Saturday, November 5, 2016

மொட்டைத் தலையையும் முழங்காலையும் ஹோலியால் முடிச்சிடுவோம்

இப்போதெல்லாம்  எந்த  நிகழ்வுக்கும்  எந்தக் காரணங்களும் அதிகமானோருக்கு  அவசியமாக  இருப்பதில்லை.  களிப்பாடல்  அதாவது அந்தக்  கணத்தில்   காரணமற்றெனினும்  கண்மூடி மடையராகவெனினும் களிப்போடிருத்தல்  மட்டுமே  அவர்களின்  தேவை.  அந்த  பலவீன மான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு  தான்  மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்  முடிச்சுப் போட்ட  மாதிரி  இப்ப  புதிதா  ஹோலியும் இறக்குமதியாகுது.    சரி  யாழுக்கும்  ஹோலிக்கும்   என்ன  சம்பந்தம்  என்று   நானும்  எனக்குத்  தெரிந்த  அளவில்   என்  சிற்றறிவை   கிளறிப் பார்த்தேன்
ஹோலி அல்லது ரங்கபஞ்சமி என்றழைக்கப் படும் பண்டிகை இந்து மதப் பிரிவினரால்  இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும், தென்னாபிரிக்கா, மொரீஷியஸ் போன்ற இந்திய இந்து மக்கள் அதிகம் வாழும் நாடுகளிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப் படுகிறது. தவிர இந்திய ஹிந்துக்கள்  எங்கெல்லாம்  அதிகளவில் பெயர்ந்து  வாழுகிறார்களோ ஓரளவு அந்தந்த  நாடுகளிலும் அவர்கள்  வாழும் பகுதிகளில்  அவர்களாற் கொண்டாடப் படுகிறது.

ஆசியப்பகுதியில் குளிர்காலம் நிறைவாகி இளவேனில் தொடங்கும்  முன் வரும் பங்குனி மாத முழு நிலா நாளில்  இந்நிகழ்வின்  பிறப்பிடமான  நாடுகள் நகரங்களில்  கொண்டாடப்படும்  போது  வண்ணப் பொடிகளையும் வண்ணம் கலந்த நீரையும் ஒருவர் மேல் ஒருவர் தெளித்துக் களிப்பார்கள். ஹோலிப் பண்டிகைக்கு முதல்  நாள்  ஹோலிகா தகனம் என்ற பெயரில் பெரிய அளவிலான  நெருப்புகளை மூட்டுவார்கள். ஹிரண்ணியகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகாவின்  மடியிருத்தி   சிறுவன் பிரகலாதனை நெருப்பில் எரிக்க  முயன்றபோது  விஷ்ணு பக்தியால் அவர் அதிலிருந்து தப்பியதாகவும் , நெருப்பாலும்  தீய்க்க முடியாத  ஹோலிகா விஷ்ணுவின் சக்தியால் அந்த நெருப்பில்  எரிந்து மாண்டு போனதாகவும் . அதன் நினைவாகவே இது கொண்டாடப்படுவதாகவும்  புராணம்  சொல்கிறது. அதன்  மூலம் மறைமுகமாக   இன்னொன்றையும்  புராணம்  சொல்கிறது.  நாங்கள்   சாவுகளை  கொண்டாட  சமயங்களால்   கற்றுக் கொடுக்கப்பட்டவர்கள்.

ஆனாலும்   எனக்குள்   அப்போதிருந்து  சில  கேள்விகள்  இப்போது அவை சந்ததி  வழியாகவும்  தொடரும்  போது  கேட்காமல்  இருக்க முடியவில்லை.

#சர்வ வல்லமையும்  பொருந்திய  கடவுள்கள்   தப்பானவர்கள்   என்று சொல்லப்பட்டவர்களை   திருத்தி  நல்வழிப்படுத்தி   அருள்  வழங்காமல்   எதற்காக   எதிர்த்துப் போராடினார்கள்?

#கொன்று   போட்ட   நாட்களை  கொண்டாட்ட  தினங்களாக  சமயங்கள்   எப்படிப் பிரகடனம்  செய்தன?

#எல்லா  மதமும்  சொல்லும்  ஒரே  மொழி  கருணை  எனில்  புராணங்களில்   போர்  எப்படி   உருவாச்சு?

கேள்விகள்  இருந்தும்  விடைகளை   எங்கே  கேட்பது  என்று  மட்டும்  தெரியவில்லை.


ஒரு  போர் கடந்த, புண்பட்ட  சமூகத்தில்  அந்த வலிகளில்  இருந்து மீண்டு வெளியே  வரத்  துடிக்கும் தேடுதலும் , துடிப்பும்,   அவசியங்களும்  எல்லாப் போர் வரலாறுகளிலும்   வரலாறாக இருந்து கொண்டே  தான்  இருக்கிறன.

படரத்  துடிக்கும் கொடியின்  தவிப்புணர்ந்து   'தவிச்சமுயல்  அடிக்கும் 'பாவனையில் அல்லாதவைகளைப் புணரவைக்கும்  அடாத்துக்களில் ஆன்மீகத்தின்  பெயர் சொல்லும்  அராஜகமும்   அன்றிலிருந்து  இன்றுவரை   சளைக்காமல்  தன்  கடமையை? நேரம் பார்த்து  இடம் பார்த்துக் கச்சிதமாகச் செய்து  கொண்டே  தான் வந்திருக்கிறது.


