Sunday, July 22, 2018

பிள்ளையார் ஊதின புல்லாங்குழல்

நான் அந்த நிகழ்வுக்குப் போனது வாரங்களின் முன் ,  அல்லது மாதத்தின் முன் என்று  வைத்துக்கொள்ளுங்கோவன். பெரீய  அறிவியல் சார்ந்த நிகழ்வெல்லாம்  இல்லை.  அதுக்கு எதிர்மாறான  இந்தக் காலத்தான வாழ் நிலையில்  வேடிக்கை நிகழ்வு தான் .  வேறை என்ன,  தமிழ் பிள்ளைக்கு இங்கிலீஷ்  பெயர் வைச்சமாதிரி  இப்ப saree ceremony  என்று நாகரீகமாக பெயர் சூட்டி வழங்கப்படுகிற,   எங்கட  பழைய சாமத்தியச் சடங்கு , இல்லாட்டி பெரியபிள்ளையாகின  தண்ணிவார்ப்புச் சடங்கு தான்.

வாசலில் நிறைகுடம்,  மாறாமல் காப்பாற்றப்படும்  எங்கள் அடையாளத்தை எந்த விதமான நாகரிக மாற்றமும் அற்றுச் சொல்லிக்கொண்டிருந்தது மனதுக்கு   நிறைவாக இருந்தது.  உள்ளே  போகப்போக மண்டபம்    கண்ணைக் குத்தும் அலங்காரத்தோடு    இருந்தது.  அது என்  பக்கத்தில் வந்தவளுக்கு  மனத்தைக் குத்தியது  தான் பிரச்சனை.

'ஏன்  என்ற கேள்வியொன்று  என்றைக்கும் தங்கும்'  என்று கண்ணதாசன் சொன்னதை கச்சிதமாக  எப்போதும் மறவாமல் எல்லா விடயத்திலும் கடைப்பிடிப்பவள்  என் கையைப் பிடிச்சுக்கொண்டு எப்போதும் என் கூடவே நடப்பவள் . அவளுக்கு மனத்தைக் குத்தினால் என் தலையை பிராண்டப் போகிறாள்  என்ற பதட்டம் எனக்கு வந்து விடும்..

மண்டபத்தின் உள்ளே நடந்தோம் கையில் சுரண்டினாள்,  கேள்வி வரமுன் கையை  சுரண்ட முடியாமல் இறுக்கிப் பிடிக்க, மறுகையால் இடுப்பில் சுரண்டினாள் .

"என்னம்மா "

"வெண்டாமரைப் பூவுக்குள்  சரஸ்வதி தானே இருப்பா .நீங்கள் அப்பிடித்தானே சொல்லித் தந்தனீ ங்கள்  நாங்கள் ஊரிலயும் லைபிரறியில அப்பிடித்தானே பார்த்தனாங்கள் "

"ஓம்"

"இங்க   ஏன் பிள்ளையார்   இருக்கிறார்?"

அவளின் பக்கத்தில் வந்தவன்  ஹாஹா மாட்டிக்கொண்டாயா என்பது போல  என்னைப்பார்த்து  கண்களால் ஜாடை செய்து சிரித்துக் கொண்டே

"அது  பிள்ளையார்ட  எலி குளிக்கப் போட்டுதாம் வரும் வரைக்கும் அவருக்கு இருக்க இடம் இல்லை எண்டு போட்டு சரஸ்வதி தாமரையை இரவலா  குடுத்தவ "

என்று எண்ணையூற்றி விட்டான் .

அவளது கண் ஓடிய இடத்தை பார்த்தேன்  வாசலில் இருந்து மேடைவரை  இருபக்கமும்  வரிசையாக வரவேற்புப் பணியில் இருந்த பிள்ளையார்கள்  வெண்டாமரைப்  பூவுக்குள்  இருந்து தான் வரவேற்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள் .

போய்  இருக்கைகளில் அமர்ந்தோம்.

திரும்ப சுரண்டினாள்.

"இப்ப என்னம்மா?"

"சரஸ்வதி தானே   வீணை வாசிப்பா?"

ஓம் என்று சொல்லவும் இல்லை என்று சொல்லவும் பயமாக இருந்தது இப்போது

"இங்க  பாருங்கோ பிள்ளையார் வாசிக்கிறார்."

