Monday, June 26, 2017

அறிவீர்களா? அறிவாளிகளே!

இன்றைய மெல்லிய குளிர் வருடிய மஞ்சள் மாலை. வழமை போல் நேரமிருக்கும் நேரங்களில்  என்னோடு கூடியிருக்கும்  என் நந்தவனம். நடுவில் நெக்கார் நதியிலிருந்து சின்னதாக ஒழுகி வழிந்து நகரும் வாய்க்காலை சற்று அகலவிரித்து சிறைப்பிடித்த சின்னக் குளம். எதிரே குழந்தைகளின் விளையாட்டுச் சாதனங்கள் அடங்கிய விளையாட்டுத் திடல் அருகில் மரவாங்கில் என் இருப்பிடம். கையெட்டும் தூரத்தில் பலவண்ண  ரோஜாவும், லில்லியும்   கையில் இருந்த புத்தகத்திலும் விளையாட்டு இடத்திலுமான எப்போதும் போல் என் இரு கண்கள்.
.
எனக்கு அண்மையில் நீரைச் சிறைப்பிடித்து விதம் விதமாக சீறும் வண்ணம் குழந்தைகளைக் கவர அழகு படுத்தி இருந்தார்கள்,. கூடவே, குழாய்க் கிணறு, மற்றும் வேறு பொறி முறைகளையும் அதை இயக்கி அறிந்து கொள்ளும் வண்ணம் அமைத்திருந்தார்கள். குழந்தைகள் வேர்க்க விறுவிறுக்க வெறும் பாத்திக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருதார்கள் வழமை போல.
.
அந்தக் குழந்தைகளில் அந்த இரு சிறுவர்களும் அடக்கம். பெற்றோருடன் வந்திருந்தார்கள். பெற்றோர் தமிழ் கதைத்துக் கொண்டிருக்க , இவர்கள் டொச்சில் கதைத்துக் கொண்டிருந்தார்கள் . வெளிநாட்டில் பிறந்த பெரும்பான்மையான பிள்ளைகள் போல. பெற்றோரையும் சிறுவர்களையும் தவிர அவர்களுடன் கூட வந்தது அப்பாவினதோ அல்லது அம்மாவினதோ தம்பியாக, அல்லது உறவாக அதுவும் இல்லாட்டில் நாடி வந்த நட்பாக , இருக்கலாம்,. தன் குடும்பத்தோடு இருந்தால் மிடுக்காக முறுக்கிக் கொண்டு கிண்டலாக கலகலத்துத் திரியும் இருபதுகளில் இருந்தான். ஊரில் இருந்து வந்து இன்னும் மேற்கத்தியத்துடன் ஒட்டிக்கொள்ளாத , புரிந்து கொள்ள அவகாசம் போதாத பேதலிப்பு முகத்தில் ஒரு வலிந்த புன்னகையாக ஒட்டியிருந்தது.
.
வரும்போதே அவர்கள் முன்னே வர அவர்களின் நொறுக்குத்தீனிகள், தாகசாந்திப் போத்தல்கள் அடங்கிய பையை முதுகில் சுமந்து கொண்டு சற்றுப் பின்னடைந்து சோர்வுடன் முகத்தில் ஒரு ரெடிமேட் புன்னகையுடன் தான் வந்தான். சத்தியமாக அந்த முகத்தில் உயிர்த் துடிப்பு இருக்கவே இல்லை. வந்த நேரம் முதல் குழந்தைகளுக்குப் பின்னே திரிவதும் அவர்களைப் பாதுகாப்பதுமே அவன் அதி முக்கிய வேலையாக இருந்தது.  அம்மா அப்பா குழந்தைகளை மறந்து தமக்கு அறிமுகமானவர்கள், உறவுகள் நட்புக்கள் என்று பாரபட்சமின்றி தெரிந்தவர்களின் தலைகளை எல்லாம் உருட்டிக் கொண்டிருந்தார்கள்., குழந்தைகள் தமக்குத் தேவையான எல்லாவற்றுக்கும் அவனை தமிழில் ஏவிக் கொண்டு தாங்கள் டொச்சில் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
.
நினைத்த போதெல்லாம் அவன் மீது நீர் எத்தினார்கள். அவனது வெளீர் நீல நிற ஷர்ட் கடும் நீலமாகி உடம்போடு ஓட்ட  அவன் ஈரமாகி ஒதுங்கினான்  , ஓடி வந்து பெற்றோரிடம் முறையிட்டார்கள். அவர்கள் தங்களது விண்ணாணம் கலைந்த வெறுப்பில் நிமிர்ந்து சற்று உறுத்து அன்னியப்படுத்திப் பார்க்க , அவன் அவசரமாக குழந்தைகளின் சேட்டைக்கு தன்னைப் பலியாக்கிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அந்த இடத்தில் கிடந்த அத்தனை வெறும் பாத்திரங்களிலும் நீர் நிறைக்கச் சொன்னார்கள். அவன் குழாய் கிணற்றின் அழுத்தியை அமுக்கி அமுக்கி வியர்க்க வியர்க்க நீர் நிறைத்து முடிய" Du hast nichts im Kopf " என்றார்கள் கிண்டலாகச் சிரித்துக் கொண்டே.
.
அவன் அப்போதும் அதே மொழி விளங்கா சமாளிப்புப் புன்னகையில் நின்றான்.  "உனக்கு இங்கே ஒன்றும் இல்லையா என்று தலையைத் தொட்டுக் காட்டி இப்ப எதுக்குத் தண்ணி கவிட்டு ஊற்று" என்றார்கள் அதிகாரத் தொனியில். அந்த வார்த்தைக்குள் அதன் தொனிக்குள் பெற்றோரின் வளர்த்தல் பண்பு தாராளமாகவே தெரிந்தது. அவனது முகம் கன்றிப் போனது.  தலை கவிழ்த்து ஒவ்வொரு பாத்திர நீராக  கவிழ்த்து  ஊற்றினான். அதோடு சில துளி அவமான ,அல்லது கையாலாகாத , அல்லது கட்டாய சகிப்பினாலான கண்ணீரும்  சிந்தியிருக்கலாம்.  அவ்வளவுக்கு அவனது முகம் கசங்கியிருந்தது.

அதிலிருந்த வேற்றினக் குழந்தைகள் பெரியவர்கள் வேடிக்கையாக வெறுப்பாக, வேதனையாக ஒரு காட்சிப் பொருள்; போலப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கலங்கிய கண்களை மறுபக்கம் திரும்பி மறைத்துக் கொண்ட அவனது உதடுகளில் எழுதி வைத்த அதே புன்னகை மிகக் காய்ந்து கிடந்தது. சாதனை புரிந்து விட்டது போன்ற  வெற்றிக் களிப்பில் பெற்றோரிடம் ஓடி வந்து விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
.
எனக்கு எதிர் வாங்கில் இருந்த அந்தப் பெற்றார் என்னைப் பார்த்துப் புன்னகைத்து "அவங்கள் வலு துடியாட்டம். ஆரைக் கண்டாலும் முட்டாளாக்காமல் விட மாட்டாங்கள்" என்றார்கள் என்னிடம் பெருமையாக. மரியாதைக்குக் கூட அவர்களைப்பார்த்து ஏனோ புன்னகைக்க விருப்பமில்லாமல் இருந்தது. எழும்பி அந்த இடத்தைத் தாண்டி நடக்கத் தொடங்கினேன். " இப்பிடித் தான் சில தமிழர். தமிழர்களோட சேர மாட்டினம். தமிழ் விளங்காத மாதிரி வெள்ளைகளோட தான் கதைப்பினம்" என்று அந்தப் பையனுக்கு என்னைப் பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தது முதுகுக்குப் பின்னே கேட்டது.   இந்த முதுகுக்குப் பின்னே பேசுவது மொழிபேசும் வலு  வாய்க்கப்பெற்றதனால் மற்றெந்த ஜீவராசிகளையும் விட  மனித குலத்துக்கே வாய்க்கப்பட்ட  மாபெரும் சாபக்கேடுகளில் ஒன்றென  எப்பவும் போல் எண்ணிக்கொண்டேன். 


