Thursday, February 23, 2017

Fastnacht குளிர்காலப் பேய் உலா

ஜெர்மனியில் நான் இருக்கும் பகுதியில் இப்போது Fastnacht குளிர்காலப் பேய் உலா விழாக் காலம்.  படத்தில் சில உருவங்களை  மட்டும் பதிவிட்டிருக்கிறேன்  மிகுதியை உங்கள் கற்பனைக்கு எட்டிய விதங்களில் எல்லாம் உருவகித்துக் கொள்ளுங்கள்.  விரும்பினால்  கடைவாயில் இரத்தம் கூட வடிய விடுங்கள்.  காரணம் கற்பனையில் கூட காணாத உருவங்கள் தான் ஊர்வலம் போயின.


ஆசியா தவிர்ந்த வேறு நாடுகளிலும் இப்படி நிகழ்வுகள் கார்னிவேல் என்ற பெயரில் பல காரணங்களுக்காக நடத்தப் பட்டாலும்  அவற்றுக்கான பின்னணி பற்றி  பூரண விளக்கம் தெரியாது. ஜெர்மனியிலும் வேறு காரணங்களுக்காக இப்படி நிகழ்வுகள் வேறு வேறு காலங்களில் வெவ்வேறு மாநிலங்களில் நடத்தப் படுகிறது. உதாரணமாக உல்லாசப் பறவைகள் திரைப்படத்தின் அழகு ஆயிரம் பாடல் காட்சியில் இப்படி ஒரு ஊர்வலம் உண்டு. ஆனாலும் வசந்தகாலத்தில்  இடம்பெறுவது அது. இதை வாசித்தபின் நீங்கள் திரைப்படக் காட்சியில் பார்க்கக்  கூடும். ஆனால் நான் இப்போது பதிவிடுவது Fastnacht பற்றியது
.
இது முன்னைய காலங்களில் ரோமன் கத்தோலிக்கர்களது சமய நிகழ்வுகளில் ஒன்றாகத்தான் கடைப்பிடிக்கப் பட்டு வந்திருக்கிறது. காலப்போக்கில் எல்லாவற்றையும் போல் அதன் வடிவமும் சற்று மாறுபட்டு ஒரு வேடிக்கை வினோத பொழுது போக்கு நிகழ்வு மாதிரி ஆகி விட்டாலும் அதன் பின்னணியில் இன்னும் அந்த சமய அடையாளமும் பாரம்பரியமும் ஒட்டிக் கொண்டு தானிருக்கிறது என்பதை அவர்களின் உடை வடிவங்களில், இந்த நிகழ்வுக்காகவே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படும் உணவு, மற்றும் பானவகைகளில் இருந்து அறிய முடிகிறது.


இந்த நிகழ்வுகள் பெப்ரவரி மாதத்தின் இடைப்பகுதியில் வரும் ஒரு புதன் கிழமையில் ஆரம்பமாகும். அடுத்த புதன் வரை பாடசாலைகள் கிராமங்கள் என்று ஒவ்வொரு இடமும் இந்த சந்தோஷ ஆர்ப்பாட்டம் அணிவகுத்து Aschermittwoch (சாம்பல் புதன் ) நாளில், மாபெரும் அசுரவடிவொன்றை திறந்த வண்டியில் வைத்து( சாக்கடையிலேற்றி சூரன் திக்குத் திசை பார்க்கும் காட்சியைக் கற்பனை செய்து கொள்க  கூடவே  சூரனை இதில் சம்பந்தப்படுத்தினேன் என்று விளக்கமற்று என்னுடன் போராடத் தொடங்கும் எண்ணம் இருந்தால் அதையும் நிறுத்துக) ஊர்வலமாக சுற்றிவந்து இரவு நகரின் மத்தியில் அதன் உடல் முழுவதும் வெடிகள் வாணங்களைப் பொருத்தி பெரும் ஆர்ப்பாட்டத்துக்கு மத்தியில்  வெடிக்க வைத்து குளிர் காலநிலையை கொண்டுவந்த அரக்கனைக் கொன்றுவிட்டதாக  முடிவுற, ஈஸ்டர் விரதநாட்கள் ஆரம்பிக்கும்.

குளிர்காலத்தையும் அதனால் ஏற்பட்ட சிரமங்கள் , நோய்களையும் துரத்தி விட்டு வரப்போகும் இலைதுளிர் காலத்துக்கான மகிழ்வின் வரவேற்பு என்றும் கொள்ளப் படுகிறது. இதன்போது தம்மை பேய்களாக உருவகித்து அலங்கரித்துக் கொள்ளும் மக்கள் ஒவ்வொரு கிராம அமைப்பாக, அல்லது பண்ணைகள் ,நிறுவனங்கள்  என்று ஒவ்வொன்றும் தமக்கு தமக்கான கோஷங்களுடணும் கொடிகளுடனும் அவலட்சணமான கோர உருவங்களும் அவல ஓலங்களுமாக, அழகிய அலங்கார உருவங்களும் இனிய இசைக்களுமாக வரிசையாக ஆடியும் பாடியும் மலர்கள் இனிப்புகள் மற்றும் அவர்களின் உற்பத்திப் பொருட்களை பார்வையாளர்ககள் மீது வீசி அவர்களை மகிழ்வு படுத்தியவாறே வரப்போகும் இலைதுளிர் காலத்துக்கு சந்தோசமாக வழிவிட்டு விலகிச் செல்வதைக் குறிக்கும்.

சமய ரீதியிலோ, அன்றி ஒரு பாரம்பரிய மூட நம்பிக்கை என்றோ கருதாமல் , சில மாதங்கள் குளிருக்குள் உறைந்து மனம் சுருண்டு கிடந்த மனிதர்களின் மனதில் களிப்பை ஏற்படுத்தும், குழந்தைகளை குதூகலிக்க வைக்கும் நிகழ்வாகவே நான் பார்க்கிறேன்.
" வேடிக்கைகளாலும் வினோதங்களாலும் கூட வாழ்வில் சொற்ப நேர வண்ணங்களையாவது பூச முடியும். "