Friday, January 12, 2018

வண்டிமாடுகள்


முன்னே ஊரில் இருந்த காலங்களில் போர் அதிஉக்கிரமாக தலைவிரித்து சதிராடுமுன்னான  என் சிறிய வயதுகளில்  வீட்டில் அதிகமாக பசுக்கள் இருந்தன  .  ஒவ்வொரு வருஷமும்  அதின்ர குட்டி இதின்ர கன்று என்று  அது பெருகிக் கொண்டே இருக்கும். நல்லவேளை  வீட்டில் நின்ற பசுக்கள் அதிகமாக நாம்பன் கன்றுகளை ஈனவில்லை. மிகமிக அருமையாகத்தான் நாம்பன் கன்று பிறக்கும்  அப்ப  அதுக்குக் காரணம் தெரியேல்லை. 

இப்ப யோசிச்சுப் பார்த்தா  வீட்டில கிடந்த நாட்டு மாட்டுக் கொட்டில் மெல்ல மெல்ல  ஜேஸி மாட்டுக் கொட்டிலா  மாறினதுக்கும் நாம்பன்  கன்றுகள்  ஈனாமல்  விட்டதுக்கும்  அட்டமி, நவமி ,பறுவம் ,அமாவாசை  எண்டு கனத்த நாட்களாகச் சொல்லப்படுற  நாளுகளில   மாடு கட்டறுத்துக் கொண்டு கத்தினோடன  பண்ணைக்காரர்  வீட்டுக்கு அவிட்டுக்கொண்டு   ஓடுறது குறைஞ்சு திருநெல்வேலியில கிடந்த கால்நடை  வைத்திய ஆலோசனை நிலையத்துக்கு ஓடினதும்  அங்கேயிருந்து  வாறவையள் ஒரு அடி நீளத்தில கையில test tube மாதிரி  குழாய் ஒன்றை  எடுத்து வைச்சுக் கொண்டு  கைக்கு நல்ல சுத்தமா சவர்காரம் போட்டுக்கழுவ, மாட்டுக்கு வருத்தம்  ஊசிபோடப் போகீனம்  பயந்து போவாய்  தூர ஓடு என்று  தாத்தா துரத்தின  காரணம்  புரியுது. 

இப்போதெண்ணிப் பார்க்கிறேன்.   மனிதர்கள்  எவ்வளவு சுயநலமான  கேவலமான  எண்ணம் படைத்தவர்கள்  என்பது அருவருப்பா, வெறுப்பா  இருக்கு.  ஒரு நாட்டின் பாரம்பரிய  விலங்கினத்தை  அழிப்பதோடு மட்டுமில்லாது,  வருடத்துக்கு ஒரு முறையோ, இரண்டு வருடத்துக்கு ஒரு முறையோ  இணைதேடும்  பசுவின் உணர்வுகளின்   நியாயமான  உரிமைகளை பணத்துக்கு பணயம் வைத்திருக்கிறோம்  கூடவே,  ஒரு மாரிகூட தாங்க முடியாத  பலவீனமான  சந்ததியை உருவாக்கிவிட்டு  எமக்கு ஆதாயம் கிடைக்கும் காலம் வரை அவற்றின் ஆயுளை நீட்டிக்க  செயற்கைச் சத்துணவுகள்  தேடி  பிரத்தியேக மருந்துக்கடை வாசல்களில்  நின்று பணத்தைத் தவணை முறையில்   அள்ளிக் கொட்டியிருக்கிறோம். பிறகு ரொக்கமாக கறந்தெடுக்கும் நோக்குடன்      

எங்கள்  வீட்டில் மனுஷக் குழந்தை பிறந்தாலும் ஆணா, பெண்ணா என பேதம் பார்த்து சந்தோஷமோ கவலையோ கொள்ளும் குணம் நல்ல வேளையாக  இருக்கவில்லை. ஆனால் பசுவீன்றது நாம்பன் கன்று தான் என கண்டதுமே வீட்டில் புதிதாய் ஒரு கன்றுக்குட்டி வரும் துள்ளிவிளையாடும்  எனக் காத்திருந்த அத்தனை பேரின் உற்சாகமும் வடிந்து போகும்.  ஏதோ இழவு விழுந்த சோகம் முகங்களில் கப்பிக் கொள்ளும். பசுக்கன்றுகள் பிறந்தால் உடனேயே அதுக்கு புதிதாய் ஏதாவது ஒரு நாமகரணம் சூட்டி விடும் பாட்டி  நாம்பன் எனில் அது பிறந்த ஈரத்தை துடைத்து கால் நகம் வெட்டி, தொப்பிள் கொடி அறுத்து எழுப்பும் போதே "தம்பி எழும்படா அப்பன்" என்று தான் கூப்பிடுவா.  எத்தனை நாம்பன் வந்து போனாலும் அதுக்குப் பெயர் தம்பி தான்

