Wednesday, October 30, 2019

அக்டோபர். 29


வழமையாக  அதிகாலையே எழுந்து விடுவது போல அன்றும் நித்திரை கலைத்திருந்தாள் நிலா  . ஆனாலும் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாமல் கண்கள் எரிந்தன. உடல் வலி அதிகமாக இருந்தது.   கைக்கும் உடலுக்குமான இடைப்பட்ட பகுதிக்குள் அவளது உடலோடு  ஒட்டிக் கிடந்த மகளைக் கழுத்தை வளைத்து  திரும்பிப் பார்த்தாள். தாயிடம் முலையுறிஞ்சிய நினைவுகளைத் தன் மூன்று வயதின் நித்திரையிலும் மறவாதவளாக தன் செப்பு உதடுகளை மொட்டுப்போல் குவித்து உறிஞ்சியவாறே உறங்கிக்கொண்டிருந்தாள் அவளது செல்வ மகள். அவளது இரத்தத்தில் உதித்த முதல் உறவு அது. அவளுக்கு உயிர் போன்றவள்.  பக்கவாட்டில்   திரும்பி  மகளை முத்தமிட முனைந்தாள்.  உடல்  இயல்பாகத் திரும்ப மறுத்தது. வயிற்றில்  பெரும் பாறாங்கல்லை  வைத்துக் கட்டியது போல கனமாக உணர்ந்தாள். முதற்குழந்தைக்கான  சிசேரியனின் போது வெட்டப்பட்ட இடம் உடன் வெட்டுக்காயம் போல எரிந்தது. அந்த வடு அப்படியே பிளந்து கொண்டு குழந்தை வெளியே விழுந்து விடுமோ என்பது போல வலித்தது  கால்கள் பாதத்தின் அடிப்பகுதி வரை  அதிகமாக வீங்கிக்கொண்டு கொதித்தன.
கடந்த சில  தினங்களாக  மூன்று வேளைக்கும்  ஏறத்தாள பத்துப் பேருக்கு விருந்துணவு போல சாதாரணத்துக்கும் அதிகமாக விஷேசமாக  தனியொருத்தியாகச் சமைத்திருக்கிறாள். அப்போதும் இந்த வலி இருக்கத்தான் செய்தது.  அதிக நேரம் வயிற்றில் பாரத்துடன் நின்று சமைத்ததால்  ஏற்பட்டிருக்கலாம் என எண்ணிக்கொண்டாள்.  அவர்கள் முதல் நாள் இரவுணவுடன் புறப்படும் நேரம் வரை பல்லைக்கடித்து வலிதாங்கி செய்ய வேண்டிய அத்தனையையும் குறைவின்றிச்  செய்து கொடுத்தாள். குறைவின்றிச் செய்தாலும் குறைதேடிப் பிடிக்கத் தவற மாட்டார்கள் என்பது தெரிந்திருந்தும் .  உண்ணும் நேரம் கூடிச் சாப்பிடுவதற்காகவோ, பரிமாறுவதற்காகவோ கூட  அவள் அவர்கள் கூடியிருக்கும் இடத்தில் நிற்பதில்லை. அனுமதிக்கப்படுவதில்லை என்ற வார்த்தையைப் பாவிக்காமல் மிக நாசுக்காக தம் முகச் சிணுங்கல்கள் சுளிப்புக்கள், கண்ஜாடைகள்  மூலம் வெளியேற்றி விடுவார்கள்.. அந்த வீட்டில் அவர்கள் கூடியிருக்கும்  நேரங்களிலெல்லாம் அவள் அன்னியப் படுத்தப்படுவாள். முக்கியமாகக் கட்டியவனாலேயே  கூட. 

வெளிநாட்டில் கால்வைத்த ஆரம்ப காலங்களில்  சமையலறையில் அவள் இருக்கும் நேரங்களில் வரவேற்பறையில்  அவனும் அவனது சகோதரர்கள் மற்றும்   அவர்களின் உறவினர்கள்   எல்லோரும் கூடி பேசிச்சிரித்துக் கலகலக்கும் ஒலிகேட்கும்..  அவளும் அதில் கலந்து கொள்ளும் ஆவலுடன் அவசரமாக வேலைகளை முடித்து விட்டுப் போவாள். போனால் சட்டென எல்லாச் சத்தமும் ஓய்ந்து விடும். அநேகரின்,  முக்கியமாக தாலி கட்டியவனின் பார்வையில் ஏன் இங்கு வந்தாய் என்ற அன்னியம் அதிகமாக ஒருவித வெறுப்பைக் கக்குவது போலிருக்கும்.  இந்த முக வாசிப்புகளில்  ஆரம்பத்தில் முகம் கன்ற ஒதுங்கிக்கொண்டவள் , பின்னாட்களில் அவர்கள் யாரும் என்னவர்கள் இல்லை என மனத்தால் தள்ளிவைத்து உடலால்  அங்கிருக்கக் கற்றுக்கொண்டாள்.
தனக்கென  விதிக்கப்பட்ட  இவ் வாழ்வில்  தனக்கான உறவுகளைத் தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்துக்கொண்டு தனக்கான நெருக்கமான உறவுகளை உருவாக்கிக் கொண்டு,  ஊருக்குச் சென்று வரும் பொழுதுகளிலும்  உற்றாரைச் சந்திக்கும் போதும், முடிந்தவரை  அழகாக உடுத்திக் கொண்டு, உதட்டில் ஒரு நிரந்தரப் புன்னகையை ஓட்டிவைத்துக் கொண்டு,  மகிழ்ச்சியும்  நிறைவுமாகவே  இருப்பதாக இயலுமானவரை நடித்துக்கொண்டு  திருமணம் என்ற என்ற பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட  குடும்ப அமைப்புக் கலைந்து விடாமல் காப்பாற்றிக் கொண்டு காலத்தைக் கழித்து  விடலாம்  என எண்ணிக் கொண்டாள்.  அறிமுகமும் ஆதரவும் அற்ற நாடொன்றில் தனித்து நின்று கேள்வி கேட்க முடியாத சூழலில்  அவளால்  அவ்வளவு தான் முடிந்தது.