அப்படியே  தான்  போர்  இருளுக்குள்  கிடந்து  வெளிச்சம்  தேடி வெளிவரத் துடிக்கும்  எம் சமுதாயத்துக்கு  புதிய வெளிச்சத்தில்  கண்களின்  கூச்சம் அடங்கி  சரியான  பார்வை தெளிவாக அறிமுகமாக  முன்  ஒரு  இனத்தின் அடையாளத்தையே  வேருடன் அழித்து விட  முனையும்    அனைத்துச் சமூகச் சீரழிவுகளின்    இன்னொரு  முகமாக   கலர்ப் பொடிகளால்  தன்  முக அழுக்கை மறைத்துக் கொண்டு  உள்  நுழைகிறது.    எம்  இன அடையாளத்துக்கும்   கலாச்சார வடிவத்துக்கும்  நாமம் போடும்   'ஹோலி'  என்ற நாமஹரணத்தோடு  ஒரு நயவஞ்சகத்   தெரு விழா.



ஒரு  இனத்தின்  அடையாளத்  தொலைப்பை  ஏற்படுத்த  வேண்டுமாயின் அதைத்  தட்டிக் கேட்கும்  கொதிப்புள்ள  பின்  அதைக் கட்டிக் காக்கும் கடமையுள்ள  இளைய  சமுதாயத்தை குதூகல  மாயைக்குள்  கட்டிவைத்து விட்டுக் காய்  நகர்த்தல்  மிகத்   தெளிவாகத்  திட்டமிடப்பட்ட  சாணக்கியம். அதன் வழியில்   இத்தெரு விழாவிற்குள்  இன அடையாளத்  தொலைப்பு  மாத்திரமல்ல.   இன்னும்  பாரிய   சமூகச்  சிறப்புக்களும்   அடங்கியிருக்கிறன.
அவையாவன.....

இளையவர்களையே   அதிகம்  ஈர்ப்புக் கொள்ளவைக்கும்  இந்நிகழ்வில் மரியாதை, நாகரீக   எல்லை  என்ற  எல்லைவகுப்புக்களைக் கொண்ட மக்கள்   தான்  கலந்து  சிறப்பிப்பார்கள்   என்றில்லை.  அவைகளின்   நிறங்கூட   அறியாத   மாக்களும்   கலந்து  கொள்ளலாம்.  கொள்வார்கள். கலர்ப்பொடிகளால்  முகமூடியிட்டுக் கொண்டு   தமது  வக்கிர புத்திக்கு   எதுவெல்லாம்  தோணுகிறதோ  அதாவது  கொலை வரை  கூட, அதுவெல்லாம்   அரங்கேற்ற  வண்ணப்பொடிகளின்  பாதுகாப்புக்குள்  பதுங்கிக் கொள்ளலாம். எவருக்கும்  எவரையும்  அடையாளம்  தெரியாமல்   எல்லாமும் ஜாலியாக  ஹோலியில்   நிறைவேற்றி  முடிக்கலாம் .

இறுதியாக  ஒன்று  நான்  வாழும்  நாட்டில்  உச்சி வெயில்  மண்டையைப் பிழந்த  ஆடிமாதத்தில்  வெள்ளையர்கள்  கொண்டாடிய  ஹோலி  பற்றி  2014 இல்  நான்  இதே  முகநூலில்  பதிவிட்திருந்தேன். அந்த  நிகழ்வின் போது நான்குமணி  நேரமாக  அதிர்ந்த  இசைக்கு  கட்டுப்பட்டு  நிறங்களுக்குள் தங்கள்  முகங்களைத்  தொலைத்து  விட்டு  அடையாளம்  அற்று   வந்த வெள்ளையர்களிடம்  " இப்படியான  ஒரு  நிகழ்வை  எதற்காகக்   கொண்டாடினீர்கள்   இதன்  அர்த்தம்  சொல்லமுடியுமா?"   என்று கேட்டேன். "ஜாலியான  பொழுது  போக்கு " என்று  தோள்களைக் குலுக்கிக் கொண்டு சொன்னவர்களுக்கு   அதன்  அர்த்தம்  ஒரு  நூல் முனையளவு  கூடத் தெரியவில்லை.

ஒரு  பாரம்பரிய வடிவத்தை    அறியாத,  அடிப்படையில்  அதனோடு   எந்தச்    சம்பந்தமும்  அற்றஒரு  கூட்டத்துக்குள்  அப்படியான  ஒரு  விடயத்தைத்  திணித்தல்   என்பது அந்த  விடயத்தையும்   திணிப்பை  ஏற்றுக் கொள்ளும்  கூட்டத்தையும்   அவமானப்படுத்தும்  செயல் என்பது  எனது  கருத்து.

"கொண்டாடங்கள்   மனிதனை  குதூகலப்படுத்துகின்றன. அது   எதுவெனிலும்.  அதை  எவர்  கொண்டாடுவதிலும்  அதன்  மூலம்  மகிழ்வு கிடைக்குமெனில்   தப்பில்லை"  என  முகநூலில் என்னுடன்  வாதிட்டவர்கள்   இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை  காரணம்   இல்லாமல்   செய்யப்படும் காரியங்களும் காரியங்கள்   ஊடாக   முன்னெடுக்கப்படுவனவற்றின்  காரணங்களும்   உணராமல்,  நின்றபாட்டில்  கொண்டாட்டம்  என்று   குதிக்கும்  மந்தைத் தனமும்    இருக்கும்  வரை, மஞ்சள்  கரைத்து  குளிப்பாட்டி  மாலையிட்டு பலிபீடம்  கொண்டு  செல்லும்  ஆடுகள்  மாதிரி  வெட்டி  வேரோடு முடிக்கப்படும்  வரை   எல்லாவற்றையும்  கொண்டாடுவோம்.  வீழ்ந்த  பின் வாழ்ந்த  அடையாளத்தை  எங்கே  தேடலாம்  என   கேட்டு  வைத்த பின்னாவது  வீழ்வோம் !

No comments:

Post a Comment