Saturday, November 7, 2020

நோனிப்பழரசமும், மஞ்சவண்ணாக் குயில்பாட்டும்

 


இருக்கிறவனுக்கு ஒரு வீடு, இல்லாதவனுக்குப் பலவீடு.  அகதி என்ற சொல் எமக்கு நெருக்கமாக அறிமுகமாகி மனிதர்கள் அலையத் தொடங்கிய காலத்தில் பாட்டி  அடிக்கடி இந்த வாக்கியத்தை உபயோகித்துப்பார்த்திருக்கிறேன்.  இப்போதெல்லாம்  ஊருக்குப் போகும் போது எனக்கும் அதே நிலை தான்.   ஆனாலும்  போனதும் வீடிருந்த  நிலம் தேடி போகமறப்பதில்லை.  


கடந்த முறையும்  அங்கு சென்றபோது பற்றை வளர்ந்த வெற்றுக் காணிக்குள் நுழைந்ததும் எனக்குள் வரும் ஆசுவாசத்தைப் போல, பிள்ளைகளும்  அங்கே மட்டுமே தம்முடையது என்ற உரிமையுடன்  சுதந்திரமாய்  உலவுவதை  அவர்கள் முகம் உணர்த்தியது  .   மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு செடியாய்  ஆராய்வதும்  அதில் வாழ்ந்த, மறைந்த மனிதர்கள் பற்றியும்,  என் சிறுபராய சம்பவங்கள் பற்றி விசாரிப்பதுமாக  நேரம் கடந்து கொண்டிருந்தது.  


அதன் வாசலில் தான் ஒரு காலம் என்னை  உதிர்த்துவிட்டு  உடலாக வெளியேறியிருந்தேன். வழமை போல அதற்குள் நுழைந்து கொண்டதும் உதிர்த்துப் போட்ட என்னை எடுத்து அணிந்து கொண்டேன் . வீடிருந்த இடத்தில் வளர்ந்து நிழல் தந்திருந்த மரம் ஒன்றில் சாய்ந்து கொண்டு  நினைவுகளுக்குள்  என்னைத் தேடிக் கொண்டிருந்தேன். 


இருந்தாற்போல " அம்மா நோனி  , நோனிம்மா"  என்றபடியே  சின்னவள்  ஓடிவந்தாள். நான் சாய்ந்திருந்த மரத்தைப் படமெடுத்தார்கள்.  "மல்லிகைப் பூப் போலவே  இருக்கிறது  அம்மா" என்றாள் . "இல்லை கொஞ்சம் தடிப்பும் சிறியதும் " என்றது மற்றைய  வாரிசு.  நான் சாய்ந்திருந்த மரத்தை  அப்போது தான்  அண்ணாந்து பார்த்தேன்.  வெறும் மரமாக இருந்தால் கண்டுபிடித்திருப்பேனோ  தெரியாது. காலம் ஏராளமானவற்றை மறக்கடித்து விட்டது   ஆனால் அது பசுமையான  காய்களும் பூக்களுமாக  நின்று நான் தான் மஞ்சவண்ணா  என்று ஞாபகப்படுத்தியது. 

                                           
                                                    

 


எனக்குள் குயில் கூவியது.  நினைவுகளை அழியவிடாமல் , வீடிருந்த நடுமனையில்  எந்தக் குயில் கொண்டு வந்து  விதைத்ததோ மஞ்சவண்ணா  அந்தக் காலத்தைப் போல பசுமையாக விரிந்து பரந்திருந்தது.  முன்பு அது  அடிவளவுக்குள் நன்றாக உயர்ந்து சடைத்து  நின்றது.  அதன் பக்கத்தில்  செவ்வன்னமுன்னா  இருந்தது  மற்றப்பக்கம்   பாட்டி பிள்ளைப்பராயத்தில்  ஊஞ்சலாடிய பருத்த வேம்பிருந்தது.  அதில்  ஆடியபடியே, மஞ்சவண்ணா பழம் சாப்பிடவந்து  உண்டு களித்த திருப்தியில் துனைதேடிக் கூவும் குயில் பாட்டுக்கு  எசப்பாட்டுப் பாடிக்கொண்டிருப்பேன்.  கூவிக் கூவி ஒரு கட்டத்தில்  குயில் கோபமாகி  ஆவேசமாகக் கூவ வெளிக்கிடும்  அதே தொனியில் பதில் கொடுத்தால், இன்று போய் நாளை வருவேன் என்று   பறந்து போய் விடும்.   பின்  அன்னமுன்னாவும்  மஞ்சவண்ணாவும் அக்காதங்கையாக இருக்குமோ  என்ற  என் அதி  முக்கியமான  ஆராட்சி  எனக்குள்  தொடங்கும் .


பெரியவள்  கையில் ஒரு மஞ்சவண்ணாக் காயை வைத்து  முகர்ந்தவாறே, "என்ன மாதிரி ஒரு நாடு. இங்கு என்னதான்  இல்லை" என்றாள். கையிலிருந்த காயைத் தட்டிவிட்டு "நாறும் கீழே போடு " என்றேன். "உங்கட ஆட்களுக்கெல்லாம் உள்ளங்கையில் இருப்பவற்றின்  அருமை விளங்குவதில்லை" என்றாள் சற்றுக் கோபம் போல.  அப்போதிருந்த மனநிலையில்  மஞ்சவண்ணாக் குயிலே மனம் முழுதும் கூவிக் கொண்டிருந்ததா ல் நினைவுகள் நெஞ்சில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தத்தில் , அவர்களின் நோனி பற்றிய  எந்த விபரணமும்  சிந்தனையைத் தீண்டவில்லை. 