இருந்தும்  எல்லாப் பெண்களையும் போல  கல்யாணத்துக்கு முன்னால்  வாழ்க்கை பற்றிய கனவுகள்  ஏராளம் இருந்தன அவளுக்கும் .  அதில் அவளுக்காக மட்டுமே  அவளை  மணந்து கொண்ட   அவளுக்கு மட்டுமேயான ஒரு கணவன்  இருந்தான்.  காதலும்  ஊடலும்  சீறலும் சிணுங்கலுமான அன்பான ஒரு தாம்பத்தியமும், இருந்தது.  கழுத்தில் தாலி விழுந்த கணத்தில் கனவுகள் காலாவதியாகி  காலத்தை  அவளுக்குள்  கொன்று புதைத்துக் கொண்டாள்.
படுக்கையிலிருந்து எழ முயன்றாள். சோர்வு அதிகமாக இருந்தது. தலை சுற்றி வாந்தி வந்தது.  எழுந்தோடி  கொமெட்டில் குனிந்தாள்.. முதல் நாளிரவு உண்ட அனைத்தும் எந்த மாற்றமும் அடையாமல் அப்படியே புளித்துப் போய் மூக்காலும் வாயாலும் வெளியே கொட்டியது.  சுவாசக்குழாய்  அடைத்துக்கொண்டு மூச்சுத் திணறியது.  மூக்கைச் சீறி ,  முகத்தைக் கழுவிக்கொண்டு சோர்வுடன் வெளியில் வந்தாள்.  இந்த வாந்தியும் தலைசுற்றலும் எட்டாவது மாதத்தில் வருவதற்கு சாத்தியமில்லை என தன் முதல் கர்ப்பகால  அனுபவத்தை வைத்து எண்ணிக் கொண்டாள்.  ஒருவேளை மூன்று வாரமாக மருந்தையும்  மீறித் தொடரும் காச்சல், அதனால் ஏற்பட்ட பித்தம்  இந்த வாந்திக்குக்  காரணமாக இருக்குமோ என்று காரணம் தேட முயன்றாள். அதிகம் சிந்திக்க முடியாது தலை சுற்றியது. . கால்கள் பலமற்றுத் துவண்டன.
வயிற்றின் அதீத வலி பற்றி,  இந்த  குமட்டல் பற்றி இரண்டு தரம் அவளது பெண்மருத்துவரிடம் அவள் முறையிட்டு விட்டாள். எல்லாவற்றுக்கும்   "alles normal " (அனைத்தும்  சாதாரணம்)   என்ற பதிலையே அவர் சொல்லியிருந்த போதும் அவளது உடல் நிலையில் ஏதோ பாதிப்பிருப்பதாக உணர்ந்தாள்.  அந்த alles normal   இற்கு மேல் அவளுக்கு  அந்த நாட்டின்  மொழி விளங்காது. அவளுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு  வைத்தியர் தயாராக இருக்கவில்லை. ஜெர்மனியில் இந்நிலை ஒரு சாபக்கேடு .
ஜெர்மானியர்கள் அயல் நாட்டு மொழிகளைக் கூடப் பாவிக்க விரும்பாதவர்கள்.  மற்றத் தொழில் துறைகளில் இருந்தாலும் இல்லாது விட்டாலும் வைத்தியத்தொழிலில்  சர்வதேச  மொழியான ஆங்கிலக் கல்வி அவசியமாகக்கப்பட்டு அவர்களது மருத்துவப் படிப்பின் போது நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கிறது. இருந்தும்  கல்விக் காலம் முடிந்த பின் தனியாக இயங்கும் வைத்தியர்கள் சிலர்  அந்நிய மொழி மீதான தம் இரத்தத்தோடும் உணர்வோடும் கலந்து விட்ட  துவேசத்தைக் காட்டும் நோக்கில்  ஜேர்மனிய மொழி தெரியாத தமது நோயாளிகளுடன் கூட ஆங்கிலத்தில் கதைக்க முற்றாக மறுத்து விடுவார்கள். அந்தக் கூட்டத்தில் ஒருவராகத்தான் அவளது வைத்தியப் பெண்ணும் இருந்தார்.
அறிமுகமில்லா ஒரு புதிய நாட்டில் , மொழியறிவும்,  அறிமுகங்களும், ஆலோசனைகளும்  தன்னின மக்களுடனான  தொடர்புகளும் அற்று  திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்ட தட்டத்தனி உயிராய் வயிற்றில் கருவுடன்  அவள்  அரவணைப்பின்றித் தடுமாறி நின்றபோது,அவளை அவளது நிலையைப் புரிந்து கொண்டவர் அவளது குடும்ப வைத்தியர் ஒருவர் மட்டுமே.  அவர்   அறிமுகப்படுத்திய பெண் மருத்துவர் அவர்.
"நீ நினைப்பது போல இங்குள்ள பெரும்பாலானோருக்கு ஆங்கிலம் அதிகம் தெரியாது என்பது உண்மை தான் என்றாலும் மருத்துவர்களுக்கு  படிக்கும் காலத்தில் அது கட்டாயப் பாடம்.  நிச்சயமாக  அவர்களுக்கு ஆங்கிலம் தெரியும் பயப்படாமல் போ " என   சிபாரிசு செய்து அனுப்பிய பெண் மருத்துவர் அவர். 
கல்யாணத்தின் முன் தன் உடல் பற்றிய எந்த ஒரு விபரத்தையோ  அல்லது  பாலியல் உறவு , அது தொடர்ந்த கர்ப்பகாலம் அதன் அறிகுறிகள் , அவதிகள்  குழந்தைப் பேறுஎன்பவை பற்றியோ  வெளிப்படையாகக் கதைக்கும் அனுமதி மறுக்கப்பட்ட  , அதையே நல்ல, ஒழுக்கமான பெண்ணுக்கு அடையாளமான கலாச்சாரமாகக் கொள்ளப்பட்ட ஒரு பிற்போக்கு சமூகச் சூழலில் வளர்க்கப்படும் இனத்தின் ஒரு பிரதிநிதி அவள் என்பதால் முதற் கருவுற்றிருந்த காலத்தில் அது பற்றிய  விபரங்கள் தெரியாமல்தானிருந்தது.
  உடலின் அசாதாரண நிலையுணர்ந்து குடும்பவைத்தியரிடம்  போனபோது, அது தாய்மைக்கான அறிகுறிகள் எனக் கூறி,  அதை உறுதிப்படுத்தும் நோக்கில், பெண் மருத்துவரிடம் அனுப்பிவைத்த முதல் நாளிலேயே  அவர் தனக்கு ஆங்கிலம் தெரியவே தெரியாது எனத் தீர்மானமாகச் சொல்லிவிட்டிருந்தார்.   இருந்தும் அவ்விடத்தில் அவர் தவிர வேறு பெண் வைத்தியர்கள் இல்லையாதலால், மருத்துவரானாலும்  ஒரு ஆணிடம் தன் அந்தரங்கத்தைக் காட்டுமளவு  அப்போது  அவளது மனம் பக்குவப்பட்டிருக்கவில்லை ஆதலாலும்   வேறு தேர்வுகள் அவளுக்கு  இல்லாது போயின.
இந்த வாந்தி, தலைசுற்றல் , சமிபாடின்மை போன்ற அனைத்தும்  வைத்தியர் சொல்வது போல  மசக்கையின் அறிகுறிகள் இல்லை என்ற  அவளது குழப்பத்தைத் தீர்க்க வேண்டுமானால்  அவளுடன் இயல்பாக , நட்பாக அவளுக்குத் தெரிந்த மொழியில் பேசக்கூடிய குடும்பவைத்தியரிடம்  போவதே சரியானதென  முடிவெடுத்துக் கொண்டாள். 