                                                .
வீதியில் அல்லது விதியில் எதிர்ப்பட்டு இடறும், அல்லது  ஊளையிடும் எல்லாவற்றுக்கும்  என் நேரத்தை செலவு செய்து  கல்லெறியும் பழக்கம் எப்போதும் எனக்கு இல்லை. நின்று காதுகொடுக்கும் அளவு மதிக்கவும் விரும்புவதில்லை.  ஒதுங்கி விலத்தி நகர்ந்து விடுவேன். இன்று ஏனோ அப்படி ஒதுங்கி வர முடியவில்லை. திரும்பிப் போய் "அம்மா தாயே எனக்கு மொழியும் இனமும் ஒரு பிரச்சனையே இல்லை. ஒரே பிரச்சனை நான் ஒரு மனுஷியாக இருக்க விரும்பிறேன் அதனால் மனிதர்களோடு மட்டும் தான் கதைக்க விருப்பம் . மனித உருவத்தில் இருப்பவைகளோடு அல்ல " என்று சொல்லிவிட்டு திரும்பி நடந்த போது அவனது உதடுகளில் அழுகை துடித்துக் கொண்டிருந்தது.
.
இப்படித்தான் ஒரு முறை ஊருக்குச் சென்றிருந்த போது லண்டனில் இருந்து வந்திருந்த ஒரு குழந்தை
தன் அம்மம்மாவை மொன்ஸ்ரர் என்று சொல்லி தாய்க்கு அடையாளப்படுத்திக் கொண்ருந்தது. அதன் அம்மா தன் தாய் பற்றிய குழந்தையின் உவமையை ஒரு மழுப்பல் சிரிப்புடன் பெருமையாக தலைநிமிர்ந்து உள்வாங்கிக் கொண்டே தலை முழுவதும் தும்பைப் பூவாக நரைத்த வயோதிபத்தாயை தமது தேவைகளுக்காக ஏவிக் கொண்டே ஊரில் இருந்த தன் மூத்த சகோதரங்கள் அவர்களின் வளர்ந்த குழந்தைகளுக்கு ராஜ தோரணையில் அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். கண்டிக்க அறிவுரை சொல்ல வேண்டிய தன் குழந்தையை விட்டு விட்டு. யாழ்ப்பாணத்தில் மொன்ஸ்ரர் என்ற சொல்லை அதிகம் நாம் பாவிப்பதில்லையாதலால் அந்த இடத்தில் இருந்த அவரின் உறவினர்களுக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள்.  அவரோடு கதைக்கவும் அதன் பின் எனக்கேதும் இருக்கவில்லை.
.
இப்படிப் பல சந்தர்ப்பங்களில் பலரைக் கண்ட பின்பும் எனக்குப் புரியாத ஒன்று இந்த மொழி அறிதலின் ஒதுக்கலை எங்கிருந்து எப்போது நாம் கற்றுக் கொள்கிறோம். தாய் மொழிக்கு அடுத்ததாக இன்னொரு மொழி அறியும் போதா? அல்லது தான் இன்னொரு மொழி அறிந்த பின்  தன் இனத்தவரைக் காணும் போது தன்னை மேம்படுத்திக் காட்டும் சின்னத்தனத்தை கற்றுக் கொள்ளும் போதா? வெளிநாட்டுக்கென  விமானத்தில் ஏறும் போதே , இதற்கான ஒத்திகையும் தீர்மானமும் ஆரம்பித்து விடுகிறதா? சொந்த இனத்தை இங்கு வரவழைத்து அந்நிய மொழியில் அவமானப் படுத்தும் குரூரத் திருப்தியின் காரணம் அறியாமையா? ஆதிக்கமா? சொந்த ஊருக்குச் சென்றும் இந்த மொழிச் சிலம்பத்தில் உறவைச் சிக்கவைத்துச்  சிதைக்கும்  மனப்பான்மை இன்றுவரை புரியவே இல்லை.
.
எனக்குப் புரிவது எல்லாம் ஒன்றே ஒன்று தான். மனிதவள மேம்படுத்தலுக்கான ஆராட்சிகளுக்கும் தொடர்பாடலுக்கும் பேச்சு , எழுத்து மொழி அறிதல் முக்கியமான விடயமே தான். . இதயங்களை நேசிக்க, மனங்களை உணர, கண்கள் வழி மனங்கள் பேசும் மௌன மொழி போதுமானது .  சிறியதொரு  அணைப்பு. கைகளை இறுகப்பற்றிக் கொள்ளும் நெருக்கம்  இவையெல்லாம் சொல்லாத நேசத்தை  வார்த்தைகளால் அதிகம்உணர்வு ரீதியாக இதயம் தொடச்  சொல்லி விட முடிவதில்லை. இதயத்தில் ஈரம் இருப்பவர்கள் எல்லோருக்குமே தெரிந்த மொழிகள் இவை

. புரிந்தால் அதனூடு பேசிப்பாருங்கள் . புரியாவிட்டால் அமைதியாகவாவது இருந்து விடுங்கள் வார்த்தை வீரியங்களால் மனங்களைச் சிதைத்துப் பார்க்கும் குரூரம்  என்பது அடிவேரில் அனல்நீர் ஊற்றுவது போல. உங்களுக்குள் ஈரம் இருந்தால் அனலின் தகிப்பு நன்றே புரியும். இல்லாவினினும் கூட , நீங்கள் அறியாத மொழிகளும் கேள்விப்படாத விடயங்களும் தான் பூமியில்  ஏராளமுண்டு  என்பதும் கூட புரியாதவர்கள் எனில்  புரியாமல் போகட்டும்.

மனிதாபிமானம் என்ற ஒரு
சொல் உங்கள் தாய் மொழியில் உண்டு அதாவது அறிவீர்களா அறிவாளிகளே?


Sunday, June 11, 2017

பட்டிப்பூக்கள்

நீங்கள் எத்தனை பேர் இது பற்றி அறிந்திருப்பீர்களோ தெரியவில்லை. அதாவது பதிவின் முன்பகுதியில் உள்ள என்னைப் பற்றியல்ல. பின்பகுதியில் உள்ள மலர் பற்றி ....

அப்போது எனக்கு எத்தனை வயதிருக்கும் என்ற விபரம் எல்லாம் இப்போது தெரியாது. கண்ட செடி கொடி எல்லாம் வீட்டில் கொண்டு வந்து நாட்டி வைத்து அதன் பக்கத்தில் போய் இருந்து கொண்டு "எப்போது நீ பூப்பாய்" என்று அதனிடமே கேட்டுக் கொண்டிருந்த வயது.

எல்லோருக்கும் இருக்கும் பிரத்தியேக ரசனைகள் போல எனக்கும் ஒரு குறிப்பிட்ட வண்ணம் அதிகம் பிடிக்கும்.
ஒருமுறை தாத்தாவோடு வயற்கரையால் வரும் போது மலர்ந்து நின்று வா என்று அழைத்தது அந்த வண்ணம். அவ்வளவு தான் பெயர்த்து எடுத்து வந்தாச்சு. அப்பவும் தாத்தா சொன்னார் அட இது பட்டிப்பூ வீட்டில் வளர்த்தால் பாட்டி கத்துவா பாட்டிக்குத் தெரியாமல் அடிவளவுக்கை புழக்கம் இல்லாத இடத்தில கறிவேப்பிலைப் பற்றைக்குள் நட்டுவை" என்று. நான் அதை வீட்டின் முற்றத்தில் நடுநாயகமா மற்றப் பூங்கன்றுகளுக்குள் மறைச்சு நட்டுவைச்சு பாட்டி கவனிக்காமல் அது வளர்ந்து பூக்கத் தொடங்க,

"ஐயையோ சுடுகாட்டுப் பூ இதை யார் இங்க கொண்டு வந்தது" என்று ஏதோ சுடுகாட்டையே நடுவீட்டுக்கை கொண்டு வந்து, அதில பிணத்தை வைத்து எரித்த மாதிரி பதறிப் போய் குதிச்சு, பிடுங்கி எறிஞ்சு, பிறகு நான் அழுது வடிஞ்சு, பாட்டியும் தாத்தாவும் சண்டை
பிடிச்சு ...... பிறகு நான் அதை மறந்து போனன் அது வேறு கதை.
பிறகு கொஞ்சக் காலத்துக்குப் பிறகு ரேடியோவில் பாட்டு மட்டும் இல்லை ஆட்கள் பேசுற மற்ற நிகழ்ச்சிகளும் காதில் விழத் தொடங்கிய பருவம் அது.
எப்பவும் வாய் மூடாத எங்கட வீட்டு ரேடியோவில் இசையும் கதையும் தொடங்கினால் சித்திக்கு காற்றில் எல்லாம் காது முளைத்திருக்கும். எனக்கு ஒரு மண்ணும் விளங்காமல் ஆர்வமில்லாமல் தலையே விதியே கடனே என்று கையுக்க கிடந்த காலம்..

'பட்டிப் பூக்கள்' இசையும் கதையும் அறிவிப்பில் வித்தியாசமா அந்தப் பெயர் சொன்ன போதே ஏனோ பிடித்துப் போய் மனதுக்குள் பூப்பூத்தது . அதில் அந்த மலர் பற்றிய மருத்துவ விளக்கம் கதையோடு கலந்திருக்க, அது பற்றி ஆராயத் தோன்றாவிடிலும் மனதில் பதிந்து தான் போனது. அன்றிலிருந்து Dr.ஜே. ஜெயமோகனின் எழுத்துப் பிடித்தது. அந்த எழுத்துக்காகவே இசையும் கதையும் பிடித்தது. அதுவே வளர்ந்தபோது எனக்கான முதல் அடையாளமும் தந்தது அதுவும் வேறு கதை.

