத்திரங்கள் எல்லாமுமே  கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்னால்  வந்திருக்கக் கூடிய, நான் வாசித்து இருபது வருடங்களாவது கடந்து விட்ட  ஒரு துப்பறியும் நாவலை படத்தின் ஆரம்பத்திலேயே கதாபாத்திரங்களின் உயிரோட்டத்திலும் திரைக்கதை வசன அமைப்புக்களிலும் சிதையாமல்   அப்படியே கண்முன் கொண்டுவந்து நினைவுகளைத் தூண்டி  இது குறிப்பிட்ட  இந்த எழுத்தாளரின் கதையாகத்தான் இருக்கமுடியும் என்று  மூலக் கதையாசிரியரைத் தேட  வைத்திருந்தது.


துப்பறியும் நாவல்களுக்குத் தேவையான அளவு விறுவிறுப்பு,  எதிர்பாரா திருப்பங்கள், என்பவற்றோடு கூடவே அறிவியல், விஞ்ஞான வளர்ச்சி,   அதன் பன்முகப்பட்ட பார்வைகள், குடும்பம், சென்டிமன்ட்  என்று தேவையான விகிதாசாரத்தில் கலந்து அதன்  முடிவில் முத்தாய்ப்புப் போல இரண்டு வரியில் சமூகத்துக்கான ஒரு சேதியைச் சொல்லிவிடும் இரண்டு  ஜனரஞ்சக எழுத்தாளர்கள் அப்போது கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். அவர்கள்   கதாசிரியர்  ராஜேஷ் குமார். மற்றும்  கதாசிரியர்  ராஜேந்திரக்குமார்.

இப்போது போல அப்போதும் எல்லோரும் சமூகக் குப்பைகளைக்  கிளறி இலக்கியம் படைத்துக் கொண்டிருந்த காலத்தில்  Artificial insemination ( செயற்கைக் கருவூட்டல்) ஸ்பெர்ம் பேங்க் (sperm bank ) பற்றிய சாதக பாதக விபரங்களோடு,  தமிழில் கதைசொல்ல முயன்றவர்கள்  இவர்கள்.

அப்போது கிரிக்கற் வெறிபிடித்தலைந்த  காலமொன்றில்தனக்குப் பிடித்த  ஒரு விளையாட்டு வீரனின் கருவைச் சுமக்க விரும்பிய அவனது தீவிர  விசிறியான  பெண் ஒருத்தியைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை இத்தனை வருடங்கள் இடையில் எத்தனை எத்தனையோ  பாரிய மாற்றங்களை ,மன உடைவுகளை, இழப்புக்களை சந்தித்த மண்ணில் பிறந்த,  இன்னும் சொல்லப் போனால், கடந்து  போன காலங்களையே அப்பட்டமாக மறந்து இறந்து பிறந்த ஒருத்தியின்  பதின்மகால வாசிப்பை நினைவில் கொண்டுவரும் என்றால் , அந்த இடத்தில் ஒரு பேனாவின் வீரியத்தையும், எங்கோ எட்டாத தொலைவொன்றில் இருந்து கொண்டு தன் எண்ணங்களை உலகம் முழுவதும் கடத்தக் கூடிய ஒரு எழுத்தாளரின் வல்லமையையும் எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன் திரு. ராஜேஷ் குமார் அவர்களே.   

Friday, April 21, 2017

ஒரு பிடி உணவும் ஒரு சாவும்


"வாசலில் ஆரவோ நிக்கிற அசைகை தெரியுது ஆரெண்டு பார் குட்டிம்மா" உள்ளே இருந்து சத்தமாக வந்த பாட்டியின் குரலுக்கு வீட்டின் பக்கவாட்டில் நின்ற வேம்பில் இருந்து உதிர்ந்து கொண்டிருந்த பூவையும் பிருகையும் வானத்தில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிந்த பூரிப்பில் அண்ணாந்து கண்களை மூடி கைகள் இரண்டையும் விரித்து ரசித்துக் கொண்டிருந்த அவள் தன் கனவு கலைந்தது போல் கண் திறந்தாள். தலையை மெதுவாக அசைத்து கண் இமைகளில் கிடந்த பூ இதழ்களை உதறி விட்டாள். உதடுகளை மெதுவாக ப் பூ என்று ஊதி ஈர உதடுகளில் ஒட்டிக் கிடந்த வெள்ளைப் பூக்களை விலக்க முனைந்தாள். பின் உள்ளங்கைக்குள் சிறைப்பட்டுக் கிடந்த சின்னப் பூக்களை பொக்கிஷம் போல் பொத்திக் கொண்டே வாசலுக்கு போனாள்.

வாசலில் நின்ற மனிதன் நடுத்தர வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் இருந்தான். சற்று அதிக குள்ளமாக பழுப்பு நிறப் பாறாங்கல்லில செதுக்கின மாதிரி நிறமும் உடல் அமைப்புமாக , தலை நிறைய முள்ளம் பன்றி போல குத்திட்ட , ஆனால் வயதின் தோற்றத்துக்கு சற்றும் ஒவ்வாத விதத்தில் முழுவதும் வெண்பனியில் உருண்ட கரடிக் குட்டியின் தலை போல இருந்தான். எப்போதும் அந்த வழியால் அவன் போக வரும் போது கண்டது தவிர அறிமுகமற்றவனாக இருக்க, " யாரு நீங்க ? என்ன வேண்டும் ?" என்றாள் இயல்பாய். அவன் பதில் சொல்லாமல் இயல்புக்கு மாறாய் உணர்வுகளைப் பிரித்தறிய முடியாத பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தான். சற்று அதட்டலாக "யார் நீங்க என்ன வேணும் கேக்கிறேன் எல்லா" என்றாள். பதில் வரவில்லை. சற்று தலை சரித்து கொஞ்சம் மந்தகாசமாக ' ஈ ' என்பது போல சிரித்தான்.

"யாரு கண்ணம்மா அது ?" வேப்பமரத்துக்கும் வைக்கோற் போருக்கும் இடையில் நின்ற திருவாட்சிக்குக் கீழ் சாய்மனைக்கதிரையில் சாய்ந்திருந்த தாத்தா திருவாட்சி மலர் இதழ்களை விட மென்மையாக கேட்டுக் கொண்டே எழுந்து வந்தார். வாசலில் நின்ற மனிதனைப்பார்த்து "என்னப்பா நீ ............... (இடத்தை குறிப்பிட்டு) அந்தக் குடியேற்றத் திட்டக் காணிக்குள்ள இருக்கிறனீ எல்லோ" என்றார் விசாரிப்பது போல. அந்த மனிதன் தலையாட்டிய விதமும் முகத்தை இறுக்கமாக்கி வைத்துக்கொண்டு ' ஈ' என்று இளித்த விதமும் அப்போதும் அசாதாரணமாக இருந்தது. பின் "தண்ணி தண்ணி வேணும் " என்று அவன் சொன்ன குரலிலேயே தொண்டை வரட்சி தெரிந்தது.

அவள் ஓடிப் போய் செம்புடன் தண்ணீர் கொண்டு வந்தாள். செம்பை கைகளில் வாங்கிப் பருகாமல் , கை மடக்கி உள்ளங்கையில் உதடு வைத்துக் குனிந்த மனிதனைக் காண மனம் நெருடலாக இருந்த போதும் சில நடைமுறைகளுக்கான காரணம் தெரியவில்லை அவளுக்கு. 'மடக் மடக் ' என்று அந்த மனிதன் குடித்த அவதியில் அவனது தலையில் மெதுவாகக் கைவைத்து "போதும் " என்றார் தாத்தா. அவன் இன்னும் வேணும் என்பது போல பார்க்க. "சாப்பிட்டியா?" என்றார். "இல்லை" என்பதாக தலையசைத்தான். "வா உள்ளே வந்து சாப்பிடு " என்ற அழைப்பில் கனிவிருந்தது.

"கிணற்றடித் தொட்டியில் தண்ணி இருக்கு, கைகாலை அலம்பீட்டு வா" சொல்லிக் கொண்டே போய் பாட்டியிடம் சொல்லி சாப்பாடு எடுத்து விறாந்தையில் இலை போட, தயங்கித் தயங்கி வந்து சாப்பாட்டுக்கு முன் அமர்ந்த அந்த மனிதன் சாப்பிட்ட அவதியில் பசி அகோரமாகத் தெரிந்தது. "காலையில் ஏதாவது சாப்பிட்டியா?" அவன் சாப்பிடுவதை நாடியில் முட்டுக் கொடுத்து கொண்டு பார்த்தவாறே பாட்டி கேட்டா. " ம்ம் பத்துமணிக்கு பாணும் தேத்தண்ணியும் ..." ஒரு வித கொழ கொழ குரலில் சொல்லிக் கொண்டே அவசரமாக சாப்பிட்டான். அப்பவும் பாட்டி விடாமல் " கூலி வேலைக்கு போறனி .... இப்ப பாரு அஞ்சு மணியாச்சு இன்னுமா ஒரு பிடி சோறு சாப்பிடவில்லை. மனிசீட்ட சொல்லி பாசல் கட்டிக் கொண்டு போகக் கூடாதோ " என்றார். பின் தாத்தாவின் பார்வை கொடுத்த சமிக்ஞையில் அமைதியாக, அந்த மனிதன் சாப்பிட்டு விட்டு கைகழுவி, வந்து திரும்பவும் கைமடக்கி அரை செம்பு தண்ணியை குடித்து விட்டு பெரிதாக ஏப்பம் விட்டு அசடுவழிய புன்னகைத்தான்.

"இஞ்ச பார் தம்பி உன்ர பெயர் கூடத் தெரியாது எனக்கு. ஆனால் நான் சொல்லுறதைக் கேள். இப்பிடி வெறும் வயிற்றோட கிடந்தது சாகாதே. இதால போகேக்க வரேக்க பசிச்சால், தண்ணி மன்னி தேவை மாதிரிக் கிடந்தால், இதில வந்து கூப்பிடு என்ன. நான் இல்லை என்றால் பரவாயில்லை . இவள் நிண்டா போதும். இவளிட்டை மட்டும் கேள்.@ என்ற குரலில் அதிகாரம் இல்லை ஆதூரம் இருந்தது. அந்த மனிதன் மெதுவா நிமிர்ந்து அவளைப் பார்த்தான். பின் ஒரு விதமான வழிந்த குரலில் "குழந்தை.....?" என்றான் கேள்வி போல. "அது என்னோட பேர்த்தி " என்று சொல்லிக் கொண்டே தாத்தா அவளைக் கைக்குள் அணைத்துக் கொள்ள, கை நீட்டி தயக்கமாக ஒற்றை விரலால் பட்டும் படாமல் அந்த மனிதன் அவளது கன்னத்தைத் தொட்ட போது நிச்சயமாக அதில் விகல்பமாக எதுவும் இல்லாத வெள்ளந்தித் தனம் இருந்தது. இருந்தும் பாட்டிக்கு வழமை போல கண்களில் நெருப்பு எரிந்தது " வா குட்டிமா" என்று உள்ளே இழுத்துப் போனாள்.

அந்த மனிதன் போன பின் " அங்கால ஊர்க் கோடித் தொங்கலில சும்மா கிடந்த காட்டுக் காணியை பிரிச்சு இப்ப அரசாங்கம் உறுதி குடுத்த குடியிருப்புக்குள்ள கொட்டில் போட்டுக் குடுத்திருக்கெல்லே அதுக்குள்ளே இருக்கிற பெடியனப்பா. நான் அங்கன பக்கத்தில எங்கட தென்னங்காணிக்கு போக வரேக்க கண்டிருக்கிறன். சிலநேரம் மாடு பட்டியை குழப்பிக் கொண்டு ஓடினால் காவல்காரப் பெடியனோட சேர்ந்து துரத்திப் பிடிச்சுக் கொண்டு வந்து அடைப்பான். தேங்கா பிடுங்க , வயல் வேலை . எண்டு எதுக்குப் போனாலும் கேளாமல் ஓடிவந்து வேலை செய்வான். சம்பளம் கூட எதிர்பார்க்காமல் வேலை முடியத் திரும்பிப் போயிடுவான். பாவம். ஆருமற்றவன். .............. (ஒரு இடம் குறிப்பிட்டு) அங்கு இருந்து வந்த ஒரு குடும்பத்தோட கூடி கொண்டு வந்து இருக்கிறான். உழைச்சுக் குடுத்தால் வீட்டில ஒண்டிக் கொள்ள ஒரு மூலை கிடைக்கும் அவ்வளவு தான்" என்று பெருமூச்சுடன் முடித்துக் கொண்டு "அவன் எப்ப வாசலில நிண்டாலும் காசு குடுக்க வேண்டாம் வயிறார சாப்பாடு போட்டனுப்பும்" என்றார் பாட்டியிடம்.

"ஏன் தாத்தா குடும்பம் இல்லாமல் உறவு மனிதர்கள் யாருமில்லாத ஒரு மனிதன் இருக்க முடியுமா?" குழப்பமாகக் கேட்ட பேர்த்தியை கைகளுக்குள் அணைத்துக் கொண்டு , "பணத்தாலும் , பதவியாலும் , அந்தஸ்தாலும் மனித உறவு பேணுற பூமியை உனக்கு இப்ப புரியாது கண்ணம்மா. அதை நீயும் விளங்கில் கொள்ளக்காலம் வரும். அப்ப புரிந்து கொண்டு ஒதுக்க வேண்டியதை ஒதுக்கிற தெளிவு பெற்று விடுவாய்" என்றார். அது..... அவரது அந்த வாய் வார்த்தை அப்படியே ஒரு நாள் பலித்து, அந்த மனிதனுக்காகவே எல்லாவற்றையும், எல்லோரையும் ஒதுக்கும் நிலை ஒருநாள் அவளுக்கு வரும் என்பது அவருக்கும் அப்போது தெரிந்திருக்காது.