தாங்கள் வசித்த ஐந்தாம்  மாடியிலிருந்து  குழந்தையின் கைப்பிடித்து  இறங்கும் போதே. வயிறு பிளந்து கொட்டிவிடும் போல உடன் அறுத்த காயமாக  அடிவயிறு வலித்தது.  குழந்தையைத் தூக்கி  வண்டிலுக்குள் இருத்தும் போதே அதனுடன்  சேர்ந்து அதன் மீதே  வண்டிலுக்குள் குப்புறச் சரிவது போல உணர்ந்தாள் . சிரமப்பட்டு நிமிர்ந்து  கைப்பிடியில்  பிடித்து  மூச்சு வாங்கிக்கொண்டு  தன்னைச் சமாளித்தாள் . தள்ளிக்கொண்டே நடக்கத் தொடங்கினாள்.  காச்சலினால் ஏற்பட்ட  சோர்வு மட்டுமல்லாது   ஒரு வித மயக்கம்  வீதியிலேயே சாய்த்து விழுத்தி விடுவது போல  அசத்திக்கொண்டிருந்தது.  குளிர்காலம்  ஆரம்பித்து விட்ட அந்த நேரத்திலும் உடல் வியர்த்தது.

வைத்தியரிடம் சென்று சேர்ந்த  போது  கிட்டத்தட்ட  விழுந்து படுக்கும்  நிலையிலிருந்தாள்.  அதிகமாக மூச்சுவாங்கியது.   அவளை  உள்ளே  அழைத்து  குடிக்க நீர் கொடுத்து  விசாரித்த  அந்த வைத்தியரிடம்  தொழிலை விட மனிதாபிமானம்  அதிகமிருந்தது.  நிலா   தன் உடலின் அசாதாரண நிலைபற்றி விபரித்தவைகளைக் கேட்டு ஒரு சில நிமிடப் பரிசோதனையிலேயே  வைத்தியரின் முகம் மாறியது. அவளை  அவசரமாக அழைத்துச் சென்று படுக்கையில் படுக்கவிட்டார். அனைத்து வேலைகளையும் ஒத்திவைத்து விட்டு   அவளது பெண் மருத்துவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.  இருவரும் பேசிய மொழி புரியவில்லையாயினும்  நட்பாகப் பேசவில்லை, எதுவோ  வாதிடுகிறார்கள்  என்பது மட்டும் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.  கேட்கும் திறனற்ற ஒருவர் வாயசைவுகளை வைத்து விளங்கிக்கொள்ள முயற்சிக்கும் தவிப்பு அவளிடம் இருந்தது.
பேசி முடித்துவிட்டு அவளது கையை   ஆதரவுடன் பற்றி,  " பயப்படாதே  உன் பெண் மருத்துவரிடம் கதைத்திருக்கிறேன். அம்புலன்சை  அழைத்திருக்கிறேன் . அதில் உன்  பெண் மருத்துவரிடம் போ. அனேகமாக  உடனடியாக வைத்தியசாலைக்குப் போகவேண்டியிருக்கும்  பயந்து விடாதே " என்றார்.,
"மாதம் வரவில்லையே  என்னாச்சு?" அவளின் குரலில் பதற்றம் இருந்தது.
"நீ சற்று அசாதாரணமான நிலையில் இருக்கிறாய்  இந்த வாந்தி  காய்ச்சல்  காரணமானதோ  அன்றி, மசக்கை காரணமானதோ  அல்ல.  உன் உடலில் கிருமித் தொற்றுப்  பரவியிருக்கிறது.  அதனால்  ஏற்பட்டதே  இந்நிலை.  அது கர்ப்பத்தின் மூலமான தாக்கம் என நான் சந்தேகிக்கிறேன்  "
  என்று சொன்ன மருத்துவரின் கண்களில் வழமையை  விட கருணையும் கனிவும் அதிகமாக இருந்தன.  அந்த மண்ணிற்கு வந்தது முதலாய்  அவளுக்கென  உண்மையாக இருந்த ஒரே மனிதரும் அவளது சூழ்நிலைகள் புரிந்தவரும்  அவராகத்தான் இருந்தார். அவரோடு தான் அவளால் கொஞ்சமாவது தனிமையாக மனம் விட்டுப் பேச முடிந்ததும். தன் முதற் குழந்தை தனித்துத் தன்னைப் போலவே இந்தப் பூமியில்   ஆதரவற்று  நின்றுவிடக் கூடாது  என்ற ஒரே காரணத்துக்காக  மட்டுமே  இந்தக் குழந்தை அவளுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், அதன் பின்னால் இரண்டு குழந்தைகளையும் கொண்டு ஜடமாகிப் போன இந்த வாழ்வை விடுத்து அவள் உயிரோடு வாழ்ந்த   அவளது நாட்டுக்கே மீண்டும் அவளாகவே   திரும்பிவிடும்   தீர்மானத்தில் இருந்த அவசியத்தையும்  அதன் பின்னாலிருந்த நியாயங்களையும்    அவர் மட்டுமே அறிந்திருந்தார்,  அவளதும் குழந்தைகளினதும்  எதிர்காலத்துக்கு அது தான் ஏற்றதாக  இருக்கும் என்று   அங்குள்ள  அவளின் வாழ் நிலைமைகளை  உணர்ந்த அவரும்  அறிவுறுத்தியிருந்தார். அவரைச் சந்திக்கலாம் என்பதாலேயே   அவளுக்கு  அடிக்கடி  நோய்கள் வருவது கூடப் பிடித்திருந்தன.

அம்புலன்ஸ் பெண் மருத்துவரிடம்  அழைத்துச் சென்ற போது வழமையான  வெளிநாட்டினர் மீதான அசட்டையான பார்வையற்று அவரது முகம் அன்று குழம்பிக் கிடந்தது.  செயல்களில் அவசரமும் பதட்டமும் இருந்தது.  ஒரு சில சிறு பரிசோதனைகளுடன்  நிறுத்திக் கொண்டு, அவசரமாக   அம்புலன்ஸில் ஏற்றி அனுப்பிவைத்தார்.  கேள்வி கேட்க அவளுக்குத் தோன்றவில்லை. கேட்டாலும் துவேஷத்தைத் தூரவைத்துவிட்டு அவளுக்குப் புரியும் மொழியில் பதில் சொல்ல அவர் தயாராக இருக்கப் போவதில்லை என்பது சலிப்பாக இருந்தது. 
 அம்புலன்ஸ் பயணித்துக் கொண்டிருந்த போது குழப்பமும் பயமும் சூழத் தொடங்கின.  அவளது நாட்டில் அவளுக்கு மிகவும் பிடித்தமான   அரவணைப்பான  மனிதர்களை   எண்ணிக் கொண்டாள்.  அவர்களுடன் கதைக்கவேண்டும் போலத் தோன்றியது, வெளிநாட்டு வாசத்தில்   எப்போதும் பணம் இல்லாத தன் வெறுங்கைகளை அப்போதும்  விரித்துப் பார்த்துக் கொண்டாள்.  அவள் நாட்டைப் பிரிந்தபின்  யாரையும் தனிப்பட அவள் விருப்பப்படி தொடர்புகொள்வதற்கான சிறு பொருளாதார வசதி கூட அவளுக்கு இருந்ததில்லை.