அப்போது மனதில் பதிந்து மறக்க மறுத்த பட்டிப் பூக்களை இணைய வசதி வந்த பின் தேடத் தொடங்கினேன். இன்று எழுத்துலகில் இல்லாத Dr.ஜெயமோகன் அன்று தந்த விபரங்கள் மிகக்கொடிய நோய் ஒன்றில் இருந்து உயிர்காக்கும் அந்த மூலிகைச் செடியின் உயரிய சக்தி பற்றி விபரித்திருந்தது.
எழுத்து என்பதும் வெறும் கற்பனை அல்ல. அதில் நடைமுறை வாழ்வுக்கு அவசியமான எதைக் கலக்கவேண்டும் என்பதைக் கற்றதும் பெரிய புகழ் பெற்ற படைப்பாளிகளிடம் அல்ல. இலைமறைகாயாக இருந்து எழுத்துலகில் மறைந்தே போன இவர் போன்ற இன்னும் சிலரிடமுமிருந்தே.


"நாம் எப்போதும் இப்படித்தான் ஆராயாமல் அறியாமல் யாரோ சொன்னார்கள் என்பதற்காக அவசியமானவற்றை தள்ளியும், அவசியமற்றவற்றை அருகேயும் வைத்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பட்டிப் பூக்களை சுடுகாட்டில் போட்டு விட்டு கடதாசிப் பூக்களை வீட்டில் வைத்திருப்பது போல "
.
மாலினி





*********************************************************************************
நித்தியக கல்யாணி, நயனதாரா அல்லது பட்டிப்பூ என்றும் சுடுகாட்டுப்பூ (பூச்செடி) என்று அழைக்கப்படும் செடி, மடகாசுக்கரில் மட்டுமே காணப்பட்ட ஒருவகைச் செடியாக இருந்தது. பின்னர் இது வெப்பமண்டலப் பகுதிகளுக்கும், மென்வெப்பமண்டலப் படுதிகளுக்கும் பரவியது. இச்செடியின் பூ வெள்ளை நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலோ காணப்படும். பூவிதழ்கள் கூடும் நடுப்பகுதியில் அடர்ந்த சிவப்பு நிறமாகக் காணப்படும். இதன் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் காத்தராந்தசு ரோசியசு (Catharanthus roseus) என்பதாகும்.
மடகாசுக்கரில் இயற்கையில் காணப்படும் வகையான இச்செடி இன்றையச் சூழலில் அருகிவருகின்றது. இதற்கான காரணம் காடுகளை வெட்டியும் எரித்தும் வேளாண்மை செய்யும் முறையால் இயற்கைச் சூழிடங்கள் அழிகின்றன[1]
இம்மருந்துச்செடி ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வளரும். இரு மாதங்களில் 60 முதல் 80 சென்றி மீட்டர் உயரம் வளரும் செடியாகும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் 2.5 – 9 செ.மீ நீளமும் 1 – 3.5 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். அகலமான இந்த இலைகளின் மேற்பரப்பு பளபளப்பாகவும், நுண்மயிர்கள் இல்லாமலும் இருக்கும். இலைகள் எதிரெதிராக அமைந்திருக்கும். இலைக்காம்பு 1 - 1.8 செ.மீ நீளம் இருக்கும். இலையின் நடு நரம்பு வெளிறிய பச்சை நிறத்தில் இருக்கும். இலைக்காம்பு [2][3][4][5]
மருத்துவப் பயன்கள்[தொகு]
நீரிழிவு, சிறுநீர்த்தாரை, வெள்ளை இரத்தப்புற்று நோய். இப்பூச்செடியில் இருந்து இரத்தப் புற்றுநோய் (இலூக்கேமியா), சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கான மருந்துகள் பிரித்தெடுக்கப்படுவதால்[1] அதிகம் அறியப்படுகின்றது. குறிப்பாக வின்பிளாசிட்டீன், வின்க்கிரிசுட்டீன் போன்ற உயிர்வேதிப் பொருள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. சென்னை கிருத்துவக் கல்லூரியிலும் மேலை நாடுகளிலும் இதற்கான ஆய்வுகள் நடைபெறுகின்றன
இச்செடியின் பூ வெள்ளை நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலோ காணப்படும். பூவிதழ்கள் கூடும் நடுப்பகுதியில் அடர்ந்த சிவப்பு நிறமாகக் காணப்படும்.
Catharanthus roseus white CC-BY-SA.jpg
நித்திய கல்யாணி
இதன் ஐந்தாறு பூவை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிதாகம், அதிமூத்திரம், உடல் பலவீனம், மிகு பசி, பசியின்மை தீரும்.வேர்ச்சூரணம் 1 சிட்டிகை வெந்நீரில் 2, 3 முறை கொடுக்கச் சிறுநீர்ச் சர்க்கரை குறையும். நோய் கட்டுப்படும்.
.
நன்றி: இணையம்

Thursday, June 8, 2017

காலமாகிக் கடந்த ஒரு காலச் சின்னம்



காலம்   காலமாகிக் கொண்டே  பயணிக்கும்  பாதையில்   தன்  மேல் பதித்துக்கொண்ட அடையாளங்களையும்  அழித்தழித்துப் புதுப்பித்துக் கொண்டே  நகர்ந்து செல்லும்.  அதன் கடந்தகால அடையாளங்களை  எவ்வளவு தான் புதுப்பித்தபோதும்  உணர்வுகளோடு நிகழ்காலத்தில் அவைகளை அப்படியே மீட்டெடுத்துவிட  எதிர்காலத்தால் என்றுமே  முடிவதில்லை எப்போதுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்களை விட  எப்போதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்தவர்கள்  மனதில் அடியாழத்தில் தமக்கான ஒரு  இடத்தை நிரந்தரமாகப்  பிடித்துக் கொள்வது போல குறிப்பிட்ட  ஒரு  இடத்துக்கு அதிக சம்பந்தமில்லாது  வெறும் இடைத்தங்கல் பறவையாய்  தங்கிப்போன   ஒருவரின் மனதில்  ஒரு காலம் அதுசம்பந்தப்பட்ட இடம் நிகழ்வுகள்  தன் நினைவுகளை ஆழப் பதித்திருக்கலாம்.

 அடையாளமிழந்து அடிக்கல் வரை  சிதைந்து  அனேகமாக அனைவரின் நினைவுகளிலும்  இருந்து அழிந்து போன   அந்த இடமும்  எனக்கு அப்படித்தான். என் மூளையின் ஞாபகச் சுவர்களில்  எழுத்துக்கள்  அழியத் தொடங்குமுன்,  முன்பொரு  காலத்தில் இது இப்படி இருந்தது
அதை நான் எப்படியெப்படி எனக்குள் வாங்கிக் கொண்டேன் என ஒரு காலப்பகுதியின் சாதாரண வாழ்வியல் அடையாளங்களை  ஒரு குழந்தையின்  நினைவுகளில்  ஆவணப்படுத்தி விட்டுச் செல்ல விரும்பும் இடங்களில் இது மனதில் முதலிடத்தில்  இருக்கிறது.

அப்போது, என் சிறுவயதுகளில்  எனக்கு மிகவும் வெறுப்பானதும் பயமானதும் விடயங்களில் முக்கியமானவை  இரண்டு.  ஒன்று  பாம்பு மற்றது   பயணம்.  வாழ்க்கையில் ஓய்ந்திருத்தலும் உறவொதுங்கியிருத்தலும் ஒருவித சாதல் நிலைபோல  மனநிலை கொண்ட மூன்றாம் தலைமுறை மனையாட்சி செய்த காலமது என்பதால்  நான் மாட்டேன் என அடம் பிடித்தாலும்  பயணங்கள் தவிர்க்கப்பட முடியாதனவாகவே  இருந்தன . மாட்டேன் என்பதற்குப் பின்னால் ஏதும் மாபெரும் வரலாற்றுக் காரணங்கள் இல்லை.   இலங்கை போக்குவரத்துச் சபைக்குச்  சொந்தமான  கதவற்ற  பஸ்,  அது குபுகுபு என வெளித்தள்ளும் டீசல் புகை கானல் வெயிலில் மேலெழுந்து பறக்கும்  புழுதியோடு கலந்து  பின்வாசல் வழியாக நேரடியாகவே மூச்சில் மோதும். 

நிற்கவும் இடமின்றி , இருக்கையில் இருப்பவர்கள் குழந்தையா குஞ்சா என்று கூட பார்க்காமல் அவர்கள் மடியிலும்  உட்கார்வது போன்ற நிலையில்  எண்ணிக்கையற்று உள்வாங்கப்படும் பயணிகள்,  கசகச என ஒரு கதம்ப வியர்வை மணம். போதும் போதாதுக்கு  அந்த நெரிசலுக்குள்ளும் சில  ஈர அடுப்புக்கள் வாயால் குபுகுபு என ஊதித்தள்ளும்  பீடி, சுருட்டு, சிகரட் என ஒன்றாக்கிக் கலந்த மூச்சுத் திணறும் புகைமூட்டம் . பின் சீட்டில் யாரோ பாட்டியோ, தாத்தாவோ  தனக்குப்பக்கத்து சீட்டை உரிமையோடு வளைத்துப் பிடித்து பக்குவமாய் உட்கார வைத்திருக்கும்  காய்ந்த வாழையிலையால் மூடிகட்டிய புகையிலைக் கட்டு, அரைப் புழுங்கல்நிலையில் அந்த இலைகளில் இருந்து வெளிவரும் ஒரு வித தலை சுற்றும் மணம் .  இவ்வளவும் ஒன்றாகச் சேர்ந்து பஸ்ஸில் ஏறியதுமே  தொடங்கும் தலைவலியும் வாந்தியும், இறங்கும் வரை நிற்பதில்லையாதலால்  பயணம்  என்று சொன்னாலே பலியாட்டுக்கு மாலைபோட்டு பலிபீடத்தில் நிறுத்திவைத்த  நிலைக்கு வந்து விடும் மனம்.   இவைகளைத் தாண்டி  குதூகலித்த  ஒரு இடமும் உண்டென்றால் அது........