பின்னான காலங்கள் எப்போதும் எல்லோருக்கும் போல நகர்ந்து கொண்டு , அவள் வளர்ந்து கொண்டு, தாத்தா பாட்டி மூப்பெய்திக் கொண்டு, கடந்து போய்க்கொண்டிருக்க, அந்த மனிதனும் எப்போதாவது பசிக்கும் நேரம், தாகம் எடுக்கும் நேரம்மட்டும் வீட்டு வாசலை எட்டிப்பார்த்து பசியைத் தனித்துக் கொண்டு கடந்து போய்க்கொண்டிருந்தான். அங்கு இங்கென தலை திருப்பாமல் குனியாமல் வளையாமல் ஒரே சீரான வேகத்தில் நடந்து செல்லும் இந்த இயந்திரத்துக்குள் எந்த உணர்வுகளும் இருக்காதா? கவலை , கண்ணீர் , மகிழ்ச்சி என்று ஏதும் உணர முடியாதா என்று அவள் பலமுறை அந்த மனிதனைப் பார்த்துச் சிந்தித்திருக்கிறாள். முடிவில் இல்லை என்று முடிவும் எடுத்திருக்கிறாள்.

பசிச்ச நேரம் கிடைத்தால் உணவு. நிறுத்து என்று சொல்லுமட்டும் வேலை... எப்படி முடிகிறது. இப்படி உணர்வுகள் அற்றிருப்பதெனில் எதற்கு இப்படி ஒரு பிறப்பு. அதைப் படைத்ததாகச் சொல்லப்படும் கடவுள் எதற்கு? எப்போதும் போல் அவளை அரிக்கும் பதில் கிடைக்காத பல கேள்விகளுக்குள் இதையும் கூட்டுச் சேர்த்துக் கொண்ட பின் ,

ஒரு நாள் தாத்தா இறந்து போனார். உறவு கூடி ஒப்புக்கு ஒப்பாரித்து, ஊர்க்கோடியில் கொண்டு போய் கொளுத்தி விட்டு வந்து மூன்று நாளான பின்னும், பாசத்துடன் கன்னம் வருடிக் கொண்டே இறுதியாய் தளர்ந்து துவண்ட அந்த வயதான கைகளும், "என்ர செல்லக் கண்ணம்மா கவனம்" என்று திக்கித் திக்கி வந்த இறுதிக் குரலும், கண்கள் குத்திட்டு வெண்படலம் படரும் கணம் வரை பார்வையில் இருந்த பாசமும் , விட்டுச் செல்கிறேன் என்ற பரிதவிப்பும், இதயத்தைப் பிடுங்கி கைகளில் வைத்துக் கசக்குவது போல் உருத்தெரியாமல் ஊமையாக வலித்துக் கொண்டிருந்தது அவளுக்கு . தெரியாத திசை எல்லாம் தாத்தாவின் தேம்பி அழும் குரலும் "கண்ணம்மா" என்ற அசரீரி போன்ற அழைப்பின் நினைவுகளுமாக பித்துப் பிடித்தவள் போல் அவள் ஒரு மூலையில் எவரோடும் ஒட்டாமல் ஒதுங்கியிருக்க,

கூட்டம் குவிந்து ஆட்டம் போட்டது போல வீடு நிறைய கசகசத்துத் திரிந்த சனக் கூட்டம் எரிச்சலாக இருந்தது. யாரோ எவரோ வேண்டியவர் வேண்டாதவர் என்று எல்லாம் நிறைந்து கொண்டு பெரிய பெரிய பாத்திரங்களில் செலவு வீட்டுக்கு அவித்துக் கொண்டிருந்தார்கள். இறந்தவருக்குப் படைப்பதாகச சொல்லி குவித்து வைத்த பொருட்களில் அனேகமாக எதுவும் அந்த மனிதன் உண்ணாதவைகளாகவே, ஏனைய பல செலவு வீடுகள் போல இங்கும் இருந்தன. இழப்பின் சோகம் தூர விலகி, ஒரு வித கோலாகல மன நிலையில் , வந்து கட்டியவர்களும் கட்டிய வழிகளால் ஓட்டியவர்களுமாக உரிமை போல ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

விழா விஷேசங்களுக்கு அலங்கரித்தது போல அலங்கரித்துக் கொண்டு , தாராளமாக தங்கநகைகளை அள்ளிப்போட்டு பெற்றோரின் வசதிகளை வெளிக்காட்டியபடி முற்றத்திலும் முன் வாசலிலுமாகக் குழந்தைகள் குதூகலமாக ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இருந்தாற்போல் இடையில் எதோ சலசலப்பு. ஆர்வமில்லாமல் திரும்பிப் பார்த்தாள். எங்கோ கட்டிக்கொண்டு, ஒட்டிக் கொண்டு வந்த உறவில் சில ஆண்கள் தண்ணியின் போதையில் மிதந்து கொண்டு , சத்தமாக நியாயம் கதைத்துக் கொண்டு, குழந்தைகளிடம் அக்கறையாக எதோ விசாரித்துக்கொண்டு, நடை தளம்ப கோணல் மாணலாக மிதந்து கொண்டு வாசலை நோக்கி ஓடினார்கள். அதில் எதோ ஒரு நாடகத் தன்மை இருப்பது போல அவளுக்குத் தோன்ற அருவருப்புடன் முகத்தை திருப்பி மதிலுக்கு வெளியே தெரிந்த கோவிலின் பின் வீதிக் கோபுரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

குழந்தைகள் ஒவ்வொருவரிடமாகப் போய் எதோ அவலம் போல் இரகசியத் தொனியில் பரகசியமாக எதையோ சொல்லிக் கொண்டு தம்மை நடுநாயகப் படுத்திக் கொண்ட விடயத்தை அவளிடமும் சொல்ல வந்தார்கள். ஆர்வமில்லாமல் நிமிர்ந்து பார்த்தாள். "அக்கா வெளியில ஒரு சங்கிலிக் கள்ளன் வந்து, முன் வீட்டு மதிலில சாஞ்சு கொண்டு நிண்டு கையை அசைச்சு என்னை வா வா எண்டு கூப்பிட்டவன்" கண்களாலும் , குரலாலும் விடயத்தை உருப்பெருப்பித்து உணர்ச்சியுடன் கூறியது குழந்தை. கூட நிண்டதுகள் வில்லுப்பாட்டுக்கு ஆமா போட்டன. சோர்வாக பார்த்து சலிப்புடன் "நீ எதுக்கு இங்கே எல்லாம் சங்கிலி காப்பு எல்லாம் போட்டுக் கொண்டு வந்தாய்?" என்றாள். "ஏன் நீங்க போட்டிருக்கிறீங்க தானே அப்பிடி தான் நானும் போட்டிருக்கிறன்." வெடுக் கென்று குழந்தை சொன்ன விதத்தில் வளர்ப்பு அப்பட்டமாகத் தெரிந்தது .

"நான் எப்பவும் தான் போட்டிருக்கிறான். நீங்கள் எதுக்கு புதிசா இண்டைக்கு ..... என்ன கலியாண வீடா நடக்குது இங்கே நீங்க சிங்காரிச்சுக் கொண்டு வந்து நிண்டு கும்மாளம் போட" என்று சினந்தவள் " சரி அவன் சங்கிலியை களட்டித் தரச் சொல்லி உன்னட்டைக் கேட்டானா?" என்றாள். "இல்லை அம்மா தான் சொன்னவ நிறைய ஆட்கள் வந்து போற இடம் யாராவது கூப்பிட்டால் கிட்டப் போகாதே . சங்கிலியை பிடுங்கிக் கொண்டு போயிடுவீனம் என்று". அப்பாவியாய் சொன்ன குழந்தையின் கழுத்தில் சங்கிலி திருடு போகாமல் தொங்கிக் கொண்டிருந்தது . ஓ... அம்மா.....

இப்போதெல்லாம் அவளுக்கு தாத்தா சொன்னது மாதிரி மனிதர்களை ஓரளவு விளங்கத் தொடக்கி இருந்ததால் வரட்சியாகப் புன்னகைத்துக் கொண்டு " உனக்குத் தலையில் எதுவுமே இல்லையா அம்மாவின்ர மூளையில் தான் நீ வளரப் போறியா?" என்றாள் சற்று ஏளனமாக. குழந்தைக்கு அதன் பொருள் புரியாமல் , கதை சொல்வதிலேயே ஆர்வமாக "அக்கா அந்தக் கள்ளன் வேற மாதிரி இருந்தான் கட்டையா தலையெல்லாம் வெள்ளையா நரைத்து வேறமாதிரி.,.,. பைத்தியம் போல.... "

அவள் அதிர்ந்து போய் சட்டென்று எழுந்தாள். கடவுளே அவனா? .... பசிச்சிருக்கும் அவனுக்கு. இழப்பு பிறப்பு என்பன எதுவும் புரியாத இயந்திரம். பசி என்று வந்திருப்பான். சிவனே தாத்தா தலை சாய முன்னமே அவர் பழக்கி வளர்த்த தர்மங்களில் தவறி விட்டேனா என்று பதறிக் கொண்டு வாசலுக்கு ஓட,

அங்கே....... இடுப்பில் கிடந்த உடுப்பு விலகியது தெரியாத நிலையில் போதையில் மிதந்த வெறிக் கூட்டத்தின் கைகளில் அந்த அப்பாவி மனிதன் சின்னாபின்னமாகச் சிதைந்து கொண்டிருந்தான். தெரு நாய்க்குப் பயந்து காலைத் தூக்கி சைக்கிள் ஹான்டிலில வைச்சு கொண்டு ஓடுற கோழைகள் கூட எதிர்வீட்டு மதிலுடன் சாய்த்து கால் தூக்கி அவனை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

நிறுத்தச் சொல்லி அவள் போட்ட ஓலம் மது மயக்கத்தின் காது வரை கூட எட்டியிருக்கவில்லை. அவர்களுக்கு நடுவில் புகுந்து அந்த மனிதனைப் பிரித்தெடுக்க அருவருப்பாக இருந்தது அவளுக்கு. அவசரமாய் வீட்டுக்குள் ஓடி வந்தாள். தன்னவர்களிடம் அவலமாய் அந்த மனிதன் சேதி சொன்னாள். தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டும் கண்கலங்கிய படியும், முழங்கையால் நாடிக்கு முட்டுக் கொடுத்த படியுயம் இருந்த அவளது உறவுகளின் கண்களில் அநியாயத்தின் வேதனையைத் தவிர்க்க முடியாத அவலம் தெளிவாகவே தெரிந்தது.

இன்னும் பிரிக்கப்படாத பந்தலுக்கு ஓடி, பந்தலுக்குள் இருந்த ஆண் உறவுகளிடம் " வா மாமா. வந்து பாரு. செத்துப் போயிடும். வா பெரியப்பா " என்று ஒவ்வொருவராகக் கைபிடித்து இழுத்த போது தவிர்க்க முடியாது எழுந்தவர்களை கை கூப்பி அடக்கினாள் பாட்டி. வேண்டாம் எல்லாம் கட்டிக் குடுத்த வழியலில வந்த சொந்தம். குடி வெறியில வேற நிக்குதுகள். நாங்கள் ஏதும் வாயைத் திறக்க, வாய் வார்த்தை தடிச்சு குடும்பங்கள் குழம்பி கேவலமா போகுடும் " என்று கை கூப்பி கண்ணீருடன் கும்பிட்ட பாட்டி "மனிசன்ர தலை சாயுமுன்னம்கோவிலா இருந்த வீட்டை குடியும் கும்மாளமுமா இப்பிடி குட்டிச்சுவராக்குதுகளே" என்று புலம்பிக் கொண்டே சீலைத்தலைப்பில் மூக்கைச் சிந்திக் கொண்டாள்.

அரசாங்கத்தின் மாவட்ட ரீதியில் உயர்தர அதிகாரங்களை கைகளில் வைத்திருந்த பலரும் , ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளும் என்று சற்று வலுவான உறவு மனிதர்கள் அதில் இருந்தும், ஒரு அப்பாவி மனிதன் அடிபட்ட போது அவனுக்காக உருகாத, உதவாத ஆத்திரம் முகத்தில் தெறிக்க , குற்றச்சாட்டாய் நோக்கிய அவள் விழிகளைச் சந்திக்கத் தயங்கி, "சரி வா என்ன என்று கேட்கிறம் "என்று அணைத்துக் கொண்டு கூடவே வந்து, இரத்தம் வடிந்து , உடைகிழிந்து , புழுதியில் உருண்டு கிடந்த அந்த மனிதனின் நிலை கண்டு அதிர்ந்து , கண்களில் கோபமாகி, சட்டென அதை மறைத்து அமைதியாகி , "சரி சரி போதும் எதோ நடந்தது நடந்து போச்சு நிப்பாட்டுங்க " என்று சமாதானமாய் அவர்களை அழைக்க, இப்போது தங்கள் ஹீரோ வேஷத்தை வீட்டு மனிதர்களுக்கு முன் போட்டுக் காட்டும் ஆசை அவர்களுக்கு வந்திருக்கலாம். திரும்ப காலுயர்த்தி அந்த மனிதனின் வயிற்றுக்கு ஓங்கியபோது தன்னைப் ஆதரவாகப் பற்றி இருந்த கையை உதறி அவசரமாகக் குறுக்கே போனாள்.