பருத்திருக்கும் வயிற்றுக்கு வசதியாக  கர்ப்பகால உடைகள்  கூட அவளிடம் இருக்கவில்லை.  அதைக் கேட்பதற்கும் யாரும் இருக்கவில்லை, சாதாரண  உடையைப் பருத்த வயிற்றுடன்  அணிய முடியவில்லை. வெட்டுகிறது எனக்  கருவுக்குக் காரணமானவனிடம்  கேட்டு  உன்  வீட்டுக் காரர்கள்  அல்லவா அனுப்பியிருக்க வேண்டும் என்ற பதிலில் காயப்பட்டபின் அது பற்றி அவள் சிந்திப்பதில்லையான நிலையில்  கடிதத் தொலைபேசித் தொடர்புகளுக்கான  வசதிகள் இல்லாதது மட்டுமில்லை, வீட்டுத் தபால் பெட்டியின் சாவி எப்போதும் அவளது கைகளுக்குத் தூரமாகவே இருந்ததும் , அப்படி கையடையும் கடிதங்கள் பிரித்துப் பார்க்கப்பட்டிருப்பதும் , தபாலில் சேர்க்கும்படி கொடுக்கப்பட்ட கடிதங்கள் சென்று சேர்ந்திராத செய்திகளும், தொலைபேசிக்கு அருகிலான  இன்னொருவரின் அவதானிப்புக்கு  முன் அவளால் இயல்பாகப் பேச முடியாமையுமாக  அவள் அந்த சில வருடங்களில் தான் மிக அதிகமாக நேசித்த அனைவரையும் விரும்பியே தொலைத்து விட்டிருந்தாள்.
அவர்கள் காரணம் அறியாது தவிப்பார்கள் என்பதுணர்ந்தும் காரணம் அறிந்தால் தவிப்பை விட   அவளது நிலை அறிந்து  அதிகம் துடிக்கக் கூடும் என்பதால்  அனைத்தையும் விழுங்கி  தனியாக நின்றிருந்தாள். இப்போது அவர்களது  தலைவருடலுக்கு மனம் ஏங்கியது. அனைத்து உறவுக்கும் ஈடாய்  குழந்தை தான் அம்புலன்ஸ் பணியாளரின்  மடியில்  அவளின் கைகளைப் பற்றியபடி மலங்க மலங்க விழித்தபடி அமர்ந்திருந்தாள்.

அம்புலன்சிலிருந்து  படுக்கையோடு  இறக்கித்  தள்ளியவாறே  உரிய பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட போது  வைத்தியசாலை அவளுக்காக ஆயத்தமாகக் காத்திருந்தது போலிருந்தது. அம்புலன்ஸில் இருந்து தள்ளிச் செல்லப்பட்ட  படுக்கையில் இருந்து  வைத்தியசாலைப் படுக்கையில் படுக்கவைத்ததும்  ஒரு வைத்தியர் இரு தாதிகள்  என அமைதியாக  ஆரம்பித்த  பரிசோதனை  நேரமாக ஆக ஒவ்வொரு வைத்தியராக அதிகரித்து , வேறு பிரத்தியேக அறைக்கு மாற்றப்பட்டு  அதற்குள்  விவாதங்களும்  ஆலோசனைகளுமாக அமர்க்களமாக, அவள் புரியாமல்  அலங்கமலங்க முழிக்கத் தொடங்கினாள்.

வயிற்றில்  அகலமான  பண்டேஜ்  சுற்றப்பட்டு  அதற்குள்  குழந்தையின் இதயத்துடிப்பை அறிவதற்கான பட்டி செருகப்பட்டு,  கருவியில் பதிவு செய்துகொள்ளப்பட்டுக் கொண்டிருக்க,   அவள் வைத்தியசாலை உடைகளுக்கு மாற்றப்பட்டு  மார்பில் முதுகில் என முக்கிய இடங்களில் ஒட்டப்பட்ட உபகரணங்களுடன், அவளது இதயத்துடிப்பு கருவி ஓடத்தொடங்கியது.  அவளது கணவனை  தொலைபேசி  மூலம் அழைத்து  வரவழைத்திருந்தார்கள்.  இதுவரை அவளது மகளை  பொறுப்பேற்று  வைத்திருந்த தாதியக் கல்வி மாணவியிடமிருந்து குழந்தையைத் தந்தையிடம் ஒப்படைத்து, அவளுக்கான மாற்றுடை எடுத்து வரும்படி அனுப்பி வைத்தார்கள்.
நேரம் கடக்கக் கடக்க வைத்தியர்கள், தாதியர்கள் பொறுமையற்று உலாவத் தொடங்கினார்கள். கூடிக் கூடிப் பேய்க் கொண்டார்கள்.

"என்னாச்சு"   என்றாள் மிரட்சியுடன்.   நர்ஸ் தலை வருடினாள்.   பயப்படாதே என்றாள்.  மருத்துவர் கைகளை இறுகப் பற்றிப் பிடித்தவாறே,
"அறுவைச் சிகிச்சை மூலம்  குழந்தையை வெளியே எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்"  என்றார்.  ஆங்கிலத்தில் .

"இப்பவேவா? இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளனவே?"

அவர் பதில் சொல்லாமல் அவளின் நெற்றியை விரல்களின் பின்பக்கத்தால்  வருடினார்.  சம்மதம் தெரிவித்துக் கையொப்பமிடும் படி   பத்திரங்களை  நீட்டினார்.

                                                             
                                             

"இல்லை  எனக்குப் பயமாக இருக்கிறது"
"எதுவும் ஆகாது . ஆகக் கூடாது என்பதற்காகத்தான் செய்கிறோம் கையெழுத்திடு."
"இல்லை  நான்  என் மகளைப் பார்க்க வேண்டும்"
"மாற்றுடை எடுத்து வரச் சொல்லி நாங்கள் அனுப்பும் போது ஒன்பது மணி, இப்போது பன்னிரண்டு மணியாச்சு. தற்போதய   உன் உடல் நிலை குறித்து  அறிவிக்க உன் வீட்டுக்குப் பலமுறை தொடர்பு கொண்டோம் அங்கு யாருமில்லை,  காத்திருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்  ஆபத்து சூழ்ந்து கொண்டிருக்கிறது. கையெழுத்திடு."
"இல்லை  இன்னும் கொஞ்சநேரம் பார்க்கலாம்  எனக்கு என் மகளைப் பார்க்க வேண்டும்"

அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் அதே வினா அதே விடை
பின் வினாவும்  விடையுமான  நேரங்கள் குறுகத் தொடங்கின. மெல்ல மெல்ல பதட்டம்  இன்னும்  அதிகரிக்கத் தொடங்கியது. மெதுவாக நடந்து அவள் இருந்த அறைக்கு வந்து போய்க் கொண்டிருந்தவர்கள்  சற்று அவசரமும் ஆற்றாமையுமாக அலையத் தொடங்கினார்கள் . ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வைத்தியர்  அவளிடம் பத்திரம் காட்டி அனுமதி கேட்டார்.  அவள் சலிக்காமல்  ஒரே பதிலைச் சொல்லிக்கொண்டே இருந்தாள். தன்னைச் சூழும் ஆபத்து புரியாமல்.
பருத்த அவளது வயிற்றில் செல்லைப் பரவி அதன் மீது  உள் நோக்குக்  கருவியை உருட்டியவாறே தன் முன்னே இருந்த கணனியில் வைத்தியர்  சில குறிப்பீடுகளை  புள்ளியிட்டுக்கொண்டார் அவரின் முதுகுப்பக்கத்தில்  சுவரை அடைத்தது போலிருந்த   மொனிட்டர் திரையில்  அவளது வயிற்றுப்பகுதி காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது.   சில இடங்களைச் சுட்டி  வைத்தியர்கள் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள்  அவளுக்கு எதுவும் புரியாமல் சிவப்பாகவும் நீலமாகவும் வேறும் ஆங்காங்கே வேறுபல நிறங்களிலும் தெரிந்த தன் உடல் நிலைபற்றிய விபரங்களை  வெறும் ஒரு  நவீன ஓவியம்  போலப்  புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். 

அவர்கள் பேசப் பேச அவளருகே நின்ற நர்சின் முகம் மாறி இருண்டது.  நெற்றி முடியை மேவி வருடிவிட்டாள்.   ஒரு நாய் கடித்தால், இடறி விழுந்தால் கூடிவிடும் சுற்றமும் தேடிவரும் நட்புக்களும் சமயசந்தர்ப்பம் அறியாமல் அந்நேரத் தனிமையில் நினைவில் வந்தார்கள். அவளையறியாமலே கண்கள் கலங்கின.  யாருமற்ற தனிமையில் இறந்து விடுவேனோ.  என் குழந்தை அன்பையும் ஆதரவையும் இழந்தவளாக   அந்தரித்து நிற்பாளோ  என்ற பயம் பதற வைத்தது.
வைத்தியர் மீண்டும் அருகில் வந்தார். இம்முறை அவர் ஆரம்பிக்கமுன் அவளே ஆரம்பித்தாள்
"உங்களால்  என்னுடன் ஆங்கிலத்தில் உரையாட முடியுமா.?"
"கட்டாயமாக/  என்ன பேச விரும்புகிறாய்?"
"ஏதோ ஆபத்தென்பது புரிகிறது.  என்னவென எனக்கு விளங்கும் வகையில் சொல்லமுடியுமா ?"
அவர் விளக்கினார்.  விளக்கிய பின்  இறுகிப் போன மனநிலையுடன்
" ஆபத்து எனக்கா குழந்தைக்கா "  என்றாள்.
வைத்தியர் சட்டென தன் குரலையும் முகபாவனையையும் மாற்றி
"யாருக்கென்றால்  அதிகம்  பயப்படுவாய்.?"
"என்னை வெட்டினாலும் பரவாயில்லை  குழந்தைக்கு எதுவும் ஆகக் கூடாது.  ஆனால் என் இரண்டு குழந்தைகளுக்கும்  என்னை விட்டால் யாருமில்லை.  நான் இறந்து விடக் கூடாது. "
அந்த வார்த்தையில் , அதற்காகவே காத்திருந்தது போல சட்டென பத்திரங்களை நீட்டி
"கையெழுத்திடு" என்றார்,
அவள் அமைதியாக இருந்தாள். 
"எனக்கு  என் மகளைப் பார்க்க வேண்டும் ."
 தனித்துப்போன ஒரு தேசத்தில்   சுற்றுவர  வெண்ணிற உடையோடு அந்நிய மனிதர்கள் காத்திருக்க ஒரு பலியாடுபோல அவர்கள் நடுவே படுத்துக்கொண்டு  மொழி கூட அறியா இடத்தில் சாவுக்கும் வாழ்வுக்கும் இடையில் தனியாகப்  போராடும்  தன்மீதே பச்சாதாபம் வந்தது.
இருந்தாற்போல் அவர்கள்  அனைவரும் மதிப்புடன் விலகி வழிவிட, தலை முழுவதும் வெண்மையாக நரைத்த , கனிவும் நிதானமும் தேங்கிய கண்களுமாக வெள்ளை உடையில் ஒரு வயதான தேவதூதன் போல அந்த மனிதர் வந்தார்.  படுத்திருந்தவளது கைபற்றிக் குலுக்காமல் , ஒரு கையால் தோளை ஆதரவுடன் அழுத்தி மறுகையால் தலையைச் சுற்றி வளைத்து முகத்துக்கு நேரே குனிந்து
"நான் உன் அப்பா போல"
 என்ற அவருக்கு மனோவசியம் தெரிந்திருக்க வேண்டும் . சட்டென அவரது முகத்தையே பார்த்தாள்.  "நான் உன் குடும்ப வைத்தியருடன்  உன்னைப்பற்றிய உடல் நிலை மட்டுமல்ல,  மற்றைய அனைத்தும் கூடப்  பேசினேன் " என்றபோது  ஏனோ நெருக்கமாக உணர்ந்தாள்.
"உனக்கு குழந்தை வேண்டும்.  உன் மூத்தகுழந்ந்தைக்காக நீ வேண்டும்.  நீ இல்லாவிட்டால்  அவள் யாருடன் இருப்பாள். ?"
"நான் அவளுடன் இருந்தாக வேண்டும். நான் இல்லாது விட்டால்  அவள் இருக்கக் கூடாது. என் வாழ்க்கை நிலவரம்  உணரமுதல்  பாதுகாப்பற்ற  சூழ்நிலையில்   அவளைப் பெற்று என்னில் விலங்கு பூட்டிக் கொண்டு விட்டேன் . "
"ஏன்?"
"ஏனென்றால் பெற்றோரை இழந்த  இழப்புடனான  சகோதரமற்றுத்   தனித்துப் போன வாழ்க்கை பற்றி,  எனக்கு நன்றாகவே தெரியும் . என் திருமணத்துக்கு முன்னாலேயே  அதை அனுபவித்தவள் நான்  அது நிர்ப்பந்தங்களால் ஆனது. அதில் எந்த ஆதரவும் நிரந்தரமில்லாதது. உரிமையற்றது. பாசம் கூட சந்தர்ப்பங்களால் ஆனது  ஏதோ  ஒரு கை,  ஏதேதோ  சந்தர்ப்பங்கள்  என ஒவ்வொரு திருப்பத்திலும்  காயங்கள் காத்திருக்கும். அதை அனுபவித்தோரால் மட்டுமே உணரமுடியும். நான் தாராளமாக  அனுபவித்திருக்கிறேன் . அதை  என் மகள் அனுபவிக்கக் கூடாது. "
"அப்படியானால் கையெழுத்திடு".
"ஆபத்தில் இருப்பது யார் நானா குழந்தையா?"
"இருவருமே தான்  . நான் மிகக் கவனமாக இந்த அறுவைச் சிகிச்சையை செய்வேன். பயம் கொள்ளாதே"
அவள் பேசவில்லை.
"முதல் ஒரு அறுவைக்கு முகம் கொடுத்தாய்  தானே  இதற்கு எதற்கு இத்தனை தயங்குகின்றாய்?"
"அது  அப்போது அந்த அறுவைச் சிகிச்சையின் போது எனக்கு ஒரு குழந்தை கிடைக்கும் என்பது தெரியும்  ஆனால் அதன் முகத்தை நான் பார்த்திருக்கவில்லை.  என்னைப்பற்றிய சிந்தனை அதிகம் இருந்தது . நான் யாருக்காகவேனும்  வாழவேண்டும் என்ற  கட்டாயம்  ஏதும் இருப்பதாக உணரவில்லை.  ஆதலால்  உயிர் பற்றிய பயம் இருக்கவில்லை.  இப்போது.... உங்கள் பதட்டங்கள்  குழந்தையின்  இருத்தல் மீதான் பயங்களை எனக்கு உண்டாக்குகின்றது.  என் மீது பரவும் கனிவுப் பார்வைகளும் வருடல்களும் நான் இருப்பேனா என்ற பதட்டத்தை உண்டாக்குகின்றது.  உயிர் பற்றி எனக்குப் பயம்  ஏதுமில்லை.  நான்    இறந்து சில  வருடங்களாச்சு.  ஆனால்..........
என் மகளுக்காக இருந்தாக வேண்டும் . அவளை விட்டுப் போய் விடுவேனோ  எனப் பயமாக இருக்கிறது.  அவளை நான் பார்க்க வேண்டும். "
"காலை பத்துமணியில்  இருந்து உன் வீட்டுக்குத் தொடர்பு கொள்கிறோம்.  இப்போது மாலை எட்டு மணி வீட்டில் இதுவரை  யாருமில்லை. யாரும் எங்களை தொடர்பு கொள்ளவோ உன்னை தேடிவரவோ  இல்லை.  இதற்கு மேல் காத்திருக்கும் நிலையில் நீயும் உன் வயிற்றில் இருக்கும் குழந்தையும் இல்லை "
அவள் உடைந்து அழத்தொடங்கினாள்.  அவர்களின் கார் சீற்றின்  இடுக்குக்குள்  கிடந்த  அவளது அல்லாத அவள் புலம்பெயர்ந்த பின் பாவிக்க அனுமதிக்கப்படாத நகப்பூச்சுப் போத்தில் நினைவு வந்தது. சீற்றின் பின்பக்கத்தில் ஒட்டியிருந்த அவளது அல்லாத முடிகள் நினைவில் அவளது தொண்டையை  இறுக்கின. அவள்  எடுத்த போதெல்லாம்  கட செய்யப்பட்ட தொலைபேசி  அழைப்புகள்  இப்போதும் அவளது தனிமையை  முகத்தில் அறைந்து நினைவு படுத்தின.  கூடவே    ஒரு ஊசி போட்டாலும் நொந்து விடும் என்று துடித்த சில  உறவுகள், கல்லடி பட்ட கால்விரலை  வாயில் வைத்துச் சூப்பிய நட்பு  என ஒவ்வொன்றாக  நினைவில் வந்து  அடிவயிற்றிலிருந்து  எழுந்த கேவலில்  பருத்திருந்த வயிறு  துடிப்பதும் வலிப்பதும்  தவிர்க்கமுடியாததாக  இருந்தது.
"என்னை உன் தந்தையாக நினைத்துக் கொள் .  என்னை நம்பு கையெழுத்து வை"  என பத்திரங்களை நீட்டினார்.
"என் மகள்"
"உன்னை நலமாக  அவளிடம் ஒப்படைப்பது  என் பொறுப்பு"
அவள் அடைக்கலமாகுபவள் போல பரிதாபமாக அவரைப் பார்த்தாள். அவர் தாதியைப் பார்த்துத் தலையைத்ததும்,
உடலில் செருகப்பட்டிருந்த  உபகரணங்களை அசைக்காது  மெதுவாக  தன்னில் சாய்த்து அவளைக் கைத்தாங்கலாக நிமிர்த்தினார்  தாதியப் பெண். பொட்டல் காட்டில் கூட்டமிழந்து  தனித்துப் போன வலசைப் பறவையாக மிரண்ட விழிகளுடன்   பத்திரங்களின் மீது விழுந்து தெறித்த கண்ணீர்த்துளிகளுடன் கையெழுத்திட்டு முடிக்கவும்,  அதற்கே காத்திருந்தது போல  சத்திர சிகிச்சைக்கான மயக்க ஊசி அவளில் ஏறவும் சரியாக இருந்தது . ஏறிக்கொண்டிருந்த சேலைன்  குழாயை  சற்று நிறுத்திக் கழட்டி அதில் மயக்க மருந்தை  ஏற்றும் போது  அதிகமாக வலித்து ஒரு வினாடி  நரம்புகள் முறுக்கி இறுக்குவது போல இருந்தது.   நெற்றியை வருடி,
"உன் அன்பு  மகளின் பெயர் என்ன?"    என்று வைத்தியர் கேட்டதும் அவள் மகளின் பெயரை  உச்சரித்ததும் கனவு போல  இறுதியாக மனதில் பதிந்திருந்தது.