தோளில் ஒரு குட்டிப் பயணப் பை,  அது கொள்ளாது எனக்குப் பிடித்தது  அவனுக்குப் பிடித்து  மற்றவனுக்குப் பிடித்தது மேலும் மற்ற மற்றவர்களுக்குப் பிடித்தன  என்று போன லீவுக்குப் பிறகு வாங்கிச் சேர்த்த  விளையாட்டு பொருட்களும், எங்கள் எல்லாருக்கும் பிடித்த ஒரு பெரிய பக்கெட் மோல்ரீஸ்ற் உம்.  கண்டி வீதியில் எங்களுக்கு அண்மையில் இருந்த  பஸ்ராண்டில்  காத்து நிற்கும் போதே மனம் பறக்கத் தொடக்கி விடும்.  பஸ்ஸில்  ஏறி கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையாக விரியும்  எங்கள் மதிப்பங்குளம் விளையாட்டு மைதானம்,   வயல் வெளிகள், தென்னந்  தோட்டங்கள் கடந்து நாவற்குழிப் பாலத்தை  பஸ் கடக்கும் வரை  முகத்தில் மோதும் அந்தக்  குளிர்ந்த காற்றில் கிறங்கி  வேலியோரக் காட்சிகளில் மயங்கி முடித்து  இனிப் பார்ப்பதற்கு எனக்குப் பிடித்தது போல எதுவுமில்லை என்ற நிலையில் ஜன்னலுக்கு வெளியே இருந்த பார்வையை திருப்பி  பஸ்ஸின் உள்ளே பார்க்க   தலைவலிக்கப் போவது போல  வாந்தி வரப் போவது போல மனதுக்குள்  அபாய அறிவிப்பு   அதிரும்.  அந்த நேரம்  அம்மாவின் மடியில் தலையைக்  குப்புற வைத்துப் படுப்பது தான்.  ஆனையிறவு  வரை கண்ணைத் திறப்பதோ  தலையை நிமிர்த்துவதோ  இல்லை.  ஆனையிறவு வந்ததும் எழுப்பி நிமிர்த்தி இங்க பாரு கடல் என்று சொன்னால் தலைவலியும் வாந்தியும் எங்கோ ஓடிப் போயிடும். கடலைக் கண்டதால் அல்ல. நான் நேசிக்கும் இடத்தை நெருங்கி விட்டேன் என்பதனை அறிந்து கொள்ள நான் அப்போது நிர்ணயித்து வைத்திருந்த அடையாளம்  1946 ஏக்கர் விஸ்த்தீரணம் கொண்ட  ஆனையிறவு உப்பளம்

 1938 ஆம்  ஆண்டிலிருந்து  1990  வரை இயங்கியது  இவ்வுப்பளம்.  அருகே உப்பு உற்பத்திமையக் கட்டிடம். அதனருகே  உப்பை ஏற்றி பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லக் காத்திருக்கும்  கனவாகனங்கள்.  பார்வைக்கெட்டிய தூரம் வரை பரந்திருக்கும்   கடல். அதனை நடுவே  ஊடறுத்து  பாம்பு போல நீண்டு நெளிந்து  பயணிக்கும் புகையிரதப் பாதை.   அதன் இருபக்கமும் சதுரச் சதுரப்   பாத்திகளில் வெண்மையாக விளைந்து மினுங்கும் உப்புநீர்ப் பூக்கள் . கொதிக்கும் வெயிலில்  பெயருக்குக் கூட நிழல் கொடுக்க  ஒரு சிறு மரமும்   இல்லாத  கடல் அலை முடியும் கரைகளில் பரந்து கிடக்கும் உப்புக் குவியலை   வாரிக் கொண்டிருக்கும் ஆண் தொழிலாளர்கள்,  கடகங்களில் அள்ளி,  தலைகளில் சுமந்து கொண்டு போய் சிறு வெள்ளை மலை போல குவித்துக் கொண்டிருக்கும் பெண்கள் . கருவாடு போல மிக கறுத்துமெலிந்து,   பாதங்களும்  உள்ளங்கைகளும் உப்பில் ஊறவைத்துக் காயவிடப்பட்டிருக்கும்  மாங்காயையோ, தேசிக்காயையோ  நினைவுறுத்தும்  அவர்களின் உருவ அமைப்பு.  இந்தத் தொழிலாளர்களின் உழைப்பில் அப்போது வருடமொன்றிற்கு கிட்டத்தட்ட  70,000  மெட்ரிக் தொன் உப்பை உற்பத்தி செய்து , 1980 களின் முற்பகுதியில் உப்பு உற்பத்தியில் தன்னிறைவு கண்டு மேலதிக உப்பை மாலைதீவு  ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்த  ஆனையிறவு உப்பளம்  1990 இல் முழுவதுமாக தன் செயற்பாட்டுக்களை நிறுத்திக் கொண்டதுடன்  ஆனையிறவு என்றதும் உப்பளம்  என்ற தன் அடையாளத்தை அழித்துக் கொண்டு பின்வந்த காலங்களில், தன்மீது  வேறொரு வரலாற்று அடையாளத்தைக் கல்வெட்டிக் கொண்டது.  

  கடலிடம் மனத்தைக் கொடுத்துவிட்டுக்  கடக்க  சூரையும் பாலையுமாக விரியும் காடுகள் , காட்டுப் பழச் சுவைகளின் நினைவுகளில் நாவினடியில் மெதுவாய் நீருறத் தொடங்கும்.   ஆனையிறவு கடந்து  மூன்றாவது  தரிப்பிடத்தில்  வீதியின் ஓரத்தில் விரவியிருக்கும் சிவந்த  பாலியாற்றமண்ணையும் குருணிக் கற்களையும் சறாச் என்று தேய்த்து செம்புழுதியை  மேலெழுபிப் பறக்க விட்டு  நிறுத்தத்தில் தரிக்கும் பஸ்ஸில் இருந்து  உற்சாகப் பந்தாய் குதித்தால்  விழுந்து விடாமல் ஏந்திக் கொண்டு முத்தமிட இப்போதில்லாத  அந்தக் கை அப்போது  காத்திருக்கும்.

இறங்கியதும் உயர்ந்து நீண்டு செல்லும்   வீதியின்   இந்தப்பக்கமாக  சற்றுத் தாழ்ந்த நிலப்பரப்பில் அந்த நிறுவனத்தின் ஊழியர்களால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்ட , குட்டியாய் ஆனால் வருடாந்த மற்றும் முக்கிய உற்சவங்கள் நடக்கும்  ஒரு கோவில். அதற்கு எதிராக அந்தப்பக்கமாக  வீதியிலிருந்து கிளைபிரித்து குறுக்காக  நேரே  செல்லும்  சொரசொரவென   சிவப்பு நிற பாலியாற்று மண் சாலை .   அதில்  ஒரு கையால் மார்போடு தூக்கியணைத்து நடந்தவாறே  மறுகையால் சுட்டி அதோ தெரியுது  பாரு வாசி கண்ணம்மா  எனும்போது  எழுத்துக் கூட்டிக் கூட்டி ஒவ்வொரு சொல்லாக  அந்த இடம் வார்த்தைகளால் வடிவம் பெறும்  பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம். 

 ஒரு இருபத்தைந்து அடி நடந்தால்  ஊர்மனையோடு ஒட்டிக் கொள்ளாமல் காட்டுக்குள் தனிப்பட  கிட்டத்தட்ட  220  ஏக்கர் நிலப்பரப்பை  வளைத்து அமைக்கப்பட்ட அந்தத் தொழிற்சாலைப் பிரதேசம். அதன் பிரதான நுழைவு வாசலில் பெரியதொரு  அகல கேட். அதை நெருங்க நெருங்க   நாசியைச் சுரண்டும்   குளோறின் நெடி.. கேற்றுக்குப்  பக்கத்தில் தொழிற்சாலைக்கு எதிர்ப்புறமாக செக்கியூரிட்டிக் கட்டடம்.  கதவு திறக்க முன்னமே கம்பிக் கதவுக்குப் பின்னால் இருந்து விபரம் வினவும் காவலர்கள் . விபரங்கள் சரிபார்க்கப்பட்ட  பின்  அதற்குள்  நுழைந்தால் விருந்தாளிகளைக் கூட்டிச்செல்ல  அந்தச் சிறு கொலனி போன்ற பிரதேசத்துக்குள் இருந்து   உரியவர் வரும் வரை காத்திருப்பதற்கான  ஒழுங்காக இருக்கைகள் அடுக்கப்பட்ட  கச்சிதமான இளைப்பாறு மண்டபம் .