"விலத்து பிள்ளை இனி இந்தப் பக்கமே எட்டிப்பார்க்காத படி அவனுக்கு நல்ல பாடம் படிப்பிச்சு அனுப்ப வேணும்" என்று கொண்டே அவளைக் கைகளால் விலத்த, அவள் திமிற, இன்னும் சற்று அதிகமாய் கைகளில் பலத்தைக் கொடுத்து அவளை அப்புறப்படுத்த எத்தனித்தபோது, விரல் உயர்த்தி சத்தமெளாமல் பல் நெருமி, " என்னைத் தாண்டி அவனில எவரின்ர கையாவது பட்டுது கொன்னுடுவன். என்னில எவனிண்ட கையாவது பட்டுது என்ர வீடே கொன்னுடும் உங்களை." வார்த்தைகளில் நெருப்புத் தெறிக்க அவள் சொன்னது குடிபோதையில் ஆக்கிரோஷம் ஏத்த, "எங்களைப்பார்த்தா எதிர்த்துக் கதைக்கிறாய் " என்ற அவர்களின் ஒற்றை வார்த்தையில் குடும்பம் அதிர்ந்தது. அத்தனை நேரம் அமைதியாய் இருந்த பதவித் தலைகளுக்கு இப்போது ஆவேசம் வந்தது. பதவிக்கும் அந்தஸ்த்துக்கும் உரிய அடங்கிய அதிகாரக் குரலில் "எங்கட பிள்ளையில வாயோ கையோ பட்டுது யாரும் தேவையில்லை இங்கே. அத்தனை பெரும் வெளியால போயிட வேணும் " என்ற அதிகாரத் தொனி, அவர்களுக்கு அவமானமும் ஆத்திரமும் ஏற்படுத்த அந்த அப்பாவி மனிதன் மீது இன்னும் காழ்ப்பாகி ஆவேசம் வந்து பாய்ந்தார்கள்.

நிமிர்ந்து பார்த்த பார்வையின் உக்கிரத்தில் அவர்களை ஒதுக்கி விட்டு, விழுந்து கிடந்த அந்த மனிதனை குனிந்து கைபிடித்துத் தூக்கினாள் அவள். சிவரோடு சாய்த்து இருத்தி " பெரிப்பா நான் வாறதுக்கு இடையில இந்த ஆளில் ஒரு துரும்பு விழுந்தாலும் என்னை நாளைக்கு விடிய ஏதாவது ஒரு கிணத்துக்கை கிடந்து தான் தூக்க வேண்டி இருக்கும். உங்களுக்கு நல்லாவே தெரியும் என்னை பற்றி" என்று எச்சரிக்கை போல சொல்லி விட்டு உள்ளே போனாள்.







தாத்தாவின் வேஷ்டி, தாத்தாவின் ஷர்ட் , தாத்தாவின் சட்டமிட்ட புகைப்படம் சித்தியின் முதலுதவிப் பெட்டியுடன் தங்களுக்கு சொந்தமான இன்னொரு வீட்டுத் திறப்பை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். "குட்டிம்மா என்ன இது" அதிர்ந்து கொண்டு பாட்டி ஓடி வந்தாள். பாட்டியின் பின் எல்லோரும் வந்தார்கள். "இது .... இது..... இது நம்ம வீடில்ல. என் தாத்தாவின் சடங்குகள் இப்பிடி நடக்க வேண்டாம். ஒரு பசிச்சவனுக்கு சோறு போட்டால் போதும் அவர் ஆத்மா சாந்தியடைஞ்சிடும். இந்த குடிகாரக் கூட்டத்தை வைச்சு நீங்க ஒப்புக்குக் கும்மி அடியுங்கோ இந்தப் பாவம் தாத்தாவைச் சேர வேண்டாம் " சொன்ன போது மனதை உடைத்துக் கொண்டு கண்கள் கொட்டின.

வேறு வீட்டுக் கிணத்தில் குளித்து , உடைமாற்றி, சின்னதாய் , தனியாய் ஒரு பால் சாதம் வைத்து , அதைத் தாத்தாவின் படத்தின் முன் படைத்து , அந்த மனிதனுக்கு வயிறார உண்ணக் கொடுத்து, கையோடு கூட்டிக் கொண்டு போய் சந்தியில் இருந்த டிஸ்பன்சரியில் காயங்களுக்குக் கட்டும் , காச்சல் வந்தாலும் நோவுக்கும் சேர்த்து மாத்திரைகளும் வாங்கி வந்து, அந்த மனிதனை வழியனுப்பி வைத்த போது அந்த ஒரு நாளிலேயே அவள் பலருக்கு எதிரியாகி விட்டிருந்தாள்.

அதன் பின் அவள் அதிக காலம் அங்கிருக்கவில்லை. நாட்டின் போர் சூழல் குறித்த பயங்கள் காரணமாக சொந்த நாட்டிலேயே பலரையும் போல் அவளும் பாதுகாப்பான இடம் தேடிப் பெயர்த்து நடப்பட்டாள். வாழ்ந்த சூழலில் இருந்த நெருக்கமில்லாத பலர் பற்றிய நினைவுகளையும் மறந்து போனாள். அப்படித்தான் அந்த மனிதனும் பின்னாட்களில் நினைவுகளில் இல்லாமல் போனான்.

வாழ்க்கையில் சிலருடனான தொடர்புகள் பூர்வ ஜென்ம பந்தம் போல. எங்கே தொடங்கினோம் . எதற்காகச் சந்தித்தோம் என்பது புரியாத போதும் காலம் காரணமே இல்லாமல் அவர்களை அடிக்கடி சந்திக்க வைக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி எதோ ஒரு சம்பவத்தில் முடிவுரை எழுத முயன்று கொண்டே இருக்கும் . அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் ,

போராளிகள் பதுங்கி ஊரை ராணுவம் கட்டிப்பாட்டுக்குள் வைத்திருந்த ஒரு காலப்பகுதியில் அது. ஒரு சிறு விடுமுறை காலத்தில் பிடிவாதமாக அவள் தன் ஊருக்கு வந்திருந்தாள். பலரையும் போல அவளுக்கும் அவர்கள் இல்லாத இடத்தில் இராணுவத்தின் நடமாட்டம் பிடித்திருக்கவில்லை. எப்போது அவர்கள் மீண்டும் இனி இங்கே உலவுவார்கள் என்ற ஏக்கத்துடன் அவர்கள் நடந்த பாதை எங்கும் நினைவுகளால் அளந்து கொண்டு ஒரு வார விடுமுறையும் ஓடிப் போக, திரும்பப் புறப்படுவதற்குத் தயாரான அதிகாலையில் அந்த முதல் வேட்டொலி கேட்டது.

பின், மெல்ல மெல்ல அவை பலத்து , உரத்து வெடிக்க , என்ன ஏதென்று புரியாத அந்த இருள் விலகாத விடிகாலையில் பயணத்தை தவிர்த்து விட்டு வீட்டுக்குள் முடங்கிக் கொண்டாள். இருள் பிரியும் நேரம் தொபு தொபு என்ற கனதியான காலடிகளுடன் அவர்கள் வரிசையாக வீட்டிற்குள் நுழைந்தார்கள். பலமுறையும் பட்ட அனுபவங்களும், கேள்விப்பட்ட கதைகளும் பெண்களை வேகமாக வெளியேறி முற்றத்தில் வந்து நிற்க வைத்தது. அவர்களின் மொழியில் அவர்கள் உரையாடிக் கொண்டிருந்ததை அவதானித்தபோது இரவோடு இரவாக போராளிகள் ஊருக்குள் நுழைந்து விட்ட சந்தேகம் அவர்களுக்கு இருந்தது புரிந்தது.

பதுங்கியவர்கள் திரும்பப் பாய வரும் போது எத்தனை கால இடைவெளியிலும் நிலைதளம்பி கட்சி மாறாத வீடுகளை மட்டுமே தஞ்சமடைவார்கள் என்ற தங்களின் கணிப்பீட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியின் ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு வீட்டைக் குறி வைத்துப் பதுங்கிக் கொண்டது ராணுவம்.

விடிந்து வேலைக்கு, கடைத்தெருவுக்கு என்று வீதியில் இறங்கிய மனிதர்கள் குறிப்பிட்ட வீடுகளைக் கடக்கும் நேரம் வாசல் கரையில் உட்பக்கமாக பதுங்கியிருந்து 'விஷ் விஷ் ' என்று வாயால் ஒலி எழுப்பி அவர்கள் திரும்பிப்பார்க்க துப்பாக்கியைக் காட்டி மிக லாவகமாக அமுக்கி வீட்டுச் சிறையில் போட்டு வீட்டை நிரப்பிக் கொண்டு போராளிகளுக்காகக் காத்திருக்க .......

அந்த மனிதன் வீதியில் அல்லது விதியின் பாதையில் நடந்து வந்தான். ..... இறுகிப்போன , பழுப்பு நிற பாறாங்கல்லில் வார்த்த குளமான சிலை கால் உயிர்த்து நடந்தது போல வீட்டைக் கடந்த போதும் விஷ் விஷ் என்றார்கள் அந்த மனிதன் திரும்பவில்லை கோபமானார்கள். காக்கிச் சட்டைகள் மீது காலத்தால் அளிக்க முடியாத வெறுப்பிருந்தும், தனக்காக உயிர்ச் சலுகைக்காக கூட அவர்களிடம் மண்டியிட முடியாத திமிர்ப்பிருந்தும் , அந்த மனிதன் அவர்களின் ஒலியை சட்டை செய்யாமல் அந்த இடத்தைக் கடக்கும் போது துப்பாக்கியில் கிளிக்கரை இழுத்த சத்தத்தில் அதிர்ந்து, அழுத்திப் பிடித்த தாயின் கரங்களை உதறி விட்டு ஓடிவந்து அவர்கள் முன் நின்று கைகூப்பிய போதே கண்ணீர் வந்தது. திக்கித் திக்கி அந்த மனிதனின் நிலை சொன்ன போது அவர்கள் கொஞ்சம் இரங்கியது போலிருந்தது.

அவன் வீட்டு எல்லையை தா ண்டு முன் அவசரமாக வெளியில் இறங்கி உள்ளே கூட்டி வர அனுமதி தந்தார்கள். அவள் ஓடி , அவசரமா அவன் கைபற்றி " வேலிக்கரை எல்லாம் ஆர்மி மறைஞ்சு இருக்கு. இதுக்கு மேலே நடந்தால் சுட்டிருவாங்க. உள்ளே வா " என்று அவசரத்திலும் பதட்டத்திலும் இதமாகச் சொன்ன போது முதலில் அவளை அன்னியமாக நோக்கி பின் அடையாளம் கண்டு " புள்ள " என்று வெள்ளந்தியா 'ஈ ' என்று இளிச்சு வாசலில் பதுங்கிப் படுத்திருந்த ராணுவத்தை சட்டை செய்யாமல் ,அவளை நம்பி சாதாரணமாக உள் நுழைந்த மனிதன் , வீட்டு விறாந்தையில் ராணுவம் பிடித்து நிறைத்திருந்த மனிதர்களைக் கண்டதும் திடுக்குற்று தலையைக் குலுக்கிக் கொண்டான். கண நேரத்துக்குள் கண்களில் தெரிந்த அதிர்வில் அவசரமாக நேரத்தில் எதையோ ஞாபகப் படுத்துவது போன்ற பாவனை.

பட்டென கைகளை உதறிக்கொண்டு கண்மண் தெரியாத வேகத்தில் வீட்டில் இருந்து வெளியேறி வீதியில் இறங்கி வேகமாக ஓடத் தொடங்கினான். ராணுவம் அதிர்ந்து சந்தேகமாகி துப்பாக்கியை குறிவைத்து இயக்க ' டப்' என்ற ஒரு சிறு சத்தத்துடன் பின் மண்டையில் ப்ளக் என குமிழியாய் இரத்தம் பாய்ந்து முதுகில் கோடாய் வழிய வீதியின் ஓரத்தில் சத்தமில்லாமல் சாய்ந்தான். அவள் ஓலமிடத் திறந்த வாயை அம்மா தன் கைகளால் இறுக்கி பொத்தி மூடி அணைத்துக் கொண்டார்.

அன்று மாலை வரை ராணுவம் எதிர்பார்த்துக் காத்திருந்த போராளிகள் வராமல் போக, அந்தத் தகவல் ஊர்ஜிதப் படுத்தப்பட்ட பொய்த்தகவலாகி அவர்கள் வெளியேறிப் போனபின் அவள் வீட்டை விட்டு வெளியே வந்தாள். வீட்டுக்குச் சற்றுத் தள்ளிய வேலிக்கரைக் காவிளாய்ப பற்றைக்கு நடுவில் அநாதரவாய் சுருண்டு கிடந்த அந்த அப்பாவி மனிதனைப் பார்த்தாள். இரத்தம் உறைந்து வடிவது நின்று , சற்று நிறம் மங்கி விறைத்திருந்தான் . இரத்தம் வடிந்த ஓரங்களில் எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. சிறு இலையான்களும் . மணி இலையானும் சுற்றிப் பறக்கத் தொடங்கியிருந்தன. பொங்கிக் கொண்டு அழுகை வந்தது.

அவனை யாரும் தேடி வரமாட்டார்கள் என்பது புரிந்த போதே 'யாருமற்றவன்' என்ற வார்த்தைக்கு தாத்தா சொல்லாமல் விட்டுப் போன அர்த்தம் புரிந்தது. மனிதர்களுக்குள் வாழ்வதால் நாம் எமக்கான மனிதர்களுடன் வாழ்கிறோம் என்பது அர்த்தமில்லை. இதயம் தொட்டு நேசிக்காத வாழ்க்கையில் எல்லோரும் தனித் தனிப் பிரகிருதி என்ற தெளிவு வந்தது.