பின் விடுமுறை முடிந்து இங்கே வந்தபின்  இயங்கிக்கொண்டேயிருக்கும் இயந்திரத்துக்கு மஞ்சவண்ணாவாவது, குயிலாவது, பாட்டாவது  எதைச் சிந்திக்க  நேரமிருக்கிறது  இந்த அவசர வாழ்க்கையில். எப்போதாவது  தன்னால் வெளியே  செல்லமுடியாது  வயோதிபத்தின்  சோர்வோ   நோயோ முடக்கிப் போடும் பொழுதுகளில்  அயல் வீட்டுப் பாட்டியின்  ஜீவிதபானமான அந்த நோனிச் சாறை  மருந்துக் கடையில் வாங்கி வந்து வரும் போதே  வாசலில் கொடுத்துவிட்டு வருவதுடன்  சரி  மற்றப்படி  25, 30  euro கொடுத்து ஒரு போத்தல்  ஜூஸ் வாங்கிக் குடிக்கக் கட்டுபடியாகாது . அப்படியொரு அவசியமும் இல்லை  என்ற  எண்ணத்தில் அதன் முகப்புப் படத்தைக் கூட  ஆராய்வதில்லை. 


அண்மைக்காலமாக  இந்த நோனி  (Noni)  என்னிடம் அதிகமாக இருக்கிறது   . நெருங்கிப் பழகிய ஜெர்மானியர்கள்  வந்து போகும் போது  கூடவே  நோனியும்  வந்து என்னுடன்  தங்கிக் கொள்கிறது. அயல் வீட்டுப் பாட்டி  வாசலில், வெளியில்  காண நேரும் போது  தினமும் ஒருகரண்டி நோனியாவது வாயில் ஊற்றிக்கொள்  என்கிறார். 

                                                       


  


நோனியை  இருந்து நோண்டி ஆராய  நேரம் கிடைகிறது. போத்தலை  எடுத்துப் பார்த்தேன் . முன் படத்திலேயே  மனதுக்குள் குயில் கூவி நினைவுகளை ஊஞ்சலாட்டியது .


  தாத்தாவிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் ,மஞ்சவண்ணாக்குற்றி வலிமையானதும் கூடவே பாரம் குறைந்தது  என்பதாலும்   வீட்டுக்கு  சீற்றடிக்கும் போது குறுக்குச் சட்டமாகப் பயன் படுத்தவும், வண்டியிழுக்கும் மாடுகளின் கழுத்தில் வைக்கும்  நுகத்தடியாகப் பயன்படுத்தவும், சிலைகள் குங்குமச்சிமிழ் போன்ற கலைப்பொருட்கள்  செய்வதற்குப் பயன்படுத்தப்படுவதாகத் தான்  இதுவரை அறிந்திருந்தேன் . 


நோனி ஜூஸ்  பற்றித் தேடத் தொடங்கிய போது தான்,    ஊரில் மஞ்சவண்ணாகாயைக் கையில் வைத்துக் கொண்டு "உங்கட ஆட்களுக்கெல்லாம் உள்ளங்கையில் உள்ளதின் அருமை விளங்குவதில்லை" என்று சொன்ன மகளின் கோபம் நினைவில் வந்தது. 


பனையைப்போல வேரிலிருந்து  இலைவரை பயன்தரக் கூடியது  மஞ்சவண்ணா. நீரிழிவு, தைரோயிட், மனஅழுத்தம், உயர்இரத்த அழுத்தம் , நரம்பு சம்பந்தமான நோய்கள், இதயநோய், வாதம், தோல்நோய்கள், சுவாசக் கோளாறுகள் இருமல்  இன்னும் இதர பல நோய்களுக்கும் எடுக்கும் மருந்துடன் இந்த நோனிச் சாறையும் குறிப்பிட்ட வேளைகளில் உள்ளெடுப்பது  நல்ல பலனைத்தரும் என்பதால்  இங்குள்ள மனிதர்களால் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது.  


தென்னாசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட எங்கள் மஞ்சவண்ணாவை எங்களை விட  இங்குள்ளவர்கள்  அதிகமாக  அறிந்து வைத்திருக்கிறார்கள்.  நாங்கள்  தறித்துக் காயவிட்டால்  அடுப்பெரிக்கலாம்  என்பதையாவது  அறிந்து வைத்திருக்கிறோம் என்பது பெருமை.


எண்ணிக்கொண்டே நோனிப்பழரசப்போத்தலைக் கரண்டியில்  சரிக்கிறேன்.   மனதுக்குள் மஞ்சவண்ணாக்குயில்  சற்றுச் சோகமாகக் கூவுகிறது.  அது உள்ளங்கையில் தான்  உட்கார்ந்திருந்தேன் கடந்து விட்டாய் என்கிறது..