அடுத்ததா அவளது பார்வை எல்லாப் பிள்ளையார்களையும் சுற்றி ஓடியது

"கிருஷ்ணரிட  புல்லாங்குழலையும்  பிள்ளையார் எடுத்து வாசிக்கிறார்  பாருங்கோ"



                                                                 

பார்த்தேன்

தாளமும் கையுமா ஒரு பிள்ளையார் ,  வீணையோடு ஒருவர் , வயலினோடு ஒருவர், தபேலா வாசிச்சுக்கொண்டு ஒருவர் , நாதஸ்வரம், தவில் , புல்லாங்குழல்  என்று  பிள்ளையார் பல அவதாரமெடுத்து ஒரே நேரத்தில்  பெரியதொரு வரவேற்பு  இசைக்கச்சேரியே  நடத்திக் கொண்டிருந்தார்.


யார்கண்டது  இன்னொரு நிகழ்ச்சியில் பெல்பொட்டம்  போட்டு தலைமுடியையும் வளர்த்து தொங்கப் போட்டுக்கொண்டு  பொப் மார்லி  ஸ்டைல் ல பிள்ளையார் கிற்றார்  வாசிக்கலாம்,  டாமின் ஷ்மிட்  மாதிரி சந்திரமண்டலத்துக்கு போற கெட்டப்பில ட்றம். செட்  வாசிக்கலாம் , இன்னும் யாரோ  ஒருவர் மாதிரி  சாக்ஸபோன்  வாசிக்கலாம் , கனக்க ஏன் நான் மவுத் ஒர்கனால உதடு மசாஜ் பண்ணுற மாதிரி  மவுத் ஓர்கன்  கூட   ஊதலாம்.  இல்லை தலையை விரிச்சுப் போட்டு மைக்கைப் பிடிச்சுக் கொண்டு  உடல் உதறப் பாடிக் கொண்டும் இருக்கலாம் .

"நீங்கள் ஏன்  வீணையோடு வெள்ளைப் பூவில இருந்தால் சரஸ்வதி வீணை வாசிச்சால்  சரஸ்வதி , புல்லாங்குழல் வாசிச்சால் கிருஷ்ணர் , வேல் வைச்சுக் கொண்டு  மயிலில இருந்தால் முருகன் என்று எல்லாம் சொல்லி சொல்லி தந்தீங்க?".

"அது அது அவர்களுக்கான அடையாளம் எண்டு  எனக்கு சொல்லித் தந்ததை தானேம்மா  உனக்கு சொல்லித் தந்தன்"

"அப்ப  ஏன்  இப்ப மாத்தியிருக்கு?"

"இப்பிடி எல்லாம் மாத்துவீனம் எண்டது எனக்குத் தெரியாதேம்மா "

சரியா தெரியாததை  ஏன் சொல்லித் தந்தீங்க.

"வருங்காலத்தில தங்கட வசதிக்கு ஏற்ற  மாதிரியெல்லாம் கடவுளுக்கும்  அடையாளங்களை  மாத்துவீனமா எண்டு கேள்வி கெட்டு  தெளிவாகாமல் மண்டு மாதிரி தலையாட்டி  நம்பிப்போட்டு உனக்கும் சொல்லித் தந்தது என்ர குற்றம் தான்."

"சிலுவை  பாருங்கோ . அது ஒரு அடையாளம். அதைக் கண்டால்  ஜீசஸ்  ஞாபகம் வரும்,  அவர் பட்ட பாடு நினைவு வரும்  ஆனால் இப்ப நான் யாராவது எந்தக் கடவுள் வீணை வாசிக்கும் எண்டு கேட்டால் எல்லாரும் எண்டா  சொல்லுறது,  குழலூதி கோபியர் மனதை கொள்ளை கொண்டவன் யாரெண்டா  இப்ப நான் யாரை நினைக்க,?"