அருகில், அயலில், உறவில் அவன் பற்றி சொன்ன போது யாருக்கும் அது முக்கியமானதாகவும் இருக்கவில்லை அதைவிட ஆர்மி கொன்ற உடலை எடுத்துப் புதைப்பது ஆபத்து என்பதே அவர்களின் முக்கிய அறிவுரையாக இருந்தது.

அந்த மனித உடலையே பார்த்துக் கொண்டு அசையாது நின்றாள் அவள் . கொன்றது ராணுவம் தானா என்ற கேள்வி ஆழ் மனதுக்குள் இருந்து ஆவேசமாக நெருப்பெரிக்க, மனதில் தாத்தாவின் செலவு நாள் வந்து போனது.

இதே வீட்டின் , இதே விறாந்தையில் , இதேமாதிரி அன்றும் அதிகமாகக் கூட்டம் கூடி இருந்தது. அவன் வந்து குழந்தை ஒன்றைக் கூப்பிட்டான். வயிற்றைத் தடவி, பசியைச் சொல்லி ஒரு பிடி உணவு கேட்க , குழந்தை உள்ளே ஓடிற்று. கூட்டம் அவன் மேல் பாய்ந்தது..... அவன் பயந்து ஓடினான்.

கொன்றது ராணுவம் தானா?

Sunday, April 16, 2017

அன்பே வா அருகிலே......

தற்போதைய ஊடகங்கள், முக்கியமாய் தொலைக்காட்சிகள், அதிலும் பிரத்தியேகமாய் எம்மவர் இல்லங்களில் பிரதான அங்கமாகவிருக்கும்  தமிழ்த் தொலைக்காட்சிச் சின்னத்திரைத் தொடர்களை  அவதானித்தால்  தமிழ்ச்சமூகத்துக்கு அதிமுக்கிய சுவாரசியத் தொண்டாற்றுவதும், குடும்பநல அறிவுரை மையங்களாக விளங்குவதும்  இவைகள் தான் போலிருக்கிறது.

முன்னெல்லாம்  வீடுகளில் தொலைக் காட்சிகள் அரிதாக இருந்த காலங்களில், பின் தொலைக்காட்சித் தொடர்கள் அரிதாக இருந்த காலங்களில் பல  வீடுகளில் வானொலிச் சத்தம்நிறுத்தமின்றிக் கேட்டுக்கொண்டே இருப்பதுண்டு.  அது தன் பாட்டில் இயங்கும்.  அவதானத்தில் சிறுபகுதியை அதற்குக் கொடுத்துக் கொண்டு  மக்கள் தங்கள் அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
தொலைக்காட்சிகள் அப்படியானவையல்ல "அன்பே வா, என் அருகே வா,  எனக்கு முன்னே வந்து  இருந்து என் முகத்தையே வைச்ச கண் எடுக்காமல் பார். நான் சொல்வது பற்றிய  சரி பிழை  பற்றிச் சிந்திக்காதே எனக்குள்ளேயே மயங்கிப் போய்  அனைத்தையும் உள்வாங்கு. உன் யதார்த்த உலகத்தில் இருந்து  விலகி வந்து எனக்குள் தொலைந்து போ" என்று  ஒரு போஸஸிவ்  காதலன் அல்லது காதலி போல மயக்கி அழைத்து  மருட்டி வைக்கும். .  நாங்களும் அந்த அழைப்பில் மயங்கி  அதற்குள் போய்  வெளி உலகை விட்டு வெளியே போய்  எமக்கான தனி, உலகு தனிப்பட்ட சிந்தனைகள் ,என எம் அடையாளத்தைத் தொலைத்து விடுகிறோம் போலிருக்கிறது.

காலை எழுந்து வீடுகூட்டி  வீட்டுக்கு சாம்பிராணி புகைக்கிற மாதிரி, தேவாரம் ,சுப்பிரபாதம் , அல்லது ஏதாவது மென்னிசை ஒலிக்க விடுற  மாதிரி, தூங்குகிற குடும்ப அங்கத்தினரை தட்டி எழுப்பி விடுகிற மாதிரி முக்கிய வேலையாக தொலைக்காட்சியும் தட்டி எழுப்பப்படுகிறது. பிறகென்ன இரவு படுக்கைக்குச் செல்லும் வரை அதுவும் உறங்குவதில்லை.  அதுவரை யாரோடும் யாருக்கும் பேச்சுவார்த்தை இல்லை. வீட்டில் நடக்கும் சகல காரியங்களும் அதற்கு முன்னாற் தான். காய்கறி நறுக்கினாலும் அதில்  பூச்சி புழு  கிடந்தாலும், சமைத்தாலும்லும் சாப்பிட்டாலும் அதில் உப்பில்லாவிட்டாலும் காரம் தூக்கல் என்றாலும் எதுவும் உணராது எல்லாம்  சின்னத்திரையோடு ஒன்றி அப்படியே ஐக்கியமாகிப் போவதில் எதுவும் உறுத்துவதில்லை.  அந்த நிழற் கதாபாத்திரங்களோடு,  நிஜத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்  மனிதர்களுக்கான  தொடர்பை எப்படி எழுத்துக்களால் வர்ணிப்பது என்பது புரியவில்லை.  இதில் அந்த நிழற்கதபாத்திரங்கள் அவர்கள் வாழ்க்கைகள் தவிர , குடும்பப் பிரச்சனைகள், தேவைகள் , அங்கத்தினர்கள் ,அயல் என அனைத்துமே இரண்டாம் பட்சமாகி விடுகிறது.








அது நடுவீட்டில் கிடந்தது கொண்டு அதிகாலையிலேயே  சாபம் போடும், சதி செய்யும், பழிவாங்கும், கொலை  செய்யும், குடும்பம் குலைக்கும்,அவதூறு பேசும்,  தற்கொலை செய்யும், அறைகூவல் விடும். இறந்து பின்பு பிறந்து இணைவேன் என்றுஅதிநம்பிக்கையோடு  சொல்லும், இறந்து வந்து பழிவாங்குவேன் என சூளுரைக்கும்  இப்படி தன்னால் ஆனமட்டும்  மிகக் கடமை உணர்வோடு எதை எல்லாம் எப்படி என்னென்ன விகிதாசாரத்தில் கலந்து கொடுத்தால்  மக்களுக்கு சுவாரசியமும் , மக்களிடம் இருந்து  தொடருக்கு ஆதரவும் கிடைத்து  அத் தொலைக்காட்சி நிறுவனமும் அத்தொடருக்கானோரும்  காசுபார்க்க முடியுமோ அத்தனையும் கச்சிதமாகச் செய்யும். அதிலும் ஏதாவது தொலைக்காட்சியின் ஏதாவது ஒரு தொடர் சற்றுப் பிரபலமாகி இருக்கிறதெனில், அதிலுள்ள முட்டாள் தனங்களை விட இன்னும் மனித மனங்களால் கண்டுபிடிக்கப்படாத முட்டாள் தனத்தை அறிமுகப்படுத்தி தமது தொடரை பிரபலப்படுத்தி விடமுனையும் இயக்குனர்கள் ஆதிசிவனுக்கும் மேல் அத்தனை அழித்தல் வழிமுறைகளும் தெரிந்த கடவுளர்கள்

ஆரம்ப காலங்களில் வந்த தமிழ் தொடர்களைக் குறிப்பிடவில்லை நான். சுமார் 25 வருடங்களுக்கு முன்  k. பாலச்சந்தர்  எடுத்த  ரயில் சிநேகமும் , சுஹாசினி எடுத்த பெண்ணும் அண்மையில் பார்க்கக் கிடைத்தது.  தற்கொலையில் இருந்து காப்பாற்றப்பட்ட வாழ்வில் பின்னாலும் வசந்தம் உண்டு என்பதும் அந்தக் கணங்களைக் கடப்பதுமட்டுமே  சிரமம் என்பதும் தனியொருவரோடு தொடர்பு பட்டதல்ல வாழ்வியல். அது சங்கிலித்தொடர் போல பல பந்தங்களை இணைத்தது என்பதும், ஒரு இறப்பு பலர் மனதில் ஏற்படுத்தும் பாதிப்புக்களும் சொல்லும் தொடர் ஒன்று. அடுத்து, சுகாசினியின் பெண் தனித்தனி சிறு நாடகங்களாக பலவிதமான பெண்களைப் பேசியது தவிர இப்படியான கொடுமையான மூடத்தன வழிகாட்டுதல்கள்  எதுவும் இருக்கவில்லை. 

மற்றெல்லாவற்றையும் விட காட்சிப்படுத்தல்கள் இலகுவாக மனித மனங்களிடையே செய்திகடத்தும்  வல்லமை கொண்டன  என்ற  மனோவியல் தத்துவத்தை   நன்றாகக் கற்று வைத்துக்கொண்டு அந்தப்பலவீனத்தில்  காசுபார்க்கும் இழி தொழிலை அநேகம் அனைத்துத் தொலைக்காட்சிகளும் சமூகப் பொறுப்போடு கச்சிதமாகச் செய்து கொண்டு தான் இருக்கின்றன.
இலாப நோக்கில் நகர்த்தப்படும் இச்சமூகச் சீரழிவுத் தொடர்களுக்குள்  சிக்கிக் கொண்டு, முழுநேரமும் அதை உள்வாங்குவதால், அது இலகுவாக மூளைச்சலவை செய்து பரப்பும் கருத்துக்களை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு ஏதோ ஒரு தொடரின் ஏதோ  ஒரு கதாபாத்திரத்துக்கு   ஏற்பட்டது போல ஏதாவதொரு இக்கட்டான நிலை தமக்கு ஏற்படும் போது  உடனடியாக மனதில் எழுவது குறிப்பிட்ட காட்சி, அந்தக் கதாபாத்திரம் அது எடுத்துக் கொண்ட முடிவு என்பன தான்.  அடிப்படையில் இது உளவியல் சார்ந்தது. சுவாரசியமாக உள்வாங்கவைக்கப்பட்டு  அந்தக் காட்சியை ஏற்கத்தக்க வகையில் சலவை செய்யப்பட்ட மூளை அப்படித்தான் அனேகமாக முடிவெடுக்கும் .   அதற்கு மேல்  சிந்திக்க முடியாமல்  முடிவுகளையும் அத் தொடர்கள் போலவே தேடிக் கொள்ளும் என்பது மனித உளவியல் பற்றி சற்றேனும் உணர்ந்தோர்க்கு அன்றி அறிந்தோர்க்குப் புரியும்.

அண்மைக்காலமாக  முகநூல் பதிவுகளில்  பலமான இடம் பிடித்துவரும்  முகநூலில் நேரடி வாக்குமூலம் கொடுத்துவிட்டு அல்லது அறைகூவல் விட்டுக் கொண்டே பதிவிடப்படும் மரணங்கள் அதன் பின்னணிகள்  போன்றவை கூட  இவற்றின் ஒரு முகப் பாதிப்புக்கள் என்றே எண்ணக் கிடக்கிறது. 
பார்வையாளர்கள், ரசிகர்கள் போலவே  அத்துறை சார்ந்தோருகுள்ளும்   மாதம் ஒரு அவல இறப்பாவது   நிகழும் நிலைக்கும்,  அந்த இறப்புக்களின்  பின்னணியில் அவர்களின்  தொலைக்காட்சித் தொடர்கள் போலவே சாதாரண சமூகத்துக்குத் தூரமான பல  காரியங்கள் நிகழ்ந்திருப்பதும்  இறப்பின் பின்னான  அவர் சார் சமூகத்தால் வெளியிடப்படும் தகவகள் மூலம் அறியக் கிடக்கும் போதும்  உணரமுடிவது ஒன்றே தான்.

இத்தொடர்களின் கருத்துக்கள் காட்சிகள்  ஒரு கவர்ச்சிகரமான தேவன் போல அலங்கரிக்கப்பட்ட ஒரு  பலமானஅரக்கனாக மனித மனங்களை ஆக்கிரமித்து உள்ளே உட்கார்ந்து கொண்டு அவர்களின் உளவியல் பலவீனங்களைத தூண்டி விட்டு தன்னைப் பெருகப் பெருக பிரமாண்டமாக வளர்த்துக் கொண்டிருக்கிறது . அதன் காலடியில் வெறும் உயிரற்ற சடலங்களாய் விழுந்து கொண்டிருக்கிறது  சிந்தனை சலவை செய்யப்பட்டு வெறும் வெற்றுத் தாள் ஆக்கப்படும்  மனிதம்.

Friday, April 14, 2017

விதைப்பது விசமெனில் அறுப்பது.......?


அப்போது என் சிறுவயதில் வீட்டில், வீட்டை விட்டு சற்று எட்டமாக, வீட்டுச் சூழலுக்கு மணம்  ஓரளவு எட்டாத தூரத்தில் மூன்று நான்கு எருகூடுகள் இருக்கும்,  அவை ஒன்றில் ஒன்று தொடுத்தபடி அமைக்கப்பட்டிருக்கும்.  வெளிப்பக்கம் நல்ல தீர்க்கமாக அடைக்கப்பட்டோ கட்டப்பட்டோ இருந்தாலும் அடிப்பக்கத்தில் கொங்கிரீட் தளம் போடுவதில்லை. மழைகாலத்தில் சாணத்தோடு நீர் தேங்கி விடும் என்பதால். இரவு கட்டைக்கு வந்து தங்கிய பசுக்கள் காலையில் மேச்சலுக்குச் செல்லு முன் மாட்டுக்கட்டை துப்பரவு செய்து அள்ளிக் குவிக்கும் எருவை ஒவ்வொரு கூடாக நிறைய நிறைய   மறு கூட்டில் சேகரிப்பார்கள்.