  அது வளர வளர அதை பார்க்கும் நேரமெல்லாம் அம்மாவுக்கு கண் கலங்கும் அதின்ர  கழுத்தைக் கட்டிக் கொஞ்சுவா, அதைக் கெதியா இழக்கப் போகிறோம் என்பதால் அதன் மீது நான் ஈடுபாடுகொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருப்பா.  பாட்டி  தாத்தா அதைக் காணும் நேரமெல்லாம்  "ஏண்டா ராசா  தம்பியா வந்து பிறந்தனி?" என்று கவலையாக கேட்டுத் தடவுவீனம். 





பால்குடி மறந்தவுடனே   அவையளுக்குத் தெரிஞ்ச நம்பிக்கையான ஆள் ஒருவரிடம் பிடிச்சுக் குடுத்து

"இதை வளர்த்து,  இறைச்சிக்கு மாத்திரம் வித்துப் போடு எங்கட பிள்ளை ஒரு நாளில செத்துப் போகட்டும், அதை நாளாந்தம் சாகடிக்கிறமாதிரி, அதுக்கு நலமெடுத்து  வண்டிலில பூட்டி பாரமிழுக்கிற மாதிரி  எங்கையாவது வண்டில்காரருக்கு வித்துப் போடாத. அப்பிடியிப்பிடி வித்தனி எண்டு அறிஞ்சன் கண்டியோ...." 

அதுக்குமேல பாட்டி மேல ஒண்டும் சொல்ல மாட்டா அந்தக் குரலிலும்  தோரணையான நிலையிலும்  அந்தாள் பம்மிக்கொண்டிடும். 

"இல்லையம்மா  அப்பிடி வாக்குமாறி நடந்தன் எண்டால் தேடி வந்து நெஞ்சில மிதியுங்கோ" எண்டு சொல்லும்.
அப்பிடி வீட்டுக்குள்ள இழவு விழுவதையும் உரிமையானது ஒரு சிறு எறும்பு தான் என்றாலும் யாருக்கும் உயிரை உயில் எழுதிக் குடுக்கவும்  சம்மதிக்காதவ  என் பாட்டி. 

வண்டில் மாடுகள் தம் சக்திக்கு அப்பாற்பட்ட பாரங்களை சுமக்க முடியாமல் சுமந்து தார்க்கம்பால்   அடிவாங்கி அல்லது குத்து  வாங்கி வாயில் நுரைதள்ள காலைப் பின்னிப் பின்னி சாய்ந்து நடப்பது  பலமுறை கண்டிருக்கிறேன். வாங்கின விலைக்கும் போட்ட சாப்பாட்டுக்கும்  ஈடாக உழைப்பிச்சு எடுத்துவிடவேண்டும்  என்ற குறிக்கோள் வண்டிக்காரரிடம்  இருப்பது போலத் தோன்றும்  இவைகளாலேயே தனிப்பட்ட   காரணமற்று வண்டிக்காரர் என் நிரந்தர  எதிரியாக ஆகியிருக்கிறார். 

இதைவிடக் கொடுமை நலமெடுத்தல்  என்று சொல்லப்படும்  வண்டியிழுப்பதற்காய்  சிறுபருவம் முதலே  கவனமாக ஊட்டச்சத்துக்கள் கொடுத்து  வளர்க்கப் க்கப்படும் மாடுகளுக்கு  சிறுவயதிலேயே  மேற்கொள்ளப்படும்  விதை சிதைத்தல் முறை.  எங்காவது வீதிகளில் பொருளேற்றும் வரை  வண்டியிலிருந்து  அவிழ்த்து பக்கத்தில் எங்காவது வேலிக் கதியாலில்  கட்டப்பட்டிருக்கும் விதை சிதைக்கப்பட்ட இந்த வண்டில் மாடுகள் பக்கத்தில் எங்காவது பசுக்கள் மேய்ந்துகொண்டிருந்தால்  உணவுகூட எடுக்காமல் அந்தப் பெண்மாட்டின் வாசனையையே மோப்பம் பிடித்துக் கொண்டு, தாம் சாதாரண வாழ்வு மறுக்கப்பட்ட  சாபத்துக்கு உள்ளானவர்கள் என்பதாக சாகடிக்கப்பட்ட அவற்றின் உணர்ச்சிகள் கண்களால் வடித்துக் கொண்டிருப்பது கொடுமை என்றால் சிந்திக்க உணரமுடிந்த மனிதர்களாக அவைகளை அவதானித்துக் கொண்டிருப்பது அதனிலும் கொடுமையும் குற்றவுணர்ச்சியும் .