"அதானே முதல் யாருக்கு எந்த வாத்தியம் என்று தெளிவா முடிவு செய்து போட்டெல்லோ  மேடையேற்றி  கச்சேரி தொடங்கியிருக்க  வேணும் . இப்பிடி பாதியில பாதியில ஆளை மாத்தினா  கச்சேரி எப்பிடி களைகட்டும்"

அவளுக்கு பக்கத்தில் இருந்தவள் கள்ளச் சிரிப்போடு   ஊதிவிட்டாள்

எல்லாம் நாமாக உருவாக்கியவை தானே ,  காலத்தோடு நாமும் ரசனையும்  மாறும் போது  இவைகளும் மாறினால் என்ன என்று கூட நாம்  வாதிடலாம் தப்பே இல்லை. நாம் தான் கடவுளையும் படைத்த,  கடவுள்களாச்சே,  சரஸ்வதியும் , கிருஷ்ணரும் வந்து கேக்கவா போகீனம் எங்கட வாத்தியத்தைப் பிடுங்கி ஏன்  பிள்ளையாருக்குக் குடுத்தனி  என்று.  கேட்டால் ரெண்டு தட்டுத் தட்டி வாய் பேசாமல் கோயிலுக்குள்ளே   இருத்தி  விடமாட்டோமா  என்ன? இப்போதெல்லாம் தப்புகளை தயங்காமல் செய்து  தப்பிக்கொள்ளும் இடமாக அவைகளைத் தானே நாம் உருவாக்குகிறோம்

அடையாளம் என்பது ஒரு குறியீடு.  ஒன்றில் அதை உருவாக்காமல் சந்ததிகளுக்கு  அடையாளப்படுத்தாமல்  இருக்க வேண்டும். குறியீடுகள்  மாற்றப்படும் போது அடையாளங்கள் கேள்விக்குரியதாகும்  அது உருவாக்கிய நம்பிக்கைகள் மீதெல்லாம் அவநம்பிக்கை பிறக்கும் என்பது பற்றி எல்லாம் நாம் சிந்திக்க மாட்டோம்.  எங்கள் குறி பணம் மட்டுமே. அதற்கு கடவுளுக்கும்  கழுத்தில கயிறு கட்டி குரங்காட்டி வித்தை காட்டவைத்துப் பிழைப்போம்   அவ்வளவு தான்

திரும்பி வரும் போது

"கோவிலுக்குள் மட்டும் தான் செருப்போட போகக் கூடாதா ,  சாமி வெளியே இருந்தால்  அதுக்கு முன்னாலும் பக்கத்திலும் செருப்போட நடந்தால் குற்றமில்லையா?  தூய்மை  புனிதம் கெட்டுப் போகாதா? பாருங்கோ  எல்லாரும் சாமியை திரும்பிப்பார்க்காமல் செருப்போட போகீனம் ஒருத்தரும் கும்பிடேல்ல . நாங்களும் செருப்புப் போட்டுக்கொண்டு தான் வந்திருக்கிறம்."

 என்ற அவளது கேள்விக்கு என்னிடம் பதிலிருக்கவில்லை.

எல்லாம் இருக்குமிடத்தில் இருக்கும் வரை தான் அதனதன் மதிப்பு.  அவரவர் தேவைக்கு ஏற்றமாதிரி ஒவ்வொரு இடத்தில இருத்தி வைக்கச் சம்மதிச்சால்   இதில்லை இன்னும் அதிகமாகவும் நடக்கும் .  உன்னுடைய காலை நீயன்றி எவரும் அசைக்க அனுமதிக்காதே என்று சொன்னால் இப்போது அதை விளங்கும் வயது அவளுக்கில்லை

தேவையிருந்தால்  மூலஸ்தானத்தில் வைத்துக் கடவுள் என்போம்,   தேவை முடிந்ததா   வெளியே வீசிவிட்டு கல்  என செருப்பில் ஒட்டிய அசிங்கம் வழிப்போம்.  காலகாலமாய் மனிதர்க்கே நாம் இதைத்தானே செய்கிறோம் . வாய்பேசாத சிலைக்குச் செய்தால் என்ன   என என் வாய்வரை வந்த பதிலை  நான் அவளுக்குச் சொல்லவில்லை.

வளரும் குழந்தைகள் . இனி இது அவர்களது உலகம்  அவர்களது பார்வையில் உலகைப்புரியட்டும்   என விட்டு விட்டேன்