Wednesday, April 29, 2020

ஒரு கதை எழுத நினைச்சன் முடிவு மாறிப்போச்சு

கனநாளா வயதுக்கு மரியாதை குடுத்து வாய்திறக்கக் கூடாது என்டு தான் இருந்தனான். அதோட வாரியணைச்ச நேசம் இன்னும் நெஞ்சோட மிச்சமிருக்கு. என்னை வாரியணைச்சவ எண்டால் அவளை வாரிவாரி அணைச்சவ.

முன்னெல்லாம் நானே தேடித்தேடித்தொலைபேசுவேன். அவையளோட கதைச்சால் கேலியும் கிண்டலும் பழைய கதைகளுமாக ஒரு மேசைக்கரண்டி மல்ரிவிற்றமின் ரொனிக் குடிச்சமாதிரி ஆகிவிடும் மனசு. பிறகென்ன அந்த உற்சாகம் உடம்பிலும் பரவ, ஒரு பாட்டையும் போட்டுவிட்டால் விறுவிறுவெண்டு காரியமோடும்.

இப்ப கொஞ்சக் காலமா நான் அவைக்கு டெலிபோன் தொடர்பெடுக்கிறயில்லை. இப்பவெல்லாம் அடிக்கிற ரெலிபோனில அவைட நம்பரைக் கண்டால் ரெலிபோனை விட வேகமா நெஞ்சு பக்குப்பக்கெண்டு அடிக்கும்.

எப்ப வெடிச்சுப் பிளந்து போன சங்கதி இந்த டெலிபோனுக்குள்ளால வந்து நெஞ்சைக் குத்துமோ எண்ட பயம் எனக்கு. பின்ன ஒரு குடும்பம் உடையிறது எண்டதெல்லாம் அத்தனை லேசான விசயமில்லை. அதற்கு முன்னாலும், உடையும் போதும், பின்னாலும் அது தரக்கூடிய வலியும் பாதிப்பும், அதன் காரணங்களும் அதன் பின்னாலாய, ஊகங்களும் , வசைகளும், கேலிகளும் , ஈரமற்ற சமூகத் தீர்ப்புகளும் ஒரு சாதாரண, உடைவுகள் இல்லா வாழ்வை வாழ்ந்துவிட்டுச் செல்வதே நோக்கமாகக் கொண்டிருந்தோருக்கு எத்தனை வலியானது என்பதை, வலி உணராதோரால் நிச்சயமாக உணர்ந்து கொள்ள முடியாது.

அவர்களுக்கும் லட்சியம் எண்டு ஏதாவது இருக்கும் எண்டால், அது கடைசிவரைக்கும் பிச்சல் பிடுங்கல் இல்லாமல் ஒண்டா வாழ்ந்து போட்டு, எங்கட அப்பா அம்மா இப்பிடி வாழ்ந்தவை எண்டு பிள்ளைகளைப் பெருமை சொல்ல வைச்சுப் போட்டுச் செத்துப் போகவேணும் எண்டது மட்டுமாத் தான் இருக்கும். காதலிக்கும் போதே அவையிட கனவு இதுவாகத்தான் இருந்ததெண்டு நினைக்கிறன்.

ஒரு காலத்தில நான் தான் அவனிட தாயிட்டைப் போய் , அவ வாரி வாரி அணைத்தவளைத்தான் அவனுக்குப் பிடிச்சுதாம். அவளை அவனுக்குப் பிடிச்சதில முக்கிய காரணம் அவவுக்கு அவளைப் பிடிச்சு வாரிவாரி அணைச்சது தானாம் எண்டு சொல்லி உச்சிகுளிர வைச்சனான்.

பிறகு அவை கனடாவுக்கு வந்தப் பிறகும் எல்லாம் கலகலவெண்டு தான் போனது.