இப்படியே கோடை முழுவதும்  சேகரிக்கப்படும் எரு, மழைக்காலத்தின் அறிகுறியாக  ஒரு பெரு மழை பெய்தால் போதும்  மிக மதிப்புப் பெற்றதாகி விடும். தோட்டங்கள் கொத்திச் சாறவும் வயல்கள் உழவும் தொடங்கிவிட்டால்  வீதியெல்லாம் எரு வாங்கும் டிரைக்டர்கள் நிறைந்து விடும் .  பொன்னைப் பேரம் பேசுவது போல ஒவ்வொரு வீடாக பேரம் நடக்கும். பேரம் படியாதவிடத்து, அடுத்த வீடு பார்த்து வாங்குவோர் போக  அடுத்த ட்ரைக்டருக்காக  விற்போர் காத்திருப்பார்கள். பின் விட்டதை தேடி போனோர் வருவார்கள்.  எருக்காரர் விலையை இன்னும் அதிகமாக உயர்த்தி கிராக்கி காட்டுவார்கள்.

எருவுக்கு கடகக் கணக்குத் தான். பேரம் படிந்து விலை கொடுத்து விட்டாலும்  வெட்டி அள்ளும் போது எத்தனை கடகம் வந்தது என்பதை தான் கணக்குப் பார்ப்பார்கள்.  அடிமண்ணோடு உக்கிப்போன எருவையும் சேர்த்து  அவர்கள் அள்ள, வீட்டு மண்ணை வெட்டிக் கொண்டு போகாதே என பாட்டி கத்த மிகவும் சுவாரசியமான பொழுது போக்கு எனக்கு அது அப்போது. என்ன   ஒன்று எரு உக்கி, சிலவேளை அதற்குள் இருந்து வண்டு எல்லாம் வெளிப்பட்டு ஓடும்.  மண்வெட்டியால் எருவை வாரி வாரிக் கடகத்தில் அள்ளும் போது ஒரு வித வெக்கை நெடி முகத்தில் அறையும். சின்னதா  கறுப்புக் கருப்பா  வண்டுகள் வெளிப்படும். நுங்கு மாதிரி கொளகொள வெள்ளையா கருப்புநிறக் கண்களோட கொறவணம்புழு  என்று சொல்லப்படுறஒன்று  ஒரு ஏழு எட்டு வயதுப் பிள்ளையின் கையை பொத்திப் பிடிச்ச அளவில  சுருண்டு கிடக்கும் மெய்யா சொன்னால் எனக்கு அந்த நெடியும் மழையில் நனைந்த கொளகொள சாணமும்  அந்தப் புழுவும் பார்த்தாலே வாந்தி வரும் அப்போது.  ஆனாலும் அன்று  மட்டும் வேடிக்கை பார்க்கும் ஆவலில் மூக்கை பொத்திக் கொண்டு அவ்விடத்தை சுத்தி அலைந்து கொண்டிருப்பேன்.  அதை விட அம்மாவின்,  தாத்தாவின் கல்லாப்பெட்டி நான் என்பதால் ஒரு கூட்டுக்கு அந்தக் காலத்திலேயே  200ரூபாய்க்கு மேல் விலை போகும் எரு மூன்று நான்கு கூடு விற்றால் அவ்விடத்தில் நின்று வாங்கி அதை  என் கையில் தான் தருவார்கள்.எண்ணி எடுத்து வை என.  என்னை பெரிய மனுஷியாய் மதிப்பது போலொரு  பெருமை அப்போது.

எரு வாங்கியவர்கள் கூட அதை வண்டியில் ஏற்றும் போது பழைய எரு புதிய எரு எனத் தனித்தனியாகப் பக்கமாகப்  பிரித்துத் தான் வண்டியில் ஏற்றுவார்கள்.  புதிய எருவை அப்படியே  உடனேயே பயிர்களுக்குச் சேர்த்தால் வேரடி  வெந்து  பட்டுப்போய் விடும் என்பார்கள்.  அதை  உழுது பயிர்ச்செய்கைக்கு தயார்ப்படுத்தும் நிலத்தில் விசிறவும்,  பழைய எருவை முளைத்து விட்ட கன்றுகளுக்கு அடியில் தாட்கவும்  உபயோகிப்பார்கள் என்பது  என் வீட்டு முதியவர்களினதும்,   விவசாயத்தை விரும்பி மேற்படிப்பாகப் படித்த என் மாமா ஒருவரிடமிருந்தும் எனக்குக் கிடைத்த விளக்கம்.
 (அப்படி நாட்டையும் அதன் வளத்தையும் நேசித்த,  நாட்டை விட்டு விலகவே கூடாது எனப் பிடிவாதமாக இருந்த அந்த மனிதனின்  சுதேசியப் பற்றுக்கு தேசம் எதை பரிசளித்தது என என் பல பதிவுகளில் சிறிது சிறிதாக நான் சொல்லிச் செல்வதை நீங்கள்  என் பக்கத்தை தொடராக  வாசிப்பவரெனில் புரிந்திருக்கலாம் )




அந்த ஒரு வருடசேகரிப்பு  எரு விற்பனையின் பின் கூட்டில் எரு அதிகமாகச் சேராது .  அது இன்னும் அருமையான பொருளாகி விடும் மூன்று நான்கு நாட்கள் சேர்த்த எருவே போதுமென்று என்ன விலைக்கெனினும் வாங்கிவிட்டால் போதும் என வாங்க வருபவர்கள் அடம் பிடிப்பார்கள்.  சுளை சுளையாக நூறு ரூபாய் தாள்கள் கையில் புரளாது, பத்துக்களாய் புரள்வது குறைபோல இவர்கள் விற்க மறுப்பார்கள், என்று அது இன்னொரு வேடிக்கையான பேரம்.   அப்போதெல்லாம் மழைகாலத்தில்   அல்லது மழைக்குப் பின்னால் வெயில் எறிக்கும் போது தோட்டத்தைக் கடக்கையில் சாணத்தின் பச்சை வாசம்  மூச்சில்  மோதி  முகம் சுழிக்க வைக்கும் .  வயல்களில் அடி நீர் வற்றிக் கிடக்கும் போது  எருத் துணிக்கைகள்  பார்க்க அருவருப்பாக இருக்கும் கால் வைக்கப் பிடிக்காமல்  மனம் கூசும். 

ஆனாலும்  காலத்தின் நவீன  நகர்வோடும் நடக்கவே  வழிநடத்திக் கொண்டாலும்   அதேயளவு  அதற்கு மறுபக்கமாக  பழமை போற்றும் பண்பும் வீட்டில் கவனமாக பாதுகாக்கப் பட்டதால்  வயலில், தோட்டத்தில் எல்லாம்  காலணியுடன் கால் வைத்து விட முடியாது.  கோவில் வாசலில் செருப்புக் கழட்டி விடுவது  போல  வரப்பில் கழட்டி விட்டு விட்டுத் தான் வயலிலோ தோட்டத்திலோ இறங்க வேண்டும்.   அருவருத்து இறங்க மறுக்கும் பிடிவாதம் எல்லாம் எடுபடாது.    வெறுங்காலுடன் தோட்டத்து சதுப்பில் நடந்தாலும் ,  வயலில் கலங்கித் தெரியும் தண்ணீருக்குள் அங்கிங்கென துள்ளித் திரியும்  நீர்த்தும்பி  நீச்சலடிக்கும் நீர்ப்பூச்சி,  சின்னதா நீர்ப்பூச்சி அளவில் ஓடும் பலமற்ற வயல் நண்டுகள்  எல்லாவற்றுக்கும் பயந்து  பயந்து  வயல் நீரில்  கால்வைத்து நடந்தாலும்  அவை பாதங்களில்  தோல் உரியும் அளவு ஒவ்வாமையை கூட என்றும் ஏற்படுத்தியதில்லை.

பின் வந்த காலங்களில் வீட்டுச் சூழலில் போராளிகள் முகாம்கள் அதிகமாக இருந்தன.  வீட்டில் தாராளமாக சாணம் சேர்ந்திருந்தது.  அவர்கள் அதிலிருந்து  சமையல் எரிவாயு  உருவாக்கும் பொறிமுறையை  நடைமுறைப்படுத்தித் தர அனுமதி கேட்டார்கள்.  வீட்டில் உள்ள இரண்டாம் தலைமுறைக்கு அது பற்றிய போதிய விளக்கம் இருந்தது. அதனால் சாணத்தின் பசளையாகப்  பாவிக்கப்படும் தன்மையில் எந்தவித தீங்கும் நேராது என்ற   போதும், புரியாத பாட்டி தாத்தாவின் பதில் "நாங்கள் வழமை போல  தடி, தண்டு, பாளை, மட்டை,  வைத்துச் சமைப்பம்.  நீங்கள் எருவை எரிச்சுப் பழுதாக்கிப் போடாதீங்கோ"  என்பதாகவே இருந்தது.  அத்தனை தூரம் அப்போது  அவர்கள் இயற்கை விவசாயத்துக்கு முக்கியம் கொடுத்திருக்கிறார்கள் என்பதே இப்போது நினைக்கும் போது பெருமையாகவும்  எமது தற்போதைய  வாழ்க்கை முறை மீது வெறுப்பாகவும் இருக்கிறது.

அதன் பிற்காலங்கள் எங்கள் வீட்டுக்குள்ளும்  மெல்ல மெல்ல  செயற்கை  உரவகைகள் உள்நுழையத் தொடங்கின.   எங்கள் வீட்டின் ஒதுக்குப் புறமான  அறையின் ஒரு மூலையிலும்  ஒரு பெரிய சாக்குப் போன்ற பிளாஸ்ரிக் இழைகளால் பின்னப்பட்ட  வெள்ளைப் பையில் அடைக்கப்பட்டபடி  அது வந்து  இடம்பிடித்துக் கொண்டது.  வழமை போல அதே ஆர்வக் கோளாறில்

"என்ன" வென்று விசாரித்தேன்.

" பசளை "என்று  விளக்கம் சொன்னார்கள் .

"அது தான் எருக் கூட்டுக்குள்  குப்பைக் கூட்டுக்குள் எல்லாம் தாராளமா இருக்கே இது எதற்கு?"  என்றேன்.

"அது போதாது. அதோட  இது கொஞ்சம் போட்டால் போதும் அதிகமா  விளைச்சல் தரும்" என்றார்கள் .

அதுவொரு  வாரவிடுமுறை நாள்.  பின்மதிய நேரம்  வீட்டில் எல்லாரும் மதியச்சாப்பாட்டின் பின்  ஆளுக்கொரு  புத்தகத்துக்குள்  அல்லது எல்லாரும் ஒரே புத்தகத்துக்குள்   வழமைபோல புதைந்து கொண்டார்கள்.  பின் அப்படியே உண்டகளை வாசித்த களைப்புத் தீர வெயில் சரியும் வரை உறங்கிப் போவார்கள்  அன்றும் அப்படித்தான்.

எல்லோரும் தூங்கிய பின் ஆட்கொள்ளும்,  என்ன செய்வது எனத் தெரியாமல் மண்டைக்குள் குறளிப் பேய் பிடித்தாட்டும் எப்போதுமான தனிமை எனக்கு.  எவ்வளவு நேரம் தான் ரேடியோவுடன் சேர்ந்து நான்   டூயட்பாட, அதுக்கு நாயும் பூனையும் கூட இருந்து ஹார்மோனியமும் மிருதங்கமும் வாசிக்க முடியும்.  அதுவும் சலித்துப் போன ஒரு பொழுதில்  வழமை போல  ஏதாவது செய்ய வேணுமே எது செய்வது என்று தெரியாமல் தனியாக வீட்டைச் சுற்றிக் கொண்டிருக்கும் நிலை .  அன்று என் கண்ணில் பட்டது அந்த உரப்பை. 

வீட்டுக் கிணற்றடி அருகே நின்ற இரண்டு எலுமிச்சை மரங்களும் இரண்டு மாதுளை மரங்களும்  தண்ணீர் போகும் வாய்க்காலுக்கு அருகே நின்ற  கமுக மரங்களும் அந்த சேலம் மாமரமும்  வீட்டில் கூட்டி அள்ளிக் கொட்டப்படும் சருகுகளின் சத்துறிஞ்சி நன்றாகத் தான் காய்த்துக் கொண்டிருந்தன.  அவை இன்னும்  அதிகமாக இலையெல்லாம் காயாக காய்த்துத் தொங்கவேணும் என்று அப்போது நினைத்தேனோ என்னவோ இப்ப எனக்கு நினைவில்லை. 

ஒவ்வொன்றின் அடியிலும் குப்பை தாக்க வெட்டப்பட்டிருந்த குழிகளில்  ஒன்றுக்கு ஒன்று வஞ்சகம் வைக்காமல்,  ஒவ்வொன்றிற்கும் ஒரு  கொத்தளவு. (ஒருகொத்து என்பது  மூன்றரை நான்கு  ரின்பால் பேணியளவு) வெள்ளை வெள்ளை குறுணி போலிருந்த அந்த  உரத்தை எடுத்துக் கொண்டு போய் பகிர்ந்து  கிடங்குகளில் கொட்டி விட்டேன்.  போதாதுக்கு அது கரைய வேண்டும் என்பதற்காய் ஆளுக்கொரு வாளி தண்ணியும் அக்கறையுடன் வார்த்துவிட்டேன் . அதுவும் போதாதுக்கு பக்கத்தில் இருந்த எங்கள் வீட்டில் நின்ற எலுமிச்சை , பாஷன்புரூட் கொடி எவற்றையும்  மிச்சம் விடவில்லை நான். 