நிலாவுக்கு சற்று சுயஉணர்வு வந்த போது கண்கள் திறக்க முடியவில்லை.   எங்கோ தூரத்தில்  பேச்சொலிகள் கேட்பது போலும் தான்  ஏதோ  ஆழத்தில் கட்டை யாகக் கிடப்பது போலும் உணர்ந்தாள். யாரோ  அவள் பெயர் சொல்லி அழைப்பது போலிருந்தது.  ம்  என்றாவது பதில் சொல்ல வேண்டும் போலிருந்தது.  ஆனாலும்  ஒரு முனகலைகூட  வெளிப்படுத்த முடியவில்லை.  மீண்டும் மீண்டும் அழைத்தார்கள்.  அந்தக் குரல்கள் பரீட்சயமற்றவையாக   உணர்ந்தாள். மிகச் சோர்வும் சலிப்புமாக  ஓய்ந்து கொண்டிருக்கும் உணர்வுகளிலிருந்து  வெளிவர விருப்பமற்றிருந்தது. அப்படியே ஓய்ந்துவிடுவது சுகமானது போல உணர்ந்தாள்.  பதட்டமாக பலமாக  அழைக்கத் தொடங்கினார்கள்.
ஆழ்ந்த தூக்கத்திலிருந்து கட்டாயப்படுத்தி எழுப்ப முயல்வது  போல உணர்ந்தாள்  பதில் சொல்ல முயன்றும் முடியவில்லை. கன்னத்தில்  சற்றுப் பலமாக தட்டினார்கள்.  உணர்ந்தாலும்  ஓய்ந்தாள்.  இரண்டு கன்னங்களையும்  மாறிமாறித் தட்டினார்கள்.  கால்களை நீட்டி மடித்தார் கள் . அவளுக்கு  எழுந்திருக்கத் தோன்றவில்லை.
 காதினருகே  "அம்மா"  என்ற குரல்  கேட்டது.  அவளது முகத்தை  அவளுக்குப் பழக்கமான, உணர்வோடு  இணைந்த பிஞ்சுக் கை வருடியது.  அவளுக்கு  கண் விழிக்க வேண்டும் போலிருந்தது  வைத்தியரின் குரல்  காதருகில்  கேட்டது.
" உன் மகள்  வந்திருக்கிறாள்.    உன் மகளுக்காக  எழுந்திரு  கண்களைத் திற " மந்திரம் போல  அது கேட்டுக்கொண்டேயிருக்க  பிரயத்தனப்பட்டுக் கண் திறந்தாள்.  அவளைச் சுற்றிப் பலமான கரவொலி கேட்டது  அவளது மகளை முத்தமிட வைத்தார்கள்.    இப்போது கண்ணைக் கூசிக்கொண்டு வெளிச்சம் தெரிந்தது.
"குழந்தை"  என்றாள் பலகீனமான் குரலில் .
"காட்டலாம்.  இப்போது இதோ உனக்காக   உன் மகள் காத்திருக்கிறாள்.  நான் உனக்கு வாக்குத்தந்தது போல உன்னைப் பாதுகாத்து உன் மகளிடம் ஒப்படைத்து விட்டேன் ."
என்ற அந்த வயோதிக வைத்தியர்   குனிந்து  நெற்றியை வருடி
"தூங்கு"  என்றார்..
அவள்  தன்னில் செருகப்பட்ட அத்தனை உபகரணங்களுடனும் தன் படுக்கையில் தலைமாட்டருகே    அமர்த்தப்பட்திருந்த   தன் மகளின் கையைப்பற்றியவாறே  மருந்து மயக்கத்தில் ஓய்ந்து உறங்கத் தொடங்கினாள்.
ஆயிற்று  அத்தனை வலியும் பட்டுச் சுமந்த குழந்தையை  வயிற்றைக் கிழித்தெடுத்துக் குழியில் வைத்தாயிற்று.  வயிற்றை  அறுத்த வலியைக் கூட உணர முடியாதளவு   உயிரையே  அறுத்துவிடும் வலியைக் கொடுத்தது  குழந்தையை  இழந்த வலி.  அரவணைக்க, ஆறுதல் சொல்ல யாருமற்ற தேசத்தில் எல்லா உணர்வுகளையும் விழுங்கிச் செரிப்பதைப் போல இழந்த குழந்தைக்காய் மனம் விட்டுக் கதறி அழக் கூட வாய்ப்பதில்லை  என்பதை  அவள் நடைமுறையில்  உணர்ந்தாள். இங்கு வந்த காலமிருந்து  பல்லைக்கடித்து விழுங்கப்பட்ட  அனைத்து வலிகளோடும் சேர்த்து இந்த வலியையும்  விழுங்க  முயன்றாள்  அவளது  மகளுக்காக..
   அவளது கண்ணீரும்  உடைவும், எந்நேரமும்  அவளது கால்களையே  சுற்றி வரும் அவளது முதற் குழந்தையை  அதிகமாகப்  பாதித்தது.  அடிக்கடி  அம்மாவின்  முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தாள்,  கண்களைத் தன் பிஞ்சுக் கரங்களால்  துடைத்து விட்டு பசியைக் கூடச் சொல்லாது  தவிர்த்தாள்.  தாய்  அழும் போது  தானும் அழுதாள்.  அது  அந்தக் குழந்தையின் மனநிலைக்கு  ஏற்றதில்லை.  சிறுவயதுப் பாதிப்பாக அதனது  இயல்பான  மனவளர்ச்சியில்  ஆளுமை செலுத்தி விடும் எனப் பயந்தாள்.  பகல் முழுதும் மகளுக்காகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, குழந்தை உறங்கிய இரவுகளில் மனம் குமுற தனிமையில் ஓசையற்றுக்  கதறினாள்.