அவள் தான் முதலில அதைத் தொடங்கினாள், அவன் வேணாம் வேணாம் எண்டு சொன்னாலும், தான் பிடிச்சதில பிடிவாதமாய் நிண்டாள். எட்ட இருக்கிற நெருக்கம் கிட்டவந்தால் போயிடும் எண்டு அவன் மறுக்க, இல்லையில்லை வயதான காலத்தில என்னையும் பிள்ளையள் கொண்டுபோய் வயோதிபமடத்தில போட்டிடுங்கள். வாழ்க்கை என்னவெண்டு வாழ்ந்து காட்டித்தான் பிள்ளையளுக்குப் படிப்பிக்க வேணுமெண்டு விடாப்பிடியா அலைஞ்சு
அவன்ர அம்மாவைத் தங்களிட்டைக் கூப்பிட்டு எடுத்தாள். அப்ப எனக்குக் கூட அவள் பற்றி பெரிய பெருமையும் புளுகமும்.

வந்த புதிசில ஒருக்கா கோல் எடுத்து "எப்பிடிக் கனடா"? எண்டன். கனடாவை விட்டிட்டு மருமகளை வாரிவாரி வானளாவப்புகழ்ந்து கொண்டிருந்தா மாமியார்.

அந்த நேரம் நினைச்சன் கட்டாயம் இந்தப் பாசப்பிணைப்புப் பற்றி ஒரு கதை எழுத வேணுமெண்டு.

பிறகு கொஞ்ச நாளைக்குப் பிறகு தான் எப்ப ரெலிபோன் எடுத்தாலும் பழஞ்சீலை கிழிஞ்ச மாதிரி சறபுற எண்டு தொடங்கீச்சுது. இதென்னடா வில்லங்கம் எண்டு போட்டு அவளிட்டைக் கேட்டால், குடும்பம் உடைச்சு விடுமோ எண்டு பயப்படுற எல்லாப் பொம்பிளையளினதும் தொடக்கத்தைப் போல திக்கி விக்கி அரைகுறையாச் சொல்லி கண்ணில காவிரியைத் திறந்து விட்டாள்.

அவன் தான் சொன்னான்.

"என்ர ஆம்பிளைப்பிள்ளை வேலைக்குப் போக அவள் மல்லாங்கக்கிடந்தது பகலெல்லாம் நித்திரை கொள்ளுறாள் எண்டு . கத்துறா" எண்டு

"அவளுக்கு இரவு வேலை எண்டு சொல்லாதேயன்".

"இரவில என்ன பொம்பிளைக்கு வெளியில வேலையாம் "

எனக்குப் பத்திக்கொண்டு வந்தது.
"அவ நினைக்கிற வேலைக்கு எவளும் இரவில தான் போயாக வேணும் எண்டு இல்லை எண்டு சொல்லாதேயன்" "என்னடி நீ வேற" இந்த வக்கிரத்தை நான் கேக்கிறது இது முதல் தரமில்லை. இனி யாராவது இதைச் சொன்னதைக் கேட்டாலே மூஞ்சியைப் பொத்தி அறையும் நெருப்பு எனக்குள் எரிஞ்சு கொண்டிருக்கு. அதால அதை தணிக்க கதையை மாத்தி

"பின்ன அவளை வேலைக்குப் போகவேண்டாம் எண்டு சொல்லன்"

"நான் மட்டும் உழைச்சு வீட்டுக்கடன் எப்படியடி அடைக்கிறது. இரவும் பகலும் மாறிமாறிப் போனால் தான் பிள்ளைகளைச் சமாளிக்கலாம். உனக்குத் தெரியாதோ".

"ஹ்ம் தெரியாது. அப்ப பின்ன சொல்லன்"

"அவவுக்கு விளங்காது".

"இதெல்லாம் விளங்காது எண்டில்லை விளங்க விருப்பமில்லை ."