அதற்கெதிரே பாரவூர்திகள்  பயணிக்க வசதியாக பரந்திருக்கும் பாதைக்கு சற்றுத் தள்ளி ஆரம்பிக்கும் நெடிய  கோபுரங்களைக் கொண்ட அந்தப் பிரமாண்டமான  வெண்ணிறக் கட்டிடம்.  அதன் உச்சிகளில் கிடந்த அகன்றுயர்ந்த  புகைப்போக்கிக்கருவிகளினூடே குபுகுபுவென புகையை வெளித்தள்ளிக் கொண்டிருக்க ,  அதனை அண்டிய  பின் சுற்றுப் பகுதிகளில் இதன் பாதிப்புக்களால் சற்று  மஞ்சள் பாரித்த புற்களும் செடிகளும், அந்தப் பகுதி முழுவதற்கும் கேட்கும் படி பத்து யானைகள் ஒரே நேரத்தில்பெருங்குரலெடுத்துப்  பிளிறுவது போல் அதிரவைக்கும் மணிக்கொருதரம் ஒலிக்கும் சங்கொலி.  புதிதான ஒரு உலகத்துக்குள் நுழைந்தது  போன்ற பிரமையை ஏற்படுத்திக் கொண்டு நிமிர்ந்து நிற்கும்  சோடா பக்டரி என்று அழைக்கப்பட்டஅது ,  திரு .ஜி.ஜி பொன்னம்பலம் அவர்கள்  இலங்கை அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக இருந்த  காலத்தில் தமிழ்ப்பிரதேசங்களில் நிறுவப்பட்ட  தொழிற்சாலைகளில் ஒன்றான 1954 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட  பரந்தன் கெமிக்கல் கொப்பரேஷன். 






இந்த இரசாயனத் தொழிற்சாலைக்கு அதிகம் தேவையான மூலப்பொருட்களில் ஒன்றான கடல் நீர்  உப்பை ஆனையிறவு உப்பளத்தில் இருந்து பெறக்கூடிய வாய்ப்பிருந்ததால் அதனை அண்மிய பிரதேசமான பரந்தனில் இத்தொழிற்சாலை அப்போது நிறுவப் பட்டது.  குளோரின், ஐதரோகுளோரிக்அமிலம்  மற்றும் கோஸ்டிக் சோடா  போன்ற இரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்தமையால் அது அப்போது  சோடாப் பக்டரி என  பொதுமக்களால் அழைக்கப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன்.

அந்த சோடாப் பக்டரி பிராந்தியத்துக்குள் நுழைந்து கொண்டு எப்போதும்  இரசாயன மணம் நாசியரிக்கும்  காற்றைச் சுவாசித்துக் கொண்டு நடந்தால்  தொழிற்சாலைக் கட்டிடங்கள்  முடிந்து சற்றுத் தூர இடைவெளியின் பின் குடியிருப்புப்  பகுதி ஆரம்பமாகும்   தார்பாவாத பாலியாற்று மணற் செஞ்சாலைகளில்நடந்து சென்றால்   பொதுவாக  ஊர்மனைகளில் இருப்பது போல குறுக்குத் தெருக்கள் பிரித்து வீதிகள் அமைக்கப் படாமல் ஒரு பகுதியை வட்டமிட்டது போல  நேராகச சென்று  வளைவாகத் திரும்பும்  வீடுகள்.  அதில் ஒரு வீடு தான் என்வரவுக்காக எப்போதும் வாசல் திறந்து வைத்துக் காத்திருந்து  என் சிறுவயதுக் காலச் சந்தோசம் முழுவதையும் தனக்குள் தத்தெடுத்துக் கொண்டிந்தது.

தொழிற்சாலைக் குவாட்டஸ்  என்பதால் ஒவ்வொரு வீட்டுக்குமிடையில்  பெரிதான வேறுபாடுகள் இருக்காது.  குடும்ப அங்கத்தவர்களைக்கணிப்பிற் கொண்டு  அறைகளின் எண்ணிக்கையில் மட்டும் வேறுபாடுகள் இருக்கும். மற்றப்படி  முதலாளி தொழிலாளி என்ற அதி   பெரிய வித்தியாசங்களை  வீடமைப்புக் கொண்டிருக்கவில்லை  எனினும், உள்வீட்டுப் புழங்கு பொருட்களில்  அந்த வித்தியாசம் இருந்தது.

வீடுகளின் பின் புறத்தில்  சமயற்கட்டையும், நீர்க்குளாயைத் திறந்தால் குளோரின் வாசனையுடன் குபுகுபுவென எந்நேரமும்  நீர்பாயும்    குளியலறையையும்  தாண்டி  படியிறங்கி  நடந்தால் வெறும் பசிய நிலப்பரப்புக்கள். அவற்றைத் தாண்டி  நீண்ட தூரம் பின்னோக்கி நடந்தால் வெண் மணற் தரையில்  முதிரை  வீரை பாலை  மரங்களோடு  காரை கிளாத்தி  போன்ற  முட்செடிகள் பற்றையாகக் கிடக்கும்.  யாழ்ப்பாணப்பகுதிகளில்  நீரூற்றிக் காப்பாற்றி வளர்க்கப்படும்  எக்ஸ்போ(f)றா  அங்கு காடுகளில் மரங்கொள்ளாமற்  பூத்துக்குலுங்கும்.

வீடுகளுக்கு  முன்புறத்தில் வீதிக்கு  எதிர்ப்பக்கமாக  தூரம் தூரமாக ஒவ்வொரு வீட்டுக்கு எதிரிலும் பாலை மரங்கள். பகல் முழுவதும்  வீடுகளையும் சுற்றுப் புறங்களையும் சுற்றியலைந்த கோழிகளின் இரவுப்படுக்கைகள்  அவை.  அவற்றின் அடியில்  தரையில்  ஆழஅடித்து  ஊன்றப்பட்ட  மரக்கட்டைகளில்  பகல்  முழுவதும் காடுகளைச் சுற்றியலைந்து  இரவு கட்டைக்கு வரும் நாட்டு மாடுகள் கட்டப்பட்டிருக்கும்.  ஒவ்வொரு காலையும் மாலையும்  சமையலறையில் இருந்து பொங்கி  வீட்டு வாசல் வரை பசும்பால் வாடையை அவை பரப்பிக் கொண்டிருக்கும் .

குடியிருப்புக்களின்   மத்தியில் பெரிதாக ஒரு விளையாட்டு மைதானம்.  அதனோடு கூட கிளப் என அவர்களால் அழைக்கப்பட்ட ஒன்று கூடல்  மண்டபம்.  அதனோடு சேர்ந்து சிறுவர் பாடசாலை.  வாசிகசாலை.  அவர்களுக்கான  அத்தியாவசியப்  பொருட்களுக்கான விலைக்கட்டுப்பாடுகள்   கொண்ட விற்பனை  நிலையம்.  

அதற்குள் இருந்த சிறுவர் பாடசாலைக்கான வயதெல்லை தாண்டிய சிறார்களுக்கான  வெளியிற் சென்று கற்பதற்கான வாகன வசதி,  வருடாந்த  ஒன்று கூடல் நிகழ்வுகள்.  ஒளிவிழா என்ற பெயரில் பெரியளவில் நடக்கும் நத்தார் விழா.  என் சிறுவயதுகளில் அந்த விழாவுக்காகவே  அங்கு போன குதூகல நினைவுகள் இப்போதும் உண்டு.  தவிரவும்  தூள் உப்புப் பாவனையும் அங்குள்ள குடியிருப்புக்களில் தான் அப்போதிருந்ததாக நினைவுண்டு.
தொழில் நிமித்தம் பல ஊர்களிலும் இருந்து வந்து அப்படியொரு குடியிருப்புக்குள் ஒன்று சேர்ந்திருந்த அந்தக் குடும்பங்களிடம்   யாழ்ப்பாணத்தின்  மற்றெந்தப் பகுதிகளிலும் இல்லாத அளவு சாதி சமய பேதமற்ற ஒற்றுமை இருந்தது அப்போது.  அண்டை அயல் தான் அவர்களுக்கு உரிமை உள்ள உறவுகளாக இருந்தன.  அப்படியே முறை சொல்லி அழைத்தும் கொண்டார்கள். அதன் படி வாழ்ந்தும் கொண்டிருந்தார்கள். ஒரு வீட்டுக்கு உறவினர் வந்தால் எல்லா வீடும் உறவு கொண்டாடியது . மாலையில்  விளையாடுவதற்காக  கிளப்புக்குப் போக வீதியில் இறங்கினால் பேதமற்று எல்லாக் குழந்தைகளுமே வந்து ஒட்டிக் கொள்வார்கள்.  விளையாடி முடித்து கூட்டமாக காட்டுக்குள் இறங்கி நேரம் போவது தெரியாமல் அலைந்து  பிடுங்கி உண்ட பழவகைகளின் சுவைகளைப் பின் எப்போதும் எந்த விலை கொடுத்தபோதும் வாங்கித்தர வாழ்க்கையால் முடியவில்லை.