கிடுகு பின்னுவதற்காக  ஓலை நனையப் போடும் வேலிக்கரையில்  ஒரு பெரிய முருங்கை  நன்றாகப் பருத்துக் கொஞ்சம் பாறிப் போய்இருந்தது. அது எப்போதும் கல்யாணக் களையுடன் தாராளமாகப் பூத்துக் குலுங்கும் .  கையெட்டும் உயரத்தில் உள்ள  பூவெல்லாம் பறித்து ஒரு வருசத்துக்குப் போதுமான வடகம் போட்ட பிறகு எஞ்சியவையே  கூட   நீட்டு நீட்டா ஊருக்கே காய்த்துத் தொங்கும். அப்படிக் காய்ப்பதும்  போதாது போல  அதற்கும் போட்டேன்.  அதனடியில்  நத்தைகள்  சில  இருந்தன.   போடும் போது அதன் மீதும் அந்த வெள்ளை இரசாயன உரம் கொஞ்சம் தாராளமாகவே  தூறிக் கொண்டது. 

வெயில் சரிந்த நேரம்  வீடு மெல்ல மெல்ல  சோம்பல் முறித்து எழும்பியது.  எழும்பும் போதே  மாதுளை இலைகள்  எலுமிச்சம் குருத்துக்கள்  கொஞ்சம் பளபளப்பு மங்கின மாதிரித்தான் இருந்தது.  மாலை நீர் தெளித்து முற்றம் கூட்டும் போதே இலைகளும் சுருளத் தொடக்கி மரங்கள்  மனம் சிணுங்கிக் கொண்டு நிக்கிற மாதிரி வித்தியாசம் காட்டி பச்சையாக உதிரத் தொடக்கி விட்டிருந்தன. , எல்லாரும் காரணம் புரியாமல்  மரங்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டு நின்ற போது  தான் நான் மிக அறிவாளித்தனமா  அவர்களுக்கு சத்து மருந்தூட்டிய என் மேதாவித்தனத்தை பெருமையோடு வெளியிட்டேன்.

அவ்வளவுதான்,

எங்கள்  பக்கம் ஆழக்கிணறுகள், அதேபோல  ஆழத்தில் அதிக நீரூற்றுகள். ஆட்த்தாட்கும்  உயரத்துக்கு  தண்ணீர். . இறைக்க இறைக்க  பீறிட்டுக் கொண்டு ஊறும். அடிமட்ட  நீர்வரை அவ்வளவும் மரங்களுக்கு இறைக்கத்தொடங்கினார்கள்.  அந்த  இரசாயன உரத்தின் வெம்மையடக்க. 

இறைப்பதற்கு முன்னேயே அதிக வீரியத்தோடு அதுவேரோடு ஊறி விட்டதோ  என்னவோ எல்லாம் பச்சை பச்சையா இலை உதிர்த்து அந்த இடம் அத்தனையையும் வெறுமையா வெட்டவெளியா ஆக்கிக் கொண்டு மெல்ல மெல்ல மூன்று நாட்களில் செத்துப் போயின.  முருங்கை மரத்தடியில்  அந்த வெள்ளைக் குறுணி உரம் கொட்டப்பட்ட  நத்தைகளின் சதைப் பகுதி வெறும் தண்ணீராகக்  கரைந்தோடி அவற்றிற்கு அருகே எச்சில் துப்பிக் காய்ந்த அடையாளம் போலிருக்க அத்தனை நத்தைகளும் வெறும் கோதுகளாக இருந்தன. "கொடும் விஷம் "என்று தாத்தா முணுமுணுத்துக் கொண்டார்.

அதன் பின் சில வருடங்களின் பின்  ஒரு நல்ல மழை நாளில் வயலில் தண்ணீர் தேங்கி இருந்த போது சித்தப்பா  ஆட்களைக் கூட்டிக் கொண்டு போய் வயலில்  உரம் விசிறி விட்டு வந்ததைப் பார்த்தேன்.  அப்போது சற்று வளர்ந்திருந்தேன். நான் எதிர்பார்க்கும் பதில் வரும் வரை  வாயைக் கிண்டிக்  கிளறக் கற்றிருந்தேன்

"இப்ப பயிர்கள் வெந்து இறந்து போகாதா" என்று கேட்டேன்

"அது போதிய தண்ணியுடன்  பயிரைத் தாக்காத அளவு விசிறினால் வெந்து போகாது"  என்றார்.

"அப்ப உயிர் போகாத  அளவு கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுப்பது மாதிரியா ?" நிமிர்ந்து யோசனையுடன் பார்த்தார்.

அதற்கு மேல் பதில் சொன்னால் கதை வளரும். நான் எதிர்பார்க்கும்  பதில் வரும் வரை  விடமாட்டேன் என அவருக்குத் தெரியும். அதற்கு மேல் நான் நினைத்ததை நிலை நிறுத்த அத்தனை நியாயமும் முன்னிறுத்தி  அவர்கள் வாயால் ஒப்புக்கொள்ளும் வரை போகும் இடமெல்லாம் முன்னும் பின்னுமாக அலைந்து  வாதாட்டம் வளரும்.  என் இரு  சித்தப்பாமாரும்  மாமாமாரும் என்னுடன் வாதாட்டமோ  போராட்டமோ இல்லாத  பாசம் நிறைந்தவர்களாக இருந்ததால்
என் கேள்விக்குப் பதில் வரவில்லை :

ஆனால் உரம் விசுரிய பின்  வயலுக்குப் போனபோது  முன்போல் பூச்சி புழு அச்சுறுத்தாமல் நீர்  தெளிவாக இருந்தது. மனம்  கூசாமல் கால் வைக்க முடிந்தது. 

"உரம் விசிறிய உடன்  தண்ணி காலை வைக்காதே "

என்று கத்தியபடியால் அது எப்படி இருக்கும் என அறிய தண்ணீருக்குள்  கால் வைத்து நடந்து பார்த்தேன்  நீர் கதகதப்பாக உணர்ந்தேன்.  வீட்டுக்கு வந்தபோது  பாத மேற்பரப்பு சிவந்திருந்தது.  உப்புநீர் போட்டு கழுவி விட்டு நல்லெண்ணெய் தடவி விட்டா பாட்டி.  சில நாட்களில்  பொட்டுப் பொட்டாக பாதத்துத் தோல் உரியத் தொடங்கியது.

காலம் காட்சியை மாற்றி, காக்கிச் சட்டை போட்டுவந்த இந்திய இலங்கை ராணுவங்களும்   அவற்றுடன் எலும்பு கௌவ்வித் திரிந்த  கூட்டமும் கொன்று தின்றதில்  பசுக்கள்  போய்,  வீடு  போய்,  தாத்தா பாட்டி போய் நாங்கள் எல்லாம் சிதறிப் போனபின் ....

இந்த மேலைத்தேய மண்ணில் இருவாரங்களின் முன்  வேலைக்குப் போகும் போது காருக்குள் சற்று வெக்கையாக இருந்தது.  குளிர் காலத்துக்குப் பின்னான முதல் வெயில் தோல் எரிவது போல அசௌகர்யமாக உணர்ந்து கார்க்கண்ணாடியை சற்று நீக்கினேன்.காற்றில் கலந்து வந்து கும்மென முகத்தில் அடித்தது கோமியமும் சாணமும் கலந்த நெடி.  ஏனோ ஊர் நினைவு வந்தது.  என் பணியிடத்தில் இருந்து  சாளரத்துக்கு வெளியே பார்க்க, தூரத்தில் தெரிந்த விவசாய  நிலத்தை நவீன உழவியந்திரம் தன் பின்னடிப் பகுதியால்  உழுதுகொண்டிருக்க, அதன் மற்றொரு பகுதி துர்நாற்றத்துடன்  இயற்கை உரத்தை விசிறிக் கொண்டிருந்தது. 

அது முற்று முழுதாய் சாணம் கோமியம் மட்டும் கலந்த வாசனையில்லை  என்பதை உணர்ந்து, பண்ணைக்காரக்குடும்பத்திலிருந்து வந்து எம்முடன் பணியாற்றும் ஒருவரிடம் விசாரித்த போது

"அது  மாட்டின் கழிவுகள் மட்டுமல்ல, பன்றி உட்பட பண்ணையாக வளர்க்கப்படும் எல்லாவற்றின் கழிவுகள் சேகரிக்கப்பட்டு விசிறப் படுகிறது" என்றார்.

"செயற்கை உரவகைகள் நீங்கள் பாவிப்பதில்லையா?" என்றேன்.

"அவையும் பாவிக்கப்படுகின்றன .  ஆனால் அவற்றில் இருந்து கிடைக்கும்  விளைபொருட்களை குறைந்தவிலைக்கும் இயற்கை முறை விளைபொருட்களை அதிக விலைக்கும் விற்கப்படுகிறது.  Bio எனக் குறிக்கப்பட்ட  சற்று விலை அதிகமான பொருட்களைப் பார்த்திருப்பாய்  அல்லது வாங்கியிருப்பாயே"  என்றார். 

ஆக, நல்லதும் அல்லதும்  உணர்ந்து அதையும்  சொல்லியே விளைவித்து விற்கும்  அவர்களின்  அறிமுக இரசாயனங்களை மதிப்பானவை என எண்ணிக்கொண்டு, வெள்ளைக்காரன்  சாணமே கண்டிருக்கமாட்டான்  பளிங்கு மாளிகைக்குள் உலாவுவான்  என்பது போலான கற்பனையுடன்  நல்லதல்லாதவற்றை  நாங்கள் விரும்பி  நுகரவும்  உண்ணவும்  உடலில் சிறுகக் கொல்லும் விஷமேற்றவும் எங்கள் மண்ணைப்   பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.  அவர்கள் .....??????