பிறகு அவன் சமைக்கிறான், மேசை துடைக்கிறான், சீலை துணி மடிக்கிறான், பிள்ளைக்குக் கக்கா கழுவுறான் எண்டு நாளாந்தம் ஒண்டு வர அவள் அழுகை மாறி வாய்த்தர்க்கம் தொடங்க, அவன் அங்கும் இங்கு மாறிமாறிக் கதைச்சு மௌனியாக , அவள் அழுகை துறந்து பொறுமை மறந்து மென்மை இழந்து நிதானமாகப் பலமாகிக் கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்தில்இது நிதானிக்க நேரமில்லாது, சிந்திக்க அவகாசம் இல்லாது பத்தியெரிஞ்சு முற்றுமுழுதா உடையப் போகுது. ஆளில ஆள் அன்பில்லாததோ, ஆளுக்காள் உண்மையாக இல்லாததோ, துரோகம் செய்வதோவான குடும்பம் எண்டால் பரவாயில்லை உள்ளே எரியும் நெருப்பிலேயே தங்களைப் புதிசாய் உருக்கி உருவாக்கிக் கொண்டு வெளியே வந்திடுங்கள். இது இரண்டும் வேற மாதிரி .

ஆளையாள்விட்டுப் பிரியாத, விட்டுக் கொடாத காதல் அதுகளுக்குள். பிரிஞ்சால், அதுவும் இன்னொருவரால் பிரிஞ்சால் முற்றிலும் உடைஞ்சு அழிஞ்சு போங்கள். அதை அவள் முதல் சிசேரியன் போதும், அவன் முதல் மாரடைப்பின் போதும் இருவரும் சொல்லக் கேட்டிருக்கிறன். எண்டதால அதைத் தாங்க முடியாது என்ற பயத்திலும், உந்த குருதியமுக்கம் உச்சிக்கேறி வெடிச்சுக் கிடிச்சு மூக்கால வடியக் கூடாது எண்ட சுயநலத்திலும் நானும் கொஞ்சம் விலத்தி நிண்டு கொண்டன்.

இண்டைக்கு இருந்தாப்போல ரெலிபோன் அடிச்சது. வழமை போல பதட்டத்தோட தான் எடுத்தன். நலவிசாரிப்புக் கூட இல்லை. எடுத்ததுமே "ஐயோ புள்ளை உந்தக் குரானாவுக்குள்ளால அவன் வெளிக்கிட்டுப் போறான்" எண்ட ஒப்பாரியில் தான் தொடங்கிச்சுது கதையின் இண்டைய அத்தியாயம் . .

நான் இருக்கிற மண்டை வெடிப்புக்குள்ள பதறிப் பதகளிச்சு "எங்க போட்டான்" எண்டன் .

"வேறை எங்க வேலைக்குத் தான்" நான் நிம்மதியா மூச்சு விட்டன்

"வேலைக்கு வரச் சொல்லிட்டாங்கள் எண்டால் போய்த்தான் ஆகவேணும். அவனுக்கு மட்டுமில்லை எல்லா இடமும் ஒரே நிலைமை தான்".

"ஆனால் அவள் வீட்டில எல்லோ இருக்கிறாள்"

"ஓம் அவளுக்கு இன்னும் தொடங்கயில்லை."

"நான் என்ர குஞ்சனை வாயை வயித்தைக் கட்டி பாராட்டி சீராட்டி வளத்தனான். ஆரோ பெத்தது பாதுகாப்பாய் வீட்டுக்குள்ள இருக்க , என்ர புள்ளை இவளுக்கும் இவள் பெத்ததுகளுக்கும் முறியப் போய் குரானாவில போறதோ."

அதை நான் சொல்லக் கூடியவள் அல்ல. சொல்லியிருக்கவும் கூடாது தான் ஆனாலும் எழுத நினைக்கும் கதைகளின் பொறுமையிழப்பின் வார்த்தைகள் மாற்றித்தரும் முடிவுகளைத் தான் நாம் விதிஎன்கிறோமா என்னவோ சொன்னேன்

"இல்லை நீங்க போங்கோ. அது தான் மகனுக்கும் நல்லது"