அண்மையில் இருந்த இரணைமடு நீர்த்தேக்கத்தின் உதவியால் காலபோகம் சிறுபோகம் என இருபோகம் விளையக் கூடிய அப்பிரதேசத்தில்  இந்தக் குடியிருப்பில் இருந்தவர்களுக்குச் சொந்தமான வயல்களும்  கணிசமான அளவில்  இருந்தன.  அனல் பறக்கும் வெக்கை மட்டுமல்ல  சிறு சிறு நீர்த்தேக்கங்கள் போல  குளங்களும் காடுகளும் சூழ்ந்திருந்ததால்  நுளம்பும் தாராளமாகவே இருந்தது.  இரண்டு நாட்களுக்கு ஒருமுறை  மாலையில் பாவனைப் பொருட்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி ஒன்றாக அடுக்கி  படங்கு போன்ற பாரிய பொலித்தீன்  விரிப்புக்களால்  மூடிவைத்துக் கொண்டு நுளம்பெண்ணை அடிக்க வருபவர்களுக்காக காத்திருப்பார்கள்.

அவர்கள் வந்து விசிறிச்செல்லும் நுண்ணுயிர்க்கொல்லிஇரசாயனப்  புகையில் வீடுகள் ஒருதரம் மூழ்கி வெளிவந்தால் நாற்றம் மூச்சை அரித்தாலும் அன்றிரவு  நுளம்புக்கடியில் இருந்து தப்பிக் கொள்ளலாம் அடுத்தநாள் நுளம்பு வலை மூடாவிடில் எத்தனை துரத்தினாலும்  நுளம்பு தம் இரத்ததா தாகத்தை தீர்க்க மறப்பதில்லை. 

காடண்மிய பகுதி என்பதால்  காட்டுப் பூனையும்  பாம்பும் பாம்பாட்டிகளும் தாராளம்.  மழைகாலம்  அடித்துப் பாயும் வெள்ளத்தில் நீந்தி மிதக்கும் பாம்புகள் பற்றிய  பயம் தாராளமானது.  வேலையாட்களிடம் முழங்காலுயர கறுத்த றப்பர் சப்பாத்தக்க்கள் மழை மற்றும் இரசாயனக் கூட வேலைகள் சம்பந்தமான பாதுகாப்புக்காக வழங்கப் பட்டிருந்ததால்  மழை நேரங்கள் அவர்களைத் தவிர மற்றவர்கள் வெள்ளத்தில் இறங்க மிகவும் தயங்கவேண்டிஇருந்தது.  இருந்தும்  அதிகமான  மனிதப் புழக்கம் இல்லாத இடம் என்பதால் அந்த வெள்ளம் கூட என்னில் துள்ளி விளையாட வா என்பது போல துப்பரவாகவே இருக்கும். வெள்ளம் வடிந்து காட்டுவழியே  வாய்க்கால் நோக்கிப் பாய்ந்ததன் பின் கூட்டி மெழுகியது போல அத்தனை துப்புரவாக அழகாக இருக்கும் காட்டு மணலில் காலணியைக் கழற்றி விட்டு ஊன்றி நடக்கும் சுகம் சொல்லிப் புரியாது. 

தற்போது போல இறக்குமதி  செய்ய வேண்டிய தேவையற்று இலங்கை முழுவதற்குமான குளோரின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய நிலையில் இயங்கிய  அந்த சோடாப் பக்டரிக்கும்  மனிதர்கள் போல , மற்றும் எல்லாமும் போல இறந்த காலம் என்ற ஒன்றை உள்நாட்டு யுத்தத்தின் வடிவில் காலம் குறித்தது.

பயிரும் பச்சையுமாக இருந்த அந்தப் பகுதி பரந்தன் படைமுகாமாகியது . மக்கள் வெளியேறத் தொடங்கினர். இப்படைமுகாமை  அழிக்க புலிகள் பலதடவை முயன்றதில், அழிக்க, அழிக்க அது மீண்டும் மீண்டும் முளைத்ததில்  அதனைச் சூழ்ந்த பகுதிகளும்  குண்டுவீச்சில் குளித்து இரத்தத்தில் மிதக்கத் தொடங்கின.  யுத்தம் வளர வளர தொழிற்சாலைகளில் இருந்த உபகரணங்கள் ஒவ்வொன்றாக  ஆயுதம் தூக்கிய  அனைத்துக் குழுவின்னரதும் தேவைகளுக்கேற்ப  அபகரிக்கப் படத்  தொடங்கின.  நாம் மட்டும் குறைச்சலா என்ன என்பது போல எஞ்சிய சொஞ்சிய பொருட்கள் வண்டிகள்  உபகரணங்களையும்  தூரத்தில் வரும் போதே தொழிற்சாலையை அடையாளம்  காட்டிக் கொண்டிருந்த  பாரிய நீர்நிரப்புக் கொள்கலனையும் அள்ளிக்கொண்டு போய் ஆனையிறவு முகாமில் குவித்து உக்க  வைத்தது  ராணுவம் .

 இப்படியே தொடர்ந்து கொண்டிருந்த சமர் கிளிநொச்சியை மீட்டு, அதிகளவாக பெண் போராளிகளைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட பெரும் சமரான ஓயாத அலைகள் மூன்றில்  ஆனையிறவைக் கைப்பற்றியபின், இராணுவப் படைத்தளங்கள் அப்பகுதியிலிருந்து முற்றுமுழுதாக அப்புறப்படுத்தப் பட்டன. இரசாயனத் தொழிற்சாலை குண்டுகளால் தகர்ந்திருந்தது.  இப்படியாக ஒரு தொழிற்சாலை மையம் வரலாற்றில்  தன் பெயரைப் பதித்து விட்டுச் சிதைந்து போனது.

பின் அந்தப் பகுதியைப்  புலிகள் தம்வசம் வைத்திருந்தார்கள்.  பரந்தன் புலிகள் வசம் வந்தபின் அங்கு வேரூன்ற வைக்கப்பட்ட  மக்கள் மீண்டும் குடியேறத் தொடங்கினர். முன்போல  தொழிற்சாலை மேலதிகப் படிகளுடனான வருமானமும் வேலையும் இல்லையாயினும்   அவர்களுக்கான  நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை ஊதியம் வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது. மேலதிகத் தேவைகளை தம் காணிகள் மூலமான மிக குறுகிய அளவான பயிர்ச்செய்கை மூலம் கிடைத்த வரும்படிகளைக் கொண்டு காஸ்ர ஜீவனம் நடத்தத் தொடங்கிய மக்கள்  முகாமிட்டிருந்த புலிகளுடன் நெருக்கமாகியும் இருந்தனர்.

காட்சி மாறியது  இந்தியக் காக்கிச் சட்டைகள்  ஈழத்தில் காலடி வைத்தன.   சமாதானப் படை சண்டைப் படையாகிப் போர் வெடித்தது . புலிகளின்  சுதந்திர நடமாட்டம் குறைந்த போனது.  மறைந்து வாழ நிர்ப்பந்திக்கப் பட்ட புலிகள்  தங்களை ஆதரித்த மக்களை நாடவேண்டிய நிலையில் இருந்திருக்கலாம். மாலை இருள் கவிந்த  பொழுதுகளில் சில   வீடுகளின் பின் பகுதிகளில் இருந்த காடுகளினூடாக  அவர்கள் வருவதும்,  அந்தக் கஸ்ர  சீவனத்திலும்  அவர்களுக்காகச் சமைத்துவைத்து வைத்து  நாளுக்கு    ஒரு  தடவை   அரை வயிறாவது  அவசரமாக அவர்களை உண்ணவைத்துக் காப்பாற்றிய அந்த மக்கள்  காட்டிக் கொடுக்கப் பட்டார்கள்.

ஒருநாள் இருள்கவிந்த நேரம் பின்வாசல் வழியாக அவர்கள் வரும் நேரத்தில் வேறு கூட்டம் வந்தது.  வாங்கோ தம்பிமார் என்ற கிசுகிசுப்பான குரலிலான அன்பான உபசரணை  அன்று தான் அந்தச் சூழல் மக்களுக்கு இறுதி நாளாக இருந்தது .  கூடவே கொண்டுவந்து ஒளித்துவைத்த  பொல்லுகள் புளிச்ச மட்டைகள்  போன்றவற்றினாலான  சரமாரியான  தாக்குதலில் எலும்புடைந்து சுருண்டு கூழாகிப் போன மக்கள் அவ்விடத்திலான  தமக்கான நிலங்களையும் உதறிவிட்டு சொந்த மண்ணில் சொந்த மொழி பேசுவோரால்  அகதியாக்கி ஓடவைத்து தொழிற்சாலைக்கு முன்னரான அவர்களது பூர்வீகப் பிரதேசங்களில் வெறும் ஒட்டுக் குடித்தனத்தில் ஒண்டவும்  ஒடுங்கவும் வைத்தது.  அதனோடு பழைய தொழிற்சாலையின் எஞ்சிய அடையாளங்களைச் சுமந்திருந்த மக்களும்  வாழ்வியல் போராட்ட  நீரோட்டத்தில் கலந்து கரைந்து அடையாளம் தொலைந்து காணாமற் போனார்கள்.