 ஒரு கர்ப்பம் ஆரோக்கியமான  சதாரண  நிலையில் இல்லையெனில்   வயிற்றில் மூன்றாம் மாதமாக இருக்கும் போதே  அதன்  அறிகுறிகள் மெல்லமெல்ல வெளிப்பட  ஆரம்பித்து விடும்.  சொந்த நாட்டிலிருந்தால்  குடும்பத்தில்,  அயலட்டையில் உள்ள அனுபவப்பட்ட பெண்களால் இயல்புக்கு மாறான அந்த மாற்றம்  உணரப்பட்டுவிடும்.  அதற்கு மேல் கருவுற்ற பெண்ணைத் துளைத்தெடுக்கும் கேள்விகளால்  அவர்கள்  அதை  ஊர்ஜிதம் செய்து கொள்வார்கள். ஆரம்பத்திலேயே   அதற்கான சிகிச்சைக்கும்  ஏற்பாடு செய்து விடுவதோடு, கவனிப்பும் கண்காணிப்பும் அதிகரித்து விடும்.  குழந்தை சுமக்கும் பெண் தனக்கான சந்தேகங்களை, குழப்பங்களை  உடல் மாறுபாடுகளை தன் மொழியில் தெளிவாகவும் உற்றோர்  உரியோரிடம்  உரிமையோடும்  பேசிக்கொள்ள முடியும்.  அதன் மூலம் பல ஆபத்தான விளைவுகளையும்  தவிர்த்து விடலாம்.
அவள் போல அந்நியநாட்டில்  தன் தேவைகள், உபாதைகள், சந்தேகங்களை விளக்கிச் சொல்லும் அளவு  கூட  அந்த மொழி தெரியாது, தன் மொழி பேசுபவர்களின் தொடர்பும் அற்று, கர்ப்பத்தைச் சுமப்பது  என்பது  அனுபவமற்ற ஒரு பெண்ணுக்கு மிகப் பெரும் சவாலான அனுபவம்..  அதில்  ஜெயித்தல் என்பது சாதாரண விடயமல்ல.  அந்த அசாதாரண கர்ப்பகாலத்தை  ஒரு இனத் துவேஷம் கொண்ட வைத்தியருடன் இணைந்து கடப்பது  இலகுவானதல்ல.  அவள்  அப்படியான  அழுத்தங்களோடே தான்  அதைக்  கடந்திருந்தாள்.
ஒரு மொழித் துவேசம், பாதிக்கப்பட்டவரின் உடல் பற்றிய நிலைமைகளைக் கேட்டறிய விரும்பா நிலையை, உண்ண, வாழ வழியற்று எம்மிடம் அடைக்கலம் கேட்டு வந்தவர்கள் தானே எனும்  கீழைத்தேயத்தவர்கள்  மீதான தாழ்வான கணிப்பீடு கொண்ட  உள்ளப்பாங்கு, அவள் மீண்டும் மீண்டும் தன்னை  உணர்த்த முற்பட்டும் ஏற்றுக்கொள்ளப்படாத மேம்போக்கு   ஒரு கர்ப்பம் சுமந்த பெண்ணையும் அவளது குழந்தையையும்  எவ்வளவு  ஆபத்தான நிலைக்குத் தள்ளி விட்டிருக்கிறது  என்று புரிந்த போது செயற்படுத்த முடியாத கோபம் வந்தது. வெளிநாடு, கல்யாணம் பிரசவம் வாழ்க்கை  என எல்லாவற்றின் மீதும் வெறுப்பு கசந்து வழிந்தது .
  . எத்தனை  உடல் வலியிலும் மன வலியிலும்  வீட்டுக் கடமைகளிலிருந்து ஓய்வு கிடைக்காத   அநேகமான   பெண்களில் ஒருத்தியாகவே  அவளும் இருந்தாள்.  வயிற்றைக் கைகளால் தாங்கிக்கொண்டு வழமை போல  இயங்க வேண்டிய நிர்ப்பந்தமிருந்தது.   இந்த சில நாட்களில்  அவளது  வீட்டிலிருந்து  வந்த தொலைபேசி அழைப்பு எதுவும்  அவளுக்கு  வழங்கப்படவில்லை.  அவள் தூங்குகிறாள்  என்றும்  அவள்  சாப்பிடுகிறாள்  நான்  ஊட்டிக் கொண்டிருக்கிறேன்  என்றும் தொடர்ந்து கொண்டிருந்த  இதமான மறுப்புகளின்  பின்னிருந்த அசிங்கமான பொய்முகத்தை   அவதானித்த படியே எந்நேரமும் கைகளுக்குள்ளேயே சுருண்டு கிடக்கும் மகளை அணைத்தபடி முடிந்தவரை வீட்டுவேலைகளைச் செய்து விட்டு ஒடுங்கிக் கிடந்தாள்.
  மனைவியையும் குழந்தையையும்  பராமரிக்க  வழங்கப்பட்ட  மருத்துவ  ஓய்வில் கணவன்  வழமை போல  பகல் முழுதும்  ஊர் சுற்றினான்.  அவள் சமைத்து வைத்ததை  உண்டு வயிற்றுப் பசியாறிவிட்டு   இரவுகளில் சுவாரசியமாக  பாலியல் படங்கள்  பார்த்தான்.  பகல் முழுவதும்  மகளுக்காக  மறைத்து  விழுங்கிக் கொள்ளும்  இழந்த குழந்தைக்கான  கண்ணீருடன்  தனியாகப்  படுக்கையில்  கிடந்தது   குமுறி அழும் மனைவியின்  சத்தத்துக்குச் சினந்து  சீறினான்.   அவள்  மூச்சுத் திணறி இருமும் போது,  தனது தொலைக்காட்சிச் சுவாரசியம் குழம்பும்  ஆத்திரத்தில்   எழுந்து வந்து   ஆழ்ந்த நித்திரையில்  இருக்கும்  குழந்தையை  அப்படியே  தூக்கி  காயப்பட்ட  அவள்  வயிற்றின்  மீது  போட்டு  கொம்மாவைய்ப்  பார்  என்று  உறுமி விட்டு மீண்டும் தொலைக்காட்சியில் லயித்தான். அது  மலங்க மலங்க  விழித்து  வீரிட்டு  அழத் தொடங்கும் போது  சுள் என அதன் முதுகில் விழும் அறையில் அது மீண்டும் தாயின் வயிற்றில் தொப்பென விழுந்து வீறிடும் .  அதன்  அழுகையையும்  அது வயிற்றில்  விழுந்த வலியையும்  ஒரே நேரத்தில்  தாங்கித் துடித்தாள்  அவள். 
  உடல் வலி, குழந்தையை இழந்ததில்  ஏற்பட்ட மனச்சோர்வு  காரணமாக ,  அவசியம் ஏற்பட்டால் மட்டும் பாவிக்கும் படி வைத்தியரால்  வழங்கப்பட்ட  மன அமைதிக்கும் நித்திரைக்குமான  மாத்திரையை மட்டும் எப்போதும் மறக்காமல்  எடுத்து   நீட்டுவது  போல    அன்றும்  நீட்டியவனிடம்  வாங்கி  வாயில்  போட்டு  விட்டு பொய் மயக்கத்துள் ஓய்ந்து  கிடந்தாள். அப்படியான பல   இரவுகளில் , குழந்தையை  எடுத்த அறுவைத் தழும்புகள் முற்றாக  ஆறியிராத  அவளது    ரணப்பட்ட  உடல்  அவளது  அனுமதியின்றி,  இரவுநேர நீலப்படங்களைப் பார்த்து முறுக்கேறிக் கொண்ட  அவனது  உடற் பசிக்குத்  தீனியாகிக்கொண்டிருந்தது. 
மன ஓய்வுக்கான மருந்து என்பது கிட்டத்தட்ட போதைக்கு  ஒப்பானது.  தனக்கு நேர்வதை  கனவிலோ  மயக்கத்திலோ  நடப்பது போல உணர்ந்தாலும்  தடுக்கும் சக்தியற்று ஒரு கட்டையெனக் கிடக்கும் உடலைப் புணர்வது . கிட்டத்தட்ட பிணத்தைப் புணர்வது போலான  கீழ்த்தரமான கொடுமை என்பதை உணர்ந்து கொள்வதற்குக் கூட  மனதில் மனிதமும்   ஈரமும் இருந்தாக வேண்டும்.