Saturday, April 8, 2017

சிறகு விரித்த சின்னத் தேவதை

.
போர் என்பது களமாடிய காலங்களின் வெளிப்படையாகத் தெரியும் வெற்றி தோல்வியோடு வெறுமனே முடிவு பெற்று விடுவதில்லை.அது களத்தில் கொடுத்த காயங்களையும் இழப்புகளையும் விட அதன் பின்னணியில் பல தலைமுறைகளின் சீரழிவைக் கொண்டிருப்பது. ஊன்றிப் பார்த்தாலொழிய உண்மை புலப்படாத மாதிரி உறவுகளை உடைத்து வைப்பது. போர்க்காலத் தலைமுறைகள் தாண்டியும் தொடர் சந்ததிகளின் மனச் சிதைவுகள் கணக்கெடுப்பில் அதிகம் வெளிவராத போதும் அது அடிப்படையில் மனங்களை சிதைத்து சின்னாபடுத்துவதாகவே எப்போதும் இருந்திருக்கிறது இனியும் இருக்கும். அப்படிச் சிதைந்து போய் பறந்து போன ஒரு சின்னத் தேவதை இவள்.
.
அவளை நான் அதிகம் கண்டதில்லை. சிலதடவைகளே அருகில்  கண்ட போதுகளில் அவளது உயிரற்ற கண்களில் சொல்லப்படாத , அல்லது சொல்லத்தெரியாத எதுவோ ஒன்று இலக்கற்ற வெறிப்புக்குள் இருந்து எப்போதும் எட்டிப்பார்த்தது. கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருந்திருந்தால் எந்நேரமும் காணக்கூடிய நெருக்கத்தில் அவள் இருந்திருப்பாள். அப்படி இருந்திருந்தால் ஒருவேளை அந்த எதுவோ ஒன்றை அடையாளம் காணவாவது முயன்றிருக்கலாம் என்று எப்போதும் நினைப்பதுண்டு. விழிகளின் வெறுமை தாண்டியும் ஒளிவிட்ட அவளது திறமைகளும் இளமையும் , அழகும், எப்போதும் அவளைவிட்டு அதிக தூரத்திலிருந்த  என் காதுகளை எட்டியிருந்த போதும் இப்படித்தான் இது நடந்து முடியும் என்று எந்த எதிர்வும் சொல்லப்பட்டிருக்கவில்லை.
.
இந்தச சின்னத்  தேவதையை ஈன்ற தாய்   நீண்ட வருடக் காத்திருத்தலுக்கும் வேண்டுதலுக்கும் பின் கடவுளின் வரம் போல் அந்தக் குடும்பத்துக்குக் கிடைத்தவள். வாழ்க்கையில்  வசதிகளும் அரவணைப்பும் மட்டுமே கண்டவள் . அன்பு , ஆதரிப்பு, அழகு, அறிவு என்று எல்லாவற்றையும் அபரிமிதமாகக் கொண்டிருந்த அவள் அப்பாவித்தனத்தையும் மிக  அதிகமாகக் கொண்டிருந்தாள்.
.
அடிபட்டு வளர்ந்த பிள்ளை, அடியில் இருந்து தப்பவும் , திருப்பியடிக்கவும் கற்றுக் கொள்ளும். ஏமாற்றப்பட்டு, எதிர்ப்புகளில் வளர்ந்த பிள்ளை, அவைகளை உடனடியாக  அடையாளம் காணவும் எதிராளிக்கு அவைகளை வாரி வழங்கவும் கற்றுக் கொள்ளும். பாசத்தையும் அப்பாவித்தனத்தையும் கொட்டி வளர்த்த பிள்ளை , மற்றவர்களையும் தன்னைப் போலவே எண்ணி அதையே திருப்பிக் கொடுக்கும். இவளும் தான்  பெற்றுக்கொண்டவைகளை மட்டுமே அனைவருக்கும் திருப்பிக் கொடுத்தாள்
.
காரிய வலைக்கு காதல் முலாம் பூசும் , காதலின் அர்த்தம் புரியா கழிசடைகளிடம் மாட்டிச் சிதைவதும் ஆணோ பெண்ணோ கூடுதலாக இப்படி அப்பாவிகள் தான். அதுவும் போர் உச்சத்தில் வெடித்த ஒவ்வொரு காலப்பகுதியிலும் உயிரை மட்டும் தூக்கிக் கொண்டு ஓடி, ஒவ்வொரு இடமாய் தஞ்சமடைந்த நேரங்களில் இந்த அபாயத்தில் வீழ்தவர்கள் அதிகம். பருவ வயதில் இருந்த பலர் , இளமைத்துடிப்பில் ஆயுதங்களைத் தூக்கவென்று ஆவேசத்தோடும் , எஞ்சிய பலர் , தாம் வாழ்ந்த சூழலில் இருந்து மாற்றம் பெற்ற , வசதிகளற்ற அந்நிய இடம், திடீரென தொலைந்து போன நெருங்கிய உறவுகள் , அருகில் இல்லாமல் போன பழக்கப்பட்ட அயல் , அந்தச் சூழ்நிலை தந்த வெறுமை என்று அதிகம் தாக்கப்பட்டு ஓடி வந்த இடங்களில் யாரெல்லாம் நெருக்கமானார்களோ அவர்களோடு அவர்களை எல்லாம் நம்பி ஒட்டிக் கொண்டார்கள்.
.
பருவ ஹோமோன்களின் உச்ச கட்ட சதிராடல்களின் ஆதிக்கத்தில் ஆராயும் அறிவைத் தொலைத்து விட்டு, அகதியாக தஞ்சமடைந்த்ச இடங்களில் அறிமுகமானவர்களின் கிளர்ச்சிக் கதைகளில் மயங்கி அல்லது , அவல விபரிப்புக்களில் அனுதாபப் பட்டு ஒத்து வராத இடங்களில் இருந்து ஒவ்வாத உறவுகளைத் தேடிக் கொண்டார்கள். அவர்களில் அவளின் அம்மாவும் ஒருத்தி. பால் வடியும் முகத்தோடு பதினாறு வயதில் பலியாகித்  தொலைந்து , ஓவியங்களில் கூட நான் கண்டிராத அந்த அழகிய கண்களில் கண்ணீர் வடிய குழந்தையோடு நின்றவள் அவள் அம்மா.
.
வாழ்க்கை முகத்தில் அறைந்து கற்றுக் கொடுத்த பாடத்தை அவள் தன் மகள் விடயத்தில் மிகக் கவனத்தோடு கையாளத் தொடங்கினாள். தேவதைக்குப் பிறந்த தேவதை தெருக்கோடிச் சாக்கடையில் அம்மாவின் மடிச் சூட்டுக்குள் மறைந்து கொண்டு அசிங்கங்களையும் அருவருத்த வாழ்க்கை முறையையும் மனதளவில் ஒதுக்கக் கற்றுக் கொண்டு புத்தகத்துக்குள் மூழ்கிக் கொண்டு வளரத் தொடங்கியது.
.
அவளது திறமை பாடசாலை தாண்டி, மாவட்டம் தாண்டி, அகில இலங்கை வரை பரவிய அவளது திறமை இனத்துவேஷம் தாண்டிய வீரியத்துடன், எந்த வித சிபாரிசுகளும் இலஞ்சங்களும் சலுகைகளும் இல்லாமல் ஜனாதிபதி விருது வரை  சென்றதைக் கூடப்   புரியும் நிலையில் அவளைப் பெற்றவனோ அவன் சார்ந்தவர்களோ இருக்கவில்லை. கையெழுத்தின் அவசியம் கூடப் புரியாதவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் புரிந்திருக்காத்தில் வியப்பேதுமில்லை.
.
தறிகெட்ட வாழ்க்கை முறையில், மாறுபட்ட மனோநிலையில் வாழ்பவர்களுக்கே உரித்தான சமூகத்தை விட்டொதுங்கி , சமூகத்தை ஒதுக்கி தூரமாக்கி  வைத்துக் கொண்டு , கொட்டில் தண்ணியில் சுதியேற்றி, வீதிகளின் இரவுகளை தூஷிப்பில் அசிங்கப்படுத்தும் கேவலத்துக்குள் வளர்ந்த அவள் வெளி உலகத் தொடர்புகள் நிராகரிக்கப் பட்டவளாக இருந்தாள். வெளி உலகத்தோடு நெருங்கக் கூச்சமும் அவமானமுமாக உணர்ந்தாள். அதை விட அம்மாவே வெளியில் வராது ஒடுக்கிப் போயிருந்ததில் அவளுக்கு பாடசாலை தவிர்ந்த வெளி உலகம் தெரிந்திருக்கவில்லை.
.
பிள்ளையின் பெயருக்கு முன்னால் பெயர் எழுதுவதை மட்டுமே தந்தை என்ற தகுதி மிக்க சாதனையாக எண்ணும் சில அப்பாக்கள் , பிள்ளைகளைத் தம் காலடியில் நிறுத்தி வைக்க எதுவாக காலால் மிதிப்பது அம்மாவை. அவலைத் தாங்கிய  அவளது அம்மாவின் அடிவயிறு தாங்கிய குடி வெறிக் கால்களின் உதைகளே அவளது இறக்கைகளைக் கட்டிப் போடப் போதுமானதாக இருந்தது
.
அதையும் தாண்டி அவள் சாதாரண மற்றப் பெண்கள் போல வாழ முயன்றால் அவளது அழகிய இளமை எதிராக நின்றது. அவளது ஒழுக்கத்தில் சேறு பூசி ஊரெல்லாம் கேட்கும் ஓலமாய் குடும்பம் கூடி தூஷிக்கும் அசிங்கத்தை தாங்கும் சக்தி அவளுக்கு இருக்கவில்லை. ஒரு வேளை அவளது அழகில் , அறிவில், குணத்தில் அப்படியே அம்மாவழி அணுக்கள் ஓடிக் கொண்டிருந்தது காரணமாக அவளால் அந்த சாக்கடையில் நெளிய முடியாமல் மூச்சுத் திணறிப் போயிருக்கலாம்.
.
தாய் விழுந்திருந்த குழியில் இருந்து தாயோடு சேர்ந்து வெளியேற ஆதாரமான பலமாக  அவள் நம்பிக் காத்திருந்த ஒரே பலம் கல்வி அதனாலாய தொழில் வாய்ப்பு . அது நிராகரிக்கப் பட்டு `' பெட்டைக் கோழி முட்டையிட்டால் போதும்' என்று அவளது பல்கலைக்கழக அனுமதிப் பத்திரங்கள் கிழித்து எறியப் பட்டபோது. மனித சிந்தனைக் கோட்பாடுகள் எதற்குள்ளும் அடக்கப்பட முடியாத ஒரு குடும்பத்தை எதிர்த்து நிற்க முடியாமல் அவள் சுருண்டு போனாள். உலகம் புரியத் தொடங்கிய காலத்தில் இருந்து அவளது வெறித்த பார்வைக்குள் சிதையத் தொடங்கியிருந்த அவளது மனம் முழுவதுமாய் தன்னிலை இழக்கத் தொடங்கியது.
.
பேச்சு மறந்து காணிக்குள் இருந்த  ,மரங்களின் கீழ் , வீட்டின் மூலை முடுக்குகளுக்குள் அவள் தனிமையில் உறையத் தொடங்கினாள். "சனியன் பிடிச்சவள் இவளுக்கு பேய் பிடிச்சிட்டுது, " என்று அந்த வீட்டில் உள்ள அதி அறிவாளிகள் முடிவு செய்ய, அப்பாவி அம்மா யாரோ சொன்னதைக் கேட்டு "பிள்ளையின்ர வடிவுக்கும் , கெட்டித்தனத்துக்கும் பொறாமை பிடிச்ச யாரோ செய்வினை செய்து போட்டினம்" என்று கண்ட மண்டை குழம்பினவனையும் வரவழைத்து செய்வினை எடுக்கத் திரிய,
குழையடிக்கிற பேய்களின் பிழைப்பை வளர்க்க , அப்பா வழி உறவுகள் அதிசய அதீத அக்கறையோடு பேயோட்டித் திரிய, சமய சந்தர்ப்பம் தேடி சமயம் பரப்பக் காத்திருக்கும் கூட்டம் கரிசனையாக உள்ளே நுழைந்து "........ காப்பாற்றுவார்" என்று சொல்லி , சமயம் என்று தாங்கள் உருவாக்கிய எதோ ஒன்றை அவளது அனுமதி இல்லாமல் சிதைவடைந்திருந்த  அவளின் மனதுக்குள் திணித்து விட, தனக்கு என்ன என்றே புரிய முடியாத ஆழ்மனச் சிதைவுக்குள் ஆழ்ந்து கொண்டிருந்தாள் அவள். 






.
தனிமையில் அவள் தனக்குள் புன்னகைத்துக் கொண்டு, தனியாக அழத் தொடங்க , அதிர்ந்து போன அம்மா கெஞ்சிக் கெஞ்சி காரணம் கேட்டாள். தனக்குள் அடையாளம் தெரியாத பல குரல்கள் தன்னருகில் தனக்குள்  கேட்பது பற்றி அவள் அம்மாவிடம் சொன்னாள். அதைக் கேட்ட அம்மா மகளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஊர் கேட்கக் கதற, ஊர் பல விதமாக அதை அர்த்தப் படுத்திக் கொண்டது.
.
அவளுக்குப் பேய் பிடித்து விட்டது பேயோடு தான் அவள் அழுதும் சிரித்தும் கதைத்துக் கொண்டு இருக்கிறாள் என்று ஒரு கூட்டம் பேய்களும் , சமயம் மாறினதால தான் சைவச் சாமிகள் தண்டித்து விட்டன என்று ஆசாமிகளும் , அவள் யாரவோ பெடியனை நம்பி ஏமாந்திருக்கிறாள் தாயைப் போல பிள்ளை நூலைப்போல சீலை என்று தெரியாமலே சொல்லி வைச்சிருக்கு  என்று ஒழுக்கத்தின் பிரதி நிதிகளும், பத்தினித் தெய்வங்களும்  தத்தமது தராதரங்களோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட போது , உண்மை நிலவரத்தை ஓரளவு உணர முடிந்தவர்கள் இறங்கி வந்து அவர்களோடு கதைத்தால் கூட தங்கள் தரம் தாழ்ந்து விடும் என்றும், அதையும் தாண்டி உதவ நினைத்தவர்கள் அவளது அப்பனின் இரவு நேரக் குடிப் பாட்டுக்கும் பயந்தும் ஒதுங்கிப் போக ........
.
அவளுக்குள் அசரீரிகள் அதிகமாகக் கேட்கத் தொடங்கின. அவை , துலாக் கயிற்றை எடுத்து கழுத்தில் சுருக்கிட்டு முகட்டு வளையில் தொங்கு என்றும், இரவு நேர ஊரடங்கிய கிணத்தில் குதி என்றும், வீட்டுக்குள் கிடக்கும் மாத்திரைகளை அள்ளி விழுங்கு என்றும், வேலியோர அலரியை அரைத்துக் விழுங்கு  என்றும் அவளுக்குப பலவிதமாக அறிவுரைகள்  சொல்லத்தொடங்க ஆரம்பத்தில் பயந்து போய் அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதாள், மகள் சொன்ன அத்தனையையும் மனதில் வைத்துக் கொண்டு அம்மா அந்தந்த இடங்களில் காவல் இருக்கத் தொடங்கினாள்
.
பின் நாட்களில் அவளது அழுகை ஓய்ந்து அவள் மெல்ல மெல்ல அந்தக் குரல்களை ஏற்கவும், விரும்பவும் பழக்கப் பட்டுக் கொண்டாள். இப்போதும் அம்மா அவள் சொன்ன இடங்களில் எப்போதும் கவனமாகவே இருந்தாள். இருந்தும் ஒரு நாள் ........... ,மகளின் காதுக்குள் கேட்கும் அசரீரிகள்  குறிப்பிட்ட பொருள் எதுகும் வீட்டுக்குள் இல்லை என்பதை எப்போதும் போல் உறுதிப் படுத்திக் கொண்டு அம்மா
கிணற்றடியில் குளித்துக் கொண்டிருக்கையில், ............
.
விளக்கெரிக்க வாங்கி சமையலறையில் வைத்திருந்த மண்ணெண்ணெயில் சொட்டச் சொட்ட குளித்துக் கொண்டு, தீப்பெட்டியை தட்டி தன் மீது வைத்துக் கொண்டு , தீப் பிழம்பாக முற்றத்துக்கு  வந்து , அவலமாக ஓலமிட்டது, தன் முதல் கூவலின் ஒற்றைப் பாடலிலேயே அகில இலங்கை விருது வென்ற தேவதை.
அந்த நேர அவலத்தின் அத்தனை ஆரவாரங்கள் ஒப்பாரிகளோடு காப்பாற்றும் முயற்சியில் நெருப்பனைக்கப் பட்டு  வைத்தியசாலையிற் சேர்க்கப்பட்ட பின்
உடலில் வேகாத இடம் என்று எதுகும் இல்லாமல் போப்ன்கிப் போயிருந்த  இருந்த நெருப்பெரியும் வேதனையிலும் அவள் தாய் வழிச்சொத்தாய், கருணை ததும்பும் அந்தப் புன்னகை, கேட்ட கேள்விக்கு அன்பாகப் உரிய பதில் சொல்லும் பண்பு அவளிடம் ஒட்டிக் கொண்டே இருந்தது. 