இப்போது மீண்டுமொரு முன்னெடுப்பில் அவ்விடத்தில்  புதிதாய்  ஒரு தொழிற்சாலை பிறப்பெடுக்கும் முயற்சிகளின் பின்னணியில் உற்பத்தி சிறக்கலாம்  வருமானம் பெருகலாம் . இரசாயன வளத்தில் தன்னிறைவும் அடையலாம் ஆனால்  அந்த முன்னைய காலம் அதன் நினைவுகளை சிலவேளை வரலாற்றில் சிலவரிகளால் பதித்துவிட்டு நிரந்தரமாக உறங்கிவிடும். 

ஆனால் அந்த இடமும்  அது பற்றிய நினைவுகளில் இங்கு பதிவிடாதவைகளும், இராணுவக் காவல் போட்டபின்பும்  வீட்டுக்கு ஒழித்து மூத்தவர்கள் மூச்சுத் திணறத் திணற சைக்கிள் மிதித்து  இறுதியாய் நாங்கள் கூடிச் சென்று கால்நனைத்த  இரணைமடுத் தண்ணீரின் குளிர்ந்த நினைவுகளும், அப்போது போர் உக்கிரம் பெறவில்லையாதலால் காவலில் நின்றும் குழந்தைகள் என  விரட்டிவிட்ட  இராணுவத் துப்பாக்கியும் , பின் எப்போதும் அப்படி நேசமான மனிதர்களை வாழ்க்கை சந்திக்கவேயில்லையாயினும்,  இனி எப்போதுமே அப்படியொரு நாள்  திரும்பி வரப் போவதில்லையாயினும்  இறக்கும் தருணத்திலும்  ஒரு பட்டம் பூச்சியின் வண்ணங்களாய்  கடந்த நினைவுகளுடன்  வாழ்க்கை கண்மூடும் .

Tuesday, June 6, 2017

பட்டபின்னாலே வருகின்ற ஞானம் எவருக்கும் உதவும்





 "பட்டபின்னாலே வருகின்ற ஞானம் எவருக்கும் உதவாது"  எனப் பாடி வைத்த பாடல் வரிகள் சரிதானா என்று  பலசந்தர்ப்பங்களில் வாழ்க்கை சிந்திக்க வைத்ததுண்டு.  அனுபவங்கள் போல அதியுன்னத ஆசான்களை   எந்தவொரு பாடசாலைகளாலோ  பல்கலைக்கழகங்களாலோ  அறிமுகப்படுத்தி  வாழ்க்கைப் பாடங்கற்றுக் கொடுக்க முடிவதில்லை. அப்படியான அனுபவங்களால் மட்டுமே பின்னான வாழ்க்கையில்  அவதானத்தையும்  மனத்திடத்தையும் ஏற்படுத்த முடிகிறது. அப்படி அமைந்த  ஒரு சிறு அனுபவம் இது.

யாழ்நகரிலிருந்து கண்டி வீதி வழியாகவோ புகையிரதப் பாதை வழியாகவோ கொழும்பு நோக்கி பயணிக்கும் பாதையின் வழியில்   நகரோடு ஒட்டிய நாகரீகத்தோடு கைகோர்த்துக் கொண்டு, தன் எல்லை முடிந்து  அடுத்த ஊரை இணைக்கும் பகுதிக்கு சற்று  முன் வயல்கள் குளங்கள் தென்னந்தோப்புகள், பனைமரக் காடுகள் என்று கிராமத்தின் குளிர்ச்சியோடும் கலகலப்பான,பூர்வீக கிராமம் எனது தாய் மடி மண்.

இந்த நேர்ப் பாதையில் என் வீடு இருந்ததால் சூரிய உதயமும் அஸ்தமனமும் எந்த மரங்களின் தடங்கலும் இன்றி எப்போதும் பார்த்து ரசிக்க முடிந்திருந்தது.
ஊரை ஊடறுத்து ஓடும் A9 வீதி எப்போதும் வாகன அணிவகுப்புக்களோடு இரைச்சலாகவே இருக்கும். சற்றுக் குடியிருப்புக்கள் தாண்டி சமாந்தரமாக அதே பயணத்தை மேற்கொள்ளும் புகையிரதப் பாதை  எப்போதும் கூட்டமற்று அமைதியாகவே இருப்பதால் .  கால்நடையாக வயல் தென்னந்தோட்டம் ஊர் எல்லை போன்றவற்றுக்குப்  போவதெனில் இந்தப் பாதையே பாவனையில் இருந்தது.

பொதுவாக  ஊரவர்களைத் தவிர சனப்புழக்கம் குறைந்த இப்பாதையால் சென்றால் காடு என்று நாங்கள் அழைக்கும் சிறுபற்றை வெளிகளுக்குள்   உலகமகாயுத்த காலத்தில் அழிக்கப்பட்டு மண்ணுக்குள் அமிழ்ந்து போய் பின் வெளிப்பட்டுப் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு சிறிய துர்க்கையம்மன் ஆலயமும்  அதன் முன்னால் ஒரு சிறுகுளமும் உண்டு.  சுற்றுவர தென்னந் தோட்டம் என்பதால் அக்காலத்தில் தோட்டத்திலேயே தேங்காய்கள் உரிக்கப்பட்டு தும்புப் பாவனைக்காக அங்கேயே மட்டைகள் புதைத்து வைக்கப்பட்டதாக தாத்தாவோடு கைகோர்த்து அந்த வெளிகளில் நடந்த காலங்களில்  சொல்லியிருக்கிறார். ஆகவே' மட்டைபுதைச்சான் அம்மன் கோவில்' என வழங்கப் பட்டதாக ஆகுபெயர் பற்றிக் கற்பிக்கும் போது மாமா விளக்கம் தந்திருக்கிறார்.

போர்க்கால நெருக்கடிகளினால் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்துக்குச் செல்லுதல் சிரமம் என்றானபின்  அந்தநேரத்தில் இந்தக் கோவில் மிகப் பிரபலமாகத் தொடங்கியது. வெள்ளி செவ்வாய் நாட்களில் புகையிரதப் பாதையை பலவர்ணப் புடவைகளில் ஜெக ஜெகவென  ஆக்கிரமிக்க பெண் வாசனை கண்களுக்குக் குளிர்ச்சியாக மிதக்கும். அதற்கு அருகே சமாந்தரமாக உள்ள சிறு வீதியில் நெடுங்குளம் சந்திவரை கரும்புவில் காளையர் கூட்டம் முகத்தில் பவுடர் அடித்துக் கொண்டு வியர்க்க விறு விறுக்க சைக்கிள் ஓடி அந்தநாட்களில் பிரபலமாக இருந்த சினிமாப்பாடல்களில் காதலை உருக்கி வடித்துக் கொண்டு அந்த நாட்களைக் கலகலக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் . 

இந்த இருநாட்களும் தவிர மற்றைய நாட்களில் வழமைபோல ஒரு வித வரண்டுபோன அமைதியில் இருக்கும் அந்தப் பாதையில்   வேறு சில தெரியாத ஊர்களில் இருந்து இந்தப் பாதையால் நடந்து   வயல்கள் தாண்டிய சிறு பற்றை வெளிகளை நாடி சில மனிதர்கள் நாய்களை கூட்டமாக கூட்டிச் செல்வார்கள். என் சிறு வுயதுகளில் வீட்டில் கேட்டபோது வேட்டை பழக்க அழைத்துச் செல்கிறார்கள்  என்றுசொல்வார்கள்.நான்அவ்வழியேசென்றஅந்த மனிதர்களையும் சிறுவயதுப் பாடப்புத்தகத்தில் படித்த வேடுவர்களையும் ஒப்பிட்டு கற்பனையில் ஒரு உருவம் கொடுக்க முனைந்து கொண்டிருப்பேன். பின் காடு எங்கே இருக்கிறது என்ற கேள்வி எனக்குள்  எழும். அடுத்து அதைப் பார்த்து விடவேண்டும் என்ற பிடிவாதம் எழும். அப்படித்தான் அந்த இடத்தைப் பார்க்க மாமாவுடன்  போனேன்.  

ஒருகாலத்தில் சனப் புழக்கமாக இருந்ததன் அடையாளமாக அவ்விடத்தில் அத்திவாரம் வரை அழிந்த ஒரு கோவில் உண்டு. இரண்டாம் உலகமகாயுத்த காலத்தில் குண்டுபோட்டு அழிந்ததாக அதன்  வரலாறு. அதற்குப் பக்கத்தில் இருந்த   அந்த வெளிகள் ஒன்றும் காடுகள் அல்ல. நாம் ரசித்து மாலைகளை களித்த உல்லாச புரிகள். அவற்றில் வேட்டையாட எந்த மிருகமும் இருக்கும் சாத்தியமில்லை.  ஆனாலும் வேட்டையாடுவது என்று முடிவாகி விட்டால் எப்படியாவது எதையோ தேடிக் கண்டுபிடித்து  ஈவிரக்கமற்ற கொலைகள் தவிர்க்க முடியாமற் போகின்றன என்பதை அவர்களிடம் பார்த்து அப்போது உணர்ந்திருக்கிறேன்

வேட்டை முடிந்து அந்த வேட்டை நாய்களுடன் அவர்கள்  திரும்பிச் செல்லும் நேரங்களில் காட்டு  முயல்கள், உடும்புகள், குளத்து மீன்கள் அவர்கள் கைகளில் அரை உயிரில் துடிப்பதாலும் அவர்களின் நாய்களின் மூர்க்கமான உறுமல் சத்தத்தாலும் அந்த மனிதர்களை  வீதியில் கண்டால் வெளியே வரவே பிடிக்காத நாட்களில் ஒருநாள்.....
அவர்களோடு வேட்டை பழக வந்த ஒரு நாய்க்குட்டி தவறுதலாக விட்டுச் செல்லப் பட்டு வீதி எல்லாம் அலைந்து கொண்டிருந்தது. கூட்டத்தை விட்டுத்  தனித்துப் போன அதன் அழுகை மிகவும் பாவமாக இருந்தது. இரவு மயங்கும் பொழுதில் அதை வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு வந்தேன் .