என் சிந்தனை வீட்டு முற்றங்களுக்குள் குறுகிக் கிடந்து  நாலுகால் மாடுகளைப் பொழுதுபோகப் பார்த்துக் கொண்டிருந்த காலங்களை விட்டு சற்றுக் கால்முளைத்து நடந்து  வாசல் கடந்து வெளியேறி உலகத்தை நோக்கத் தொடங்கிய  காலங்களில் சில பல வீடுகளில்   இப்படி இரண்டுகால்கள் கொண்ட நாம்பன் கன்றுகள் பிறப்பதையும்  காணமுடிந்தது.  அவைகள் பசுக்கன்றுகளை விட  அதிகவனமாகப் பராமரிக்கப் பட்டன.  அவைகளுக்கான  உயரிய இடங்கள் வளர்ப்பாளர்களால் குறிவைக்கப் பட்டன.  குறிவைக்கப் பட்ட  உயர்ந்ததாக கணிக்கப்பட்ட இடங்களுக்காக  நாளாந்தம் ஓய்வற்றுப் பயிற்றப் பட்டன.  சுயசிந்தனை  மறுக்கப்பட்டன.

அவைகள் குறித்த அந்த உயரிய இடத்தை அடைந்ததும்  வீட்டை  அதன் முதுகில் பூட்டி இழு என்றார்கள்.  அது நாக்குத தொங்க நொதித்த நுரையை பாசம் என்று சொல்லி விழுங்கிக் கொண்டு இழுத்தது. 

ஓரளவு  தன் பாரங்களை கரை சேர்த்ததும் , அது, குறித்த  அந்த உயரிய நிலைக்கு வருவதற்கு  ஆன செலவுகள்  கணக்கிடப்பட்டு சந்தையில் ஏலமிடப்பட்டது.  ஏலங் கூறலில் அதிக விலைக்கு  வாங்கிக்கொண்டவர்களோடு  வேள்விக்குப் போகும் நிமிர்வில்  ஊர்பார்க்க  ஊர்வலம் போனது. 

புது வண்டியில் தன்னைப் பூட்டிக்கொண்டு  அதிக விலை கொண்ட  நாக்குச் சாட்டையால் சொடுக்கி இழுக்கப்படும்   வலிக்குப் பயந்து  ஓய்வற்று ஓடியோடி உழைக்கத் தொடங்கியது. சிலவேளைகளில் வளர்த்த கொட்டில்களை  மறக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. 

அண்மையிலும்  அப்படியொரு  வண்டிமாடு  வழியில்  வண்டியை  நிறுத்தி  இளைப்பாறிக் கொண்டு,  தான் வாழும்  வேடிக்கை உலகத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டேன்.

அது எதிர்பார்த்திருக்கவில்லை  போலிருக்கிறது   தூரத்தில் கன்றோடு போன பசுவொன்றைத் தற்செயலாகக் கண்ட பாவனையில் அதிர்ந்து பார்த்தது.  பின்  மடல் வெட்டாது  பார்த்துக் கொண்டேயிருந்தது.    அதனது கண்களில் நிறுத்தமற்று பெருக்கெடுத்திருந்தது  கண்ணீர். 

நலமெடுத்து விலைபோகும்  முன்னான  அதன் விடலைக் கனவுகளை  ஒருவேளை   அந்தப் பசு தான்  வண்ணமாக  வரைந்திருக்கலாம். அடிமை மாடு  இதயச் சுவர்களுக்குள்  எவர்க்கும் தெரியாமல்  மறைத்து வைத்த  ஞாபகங்களை  இப்போதிது இரத்தம் வழியக்  கீறி விட்டுச் சென்றிருக்கலாம்

சிறுவயதில் போல இப்போது வண்டிக்காரர் மீது  எனக்கு ஆத்திரமோ எதிர்ப்புணர்வோ  வரவில்லை.  வாழும் சமுதாயத்தின் மீதே ....