ஆஸ்பத்திரியில் அருகே அமர்ந்து கதறிக் கொண்டிருந்த தாயிடம் " நானாக கொளுத்தவில்லை அம்மா. யாரவோ தான் என் காதுக்குப் பக்கத்தில நின்று சொன்னார்கள் கொளுத்து கொளுத்து கொளுத்தினால் மட்டும் தான் அமைதி கிடைக்கும் கொளுத்து என்று அது தான் கொளுத்தினேன். எனக்கு உங்களை விட்டுப் போக விருப்பமில்லை அம்மா" என்றாள். பொசுங்கிப் போன விழியோரங்களில் வடிந்த கண்ணீரின் உப்புப் பட்டு  முகம் துடிக்க .
.
அப்போதும் அந்தக் குரல் இயல்பாக இல்லாமல் சாவை ரசிப்பது போல் அதை மட்டுமே யாரோ போதித்து வைத்தது போல் பூரிப்புடன் கனவு கலந்து கூறிய மாதிரியே இருந்தது. பின் சோர்வாகப் பார்த்து "ஆயாசமாக இருக்கு கொஞ்ச நேரம் படுக்கப் போறேன் அம்மா நான் தூங்கும் வரை தலையைத்  தடவிக் கொண்டிருக்கிறீங்களா " என்றாள் யாசகம் போல . தொட்டுத் தடவும் நிலையில் எந்த இடமும் இல்லாமல்உடல் முழுதும்  வெந்து போய் இருக்க அவளது அம்மா மனம் வெந்து விம்ம, அம்மாவின் முகத்தை கண்களால் விழுங்கிக் கொண்டே அவள் தலை சாய்த்துக் கொண்டாள் - நிரந்தரமாக .
.
பத்தொன்பது வயதுக்குள் வாழ்ந்தது போதும் என்று இறக்கை விரித்த இந்த வானம்பாடி, கூட்டுக்குள் சிறை வைக்கப்பட்ட குஞ்சுகளின் பெற்றோருக்கான சிறை உடைக்கும் அவசியத்தை உயிரில் எழுதி வைத்துப் பறந்தது.
.
பின் நாட்களில் சீரற்ற குடும்ப நிலைகளில் சிக்கிக் கொண்ட குழந்தைகளின் தவிப்புகளுக்கு அவளது முடிவு பாடமாக்கிப் போக, சமூக நாக்குக்கு பயந்திருந்த சிலர் துணிந்து குழந்தைகளின் பாதுகாப்பு அவசியம் என்று தளைகளை உடைத்து வெளியே வந்து சுதந்திரமாக சுவாசிப்பதற்கு, வாழும் காலம் வரை மூச்சுத் திணறி அடைபட்டுக் கிட்டந்த அந்தக் குழந்தை  பாடமாக்கிப் போனாள்.
.
இந்த நான்கு  வருடங்களில் ஒரு நாளிலேனும் மறந்து விட முடியாமல்  இன்னும் ஜீரணிக்க முடியாமல் , சேற்றில் விழுந்தவளை கைதூக்கி விடாது தடுத்த பரம்பரை  கவுரவத்தையும் வரட்டுக் கோபங்களையும் எண்ணி வருந்திய படி குற்ற உணர்வுகளில் பொசுங்கிக் கொண்டு அவளை  உணர்வுகளில் சுமந்த படி இன்னும் சில இரத்த உறவுகள் .

.
எண்ணிப் பார்த்தால் சிதைகள் தான் பலருக்கு ஞானம் வழங்கும் போதி மரங்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதுவும் கூட சுடலை ஞானம் என்ற பதத்துக்குள் அடங்குமோ ?இறந்து கற்பித்தாற் தான் இந்த மனங்கள் இளகிக் கற்குமோ?

Sunday, April 2, 2017

ஏப்ரல் 2 உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள் (World Autism Awareness Day )


பிரத்தியேகக் குழந்தைகள் அல்லது கடவுளின் குழந்தைகள் என்று ஒரு பகுதியால் அதிகக் கவனிப்புக்கு உள்ளக்கப்பட்டும், மறுபகுதியால் புத்திசுவாதீனமற்றது, வலது குறைந்தது,   என்று ஒதுக்கப்பட்டு வீட்டின் எங்காவது ஒரு மூலையில் வேண்டாத பாத்திரமாய் தூக்கிப் போடப்பட்டும் , குடும்பத்தின் அவமானச் சின்னம் போல  பலரினாலும் ஏளனப் பார்வைக்கும் சிலரின் அனுதாப நோக்கிற்கும்  காட்சியாகும்  மனிதர்கள் மீதான  அறிவு ரீதியான புரிதல்களோடு   மனிதாபிமான ரீதியான  சிந்தனை செயற்பாடுகளோடு ,  வாழவேண்டும் என்பதை, சாதாரணமாக அல்லது சிறப்புமிகு பிறவிகளாக எம்மை நினைத்துக் கொள்ளும் நாம் விழிப்புணர்வு  பெற வேண்டும் என்பதை உணர்த்தும் நாள்
.
உலக ஆட்டிஸ விழிப்புணர்வு நாள் என்பது  ஆட்டிசத்துக்கு  உள்ளாகியவர்களால் உணரப்படவேண்டிய நாளல்ல. , அதுவற்ற செம்மைப் பிறவிகள் என தம்மை எண்ணிக்கொள்ளும் நாம் எம் கடமை உணரவேண்டிய  நாள்.
.
Autism  என்பதை தமிழில்  விளங்கிக் கொள்ள முற்படும் போது  மதியிறுக்கம்  அல்லது  புற உலகச் சிந்தனைக் குறைபாடு என்ற   விளக்கப்பாட்டு  வடிவத்தையே பெறுகிறது .  மதியிறுக்கம் என்பது  மனச்சிதைவோ,  உணர்வுகளின் குறைபாடோ,  குழந்தை பருவத்தில் மட்டும் இருந்து விட்டு பின் குணப்பட்டு விடும், அல்லது முறையான சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடமுடியும் நோய் நிலையோ அல்ல.  இதன் முழுமையான மருத்துவக்காரணம் இன்றுவரை  தீர்க்கமாக அறுதியிட்டுக் கூறப்படாவிட்டாலும், சுற்றுச் சூழல் காரணிகளுடன்  ஒத்திசைவாக முடியாத இந்நிலை மரபணு கூறுகளினாலேயே ஏற்படுகின்றது  எனக் கருதப்படுகிறது.
.
ஜெர்மனியில் குழந்தைகள் , சிறுவர் மனநல மருத்துவத்துறையிற் பயின்று, அமெரிக்காவில் கடமையாற்றிய  Leo Kanner  என்பவர்  முதன் முதலில் 1943 இல்  அமெரிக்கக் குழந்தைகளிடம் செய்து கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் துவக்ககால   மழலையர்  மதியிறுக்கம் என்று  இந்நோய் நிலையைக் கண்டு பிடித்தார். அது  Kanner Autism என அழைக்கப்பட்டது.
.
அதே காலப்பகுதியில் ஜெர்மனியிற் கற்ற ஒஸ்ரியரான Hans Asperger  என்ற குழந்தைகள் மருத்துவ மற்றும் மனநல ஆலோசகரால்  இக்குறைபாட்டின் கடுமை மற்றும் குறைந்த பாதிப்பு நிலைகள் கண்டறியப்பட்டது .  இது அசுபெக்கர்  கூட்டறிகுறி (Asperger Syndrom)  என அழைக்கப் படுகிறது.   1943  ஆண்டு இக்குறைபாட்டுக்கு முதன் முதலாகப் பெயரிடப்பட்டது.  விலங்கின நடத்தையியலில்  1973 ஆம்  ஆண்டில் நோபல் பரிசு பெற்ற Nikolaas Tinbergen என்பவரால்  அவரது நோபல் பரிசேற்பு  உரையில் இது பற்றிப் பேசப்பட்டது. 
.
உடலளவில் எந்த வித வெளிப்பாதிப்புக்களும் வெளித்தெரியாத, ஒரு குழந்தையின்  பதினெட்டு மாதங்களுக்குப் பின்னான தன்னியக்கச் செயற்பாடுகளில்   ஏற்படும்  இயல்புக்கு  மாறான  செயற்பாட்டு நிலைகள், அதாவது  ஒருவர் புரியவைக்க முயல்வதை,  அல்லது சுட்டுவதை எதுவென உணரமறுக்கும்  அல்லது உணர முடியாத் தன்மை,  கவனித்தல் குறைபாடு, தேவைகளை  வார்த்தைகளால் குறிப்பதைத் தவிர்த்து  முடிந்தவரை  சுட்டுவிரலால் சுட்டிக் காட்டும் நிலை,  தம் தேவைகளை வெளிப்படுத்துவதில் சிரமம்,  ஒருவர் பேசுவதை கண்களுக்குள் உற்றுநோக்கி உள்வாங்க முடியா கவனச் சிதறல்,  தனக்குப் பிடித்த காரியத்தோடு ஒன்றி உலகை மறந்து தனக்கான ஒரு பிரத்தியேக உலகத்துக்குள் மூழ்கிக் கிடக்கும் நிலை  போன்ற வேறு பல அறிகுறிகள்  மூலம்  மூன்று வயதுக்குள் இந்தப பிரத்தியேகக் கவனிப்புக்கு ஆளாக வேண்டிய குழந்தைகளைக் கண்டு பிடித்து விடமுடியும் என்கிறது மருத்துவ ஆராட்சி
.
பலரின் தவாறான புரிதல் போல இவர்கள் கொடுமையானவர்களோ,  சமூகத்தோடு தொடர்பே கொள்ளமுடியாதவர்களோ, பெற்றோருடன் கூட அன்புகாட்டத் தெரியாதவர்களோ அல்ல.  அவர்களைப் புரிந்து கொண்டால்  அவர்கள் மிக மிக நேசமும் நெருக்கமும் நெருங்கியவர் மீது  மிகப் பாசமும்  கொண்டவைகள்.  அவர்களால் அதை சாதாரணர்கள் போல வெளிப்படுத்த முடிவதில்லை. வெளிப்படுத்தும்  மொழியை  மற்றவர்கள் தப்பாகப் புரிந்து கொள்கின்றார்கள்.
அது போலவே  ஆட்டிசம் உள்ள குழந்தைகள் அனைவரும் ஒரேமாதிரியான செய்கைகளைக் கொண்டிருப்பார்கள் என்பதும், எதோ ஒரு  சிறப்புத் திறன் கொண்டிருப்பார்கள் என்பதும் கூட தப்பான புரிதலே.  
.
பலவித நரம்பியல் சார் நடத்தை  மாறுபாடுகள்,  வரையறுக்கப்பட்ட அல்லது அதீத கற்பனை வெளிக்குள் புகுந்து தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்ட புதியதோர் உலகுக்குள் வாழும்  இவர்கள்   சமூக நல்லுறவு , தொடர்பாடல் சிக்கல்களைக் கொண்டிருக்கும் நிலைகளும்  இவர்களில் ஒரு பகுதியினரை  புற உலகச் சிந்தனைக் குறைபாடுடையவர்களாகவும் இருத்தலைக் காணலாம்.


.
எம்மைப்போல எல்லாவற்றையும் எமக்குப் புரியும் விதத்தில் வெளிப்படுத்த முடியாத அவர்களைப் போல, அவர்களை அவர்களாக புரிந்து கொள்ள முடியாத எமக்குள்ளும் இந்த
ஆட்டிசம் என்னும் குறைபாடு இருக்கவே செய்கிறது. வீத அளவு மட்டும் தான் வித்தியாசம்.
.
இது ஒரு பிறப்பையே சுருட்டி  மூலையில் போட்டு முடித்து விடும் நிலையல்ல சரியான புரிதல்,  ஆதரவு இருந்தால்  இவர்களாலும்  சாதாரணர்களாக  தம்மை எண்ணிக் கொள்வோரை விட அதிகமாகச் சாதிக்க முடியும் என்பதற்கு  எடுத்துக் காட்டாக இக்குறைபாட்டின் குறைந்தளவான தாக்கங்களுக்கு   உள்ளான  உலகப் பிரபலங்களும் சாதனையாளர்களுமான
.
அப்துல்கலாம்
பில்கேட்ஸ்
ஐன்ஸ்டீன்
நியூட்டன்
...............
...............
................ இப்படி எத்தனையோ சாதனையாளர்கள் ஆட்டிசத்தில் இருந்து வெளியில் வந்து சாதனை படைத்தவர்கள் தான் .
.
என்ன ஒன்று, அவர்களை புரிந்துகொள்ள கொஞ்சம் அன்பும், பொறுமையும், அணைத்து உயர்த்த ஆதரவான கைகளும் தேவை. வெளியில் கூட வேண்டாம் வீட்டிலாவது .....
முடியுமா எம்மால் ? 
என்னால் முடியும்.  பலவித முகமூடிகள் அணியும்  சுயமுகமற்ற சமூக விலங்குகளுடன்  வாழ்வதை விட இவர்களுக்கான உலகில்  போலி, நடிப்பு என்பதற்கே இடமிருக்காது. வாழ்ந்து பார்த்திருக்கிறேன்  முடிந்தால் முயன்று பாருங்கள். செயல்களை அர்த்தப்படுத்தும் போது  தான்  வாழ்வின் அர்த்தம் புரியும் .