                                                                  


யாரின் வீட்டிலும் இருந்து காகம் தூக்கி போய் தவறி விழுந்த கோழிக்குஞ்சின் முறிஞ்ச காலுக்கு பத்துக்கட்டி காயம் மாற்றினாலும், செட்டையில் ஓட்டை விழுந்து பறக்காமல் விழுந்த வவ்வாலுக்கு செலோ டேப் போட்டு ஒட்டி பறக்கவைக்க முயற்சித்தாலும், பகலில் கண்தெரியாமல் பதுங்கிக் கிடக்கும் ஆந்தையை விபரம் தெரியாமல் கொண்டுவந்து அடைத்து வைத்து இரவில் சாப்பாடு கொடுக்கப் போய் அதனிடம்  கொத்து வாங்கினாலும் தலையில் அடித்துக் கொண்டே சகித்துக் கொள்ளும் வீடு அந்த நாய்க் குட்டியை கொண்டு வந்ததை ஏற்கவில்லை.

"இதின்ர அடிப்படை வீட்டுக்குள் சேர்ப்பதற்கு ஏற்றதல்ல . வேட்டை ரத்தம் அதின்ர உடம்பில ஓடுது. மூளையின்ர அத்திவாரத்திலேயே அதுக்கு வேட்டையாடுதலும் இரக்கமின்மையும் பதிய வைக்கப் பட்டிருக்கிறது.  ஒருநாள் இல்லாட்டில் ஒருநாள் அது தன் புத்தியைக் காட்டும் கொண்டு போய் தெருவில விடு" என்று அம்மம்மா திரும்பத் திரும்ப  எவ்வளவோ எடுத்துச் சொல்லிக்கொண்டேயிருந்தும்  என் மதி கெட்ட மண்டைக்கு அப்போது அது  ஏறவே இல்லை. ஆனால் அம்மம்மா அதிகம் படிக்காத அதி உன்னத தீர்க்கதரிசி என்பது அப்போது புரிவதில்லை.

வழமை போல்  நினைத்ததை சாதிக்க  மூலையில் ஒடுங்கிக் கொண்டு மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்ளும் என் அப்போதைய  பிடிவாதம் காரியம் சாதிக்க , அந்தக் நாய்க்குட்டி வீட்டில் ஒரு  அங்கத்தினரானது. ஏற்கனவே என்னிடம் இன்னொரு குட்டிநாயும் இருந்ததால் இதற்கு பெயர் கூட வைக்கத் தோன்றவில்லை. தனித்து ஒதுங்கிக் கிடந்த அதில்  அனுதாபப்பட்டு எப்போதும் அதை கைகளில் தூக்கிக் கொண்டு தம்பி தம்பி எனத் தடவிக் கொண்டு திரிய காலப் போக்கில் அதற்கு  தம்பி என்பதே பெயராச்சு. தம்பி போலவே வளர்ப்பும் ஆச்சு.

என்னிடம் முதல் நின்றது என்னோடு சேர்ந்து  சோறும் பருப்பும் தயிரும் சாப்பிடும் போது இது திரும்பியே பாராமல் உண்ணாவிரதம் இருக்கும்.  உயிரை பிடித்து உலையில் வைத்து அவித்தால்மட்டுமே  தான் சாப்பிடும். உறவுகள் நட்புக்கள் மற்றும் வளர்ப்புப் பிராணிகள்  என்று  தனக்கு நெருங்கியவர்களிடம் மிகவும் அன்னியோன்னியம் காட்டிய பிரவுனி போல் இது எப்போதும் இல்லை. எதோ எல்லாமே தன்னுடைய ஆதிக்கத்துக்கு உரியது மாதிரி இருக்கும் அது. ஒரு அணில் கூட மரங்களில் ஓடித்திரிய அனுமதித்ததில்லை அது அத்தனை ஆவேசம் கொண்டு வளரத் தொடங்கியது.  முதலில் அது படுக்கும் இடம், பின் வீடு,, பிறகு முழுக் காணியும், அதன் பின் வீதி முழுவதும் தன் ஆதிக்கத்தை விரித்து வீதியால் ஒரு சைக்கிள் கூட போக முடியாத அளவு தன் ஆட்சியை அகோரமாக நடத்தியது. நாள் தவறாமல் அம்மம்மா மட்டும் "அது ஒருநாள் புத்தியை காட்டும் அப்போ புரியும் உனக்கு" என்று சொல்லிக் கொண்டே இருந்தா.

சிறு வயதில் தூக்கி வந்து வளர்த்து அவ்வளவு காலம் எம்முடன் இருந்தும், தன் சாப்பாட்டு நேரம் தவிர அதற்கு யாரும்  எதுவும் பொருட்டாகத் தெரியாது ஒட்டிக்கொள்ளாமல் உறுமிக்கொண்டு தனியாகக் கிடக்கும். அது ஒரு நாள்  சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவ்விடத்தைக் கடந்தபோது  என்மேலேயே பாய்ந்தது. நாய் கடித்து  எவரும்  பார்த்திருக்கலாம் . நாய் இறைச்சியை கிழித்து எப்படி சப்பும் என்பதை அன்று தான் என் மூலம் என் வீடும் அயலும் நேரடியாகக் கண்டது.  எவரும் நெருங்க முடியாமல் ஆவேசம் கொண்டு நின்றது.  தடி எடுத்து  அடித்துத் துரத்த முற்பட்டபோது   அது இன்னும் அதிகமாய் மூர்க்கம் கொண்டு உருட்டி உருட்டி  என் கால்களைக் கிழித்தது.  ஒரு கட்டத்தில் ஆவேசமாகப் பாய்ந்து, சாய்த்து விழுத்தி கழுத்தைக் கவ்விய போது உயிரை, காயங்களை துச்சமாக நினைத்த  மனிதர்கள் அப்போது அயலில் இருந்தமையால்  அது  அப்புறப்படுத்தப்பட்டு மயக்கத்தோடு  தான் என்னை என் குடும்பம் மண்ணில் இருந்து எடுத்தது.

ஆஸ்பத்திரியில் இருந்து வந்த பின்பு  என் இந்த ஜீவகாருண்ணிச் சேவை எப்போதாவது எதற்காவது ஆரம்பிக்கும்  போது நாள் தவறாமல் அம்மம்மா சில நேரம் கோபமாக , சிலநேரம் கண்ணீரோடு தன் வழமையான டயலாக் உடன் இன்னும் ஒரு வரி கூட்டிச் சொல்லத் தொடங்கினா". இவளுக்கு பட்டும் பட்டும் இன்னும் புத்தி வருகுதில்லையே கடவுளே" என்று.

ஆனாலும் அந்தக் காயங்கள் எனக்குக் கற்றுத் தந்தது அதிகம்.அதன் பின் ஓரளவிற்கு எதை எங்கே வைக்கவேண்டும்என்பதையும்.எதன்மீதும் எப்போதும் அவதானமாக இருக்கவும், அதையும் மீறி  எது என்னைக் காயப்படுத்திச் சாய்த்து வீழ்த்த முயன்றாலும் அதற்கு முன் அதைச் சுருட்டி விழுத்தி நான் தப்பிக்கும் வழி என்னவெனத் தேடத் தொடங்கினேன்.

வெறி என்பதும் வேட்டைக்குணம் என்பதும் மிருகங்களுக்கு மட்டும் வருவதல்ல.  அதைவிட அதிக ஆபத்தான மனிதக் கூட்டத்திடமும் உண்டு. அவர்களது அடிப்படை  அத்திவாரத்தில் பதியமிடப்பட்டது எதுவோ அப்படித்தான் அதிகமாக இருக்கிறார்கள். நரிக்குச் சாயம் பூரியது போல அவர்களின் வேஷங்கள் எதிர்பாராத ஒரு மழையில் கரைந்து வழிய உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்கும் மனிதக் கூட்டத்துக்கு  மத்தியிலே தான் வாழ்ந்து கொண்டிருப்பதால் .....

"தொட்டால் சுடுவது நெருப்பு என்பது தொட்டால் தான் புரியும் என்றால் தொட்டுப் பார்ப்பது கூட பற்றிக் கொள்ளாமல் இருப்பதற்கான பாடமே தான்."