 பருந்தின் வாயில் அகப்பட்ட  பலவீனப் பட்ட   ஒரு பறவையின்  எதிர்த்துப் போராடச் சக்தியற்ற நிலையில் வாழ்நாட்களைக்  கழித்துக் கொண்டிருந்த  அந்த வலசைப் பறவைக்கு, அவள் ஏந்தியெடுத்து வளர்க்க வரமற்றுப் போன அந்தக் குழந்தைதான்  உலகத்தைக் கற்பிக்கப் போகிறதென்பதையும்   அதை  எதிர்த்துப் போராடும்   உறுதியையும் கொடுக்கப்போகின்றது  என்பதையும் அவள்  அப்போது உணர்ந்திருக்கவில்லையாயினும்,

கானம் ஓய்ந்த ஒரு  வானம்பாடியின் இறக்கைகளில் முள் முளைக்கத் தொடங்கியிருப்பதை உணரத் தொடங்கியிருந்தாள்  முள்ளம்பன்றிகளின்  முட்களைப் போல சிலிர்த்து  உதறக் கூடிய தகமையையும்  அதன் மூலம்  தன்னைச்சுற்றிய ஒரு பாதுகாப்பு வட்டத்தையும் வரைந்து கொள்ள  இறக்கைகளுக்குக்கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள்